நண்ப,
யன்னல்கள் திறந்திருந்த காலமதில்
பரிமாறிய வார்த்தைகள் இன்னமும்
தொலைந்துபோய்விடவில்லை என நம்புகிறேன்.
முரண்கள் மோதி மோதி வளர்ந்த எம் உறவு – இன்று
முகநூல் நட்பாய்
“லைக்” குறியீடாய்
தேய்ந்து போகிறதா என அச்சப்படுகிறேன்.
எனது வார்த்தைகள் உண்மையானவை – அதில்
எப்போதும் ஈரமும் இருக்கும்.
பிம்பங்கள் வரையும் தூரிகைகளின் படையெடுப்பு
விமர்சனங்களை தாக்கியழிக்கிற காலமிது.
மௌனத்தை அதிகம் நேசிக்கக் கற்றுக் கொள்கிறேன்.
அது ஓர் நெடுவீதியாய் நீண்டு
என்னையும் உன்னையும் தன்
முனைகளால் விலக்குப்பிடிக்கிறது அல்லது
தள்ளிக்கொண்டிருக்கிறது.
என்னிடம் தூய்மைகள் எதுவும் இல்லை.
அழுக்கை நான் வெறுத்தபடியேதான் நகர்கிறேன்.
நெடுவீதி எமை தூரப்படுத்தும் இடைவெளியை
தனிமை நிரப்பிக்கொண்டிருக்கிறது.
தனிமையை நான் நேசித்தபடி இருப்பேன் – அதில்
தொங்கிக்கொண்டிருக்கிறது எனது ஆன்மாவின் வாழ்வு.
10052015