குத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்

ali-young and old

கிறிஸ்துவுக்குமுன் 4000 வருட பழமை வாய்ந்ததாக நவீன வரலாற்றாசிரியர்களால் சொல்லப்படுகிற “குத்துச்சண்டை”யின் வேர் வட ஆபிரிக்காவில் தோற்றம் பெற்றது என்கின்றனர்.. இது கிரேக்கம் மற்றும் றோம் போன்ற இடங்களிலும் விளையாடப்பட்டது. அது  Pugilism என அழைக்கப்பட்டது.

ஆவணப்படுத்தப்பட்ட முதல் குத்துச்சண்டை போட்டி 1681 இல் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. “குத்துச்சண்டையின் தந்தை” என அழைக்கப்படும் Jack Baugton 1743 இல் முதன்முதலில் குத்துச்சண்டையை ஒரு விளையாட்டு (sport) என்ற வடிவத்துள் கொண்டுவருவதற்கான சில விதிகளை அறிமுகப்படுத்தினார். 1865 இல் பாரிய மாற்றங்கள் கொண்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்றைய விதிகளின் தொடக்கப்புள்ளி அதுவாகவே இருந்தது. 1904 இல் முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையும் உள்ளடக்கப்பட்டது.

1619 இல் அமெரிக்காவிற்கு முதல் ஆபிரிக்க கறுப்பின மனிதன் அடிமையாகக் கொண்டு வரப்பட்டான். அமெரிக்காவில் 17ம் 18 ம் நூற்றாண்டுகளில் தொடர்ந்த அடிமை முறை 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தம் வரை தொடர்ந்தது. ஆபிரிக்க மக்களை அடிமைகளாக வைத்திருந்த  தென்பகுதியைச் சேர்ந்த அடிமைப் பண்ணை வெள்ளை எசமானர்கள் தம்மை குசிப்படுத்த பலசாலிகளான கறுப்பு அடிமைகளை (குத்துச்சண்டையில்) மோதவிட்டு மகிழ்வார்கள்.

அடிமைமுறை அழிந்தொழிந்ததின் பின்னரான காலங்களில் அமெரிக்காவில் குத்துச்சண்டை விளையாட்டாக (sport) முன்னிலைப்படுத்தப் பட்டது. மற்றைய விளையாட்டுகளைப் போலல்லாமல் குத்துச்சண்டை அடிமையாதலின் அவமானங்களை கோபத்துடன் வெளிப்படுத்துகிற, வெள்ளை மேலாதிக்க கருத்தியலின் முகத்தில் குத்துகிற, அதை எதிர்கொள்கிற உளவியலின் வெளிப்பாடாக கறுப்பின மக்கள் தரப்பில் வெளிக்கிளம்பியது. கறுப்பர்கள் வெள்ளையினத்தவரைப் போலன்றி சோம்பேறிகள். மதிநுட்பம் அற்றவர்கள் என்ற இனவாதக் கற்பிதத்தை அடித்துநொருக்குகிற வீரியம் மிக்க களமாக குத்துச்சண்டை மாற்றம் பெற்றது.

* * *

ஜக் ஜோன்சன் (Jack Johnson)

Jack-Johnson

1908 இல் உலக அதிபார குத்துச்சண்டை வீரனுக்கான சம்பியன் பட்டத்தை பெற்ற முதல் கருப்பினத்தவர் ஜக் ஜோன்சன் என்பவர். இந்த வெற்றி வெள்ளை மேலாதிக்கத்துக்கு எதிரான சவாலாக வெள்ளையர்களால் பார்க்கப்பட்டது. இது பெரிய அதிர்வலைகளை இரு பக்கமும் ஏற்படுத்தியது. முன்னாள் குத்துச்சண்டை வீரரான  Jim Jeffries திரும்பவும் களத்தில் குதித்தார். வெள்ளையினத்தவர் கறுப்பினத்தவரை விடவும் எல்லாவகையிலும் சிறந்தவர்கள் என நிரூபிக்க வேண்டியிருப்பதால் தான் களத்திற்கு வருவதாக அறிவித்தார்.உலக ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு மீண்டும் மிகப்பெரிய «வெள்ளை நம்பிக்கையை» (white hope) தூக்கிநிறுத்த வேண்டியிருக்கிறது என ஊடகங்களில் பேசப்பட்டன.

1910 இல் போட்டி நடந்தபோது வெள்ளையின இரசிகர்கள் «இந்த நீக்ரோவைக் கொல்! இவனைக் கொல்!» என்று கத்தினார்கள். கூச்சலிட்டார்கள். ஆனால் பலசாலியான ஜோன்சன் மிக விரைவான அசைவுகளின் மூலம் இலகுவாகவே ஜெப்ரிஸை தோற்கடித்தார். அதிர்ந்துபோன வெள்ளை மேலாதிக்கத்தின் கோபம் பல முக்கிய நகரங்களில் கலவரமாக வெளிக்கிளம்பியது. கலவரத்தை வெள்ளையர்கள் எற்படுத்தியபோதும் கறுப்பர்களை கலவரத்தை கைவிட்டு அமைதியாக இருக்கும்படி ஜோன்சன் கறுப்பின மக்களுக்கு சொல்ல வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஜோன்சன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அவரது பதில் மௌனம் என்றிருந்தது.

