«Rundschau Talk Spezial» என்பது சுவிஸ் தொலைக்காட்சியின் விசேடமான நிகழ்ச்சி ஆகும். 2025 இல் நான்கு நிகழ்ச்சி மட்டும் ஒளிபரப்பாகியது. அந்தளவுக்கு அது மாதக் கணக்கில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. 2026 இல் இது முதல் நிகழ்ச்சி. சுவிஸ் தொலைக்காட்சி SRF இன் இயக்குநர் நத்தாலியா வப்லர் அவர்கள் நேரடியாகவே இந் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். 12.04.2026 அன்று நடந்த இந் நிகழ்ச்சி சுவிஸ் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிகழ்ச்சி UBS வங்கியின் இயக்குநர் எர்மோற்றி (Sergio Ermotti) அவர்களுடனான செவ்வியாக அமைந்திருந்தது.
“நேயர்களே இன்றிரவு நான் சினேகபூர்வமாக நடந்து கொள்ளப் போவதில்லை. நான் இந்த விடயத்தை தவிர்க்கவும் விரும்பவில்லை. இதற்கு விடை கிடைக்கும் வரை கேள்வி கேட்பதை நிறுத்தவும் போவதில்லை. அதைச் செய்ய நான் கடமைப்பட்டவள்” என்று தொடங்கினார் நத்தாலியா.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த எர்மோற்றி க்கு என்ன நடக்கப் போகிறது என எந்த எண்ணக்கருவும் இல்லை. நத்தாலியா தடாலடியாக கேள்வியை முன்வைக்கிறார்.
“நீங்கள் உங்களது மாதச் சம்பளத்தை ஒரு மதிய நேர உணவுக்கு முன்னரே சம்பாதித்து விடுகிறீர்கள். ஒரு வருடத்துக்கு, 2.8 மில்லியன் அடிப்படைச் சம்பளம். 12.1 மில்லியன் மிகைக் கொடுப்பனவு (போனஸ்). அதாவது 14.9 மில்லியன் பிராங்குள் உங்கள் மொத்த ஊதியம். ஒரு மணி நேரத்துக்கு உங்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது என தெரியுமா?”
எர்மோற்றி அதிர்ச்சி அடைகிறார்.
எர்மோற்றி: எனது சம்பளம் பற்றி இந்த வழியில் உரையாடுவது ஆரோக்கியமானதல்ல. அது சர்வதேச சந்தை தர நிர்ணய அடிப்படையை பிரதிபலிப்பது. கோல்ட்மான் ஸக்ஸ், மோர்கன் ஸ்ரான்லி, டொச் வங்கி போன்ற வங்கிகளுடனான UBS இன் திறமைசார் போட்டி. சந்தை மட்டத்திற்குக் கீழ் நாம் கொடுத்தால், நாங்கள் எங்களது திறமையான மக்களை இழக்க நேரிடும். அந்த தீர்மானம் சுவிற்சர்லாந்தின் நலன் அடிப்படையிலல்ல.
நத்தாலியா: மணித்தியாலத்துக்கு 7163 பிராங் பெறுகிறீர்கள். சூரிச் பல்கலைக் கழக வைத்தியசாலையில் வேலைசெய்யும் ஒரு தாதிக்கு சராசரி மாதச் சம்பளம் 7500 பிராங். அவர் ஒரு மதிய உணவுக்குப் போக முன்னரே அவரது மாத சம்பளத்தை நீங்கள் உழைத்துவிடுகிறீர்கள்.
எர்மோற்றி: சர்வதேச நிதிச் சந்தையை ஒரு தாதித் தொழிலுடன் ஒப்பிட முடியாது. இரண்டும் முற்றான இருவேறு உலகங்கள். சர்வதேச ரீதியில் எனது கடமையானது 3 மில்லியன் வாடிக்கையாளர்கள் மற்றும் 150’000 வேலையாட்களோடு சம்பந்தப்பட்டது. மொத்தம் 1.7 திரில்லியன் பண இருப்பு நிலையை (balancs sheet) உள்ளடக்கியது. அது மணித்தியாலக் கணக்கால் அளவிடப்பட முடியாதது.
