இறுகிய பனிமலைகள்
பிளந்து விழுகிறது துருவத்தில்.
சூடேறிக்கொண்டிருக்கும் பூமிபற்றி
கவலைகொள்கின்றனர் மனிதர்கள்.
ஓவியர்களின் தூரிகைகள்
எதிர்காலத்தை எட்டுகின்றன.
எனது இதயக் குழியில்
தேங்கி நிற்கும் குருதியையும்
கண்மடலில் தேங்கிநிற்கும்
கண்ணீர்த் துளிகளையும்
தூரிகைகள் தொடுகின்றன,
ஓவியங்கள் அழுகின்றன.
ஓராயிரம் உயிர்களின் இரத்தத்தையும்
கண்ணீர்த் துளிகளையும்
தேக்கிவைத்த
போர்க்களத்து ராசாக்களை
உரசும் இத் தூரிகைகளில்
ஓவியம் பற்றியெரிகிறது.
நிர்வாணமாய்ப் பெண்ணை வரைந்து
ஓவியமாய் அறிவிக்கும் வியாபாரிகளே
மனிதம் அழித்து நிர்வாணமாய்
நிற்கிறார்கள் கொலைக்களத்து ராசாக்கள்
முடிந்தால் ஒருமுறை ஒரேயொருமுறை
வரைந்திடுங்கள் ஓவியமாய்,
இந்த ராசாக்களின் அம்மணத்தை!
இறுகிய பனிமலைகள்
பிளந்து விழுகிறது இதயத்துள்.
சூடேறிக்கொண்டிருக்கின்றனர் மனிதர்கள்.
– ரவி (11102011)