நியூயோர்க், ரெக்சாஸ், ஓகியோ, வாசிங்டன் போன்ற பல பெரிய நகரங்களில் கலவரம் தனது வேலையைக் காட்டியது. இத்தோடு தீப்பிடித்த வெள்ளை இனவெறி 1968 இல் மாட்டின் லூதர் கிங் படுகொலைவரை ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியைப் பேணியது. ஜோன்சன் பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டார். பொய்வழக்குகளைச் சந்தித்த அவர் 1913 இல் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்.

ஜோய் லூயிஸ் (Joe Louis)

20 வருடங்களுக்குப் பின் ஜோய் லூயிஸ் என்ற இன்னொரு கறுப்பின குத்துச்சண்டை வீரனின் வரவு இருந்தது. The Brown Bomber என அழைக்கப்பட்ட லூயிஸ் என்பவர் ஜோன்சன் போன்று இல்லாமல் அடக்கிவாசிக்க வைக்கப்பட்டார். அவரது பயிற்சி முகாமையாளர்கள் விதித்திருந்த விதிகளுக்கு அவர் கட்டுப்பட்டார். எந்த வெள்ளையினப் பெண்ணோடும் புகைப்படம் எடுக்கக் கூடாது என்றும் எந்த கிளப்புக்கும் தன்னிச்சையாகப் போக முடியாது என்றும் சுயமாக எதுவும் கருத்துகள் பொதுவெளியில் வெளியிடக்கூடாது எனவும் விதிகள் அவர்மீது சுமத்தப்பட்டு கவனமாக கையாளப்பட்டார் லூயிஸ்.

ஆனால் களத்தில் அவர் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தியபடி இருந்தார். தொழில்முறையிலான போட்டிகளில 72 களங்களைக் கண்ட அவர் அவற்றில் 69 போட்டிகளை வென்றார். அதில் 55 போட்டிகள் நொக்-அவுட் முறையில் அவர் பெற்றுக்கொண்டவை. அவரைக் கட்டுப்படுத்திய விதிமுறைகள் அவர் ஆடுகளத்தில் உருவாக்கிக் கொண்டிருந்த பிம்பத்தை தடைசெய்ய முடியாமல் இருந்தன. கறுப்பின ஏழை மக்களையும், 1930 களில் இனவொதுக்கலில் அகப்பட்டுத் திணறிக்கொண்டிருந்த தொழிலாளிகளையும் உளவியல் ரீதியில் அவர் பிரதிநிதித்துவப் படுத்துவதான பிம்பம்தான் அது.

அவர் எதிர்கொண்ட போட்டிகளில் நாசி யேர்மனியைச் சேர்ந்த மாக்ஸ் ஸ்மெலிங்க் (Max Schmeling) என்பவருடான போட்டி கறுப்பின மக்களின் வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டியதாக இருந்தது. ஆரியப் பெருமையை (Aryan greatness)  நிறுவிக் காட்டுவதற்கான களமாக கிற்லர் இதை வர்ணித்து, ஸ்மெலிங்க்கை முன்னிலைப்படுத்தி பேசிக்கொண்டிருந்தான். 1936 இல் நடந்த இப் போட்டியில் நொக்-அவுட் முறையில் லூயிஸ் தோல்வியடைந்தார். நாசிகள் மட்டுமன்றி அமெரிக்காவின் Southern Press உம் கேலி பேசின. அந்தப் பதிப்பின் ஆசிரியர் தலையங்கம் «யார் உயர்ந்த இனம் என்பதை இது நிரூபித்திருக்கிறது» என்று எழுதியது.

joe-schmeling Louis vs Schmeling

இரண்டு வருடங்களின் பின் 1938 இல் லூயிஸ் மீண்டும் ஸ்மெலிங்க்கை எதிர்கொண்டார். கிற்லர் இப் போட்டி ஒளிபரப்புகளை யேர்மனியில் தடைசெய்தான். வானொலிக்கு மட்டும் அனுமதியளித்தான். முதல் றவுண்டிலேயே லூயிஸ் ஆச்சரியப்படக்கூடிய விதத்தில் ஸ்மெல்லிங்கை நொக்-அவுட் முறையில் தோற்கடித்தார். ஸ்மெல்லிங் தோற்கடிக்கப்படக்கூடிய சாத்தியத்தை ஆரம்பத்திலேயே ஊகித்த கிற்லர் வானொலி ஒலிபரப்பையும் உடனடியாகவே இடைநிறுத்த உத்தரவிட்டான்.

லூயிஸ் 12 வருடங்களாக உலக அதிபார குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை தனதாக்கி வைத்திருந்தார். இக் காலப் பகுதியில் பெரும்பாலான வெள்ளையின குத்துச்சண்டை வீரர்களை -மொத்தம் 25 தடவைகள் எதிர்கொண்டு- தனது உலக அதிபார சாம்பியன் பட்டத்தை விடாமல் காத்தார்.

ஒரு மிக மோசமான இனவெறியை வன்முறை வடிவில் எதிர்கொண்ட ஒரு சமூகத்தில் குத்துச்சண்டையானது வெள்ளை இனவெறியர்கள் மீதான கோபம் மற்றும் தமது நாசமாக்கப்படுகிற இயலுமை, அடையாளப்படுத்தப்பட முடியாத திறமைகள் என்பவற்றிலிருந்து திமிறி பீறிட்டு வருகிற ஆத்மார்த்தமான மனநிலையிலிருந்து பார்க்கப்பட்டது. லூயிஸ் இன் ஒவ்வொரு வெற்றியும் கறுப்பின மக்களால் -ஊர்வலமாய்ப் போவதுவரை – வெற்றிக்களிப்புடனும் எழுச்சியுடனும் கொண்டாடப்பட்டது.

ali-joe-louis

«வெல்லப்பட முடியாத ஒரு நீக்ரோ அவன். ஒரு வெள்ளை மனிதனுக்கு எதிரில் நின்றபடி அவனை தனது கைமுட்டியால் அடித்து வீழ்த்துகிற வீரன். அவன் ஓர் உணர்வு. எமது கனவுகளையும், ஒருவகையில் பழிதீர்க்கும் மனநிலைகளையும் அவன் தாங்கிவைத்திருந்தான்» என பிரபலமான கவிஞை மாயா அஞ்சலோ எழுதினார்.

