குமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (42)

பரதன் நவரத்தினம் – பாரதி சிவராஜா மீராபாரதி – புதியவன் – தேவன் – மாலினி புதியமாதவி – அரியநாச்சி டேவிட் கிருஸ்ணன் – அம்பை சண் நரேந்திரன் – கௌதம சித்தார்த்தன் சந்திரா நல்லையா – தேவா – கருணாகரன் – அசுரா நாதன் – சிவச்சந்திரன் சிவஞானம் – பா.செயப்பிரகாசம் – யசோதா பத்மநாதன் – வாசன் – சுரேகா – தோழர் – இராகவன் (இலங்கை) – க.பத்திநாதன் – குமணன் – நிலாந்தி ஜெகநாதன் சற்குரு – எஸ்.கே.விக்னேஸ்வரன் – அகரன் பூமிநேசன் – பரமநாதன் தவநாதன்– முகுந்தன் குணரட்ணம் – சுசீந்திரன் நடராஜா – கருணாகரமூர்த்தி – எம்.கே.முருகானந்தன் – சரவணன் மாணிக்கவாசகம் – பற்றிக் – டி.சே.தமிழன் – தேவ அபிரா – அன்பாதவன்– லலிதாகோபன் எம். ரிஷான் ஷெரீப் – சர்மிளா செயத்

காணொளிகள் :

பாரதி (சுவிஸ்)
ரவின் திரு (யேர்மனி)
வைதேகி (இலங்கை)
அருள் எழிலன் (தமிழகம்)

புதியமாதவி (மும்பை)
சண்முகராஜா (தமிழகம்)

வாசிப்பு-1

 • பரதன் நவரத்தினம் (கனடா)

ஆர்வமீதியில் முதல் பிரதியை நந்தாவிடம் பெற்றுக்கொண்டு வந்தும் நாலு ஐந்து பக்கங்களுக்கு பின் தொடக்கூட நேரம் இல்லாமல் போய்விட்டது.நேற்றிரவு மீண்டும் தொடங்கி அதிகாலை இரண்டு மணியளவில் முடித்து விட்டேன்.இப்போ புத்தக வாசிப்பு நன்றாக குறைந்துவிட்டது , இது நம்மவர் கதை மட்டும் அல்ல நம்மளை பற்றிய கதையும் கூட , எப்படிவாசிக்காமல் விடுவது!

ஏற்கனவே கழகம் பற்றி புதியதோர் உலகம் ,சீலனின் வரலாறு ,முகபுத்தக பதிவுகள் என்று பலது வாசித்து இருந்தாலும் போராடச்சென்ற ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமான கதை ஒன்று இருக்கு .குமிழி வாசிக்கும் போது அதையே தான் உணர்ந்தேன். நன்கு பழகிய சூழலில் நெருங்கி பழகியவர்களுடன் ஆனால் மாறுபட்ட அனுபவங்களுடன் கதை நகருது. சிலர் சொந்தப் பெயரிலும் பலர் ஒரு எழுத்து மாற்றத்திலும் ஏன் வருகின்றார்கள் என்று புரியவில்லை.

இலங்கை கலவரப்பாதிப்பு என்று தொடங்கி இயக்கம் பின்தளம் பயிற்சி மீண்டும் தளம் வெளிநாடு என்று முடியுது.கழகத்தின் கதை என்றாலே அராஜகம் தான் .அராஜகம் இல்லாத கழகத்தை கற்பனை பண்ணிக்கூட வருகுதில்லை.பயிற்சி எடுக்க வந்த இடத்தில் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத சவுக்கு மரங்கள் நிறைந்த காடுகளின் மத்தியில் என்ன நடக்குது ஏது நடக்குது புரியாமல் எவரையுமே நம்பி வாய் திறக்க முடியாத சூழலில் சிக்குப்படுவம் என்று எந்தப்போராளி நினைத்தான்.

ஆனால் அதற்குள்ளும் நல்ல நட்புகளும் அறிவார்ந்த தோழமைகளும் கடவுள்களாக நம்பி உபசரித்த தமிழ்நாட்டு உறவுகளும் இந்த ரணகளத்திலும் ஒரு சிலுமிசம் போல காதலும் என்று கதை நகருது. நான் மிகவும் ரசித்து வாசித்த பகுதி தோழர் காஸ்ரோவிற்கும் ரகுவிற்குமிடையில் நடக்கும் உரையாடல்கள் தான் குறிப்பாக சந்ததியார் பற்றிய காஸ்ரோவின் நிலைப்பாடு.

மேலிடத்தில் இருந்த சிலரை பற்றி எழுதும் போது சற்று பக்க சார்பாக இருக்கோ என்ற எண்ணமும் எனக்கு வந்து போனது உதாரணமாக எந்திரனைப் பற்றி ஒரு இடத்தில் “தான் சார்ந்த மத்திய குழு அந்தஸ்து அதன் பெயரிலான அதிகார சுகிப்பு ஒரு கீழணி போராளியான தன்னிடம் இருந்து வேறுபடுத்திக்காட்ட ஒரு நிழல் எல்லை கோட்டை பேணவே செய்தது”.

எல்லா விடயமும் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தான் பலர் இருந்தார்கள் என்று நம்புகின்றேன்.குமிழி ரகு போராடப்போய் பட்ட அவலங்களை எழுதிய விதம் தான் என்னை மீண்டும் அந்த நினைவுகளுடன் ஊசலாட வைத்திருக்கின்றது.

“வெற்றிகளுக்கு பொறுப்பேற்கும் உசாருடன் போன நீ இப்போ தோல்விகளுக்கு பொறுப்பேற்காமல் நழுவுவது என்ன நியாயம்”.

 • 21082020

fb link : https://www.facebook.com/parathan.navaratnam/posts/10158020750930376


***

வாசிப்பு-2

 • பாரதி சிவராஜா (லண்டன்)

பாதி படித்து விட்ட பாரத்தின் நடுவில்…

உண்மைகளோடு தொடர்பான விடையங்களைப் படிக்கும் போது விடய தன்மைக்கு ஏற்ப எமக்குள் உந்தி தள்ளும் உணர்வோட்டங்குளும் மிக தாக்கத்துக்குரியதாக அமைந்துவிடுவதுண்டு. அதுவும் இரத்தமும் சதையுமான எமது மண்ணும் மக்களும் துயரங்களான பாத்திரங்களாக அரசியலில் வரலாற்றில் வஞ்சிக்கப்பட்டவர்களா படிக்கும் நோ அதிகமானது. விடுதலை நோக்கிய போராட்டத்தை எல்லோருக்குமானதாக நேசித்த பலரின் கனவு களத்திலேயே சிதையும் காட்சிகள். இன்னும் வலிப்பதாலும் அழியாததாலும்தானே அவை வடுக்கள் என்றாகிறது.

(ஆனால் புனைவுகள் எம்மக்குள் எழுதுவோரின் ‘கைவண்ணம்’ அது அவரல்ல-என்ற உள்பிசகள், எழுத்தாளரை இன்றைய நவீன உலகம் இலகுவாக முகம் காட்டும், அடையாளப்படுத்தும் வெளிப்படுத்தும், விவாதிக்கும்- தளங்களை வாசகர்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. எனவே சமூக வலைத்தளங்கள் இல்லாத காலங்களில் அவர்கள் மீதிருந்த எழுத்தாளனை ‘எழுத்தாகவே’ நம்பும் போக்கு குறைந்து அது அவர்கள் ‘திறமை’ அதுவாகவே அவர்கள் அதுவாக இருப்பதில்லை என்றளவில் வாசகர்கள் விழிப்படைந்ததில் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.)

ஆனால் உண்மை அனுபவங்களோடு தொடர்பான எழுத்தை அப்படி படிக்க முடிவதில்லை. அதிலும் இடது சாரிய அரசியலையும் அமைப்புத்துறை தொடர்பான கோட்பாடுகளையும் அதிகாரத்துக்கு எதிரான மன நிலை போக்கையும் பெற்றுவிட்டால் ‘குமிழி’ போன்ற அனுபவ அரசியல் புத்தகங்கள் தரும் அதிர்வு என்பதைச் சொற்களில் கொண்டுவந்திட முடிவதில்லை.

// சமூக விரோதி’ மனிதன் சுடப்பட்ட இந்த நாளிலிருந்து அரச உளவாளிகள் எனச் சந்தேகப்பட்டவனை, இராணுவ முகாம் இருந்த பெரு வீதியால் நடந்து வந்தவனை, எனத் தொடங்கி பிறகு மன நோயாளர்களை, பால்வினைத் தொழிலாளர்களை, ஓரினப் புணர்சியாளர்களை, கோழிப்பிடித்தவனை பசியால் களவெடுத்தவனை எல்லாம் அந்த கார்போர்ட் மட்டை துரத்தித் திரிந்தது… மாணிக்கம் அதனிடம் அகப்பட்டிருந்தால் எப்படியாய் சிதைந்திருப்பான்…..//

இத்தகைய மனப்போக்கை இன்றும் நாம் ஆயுதம் இல்லாத அமைப்புகளிடம் எதிர் நோக்க முடியும். ஆயுதம் இருந்திருந்தால் மண்டையில் போட்டிருப்பார்களோ என்று சொல்லுமளவு ஈழ அரசியல் அமைப்புகள் ஒருவரை ஒருவர் இழுத்து விடவும் அந்த இடத்தைப் பிடிக்கவும் எதை வேண்டுமானாலும் கையில் எடுப்பர் என்பதைக் காண முடியும்.‘அமைப்பைக் காப்பாற்ற’ என்ற தாரக மந்திரத்துக்குள் எல்லாம் அடங்கிப்போகும்…குமிழி இப்படிச் சொல்கிறது..

// ‘இராணுவ இரகசியம்’ என்ற வன்முறை வசதி கொண்ட சூழலுக்குள் விடப்பட்டிருந்தார்கள். அநியாயம் என்று தெரிந்திருந்தாலும் கூட அணி திரள முடியாதவாறு தனிமனித உறவு நிலைகள் புனைவு அறிமுகங்கள் வெளிப்படைத்தன்மையற்ற நிலை என்பன கவனமாகப் பேணப்பட்டிருந்தன…//

அங்கத்தவர்களிடம் அனுமதிக்கப்படாத வெளிப்படைத்தன்மைப் போக்கு கட்டப்பஞ்சாயத்தை விட மோசமானது. அதிகாரம் படைத்தவர்களில் எல்லாவகை சேட்டைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் விசுவாசிகளை உருவாக்கவல்லது. விசுவாசிகள் மக்களுக்கன அரசியலின் சாபக்கேடு. சமூக மாற்றத்துக்கான போர் குணத்தில் அறையப்படும் முதல் ஆணியும் அது…. எமது போராட்டம் விட்டுச் சென்ற எச்ச சொச்சங்களாகத் தொடர மீதமிருப்பது அது மட்டும்தானா என்ற கேள்வி எழுவதை நாடு கடந்த அமைப்பு அனுபவ அரசியலும் எழுப்புகிறது.

‘புதியதோர் உலகம்’ படித்துக் கொண்டிருக்கும் போது அந்த புத்தகம் வேண்டி நின்ற சமூகமும் அது கொண்டிருந்த மனித நேயத்தின் நோக்கமும் அதை எழுதிய கோவிந்தன் பின் அதற்காகவே கொல்லப்பட்டார் என்ற தகவல்- இதயத்தை இறுகிக்கொண்டே இருந்தது. ஆனால் அந்த ஒரு கனதியைத் தவிர்த்தாலும் குமிழியை படிக்கும் போதும் இதயம் பாரமாகி நெற்றி சுடுவதைத் தவிர்க்க முடியவில்லை. எமது போராட்ட வரலாற்றில் பதியப்பட வேண்டிய அனுபங்கள் படிக்கப்பட்டு களையப்பட வேண்டிய பலகீனங்கள்.

fb link : https://www.facebook.com/barathy.siva/posts/3478955438832769


***

வாசிப்பு-3

 • மீராபாரதி (கனடா)

குமிழி – உடைந்த கனவு

புனைவுகளைவிட சொந்த அனுபவக்குறிப்புகளை வாசிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அந்தவகையில் (சுவிஸ் அல்லது மனிதம்) ரவி எழுதிய குமிழியை உடனடியாக வாங்கி வாசித்ததில் அதிசயமில்லை. அதேநேரம் இதனை வாசிப்பதற்கு இன்னுமொரு காரணமும் ஆர்வமுள்ளது. எனது பதின்மங்களில் (84-85) இறுதியில் இணைந்து செயற்பட்ட முதல் இயக்கம். எனது இருபதுகளின் (88-94) ஆரம்பத்தில் எனது தந்தை (செயற்பட்டல்ல) வேலை செய்த இயக்கம். எனது இருபதுகளின் இறுதியில் (97-99) இணைந்து செயற்பட்ட தமிழீழ மக்கள் கட்சி உருவாக காரணமாக இருந்த தீப்பொறி கருக்கட்டிய இயக்கம். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் எனது வாழ்க்கையில் பங்குவகித்த இயக்கத்திலிருந்த ஒருவரின் அனுபவத்தை வாசிப்பது மனதுக்கு நெருக்கமானது. இது வெறும் கதையல்ல. நம் போராட்ட வாழ்க்கையின் ஒரு பகுதி. இதனை முழு மூச்சுடன் ஒரே வாசிப்பில் வாசித்துவிடக் கூடிய எழுத்துநடையும் சுவாரசியம் என்பதைவிட அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இறுதியில் என்ன நடக்கும் நடந்தது என்ற கேள்வியும் ஏக்கமும் நிறைந்திருக்கும் சொற்களைக் கொண்டவை. கதை சொன்னவர் இப்பொழுது உயிருடன் இருந்து எழுதிய போதும் அவருக்கு என்ன நடந்தது? நடக்கும்? என்ற உணர்வு மேலோங்கியிருக்குமளவிற்கு உயிரோட்டம் நிறைந்த ஒரு அனுபவப் பகிர்வு. அதேநேரம் இது முழுமையான அனுபப் பகிர்வும் அல்ல என ரவி குறிப்பிடுகின்றார். தான் அன்று எழுதிய குறிப்புகளை பாதுகாத்த நண்பர் பாதுகாப்புக் காரணங்களினால் அவற்றை எரித்துவிட இன்றுவரை நினைவுகளில் இருப்பதையும் அந்த நினைவுகளினுடாக சில உண்மைகளை உணர்த்துவதற்கும் சில பாத்திரங்களைப் புனைத்துள்ளார். இப் பாத்திரங்கள் புனையப்பட்டாலும் இவர்களைப் போல பலர் பல்வேறு இயக்கங்களின் வரலாற்றில் பங்களித்துள்ளார்கள் என்றால் மிகையல்ல.

விடுதலைக்காக தம் அடையாளங்களை இழந்தவர்கள் இறுதியில் தம்மையே தமது வாழ்க்கையையே இழந்தார்கள். இவ்வாறான பலர் இன்று பல்வேறு அடையாளங்களில் வாழ்கின்றார்கள். ஒவ்வொரு காலத்தில் எங்கே யார் யாருடன் இருந்தார்களோ அவர்களுக்கு என ஒரு அடையாளம். இன்னுமொரு காலத்தில் இன்னுமொரு அடையாளம். ஒருவரே பல பெயர்களைக் கொண்டார்கள். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அடையாளம் அனுபவங்கள் இருக்கின்றன. இவை ஒருவரின் பலமுனை அடையாளங்கள். குமிழியில் வரும் பாத்திரங்களுக்கும் அவ்வாறுதான். ஆனால் குமிழி உடைந்தபோதும் அது உருவாக்கிய அடையாளங்கள் மட்டும் நீர்ஆவியாக அவர்களைப் பின்தொடர்கின்றன. ஈழம், இலங்கை, தமிழகம், புலம் பெயர்ந்த தேசங்கள் எனத் தொடர்கின்றன.

ஒவ்வொரு இயக்கத்திலும் இந்தப் படைப்பில் வருகின்ற பாத்திரங்களைப் போலப் பலர் இருந்திருக்கின்றனர். தலைமைத்துவத்தின் மீதான விசுவாசம், கேள்வியின்றிப் பின்தொடர்பவர்கள், அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள், சந்தேகங்களைக் கேட்பவர்கள், கேள்விகளை முன்வைப்பவர்கள் புதியதைத் தேடுபவர்கள் எனப் பலவகையினர். இவர்களின் இவ்வாறான பண்புகளுக்கு ஏற்ப அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டனர். இதுவே இவர்களின் நிகழ்கால எதிர்கால வாழ்க்கையை மட்டுமல்ல உயிருடன் இருக்கலாமா இல்லையா என்பதையும் தீர்மானித்தது.

புளொட்

84, 85களில் கழகம் நமக்கு ஒரு பிரமாண்டம். எல்லா இயக்கங்களையும் விட அதிகம் அங்கத்தவர்களைக் கொண்டது என்ற பெருமை. பின்தளத்திலிருந்து ஒரு படையாகப் போராளிகள் வரப்போகின்றார்கள் என்ற மகிழ்ச்சி. இதற்காக ஓடி ஓடி பொருட்கள் சேர்த்தோம். கப்பலில் ஆயுதங்கள் வருகின்றன என்ற நம்பிக்கை. ஆயுதங்கள் வந்தவுடன் ஈழம் பிறந்துவிடும் என்ற கனவு. ஆனால் இவை எல்லாம் ஒரு குமிழி என்பதை காலம் கடந்துதான் புரிந்துகொண்டோம். அது உடைந்தபோது ஏமாந்தோம், ஏமாற்றப்பட்டோம் என்பதே உண்மை.

தலைமை மீதான நம்பிக்கை. அவரிடமிருந்த ஆற்றல்கள் தொடர்பான பெருமிதம். விசுவாசம். ஆனால் இவை எல்லாம் ஒரு குமிழியைப் போல ஒரு நாள் வெடித்துச் சிதறின. நாம் செய்வதறியாது திகைத்தோம். மாற்று வழிகளை அறிந்திலோம்.  அவரவர் வசதி வாய்ப்புகள் தொடர்புகள் சிந்தனைகள் என்பற்றுக்கு ஏற்ப புதிய வாழ்வை தேடல்களை ஆரம்பித்தோம். இவ்வாறான நேரங்களில் சில உடன் செயற்பட்டவர்களும் குறிப்பாக குடும்ப அங்கத்தவர்களும் தம் உறவுகளை நண்பர்களைப் பாதுகாக்க பட்ட கஸ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பாக அம்மாக்களின் அர்ப்பணிப்பு சொல்லிமாளாது. அவர்களைப் பற்றியும் இந்த நூல் குறிப்பிட்டுச் செல்வது முக்கியமானது.

சிலர் அல்லது பலர் போராட்டத்தையே மூட்டை கட்டிவைத்துவிட்டு தம் வாழ்வை தம் குடும்பத்தை காப்பாற்ற சென்றனர். அவர்களைக் குற்றம் சொல்வதில் எந்தப் பயனுமில்லை. சரியான நம்பிக்கையான தலைமை இருப்பின் கேள்விகளின்றி போராட இவர்களைப் போன்ற பலர் வந்திருப்பார்கள். ஆரம்பத்தில் அப்படி வந்தார்கள். கட்டாய இராணுவ சேவைக்கு அல்லது ஆட்பிடித்தலுக்கு எல்லாம் அவசியமே இருந்திருக்காது. ஆனால் அவ்வாறான ஒரு தலைமை நமது போராட்டத்திற்கு வாய்க்கவில்லை. இருந்த தலைமைகளும் அந்த நம்பிக்கையைத் தரவில்லை. விளைவு குமிழியின் மாயத்தோற்றம் உடைய நாம் தோற்றுப் போனோம்.

புதியதோர் உலகம் - நூலகம்

புதியதொரு உலகம் 85யில் வந்தது. ஆனால் எந்த ஒரு இயக்கமும் அதற்கு முக்கியத்துவம் அளித்து அதை ஒரு பாடமாகக் கற்று தம்மை மறுசீரமைக்க முயற்சிக்கவில்லை. முடிவு போராட்டமே தோற்றகடிப்பட்டது. ஆனால் நமக்குள் உருவாக்கப்பட்ட வடுக்கள் ;ஆறாவடுக்களாக இன்னும் நமக்குள் வேதனையளித்துக் கொண்டிருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்தக் குமிழி.

மிகக் கவலைக்கிடமான விடயம் என்னவெனில் இந்தப் பாடங்களைக் கற்று அதிலிருந்து புதிய பாதையை உருவாக்கிய தீப்பொறியும் சரி அதன் நீட்சியான தமிழீழ மக்கள் கட்சியும் கூட தம்மை சீரமைக்கவில்லை. மீண்டும் தனிநபர்களால் கட்சி சீரழிக்கப்பட ஏது வழி சமைத்தது? அமைப்புத் துறையா? தன்னிலைவாதமா? கோட்பாடுகளின் குறைபாடா? இவை எதிர்கால அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான கேள்விகள். மேலும் இக் கட்சியை விட்டு விலகிய பின் கடந்த இருபது வருட காலத்தில் அக் கட்சியில் இருந்தவர்களின் செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது இவர்களை நம்பியா நாம் செயற்பட்டோம் என்ற உணர்வே எஞ்சி நிற்கின்றது.

இயக்கங்களின் அக மற்றும் இடையிலான முரண்பாடுகள் தொடர்பாக முதன் முதலாக வந்த நூல் புதியதொரு உலகம் எனலாம். இதன் பின் செழியன், எல்லாளன், புஸ்பராசா, புஸ்பராணி என்பவர்கள் தமது அனுபவங்களை நூலாக வெளியிட்டார்கள். குணாகவியழகனின் நஞ்சுண்ட காடும் ஒரளவு விமரசனங்களை முன்வைத்துள்ளது.  நேசன் போல சிலர் இணையங்களின் தொடராக எழுதினர். போர் முடிவுற்றபின்னர் தமிழ்கவியின் ஊழிகாலம், அப்புவின் வன்னியுத்தம் மற்றும் சிலரின் படைப்புகளும் புலிகளை விமர்சித்தன. அதேநேரம் புலிகளில் இருந்தவர்கள் யாரும் தம் இயக்கத்தின் மீது கறாரான விமர்சனங்களை இதுவரை முன்வைக்கவில்லை எனலாம். ஆனால் தூரதிர்ஸ்டவசமாக எந்த ஒரு இயக்கமும் குறிப்பாக இறுதிவரை போராடிய புலிகள் இயக்கம் உட்பட யாரும் வெளிவந்த விமர்சனங்களிலிருந்து எதையும் கற்றதாகத் தெரியவில்லை. ஏன் இன்று இருக்கின்ற அரசியல் கட்சிகளும் கற்றதாகத் தெரியவில்லை. விளைவு மக்கள் யாருமற்ற அநாதைகளாக கைவிடப்பட்டுள்ளார்கள்.

கடந்த காலங்களிலிருந்து கற்காத நாம், அந்த அனுபவங்களை படிப்பினைகளாக கொள்ளாத நாம், சரியான தலைமைத்துவத்தை வழங்காத, அல்லது உருவாக்க முடியதா நாம், இந்த நூல்களை வாசித்து ஏதாவது பயனை அடைவோமா என்றால் அது கேள்விக்குறியே. இந்த நூலும் பத்தோடு பதினொன்றாக நமது புத்தக அலுமாரிகளை அலங்கரிக்கும். அவ்வளவுதான். இவ்வாறு அவநம்பிகையாக உணர்ந்தாலும் இவ்வாறு எழுதுவதும் விமர்சிப்பதும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் செய்கின்றோம். ஒடுக்கப்பட்ட சுரண்டப்படுகின்ற அனைத்து மனிதர்களும் விடுதலை பெறவேண்டியது தவிர்க்கப்படமுடியாதது. அதற்காக தொடர்ந்தும் போராட வேண்டியது மனித வாழ்வின் நியதி. ஆகவே தொடர்ந்தும் எழுதுவோம். செயற்படுவோம். தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல. அதிலிருந்து நாம் கற்றுக் கொண்டால்.

 • 27082020

பி.கு. இந்த நூலிலும் விடியப் பதிப்பகம் தனது பதிப்புரையில் இனக் கலவரம் என ஒடுக்குமுறையாளர்களின் சொற்களைப் பயன்படுத்தியிருப்பது கவலைதருவதாகும். இவ்வாறான நூலிலாவது சொற்களை நாம் பிரக்ஞைபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். சிங்கள் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் வரை தமிழர்கள் சிங்கள அரசின் துணையுடன் தாக்கப்பட்டார்கள். இக் காலங்களில் தமிழர்கள் திருப்பித் தாக்கவில்லை. ஆகவேதான் இனக் கலவரம் என்ற சொல் பொருத்தப்பாடானது மட்டுமல்ல இது ஒடுக்குமுறையாளர்கள் முன்வைத்த மேலாதிக்க சொல் எனலாம். இதனை நாம் தொடர்ந்தும் பயன்படுத்தாது சொற்களைப் பிரக்ஞைபூர்வமாக தேர்வு செய்வது அவசியமாகும்.

மேலும் சில சொற்களுக்கான விளங்கங்களை நூலின் ஆரம்பத்திலும் அடைப்புக்குறிகளுக்குள்ளும் குறித்துள்ளார் ஆசிரியர். இதனைத் தவிர்த்து அதன் விளக்கத்தை கதையினுடாகவே எழுதிச் சென்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

நூலை உடனடியாக எம்மிடம் சேர்த்த ஜீவனுக்கு நன்றி.

நாம் சென்ற முதல் இயக்கம் 
மீண்டும் சென்ற இயக்கம்
இன்று முக்கியமான நாள்
கொலை செய்தவர்கள் யார்?

fb link : https://www.facebook.com/notes/மீராபாரதி-வகசெ/குமிழி-உடைந்த-கனவு/10157954280512362/


***

வாசிப்பு-4

 • புதியவன் இராசையா (லண்டன்)

அட்டைப்படம் போலவே எல்லாமே தெளிவற்றுப்போய், நாவலில் சொல்லப்படுவது போல சுனாமி போல் கொன்றொழித்து பாலைவனமாக போன ஒரு தேசத்தின் கதை.

இது புளட் அமைப்புக்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு. இங்கே புளட் என்ற இயக்கப்பேரை நீக்கி விட்டு வேறு எந்த இயக்கத்தின் பெயரைப் போட்டாலும் அச்சரம் பிசகாமல் பொருந்தும்.

மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டபோதெல்லாம் வரும் அச்சத்தை சொல்கிற இடத்தில் உயிர் உறைந்து போகும் ஒரு வித வலி.

கோவிந்தனின் புதியதோர் உலகம் முதல் முதல் புளட்டின் வெளித்தோற்றத்தை கிழித்துத் தொங்கப்போட்டது. (அதே கோவிந்தனை பின் புலிகள் சிதைத்துப் போட்டதையும் அறிந்தவர்களுக்கு தெரியும்) இப்போ குமிழி….

” புலியின் உளவாளி என்ற உரப்பலில் தோழர்கள் உண்மையறியாது குழம்பி நின்றார்கள். மீட்பர்கள் அடித்தார்கள்.குதறினார்கள். சுந்தரம் படைப்பிரிவு என்று பெயர் சூடிக்கொண்ட அவர்கள் சுமார் ஆறு ஏழு பேரும் ஒரு பந்தைப் போல மதனை உருட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள்……

மனதைத் திடப்படுத்திக்கெண்டு வாசிக்கத் தொடங்குங்கள். அருமையான படைப்பு. தோழர் ரவி நல்ல எழுத்தாற்றல் மிக்கவர் என்பது தெரியும். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல் மிகுதியை பின்னர் வாசிக்கலாம் என புத்தகத்தை வைத்துவிட முடியாத படி ஒவ்வொரு வரியும் உள்ளீர்க்கும் .
நாவலை வாங்க விரும்பினால் Ravindran Pa தொடர்பு கொள்ளுங்கள்.

 • 28082020

fb link : https://www.facebook.com/puthiyavanra/posts/10163937532500697


***

வாசிப்பு-5

 • தேவன் (சுவிஸ்)

உடைந்து போன கனவுகளின் துகள் ஆனேன். நாவல் ( வரலாறு) எப்போதும் முடிக்கும் வரை பதட்டத்திலேயே வைத்திருந்தது. வரலாறு , கனவு போலவே தொக்கி நிற்கிறது . உள்ளேயும் வெளியேயும் அறிந்த அதிகமான தகவல் உண்டல்லவா ? அது நாவல் இடையில் நிற்பது போல் உணர்வைத்தந்தது. 35 வருடத்தின் பின் தொகுப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று, ரவியால் சாத்தியமாக்கப் பட்டுள்ளது. புனைவு இல்லாத உண்மை!

ஜேம்ஸ்பொண்ட் சாகச வர்ணனை இல்லை. அந் நேரத்தில் யதார்த்தமான படம்காட்டலையும், நெல்லியடி சந்தியை கடக்கும் போது வெள்ளிச் சங்கிலியோடு முகத்தையும் காட்டியதான ஜம்பத்தையும் உரித்துக் காட்டியது, இன்றய முதுர்வின் வல்லமையல்லாமல் வேறில்லை.

“மாற்றம் என்பதே மாறாதது” என்பது போல, தோழர் சன்முகதாசனின் “தவறுகள் இல்லாத தூய்மையான போராட்டம் எங்கேயும் நடந்ததில்லை. தவறுகளுக்கு ஊடாகத்தான் அது பயனிக்கும். அது தவறுகளை அடையாளம் கண்டு தன்னைத் தானே திருத்தி படிப்படியாக முன்னேறும்” என்பதுவும் தொடர்ந்துகொண்டே போகும் .

பெண் போராளிகளும் இருந்தார்கள் என்பதைவிட, அவர்களின் மனநிலை எப்படியாக இருந்தது என்றோ , அவர்களின் சுதந்திரம் எவ்வாறாக இருந்தது என்றோ, நீங்களும் தேடினால் , நீங்களும் எனது நண்பர்களே !


***

வாசிப்பு-6

 • மாலினி மாலா (யேர்மனி)

உண்மைகளுக்கு உறங்கிவிடாத சக்தி இருப்பதைப்போல் உறங்கவிடாத சக்தியும் உண்டு. என் உறங்காத இரவொனறைச் சுவீகரித்துக் கொண்ட இந்தக் ‘குமிழி’ இன்னும் எத்தனை கேள்விகளை, அதையொட்டிய சிந்தனைகளை குமிழி குமிழியாக எனக்குள் உருவாக்கி மனதுக்குள் வெடித்து வெதும்பவைக்கப் போகிறதோ தெரியவில்லை.

போராட்டமும் அதன் பின்னுமான காயங்கள் தானே இங்கு முன்னணியில் இடம்பிடிக்கின்றன. என் நீண்டகாலத் தேடலான ஆயுதப்போரின் ஆரம்பப்பின்னணிபற்றிய ஒரு காயப்பட்டுக் கசங்கிய வாக்குமூலமாக நகர்கிறது குமிழி.ஒரு எழுத்துப்படைப்பு என்னை வாசி எனத்தூண்ட, பாதியில் மூடி வைத்துவிடாதே எனப் பிடிவாதம் கொள்ளவைக்கும் முக்கிய அம்சங்களுக்குள் அது நம்பும்படியான சம்பவங்களையும், மொழிவளத்துடன் கூடிய தொய்வற்ற எழுத்துநடையையும் கொண்டிருத்தல் அவசியம் என நினைக்கிறேன். கடைசிவரிவரை குமிழி என் கைவிட்டு இறங்கச் சம்மதிக்கவில்லை.

