ஒரு நேர்காணல்.
இவ் வருடம் மார்ச் மாதம் டென்மார்க் நாட்டுக்கு மலாலாய் ஜோயா வந்திருந்தார். 28 ஆடி 2016 இல் டெனிஸ் சஞ்சிகையான Gaia and Opinionen இற்காக டென்மார்க்கில் கல்விகற்கும் பல்கலைக்கழக மாணவனான Masih Sadat என்பவரால் எடுக்கப்பட்ட பேட்டியின் தமிழாக்கம் இது.
தமிழில் : ரவி
ஆப்கானின் “துணிகரமான பெண்மணி” என வர்ணிக்கப்படுபவர் மலாலாய் ஜோயா. 2005 இல் ஆப்கானின் -மேற்குலக செற்றப்புடன் அமைக்கப்பட்ட- பாராளுமன்றத்துக்கான தேர்தலில் மக்களால் பாராளுமன்ற உறுப்பினராக இளம்வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு துணிகரமான செயற்பாட்டாளர். அவர் அமெரிக்கா உட்பட மேற்குலகின் மீது கறாரான விமர்சனங்களை பொதுவெளியில் வைப்பவராக தொடர்ந்து இயங்குகிறார். அதனால் அவர் நோபல் பரிசுக்கு ‘உரியவரல்ல’. மேற்குலகால் விளம்பரப்படுத்தப்பட்ட Malala Yousafzai அவர்களைத் தேடி வந்ததுது போல மலாலாய் ஜோயாவை நோபல் பரிசு (இப்போதைக்கு) தேடி வராது. சமூக அரசியல் தளத்தில் செயற்படும் மலாலாய் ஜோயா Raising my voice என்ற நூலையும் எழுதியிருக்கிறார். 2010 இல் ரைம் சஞ்சிகை வெளியிட்ட உலகில் தாக்கத்தைச் செலுத்திய நூறு பேரின் வரிசையில் மலாலாய் ஜோய் உம் இடம்பெற்றுள்ளார்.
மலாலாய் ஜோய் போர்க்கால சந்ததியுள் (1979 இல்) பிறந்த ஒருவர். தொடர்ச்சியான கொலைப் பயமுறுத்தல் மற்றும் தாக்குதலை எதிர்நோக்கியிருக்கும் அவர் இப்போ காபூலில் ஒருவித தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அடிப்படைவாதத்துக்கு எதிராகவும், நீதி மற்றும் மனித உரிமைகளுக்காகவும் -குறிப்பாக பெண்கள் சார்ந்து- குரலெழுப்பி வருகிறார். ஐநா உட்பட சர்வதேச ரீதியில் அவர் தவிர்க்க முடியாதளவு அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறார். அது ஒருவிதத்தில் சிறிய பாதுகாப்பை வழங்கத் தவறவில்லை.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் பற்றி ?
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது ஆப்கான் மக்களுக்கு எதிரான போர். எனது நாடு சோவியத் படைகளால் (1979) ஆக்கிரமிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் நான் பிறந்தேன். அதன்பிறகான நிலைமை போன்றே இன்றைய நிலைமையும் உள்ளது. ஒரு விடயம் மட்டும் வேறானதாக இருக்கிறது. எதிரியின் பெயர் மட்டும் மாறியிருக்கிறது. சோவியத் சோசலிசத்தின் பெயரால் குற்றங்களைச் செய்தது. அதைத் தொடர்ந்து தீவிரவாதிகளும் அடிப்படைவாதிகளும் இஸ்லாமின் பெயரால் குற்றங்களைப் புரிந்தனர். இன்று ஜனநாயகத்தின் பெயரால் ஒரு பதினைந்து வருட கால ஆக்கிரமிப்பை நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் போருக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதே எமது அரசியல் விதியாக இருக்கிறது.
ஆப்கான் மீதான ஆக்கிரமிப்புகளின் தொடர்ச்சி எதுவாக இருக்கிறது?
வரலாறு நெடுகிலும் அதிகார சக்தி கொண்ட வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளுக்கு நாம் முகம்கொடுக்க நேர்ந்துள்ளது. இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் ஆப்கான் மக்களின் (ஆண், பெண், இளைஞர்கள், வயோதிபர்கள் ஆகியோரின்) எதிர்ப்புப் போராட்டக் குணத்தை சந்திக்க வேண்டியே இருந்திருக்கிறது. பிரித்தானியர்கள், அதன்பின்னர் ரசியர்கள், இப்போ அமெரிக்கர்கள் என ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. இவற்றிற்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்துகொண்டேயிருக்கிறது.
கடைசி ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்கா எமது நாட்டை ஒரு பேரழிவு நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. அவர்களது தலையீட்டின் தொடர்ச்சியானது இன்னுமின்னுமாக இரத்தக்களரியையும் மனித உரிமை மீறல்களையும் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று உச்சரிக்கப்படுகிற இந்த போரின் பதினைந்து வருட காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொலைசெய்யப் பட்டிருக்கிறார்கள். இப் போரை ஆப்கான் அப்பாவி மக்களின் மீதான போர் என்றே நான் குறிப்பிடுவேன்.
இந்த ஆக்கிரமிப்புச் சக்திகள் தலிபான்களுக்கு எதிராகவோ பயங்கரவாதத்துக்கு எதிராகவோ ஏதாவது விளைவுகளை உண்டாக்கியருக்கிறதா?
இந்த 15 வருட கால ஆக்கிரமிப்புக் காலகட்டத்திலும் அமெரிக்காவும் நேற்றோவும் (NATO) நேரடியாகவும் மறைமுகமாகவும் தலிபான்களை ஆதரித்து வந்திருக்கின்றன. அமெரிக்காவோ நேற்றோவோ ஒருபோதுமே தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அக்கறையுடன் செயற்பட்டதில்லை என நான் மக்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிவந்திருக்கிறேன். அவர்கள் Tom and Jerry விளையாட்டை இந்த பயங்கரவாதிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பனிப்போர் காலகட்டத்திலிருந்து ஆப்கான் யுத்தப்பிரபுக்களோடு (முகாஜிதீனின் எஞ்சிய பிரிவினர்) பல மில்லியன் டொலர்களை அவர்கள் முதலீடு செய்து வந்திருக்கிறார்கள். தலிபான்களையும் அவர்களது குற்றச்செயல்களையும் அமெரிக்கா ஆப்கானில் தான் நிலைத்து நிற்பதற்கு பாவித்து வருகிறது. இதன்மூலம், தாம் வெளியேறினால் அது ஒரு உள்நாட்டு யுத்தத்தில் நாட்டை கொண்டுவந்து விடும் என நம்ப வைக்கிறார்கள். அப்படியானால் இதை எப்படி சொல்வது. இந்த 15 வருட காலத்திலும் ஒருபுறம் ஆப்கான் யுத்தப்பிரபுக்கள் மற்றும் தலிபான்களுக்கும் மறுபுறம் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் இடையில் ஆப்கான் மக்களை பொறிக்குள் அகப்படுத்தி வைத்திருக்கிற போரை என்னவென்பது?
ஆப்கான் பெண்களின் நிலை எப்படியிருக்கிறது?
ஆப்கான் யுத்தப் பிரபுக்களும் தலிபான்களும் ஜனநாயகத்தின் எதிரிகள். அவர்கள் பெண்களை ஒரு நரக வாழ்க்கைக்குள் தள்ளிவைத்திருக்கின்றனர். ஒரு உதாரணம் இருபத்தியேழு வயதான Farkunda வின் நிலை. ஆக்கிரமிப்பு இராணுவத்தினதும் காவல்துறையினதும் கண்களுக்கு முன்னால் பொது இடத்தில் வைத்து அவள் கொடுரமாகக் கொலைசெய்யப்பட்டு எரியூட்டப்பட்டாள். வெளிநாட்டு சக்திகள் தொடர்ச்சியாக தலிபான்கள் பற்றிப் பேசியபடியே இருக்கின்றன. அதேநேரம் அதிகாரத்தில் இருந்துகொண்டு ஜனநாயகத்தின் பெயரால் காட்டு மிருகங்கள் போல் செயற்படும் பெண்வெறுப்பாளர்களைப் பற்றி, தீவிரவாதிகள், யுத்தப்பிரபுக்கள் ஆகியோர் பற்றி அவை பேசுவதில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் எமது பிரச்சினையை மோசமாக்கியதன் மூலம் மக்களின் நம்பிக்கையை முற்றாக இழந்திருக்கிறார்கள்.
ஆப்கானின் எதிர்காலத்தில் நம்பிக்கையளிப்பதாக ஏதாவது தெரிகிறதா?
ஆப்கானின் நீண்ட பெருமைக்குரிய வரலாற்றில் எமக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய விதத்தில் துணிகரமாகச் செயற்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். நீதிக்காகப் போராடிய போராடிக்கொண்டிருக்கிற ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். இந்த நாயகர்கள் நாயகிகள் எனக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். அதேநேரம் எமது தோள்களில் பொறுப்புகளை சுமத்தியிருக்கிறார்கள். நாம் அவர்களின் வரலாற்றிலிருந்தும் அவர்களின் போராட்டத்திலிருந்தும் படிப்பினைளைப் பெற வேண்டும்
Rojava Kobane போன்ற இடங்களிலுள்ள குர்தியப் பெண்போராளிகளின் துணிச்சலையும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான அவர்களின் எதிர்ப்புப் போராட்டத்தையும் கேள்விப்படுகிறபோது அவர்கள் எனக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்கள். பெண்களை மனிதஜீவியாகப் பார்க்க மறுக்கிற இந்தப் பயங்கரவாதிகள்கூட குர்தியப் பெண்களின் இந்த எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
NASIM, AYAD ஆகிய இரு டெனிஸ் அமைப்புகள் என்னை டென்மார்க் நாட்டுக்கு அழைத்திருந்தார்கள். இந்த இளஞ் சந்ததியின் செயற்திறனைக் கண்டு மிக சந்தோசப்பட்டேன். உலகம் பூராவும் அமைதியை நேசிக்கிற மக்களின் பக்கபலமும் ஆதரவும் எமக்கு தேவைப்படுகிறது. பலம், நம்பிக்கை, துணிவு என்பன குறித்த உணர்வின் மிதப்புடன் நான் வீடு திரும்புகிறேன். ஏனெனில் நான் தனியாளாக இல்லை என்பதை இவர்கள் தமது ஆதரவு மூலம் காட்டியிருக்கிறார்கள். அங்கு நடக்கும் காட்டுமிராண்டித்தனங்களுக்கு எதிராக நாம் இன்னமும் மேலான எதிர்ப்பை காட்டவேண்டிய நிலையில் உள்ளோம். ஆப்கானுக்கு உள்ளும் வெளியிலும் இருக்கிற மக்கள் தீவிரவாதத்தையும் ஆக்கிரமிப்பையும் நாம் எதிர்த்து நிற்பதை குவிமையப்படுத்த வேண்டும். ஒருநாள் நாம் வெற்றியை தரிசிப்போம். அது நிச்சயம்.
* * * (Thanks : Masih Sadat)
பின்னிணைப்பு:
(Malalai Joya பற்றிய மேலதிக குறிப்பு)
https://sudumanal.wordpress.com/2015/06/28/dust-in-the-eyes-of-the-world/