நச்சுவாயு செலுத்தி நிறைவேற்றப்படுகிற மரணதண்டனையின்போது கறுப்பினத்தவன் தனது கடைசி வார்த்தைகளாக «ஜோய் லூயிஸ் என்னைக் காப்பாற்று! ஜோய் லூயிஸ் என்னைக் காப்பாற்று! » என்று கதறியபடியே உயிர்விட்டான் என மார்ட்டின் லூதர் கிங் Why we can’t wait நூலில் குறிப்பிடுகிறார்.
இவ்வாறாக குத்துச்சண்டை ஒரு விளையாட்டு என்ற எல்லையை தாண்டியதாக -ஒரு மனநிலையாக- செயற்பட்டது.

முகமது அலி

கசியஸ் கிளே என்ற ஆரம்பப் பெயர் கொண்ட குத்துச் சண்டை வீரன்தான் பின்னர் முகமது அலி என்ற பெயரால் அழைக்கப்பட்டார். 1950 களிலும் 60 களிலும் முகமது அலியின் காலமாக குத்துச்சண்டை களமாகியது. அவர் பங்கெடுத்த 61 களங்களில் 56 வெற்றிகளை ஈட்டினார். அதில் 37 போட்டிகளில் நொக்-அவுட் முறையில் வென்றார். மூன்று முறை உலக அதிபார குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ali-young

1942 இல் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த காசியஸ் கிளே 1960 இல் தனது 18 வது வயதில் றோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இள இரத்தம் பேசியது.
«அமெரிக்காவை உயர்ந்ததாக மாற்றுவதே எனது இலக்கு. எனவே நான் றஸ்ஸியனைத் தோற்கடிப்பேன். போலந்த்துக் காரனைத் தோற்கடிப்பேன். அமெரிக்காவுக்காக நான் தங்கப்பதக்கத்தை வென்றெடுத்திருக்கிறேன்.» ஏன்றார்.

தனது பதக்கத்தை எப்போதுமே கழுத்தில் அணிந்தபடி கொண்டாடித் திரிந்தான் அந்த இளைஞன். அவன் தனது பதக்கத்துடனேயே படுத்துறங்கினான். ஒரு வாரத்தின் பின் சீஸ் பேர்கர் (cheeseburger) சாப்பிடுவதற்காக உணவுவிடுதிக்கு இந்த பதக்கமாலையுடன் அவன் சென்றபோது அவனுக்கு சர்வீஸ் செய்ய மறுத்தார்கள். ஆத்திரமடைந்த கிளே தனது பதக்கத்தை அருகில் ஓடிக்கொண்டிருந்த ஓகியோ (Ohio)ஆற்றில் வீசியெறிந்தான். அந்தச் சம்பவம் அவனது வாழ்க்கையை மாற்றிப் போட்டது.

மல்கம் எக்ஸ் (Malcom X) உடன் அறிமுகம்

நிறவெறியின் முகத்தை நேரடியாக அனுபவித்த அவன் மல்கம் எக்ஸ் இன் பேச்சால் கவரப்படுகிறான். வெள்ளையினக் கருத்திலாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மல்கம் எக்ஸ் ஓர் எதிர்மறுப்பாகவும் மானசீகமாகவும் தழுவியிருந்த இஸ்லாம் மதத்தின் அமைப்பாக “நேசன் ஒப் இஸ்லாம்” (Nation of Islam) இருந்தது. மல்கத்துடன் தொடர்பு ஏற்பட்டு நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைக்கிறது. பின் கிளே க்கு நேசன் ஒப் இஸ்லாம் அமைப்பையும் அதன் தலைவர் எலிஜா முகமதுவையும் அறிமுகப்படுத்துகிறார் மல்கம் எக்ஸ். மல்கமும் கிளேயும் நல்ல நண்பர்களாகினர்.

இதே காலப் பகுதியில் அறியப்பட்ட குத்துச்சண்டை வீரராக இருந்த லிஸ்ரனை (Sonny Liston) 1964 பெப்ரவரி 25 அன்று நடந்த போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் கிளே தோற்கடித்து உலக அதிபார குத்துச்சண்டை சம்பியனாகத் தெரிவானார். I’m the King of the World, I’m the Greatest என கிளே முழங்கினார்.

Muhammad Ali vs. Sonny Liston, Lewiston, Maine, 1965  Ali vs Liston

இதே தினத்தில் கிளே தான் நேசன் ஒப் இஸ்லாம் அமைப்பில் இணைந்துவிட்டதாக பகிரங்கமாக அறிவித்தார். வெள்ளை நிறவெறியர்களை நீலவிழிகள் கொண்ட பிசாசுகள் என்று விழித்த அந்த அமைப்பு தனது பாதுகாப்பை தானே அமைத்து நிறவொதுக்கலுக்கு எதிராக தீவிரமாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தது. “கசியஸ் கிளே” (கசியஸ் எக்ஸ் எனவும் அழைக்கப்பட்டார்) என்ற அவரது பெயருக்குப் பதிலாக “கசியஸ் முகமது அலி” என்ற பெயரை எலிஜா முகமது சூட்டினார். அதை கசியஸ் தனக்குக் கிடைத்த கௌரவமாக ஏற்றார். அன்றிலிருந்து “முகமது அலி” என்ற பெயரே வழங்கப்படலாயிற்று.