சலனமற்று சீராக நகரும் அருவியில் காயப்பட்டுக் காயப்பட்டு நகர்ந்து தன்னைவடிவமைத்துக்கொண்ட கூழாங்கல் ஒன்றின் தண்ணீருக்குள் கலைந்த கனவுபோல், கலந்த கண்ணீர் போல் நகர்கிறது குமிழி. நூல் முறைப்படி வெளியாகுமுன் அதன் முடிச்சுகளை நான் பொதுவெளியில் பிரித்துக்காட்டல் தர்மமல்ல எனக் கருதுவதால் இத்துடன் நிறுத்திக்கொண்டு அதன் வெளியீட்டு நிகழ்வின் பின் தொடர்கிறேன்.


***

வாசிப்பு-7

 • புதியமாதவி (மும்பை)

குமிழி = எல்லா பொய்களையும் நம்பிய உண்மை !

இண்டைக்கும் அதே கனவா, அப்பா?தலைமுடியை வருடி கேட்கும் மகளிடம்என்ன சொல்வது?மகளே…கனவுகள் என்னைத் துரத்துகின்றன என்றா?கனவுகளைத் தொலைத்த நினைவுகள் துரத்துகின்றன என்றா?வாழ்க்கையைக் கனவுகளில் தொலைத்துப்போனஎங்கள் தலைமுறையின் கதறலை இரவைக்கிழிக்கும் ஈனக்குரலை..தலைகீழாக தொங்கவிடப்பட்டு கிழிந்துதொங்கிய மதனின் உடலில் நானும் இருந்தேன் என்றா,,!மகளே.. எதைச் சொல்வது..?எதைச் சொல்லாமல் விடுவது?சொன்னால் புரியுமா உனக்கு?

எனக்கே இன்னும் புரியாத குமிழியைஅப்படியே உன் கைகளில் தருவதற்குள்உடைந்துப் போகிறது குமிழியின் முகம். மகளே, அறிவாயோ அந்த மந்திரக்கிழவிவாசலில் வந்து நிற்பதை? அவளுக்குள் நான்நுழைந்துவிடும் போது..

மகளே.. “ நான் இப்போ என்னவாக இருக்கிறேன், யாராக இருக்கிறேன். அவள் எனது கதையைகிழித்து தொங்கும் சிலந்தி வலையாய் அவளே விரித்து போட்டுவிட்டு சென்றுவிட்டாள்.

குமிழி…

நாவலா, சுயசரிதையின் முதல் அத்தியாயமா? நாவலெனில் எது புனைவு? சுயசரிதை எனில் எது குமிழி?!

” நீ காணாமல் போய்விட்ட தாக நினைத்திருந்தேன்”

“எனக்கு அழிவில்லை”

“வெற்றிகளுக்கு பொறுப்பேற்கும் உசாருடன் போன நீ இப்போ தோல்விகளுக்கு பொறுப்பேற்காமல் நழுவுவதுஎன்ன நியாயம்?”

“களைத்துவிட்டேன், நம்பிக்கையை தொலைத்துவிட்டேன். நான் எனது உயிர் குறித்தே இப்போ கவலைப்படுகிறேன். நான் வாழ வேண்டும். எனக்கு இருத்தல் மீது ஆசை வந்திருக்கிறது. மரணத்தை வெறுக்கிறேன்”

“நானும் தான்! “

“ஆடை களைவது போல் எல்லாவற்றையும் களைந்துவிட்டு ஒரு வெற்று மனிதனாக வாழ இலகுவில் உன்னால் முடியாது. எனக்கு உன்னை நன்றாகவே தெரியும். நொருங்கிப் போவாய்.” (பக் 208)

ஈழப்போராட்டம் இயக்கங்களின் வரலாறுமுகாம்களில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த இளைஞர்கள். இயக்கங்களில் வைக்கப்பட்ட அவர்களின் பெயர்களுக்கும் செயல்களுக்கும் சம்பந்தமேஇல்லை என்பதுடன் முடிந்துவிடுகிறதா. இயக்கங்கள் பேசிய சமத்துவத்திற்கும் இயக்கங்களில் புழங்கிய “அண்ணே, பெரிசு,பெரியவர்” இவைகளுக்கும் கூட தொடர்பில்லை.

“எல்லா பொய்களையும் நம்பியது கூட பொய்யில்லை”

எது உண்மை? உண்மை பொய்களால் கட்டமைக்கப்பட்டதா?பொய்களை உண்மைகளாக்க முடியுமா? உண்மைகள் ஏன் பொய்களின் முகங்களில் குமிழியாக ஒட்டிக்கொண்டன?உண்மைகள் ஏன் குமிழியாகிவிட்டன? துருத்திக்கொண்டு தெரியும் புடைப்பாக, வீக்கமாக, நீர்மேல் குமிழியாக ஒரு தலைமுறையின் இளமை.

கரும்புள்ளிகள் துரத்த வேகமெடுத்து ஆரம்பித்த பயணம்… பனிப்பிரதேசத்தின் கனவுகள் துரத்த விழித்துக்கொள்கிறது.

“நான் கட்டடக் கலைஞனாகி பின் எனது உழைப்பால் இந்தக் குடும்பத்தைத் தாங்குவது , எனது சகோதரிகளுக்கான சீதனத்தால் அவர்களை மீட்பது போன்றவற்றுக்கான சாத்தியத்தைவிட ஒரு சுதந்திர சோசலிச தமிழீழம் உருவாகினால் என் போன்றே எல்லோருக்கும் மீட்சி கிடைக்கும் என்று நம்பியதும் பொய்யில்லை. எனது என்ஜினியர் கனவை பழிவாங்கிய அரசுக்கு எதிராக கோபம் கொண்டதும் பொய்யில்லை. கொலையுண்ட சக மாணவர்களில் என்னைக் கண்டதும் பொய்யில்லை. மண்ணுக்காய் மரித்தவர்களின் சாம்பலிலிருந்து தமிழன் என்ற அடையாளத்துடன் நான் எழுந்ததும் பொய்யில்லை. வண்ணை ஆனந்தனின் வெளவால்கள் எனக்கு திசைகாட்டியதும் பொய்யில்லை. எல்லா பொய்களையும்நம்பியதும் பொய்யில்லை”

ஆம்… குமிழி… உண்மைகள் பொய்யான கதை.

குமிழி.. கனவுகள் குமிழியாக உடைந்துப்போன வரலாற்றின் ஒரு துண்டு.

குமிழி.. புனைவல்ல.குமிழி.. நிஜம்.

உடைந்து உடைந்து .. உண்மைகளும் உடைந்து எல்லாமே உடைந்துப் போன காலத்தில் மந்திரக்கிழவி வந்து கனவுகளின் திரைகளை விலக்கி வைத்திருக்கிறாள்.

ரகு, மதன், பாண்டி, லெனின், கஸ்ரோ,உமாமகேஸ்வரன், ஜோன், சந்ததியார், சேகர், சதா எல்லோரும் வருகிறார்கள்..

“அரசியல் அறிவூட்டப்படாத இராணுவம்ஒரு போதும் சோசலிச விடுதலையைப் பெற்றுத் தரப்போவதில்லை. வெறும் இராணுவ அதிகாரம் சொந்த மக்களுக்கு எதிராகவே தனது துப்பாக்கியைத் திருப்பக்கூடியது. அது விடுதலை அடைந்தால் கூட அதைச் செய்யும்” (பக் 93)

இராணுவத்தால் கட்டமைக்கப்படும் ஒவ்வொரு தேசமும் சொந்த மக்களுக்கு குமிழியாகிவிடுகிறது. தன் மக்களையே கொன்று குவித்து இராணுவ ரகசியங்களைக் காப்பாற்றிக் கொள்கிறது அரசாங்கம். மொழி எல்லைகளைக் கடந்து தேசத்தின் எல்லைக்கோடுகளைக் கிழித்துக்கொண்டு குமிழி பயணிக்கும் இடங்கள் ஒரு தேர்ந்த அரசியல் பாடமாக தன்னை எழுதிப் பார்த்திருக்கிறது. சித்தாந்தங்களை அனுபவத்துடன் உரசிப் பார்க்கும் போது எது குமிழி ஆகிறது? அனுபவங்களா அல்லதுஅரசியல் சித்தாந்தங்களா!

கரும்புள்ளிகளாக துரத்தும் குமிழியின்பின்னணி பாடலாக இப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.. “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா…”


***

வாசிப்பு-8

 • அரியநாச்சி (புதுவை)

குமிழியை வாசித்துமுடித்ததும் Between the first and the last nothingness என்ற வரிதான் நினைவில் முதலில் தெறித்தது. அதனால் மீண்டும் ஒருமுறை வாசித்துவிடலாமென மூடிய நாவலைத் திறக்கப் போனபோது, இன்னொருமுறை ரகு, ஜோன் மற்றும் பலரையும் வேம்பு, பூனை போன்ற பலதையும் வரிவரியாகச் செதுக்கி முடித்துவிட்டு உட்கார்ந்திருக்கும் எழுத்தாளரை இழுத்து மீண்டும் வீட்டுக்கும் போராட்டத் தளத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தில் விட்டு once more செயல்பட வைக்க மனமற்று நாள் குறிப்பிடாது மறுவாசிப்பை தள்ளிவைத்துவிட்டேன்.

குமிழியைப் படித்துப்பெற்றதன் சாரம் வாசகனுக்கும் இருக்குந்தானே. அப்பட்டமாக வெளிக்காட்டிக்கொள்ளாத செருக்கை வாசகனுக்குள் பற்ற வைத்திருக்கும் நாவல் ஒரு நியாயத்தைச் செய்திருப்பதை மனம் ஏற்கிறது. கடைசிப் பக்கத்தில் தெளிவாகச் சொல்லிச்சென்றாலும் 35 வருடகாலக் காத்திருப்பின் பின்புலத்தில் நிகழ்ந்த உழைப்பு நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது.

அமைதியாக ஏதோ சொல்ல வருவதுபோலவே தோற்றங்கொண்ட குமிழியின் சாம்பல்நிற அட்டையின் சைலென்ஸ், மூர்க்க எதேச்சதிகார அரசின் காட்டுத்தர்பாரினால் சகிப்பின் எல்லைவரைச் சென்று, அமைதியான விடுதலைக்கு வாய்ப்பற்று வாழ்க்கையைப் பணயம் வைத்து மாற்று வழியில் அனைத்துச் சாத்தியங்களையும் பரிட்சித்துப் பார்க்க பயிற்சியில் ஈடுபடுகிறவர்களைப் பற்றிச் சொல்வதற்கு வேகமாக, அதேசமயம் அழுத்தமாகப் படபடத்து அழைக்கிறது.

ஊரிலுள்ள இளைஞர்கள் ஏதோவொரு வகையில் ஏதோவொரு இயக்கத்தோடு தம்மை இணைத்துக்கொண்டு பொது இலக்கான இனவிடுதலை நோக்கி சதா இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒரு இயக்கத்தினருக்கும் இன்னொரு இயக்கத்தினருக்கும் அடிநிலையில் எல்லாம் பொதுவாக இருப்பதைக் கட்டமைக்கும் ஆசிரியர், மேல்மட்டம் இரகசியம் என்ற பெயரில் குற்றத்தை நிரூபிக்காமல் மேற்கொள்ளப்படும் தண்டனைகளையும், கொலைகளையும் நடக்கும் பூடகங்கள் அனைத்தையும் சோசலிசத்திற்கு எதிரானதென உணர்த்துகிறார், ‘அவர்களும் போராளிகள் தானே’ எனுமிடத்தில். நிறையக் கேள்விகள், எல்லாமே சக மனிதனின் இருத்தலையும் சுதந்திரத்தையும் அங்கீகரிக்கக் கோரும் கோரிக்கையாகவே மறைவில் நின்று கேட்டுக்கொண்டே இருக்கிறார், நாவலாசிரியர்.

ஒரு கதாபாத்திரம் தனக்குத்தானே பேசிக்கொண்டாலும் கூட அங்கே ஒரு சந்தேகமும் தடுமாற்றமும், பயமும், சுதந்திரமின்மையும் சூழ்ந்திருப்பது தெளிவாக வெளிப்படுகிறது. போராளிகள் தலைமையின் ஒற்றைச் சாட்டைக்கு கட்டுப்பட்டு ஓடும் குதிரைகளாக பயிற்சியின்போது வேண்டுமானால் சாத்தியப்படலாம், ஆனால் முடிவெடுக்கும் நிலையில் ட்ரிகரை அழுத்தும்போது. அமைப்புக்குள்ளேயே ஒரு போர் நிகழ்கிறது, தாமே தம் கட்டமைப்பைச் சிதைத்துக்கொள்வது நிகழ்கிறது.

மனதுக்கள் பற்றி எரியும் விடுதலைக்கான தேடல் கூட்டுச்சேரும்போது கலந்துவிடும் மனவித்தியாசத்தால் அமைப்புக்குள் சதா ஒரு தீர்க்கமின்மை நிலையாகத் தங்கியிருப்பதை முகாம்களில் நடக்கும் உரையாடல்கள் வழி அறியலாம். எதிரும் புதிருமான எண்ணம் கொண்டவர்களாகவே கூட்டுச் சேர்ந்தவர்கள் அவரவர் புள்ளியில் மறைந்துபோகும் வரை இருந்திருக்கிறார்கள். அமைப்பும் எல்லாக் கருவிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இசையை வெறும் முடிவுறா இசைக்குறிப்பாகவே விட்டுக்கலைந்துபோகிறது. பாதி சிகிச்சையில் எழுந்து சென்றுவிட்ட நோயாளியைப் போல் இன்னமும் சமூகம் அவதியில் இருப்பதற்கு இதெல்லாமும் காரணமாக இருக்கலாம்.

இங்கே தமிழகத்தில் ஆட்சி பீடத்திற்காகப் போட்டுக்கொண்டிருக்கும் சண்டையால் எதிராளிக்கு இடமளித்துவிட்டு நிலத்தைக் காட்டிக்கொடுத்து ஏமாந்து கிடப்பதும் அப்படியானவொரு அணுகுமுறையினால் இருக்கலாம். கல்வியில் தரம் கோர்ப்பதாக நுழைந்த அதே உத்தி இங்கே இப்போது தமிழகத்திற்குள் நுழைந்து விஷத்தைத் தடவிக்கொண்டிருக்கிறது. நீங்கள் கடந்துவிட்ட இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.

போராட்டக்காரர்களின் பிரதிநியாகப் பேசும் எழுத்தாளர் பெரிய பிரயத்தனமில்லாமல் லகுவாகத் தன்னை ஒரு நிதானமான நிலையில் தக்கவைத்துக் கொள்கிறார். ஒருவேளை அது அவரது இயல்பாகவும் இருந்திருக்கக் கூடும். இல்லையேல் பக்கத்துக்குப் பக்கம் வரிக்கு வரி மசாலாப் படங்களைப் போல வெட்டுக்குத்தும் இரத்தக்களரியும் இரணகளரியுமாகக் கவிச்சை அடித்திருக்கும். அது இல்லை.

கதையில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் அல்லது அதிகார அடுக்கில் ஏதாவதொரு நிலையில் உள்ள நபர் தனக்குக் கீழுள்ளவர்களை அச்சத்திலேயே வைத்திருப்பதற்காகக் கொண்டு செல்லப்படுபவர்கள், திடீரென ஒரு நாள் காணாமல் போவார்கள். தப்பித்துச் சென்றதாகப் பேச்சு அடிபடும், ஆனால் ஆட்கள் காணாமல் போவதெல்லாம் கொலைகளின் கணக்கில் பின்னர் உறுதிப்படுத்தப்படும்.

வலிகளும் வேதனைகளும் மிகவும் கனக்குறைவானச் சொற்களையும் காட்சிகளையும் கொண்டே கட்டமைத்து மிக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்த தயங்கவில்லை. உண்மையில் எளிமையான, எங்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்கள்தான். ஆனால் கோர்த்திற்கும் அமைப்பினால் மிகவும் கூர்மையானதாகத் தன் காரியத்தை ஆற்றிவிட்டுக் காத்திருக்கும், காட்சிகள் 30 அத்தியாயங்களிலும் இடம்பெற்றுள்ளன.

நாவலைத் தொடர்ந்து வரும் நாவலாசிரியரின் அக்கறையும் கரிசனமும் தன்னைதானே பளிச்சென வெளிச்சம்போட்டுக் காட்டிக்கொண்டிருக்காமல் உணர்த்தவேண்டியவற்றை உணர்த்தவல்ல சொற்களைச் சரியாகப் பிரயோகித்து உணர்த்திவிட்டுப்போவதெல்லாம் தேர்ந்த எழுத்தாளர்களின் நடையில் கண்டிருக்கிறேன். எப்போதும் பரபரப்பு, எப்போதும் இரகசியம், எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் சூழலாக இருந்தாலும் ஒருவித அமைதி பரவியிருக்கப் பார்த்துக்கொள்ளும் உத்தியும், கவித்துவமான வருணைகளுக்கும் உளவியல் விவரணங்களையும் சைலண்டாக மடித்துப்போட்டு வாசகனை “ஆ!”வென ஆச்சரியப்படுத்த தவறவில்லை. வேம்பிலிருந்தே ஆரம்பிக்கிறது இந்த பரிவு. அடிக்கடி வந்துபோகும் பூனையின் நெளிவுசுலுவகளோடு விளக்கப்படும் உளவியல் விவரணைகள், ஏறக்குறைய அனைத்துப் பக்கங்களிலும் அழகிய வரிகளில் பூத்து மனக்கும் இன்னபிறவும் ஒரு மாதிரியான ரசிப்பு மனநிலையில் கிடத்தித் தாலாட்டுகிறது.

குமிழி நினைவலைகளைப் பிரித்துப்போட்டு அனைவரையும் பிரிண்ட் பக்கங்களின் ஊடாக வாசிக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு வாழ்க்கையும் மிகமுக்கியமான பகுதிகளைத் தனக்குள்ளே உருட்டித்திரட்டி எப்போதெல்லாம் சாவகாசம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எடுத்துவைத்து அசைபோடுவதாக இருந்தாலும், கண்முன் பரவவிடும் எழுத்தின் நேர்த்தி. இது ரவி அவர்களது முதல் புத்தகம் என்றால் நம்புதற்கில்லை. யதார்த்த விவரணை போய்க்கொண்டே இருக்கச் சட்டென முத்தாய்ப்பாக ஒரு வரி முன்னுள்ள வரிகளை அனைத்தையும் அள்ளி முடித்து ஒரு மூட்டையாக்கி எடுத்துவைத்துவிட்டு அடுத்தப் பத்திக்குச் செல்லும் எழுத்தாளரின் எழுத்துள் வசீகரங்களும் ஹாஸ்யங்களும் நிறையே அடுக்கப்பட்டுள்ளதை வாசகர்கள் நிச்சயம் காணக்கூடும்.

நான் என்னிலிருந்து ஆரம்பிக்கும்போதுதான் எந்தளவிற்குக் குமிழியுள் நிறைந்துள்ள எழுத்தின் அருகாமையைச் சௌகரியமாக உணர்கிறேன் என்பது புரிகிறது. வெக காலத்திற்கு முன்பு எங்கேயோ எப்போதோ கேட்டுப்பழகிய சொற்களின் வாடையை மீண்டும் பெறுகிற சுவாரஷ்மே குமிழி எனக்கு. ஒருவேளை என் அப்பா வழி மூதாதையர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்து எங்கள் மரபணுவுக்குள் கடத்திவிட்டிருக்கலாம். இதெல்லாம் ஆசிரியரின் வாசிப்பு எத்தகையதாக இருந்திருக்கிறது என்பதை அடையாளங்காண உதவியிருக்கலாம்.

நாம் பெரும்பாலும் பேசுவதை வாழ்வதில்லை. வாழ்வதையும் பேசுவதில்லை. இந்த முரண் அதிகரித்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் நேரிடையாக வார்த்தைகளில் படிந்திருக்கும் அழுக்குகளைக் களைந்துவிட்டு மணக்க மணக்க விடிகின்ற பக்கங்களாகப் பொழுதுகளை வாசிக்கும் லயிப்பு சுகமே. B,C,H,L முகாம்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் நுழைந்து அடுத்தடுத்த முகாம்களுக்கு இடமாறும்போதெல்லாம் ஒன்றிலிருந்து இன்னொன்றின் சௌகரியங்களும், வலிவேதனைகளும் அங்கேயே கொட்டிக்குமிக்காமல் கூடவே சுமந்தலைந்து கொரோனா காலத்தில் இயல்பிற்கு மீறிய ஓய்வு தாக்கும்போது அந்த நேரத்தைத் தனதாக்கிக்கொண்டு குமிழி விருந்து படைத்திருப்பது சுவாரஸ்யம். அன்பும் வாழ்த்துக்களும் !


***

வாசிப்பு-9

 • டேவிட் கிருஸ்ணன் (பிரான்ஸ்)

நீண்ட காலத்துக்கு பின் நண்பன் குட்டியின் வேண்டுகோளுக்கு இணங்கி, குமிழி் என ஒரு புத்தகத்தை நேற்று வாசித்து முடித்தேன். எனது பார்வையில் புத்தகம் பற்றி சில வரிகள்…

சுய குறிப்பிலேயே ஆசிரியர் ரகு ஒரு கைதேர்ந்த எழுத்தாளர் என்பது புரிகிறது. இலகுவான மொழி, குழப்பம் இன்றி கதை நகர்வு, வார்த்தை நாகரீகம் என அனைத்திலும் ரகு கவனமாகவே பயணம் செய்கிறார். சில பக்கங்களில் கதை நிஐ கதையாக போவது புரிகிறது. தனது அறிமுகத்தை கைதி எண் போட்டு தான் யார் என்பதை பதிவு செய்கிறார். என்னையும் பல ஆண்டுக்கு பின் நினைவுகளை நினைக்க வைக்கிறது குமிழி. கதை கழகமாக மாறி ஒரு சிலரை முன் நிறுத்தியே சம்பவங்கள் தொடர்கிறது. சில கதாபாத்திரம் எனது மிக நெருங்கிய நட்புகள், அன்றும் இனறும்! கவனமாக எழுதி உள்ளது புரிகிறது. ரகுவுக்கு எனது வாழ்த்துக்கள்!

இது கதையாயின் அருமை.

சாட்சியமெனில் தேவையானது.

வரலாறாயின் விமர்சனமுண்டு !


***

வாசிப்பு-10

 • அம்பை (மும்பை)

ரவியின் குமிழியை இன்றுதான் படித்துமுடித்தேன். மனத்தை வெகுவாகப் பாதித்தது. இயக்கத்தின் முரண்கள், வன்முறை, அழித்தொழிப்பு இவற்றோடு அல்லாமல் இளம் வயதினரின் லட்சிய வெறியும் அதே சமயம் இயக்கத்தைக் குறித்த அவர்கள் ஐயங்கள், அந்த வயதுக்கு உரிய ஏக்கங்கள், முளைவிடும் காதல்கள், எதுவுமே இல்லாமல் வெறும் சவுக்குக் கொம்புகளுடன் அவர்கள் பெற்ற “ராணுவப்” பயிற்சி, அதன் கொடுமைகள் இவற்றுடன் அவர்கள் விட்டுச் செல்லும் அம்மாக்கள் மற்றும் அக்கா தங்கைகளின் சோகமும் அவர்கள் அழுகையும் மனத்தில் பெரிய கனத்தை ஏற்றி வைத்தது.

நக்ஸல் இயக்கம் பற்றிச் சொல்லும்போது அதை romanticize செய்து வரும் கதைகள்தான் அதிகமாகக் கூறப்படும். ஆனால் கொண்டப்பள்ளி கோடேஸ்வரம்மா (கொண்டப்பள்ளி சீதாராமய்யாவின் மனைவி) எழுதிய சுயவரலாறு இயக்கத்தினுள் இருந்த பல ஓட்டைகளையும் அழித்தொழிப்பையும் சுட்டிக்காட்டியது. பானி பாஸு என்ற எழுத்தாளர் எழுதிய The Enemy Within என்ற நாவலும் அந்தத் தீவிர இயக்கத்தின் தோல்விகளைச் சுட்டிக்காட்டியது.

ரவியின் புத்தகம் எழுதும்போது அவர் கண்ணீர் வடித்தாரா என்று தெரியவில்லை. கண்ணீர் உலர்ந்துபோயிருக்கலாம். ஆனால் நான் பல இடங்களில் கண்ணீரைத் துடைத்தவாறுதான் படித்தேன், மானசீகமாக ரவியின் தலையைத் தடவியபடி!


***

வாசிப்பு-11

 • சண் நரேந்திரன் (நோர்வே)

குமிழி இன்று தான் வாசித்து முடித்தேன் தந்து உதவிய தோழர் பத்மநாதனுக்கு நன்றி ! எழுத்தாளர் தோழர் ரவிக்கும் நன்றி !

ஈழத்து போர் இலக்கிய நாவல் பல வெளிவந்துள்ளன. இந்த வரிசையில் “குமிழி” இன்னொரு பரிமாண சாட்சிய குறிப்பாக, மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க பெரும் கனவுடன் பின்தளம் சென்ற போராளியின் மன உணர்வு கனவுகளுக்கும் அவர்கள் சார்ந்த புரட்சி அமைப்புக்கும் இடைப்பட்ட ரகசிய குறிப்பு என்றே பார்க்கலாம்.

இந்த கதை படகில் தொடக்கிய போராளியின் உணர்வு விமானத்தில் பறக்கிறது. இது மூன்று தளத்தில் பின்னணியை கொண்டு நகர்கிறது. ஒரு போராட்டம் எப்படி ஆரம்பிக்கின்றது, பின் நடைமுறையில் ஏற்படும் வன்முறைகள், அதில் இடம்பெற்ற பின்னணி சிதைவுகள் ,சிதறல்களை, கதையை சொல்கின்றது. “குமிழி” உண்மை கதையுடன், அறிவியல் சார்ந்த புனைவுகளை கொண்ட ஒரு நாவல் குறிப்பு. இது ஆவணகுறிப்பா ? அல்லது நாவல் என்று பயணிக்கலாமா ? கேள்விகள் எனக்கு உண்டு.

கதையின் நான்காவது அத்தியாயதில் இருந்து குமிழியின் உடைவு வெகு வேகமாக என்னை உள்ளிழுத்துக்கொண்டது. உணர்ச்சிபூர்வமான பிணைப்பை ஏட்படுத்தியது. ரகு ,ஜோன் பயணித்த தளத்தில் நானும் பயணித்த அனுபவத்துடன் பிணைத்திருப்பதாலோ என்னவோ, ஒரு வாசகரின் நெஞ்சத் திரையில், சிறந்த ஒரு அனுபவத்தை எழுத்தாளன் தன் உள்ளத்தில் உணர்ந்ததை, அழகான சொற்களில் கூர்மை, தெளிவு, அழகு, உணர்வு , காதல், வீடு, குடும்பம், அம்மா, அக்கா, தங்கை என பொருந்திய தைப்புகள் மூலம் படிப்பவரின் உள்ளத்திற்கு இடமாற்றம் செய்கின்றார். இது இவரது தனித்தன்மை.

இந்த நாவல் சார்ந்த விமர்சனத்தை நான் முன்வைக்கவில்லை இது ஒரு போராளியின் மனப்பாங்கு படிமக் குறிப்பு என்றே பார்க்கலாம். ஒரு சமூகத்தில் நாளும் நடக்கும் நிகழ்வுகள் வரலாறாகின்றன. எல்லா நிகழ்வுகளும் வரலாற்றைத் தீர்மானிப்பதில்லை. அவ்வாறு, வரலாற்றைத் தீர்மானிக்கும் நிகழ்வுகள் நடந்த நாட்கள் முக்கியமானவை.

“ஒரு கட்டமைப்பின் முரண்பாடுகளுக்கு சிதறல்கள்பதில்களா ?அல்லது இது தான் சுயநிர்ணய கோட்பாடா ?”


***

வாசிப்பு-12

 • கௌதம சித்தார்த்தன் (சென்னை)

அன்புள்ள ரவி, நீங்கள் அனுப்பிய நூல் கிடைத்தது. வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

மிக மிக புதியதான வர்ணிப்புகள், சொற்கள், படிமங்கள்… நிலா ஒளியில் வௌவால்கள், நிழல் கிழிசல்கள் போல் பறந்து திரிவதை நோட்டமிட முற்றத்தில் வாங்கின் மேல் நிமிர்ந்தபடி கிடக்கும் உங்கள் தொனியும், வானம், முகில், நிலா, வௌவால்கள் என எல்லாவற்றையும் விருட்சத்தோடு இணைத்து உலகை காணும் பார்வையையும், காற்றில் கலக்கும் இலையோசையை உலகத்தின் இயக்கமாக உணரும் எண்ணச் சிதறல்களும் எனக்குள் ஆர்வமாக வியாபிக்கின்றன.

// உயிர் மீது என்றுமில்லாத வேட்கை எங்கிருந்து கிளம்பியதோ தெரியவில்லை. எனது வீடு, முற்றத்து வேப்ப மரம், வாசிகசாலை, பள்ளிக்கூடம், பல்கலைக் கழகம், என எல்லாவற்றையும் சிலந்தியிடம் ஒப்படைத்து விட்டேன். தனது இழைகளை அது அன்று ஒரு தேர்ந்த நுட்பத்துடன் வடிவமைத்ததாகத் தெரியவில்லை. குழப்பியடித்துக் கொண்டிருந்தது. தூரம் அதிகரிக்க அதிகரிக்க அதற்குள் சிலந்தி சிறைப்பட்டுப் போயிருப்பது தெரிந்தது. //

அட்டகாசம்! விரைவில் விரிவாக எழுதுகிறேன்.


***

வாசிப்பு-13

 • சந்திரா நல்லையா

குமிழி என் கையில் !

குமிழி என்ற பெயரை எழுத்தாளர் இப் புத்தகத்திற்கு ஏன் தெரிவு செய்தார் ? விடுதலை என்ற கனவு களைந்ததிற்காகவா ? அல்லது விடுதலைக்கு போய் உயிர்கள் வதைமுகாம்களில் சிதைந்ததிற்காகவா? இரண்டிற்கும் என எடுத்துக் கொள்வோம்.