நத்தாலியா: உங்களது 15 ஐரோப்பிய போட்டியாளர்களோடு ஒப்பிடுகையில் உங்கள் ஊதியம் 147 வீதம் அதிகமானது. 88 வீதம் வெளிநாட்டிலிருந்து வருகிறது. உங்களது ஊதியம் UBS இன் அண்மைய பொதுக் கூட்டத்தில் 86.7 வீத வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது. சுவிற்சர்லாந்தில் 12 வீதத்துக்கு குறைவான பங்குதாரர்களே உள்ளனர். அதாவது 12 வீத வாக்குகள். உங்கள் ஊதியத்தை நிர்ணயிக்கும் 88 வீதமான வாக்குகள் வெளிநாட்டிலிருந்து கிடைத்தவை. ஒரு சுவிஸ் வங்கியாளரின் ஊதியத்தை வெளிநாட்டவர் தீர்மானிப்பதை எப்படி புரிந்து கொள்வது. இத்தனைக்கும் வரி செலுத்தும் சுவிஸ் மக்களின் பணத்தால் காப்பாற்றப்பட்ட ஒரு வங்கி உங்களது.!
எர்மோற்றி: UBS காப்பாற்றப்பட்டது என்பது பிழையான சித்தரிப்பு. (வங்குரோத்து அடைந்த) கிறடிற் சுவிஸ் (Credit Swiss) வங்கியை தேசிய அரச சபையின் சார்பில் நாம் பொறுப்பேற்றுக் கொண்டோம். சுவிஸ் பொருளாதாரத்தை நிலைப்படுத்த நாம் உதவினோம். இது UBS இனை காப்பாற்றியதாக பொருள் இல்லை. இது சுவிஸ் பொருளாதாரத்தை காப்பாற்றியதாக அமைந்த ஒன்று. இந்த பரிவர்த்தனையை செய்யாது விட்டிருந்தால் 1929 இல் நிகழ்ந்த மோசமான பொருளாதார நெருக்கடிக்கு சுவிஸ் தள்ளப்பட்டிருக்கும்.
நத்தாலியா. அரச தேசிய சபையின் 9 பில்லியன் பிராங் உத்தரவாதத்தோடும், தேசிய வங்கியின் 200 பில்லியன் பண உதவியுடனும், அரசின் அவசரகால உதவியுடனும் இது நடந்தது. இது ஒரு மீட்பு செயல்முறை இல்லையென்றால் இதை எப்படி அழைப்பது?
எர்மோற்றி பதில் சொல்லவில்லை.
நத்தாலியா: UBS இன் உள்ளக ஆவணங்களின் விபரத்தை “ஐ-பாட்” திரையில் எடுத்துக் காட்டுகிறார். அது 12 மார்ச் 2025 திகதியிடப்பட்டது. இது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழி அமைக்கிற செயற்கை நுண்ணறிவு (AI) வர்த்தகம் பற்றி விபரிக்கிறது. இது “UBS Quantum Insight” எனப்படுகிறது. இதை UBS வழங்கியிருக்கிறதா?
எர்மோற்றி: தகைமை வாய்ந்த முதலீட்டாளர்களுக்கு…
நத்தாலியா: யார் தகைமை வாய்ந்த முதலீட்டாளர்கள்?
எர்மோற்றி: குறைந்தது ஒரு இலட்சம் பிராங் முதலீடாக செலுத்தும் வாடிக்கையாளர்கள்.
நத்தாலியா: மூன்று வீதம். அந்த மூன்று வீத வாடிக்கையாளர்கள் தான் சுவிஸில் தகைமை வாய்ந்த முதலீட்டாளர்கள். அதாவது இழப்புகளை ஜீரணித்துக் கொள்ளக் கூடியளவு பணம் படைத்தவர்கள். மற்றைய 97 வீதமானவர்கள் -ஒரு வைத்தியசாலையின் தாதி, ஒரு ஆசிரியர், ஒரு ஓய்வூதியகாரர் போன்றவர்கள்- இந்தத் தொழில்நுட்பம் இருப்பது பற்றி அறியாதவர்கள். ஏனெனில் நீங்கள் அதை அவர்களுக்கு சொல்லவில்லை. நவீன பொருளாதார வழிவகைகளை சுவிஸில் யார் பெறவேண்டும் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். ஒரு தனியாளாக, வருடத்துக்கு 14.9 மில்லியன் சம்பளம் எடுக்கும் நபரான நீங்கள் அதை தீர்மானிக்கிறீர்கள்.
நத்தாலியா: கடைசிக் கேள்வி. இந்த நாட்டின் எல்லா மக்களும் நாட்டின் வளத்தையும் செழுமையையும் அனுபவிக்கிற சந்தர்ப்பம் அடிப்படையில் சம அளவில் இருக்கிறது என நீங்கள் நம்புகிறீர்களா?
எர்மோற்றி: நிச்சயமாக. அது எமது சமூகத்தின் மையப் பெறுமதி கொண்டது. UBS அந்த சம சந்தர்ப்பம் கிடைப்பதற்காக தனது அமைப்பினூடாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
அவரை இடைமறிக்கிறார் நத்தாலியா.
“நிறுத்துங்கள்!. எனது கேள்விக்கு வெற்றுப் பதிலை அளிக்க வேண்டாம். உண்மையில் அதை நீங்கள் நம்புகிறீர்களா? ஆம் அல்லது இல்லை என பதிலளியுங்கள்”
எர்மோற்றி: ஒவ்வொருவரும் வெற்றி கொள்வதற்காக இந்த முறைமை உருவாக்கப்பட்டதல்ல. இந்த முறைமையை விளங்கிக் கொள்பவர்களுக்காகவே இது உருவாக்கப்பட்டது. மேலும் இதை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ளவும் முடியாது. முதலாளித்துவம் அப்படித்தான் இயங்கும்.
நத்தாலியா: எர்மோற்றி அவர்களே, “இந்த முறைமையை சுவிஸ் பிரஜைகளில் பெரும்பாலானோரும் விளங்கிக் கொள்ள முடியாது” என்பதை சுவிஸின் மிகப் பெரிய வங்கியான UBS பிரதியீடு செய்கிறது என்பதை பொதுவெளியில் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த கூற்றை திரும்பவும் இன்னொரு முறை சொல்ல முடியுமா?
எர்மோற்றி அதை செய்யவில்லை. தனது ஒலிவாங்கியை அகற்றினார். மேசைமீது அதை பக்குவமாக வைத்தார். எழுந்தார். ஒருசில விநாடிகள் அமைதியாக நின்றார். நத்தாலியா வப்லர் அவர்களின் கண்களைப் பார்த்தார். ஏதோ சொல்ல முனைந்தார். சொல்லவில்லை. கலையகத்தை விட்டு வெளியேறினார்.
இதுவரை உட்கார்ந்திருந்த எர்மோற்றி அவர்களின் வெறுமையான கதிரையின் மீது கமரா ஒன்பது செக்கன்கள் நிலைகுத்தி நிற்கிறது. அமைதி. நத்தாலியா தனது ஒலிவாங்கியை கழற்றி எர்மோற்றி கழற்றி வைத்த அவரது ஒலிவாங்கி அருகில் மேசையின் மீது வைக்கிறார். பிறகு கமராவின் பக்கம் திரும்புகிறார்.
“இன்னும் சில வாரங்களில் நான் சுவிஸ் தொலைக்காட்சியிலிருந்து (SRF) விலகுகிறேன். எந்த UBS இயக்குநரும் இதுவரை எதையும் பொதுவெளியில் சொன்னதில்லை என எர்மோற்றி ஒரு வசனம் சொன்னார். நாளை காலை UBS செய்தி வெளியீட்டுப் பிரிவு ஒரு அறிக்கையை வெளியிடும். உள்ளடக்கத்திலிருந்து வசனங்களை வெளியே எடுத்து நான் பேசியதாக அவர்கள் சொல்வார்கள். உண்மையில் என்ன பேசப்பட்டது என்பதை நீங்களே நேரில் கண்டீர்கள். ஒரு தனியான வர்த்தகத் தளம் பற்றியதல்ல இந்த இரவு. இது UBS பற்றியதுமல்ல. சுவிற்சர்லாந்து இப்போதும் சுவிற்சர்லாந்தாக இருக்கிறதா என்ற கேள்வி பற்றியது. 97 வீதமான மக்களின் நிதியாதாரத்தை, அதற்கான கருவியை தீர்மானிக்கிற சக்திகளாக மூன்று வீதத்தினர் இருக்கிற ஒரு நாடாக சுவிற்சர்லாந்து ஆகியிருக்கிறதா என்ற கேள்வி பற்றியது”
என மக்கள் சார்ந்து தனது குரலை பதிவு செய்கிறார்.
“இரவு வணக்கம் சுவிற்சர்லாந்து!” என முடிக்கிறார் நத்தாலியா வப்பர்.
*
பிற்சேர்க்கை:
சுவிஸின் ஒலி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SRG,SSR) இன் பொது இயக்குநர் சுஸானே வில்லே (Susanne Wille) அவர்கள் விடுத்திருந்த அறிக்கை இது.
இரண்டு மணி நேரத்தின் முன் Rundschau Talk நிகழ்ச்சியில் நத்தாலியா வாப்லர் அவர்கள் சேர்ஜியோ எர்மோற்றி அவர்களிடம் ஒரு கடினமான கேள்வியை கேட்டிருந்தார். யாரும் எதிர்பார்க்காத ஒரு பதிலை நத்தாலியா பெற்றார். தனது இயக்குநர் எர்மோற்றியின் கூற்றை UBS பொதுவெளியில் மறுவியாக்கியானப் படுத்த முயற்சித்திருக்கிறது. அத்தோடு ஆசிரியர் குழுவின் மீது ஒரு முறைப்பாட்டையும் செய்திருக்கிறது.
நான் மூன்று விடயங்களை தெளிவாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் இங்கு சொல்ல விரும்புகிறேன்.
1. எமது கூட்டுத்தாபனம் (SRG, SSR) இந்த ஒளிபரப்புக்கு பின்னால் செயற்பட்டது. இது ஒளிபரப்பப் படுவதற்கு முன்னான வாரங்களில் நாம் ஒவ்வொரு வசனத்தையும், ஒவ்வொரு விபரத்தையும், ஒவ்வொரு ஆவணத்தையும் சரிபார்த்தோம்.
2. 2011 இலிருந்து 2016 வரை Rundschau க்காக பாராளுமன்றத்தில் ஓர் அரசியல் செய்தியாளராக வேலைசெய்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி உருவாக்கத்தை உள்ளிருந்தே நான் பார்த்திருக்கிறேன். இன்றைய மாலையில் நத்தாலியா செய்தது இந்த உலகின் மிகச் சிறந்த ஊடகவியல் அர்த்தம் கொண்டது. SRG, SSR இன் இயக்குநராக நான் இருக்கும்வரை இந்த செவ்வியானது எமது எந்தத் தளத்திலிருந்தும் ஒருபோதும் மறைந்து போகாது.
3. முக்கியமானது இது. சுவிற்சர்லாந்தின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான UBS ஒரு செய்தியாளரின் குரலை நிறுவன ரீதியிலான அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலம் மவுனமாக்க முயற்சித்தால், நாம் மவுனம் காப்பதற்கான நேரமாக அது இருக்காது. இந்த நிகழ்ச்சி ஒலி ஒளி என எமது எல்லாத் தளங்களிலும் (SRF, RTS, RSI, RTR), எல்லா நான்கு மொழிகளிலும் தொடர்ந்து கிடைக்கக் கூடியதாக இருக்கும். இது உறுதி.
*
- ravindran.pa
- 26042026
- Thanks for info & images: https://paragraph. com