விளையாட்டு உலகில் அலியின் நேசன் ஒப் இஸ்லாம் அமைப்பு பிரவேசமானது சர்ச்சைகளை உருவாக்கியது. சிவில் உரிமை அமைப்புகள்கூட அதை விரும்பவில்லை. இந்த நிலையில் அலி தனது நிலைப்பாடு மத ரீதியிலானது. அரசியல் ரீதியிலானதல்ல என பாதுகாப்பெடுத்து நின்று பதிலளித்தார்.

மல்கம் எக்ஸ் உம் அலியும்

கறுப்பின மக்களின் பெயர்கள் எல்லாமே அவர்கள் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட பின் வெள்ளையின எசமானர்களால் கொடுக்கப்பட்டவை. 1960 களில் நிறவெறிக்கெதிரான போராட்டங்களில் அமெரிக்காவின் வடக்கு பகுதிகளில் மார்ட்டின் லூதர் கிங் உம் தெற்குப் பகுதிகளில் மல்கம் எக்ஸ் உம் கறுப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ்ந்தனர். கலகக்காரனாக இருந்த மல்கம் எக்ஸ் இன் குடும்பப் பெயர் லிற்றிள் என இருந்தது. இந்த போலி குடும்பப்பெயர் அடையாளப்படுத்தலை மறுத்து மல்கம் தனது குடும்பப் பெயரை எக்ஸ் என மாற்றினார். «எனது இரத்தத்தில் ஓடுவது எமது மக்களை ஆபிரிக்காவிலிருந்து அடிமையாகக் கொணர்ந்து பெண்களை பாலியல் அடிமைகளாகப் பாவித்த வெள்ளையின வெறியர்களின் இரத்தமாகக்கூட இருக்கலாம். எனது இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய வழிமுறை இருக்குமானால் அதையும் செய்வேன்» என மல்கம் பேசினார்.

இந்த எக்ஸ் என்பது விடைகண்டுபிடிக்கப்பட முடியாதது என்ற அர்த்தத்தில் மல்கம் இனால் தனக்குத் தானே மாற்றிக்கொண்ட பெயர். இதை ஓர் எதிர்மறுப்பு குறியீடாக அடையாளப்படுத்தி பல கறுப்பினப் போராளிகள் தமது குடும்பப் பெயரை எக்ஸ் என மாற்றிக்கொண்டனர். கிளேயும் தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி “காசியஸ் எக்ஸ்” என தனது பெயரை மாற்றியிருந்தார்.

கறுப்பின மக்களின் போராட்டத்தின் எழுச்சி அமெரிக்காவின் தெற்கிலும் வடக்குக்கிலும் தீயாகப் பரவியது. 1964 கோடைகாலத்தில் ஆயிரக்கணக்கான சிவில் உரிமைப் போராளிகள் உட்பட பலரின் கைதுகள் இடம்பெற்றன. 30 கட்டடங்கள் குண்டுவீச்சுக்கு இலக்காகின. 36 தேவாலயங்கள் தீயிடப்பட்டன. குக்கூஸ் கிளான் என்ற வெள்ளை நிறவெறி அமைப்பு இதை முன்னின்று நடத்தியது. கிராமப்புறங்களில் தகித்துக்கொண்டிருந்த கறுப்பின மக்களின் எழுச்சிகள் நகர்ப்புறங்களில் முதன்முதலில் வீறுகொண்டெழுந்தன.

ali and malcom Ali and Malcom x

இந்த எழுச்சிக்கு உந்துதலாக முகமது அலி கறுப்பினத்தவர்களின் துணிச்சலை பிரதிபலிக்கிற ஒரு குறியீடாகத் திகழ்ந்தார் என்ற மதிப்பீடு உள்ளது. அவரை குத்துச்சண்டைக் களத்தில் வைத்து தம்மோடு அடையாளப்படுத்துகிற கறுப்பின மக்களுக்கு அவர் இலகுவில் பயத்தை வெல்லவும் அதன்மூலம் துணிவைக் கொடுக்கவுமான ஆத்மார்த்த பலத்தைக் கொடுப்பவராக இருந்தார். இந்த பிம்பத்துடன் அந்த மக்களுக்குள் அவர் புகுந்திருந்தார் என்பது மேற்சொன்ன மதிப்பீட்டுக்குக் காரணம்.

இந்தக் காலப் பகுதியில் மல்கம் எக்ஸ் தன்னை மனிதனாக உணராத, தனது முதுகை நிமிர்த்தி நிற்காத எந்த சமூகமும் விடுதலைக்கு மட்டுமல்ல சமஉரிமை கேட்பதற்கும் தகுதியற்றது என கறுப்பின மக்களை தட்டியெழுப்பிக் கொண்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில் இக் கருத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் முகமது அலி முக்கியத்தும் வாய்ந்த ஒரு குறியீடாக மாறிக்கொண்டிருந்தார். அவர் குத்துச் சண்டைக் களங்களில் I’m the Greatest ! என நெஞ்சை நிமிர்த்தி அவர் போடுகிற இரைச்சல் கறுப்பின மக்களுக்குள் ஊடுருவின.