இந்த கதையானது கதை சொல்லி தான் விடுதலைவேண்டி செல்ல காரணமாய் இருந்த சுற்றுசூழல் நெருக்கடி, குடும்ப உறவுகளின் பொறுப்புகள், எல்லாவற்றையும் தாண்டி விடுதலையை வென்றுவிட்டால் நிமிர்ந்து வாழலாம் என்ற தவிப்பு. அந்த தவிப்பில் மூன்று மாத பயிற்சி என பின்தளத்திற்குசெல்வதும் அங்கு கண்ட அனுபவங்கள், கேட்ட தகவல்கள், சிக்கலுக்குள் சிக்காமல் முடிச்சை அவிழ்த்து ஊர் வந்து சேருவது, மீண்டும் மனவுறுத்தலில் செயற்படுவது, உயிருக்கு அச்சுறுத்தல் தொடர புலம் பெயர்தல் என்பதாகவே கதை முடிகிறது.

யுத்தகால இலக்கியங்கள் அரசியலையே பெருமளவில் பேசிச் செல்பவை. அந்தவகையில் குமிழியும் ஒருவரின் அனுபவத்தின் ஊடாக அரசியலை விபரித்துச்செல்கிறது. வெறும் இலக்கிய நாவல் என்றால் இலகுவில் கடந்து சென்று விடலாம். ஆனால் இங்கு முக்கியத்துவம் கொடுப்பது அரசியல் என்ற வகையில் என்னிடம் சில கேள்விகள் தேங்கி நிற்கின்றன.

* ஏன் இவ்வாறு தான்தோன்றித்தனமும், அதிகார துஷ்பிரயோகமும் தொடங்கியது?

* இயக்கத்தினுள் காணாமல் போனவர்களின் தகவல்கள் சரியாக தெரியவில்லை?

* மொத்தத்தில் நாம் ஏன் தோற்றுப்போனோம்?

என முழுமையாக பரிசீலிப்பதே சரியான அணுகுமுறையாகும் என்பது எனது கருத்து.

சரி, மீண்டும் குமிழியிடம். இந்த நாவல் சமநிலையில் செல்லுகையில் ஒரு சில இடங்களில் மேலெழுந்த தன்மையை காணமுடிந்தது. சில தகவல்கள் தொடர்ச்சி அற்று காணக்கூடியதாக இருந்தது.

அமைப்புக்குள் ஒரு அதிகார படிநிலை வளர்கிறது. இந்த படிநிலையில் சமத்துவம், ஜனநாயக பண்புகள் காணப்படவில்லை. உள்முரண்பாடுகள் முற்றும்நிலை வரும்போது மேலே நின்றவர்களால் ஒதுங்கவும் ஒழிக்கவும் முடிகிறது. ஆனால் கீழே நின்றவர்கள் பழிகடாய் ஆனார்கள். இன்றும் கூட சில இயக்க தோழர்கள் மனநிலை பாதிப்படைந்தும், உணவிற்கு வழியின்றி திரிவதும் பேசப்பட்டே வருகிறது.

குமிழியில் இயக்கப் பெயர்களை பாவிப்பதை தவிர்த்திருக்கலாம். சம்பவம், நபர் என்று வரும்போது பாதிப்புக்கள் வர இடமுண்டு.மொத்தத்தில் சுவாரசியமான நாவல். எனக்கு பிடித்தது என சொல்வதை விட வலித்தது என்பதே பொருத்தமாக இருக்கும். உள்முரண்பாட்டில் இயக்கம் தந்த வலி என்றுமே தீராது என்பதே உண்மை.


***

வாசிப்பு-14

 • தேவா (யேர்மனி)

குமிழி நாவல் வாசித்தபின்..!

குமிழி நாவலாசிரியர் ரவி தன்னுடைய இளவயது அலைக்கழிவை (அவருடைய மொழியில்) நாவலாக்கியிருக்கிறார். அவரின் “இளவயது அலைக்கலைவை” உரிமைக்காக போராட துணிந்து,அது போராட்ட தலைமைகளின் தகுதியற்ற போக்கினால் உடைந்து,நைந்து நுாலாகி-கனவாகி-திரும்ப பெறமுடியாதுபோன பல இளமை உயிர்களை வீணாகப் பறிகொடுத்த போர்க்கால பதிவு இலக்கியம் ஆகும். நடந்தவைகளை எழுதிவைத்திருந்தும்அது எரிந்துபோன துயரம் ஆற்றமுடியாதது.

ஆகவே ஆங்காங்கே நினைவுகளில் தொக்கி, உறைந்து போயிருக்கும்  சம்பவங்களை உருட்டி சீர்படுத்தியிருப்பதாக நாவலாசிரியர் கூறுகிறார். வாழ்வின் சிறந்த பகுதியான இளமைப்பருவத்தில் நேர்ந்த உடல், உள ரீதியான பாதிப்புக்கள் வாழ்நாள்பூராக தொடர்வன. அவற்றை அனுபவித்தோருக்கே அந்த வேதனைகளை வெளிப்படுத்த முடியும்.

நிசவாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்கள் நினைவை விட்டு அகலாது மனதில் ஆணி அறைந்திருத்தல் போன்று நிலைத்திருக்கும். அந்த கருகிப்போன காலத்தை நாவலாசிரியர் குமிழியில் மீட்டிருக்கிறார்.  

“உடலை வன்முறைக்குள்ளாக்குவது மூலம், மூளையுள் மாற்றத்தை கொண்டுவரமுடியும்” என்ற வழிமுறை போர், புரட்சி காலங்களில் கடைப்பிடிக்கப்படுவன-பட்டன. போரற்ற போதும் கடைப்பிடிக்கப் படுகின்றன

களத்துள் தானாகவே இறங்கி, அங்கு நடந்த இம்சைகளால், மனமுடைந்து, சிதைந்து, பின்னர் தானாகவே அங்கிருந்து தப்பியோடுதல் நிகழ்கிறது. வன்முறையின் கோரத்தை நாவலை வாசிக்கிறபோது அதிர்ச்சியும், வேதனயும் நம்மை அலைக்கழிக்கிறது. பயிற்சிமுகாம் தந்த வன்கொடுமைகளை  குமிழி நிர்வாணமாக முன்வைத்திருக்கிறது. தன் சொந்த உறுப்பினர்களையே அடித்து, உடைத்து, நொறுக்கிய இயக்கம், மாற்றுக் கருத்துள்ளவனை எப்படியெல்லாம் ஓடஓட விரட்டியிருக்கும்? கொலை பண்ணியிருக்கும்?  நாவலை வாசிக்கும்போது, இது மனசுள் கேள்வியாக முளைக்கிறது.

 “சோசலிசத்தை படம்,, காட்டிக்கொண்டு ஒரு அமைப்பை வளர்த்தெடுக்க முடியாது” என்பதை உரத்து சொல்கிறது நாவல். தோற்றுப்போன அல்லது, இயக்கத்தின் வரலாறை இந் நூல் வெளிச்சமாக்கியிருக்கிறது.

சோசலிச புரட்சி தவறானது என்பதல்ல வாதம். அதை நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கல் ரொம்பவும் சிக்குப் பிடித்தது. அதனை வரலாறும், இன்று வாழ்கிற அதிகார ஆட்சிகளும்  மெய்ப்பிக்கின்றன.

//தாக்குதல் நுட்பங்களை விட, மிக கடுமையான பயிற்சியை அளிப்பது மட்டுமே பயிற்சியாளர்களுக்கு தெரிந்திருந்தது//

//சவுக்கம் காட்டிலிருந்து எழுந்த அலறல் நரம்புகளை கைப்பிடியாய் உலுக்கின. மரணஒலி கதைகளில் படித்திருந்தாலும், மனிதர்களின் வலி ஒலி இவ்வளவு குரூரமாயும்ஒலிக்கமுடியும்என்பதை அங்குதான் அறிந்தேன்//

//நாட்டுக்காக எல்லாத்தையும் விட்டிட்டு வந்திருக்கிறியள். பெருமையான விடயம். கொஞ்ச நாளைக்கு பொறுத்துக் கொள்ளத்தான் வேணும். விடுதலைக்கு போராடுறதெண்டால், நாம் சிலதுகளை இழந்துதான் ஆகணும். உறுதியாய் இருங்கள்//

உணர்ச்சிமயமான வசனங்கள் தலைமைத்துவங்களை காப்பாற்றத்தான் பயன்பட்டது. அறத்தை நேசித்த இளைஞருக்கோ தாம் தேடிய குறிக்கோளின் ஒரு சிறு துளியைக்கூட அடையமுடியாது போனது.

நெஞ்சை வலிக்கச் செய்யும் வன்முறைச்சம்பவங்களுக்கு சாட்சிகளாக ரகு, யோகன், ஜோன், பரமானந்தன, லியோ, ஈசன், அன்ரனி, காந்தன், இனியா, இதரா… என நீண்டுகொண்டே போகின்றனர். இவர்களின் “தமிமீழம்” அவர்களின் போர்ப் பயிற்சி காலத்திலேயே “குமிழி” யாய் தோன்றியிருந்தது. இது நாவலின் தலைப்பாக தேர்ந்தெடுத்திருப்பது சிறப்பாய் எனக்கு தெரிந்தது.

நாவலின் முகப்புப் படம் ஒருகலைப் படைப்பு. ரவியின் புதல்விகளின் கற்பனை சித்திரம். ஒரு நிழல்போல நாவலாசிரியர். தூரத்தே தெரியும் மலைக்குன்றின் தோற்றங்களுக்கு ஒப்பான கனமான நினைவுகள். அவைகள் தொலைவில். ஆனால் ஆழமாக மனதில் உறைந்திருக்கும் வேதனைப் புண்கள். கருமுகில் நிறத்தில். நிறைவேறாமல் போன விடுதலை என்கிற நுண்ணிய மொழி பேசப்பட்டிருக்கிறது.

கவிஞரின் கவிதை மொழி நாவல்பூரா பேசுகிறது.  கவிஞர் இயற்கை அழகில் துய்க்கிறார். கிண்டலும், கேலியுமாய் நாவல் தொடர்கிறது. யாழ்ப்பாண மொழியுடன் கலந்த நகைச்சுவை. எல்லாவற்றையும் இழந்த கையறு நிலையிலும் எள்ளல் தெறிக்கிறது. இயக்கத்துக்காகவே  தம்மை அர்ப்பணித்த பல இளஞர்களின்-இளைஞிகளின் வரலாறே குமிழி.

ஆடு மேய்ப்பாளராக இருந்த ஒரு கிழவி இயக்கபோராளிகளுக்கு கடுமையான வெயிலில் பயிற்சியாளர் தரும் கொடுமையான பயிற்சியை கவனித்தாள்.

“நாசமாய் போவானை.இந்தப் புள்ளைங்கள இப்புடி வதைக்கிறியே” என்றபடி மண்ணை வாரிக் கொட்டி பயிற்சியாளரை திட்டினாள்.

யாரோ ஒரு பிள்ளைக்காக, யாரோ ஒரு தாயின் பாசம் ஓங்கி ஒலிக்கிறது .தாய்ப் பாசத்துக்கு முன்னால் கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள் உடைந்து சிதறுண்டு போகின்றன. தாய் அன்பு இயக்கத்துக்காக சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போன பிள்ளைகள் வெறும் கையோடு திரும்பி வந்தபோதும் மன்னித்து அணைத்து காப்பாற்றியது. 

அந்த அன்னையர்தான் இன்றுவரையிலும் காணாமல் ஆக்கப்பட்ட, கொலை செய்யப்பட்ட தன் பிள்ளைகளுக்காக ஓயாத போராட்டம் செய்து கொண்டிருக்கின்றனர். 

பெண்விடுதலை, சாதியம் என பல தளங்களிலிருந்தும் பேசும் குமிழி ஒரு இயக்ககால, விடுதலைப்போராட்ட வரலாறை வெளிக்கு கொண்டு வந்து, அந்த அரசியலை விமர்சிக்கிறது.  விவாதிக்கப்பட வேண்டிய பல விடயங்களை முன்மொழிந்திருக்கிறது.


***

வாசிப்பு-15

 • கருணாகரன் (இலங்கை)

குமிழியை முன்வைத்து உரையாடலுக்கான சில முற்குறிப்புகள்

கடக்க முடியாத முள்வழியாக நம்முடைய துயர்க்காலம் (கொடுங்காலம்) நீண்டு கிடக்கிறது என்பதை மேலும் நிரூபித்திருக்கிறது, ரவி (சுவிஸ்) எழுதியிருக்கும் “குமிழி”யும். “குமிழி” விடுதலை இயக்கமொன்றின் உட்சிதைவைச் சொல்லும் பிரதி. தொடர்ந்து வருகின்ற இந்த மாதிரிப் பிரதிகள் ஒரு வகையில் மன அமைதியை இழக்கச் செய்கின்றன. அந்தளவுக்கு இருளும் துயரும் அவமானங்களும் கொடுமைகளும் அநாகரீகங்களும் கசடும் கசப்புகளும் அலங்கோலங்களும் கீழ்மைகளும் நிறைந்தது நம்முடைய கடந்த காலம். இதன்போது சிந்தப்பட்ட குருதியும் பெருகிய கண்ணீரும் இன்னும் நம்முடைய நினைவுப் பரப்பிலிருந்து காயவில்லை. அப்போது எழுந்த ஓலக்குரல்களின் ஒலி இன்னும் அடங்கவில்லை. அன்று சிதைந்த மனங்கள் இன்னும் சீராகியதில்லை. பலியிடப்பட்ட போராளிகள் இன்னும் திரும்பத்திரும்ப மனதில் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.

மாபெரும் கனவுகளோடு தொடங்கப்பட்ட விடுதலைப்போராட்டம் நம் கண்முன்னே சிதைந்தது. சிதைந்தது என்று இதைச் சொல்வதை விடச் சிதைக்கப்பட்டது என்று சொல்வதே சரியானதாக இருக்கும். இந்தச் சிதைவு புறவழியில் – வெளியாரினால் நடந்தது என்பதையும் விட அகவழியில் நடந்தது என்பதே உண்மை. பிற சக்திகளும் அதைச் சிதைப்பதில் பங்காற்றியிருக்கின்றன என்றாலும் அதையும் விட நம்முள்ளிருந்த அகச் சிக்கல்களும் அரசியல் போதாமைகளும் அதிகார வெறியுமே அதைச் சிதைத்தன. அல்லது இந்தச் சிதைவிற்குப் பெரும் பங்காற்றின.

இதனால் “கனவு” இயக்கங்கள் மட்டுமல்ல, இந்தப் போராட்டத்தில் அர்ப்பணிப்புணர்வோடு இணைந்து கொண்ட இளைய தலைமுறையினரும் காயடிக்கப்பட்டுச் சீரழிக்கப்பட்ட, சிதைந்த வரலாறு அது. இதை எளிதில் கடந்து செல்ல முடியாது. இதன் ஒரு பகுதியையே ரவி எழுதியிருக்கிறார், எழுதிக் கடக்க முற்பட்டிருக்கிறார். அல்லது தன்னுள் தீராத வலியை உண்டாக்கிக் கொண்டிருந்த சுமையை இறக்கி வைக்க முற்பட்டிருக்கிறார்.

