நடிகர் சிம்புவின் “பீப்” பாடல் விவகாரம்

கெட்ட வார்த்தைகள்.
 (12 DECEMBER 2015)

சிம்புவின் பீப் பாடல் அவர்கள் எதிர்பார்த்தபடியே சர்ச்சையை பரிசளித்திருக்கும். அது அவர்களது பிம்பத்துக்கு தேவையானது. அது இருந்துவிட்டுப் போகட்டும்.
கெட்ட வார்த்தைகள் என்பதும் (தூசிக்கும்) தூசண வார்த்தை என்பதும் ஒன்றுதான் என நினைக்கிறேன். டொச் மொழியில் கடவுளை நிந்தனைசெய்வதான வார்த்தை, மலத்தோடு சம்பந்தப்படுத்தி ஊத்தையின் மீதான அருவருப்புத்தன்மையை பொருள்படுத்துகிற வார்த்தை என்பன கெட்ட வார்த்தைகளாக இருக்கிறன்றன. மலத் துவாரத்தை சுட்டும் வார்த்தையும் அதை குறியீடாக்குகிற நடுவிரலை நீட்டிக் காட்டும் சைகையும் அதிகபட்ச கெட்ட வார்த்தையாக இருக்கிறது. இதேபோல் நிறவெறியை சுட்டுகிற வார்த்தைப் பிரயோகங்களும் கெட்ட வார்த்தைகளாக இருக்கின்றன. (நானறிந்தளவு இதுதான். இன்னமும் இருக்கலாம்.)


தமிழில் கெட்டவார்த்தையோ தூசண வார்த்தையோ பாலியல் உறுப்புகளை (பெருமளவில் பெண்களின் உறுப்புகளை), அந்த உறுப்புகளுக்குமேல் சுமத்தப்பட்டிருக்கும் புனிதங்களை அடிப்படையாகக் கொண்டு பேசப்படுகின்றன. தூசண வார்த்தைகளை பேசுவது ஒழுக்கக்கேடு அல்லது நாகரிகமற்றது என்ற வகையிலில்லாமல், பெண்களை இழிவுபடுத்துவதாக வைக்கப்படுகிற விமர்சனங்களை அவளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது.

25 ஆண்டுகளுக்கு மேலாக பல முன்னாள் “யூகோஸ்லாவிய” நண்பர்களுடன் வேலைசெய்கிறேன். அவர்களிடம் நிலவும் தூசண வார்த்தைகள் என்னை பிரமிக்க வைத்திருக்கின்றன. ஏகப்பட்ட வார்த்தைகள், வார்த்தைக் கோர்வைகள் அவர்களது பேச்சில் வந்துபோய்க் கொண்டே இருக்கும். பல வார்த்தைகளை நானும் தெரிந்துவைத்திருக்கிறேன். கோபப்படும்போது என்னையறியாமல் வாயில் ஆங்கிலவார்த்தையை விட சேர்போ கொராற்சிய மொழியிலான இந்த வார்த்தைகள் வந்து விழுவதுண்டு. அநேகமான தூசண வார்த்தைகளும் பாலியல் உறுப்புகள் (அதுவும் பெருமளவிலான பெண்களின் உறுப்புகள்) சம்பந்தப்பட்டே இருக்கின்றன. சோசலிசம் வந்து எட்டிப் பார்த்த நாடாக சொல்லிக்கொள்ளப்படும் இந்த முன்னாள் யூகோஸ்லாவியர்களிடத்தில் நடப்பில் ஆணாதிக்கமென்பதற்கு குறைவேயில்லை. அதன் தளத்திலேயே இந்த வார்த்தைகளும் வழக்கில் தொடர்கின்றன.

கெட்ட வார்த்தைகளை பேசுவது என்பதல்ல பிரச்சினை. ஆண்களின் ஆதிக்கச் சொல்லாடல்களுக்கு எதிராக இந்த மேற்குலக நாடுகளிலேகூட நுணுகி நுணுகி போய் வார்த்தைகள்மீது போர் தொடுக்கிறார்கள் பெண்ணியவாதிகள். மொழிமீதான அவர்களின் இந்தத் தலையீட்டை ஒழுக்க மதிப்பீடுகளைக் காட்டி திசைதிருப்பிவிட முடியாது.