அதுமட்டுமல்ல அழகு என்பதே “வெள்ளை” என நிறவாத கற்பிதம் ஓங்கியிருந்த நேரம் அதற்கு கறுப்பினத்தவர்கள் பலரும் பலியாகி தாழ்வுச்சிக்கலில் அவதிப்பட்டனர். அலி தான் அழகன் என சொல்லிக்கொண்டேயிருந்தார். அது கறுப்பினத்தவரிடம் இருந்த மேற்சொன்ன தாழ்வுச் சிக்கலுக்கு எதிரான கேள்வியை -குறைந்தபட்சம் அவர்கள் மனநிலைகளில் – எழுப்பிக் கொண்டிருந்தது.

அலியின் பெயர் மாற்றத்தை உபயோகித்த “வெள்ளைச் சூழ்ச்சி” முன்னாள் சாம்பியனான புளொய்ட் (Floyd Patterson) என்ற கறுப்பினத்தவரை அலிக்கு எதிராக களமிறக்கியது.
« இந்தக் களமானது ஒரு கறுப்பு முஸ்லிமிடமிருந்து பட்டத்தை திரும்ப எடுப்பதற்கானது. கத்தோலிக்கன் என்ற வகையில் ஒரு தெய்வீகக் கடமையாக இதை நான் ஏற்கிறேன். முடியை திரும்பவும் அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான சண்டை இது.» என்றார். கடுமையான களமாடலின்பின் ஒன்பதாவது சுற்றில் அலி புளொய்ட்டை தோற்கடித்தார்.

ali-floyd2
Sport. Boxing. 23rd November 1965. World Heavyweight Championship. Las Vegas, USA. Muhammad Ali (right) on his way to defeating Floyd Patterson for the title.

தோல்வியுற்ற புளொய்ட்டை நோக்கி,

Come on America! Come on White America… What’s my name? Is my name Clay? What’s my name fool? என மிக உணர்ச்சிவசப்பட்டராக கத்தினார் அலி.

வியட்நாம் போரும் அலியும்

1996 ஆரம்பத்தில் அலியை கட்டாய இராணுவத்தில் சேர்த்துக் கொள்வதற்கான அழைப்பு வருகிறது. அலி மறுத்துவிடுகிறார். இந்த நேரத்தில் வியட்நாம் யுத்தத்துக்கு ஆதரவான பாடல்களும் ஊடக அரசியலும் மிதப்பாக இருந்தன. எங்கும் போர்ப் பரணி தேசியக் கடமையாக மினுங்கிக்கொண்டிருந்தது. போர் எதிர்ப்பு அமைப்புகளோ குழந்தை நிலையில் இருந்தன.

« அவர்களை நான் ஏன் சுட்டுத்தள்ள வேண்டும்? வியட்கொங்குடன் எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. அவர்கள் என்னை ஒருபோதும் நீக்ரோ என அழைத்ததில்லை. அவர்கள் என்னை தண்டித்ததில்லை. என்மீது நாயை ஏவியதில்லை. எனது பிரசாவுரிமையை களவெடுத்ததில்லை. பாலியல் வல்லுறவு புரிந்ததில்லை. அல்லது எனது தந்தையையோ தாயையோ கொன்றதில்லை. அவர்களை கொல்ல என்னால் முடியாது. வேண்டுமானால் என்னை சிறையிலிடு» என்று பதிலிறுத்தார்.

பாடசாலைச் சிறுசுகளிலிருந்து பென்ரகன் கதிரைப் பிரபுக்கள்வரை «அலியை கைதுசெய்!» என கூச்சலிட்டனர்.

இந்த யுத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் நன்கு அறியப்பட்டவர்கள் (பிரபலமானவர்கள்) மிகச் சொற்பமானவர்களே. நாடு முழுவதும் இந்த யுத்தக் காய்ச்சலில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தது. கம்யூனிசத்துக்கு எதிரான முதலாளித்துவத்தின் ஒரு களமாக வியட்நாம் மாறியிருந்தது. வெள்ளை இனவெறிக்கு எதிரான கறுப்பின மக்களின் எழுச்சியும் சமகாலத்தில் உச்சம் பெற்றிருந்தன. எனவே அலியின் நிலைப்பாடு மிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. அலி விடாப்பிடியாகவே தனது நிலைப்பாட்டில் -ஆபத்துகளை புறந்தள்ளியபடி- நின்றுகொண்டிருந்தார்.

«அலி தனது களத்தை குத்துச்சண்டை எல்லைக்குள்ளிருந்து வெளியே மாற்றிக்கொண்டதோடு, தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதன்மூலம் அரசியல் களத்தில் அவரிடமிருந்து ஒரு தெளிவான செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது» என கவிஞை சோனியா சஞ்செஸ் (Sonia Sanchez) எழுதினார்.

” 10000 மைல்களுக்கு அப்பால் போய் அந்த மண்ணிற மனிதர்கள்மீது அமெரிக்க இராணுவ உடையணிந்து குண்டுகள் வீசவும் படுகொலை செய்யவும் என்னைக் கேட்கிறார்கள். இங்கு கறுப்பின மக்களை நாய்போல நடாத்தவும் அவர்களது மனித உரிமைகளை மறுக்கவும் செய்கிற வெள்ளை எசமானர்கள் உலகம் முழுமையும் நிற மனிதர்கள் மீதான தமது மேலாதிக்கத்தை நிறுவ முனைகிறார்கள். இவர்களுக்காக அந்த ஏழை மக்களின் வீடுகளை எரிக்கவும் படுகொலை செய்யவும் என்னால் முடியாது. இது முடிவுக்கு வரவேண்டும்.