அதேவேளை இதை வாசிக்கும் நாமோ இந்தச் சுமையை ஏற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் நமக்குள் அமைதியின்மை ஏற்படுகிறது. இந்தக் கசப்பிலிருந்து, இந்த துயர் நினைவுகளிலிருந்து விலகிச் செல்லத்துடிக்கின்ற நம்மை மீள இழுத்து இது அலைக்கழிக்கிறது. ஆனாலும் இதை நாம் ஏற்றுத்தானாக வேண்டும். அதுதான் வரலாற்று நிபந்தனை. எப்படி இந்தப் பிரதியும் இதன் ஆசிரியரும் தம்மைச் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்குகின்றமை முக்கியமாக உள்ளதோ அந்தளவுக்கு நாமும் நம்மை விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

இந்தப் பிரதியை ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டோர், அதனோடு சம்மந்தப்பட்டோர் வாசிப்பதற்கும் இதற்கு வெளியே இருந்தோரும் இருப்போரும் வாசிப்பதற்குமிடையில் வேறுபாடுகள் இருக்கும் என்று நம்புகிறேன். உள்ளே இருந்தோருடைய உளநிலையே நான் முன்னர் குறிப்பிட்டிருப்பது. வெளியே இருந்தோரும் இருப்போரும் இதை வாசிப்புச் சுவாரசியம், அறிதலார்வத்தோடு வாசித்து இன்புறக்கூடும். குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு அவசியமான ஒன்றும் கூட. விடுதலைப் போராட்டத்துக்கும் இயக்கங்களுக்கும் அதில் இணைந்திருந்த போராளிகளுக்கும் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சிறந்த வாசல். எனவே இந்தப் பிரதிக்கு முக்கியமாக இரண்டு வகையான அணுகல்கள், அனுபவங்கள் நிகழலாம். இதை மனதிற் கொண்டே “குமிழி”யின் மீதான பார்வையை நாம் முன்வைக்க வேண்டும். அதுவே நியாயமானது.

“குமிழி” புளொட் (PLOT) என்றழைக்கப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மீதான விமர்சனத்தை முன்னிறுத்துகிறது. புளொட் மீதான இந்த விமர்சனம் கோவிந்தனின் ”புதியதோர் உலக”த்திலிருந்து தொடர்கிறது. புதியதோர் உலகம் வெளியானது 1985 இல். அப்படியென்றால் முப்பத்தைந்து ஆண்டுகளாக இந்த விமர்சனம் தொடர்கிறது எனலாம். இது மேலும் தொடரும். அந்த நினைவுகளின் உத்தரிப்பு உள்ளவரை இதற்கு முடிவேயில்லை.

கோவிந்தனும் ரவியும் புளொட்டின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்ற வகையில் அந்த அமைப்பின் உள்முரண்பாடுகளின் நேரடிச் சாட்சியங்களாக உள்ளனர். கோவிந்தனையும் (நோபேட்) ரவியையும் விட சீலன் உட்பட வேறு சிலரும் புளொட்டின் உட்சிதைவுகளைப் பற்றி எழுதியிருக்கின்றனர். இன்னும் எழுதியும் வருகின்றனர். எனவே ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கத்திற்குள்ளிருந்த உட்(கட்சி) முரண்பாடுகளையும் சுயவிமர்சனத்தையும் முன்வைத்த பிரதிகள் வாயிலான பாரம்பரியத்தின் தொடக்கம் புளொட்டுக்குள்ளிருந்தே – புளொட்டிலிருந்தவர்களிடமிருந்தே – நிகழ்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அந்தளவுக்கு வேறு இயக்கத்தினரிடமிருந்து இத்தகைய (சுய) விமர்சனங்களும் நேர்மையான சாட்சியங்களும் வரவில்லை.

புலிகள் இயக்கத்திலிருந்தவர்களில் ஷோபாசக்தி, யோ. கர்ணன், தமிழ்க்கவி போன்றவர்கள் புலிகளையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் ஓரளவுக்கு புனைவின் மூலம் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். குறைந்த அளவில் தமிழினி பிந்திய புலிகள் அமைப்பையும் அதனுடைய நடவடிக்கைகளையும் “கூர்வாளின் நிழலில்” வெளிப்படுத்தியுள்ளார். புலிகளின் தொடக்ககாலத்தை கணேசன் ஐயரின் “ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்” விமர்சிக்க முற்படுகிறது. சி.புஸ்பராஜா (ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்), நடேசன் (எக்ஸைல்) போன்றவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் இனூடாகத் தங்களுடைய அனுபவங்களைச் சாட்சியமாக்கி யிருக்கிறார்கள்.

ஆனால், புளொட்டில் இருந்தோர் முன்வைத்த அளவுக்கு ஏனைய இயக்கத்தினர் தங்களைச் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கவில்லை. ரெலோவினுள்ளே பொபி – தாஸ் பிரச்சினை (மோதல்) வந்த காலத்தில் மேலோட்டமான முறையில் சில விமர்சனங்கள் எழுந்திருந்தது. ஈரோஸில் எஸ்.ஏ. உதயனின் “UP 83” ஒரு பகுதிச் சூழலை விவரிக்கிறது. மற்றும்படி அமைப்புக்குள் சுயவிமர்சனத்தை வலியுறுத்திய இந்த இயக்கங்கள் இன்னும் அந்தக் கதவுகளைச் சாத்தி விட்டுக் கள்ள மௌனத்தோடுதான் இருக்கின்றன. இந்த இயக்கத்திலிருந்து வெளியேறிச் சென்றோரும் கூட எதைப் பற்றியும் வாய்திறப்பதில்லை. எல்லோரும் மௌனசாட்சிகளாகி விட்டனர்.

இதில் ஒரு சாரார் இனி எதைப் பேசித்தான் என்ற விடுபடல் மனோநிலைக்குச் சென்று விட்டனர். இன்னொரு சாரார், சாதி அபிமானம், மதப்பற்றுப்போல சரியோ தவறோ தாங்கள் இருந்த இயக்கம், தங்களுடைய இயக்கம் (என்ன இருந்தாலும் அது எங்களுடைய சாதி, எங்களுடைய மதம்) என்ற மனநிலையில் எல்லாவற்றையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய இயக்க விசுவாசத்தை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இதன்மூலம் தங்களையும் தங்களுடைய அமைப்பையும் புனித நிலையில் வைத்திருக்க முற்படுகின்றனர். 

ஆனால் எல்லா இயக்கங்களிலும் அதிகாரப்போட்டியும் ஜனநாயகப் போதாமைகளும் அணிகளின் உருவாக்கமும் பிளவுகளும் பகைமனநிலையும் இருந்தது. நம்பிக்கையோடும் கனவோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் போராடச் சென்றவர்களை வஞ்சகமில்லாமல் அத்தனை இயக்கங்களும் சிதைத்திருக்கின்றன. கூடிக் குறைந்திருக்கலாமே தவிர, எல்லா இயக்கங்களும் சனங்களிலும் கைவைத்தே உள்ளன. ஆகவே அத்தனை இயக்கங்களிலும் பொறுப்புக் கூறலுக்கான இடமுண்டு. கற்றுக்கொண்ட பாடங்களுக்குரிய அவசியமிருக்கிறது. இதிலிருந்து விலக முடியாத வரலாற்று நிபந்தனை உண்டு. இந்தப் பொறுப்பை இவர்கள் எப்போது ஏற்றுக் கொள்ளப்போகிறார்கள்? எப்பொழுது இதற்கான கதவுகள் திறக்கப்படும்?  

புளொட்டின் உட்சிதைவுகளை புதியதோர் உலகமும் தீப்பொறிகளும் வெளிப்படுத்தத் தொடங்கிய துணிச்சலான, நேர்மையான அந்த மரபின் தொடர்ச்சியில் குமிழி வந்திருக்கும்போது இந்தக் கேள்விகள் தவிர்க்க முடியாமல் எழுகின்றன. அப்படியென்றால், இயக்க அரசியலில் ஜனநாயகத்துக்கான போராட்டமும் அறைகூவலும் இவர்களால்தான் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். இதில் கோவிந்தன் தன்னுடைய பிரதியை முன்வைத்த காலம் மிகச் சவாலானது. அப்பொழுது புளொட் மிக வலுவான நிலையிலிருந்தது. அதை இந்தக் குமிழியும் சொல்கிறது. அன்றைய அந்தச் சூழலில் தன்னுடைய உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டநிலையிலேயே புதியதோர் உலகத்தை கோவிந்தன் (நோபேட்) எழுதினார். அது எல்லாப் பக்கத்தாலும் அபாயக் கத்திகள் சூழ்ந்திருந்த காலம். பின்னர் நோபேட் புலிகளால் கொல்லப்பட்டும் விட்டார்.

ரவிக்கு அந்தப் பிரச்சினை இல்லை. அல்லது குறைவு. ரவியின் வாழ்காலமும் களமும் கூட வேறு. புளொட்டும் புலிகளும் இப்பொழுது பல்லில்லாத பாம்புகளாகி விட்டன என்றாகி விட்டது. குமிழியின் கதை, வரலாற்றின் போக்கினை மாற்ற முற்பட்டோர், அது இருந்ததையும் விடக் கீழிறக்கியதை, கீழிறக்கப்பட்ட விதத்தைச் சொல்கிறது. மாற்றத்துக்கான புரட்சியைச் செய்ய முற்பட்ட அமைப்பின் சிதைவையும் அந்த அமைப்பில் இணைந்திருந்த போராளிகளின் சிதைவையும் சாட்சியமாக விரிக்கிறது. ஒவ்வொரு போராளியையும் அது தனிமனிதர்களாகவும் அமைப்பாகவும் அமைப்பைச் சேர்ந்தோராகவும் சமூகப் பிரதிநிதிகளாகவும் நோக்குகிறது.

அமைப்புக்குள் (கழகத்துக்குள்) முக்கியமாக மூன்று விதமான போக்குடையோர் உள்ளனர். ஒரு தரப்பிரனர் இயக்கத்தின் அதிகாரத்தை வலுவாக்கம் செய்வோர். தலைமைக்கு விசுவாசம் என்ற பேரில் போராளிகளையே ஒடுக்குவோர். மாற்று அபிப்பிராயிகளைக் கொன்றொழிப்போர். மற்றத் தரப்பினர் இதற்கு எதிரானவர்கள். அவர்கள் இயக்கத்துக்குள் ஜனநாயகத்துக்காகப் போராடுவோர். குறிப்பாக சந்ததியார் போன்றோர். மூன்றாவது தரப்பினர் அமைப்புக்குள்  என்ன நடக்கிறது என்று தெரியாத குழப்பத்திலிருப்போர். அச்சமும் கேள்விகளும் இவர்களைச் சூழ்ந்திருக்கிறது.

புதியதோர் உலகம் பிரதானமாக மையப்படுத்தியது இரண்டாவது தரப்பினரான ஜனநாயகவாதிகளின் அடையாளத்தை, அவர்களுடைய போராட்டத்தை. அதன் மூலமாக தலைமையின் அதிகார வெறியையும் துரோகத்தையும் மூடத்தனத்தையும்! குமிழி அடையாளப்படுத்த முற்படுத்துவது மூன்றாவது தரப்பினரை. அவர்களின் வழியாக தலைமையின் குற்றங்களை. இங்கே புதியதோர் உலகத்தையும் குமிழியையும் நாம் ஒப்பிட்டுப் பேசவரவில்லை.

ஆனால், குமிழியை வாசிக்கும்போதும் அதைப் பற்றிச் சிந்திக்கும்போதும் இந்த உரையாடலை, இந்த நினைவுகொள்ளலைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் இந்த இரண்டு பிரதிகளிலும் வருகின்ற மனிதர்கள் (பாத்திரங்கள்) களம், அமைப்பு, காலம், நிகழ்வுகளில் பலவும் என ஏராளமான விசயங்கள் ஒன்றாக இருப்பதால் இயல்பாக இரண்டு பிரதிகளையும் அருகருகாக வைத்துப் பார்க்கும் சூழல் உருவாகிறது. புதியதோர் உலகத்தில் பல பாத்திரங்கள் புனைபெயரில் உள்ளனர். உதாரணமாகச் சந்ததியார் அதில் கலாதரனாக வருகிறார். குமிழியில் சந்ததியாராகவே வருகிறார். புதியதோர் உலகத்தில் செயலதிபர் அல்லது பெரியய்யாவாகச் சித்திரிக்கப்படும் உமாமகேஸ்வரன் இங்கே உமாமகேஸ்வரனாகவே குறிப்பிடப்படுகிறார். இப்படிப் பல பாத்திரங்கள் குமிழியில் மெய் அடையாளத்தோடு நேரடியாக வருகின்றன.

ஆனால், இரண்டுக்குமிடையில் வேறுபட்டிருப்பது காலமுதிர்வு. ரவி ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 60 களை நெருங்கிய வயதில் இந்தப் பிரதியை நம்முன் வைக்கிறார். இது ஏற்கனவே எழுதப்பட்டிருக்கவும் கூடும். இருந்தாலும் ரவியின் 50 களுக்குப் பிறகே இது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது. இந்தக் கால இடைவெளியில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள், சிந்தனைகள் குமிழியில் வலுவாகத் தெரிகின்றன. வயதின் முதிர்வும் இதில் சேர்த்தி என்பதால்தான் குமிழி செழிப்பாக வந்திருக்கிறது.

குமிழி ஒரு நாவலா? நல்லதொரு இலக்கியப்பிரதியா? அல்லது போராட்ட வரலாற்றுப் பதிவா? அல்லது ரவி என்ற முன்னாள் இயக்க உறுப்பினர் (போராளி) ஒருவருடைய சாட்சியமா? அல்லது இந்தக் காலம் கோருகின்ற கற்றுக் கொண்ட பாடங்களுக்கான முன்மாதிரி ஆவணமா? அல்லது இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒன்றா? இவற்றுக்கு அப்பாலான மெய்யுள் வடிவமா? இதைக்குறித்த கேள்விகளும் தூண்டல்களும் நமக்குள் உண்டாக்கப்போகின்ற விவாதங்கள் எவையாக இருக்கப்போகிறது?

(தொடரும்)


***

வாசிப்பு-16

 • அசுரா நாதன் (பாரிஸ்)

ஆயுதப் போராட்ட அனுபவங்களை சுமந்து வரும் இலக்கியப் பிரதிகளின் தொடர்ச்சியாக ‘குமிழி’ எனும் நாவல் வெளிவந்திருக்கிறது. 1985ம் ஆண்டில் வெளிவந்த கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ எனும் நாவலின் உரையாடல்  பகுதியாகவும், தனித்துவமாகவும் ரவியின் ‘குமிழி’ நாவலின் சித்தரிப்பு அமைந்திருக்கிறது.

கோவிந்தனும், ரவியும்

இருப்பினும் ‘புளட்’ இயக்க தோழர்களான இரண்டு படைப்பாளிகளின் காலமும், தேர்வும் வெவ்வேறானவை. கோவிந்தன் இலட்சிய வேட்கையுடன் புரட்சிகரமான  ஒரு ‘மாளிகையை’ கட்டியெழுப்பியவர். தாம் மேற்கொள்ளும் விடுதலைப் போராட்டமே சர்வதேசப் புரட்சிக்கும் சாதகமாக         அமையப்போகிறது, அதற்காகக் கட்டப்பட்ட ‘மாளிகையே’ புளட் எனும் அமைப்பாக நினைத்திருந்தார். நம்பியிருந்தார்.  அந்த மாளிகையின் சுவர்களும், தூண்களும் இடிந்து நொருங்கிப்போன பின்பும் புதிதான ஒரு மாளிகையை அதே இலட்சிய நோக்குடன் மீளவும் புதுப்பிக்கும்  நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. எனவேதான் ‘புதியதோர் உலகம்’ நாவல் எதிர்கால நம்பிக்கையுடன் இவ்வாறு நிறைவடைந்தது:

“அடக்கு முறைக்கும் ஒடுக்கு முறைக்கும் அப்பாற்பட்ட புதியதோர் உலகம் படைக்கும் வரை எமது போராட்டம் ஓயாது!

“அவர்கள் தீர்க்கமான முடிவுடன் படகில் ஏறி அமர்ந்தார்கள். அந்தப் பயணம் ஒரு கடலைத் தாண்டுவதாக மட்டும் அவர்கள் கருதவில்லை. ஒரு யுகத்தைத் தாண்டுவதான பிரமிப்பில் பூரித்து மகிழ்ந்தார்கள்” என நம்பியதே ‘புதியதோர் உலகம்’.

‘குமிழி’ நாவலின் படைப்பூக்கச் சூழல் அதிலிருந்து மாறுபட்டது. 1985ல் புளட் இயக்கத்திலிருந்து தப்பித்து நாட்டை விட்டு வெளியேறி, புகலிடம் வழங்கிய கால இடைவெளிகளின் அனுபவங்களோடு, கடந்த காலத்தின் மீள் உருவாக்கத்திற்கான நெருக்கடிகளும், அதன் படைப்பிற்குள் நிகழ்ந்திருக்கிறது. 

பல ‘வர்ணங்களுடன்-மினுமினுப்பாக’ திகழ்ந்த ‘குமிழி’ (புளட்) உடைந்து போனதன் நிமித்தமாகவே  அதன் படைப்புலகம்  இவ்வாறு நிறைவடைகிறது:

“மனிதர்கள் எறும்புகள் போலாகி பின் மறைந்து போயினர். ஊர்கள் மறைந்து போயின. நாடுகளின் எல்லைகள் அழிந்து போயின. காடுகளின் பசுமையிலும், கடலின் நீலமையிலும் பூமி அழகாகத் தெரிந்தது. அண்ணார்ந்து பார்த்த நிலைபோய், கவிஞர்கள் கற்பனையில் கவியெறியும் முகில்திரள்களுக்கு மேலாக பறந்து கொண்டிருந்தோம். புகைப்பாலைவனத்தில் குன்றுகளாய் திரட்சியுற்றிருந்தன, இளஞ் சாம்பல்நிற முகில் கூட்டங்கள்! அவைகளின் பின்னாலும் தேடிப் பார்க்கிறேன். ஏந்திய கனவுகளைக் காணவில்லை. மாலியையும் காணவில்லை. காற்றின் இரகசிய மூச்சொலியில் கலைந்துவிடக்கூடிய மென்மைகொள் முகில்திரள்மேல் ஓர் இறகாய்க் கிடக்க ஏங்கினேன்” என ‘குமிழி’யை பார்த்துத் தொலைத்த கனவுகளின் ஏக்கமாக நாவலின் முடிவு அமைந்திருக்கிறது.  கோவிந்தனைப்போன்று மீளவும் ‘மாளிகை’ கட்டுவதற்கான நம்பிக்கையும் இப்படைப்பாளிக்கு  இருந்ததில்லை.

கதைசொல்லியின் இறுதியான விபரிப்புக் காலமானது 1985ன் பிற்பகுதியாக புரிந்துகொள்ள முடியும். அக்காலகட்டத்தில் புகலிடத்தில் இருந்தவர்கள்  தளத்திலுள்ள இயக்கங்களின் அங்கத்தவர்களாகவும், ஆதரவாளர்களாகவும், ஆயுதப்போராட்டத்தில் தொடர்ந்தும் கோவிந்தனைப் போன்று நம்பிக்கையுடையவர்களாகவே இருந்தவர்கள். புகலிடத்தில் விடுதலைப் புலிகள் தவிர்ந்த பிற இயக்கத்தவர்களின்  ஆயுதப்போராட்டத்திற்கான ஆதரவு நிலை என்பது பெரும்பாலும் 1990ம் ஆண்டுவரை செல்வாக்குப் பெற்றிருந்தது. கால இடைவெளியின் மீள் உருவாக்கமே ‘குமிழி’ நாவலின் முடிவுச் சித்தரிப்பாக அமைந்திருக்கிறது. ‘குமிழி’ நாவலின் இறுதிப்பகுதியானது 1985 இன் பிற்பகுதியாக நாம் புரிந்துகொண்டாலும், நாவலில் காணும் அனுபவப் பகிர்வுகள் என்பது ஆயுதப்போராட்டம் மீதான படைப்பாளியின் 2020 ம் ஆண்டு வரையிலான அனுபவங்களோடு, 1984-1985 ம் ஆண்டுகளின் கால நினைவுகளை மீட்கிறது. 1985ம் ஆண்டிற்கு பின்பாக நடந்த பல சம்பவங்கள் ஆயுதப்போராட்டத்தின் மீதான விமர்சனங்களாக, பாத்திரங்களுக்கிடையிலான உரையாடலாக முன்வைக்கப்படுகிறது.

எனவே புதியதோர் உலகம் நாவலின் உள்ளடக்க ஒற்றுமைகள், பாத்திர ஒற்றுமைகள் (புதியதோர் உலகம்-சங்கர், குமிழி-பாலன்) என பல இருப்பினும், அதன் முடிவில் காணும் கருத்தியல் சித்தரிப்பை வாசகர்கள் அவதானிக்கும் தருணத்தில், ‘புதியதோர் உலகம்’ முன்வைப்பது போன்ற  ஒரு ஆவணச் சான்றாக ‘குமிழி’ நாவலை கருதிவிட முடியாது.

2020ல் எழுதப்பட்ட ‘குமிழி’ நாவலில் துலங்கும் ‘இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவென்பதும்’ அதன் உள்ளடக்க உரையாடலின் கருத்துக்களமும் இலக்கியப் புனைவுச் சித்திரமாக வரையப்பட்டிருக்கிறது.

இலக்கியம் சமூகத்தை மாற்றும் கருத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்பதாக  இலக்கியப்படைப்பில் பிரதிபலிக்கும் கருத்தியலை ஊன்றி அவதானிக்கும் வாசக மனநிலையும் இருக்கவே செய்கின்றது. அம் மன நிலையானது ‘புதியதோர் உலகம்’ நாவலோடு ‘குமிழி’ நாவலை ஒப்பிடுமாயின் ‘குமிழி’ நாவலில் துலங்கும் படைப்பாற்றல் கொண்ட உணர்வெளிச்சியின் வெளிப்பாட்டு அம்சங்கள் முக்கியத்தும் அற்றுப் போகலாம்.

கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ நாவல் வெளிவந்த போராட்டக் கால அனுபங்களோடு நெருக்கமான வாசகர்களுக்கும், வெவ்வேறு இயக்கங்களின் ஆயுதப்போராட்ட அனுபவங்களை விமர்சனங்களோடு எதிர்கொள்ளும் வாசகர்களுக்கும், ‘புதியதோர் உலகம்’ எனும் நாவல் ஒரு ஆவணமாகவே உள்வாங்கும் தன்மையைக் கொண்டிருந்தது.

‘புதியதோர் உலகம்’ நாவலை புளட் அமைப்பின் உட்படுகொலைகளுக்கும் அதன் ஜனநாயக விரோத செயலுக்குமான ஒரு வரலாற்று ஆதாரமாகவே அக்காலத்தில் பலராலும் கையாளப்பட்டு வந்தது. அதை ஒரு இலக்கியப் பிரதியெனும் தன்மையில் பேசப்பட்டு, விமர்சிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.

எனவே இலக்கியத்தின் ஊடாக உண்மையைத் தேடுவதையும், உகந்த கருத்துநிலைத் தேடலையும் வாசிப்பின் நேசிப்பாக கருதும் வாசக மனநிலைக்கு ‘புதியதோர் உலகம்’ நாவலில் இருந்து புதிதாக எதையும்,  ‘குமிழி’ நாவலில் கண்டுகொள்ள முடியாது போகலாம். 

படைப்பாளியின் உணர்வெழுச்சியின் ஊடகமாகத் திகழ்வதே இலக்கியம். இதில் படைப்பாளியின் பரிபூரணத்தை தேடுவதாக வாசிப்பின் இலக்கு அமைந்து விடக்கூடாது.  மன விரிவாக்கத்தில் ஆற்றும் செல்வாக்கை படைப்பின் அழகியல் சித்தரிப்பின் ஊடாக புரிந்துகொள்ளும்போதே ஒரு இலக்கிய பிரதி எவ்வகையில் வாசகனின் சுய-உணர்வெழுச்சியை தூண்டுகிறதென்பதை அவதானிக்க முடியும். இலக்கியப் படைப்புலகில் நிகழ்ந்து வரும் மாற்றங்களின் கூறுகளை தேடி அவதானித்து வரும் வாசகர்களுக்கு இந்த இரு நாவல்களுக்கும் இடையிலான ‘வடிவ-உள்ளடக்க-கருத்தியல்’ வேறுபாடுகளை புரிந்துகொள்ள முடியும். 

புதியதோர் உலகம் வெளிவந்து முப்பத்தைந்து வருடங்களுக்கு பின்பாக அதன் உரையாடல் பகுதியாக  வெளிவந்திருப்பினும், ‘குமிழி’ நாவலின் படைப்பாளிக்கு புனைவுச் சாத்தியங்களே அதிகம் வாய்த்திருக்கிறது.

அறிமுகமும், அறியும் ஆவலோடும்’

கனவில் அதிர்ந்தெழுந்து, சுவிஸ் நாட்டில் வாழ்ந்து கழிந்த காலங்களை மீட்டெடுத்து, 83 யூலை கலவரத்தின் பாதிப்பை நேரில் அனுபவித்த ஒரு  பல்கலைக்கழக மாணவன் தன் கதையை சொல்ல ஆரம்பித்தான். இடையில் அவனது கதையை வளர்த்தது ‘வேம்பு’. அவனது பால்ய வாழ்வையும் அவனது குடும்ப உறவுகளையும் எமக்கு சொல்லிக் கொண்டிருந்தது  அந்த வேப்ப மரம். இயக்கத்தில் இணைய இருக்கும் செய்தி அறிந்து தகித்து நோக்கிய தாயின்  நூலிழைப் பார்வையை அறுத்தெறிந்த வன்மன் அவன் என்பதை அந்த வேப்ப மரமே அறிந்திருந்தது. அவன் குடும்பத்தின் அங்கமான அந்த வேப்ப மரம் தான் மட்டுமே அறிந்த அச்சோகத்தை அவனைச் சார்ந்த உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளாது, அந்த இரகசியத்தை தனது வேருடன் இறுக அணைத்து வைத்திருந்தது.

மினு மினுக்கும் ‘குமிழி’யை நோக்கி கடல் கடந்து கால் பதித்த அவனது கனவுப்-‘பின்தளம்’

வந்தடைந்த செய்தியை அந்த வேப்ப மரத்திடமே தெரிவிக்கவும் விரும்புகிறான்.

தொடரும் அவனது கதையை வேப்ப மரம் ஒரு கதைசொல்லியிடம் ஒப்படைப்பதாக எமது ஊகத்தையும் அதனோடு இணைக்கலாம். அந்த கதைசொல்லி அவனை ரகுவாகவும், ஜோனாகவும் பெயர் மாற்றி கதையைத் தொடர்கிறது. தமது-சமூகத்தின் விடுதலைக்காக போராட்டப் பயிற்சிபெறும் கனவுகளோடு ‘பின்தளம்’ சென்றவர்களுக்கிடையில் அரசியல் பிரிவுகளாகவும், இராணுவப் பிரிவுகளாகவும் கருத்து மோதல்கள்-படுகொலைகள் தொடர்கிறது.  போராட்டக் கனவோடு இணைந்தவர்களுக்கிடையில் சாதியப் பாகுபாடுகளும், கொலைகளும், நட்புகளும், துரோகங்களும், விரோதங்களும், காதலுமாக கலந்திருந்த கதைகள் சொல்லப்படுகிறது. அந்த பல்கலைக்கழக மாணவன்  மீண்டும் தன் கதையை தானே தொடருகின்றான். தளம் திரும்பி தனது இரகசியத்தை புதைத்துப் பாதுகாத்து வைத்திருந்த வேப்ப மரத்தை தேடுகிறான். இரகசியத்தை காத்துவந்த வேப்ப மரம் தன்னை அழித்து அவனது குடும்பத்தின் பசியையும் தணித்திருந்த செய்தி அறிந்து நிலைகுலைந்து போகிறான். தோழர்களே எதிரிகளாகி  கொலையாளிகளானபோது தனது உயிர்காக்க புகலிடம் நாடுகிறான்.

இவ்வாறு நாவலின் பாத்திரங்களை, இயற்கையை  அழகியல் சித்தரிப்புகளுடன் பிணைத்துச் செல்லும்  மொழி ஆளுமையில்,  ‘குமிழி’ நாவலின் படைப்பாளியான ரவி அதிக கவனம் செலுத்தியுள்ளதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

‘குமிழி’ நாவலில் பேசப்படும் பிரதான அம்சமான புளட் இயக்கத்தின் உட்படுகொலைகள் சித்திரவதைகள் என்பன புதியதோர் உலகம் நாவலூடாக நாம் ஏற்கனவே அறிந்தவைதான். தொலைத் தொடர்பு பிரிவினர் குறித்த சம்பவமே அதிலிருந்து புதிதாக அறிந்து கொள்ளும் தகவலாக இருக்கலாம்.

2020ல் எழுதப்பட்ட இந்த நாவலின் ஊடாக புளட் எனும் இயக்கத்தின் உட்படுகொலைகள் அதன் இராணுவ அராஜகப் போக்குகள் பற்றிய தகவல்கள், அக்காலகட்டத்தவர்களுக்கும் ‘புதியதோர் உலகம்’ நாவலை வாசித்தவர்களுக்கும் புதிதாக தோன்றாது போகலாம். ஆயினும் ‘குமிழி’ நாவலின் ஆளுமை என்பது எமக்கு தெரிந்த அக்கதையை இலக்கிய புனைவுச் செறிவுடன் சொல்ல முனைகிறது.

ஒரு படைப்பாளி சொல்லும் கதையினூடாக தேர்ந்த இலக்கிய வாசகனால் அக்கதையை பிறிதொரு எல்லைக்குள் கொண்டு செல்ல முடியும். இவ்வாறான முயற்சியும் புரிதலும் வாசகர்களுக்கிடையில் வேறுபட்டும் இயங்கக்கூடியது. ‘குமிழி’ நாவலும் அதற்குரிய ‘பிரதித்’ தன்மை கொண்டிருக்கிறது. ஆயினும் வாசக மனவிரிவாக்கத்திற்கு இடையூறாக நாவலின் வடிவச் சீரமைப்பு சிதைந்திருப்பதாகவே தோன்றுகிறது. 

தாம் வாழும் காலத்திலிருந்து கடந்த நூற்றாண்டுகளையும், தாம் காணத உலகத்தையும் நுட்பமாக தம் இலக்;கிய படைப்பாற்றலூடாக சித்தரித்தவர்களின் நாவல்களை வாசித்த அனுபத்தில் இவ்வாறு கருதத்தோன்றுகிறது.  ஒரு நாவலின் வடிவமைப்பே வாசகனின் அக உணர்வை தீண்டி அவனுக்குள்ளும்  படைப்பாற்றலை தோற்றுவிக்கும். அது பாடைப்பாளியின் நோக்கத்திலிருந்து மாறுபட்டதாகவும், வாசகனின் சுய-கற்பனை உருவாக்கமாகவும் அமையும். அதற்கு இலக்கிய படைப்பின் வடிவமைப்பே பிரதான காரணமாக இருக்கும்.

2020ல் வாழ்ந்துவரும் படைப்பாளி 1984-1985ம் ஆண்டு காலத்து கதையை சொல்வதாக ஆரம்பித்து இறுதியில் 1985ன் பிற்பகுதியிலேயே கதை முடிவடைகிறது. அக்கதைக்குள்  1985ம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்து சம்பவங்கள் மீதான விமர்சனங்களும், 2009 ம் ஆண்டு ‘தோற்கடிக்கப்பட்ட போராட்ட காலம்’ வரையான உரையாடல்களும் நிகழ்வதை அவதானிக்க முடிகிறது. இதில்தான் இலக்கிய வடிவம் சிதைகிறதாக தோன்றுகிறது. வாசகனின் சுய-கற்பனை உலகையும் முடக்குகின்றது.