இல்லாத உறுப்பையா சொல்கிறார்கள் என்ற மலினமான வாதம் செய்பவர்கள் வீட்டுக்குள் தன்னும் நிர்வாணமாக நடப்பதற்கு ஏன் தயங்கவேண்டும்.
இராணுவம் சம்பந்தப்பட்ட ஆங்கிலப் படங்களில் அடிக்கடி உதிர்க்கப்படும் FUCK என்ற வார்த்தை சமூக வழக்கிலிருந்து மிதப்பாக ஒரு trendடாக சமூகத்துக்குள் வந்துசேர்கிறது என்பது உண்மை. உலகமயமாக்கலில் ஆதிக்கசக்திகளின் பண்பாட்டுப் பரவலாக்கம் ஒவ்வொரு தளங்களிலும் நிகழ்கிறது என்பதை அன்றாட வாழ்வில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த trendடைக் காட்டி இவ்வாறான பிரச்சினைகளை தமிழ்ச் சமூகமும் எதிர்கொள்வது அல்லது இயல்பானதாய் சொல்ல முனைவது ஆதிக்கமனப்பான்மைகளுக்கு மறைமுகமாக துணைபோவதாகும்.

உடலுறுப்புகளை வெளிப்படையாக உச்சரிப்பது, எழுதுவுது என்பதெல்லாம் அதன் அர்த்தங்களுக்குள் நிற்கும்போது பிரச்சினை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கும் வழக்கில் வேறு சொற்கள் இருந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக ஒரு வீம்புக்காக பாவிப்பவர்கள் அவரவர் உளஉபாதைகளை தீhத்துக்கொள்கின்றனர் என்பது உண்மை என்றபோதும், அதுவே அந்த சொற்களை மறுப்பதற்கான காரணமாக இருந்துவிட முடியாது.

அதேநேரம் இந்தச் சொற்களை பெண்களை இழிவுபடுத்துவதற்கான அல்லது ஆண்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக பயன்படுத்தும்போது அது அரசியலாகிறது. அதேபோல் போர்க்களங்களில் படையணியினரை வெறித்தனமூட்டி வழிநடத்துவதற்குப் பயன்படுத்தும்போதும் அரசியலாகிறது. அதற்கு பெண்களின் பாலியல் உறுப்புகளா கிடைத்தது, அவர்களுக்கு? அந்த ஆணதிகார அரசியலை புறந்தள்ளி அதை படையணியினருக்கு புத்துணர்ச்சி கொடுப்பதாக மொழிபெயர்த்துக் காட்டும் உரையாடல்களை நான் கேட்டிருக்கிறேன். இது மலினமான தர்க்கம் கொண்டது.

இந்தியத் தமிழ் உரையாடல்களுக்குள் ஆங்கிலம் புகுந்து விளையாடிய trend போல, இப்போ இலங்கை தமிழ்த் தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்கள், ஏன் உரையாடலிலும்கூட இந்தியத் தமிழ் பேச்சுவழக்கு (பொதுமையாகச் சொல்ல முடியாது என்றபோதும்கூட) ஒரு trendடாக மாறிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. பேச்சுவழக்குகள் நாட்டுக்கு நாடோ, பிராந்திய அடிப்படையிலோ, கிராமிய அடிப்படையிலோ வேறுபட்டு இருப்பது என்பது பண்பாட்டுத் தளத்தில் நிலவுகிற ஒரு வளம். அதை ஒப்பீட்டு ரீதியில் அணுகி “எனதுதான் சிறந்தது உனதுதான் சிறந்தது” என்றெல்லாம் அணுகவேண்டிய அவசியம் இல்லை.

இந்த கெட்டவார்த்தைப் பயன்பாட்டையும் அவ்வாறான தனித்துவங்களுடன் பண்பாட்டுத் தளத்திலும், அதே பண்பாட்டுக்குள் நிலவும் (அல்லது அதற்குள் ஊடுருவும்) ஆதிக்கத்தன்மைக்கு எதிரான தளத்திலும் அணுகமுடியும்.

fb link:

https://www.facebook.com/notes/ravindran-pa/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1011467568924337


 

எப்படி விளங்கிக் கொள்வது?
22 DECEMBER 2015

சிம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு நீதிமன்றம் நோக்கி செல்வது சரியாhனதுதானா என்ற கேள்வியை நாம் கேட்டாகவேண்டியுள்ளது.

பெண்களை பாலியல் பண்டங்களாக (sexual object) சித்தரிக்கிற காட்சிகளும் வசனங்களும் பாடல்களும் மலிந்த சினிமாத்துறையினர் சிம்புவின் பீப் பெண்களை கொச்சைப்படுத்துவதாக சொல்வதையிட்டு சிரிக்கத்தான் முடிகிறது. பரவலாக எழுந்துள்ள எதிர்ப்புகளின் அடிப்படையில் அவர்களும் தீர்வுகளை வழங்குவதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அதைத்தான் சினிமாத்துறையினரும் தமது நலன் சார்ந்து ஒலிப்பர் என்பதும் புரிந்துகொள்ளப்படக் கூடியது.

