ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியான உள்நாட்டு வெளிநாட்டுப் போர்களாலும் அடிப்படைவாதங்களாலும் சீரழிக்கப்பட்ட நாடு. போதைப்பொருள் சாம்ராச்சியமாக மனநிலைப்படுத்தப்படும் நாடு.
சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு 1979 இலிருந்து 1989 வரை நீடித்தது. 1992 ஏப்ரல்28 அன்று சோவியத் பொம்மை அரசான நஜிபுல்லாவின் அரசு அழிந்தொழிந்தது. அதுவரை அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்று பட்டுப் போராடிய முஜாகிதீன் கிளர்ச்சியாளர்களில் ஆக்கிரமிப்புக்கெதிரான போராளிகளாக இருந்த உண்மைப் போராளிகளின் பெரும்பகுதியினர் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்தனர். மற்றைய பகுதியான அதிகார வெறி பிடித்த குழுவினரோ உள்நாட்டுப் போரை ஆரம்பித்தனர்.
முகாஜிதீன்களை மக்கள் இரு பெரும் பிரிவாக வரையறுத்து அழைத்தனர். முதலாமவர்களை ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போராளிகளாகவும் விடுதலை வீரர்களாகவும் கொண்டாடினர். இரண்டாமவர்களை அதிகார வெறிபிடித்த கிரிமினல் முகாஜிதீன்கள் என்றனர். இந்தக் குழுவை ஜிகாதிகள் என மக்கள் அழைத்ததோடு மட்டுமன்றி இவர்களை உண்மை முகாஜிதீன்களிலிருந்து வேறுபடுத்தினர்.
சோவியத் இன் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தபோது, றபானி தலைமையிலான “ஆப்கான் இஸ்லாமிய அரசு” உருவானது. 1996 இல் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். ஆப்கானை “ஆப்கான் இஸ்லாமிய எமிரேற்” என அவர்கள் பெயரிட்டார்கள்.
மலாலை யோயா (Malai Joya) இன் Raising my voice நூலை வாசிக்கிறபோது ஆப்கானின் சிக்கல் நிறைந்த அரசியல் முடிச்சுகள் அவிழத் தொடங்குகிறது.
மேற்குலகின் தயாரிப்பாகி நோபல் பரிசுவரை சென்றிருக்கும் (நிராகரிக்கப்பட முடியாத) மலாலாய் அல்ல இந்த மலாலை . 4 நாள் குழந்தையாக இருந்தபோதே ஆப்கான் உள்நாட்டுப் போரின் காரணமாக தனது இடப்பெயர்வு வாழ்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு ஈரான், பாகிஸ்தான் என அலைந்து, விடாப்பிடியாய் கல்வியை தரிசித்து, பின் சிறுமியாக இருந்தபோதே ஆப்கான் பெண்களுக்கான எழுத்தறிவுக்காக உழைக்கத் தொடங்கியவர் மலாலை யோயா. அகதி முகாம்களில் அவரது பணி தொடங்கியிருந்தது. ஆப்கானின் உள்நாட்டுப் போர்களுக்குள் ஆப்கான் பெண்களுக்கான குரலாக இருந்த அவர் கடந்துபோன சோவியத் யூனிய ஆக்கிரமிப்பை மட்டுமன்றி, மேற்குலகின் குறிப்பாக அமெரிக்காவினதும் நேற்றோவினதும் தலையீடுகளை எதிர்த்து விமர்சனங்களுடன் குரலெழுப்பியவர்.
தலிபான்களின் ஆட்சி வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்குலகின் பொம்மை (கர்சாய் தலமையிலான) ஆட்சி உருவானபோது, புதிய அரசியலைப்புச் சட்ட வரைவை உருவாக்குவதற்கான குழுவை கண்டடைதலுக்காக கூடிய சபைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரில் மலாலை யோயும் ஒருவர். அப்போது 25 வயது அவருக்கு. ஐநூறுக்கு மேற்பட்டோர் கூடியிருந்த அந்த சபையில் அவர் துணிச்சலான உரையொன்றை ஆற்றினார்.
ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் போர்க்குற்றவாளிகளும்தான் இந்த குழுவில் இருக்கப்போகிறவர்கள். அரசியலைப்புச் சட்டத்தை வரைவதற்கான குழுவில் யார்யாரெல்லாம் இருக்கவேண்டும் என ஏற்கனவே தீர்மானித்த முடிவுகளோடுதான் நீங்கள் இங்கு வந்து குந்தியிருக்கிறீர்கள். அவர்கள் அனைவருமே கிரிமினல் குற்றவாளிகள். இவர்கள்தான் நமது நாட்டின்மீது நடாத்தப்படுகிற போர்களுக்கும் உள்நாட்டுப் போர்களுக்கும் காரணமானவர்கள். பெண்களுக்கு எதிரான மோசமான ஒடுக்குமுறைகளை செய்பவர்களும் இவர்களே. இவ்வாறான மோசமான கிரிமினல்களிடம்தான் நாட்டின் தலைவிதியை ஒப்படைக்கிறோம். இவர்கள் பதவிகளுக்கு உரியவர்களல்ல. அவர்கள் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட வேண்டிய குற்றவாளிகள். வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது.
இந்த உரையை சகிக்காத முல்லாக்கள் மலாலை யோயை உடனடியாகவே சபையிலிருந்து வெளியேற்றினர். அவளை கொல்லவேண்டும் என கத்தினர்.
2007 இல் தனது பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மலாலை யோயா “மிருகங்கள் நிறைந்த இடம்தான் பாராளுமன்றம்” என தொலைக்காட்சிக்கு பேட்டியளித்ததிற்காக பாராளுமன்ற பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இவர் 2009 இல் எழுதியுள்ள நூல் Raising my voice என்பதாகும்.ஆப்கானின் துணிச்சலான பெண்களில் ஒருவர் என கார்டியன் பத்திரிகையால் பாராட்டப்பட்ட மலாலை யோயா எழுதிய இந் நூலை வாசிக்கிறபோது, பகிர்ந்துகொள்ள வேண்டிய முக்கிய கருத்தாக இது தெரிகிறது.
ஆப்கான் பெண்கள் மீதான சகிப்பின்மை, குரூர மனநிலை மற்றும் மோசமான ஒடுக்குமுறைகளும் சட்டதிட்டங்களும் தலிபான்களின் உற்பத்தி என மேற்குலக மக்கள் பலர் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். இது பொய். அமெரிக்கப் பின்னணியுடன் சனநாயக அரசு என்ற பெயர்ப் பலகையின் கீழான ஹமீட் கர்சாய் இன் அரசில் அங்கம் வகிக்கும் போர்ப் பிரபுக்களின் பிரச்சாரம் இது. உலக மக்களின் கண்களை இன்னமுமாய் தூசிகளால் திரையிடுகிற தந்திரம் இது. உண்மையில் கடந்துபோன காலங்களில் மோசமான அக்கிரமங்களைப் புரிந்தவர்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு, தற்போதைய அரசில் அதிகாரத்தில் இருக்கும் ஆண்கள். உள்நாட்டுப் போரில் பெண்களும் குழந்தைகளும்தான் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். இசுலாம் என்ற பெயரின் கீழ் அவர்களது மிக அடிப்படையான உரிமைகளும் பிடுங்கப்பட்டன. இந்த போர்ப் பிரபுக்கள் பெண்களுக்கான பாடசாலை கதவுகளை மூடினார்கள். பெண்களின் காலடி ஓசையை மறுத்தார்கள்.
1992 களின் ஆரம்பப் பகுதியில் இடைக்கால அரசின் பேச்சாளராக இருந்தவரும் (தற்போது கர்சாயினதும் அமெரிகாவினதும் நேசிப்புக்குரியவருமான) Sheikh Asif Mosheini உம், தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் SaydAliJaved உம் பெண்களின் “முக்காடு பற்றிய புதிய சட்டதிட்டங்களை” அப்போது அறிவித்தவர்கள். முக்காடு போட மறுப்பவர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எனவும் முக்காடற்ற பெண்கள் துர்நடத்தையுள்ளவர்கள் என்றும் கற்பிதப்படுத்தப்பட்டார்கள்.
அவர்கள் பெண்கள் சம்பந்தப்பட்டு (1992 இல்) வரைவுசெய்த சட்டதிட்டங்கள் இவை.
1. அவர்கள் வாசனைத் திரவியங்களை பாவிக்கக்கூடாது.
2. அலங்காரமான உடைகளை உடுத்தக்கூடாது.
3. மெல்லிய துணிகளை உடுத்தக்கூடாது.
4. ஒடுக்கமான, இறுக்கமான உடுப்புகளை உடுத்தக்கூடாது.
5. உடல் முழுவதையும் மூடியிருக்க வேண்டும்.
6. ஆண்களின் உடையை ஒத்திருக்கக் கூடாது.
7. முஸ்லிம் அல்லாத பெண்களின் உடைகளை ஒத்திருக்கக் கூடாது.
8. அவர்களது பாத அணிகலன்கள் ஓசையெழுப்புவதாக இருக்கக் கூடாது.
9. ஒலிகளை எழுப்பக்கூடியதான அலங்காரம் கொண்ட உடைகளை அணியக் கூடாது.
10. வீதியின் நடுவால் அவர்கள் நடந்து செல்லக் கூடாது.
11. கணவனின் அனுமதியின்றி வெளியில் இறங்கக்கூடாது.
12. அறிமுகமற்ற ஆண்களுடன் பேசக் கூடாது.
13. அவர்கள் பேச வேண்டியிருக்கிற சந்தர்ப்பங்களில், மிக தாழ்ந்த குரலிலும் சத்தமாக சிரிக்காமலும் பேச வேண்டும்.
14. அறிமுகமற்ற ஆண்களை நேராக பார்க்கக் கூடாது.
15. அறிமுகமற்றவர்களுடன் கலக்கக் கூடாது.
என்பதாகும்.
———————————————————
Fb Link:
https://www.facebook.com/notes/ravindran-pa/dust-in-the-eyes-of-the-world/923980557673039