எனது இந்த நிலைப்பாடு மில்லியன் கணக்கான டொலர்களை இழக்க வைக்கும் என எச்சரிக்கிறார்கள். தமது சுதந்திரத்துக்காகவும் நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுகிற மக்களை அடிமையாக்க நினைக்கும் வெள்ளை மேலாதிக்கத்துக்கு நான் ஒரு கருவியாக செயற்பட முடியாது. அதன்மூலம் எனது மதத்தையோ எனது மக்களையோ என்னையோ அவமதிக்கும் விதத்தில் செயற்பட தயாரில்லை.

இந்த யுத்தமானது எனது 22 மில்லியன் மக்களுக்கும் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கொண்டுவரும் என நான் நம்புவேனானால், அவர்கள் என்னை கட்டாயப்படுத்தத் தேவையில்லை. நானாகவே நாளை இணைந்துகொள்வேன். நான் எனது நம்பிக்கைளுக்காக எழுந்து நிற்பதில் எதனையும் இழக்கப்போவதில்லை. எனவே நான் சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன். நாம் ஏற்கனவே 400 வருடங்கள் சிறையில்தான் உள்ளோம். அதனாலென்ன? “
என்று பதிலளித்தார் அலி.

அலியின் நிலைப்பாடும் அதற்கான இந்த தெளிவான விளக்கமும் வீதிகளின் ஒவ்வொரு மூலையையும் ஒவ்வொருவர் உதடுகளையும் உரசியது. போரை கேள்விகளின்றி ஆதரித்தவர்களிடம் மாற்றங்களுக்கான நெளிவுகளை ஏற்படுத்தியது. இது போர் எதிர்ப்பு அமைப்புகளுக்கு வலுவூட்டுவதாக அமைந்தது. உலகம் முழுவதும் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகியது. பல நாடுகளில் எழுந்த வியட்நாம் போரெதிர்ப்புக்கு இது உந்துலைக் கொஞ்சம் கொடுக்கவே செய்தது.

நீதிமன்றத் தீர்ப்பும்
அலியின் குத்துச் சண்டைக் களமும்

இராணுவ சேவை மறுப்புக்கு பொதுவில் 18 மாதங்களே தீர்க்கப்படுவதுண்டு. ஆனால் அலிக்கு 5 வருடங்கள் சிறைவாசத்துக்கான தீர்ப்பு சொல்லப்பட்டது. அலி உடனடியாகவே மேன்முறையீடு செய்தார். பிணையில் விடுவிக்கப்பட்டு அவரது வழக்கு இழுபட்டுக்கொண்டிருந்தது. புதிய தீர்ப்பு மூன்றரை வருடங்கள் (மார்ச் 1967 இலிருந்து ஒக்ரோபர் 1970 வரை- அதாவது 25 வயதிலிருந்து அண்ணளவாக 29 வயதுவரை) அவரை குத்துச்சண்டைக் களத்திலிருந்து தடுத்து வைத்தது. அவர் உலக சம்பியன் பட்டத்தையும் இழந்தார்.

தடையின் காலம் முடிந்த கையோடு 1970 இல் குத்துச்சண்டை களமிறங்கிய அலி ஜெரி குவாரியை (JerryQuarry) வென்றார். அடுத்து மிகப் பிரபலமாகவிருந்த பிறேசரை (Joe Frazier)அதே ஆண்டில் எதிர்கொண்டார். The fight of the centuary என்றழைக்கப்பட்ட இந்த கடுமையான போட்டியில் கடைசி (15வது) றவுண்டில் அலி தோற்றுப் போனார். 31 வெற்றிகளின் பின் அலி அடைந்த தோல்வி இதுவாகும். 1974 இல் மீண்டும் நடந்த போட்டியில் பிரேசரை அலி தோற்கடித்தார்.

ali and frazer-2    Ali vs Frazer

அதே ஆண்டில் இன்னொரு களத்தில் உலகச் சாம்பியனாக இருந்த ஜோர்ஜ் போர்மன் (George Forman) என்பவரை தோற்கடித்தார். மூன்றுமுறை உலக அதிபார குத்துச்சண்டை சாம்பியனாக அலி இருந்தார். 1981 இல் பெற்ற தோல்வியோடு குத்துச்சண்டையிலிருந்து ஓய்வுபெற்றார்.

ali anf formanAli vs Forman

முகமது அலியின் பயிற்சியாளராக இருந்த Angelo Dundee ஒருமுறை சொன்னார், « அலி ஒரு தலைமுறை வீரர்களை இல்லாதொழித்தார். அதனால் நானே சிறந்தவன் (I’m the Greatest) என்ற அலியின் கோசம் உண்மைக்கு அருகிலேயே இருக்கிறது. குத்துச்சண்டைக் களத்தில் அதிவேக செயற்பாட்டை கையாண்டவர் அவர்.» என்கிறார்.«படுக்கையறை லைற்றை நிற்பாட்டிவிட்டு அதன் வெளிச்சம் மறைவதற்குள் நான் கட்டிலில் இருப்பேன்» என அலி தனது வேகமான அசைவு பற்றி பெருமையாகவும் சுவாரசியமாகவும் சொல்லிக்கொள்வார்.

மல்கம் எக்ஸ் அலி முரண்பாடு

மல்கம் எக்ஸ் இன் நேசன் ஒப் இஸ்லாம் மீதான முரண்பாடானது அரசியல் ரீதியானதாக இருந்தது. மல்கத்திடம் ஏற்பட்ட அரசியல் சிந்தனை வளர்ச்சி அவர் தன்னை நேசன் ஒப் இஸ்லாம் அமைப்புக்குள் மட்டுப்படுத்தப்பட முடியாமல் போனது. இனவெறிக்கெதிரான போராட்டங்களை ஆபிரிக்காவோடும் சேர்த்து விரிவுபடுத்துவதான சிந்தனை அவரிடம் தோன்றியுமிருந்தது. அத்தோடு எலிஜா முகமுதுவின் மதப் பிரக்ஞை குறித்தும் அவரிடம் கேள்விகள் இருந்தன.

ஆனால் அலி எலிஜா முகமதுவின் விசுவாசியாய் இருந்ததால் மல்கத்துடனான தனது நட்பையும் உதாசீனப்படுத்தினார். எலிஜா முகமதுவுடன் மல்கம் எக்ஸ் முரண்பட்டிருந்த காலத்தில் மே 1964 இல் கானாவில் இருவரும் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. அப்போ மல்கம் தன்னுடன் பேச விழைந்தபோது அலி அசட்டை செய்து நகர்ந்தார்.

1965 பெப்ரவரியில் மல்கம் சுட்டுக்கொல்லப்பட்டபோது எலிஜா முகமது «அவரது முட்டாள்தனமான போதனையே அவருக்கு மரணத்தைக் கொண்டுவந்தது» என கூறினார். இதையேதான் அலியும் பிரதிபண்ணி சொன்னார்.எலிஜா முகமது மீதான நம்பிக்கையும் கண்மூடித்தனமான விசுவாசமும் மல்கம் எக்ஸ் இன் நேசன் ஒப் இஸ்லாம் மீதான அரசியல் விமர்சனத்தையும் எலிஜா முகமது மீதான மதம் சார்ந்த விமர்சனத்தையும் கேட்க அலியை விட்டுவைக்கவில்லை.

பின்னரான காலங்களில் « மல்கம் எனது நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் பல விடயங்களில் சரியாகவே நடந்துகொண்டார். நான் அவரை அசட்டை செய்ததுக்காக அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மனச்சாட்சி சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் அவரது மரணம் முந்திக்கொண்டுவிட்டது» என்றார் அலி.

அலியின் முரண்நிலை

வியட்நாம் களத்தில் வாரமொன்றுக்கு சுமார் ஆயிரம் வியட்நாமியர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். நாளொன்றுக்கு சுமார் நூறு அமெரிக்க இராணுவம் பலியாகிக்கொண்டிருந்தது. போர்ச் செலவு மாதத்துக்கு இரண்டு பில்லியன் டொலர்களை ஏப்பமிட்டுக் கொண்டிருந்தது. இதன் மறுவினையாக போரெதிர்ப்பு இயக்கங்கள் வலுவடைந்தன.

« தென்வியட்நாமிய மக்களின் விடுதலைக்காக உதவிசெய்ய நான் கடல்கடந்து போகவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டேன். அதேநேரம் எனது மக்கள் இங்கு பயங்கரமாக துன்புறுத்தப்படுகிறார்கள். என்னால் முடியாது. நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக நினைப்பவர்களுக்கு சொல்கிறேன் நான் பெற்றவை ஏராளம். நான் தெளிவானதும் சுதந்திரமானதுமான உணர்வுடனே இருக்கிறேன். நான் பெருமையடைகிறேன். மகிழ்ச்சியுடனேயே காலையில் விழித்தெழுகிறேன். நித்திரைக்குப் போகும்போதும் அப்படியே. நான் சிறைக்கு செல்ல நேரிடினும் சந்தோசமாகவே செல்வேன்.» என்றார்.

இவ்வாறாக வியட்நாம் போருக்கெதிரான நிலைப்பாட்டில் இருந்த உறுதியை அதன் தார்மீகப் பலத்துக்கும் முரணாக (கொஞ்சம் கறாராகச் சொன்னால் தனது உறுதியையும் தார்மீகப் பலத்தையும் சிதைக்கும் வகையில்)  2005 இல் அலி Presidential Medal of Freedom என்ற விருதை போர் வெறியன் புஷ் இடமிருந்துபெற்ற நிகழ்ச்சி அமைந்தது.

அத்தோடு ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான போர்களை கொண்டாடி எழுதிய புஷ் இன் சுயவரலாறாகிய “Decision Points” என்ற நூலை 2010 புஷ் இடமிருந்து நேரில் பெற்றுக் கொண்டார்.

ali-bush      ali-bush-2

 

 

 

 

1990 ஆகஸ்டில் சதாம் குசைனின் படைகள் குவைத்தை ஆக்கிரமித்தபோது 15 அமெரிக்கப் பிரஜைகளை பணயக்கைதிகளாக ஈராக் பிடித்து வைத்திருந்தது. அமெரிக்காவின் தாக்குதலை தடுக்க மனிதக் கேடயமாக அவர்கள் பிடித்துவைக்கப்பட்டார்கள் என்று அமெரிக்கத் தரப்பால் சொல்லப்பட்டது. அவர்களை முகமது அலி சதாமுடன் பேசி இணக்கப்பாட்டுக்கு வந்து விடுவித்தார். 1990 டிசம்பர் 2ம் தேதி இது நடந்தது. 1991 ஜனவரி 6ம் தேதி அமெரிக்கா ஈராக் மீது குண்டுவீச ஆரம்பித்தது. முகமது அலியின் மனிதாபிமானப் பணி அமெரிக்க அரசால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதை இது காட்டுகிறது.