சினிமா மக்களிடத்தில் செலுத்துகிற தாக்கம், பால்வார்த்து வளர்க்கிற ரசிகத்தன்மை, அரைக்கடவுளர்களாகிவிடுகிற கதாநாயக பிம்பம் என்பன இந்தப் பிரச்சினையை சூழ்ந்துள்ளது. பொதுவெளிகளில் சிம்பு விவகாரத்தின் தாக்கம் அபரிதமாக வெளிப்படுவதற்கான அடித்தளம் இங்குதான் இருக்கிறது. இதில் சிம்புவை மட்டும் கலைத்து என்ன பயன் என்று தெரியிவில்லை.

இதே பிம்ப வெளிக்குள் வைத்தே சிம்புவிடம் இதுபற்றி விவாதித்து அவர் அந்தத் தவறை பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள வைத்திருந்தால் அதற்கு ஒரு வலு இருந்திருக்கும். அது முடியாதபோது நீதிமன்றத்தை நாடியிருந்தால் அதற்கு ஒருவகை நியாயம் இருந்திருக்கக்கூடும்.

பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் பேசப்படுகிற சொற்கள் நேரடியாக பெண்களை நோக்கி மட்டும் வீசப்படுவதல்ல. ஆண்களை இழிவுபடுத்துவதற்குக்கூட பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைத்தான் உபயோகிக்கிறார்கள். வேசை, தேவடியாள் என்றெல்லாம் பெண்களை நோக்கி அவை வீசப்படுவது ஒருபுறமும், ஒரு ஆணை இழிவுபடுத்தவும் பெட்டையன், வேசைமோன்… என்று வார்த்தைகள் வீசப்படுவது இன்னொரு புறமுமாக இரண்டுமே பெண்களை இழிவுபடுத்தும் புள்ளியிலேயே சந்திக்கின்றன.

பெண்களின் உறுப்புகள் இழிசொல்லாக உச்சரிக்கப்படுகிறது. தன்னை பெரு வலியினூடு இந்த உலகுக்கு கொண்டுவந்த யோனியை இழிவுபடுத்தும் சொல்லாகவே பு.. என்ற சொல்லானது வழக்கில் பேசப்பட்டு வருகிறது. அது பெண்ணின் உடலங்கத்தை சுட்டுவதிலிருந்து விலகி, இழிவுபடுத்தும் சொல்லாக அரசியல் வடிவம் (உடலரசியல்) பெறுகிறது. அதனடிப்படையில் அதை நாம் எதிர்க்க நேர்கிறது, மறுத்தான் கொடுக்க நேர்கிறது. ஒழுக்க மதிப்பீடுகளை தாங்கி நிற்கும் பொதுப்புத்திக்குள்ளோ அது கலாச்சாரப் பிரச்சினையாகிறது.

அதுமட்டுன்றி கட்டுரைகளிலும் விமர்சனங்களிலும் மற்றும் பல எழுத்துவகைகளிலும் கற்பழிப்பு, வேசித்தனம், விபச்சாரம் (உதாரணமாக அரசியல் விபச்சாரம்) போன்ற சொற்கள் பாவிக்கப்படுவதையும் பார்க்கிறோம். இவையும்தான் பெண்களை இழிவுபடுத்துகிறது.

இடைக்காலகட்டத்தில் பெண்ணியக் கவிஞைகள் தமது கவிதைகளில் பெண்களின் உடலுறுப்புகளை மர்மத்துக்கு வெளியேயும், அதன் மீதான ஆண்நோக்கு நிலைக்கு (உடலரசியலுக்கு) வெளியேயும் கொண்டு வந்து எழுதினார்கள். தமது உடலை தாம் கொண்டாடினார்கள். இது ஒழுக்க மதிப்பீடுகளில் திளைப்பவர்களுக்கு அதிர்ச்சிதரக்கூடியதாக இருந்தது. மேலே சுட்டிக்காட்டிய இழிவுபடுத்தல்களுக்கு எதிராக கருத்துத் தளத்திலும் உளவியல் தளத்திலும் அவர்கள் நிகழ்த்திய ஒருவகைப் போராட்டமாக அதைக் கொள்ள முடியும்.

அது பின்னர் பேசப்படும் கவிஞர்களாக வருவதற்கான ஒரு trendடாக மாறி இன்றுவரை தொடர்வதையும் பார்க்கிறோம். கதைகள் நாவல்களில்கூட இது தொற்றியிருக்கிறது. இருபால் எழுத்தாளர்களும் இதில் அடக்கம். இந்த trendடைக் காட்டி பெண்ணியவாதிகள் மொழியின் தளத்தில் நிகழ்த்திய அந்த அதிர்ச்சிவைத்தியத்தின் பெறுமதியை குறைத்து மதிப்பிட முடியாது.

இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லும் «மாதர் சங்க அமைப்புகள்» அல்லது கட்சி சார்ந்தவர்கள் பெண்ணிய நோக்கில் இதை அணுகுகிறார்களா, பரபரப்பு வேலைமுறையாக எடுத்திருக்கிறார்களா என யோசிக்க வேண்டியுள்ளது. பொதுவில் மாதர் சங்கங்கள் பெண்ணியம் பற்றிய எந்தப் புரிதலும் கொண்டவர்களாக நாம் யதார்த்தத்தில் கண்டில்லை. (இக் கணிப்பு பிழையெனின் அதை என்னால் திருத்திக்கொள்ள முடியும்)

கேள்வி என்னவென்றால் பெண்களை இழிவுபடுத்தும் சொற்களையும் கருத்துகளையும் அன்றாட வாழ்வில் மட்டுமன்றி,; எல்லா கலையிலக்கியத் தளங்களிலும் மொழியின் தளத்திலும் எதிர்கொள்ளும் பெண்ணியவாதிகள் (பெண், ஆண் இருபாலாரும்) சிம்புவின் பீப் ஆக வெளிப்பட்டுள்ள ஆணதிகார மொழியின் வன்முறைக்கு மட்டும் நீதிமன்றத்துக்குப் போவதை ஆதரிக்கிறார்களா என்பதே.

கருத்தியல் வன்முறைகளை அல்லது ஆணதிகார மொழிவன்முறைகளை உடல்வன்முறை போன்று சட்டரீதியிலான தளங்களில் அணுகுவது எல்லா நிலைமைகளிலும் பொருந்தி வருவதில்லை. சமூகவயப்பட்டு நிகழ்கிற இந்த கருத்தியல் வன்முiறையை நீதிமன்றம் துப்பரவு செய்து தரா. இந்த (சட்ட ரீதியிலான) அணுகுமுறை பெண்ணியக் கோட்பாட்டை கருத்துத் தளத்தில் பலவீனமாக்குவதாக இருக்கும். இன்னொரு வகையில் சொன்னால் கருத்துத் தளத்தில் எதிர்கொள்ள முடியாத ஒருவகைப் பலவீனமாக இதை வியாக்கியானப்படுத்த முடியும். அல்லது அவர்களின் உளவியலில் ஒழுக்க மதிப்பீடுகளானது துடைத்தெறியப்பட முடியாத அவதியாக அவர்களுக்குள் இருக்கிறது என ஒருவர் வியாக்கியானப்படுத்தவும் முடியும்.

ஆண்வயப்பட்ட சிந்தனைகொண்ட பொதுப்புத்தியில் (ஆணதிகார மொழியின் தளத்தில்) சிம்புவின் பீப் விதிவிலக்காக நடந்த ஒன்றல்ல. பொதுவெளியில் -மொழியின் தளத்தில்- அதன் தொடர்ச்சி வந்துவிடக்கூடாது என்ற புரிதல் சிம்புவுக்கு மீதான கண்டனங்களுக்கு நியாயத்தை தரக்கூடியதுதான். அதற்கு நீதிமன்றம் எதற்கு? அதுகுறித்து வருத்தமும், சாட்டுகளும் சிம்பு தரப்பிலிருந்து வருகிறது. இது எதிர்ப்புக் குரலுக்கு இருந்த வலுவை வெளிப்படுத்துகிறது. அதன் நோக்கத்தை சாதித்திருக்கிறது. இதை மீறி எதை பெரிதாக இதற்குள்ளிருந்து நாம் எதிர்பார்க்க முடியும்?

அதேநேரம் குடும்பத்துள் பெண்கள் மீது மட்டுமன்றி குழந்தைகள் மீதேகூட இந்த மொழிவன்முறை (உடல், உள, பாலியல் வன்முறைகளோடு சேர்ந்து) பாய்ந்துகொண்டுதான் இருக்கிறது.அது அயல்வீடு, பொதுஇடம், கடை தெரு… என பொதுவெளிகளில் அவ்வப்போது வெளிப்படவும் செய்கிறது. அத்தோடு சினிமா (பெரியதிரை சின்னத்திரை என) தாராளமாகவே காட்சி விம்பங்களிலும் பாடல்களிலும் வசனங்களிலும் பெண்களை இழிவுபடுத்துகிற வேலையை (அதாவது பெண்ணுடல் மீதான ஆணதிகார அரசியலை) செய்துகொண்டிருக்கிறது என்றானபோது சிம்புவை நீதிமன்றம் அழைக்கிற முரணை எப்படி நாம் விளங்கிக் கொள்வது?

fb link:

https://www.facebook.com/notes/ravindran-pa/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/1017161448354949

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: