Month: February 2013
முன்னிலை சோசலிசக் கட்சி – ஓர் அவதானிப்பு
1983 யூலை 26. தீமூண்டெழுந்த கொழும்பு புறநகர்ப் பகுதியின் புகைமண்டலத்தை அப்போ காண்கிறோம் நாம். அதேவேகத்தில் தமிழ் சிங்கள கலவரம் என்ற செய்தியும் எட்டிவிடுகிறது. பல்கலைக்கழகத்தின் விடுதியில் நாம் (55 தமிழர்கள்) இருளத் தொடங்கினோம். பயம். சுற்றிவர சிங்கள மக்கள் வாள்களுடனும் பொல்லுகளுடனும் நிற்பதாக கதைகள் தைத்துக்கொண்டிருந்தன.இரவாகியது. எம்மை விடுதிக்குள் இருக்கும்படி கூறுகிறார்கள் அந்த சில சிங்கள சக மாணவர்கள். அங்குமிங்கும் ஓடித்திரிந்தார்கள். இரவுச் சாப்பாட்டை பார்சலாகக் கொண்டுவந்தார்கள். லைற் எதையும் போடவேண்டாம் என்ற எச்சரிக்கையுடன், பயம் காவிய எமது முகங்களை விடியும்வரை யன்னலோரம் தொங்கப்போட்டிருந்தோம். விடியும்வரை அந்த மாணவர்கள் கொட்டன்களுடன் எமது விடுதியைச் சுற்றி காவல் காத்தார்கள்.