பணயக்கைதிகளை விடுவித்து யுத்தத்தை தொடங்க வழிசெய்த இந் நிகழ்வுக்கு உண்மையில் அலி தான் பாவிக்கப்பட்டதாக உணர்ந்திருந்தால் இந்தப் போர் தொடங்கி 14 வருடங்களுக்குப் பிறகு -எண்ணற்ற அழிவுகளை ஈராக் மக்கள் சந்தித்துக் கொண்டிருந்தபோது- 2005 இல் புஸ் இடமிருந்து விருதைப் பெற அலியால் எப்படி முடிந்தது என்ற கேள்விக்கு விடை எதுவாக இருக்க முடியும். (இக் காலகட்டத்தில் ஆப்கானிலும் அமெரிக்கா போர்தொடுத்துக் கொண்டிருந்தது.)

இந்த முரணை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அதேநேரம் ஒட்டுமொத்தமாக அவரது வரலாற்றுப் பாத்திரம் கறுப்பின மக்களின் எழுச்சிகளோடும் அதற்கான உளவியல் தளத்தில் அவர் நிகழ்த்திய சாகசங்களோடும் அவரது நிலைப்பாடுகளோடும் வைத்து மதிப்பிடப்பட வேண்டியது. அதுவே மையமானதும்கூட.

அலியின் வழியில் சிறுதூரமாய்.. மகள் லைலா

ALI
Laila Ali, left, poses with her father, boxing great Muhammad Ali, after her win against Erin Toughill, Saturday, June 11, 2005,at the MCI Center in Washington. (AP Photo/Pablo Martinez Monsivais)

தந்தையின் வழியில் குத்துச்சண்டைக் களத்தில் இறங்கிய மகள் (1977 இல் பிறந்தார்) லைலா அலி முதல் போட்டியை 31 செக்கனில் வென்று தனது குத்துச்சண்டை விளையாட்டை வெற்றிகரமாகத் ஆரம்பித்தார். தான் பங்கெடுத்த 24 போட்டியிலும் தோல்வி ஒன்றுகூட இல்லாமல் வெற்றிபெற்றார். 1999 க்கும் 2007 க்கும் இடைப்பட்ட அவரது களமாடலில் அலியின் கடும் போட்டியாளராக இருந்த பிறேசரின் மகள் ஜக்கியை தந்தையைப் போலவே மிகக் கடுமையான போட்டியினூடே வென்றது குறிப்பிடத்தக்கது.

அலியும் உதவியமைப்புகளும்

யுஎன்எச்சிஆர் உட்பட 19 உதவிநிறுவனங்களுக்கு அலி மொத்தம் 50 மில்லியனுக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியுள்ளார். அமெரிக்கா கியூபாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்திருந்தபோதும் 1998 இல் 1.2 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மருத்துவ உதவியை அலி கியூபாவுக்கு வழங்கினார். தான் பீடிக்கப்பட்ட நோயான பார்க்கின்சன் நோய்க்கு (Parkinson’s disease) பலியாகிப்போனவர்களுக்காக “முகமது அலி பார்க்கின்சன்ஸ் சென்ரர்” இனை நிறுவியுள்ளார். இது மருத்துவ வசதியை மட்டுமன்றி ஆய்வுமையமாகவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்குமான கல்வி வசதி என்பவற்றை வழங்குகிற உதவி நிறுவனமாகவும் விளங்குகிறது.

அலியின் முடிவுற்ற அத்தியாயம்

1984 இல் அவரை பீடித்த பார்க்கின்சன் நோய் அவரை விட்டுவைக்கவில்லை. படிப்படியாக அவரை தின்றுகொண்டிருந்தது. குத்துச்சண்டைக் களத்தில் ஒரு நடனம்போல தன் பாத அசைவுகளையும் அதிவேக தாக்குதல் நுட்பங்களையும் தாங்கியிருந்த அவரது உடல் அசைவு ஒரு ஸ்லோமோசன் (slow motion) போல் அசைந்த காட்சி அருகருகாய் வைத்து பொருத்திப் பார்ப்பதற்கு கஸ்டமாக இருந்தது. மனதை நெருடுவதாய் இருந்தது. ஆனாலும் இக் காலப் பகுதியில் பல நாடுகளுக்கும் சென்று தனது மனிதாபிமானப் பணியை மேற்கொண்டார். நம்காலத்தின் நாயகர்களான பிடல் கஸ்ரோவையும் நெல்சன் மண்டேலாவையும் சந்தித்தார். இருவருமே அவரை ஆகர்சித்த தலைவர்கள். அதேபோலவே அலியும் அவர்களால் ஆகர்சிக்கப்பட்டார். நெல்சன் மண்டேலா அலியை My Hero என்பார். அலி நெல்சன் மண்டேலாவை My Hero என்பார்.

நம் காலத்தின் மறக்கமுடியாத மனிதர்களில் அவனும் ஒருவன். கறுப்பின மக்கள் கொண்டாடிய நாயகர்களில் ஒருவன். Black Power இன் குறியீடுகளில் அவனும் ஒருவன். 2016 யூன் மாதம் 3ம் தேதி 6 அடி 3 அங்குல உயரமுள்ள அந்த சாதனையாளன் தனது வரலாற்று அத்தியாயத்தை முடித்துக் கொண்டான்.

ali-butterfly-bee

  • ரவி 10062016

 

 

 

 

 

 

 

2 thoughts on “குத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: