// 1988 இல் இப்படித்தான் எங்கள் ஊர் இருந்தது. இப்படித்தான் எங்கள் வாழ்க்கை இருந்தது. இப்படித்தான் நாங்கள் பேசினோம். இப்படித்தான் நாங்கள் மாண்டோம். இப்படித்தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்பதை பால்யத்தில் நான் பார்த்து அனுபவித்த வாழ்க்கையிலிருந்து திரைக்கதையாக எழுதியிருக்கிறேன்// – திரைக்கதையாளரும் இயக்குநருமான சோமீதரன்.
வழமையான தமிழ்த் திரைப்படங்கள் போல வெட்டுக் குத்தாக இருக்குமோ என்ற எண்ணம் “அந்தோனி” திரைப் படத்தைப் பார்க்கப் போகும்போது மனதில் எழாமலில்லை. அந்த எண்ணத்தை அந்தோனி தரைமட்டமாக்கியது. அசையா நிலையிலான தரைகளிலேயே வாழும் எம் போன்ற மனிதர்க்கு அசையும் நிலையிலான கடல் வாழ்வு அனுபவம் நாளாந்த வாழ்வாகக் கிடைப்பதில்லை. ஒரு சிறிய தீவான இலங்கையின் நான்கு கரையும் இருக்கும் கடல்வாழ்வைக் கொண்ட மனிதர்கள் பலர் இருப்பார்கள். அவர்களது அனுபவமும் கடல் போன்றதே. கடல் இயற்கையை அவர்கள் நேசிக்கிற விதம் அவர்களது வாழ்வாதாரத்தோடும் வாழ்வோடும் உணர்வுகளோடும் இழையாகப் பின்னிக் கிடக்கிறது என்பதை அதுசார்ந்த திரைப்படங்களைப் பார்க்கிறபோது உணர வைக்கும்.
சயந்தனின் “திசை ஒன்பது” நாவல் கவனத்தை சிதறவிடாதபடி வாசித்துத் தீர்க்க வேண்டியிருந்த நாவலாக எனக்கு இருந்தது. ஒரு செறிவான ‘நேர்கோட்டின்மை’ (non-linear) கதைசொல்லல்தான் அதற்குக் காரணம். வாசிப்பை குழப்பத்தில் நிறுத்தி, வாசகர் புத்தகத்தை மூடிவைத்துவிடாதபடி, அந்தக் கதைசொல்லல் முறையை கட்டியமைப்பதில் எழுத்தாளர் அதிக சிரத்தை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அதனாலோ என்னவோ நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் எழுத்தாளரது எழுத்துக்குள் எள்ளல்கள் கிண்டல்கள் காணாமல் போய், பின்னர் அவை அவருக்கேயுரிய இயல்பான நடையாக வெளிப்படத் தொடங்கியிருப்பதாக எனது வாசிப்பில் தோன்றியது. அது அப்படியில்லை என இன்னொரு வாசகருக்குத் தோன்றலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டே எனது இந்த அவதானிப்பைச் சொல்கிறேன்.
நான் பாணன் அல்ல பறையன் அல்ல புலையன் அல்ல நீ தம்புரானுமல்ல. ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!
வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன். அவரது ஊர் கேரளத்தில் உள்ளது. இருவரும் மதுரையில் சந்தித்து காதலித்து குடும்பமாகின்றனர். பின் திருச்சூர் (கேரளா) திரும்புகின்றனர். சேரிப்புற வாழ்வு அவர்களது. வேடன் (ஹிரன் தாஸ் முரளி) அங்குதான் பிறக்கிறான். தாயார் இப்போ இவ் உலகில் இல்லை.
வேடன் ஒரு மக்கள் கலைஞனாக இன்று தன்னை உயர்த்தியிருக்கிறான். அவனது வலி ஈழத் தமிழனின் வலியல்ல. யாழிலிருந்து அகதியாய்ப் பெயர்ந்த தாயின் வலியை அவன் கேட்டு அறிந்திருக்கிறான். தந்தையின் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குதலையும் தமது விளிம்புநிலை வாழ்க்கையையும் அவன் வாழ்ந்தனுபவித்து உணர்ந்திருக்கிறான். ஒரு இளம் உள்ளத்தில் எதிர்காலம் குறித்து இயல்பாகவே விரியும் கனவுகளை துவம்சம் செய்கிற இந்த சமூக அமைப்புமுறையை, குறிப்பாக சாதிய ஒடுக்குமுறையை, அதன் கொடிய முகத்தை, அவைகள் தந்த வலியை அவனும் அனுபவித்தான். இதுவே அவனது கேள்விகளினதும் சிந்தனைகளினதும் விளைநிலம். பாடல்களின் வரிகளில் அவை பட்டுத் தெறிக்கின்றன.
இந்நூல் எம். சுசீலா அவர்களால் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாசிப்பின் ஓட்டத்தை இடையூறு செய்யாதபடி நகர்கிறது மொழிக் கையாள்கை. தமிழில் 1072 பக்கம் விரிந்துள்ள இந் நூலில் அவரது பெரும் உழைப்பு தெரிகிறது.
“குற்றமும் தண்டனையும்” என்ற இந் நாவல் தஸ்தவெஸ்கி அவர்களால் எழுதப்பட்ட பெரும் நாவல். 1866 இல் ரஸ்ய மாதப் பத்திரிகை ஒன்றில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இத் தொடர் பின்னர் நாவலாக தொகுக்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
கதை சொல்லல் என்பதையும் தாண்டி தனிமனிதர்களின் மனவமைப்பு, மனச்சாட்சி, ஒழுங்கு, அறம், அன்பு என்பவற்றை தாங்கி நிற்கும் அக வாழ்வின் மீதான விசாரணைகளையும் சட்டம், நீதி, அதிகாரம் என்ற கட்டமைப்பு மனித வாழ்வோடு பொருதுதல் குறித்தான விசாரணைகளையும் தாங்கிய நாவல் இது. மனித உளவியலின் இடுக்குகளை ஆராயும் வலு கொண்டதால் இந் நாவல் 150 வருடங்களுக்கும் மேலாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. காலத்தையும் இடத்தையும் தாண்டி ஒவ்வொரு மனிதரோடும் பேசும் ஆற்றலின் அதன் இரகசியம் இங்குதானுள்ளது. “எதையாவது எப்போதும் நான் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரே உளவியலாளர் தஸ்தவேஸ்கிதான்” என நீட்ஷே எழுதினார்.
பொதுவாக பல திரைப்படங்கள் ஒரு முடிவை பரிசளித்து இருக்கையிலிருக்கும் எம்மிடம் தந்து அனுப்பிவைக்கும். சிந்தனையில் இடையீடு இன்றி எழுந்து சென்று விடுவோம். அநாதரவாக எழுத்தோட்டம் திரையில் நகரும் வால்போல அசைந்துகொண்டிருக்கும். வாழை திரைப்படம் முடிந்தும் பார்வையாளர்கள் எழுந்தபாடில்லை. வாழையின் கனதியும் படத் தொகுப்பும் இருக்கையோடு கட்டிப் போட்டுவிட்டிருந்தது. இசை மூளையறையெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. காட்சிப்புலத்துள் யாரோ கலவரப்பட்டபடி ஓடித்திரிந்தார்கள்.
30.06.2024 அன்று “மலையகா” நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் சூரிச் இல் 14:30 மணி தொடங்கி 18:00 மணிவரை ஓர் ஆர்வமூட்டும் சந்திப்பாக நடந்து முடிந்தது. 70 களில் தொடங்கி 2015 வரையான காலப் பகுதியில் 23 மலையகப் பெண்களால்/ எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 42 கதைகளை கொண்ட இத் தொகுப்பு நூல் “ஊடறு” வெளியீடாக வந்திருந்தது. மலையகம்-200 நிகழ்ச்சிப் போக்கில் தன்னையும் இணைத்துக் கொண்ட இத் தொகுப்புக் குறித்தான சந்திப்பாக நேற்றைய சந்திப்பு அமைந்தது.
“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன்.
என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார்.
சுவீடன் எழுத்தாளர் Pär Lagerkvist அவர்களினால் 1950 இல் எழுதப்பட்ட இந் நாவல் 1951 இல் நோபல் பரிசை பெற்றது. பௌதீக யதார்த்த வாழ்வுக்கும், நம்பிக்கைகளை உருவாக்கி போற்றும், அல்லது அதற்கு கட்டுப்பட்டு வாழும், வாழ்வுக்கும் இடையே நகருகிறது இந் நாவல். குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு ஜெரூசலத்திலுள்ள கொல்கொத்தா மலையில் மூவர் சிலுவையில் அறையப்படுவதற்காக தொங்கவிடப்படுகிறார்கள். அவர்களில் ஒருவன் பாரபாஸ். பெற்றோராலும் சமூகத்தாலும் கைவிடப்பட்டவன். ஓர் அநாதை. பழிபாவம் எதற்கும் அஞ்சாதவன். கொள்ளைக்காரன். பாரபாஸ் இன் அலைவு கொல்கொத்தா, ஜெரூசலம், சைப்பிரஸ் என பயணித்து இறுதியில் றோம் இல் சிலுவையில் ஏற்றப்பட்டு மரணிக்கிறது.
அகரன் பிரான்ஸ் இல் இருக்கும் ஓர் இளம் எழுத்தாளர். பாரிசின் -குறிப்பாக லாசப்பலின்- தமிழ்வாழ்வுச் சூழலிலிருந்து தூரத்தில் வதியும் சந்தர்ப்பம் கிடைத்ததாலோ என்னவோ, அவரது எழுத்துக்களின் உள்ளடக்கம் தமிழ்ப் பரப்புக்குள் குறுகி நிற்கவில்லை. தமிழ்ப் புலம்பெயர் இலக்கியத்தில் ஒரு விசாலத்தை அவரது எழுத்துக்கள் காட்டிநிற்கின்றன. அவரது எழுத்துநடை அலாதியானது. இந்த அம்சங்கள் அகரனது தீவிர வாசகனாக என்னை ஆக்கியது என நம்புகிறேன்.