ஜோசப் விஜய் ஆகிய நான்..!

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் வந்தது குறித்த நியாயத்தை “ஏன் அவர் வரக் கூடாது” என்ற ஒற்றை எதிர்க் கேள்வியால் அணுகுவது சுத்த அபத்தமானது. ஏழு கோடி மக்களின் ஆட்சித் தலைவராக ஒருவர் வருகிற மிகப் பெரும் பொறுப்பை குறுக்கி, இப்படி கேட்க வைப்பதற்கான அடிநாதம் இந்த ஜனநாயக முறைமையை எளிதாக்கிப் புரிந்துகொள்வதுதான் என சொல்ல முடியும். வாக்களிப்பது மட்டுமே ஜனநாயகம் அல்ல. அது மக்களின் ஜனநாகக் கடமை. அவர்களின் உரிமை. மறுபக்கத்தில், தேர்தல் என்பது ஜனநாயகக் கட்டமைப்பினை உருவாக்குவதற்கான செயல்முறை. அதாவது, பெரும்பான்மையை வைத்து வெற்றியை தீர்மானிப்பது ஒரு நிர்வாக அடிப்படையிலான ஜனநாயக கட்டமைப்பின் ஒரு நடைமுறை அம்சம். அதனால் அரசாங்க உருவாக்கமானது அந்த கட்டமைப்பினூடாகவே தீர்மானிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

அதேசமயம் அது ஜனநாயகத்துக்கு அவசியமான பண்பினை (ஜனநாயகப் பண்பினை) நிராகரிக்கும் கணித சமன்பாடாக இருக்க முடியாது. அது சக மனிதரின் உரிமையையும் உணர்வையும் புரிந்து கொள்ளும் ஆற்றலும், அதை செயலுக்குள் உள்வாங்குவதுமான பண்பு எனலாம். ஒரு சிறுபான்மை சமூகத்தின் அல்லது குழுவினதும், சிறுபான்மைக் கருத்துகளினதும் பாதுகாப்பை அல்லது கவனத்தை அல்லது தேவையை ‘பெரும்பான்மைவாத’ கணிதத்தால் தீர்க்க முடியாது. அதனால்தான் இந்த ‘பெரும்பான்மை’ என்ற ஜனநாயகக் கட்டமைப்பு பல கிளைகளை தன்னகத்தே கொண்டதாக விருட்சமாக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அது மேற்குலக ஜனநாயகக் கட்டமைப்பினுள் உள்வாங்கப்பட்டும் இருக்கிறது. அதிகாரப் பரவலாக்கல் என்ற செயன்முறை நிகழ்கிறது.

ஒரு கட்சியினூடாகவோ கட்சிக்கு வெளியிலோ எந்தவிதமான அரசியல் நிலைப்பாடுகளையும் வெளிப்படையாக பேசியோ, அதில் சமூக அக்கறையுடன் பங்குபற்றியோ விஜயின் அரசியல் வரலாறு வளர்ந்து வந்ததல்ல. ஒரு உதாரணத்தைத் தன்னும் காட்ட முடியாது. அதனால்தான் சினிமாத்துறையில் முக்கிய இடத்தில் இருந்த அவரது தந்தையாரின் நடுத்தர வர்க்க மேற்தட்டு வாழ்முறைக்குள் வசதியாக வளர்ந்ததை மறைத்து, “எனக்கும் பசி பட்டினி என்றால் என்ன என்று தெரியும்” என விளிம்புநிலை மனிதரோடு தன்னை இணைக்கும் பொய்யை அவர் சொல்ல வேண்டியிருக்கிறது. தான் எங்கெங்கெல்லாம் அந்த மனிதர்க்காக அவர்தம் பிரச்சினைகளில் சேர்ந்து நின்று போராடியதாகவோ, குறைந்தபட்சம் அதுகுறித்து பேசியதாகக்கூட அவரால் எதையும் உதாரணம் காட்ட முடியாது. அதாவது கட்சி தொடங்கிய இரண்டு வருடங்களுக்கு முன்னால்!.

இத் தேர்தலில் அவருக்கு விழுந்த வாக்குகளை இரு பிரிவுகளாக அணுகலாம். அதில் பெரும் பகுதி சினிமாவினூடான ரசிக மனநிலையில் அளிக்கப்பட்டவை. இன்னொரு பகுதி திமுக அரசின் மீதான அதிருப்தியால் கிடைத்தவை ஆகும். திமுக இன் தவறுகளால் இந்த அதிருப்தியை கைப்பற்ற ஓர் உருப்படியான மாற்றுக் கட்சி இல்லாதபோது, அதை விஜயின் மீதான ‘நம்பிக்கை’யிடமும் ‘வாக்குறுதி’யிடமும் அவர்கள் ஒப்புக் கொடுக்கிறார்கள். (அவை சினிமாவினூடாக ரசிகர்களுக்குள் புகுத்தப்பட்ட கதையாடலின் அடிப்படையில் உருவாகியவை).

இதை திமுக தமது ஆட்சி மீதான விமர்சனமாக அணுகி, அத் தவறுகளை அடையாளம் காண வேண்டும். தம்மை புடம்போட வேண்டும். ஒரு வரலாற்றுப் பாடமாக இதை அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பரம்பரை ஆட்சியை திறமைசார் ஆட்சியால் இடம் பெயர்க்க வேண்டும். அதாவது கட்சியில் செயற்பாட்டிலும் நேர்மையிலும் அறிவிலும் ஆளுமையிலும் முன்னுக்கு வரும் நபர்களுக்கு வழிவிட வேண்டும். பரம்பரை ஆட்சியை எதிர்த்தல் என்பதைவிட திறமையை முன்னிலைப்படுத்தும் ஆட்சியை முன்மொழிதல் என்று அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஜனநாயகம் (democracy) என்பதை தகுதி/திறமை காண் ஆட்சி முறைமை (meritocracy*) இலிருந்து வேறுபடுத்தி வைத்திருக்கிற நிலைமைதான் வளர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளிலும் நிலவுகிறது. “மக்களுக்காக மக்களே ஆளும் முறைதான் ஜனநாயகம்” என்ற போர்வையில், மிகச் சிறு வீதமான பணக்காரர்கள் பெரும் வீதமான மக்களை ஆளும் கைங்கரியத்தை கச்சிதமாகச் செய்கிறார்கள். அதாவது பெரும் பணக்காரர்கள் தான் மேற்குலகில் ஆட்சியதிகாரத்துக்கு வர முடியும் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. இடதுசாரிக் கட்சியில் இருப்பவர்கள்கூட பெரும் முதலாளிகளாகவும் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.

அதனால் ஜனநாயகம் என்பது வெறும் கட்டமைப்பாக மட்டும் சுருங்கியிருக்கிறது. அது ஜனநாயகப் பண்பு குறித்து கவலைப்படுவதில்லை. தனது குழந்தையை அணைத்து மகிழும் ஓர் அரசியல் தலைவர் இன்னொரு நாட்டின் குழந்தையை கூட்டாகக் கொல்வதில் எந்த மனச் சங்கடமும் இருப்பதில்லை. தனது நாட்டின் மக்களை வசதி படைத்தவர்களாக வைத்திருப்பதற்கு கனிமவளம் கொண்ட ஏழை நாடுகளை தொடர்ந்து சுரண்டி ஏழ்மைக்குள் தள்ளுவதில் எந்த மனச் சங்கடமும் இருப்பதில்லை. இன்னும் ஆழமாகச் சென்று பார்த்தால் தனது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பேண இன்னொரு நாட்டை சுரண்டுவது, வளங்களை சூறையாடுவது, அவற்றை சாதிக்க காலனிய மனோபாவத்தோடு அல்லது நடைமுறையோடு அணுகுவது அதிகாரத்தையும் வன்முறையையும் பாவிப்பது என்பது காலனிய காலத்திலிருந்து இன்றைய நவ காலனியத்துவம் வரை பேணப்படுகிற ஒன்றாக இருக்கிறது. இந்தவகை ஜனநாயகம் அளிக்கும் அதிகாரமானது எளிய மக்களின் நலன் கருதியதாக வெளியில் காட்டிக்கொண்டு அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. இதன் தொடர்பு பட்ட வடிவம் ஏழ்மை நாடுகளின் ஆட்சியாளர்கள் தமது சொந்த மக்களின் தலையில் அரைக்கும் அதிகாரத்துவமாகத் தொடர்கிறது.

இதை எதிர்கொள்ள வெகுமக்கள் சராசரியாகத் தன்னும் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் இது குறைபாடுகளோடு தன்னும் நிலவிய நிலையை ஓர் (சினிமா) ரசிக மனநிலை இடம் பெயர்த்திருப்பதுதான் ஜனநாயகத்துக்கு பண்பு ரீதியாக கிடைத்திருக்கிற தோல்வியாகும். இது ஒன்றும் திடீரென மாறிய நிலைமை அல்ல. சிவில் சமூக நிறுவனங்களான குடும்பம், பாடசாலை என்பவற்றின் அறிவார்ந்த செயற்பாட்டின்மையாலும், பொதுசன கருத்தியலை கதையாடல்களாலும் அரசியல் சார்புகளாலும் சுயநலன்களாலும் கட்டியெழுப்பும் ஊடகங்கள் வழியாகவும் படிப்படியாக நிகழ்த்தப்பட்ட ஒன்றாகும்.

பொதுசனத்தை அரசியல் மயப்படுத்தல் என்பதை மேவி சினிமா மயப்படுத்தியதால் நிகழ்ந்ததுதான் விஜயின் வெற்றிக்கும் துணைபுரிந்தது. சினிமா ஓர் அற்புதமான கலை. அதை அரசியல் பிரச்சார வடிவத்துள் நகர்த்தியதில் எம்ஜிஆர், கருணாநிதி கால திராவிடர் கழகங்களின் பங்கு அதிகமானது. அதன் தொடர்ச்சி கொடிவிட்டுப் படருகிறது. இந்த தொடர்ச்சிகளின் நவீன பங்குதாரராக விஜய் வருகிறார்.

அத்தோடு “திராவிட மொடல்” என நக்கலாய் திமுகவை சாடிய அவர், பெரியாரை தமது வழிகாட்டிகளில் ஒருவராக முன்னிறுத்தும் முரண்நிலைக்குள் சிக்குப்படுகிறார். திமுக அரசின் சமூக நலத் திட்டங்களோடு ‘இலக்கங்களின்’ அடிப்படையில் போட்டி போடுகிறாரே ஒழிய, மாற்றான எந்தத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை. உதாரணத்துக்கு மகளிருக்கு அவர் 1000 ரூபா கொடுத்தால் இவர் 2000 கொடுப்பதான இலக்கப் போட்டி அது. அத்தோடு சமூக நலன் சார்ந்த எந்தவித அரசியல் முன்னெடுப்புகள் அல்லது பங்குற்றுதலுக்கு ஊடாக அறியப்பட்டு அரசியல் களத்துக்கு முன்வந்தவரும் அல்ல. இப்படியிருக்க அவர் திராவிட ஆட்சிக்கு ஒரு மாற்று என்று சொல்வது நம்மை நாம் ஏமாற்றுவதாகும்.

அதுவும் அனுராவோடு தராசில் போடும் கோமாளித்தனம் அரசியல் அறிவீனத்தின் உச்சம். 1971 மற்றும் 1989 என இரு பெரும் புரட்சி முன்னெடுப்புகளை மேற்கொண்டு தோற்றபோதும், தனக்கான அணிகளை அரசியல்மயப் படுத்தி வைத்திருக்கும் ஓர் இயக்கமாக இருந்த வரலாறு கொண்டது ஜேவிபி. அதற்குள்ளால் அரசியல் தளத்திலும் செயற்பாட்டுத் தளத்திலும் தொடர்ச்சியான பாரம்பரியத்தினூடாக வந்தவர் அனுர. காலிமுகத் திடல் கண்ட மாபெரும் போராட்டத்தினூடாக உருவாகிய அரசியல் வெளியை, மக்கள் விரும்பிய மாற்றத்தின் இடத்தை அந்த தகுதிதான் நிரப்பியது. ரசிக மனநிலை அல்ல. அரசியல் மனநிலை அது.

ஆரம்பத்தில் பெரியாரை முன்னிறுத்தி பேசியவர் சீமான். பெரியார் இல்லையேல் தான் கல்வி கற்றே இருக்க முடியாது என வசனம் பேசினார். பிறகு பெரியாரை இழிவாகப் பேசி “திராவிட மொடல்” என்று நக்கலாக பேசித் திரிந்தார். திராவிடம் எதிர் தமிழ்த் தேசியம் என்ற சமன்பாட்டை உருவாக்கினார். இப்படியாக திராவிடத்தை சிதைப்பதில் அவருக்கு ஒரு பெரும் பங்கு இருந்தது. இது பிஜேபி க்கு சாதகமாக இருந்தது. அது இப்போ விஜய் திமுக வை கலாய்த்து வாக்குக் கேட்க சாதகமாயும் அமைந்தது. பெரியாரை தனது வழிகாட்டிகளில் ஒருவராக ‘கட்அவுட்’ வைத்துக் கொண்டே, இதை விஜய் பேசியது அவரது அரசியல் அறிவின் அழகைக் காட்டுகிறது.

சினிமா இரசிகர்களாக இருப்பது என்பது கலை சார்ந்த ஒன்று. மிக அற்புதமான கலை சினிமா. ஆனால் அந்தத் துறை வேறு. அரசியல் துறை வேறு. இரண்டுமாக ஒருவர் இருக்க முடியுமா என்றால், நிச்சயம் முடியும். ஆனால் சினிமாத் துறையால் அரசியல் துறையை பிரதியீடு செய்வது அறிவார்ந்த செயற்பாடே கிடையாது. பிரச்சாரக் கூட்டத்தின் போது விஜய் “ அவர்கள் பாசிசம் என்றால் நீங்களென்ன பாயாசமா” எனக் கேட்டது இதற்குச் சான்று. உலகில் எல்லா நாடுகளுமே கடனில்லாமல் இயங்குவதில்லை. இந்தியா மட்டுமல்ல, இந்திய மாநிலங்களும் அப்படியேதான் இயங்க முடியும். அதற்கு ஒரு வரையறை உள்ளது. அந்த மாநிலத்தின் ஜிடிபி அளவின் அடிப்படையில் (28 வீதமென நினைக்கிறேன்) கடன் பெற்றுக் கொள்ள முடியும். அதை ஊழலின்றி அபிவிருத்தியில் பயன்படுத்த வேண்டியது அரச தலைவர்களின் கடமை. அதை திமுக எப்படி கையாண்டது என எமக்குத் தெரியாது. ஆனால் இந்தியாவிலேயே பொருளாதார ரீதியிலும், மற்றும் பெண்கள் கல்வி, தொழில்நுட்பம் என்பவற்றிலும் நவீன உலகோடு இசைந்து தமிழகத்தை முன்னிலையில் வைத்து இயங்கியிருக்கிறது. இந்த அம்சங்களைப் புறக்கணித்து “கல்லாப் பெட்டியை காலியாக வழிச்சுத் துடைச்சுக் கொண்டு போய்விட்டார்கள்” என்பது எவளவு பொறுப்பற்ற பேச்சு. ஒரு முதல்வரின் பக்குவமான பேச்சா இது.

ஒரு முதல்வராக பதவியேற்ற முதல் உரையே பிரச்சாரக் கூட்ட உரை போன்றும், ஒரு திரைப்பட உடல்மொழியுடனும் நிகழ்த்தப்பட்டது ஒரு அரசியல் பக்குவமேயில்லாத செயலாகும். பெற்றோரின் வாக்களிக்கும் உரிமையை சுயாதீனமாக பேண விடாமல் ‘பாச மிரட்டலால்’ பிள்ளைகள் தலையிட்டு விஜய் மாமா கட்சிக்கு வாக்குப் போடுவிக்க தனது தேர்தல் கூட்டங்களில் ஆலோசனை வழங்கினார். முதல்வரானபோது அதற்காக குழந்தைகளுக்கு நன்றியும் தெரிவித்தார். இதுதான் அவர் வாக்களிக்கும் உரிமையை புரிந்து வைத்துள்ள விதம். அது ஜனநாயக விதிகளுக்கு முரணானது என்ற அரசியல் புரிதல் கூட கிடையாது.

