30.7.2012 விடியல் சிவா காலமாகி இப்போ ஏழு ஆண்டுகளாகிவிட்டிருக்கிறது. சில இழப்புகள் ஏற்படுத்திச் செல்லுகிற நினைவு இறக்கிவைக்க முடியாதவை. பிரக்ஞைபூர்வமாக தனது வாழ்வை வாழ்ந்து காட்டிய விடியல் சிவாவின் நினைவும் அத்தகையது. நினைவுகளை மீட்டுப் பார்க்கிறேன்.
அவரது மரணத்துக்கு சில தினங்களின் முன் நாம் கோவை சிறீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் தோழர் சிவாவை பார்த்துக்கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் கொழும்பு செல்வதற்கான கடைசி விடைபெறலுக்காக நாம் அவரை தழுவியபோது கண்ணீர் விட்டு அழுதார். நாம் கணங்களை கண்ணீரால் கரைத்துக்கொண்டிருந்தோம். ஒருசில வார்த்தைகளை எம்முடன் பரிமாறுதற்காய் அவர் தனது உடல்நிலையுடன் போராடிக்கொண்டிருந்தார். நானும் றஞ்சியும் பிள்ளைகளும் அவரை மாறிமாறி தழுவினோம். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.