தமிழக தொலைக் காட்சிகளில் பெரும்பாலானவை சினிமாவை மையமாகக் கொண்டே இயங்குகின்றன. சினிமா இல்லையேல் தொலைக்காட்சி இல்லை என்ற அளவுக்கு அவை இயங்குகின்றன. சினிமாவோடு சம்பந்தப்படாத பொது அறிவுசார் நிகழ்ச்சிகளில் அல்லது போட்டி நிகழ்ச்சிகளில் கூட சினிமா சார்ந்த கேள்விகள் வந்தே தீரூம். பொது மக்கள் கருத்தியலை உருவாக்கும் அரசியல் விவாதங்கள், பட்டிமன்றங்கள் அல்லது உரையாடல்கள் கூட சினிமாவை உதாரணம் காட்டாமல் செல்லாது. சீரியஸான அரசியல் கருத்துகளை தேர்ந்த அரசியல் அறிஞர்கள் முன்வைக்கிறபோதும் கூட சினிமாவிலிருந்து உதாரணம் காட்ட பின்னிற்பதில்லை. எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் விளம்பர தட்டிகளிலும் சினிமா பிரபல்யங்களை முதன்மைப்படுத்துவது சர்வ சாதாரணமாக இருக்கிறது. இசைத்துறையையும் பாடல்களையும் சினிமாவுக்கு வெளியில் கொண்டியங்குகிற சுயாதீனமான இசைக் கலை இல்லை. பாடல் போட்டிகளே சினிமா பாடல்களினுள்தான் நிகழ்த்தப்படுகிறது. இவ்வாறாக ஊடகங்கள் பொதுசன உளவியலில் சினிமாவை படரவிட்டதன் விளைபொருளில் ஒன்றே விஜய். “முதல்வர் பதவி என்பதைப் பொறுப்பேற்ற பின் அரசியலை ஏன் அவரால் கற்றுக் கொள்ள முடியாது” என வாதிடுவது ஏழு கோடி தமிழர்களின் தலைகளில் மிளகாய் அரைக்கும் தர்க்கமாகும்.

எமது புலம்பெயர் வாழ்வு அனுபவத்தில், சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு மேற்குலக இளைஞர் பட்டாளம் பெருமளவில் அரசியல்மயப் பட்டதை நாம் நேரில் காணக் கூடியதாக இருக்கிறது. இதுவரையான தமது (தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை போன்ற) ஊடகங்களின் கருத்தியல்கள் தம்மை எவ்வாறு மூளைச்சலவை செய்து வைத்திருந்தன என அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பலஸ்தீன போராட்டம் முதல் தத்தம் நாட்டு பிரச்சினைகளிலும் அடிக்கடி வீதிக்கு இறங்கி போராடுகிற பாரம்பரியத்தில் ஒரு பாய்ச்சல் அவர்களின் அரசியல்யமயப்படலை வெளிக் காட்டுகிறது. மேற்குலகில் நடத்தப்படும் இவ்வாறான -சர்வதேச நோக்கும் மனிதாபிமானமும்- சார்ந்த போராட்டங்கள் ஒப்பீட்டளவில் இலங்கை இந்திய நாடுகளில் மிகக் குறைவு. அதாவது ஊடகம் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி அறிவுசார் வளர்ச்சிக்கு போதியளவு உதவவில்லை. சமூக ஊடகங்கள் வெறும் பொழுதுபோக்கு சார்ந்த வட்டத்துள் மட்டும் குறுக்கப்பட்டுவிட்டதாகவே மதிப்பிட முடிகிறது. இந்த வெளிக்குள் அரசியல்மயப்படுவது என்பதை மேவி, சினிமா ரசனை மயப்படுவது இன்னும் வீரியமடைந்துள்ளது. விஜயின் வெற்றிக்கு இது மிகப் பெரும் பங்காற்றியுள்ளது.

ஆக மொத்தத்தில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மை வாக்கால் தலைவர்களையும் அதன் அதிகார பங்காளிகளையும் தீர்மானிப்பதாக உலகு தழுவி இயங்குகிறது. விஜயின் வெற்றி அதற்கு வெளியில் நிகழவில்லை. எப்போ democcracy உம் meritocracy உம் இணைந்து தலைமைகளும் அரசாங்கங்களும் தேர்வு செய்யப்படுகிறதோ, ஜனநாயகம் என்பது கட்டமைப்பும் பண்பும் சேர்ந்ததாக இயங்குகிறதோ அப்போதான் மக்கள் நலன் சார்ந்த அரசுகள் உருவாகும். மக்கள் நலன்சார்ந்த தலைவர்கள் உருவாகுவார்கள். அதனால் விஜயின் வெற்றி ஒன்றும் அதிசயமல்ல. நிலவுகிற ஜனநாயகத்தின் முகம் இது. இவ்வாறான ஏகப்பட்ட அரசியல் தலைவர்களை நடைமுறையிலுள்ள ஜனநாயக முறைமை உருவாக்கிக் கொண்டுதான் இயங்குகிறது. அதில் ஒருவர் விஜய்!

  • ravindran.pa
  • 11052026

* A meritocracy is a system—often used to describe a society, organization, or workplace—where people gain success, power, or rewards based on their abilities, talent, effort, and achievements, rather than factors like wealth, family background, or social connections.

Merit = skill + effort + performance

Leave a comment