2009ம் ஆண்டு காலத்து சம்பங்களோடும் கதை நகர்ந்து வருவதால் (“… போராட்டம் இப்போ தோற்றாலும்கூட, கடந்த காலத்தில் இந்த போராட்டத்தினை ஆதரித்தபடியே அதன் பார்வையாளர்களாக இருந்தவர்களிலிருந்து தான் வேறுபட்டிருந்த புள்ளியை அவர்கள் இலகுவில் கடந்து சென்றுவிடுவார்கள் என எதிர்பார்க்கவும் முடியாது” -பக்கம் 178)  அக்காலத்தோடு அல்லது தாம் வாழும் சம காலத்து இணைப்போடு நாவலின் முடிவு அமைந்திருக்க வேண்டும். அல்லது 1984ல் இருந்து 1985 காலம் வரையான சம்பவங்களை உள்ளடக்கியதாக இருந்தால் ‘குமிழி’ நாவலின் முடிவும் அதற்கு பொருத்தமாக இருந்திருக்கும்.

படைப்பாளியான ரவியின் மொழி ஆளுமையும் கதையின் சித்தரிப்பு முறையும் வாசகனின் உணர்வெளிச்சியை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது.  ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்ட அனைத்து இயக்கங்களிலும் இணைந்து தமது வாழ்வை, நம்பிக்கையை தொலைத்த பல்கலைக்கழக மாணவர்களின் அவல நிலையையும், போராட்டத்தின் விளைவாக நிகழ்ந்த அனைத்துப் பேரழிவுகளையும் நினைவில் பதியும் வகையில்  வடிவத்தை அமைத்திருக்கலாம். தொடங்கிய எமது ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பத்தில் பிரதானமான பங்கு வகித்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள். ‘குமிழி’ நாவலின் படைப்பாளியும் பல்கலைக்கழக மாணவராக இருந்ததையும் அறியமுடிகிறது. இந்த நாவலின் சித்தரிப்பின் பலமானது ஆயுதப்போராட்டத்தை நம்பி தமது இளமையை, வாழ்வை, உயிரை, உறவுகளை இழந்த பல்கலைக்கழ மாணவர்களின் தொலைந்துபோன நம்பிக்கைகளையும் சிந்திக்க தூண்டும் வகையில் அமையக்கூடியது. கச்சிதமாக அமைந்திருக்கும் முடிவிலிருந்தே நாவலின் கருத்தியல் உள்ளடக்கத்தை வாசகனால் வளர்த்துச் செல்லமுடியும். ஆனால் இந்நாவலின் முடிவானது உள்ளடக்க விமர்சன உரையாடல்களை பலவீனமாக்கி கதையின்  பிரதான பத்திரத்தின் மீதே முடிவு.. ‘மையம்’ கொள்கிறது.

தாம் அறிந்த உலகத்தையும், தாம் அறியாத உலகத்தையும் நாவலாக தமது புனைவுச் சித்தரிப்பில் பலர் சாதித்திருக்கிறார்கள்.  அவ்வாறான நாவல்களின் இலக்கிய வடிவத்தை புரிந்துகெண்டதன் அனுபவத்தில் சில நாவல்களை அறிமுகப்படுத்தலாம்;.

அழகிய பெரியவன் 2016ல் எழுதிய ‘வல்லிசை’ எனும் நாவலூடாக தான் அறிந்த காலத்தை மிக அழகாக சித்தரித்துள்ளாளார். எஸ்.ராமகிருஷ்ணன் 2017ல் எழுதிய ‘இடக்கை’ எனும் நாவலூடாக தான் காணாத உலகை காட்டியிருக்கிறார். ஜெயமோகன் 2013ல் எழுதிய ‘வெள்ளையானை’ 1870ல் பஞ்சத்தில் செத்து மடிந்த இலட்சக்கணக்கான தலித் மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒரு காலத்தைக் காட்டுகிறது. சோ. தர்மன் 2019ல் எழுதிய ‘சூல்’ நாவலூடாக தான் காணாத உலகை எம் முன்னால் காண்பிக்கின்றார். சோபாசக்தி 2004ல் எழுதிய ‘ம்’ நாவலூடாக தான் அறிந்ததை, வாழ்ந்ததாக நம்பவைக்கின்றார். ஒன்றில் தமது கற்பனையின் காலத்தை பிரதிபலித்து அக்காலத்துடனேயே நாவல் நிறைவுபெறுவதாக அமைந்திருக்கும். அல்லது தாம் காணாத உலகத்தை சித்தரித்து தாம் வாழும் காலத்தோடு நிறைவு பெறுவதாக நாவல்கள் அமைந்திருக்கும். இவ்வாறான இலக்கியப் படைப்பின் வடிவமே வாசகனின் அகவயத் தூண்டலை உருவாக்கும். அவை கண்ணுக்கு புலப்படாதது. வாசகனால் உருவாக்கப்பட்டு வளர்வது. தொடர்ச்சியானது. வாசகர்களுக்கிடையில் மாறுபட்டது. உதாரணத்துக்கு ‘சூல்’ நாவலின் இலக்கிய சித்தரிப்பு வடிவம் அவ்வாறே எனக்குள் ‘நிகழ்ந்தது’.

அந்நாவலானது  தமிழகத்தில் 19ம் நூற்றாண்டு காலத்து மக்களையும் அதன் மீது செல்வாக்கு செலுத்தும் அரசியலையும் பேசுகிறது. அக்கால கட்டத்தில் வாழ்ந்த சமூகத்தின் கடவுள் உருவாக்கங்களும்,  அச்சமூகம் பேணிவரும்  பண்பாட்டு மரபுகளும் தெரியவருகிறது. வாசிப்பின் ஊடாக இயற்கை மீதும்  உயிரினங்கள் மீதும் அவர்கள் கொண்டுள்ள உறவுகள் எமக்குள் விரிகிறது. இவ்வாறு மரபுவழி பேணப்பட்டு வரும் விவசாய-நீர்ப்பாசன முறைகளின் காலத்தையும் உரையடல்களாக்கொண்டு, நவீன காலத்து இயந்திர வளர்ச்சிக்குள் எம்மை அழைத்து வந்து காட்டியதோடு  ஓய்ந்து போகிறது நாவல். ஆனால் வாசகனால் ஓய்ந்து தணிந்துவிட முடியாது. இவ்வாறான நாவல்கள் வாசகனை ஓய்வாக இருக்க விடுவதில்லை. வாசகன் தான் படித்த நாவலை தனக்குள் புதிதாக உருவாக்கிக் கொள்வான்.   ‘சூல்’ நாவலானது நவீன காலத்து வளர்ச்சியினால் இயற்கை, உயிரினங்கள், விவசாயம், மனித பண்பாட்டு உறவுகள் என அனைத்தும் சீரழிந்து போவதை இன்றைய நவீன இயந்திர மயமாக்கலின் சமகாலத்தோடு பொருத்திவிடுகிறது.  இந்த நவீன உருவாக்கத்தின் குறியீடாக சோ.தர்மன் பெரியார், அண்ணாத்துரை போன்றோரை குறியீட்டுப் பாத்திரங்களாக முன்வைப்பதையும் வாசகர்கள் இலகுவாக புரிந்து கொள்ளலாம். இலக்கியப் பிரதியில் ‘அரசியல் கருத்தியலையே’ முதன்மையாக எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு சோ.தர்மன் பெரியாரை, அண்ணாத்துரையை அவமதிக்கின்றார்  என அவர் மீது சீற்றமும் கோபமும் வரலாம். ஆனால் ‘சூல்’ நாவலின் இலக்கிய வடிவச் சித்தரிப்புக்கான ஒரு கருவியாகவே பெரியாரும் அண்ணாத்துரையும் சோ.தர்மனால் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. (சோ.தர்மனின் நோக்கம் எதுவாக இருப்பினும்) தேர்ந்த வாசகர்களால் அதனைப் புரிந்துகொள்ள முடியும் என்றே நம்புகின்றேன்.

அவ்வாறான வாசக மனம் ‘சூல்’ நாவலை தனக்குள் வளர்த்துக்கொண்டே இருக்கும்.  வாசிப்பின் ஊடாக அதன் இலக்கிய வடிவத்தை அர்த்தப்படுத்துவது வாசகனின் தகைமையை பொறுத்தது. எனவேதான் இலக்கிய வடிவம் என்பது அகவயமானது. வாசிப்பில் சுயமாக உருவாகி வருவது. அதற்கு படைப்பின் வடிவமைப்பே துணைபுரிகிறது.

‘குமிழி’ நாவலின் படைப்பாற்றல் மீதான நம்பிக்கையே மேற்குறிப்பிட்ட நாவல்களை உதாரணமாக முன்வைக்கும் அவசியத்தை  ஏற்படுத்தியிருக்கிறது.

இலக்கியம் என்பதாகவும், இலக்கியவாதிகளாகவும் கருதிக்கொண்டு தகவல்களாக எழுதிக் குவித்துகொண்டிருக்கும் எழுத்தாளர்களையும், பிரதிகளையும் நாம் வாசித்தும் சகித்தும்  வருகின்றோம். அவர்களுக்கு மத்தியில் தனது முதலாவது நாவலை இலக்கியப் புனைவுச் சித்தரிப்புடன் மேற்கொண்ட ரவியின் முயற்சி பாராட்டக்கூடியதே.


***

வாசிப்பு-17

 • சிவச்சந்திரன் சிவஞானம் (இலண்டன்)

ஒரு ஏ.கே 47 . அதன் பெயர் உலகம் சுற்றும் வாலிபன். ஒரு பந்தியில் மட்டுமே வந்து போகும். அந்த நாவலில் எத்தனை கதாபாத்திரம் இருந்தாலும் எனக்குப் பிடித்த கதா பாத்திரம் அந்த உலகம் சுற்றும் வாலிபன்தான்.

நேற்று அதிகாலை 3 மணிக்கே எழும்பிவிட்டேன்.வேலைக்குப்போக 6 மணி நேரம் உள்ளது. நூலகம் இணையம் பற்றி ஒரு பதிவைப் பதிந்துவிட்டு நான்கு மணியளவில் “குமிழி” நூலை கையில் எடுத்தேன். மூன்று மணி நேரம் தொடர் வாசிப்பு. நீண்ட காலத்தின் பின் ஒரு நாவலை ஒரே தடவையில் முழுமையாக வாசித்து முடித்தேன். அவ்வளவு சுவாரசியமான எழுத்து நடை. எழுதியவர் ரவி. இவரை எனக்கு நேரடியாக தெரியாது. இதுவரை அவர் எழுதிய எதையும் வாசித்தில்லை. ஆனால் அவரின் எழுத்து நடை பிரமிக்க வைத்தது. அப்படியே 1980 களிற்கு போய்வந்த உணர்வு.

அவர் எடுத்துக்கொண்ட விடயம் மிகவும் சிக்கலானது. புதிது என்றுகூட சொல்லலாம். அந்தக்காலத்தில் உருவான இயக்கங்களுக்கிடையான பிரச்சினைகள் தெரிந்ததுதான். ஆனால் ஒரு இயக்கத்துக்குள்ளேயே இருந்த முரண்பாடுகள், சிக்கல்தன்மையை முதன்முறையாக இவ்வளவு தெளிவாக எழுதி உள்ளார்.

ஒரு எழுத்தின் வெற்றி என்பது அது வாசகனை எழுத்தாளரே எதிர்பார்க்காத வகையில் சிந்திக்கத் தூண்டுவதுதான். அதிலும் எழுத்தாளர் வெற்றி பெற்றாள்ளார். அந்த வகையில்தான் எனக்கு அந்த உலகம் சுற்றும் வாலிபனான துவக்கு பல யோசனைகளை ஏற்படுத்தியது. ஒரு இயக்கத்திற்கு என பயிற்சிகள் இந்தியாவிலே வைத்து வழங்கப்படுகிறது. பாலஸ்தீனத்திலும் வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து இந்தியாவுக்குப் பயிற்சி பெற போகிறார்கள். அந்த இயக்கம் பற்றி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். ஆனால் அந்த இயக்கமோ ஒரே ஒரு ஏகே 47 யை வைத்து மக்களிடம் படம் காட்டுகிறது. ஒருநாள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் துப்பாக்கி இன்னொரு நாள் கிழக்கிலே இருக்கும். இப்படி ஊரெல்லாம் சுத்தித் திரிவதால் அது உலகம் சுற்றும் வாலிபனானது.

இந்தியா நம் இளைஞர்களை எப்படி பகடைகளாக பயன் படுத்தியது என்பதற்கான சாட்சியமாகவும் எடுக்கலாம் இந்த நூலை. மிக முக்கியமானது இது முற்றுமுழுதாக உண்மைக் கதை. அதை வாசித்த பின்பு ஏதோ வெறுமையான உணர்வு. எவ்வளவோ தவற விட்டுள்ளோம்.ஒரு இனமாக, ஒரு சமூகமாக நாம் விட்ட தவறுகள் ஏராளமென மீண்டும் புரிய வைத்தது இந்த நூல்.வாசிக்கத் தவறாதீர்கள்! (எழுதி முடித்த பின்தான் நூலிற்கான பணத்தை இன்னும் அனுப்பவில்லை என ஞாபகம் வந்தது. இன்றைக்கு எப்படியும் அனுப்பனும்)


***

வாசிப்பு-18

 • சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்) -தமிழகம்

தமிழகத்திலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் “காக்கைச் சிறகினிலே-அக்டோபர் 2020” இதழில்…!

*

குமிழி -நிர்க்கதியாகிப் போன ஒரு நூற்றாண்டுக் கனவு!

“படிப்பு, குடும்பச்சுமை என காய்ந்துபோன வரப்பில் சிறு ஓடையாக ஓடிக்கொண்டிருந்த என் பாலிய கால வாழ்வை மடைமாற்றி புதிய பாதையில் திறந்து விட்டேன். துணிச்சலா, அப்பாவித்தனமா, விடுதலை வேட்கையா எதுவோ தெரியாது. புலனாகாத அந்தப் பாதையில் முழு நம்பிக்கையுடன் பரவினேன் என்பது மட்டும் உண்மை. உண்மையிலும் உண்மை.”

“இந்த நம்பிக்கைகளை எல்லாம் பின் தளம் (தமிழகத்தில் பயிற்சிக் களம்) கிழிசல் ஆக்கியது. உயிர் தப்பி ஊர்வந்து சேர்தலே வாழ்வின் மிகப்பெரும் பாக்கியம் ஆகிப்போனது. இலட்சியமாகவும் தேய்ந்திருக்கலாம். எப்படியோ ஊர் திரும்பும் சந்தர்ப்பம் கிடைத்தது. பின்னர் எனது நாட்டை விட்டும் வெளியேறினேன். அகதியாய் இங்குவந்து சேர்ந்தேன்”

மொத்த நாவலின் பொருளடக்கம் இது. ஒவ்வொரு எழுத்தாய், ஒவ்வொரு வார்த்தையாய், ஒவ்வொரு சொல்லாடலாய் 223 பக்கங்களில் விரிகிறது. “என் குழந்தை அவன்” என வீட்டுக்கு முன் நட்டுவைத்த வேம்பு கதை சொல்லத் தொடங்குகிறது. கதையை நினைவுகூர்ந்து ஞாபக அடுக்குகளில் இருந்து உருவிஉருவி, தலைகீழாய் மூழ்கி முத்தெடுக்கும் சாகசம் போல வெளியில் கொண்டுவந்து ‘ குழந்தை ரகுவின்’ வாழ்வைப் பேசுகிறது.

ரகு ஒரு போராளி . போராளியின் கைவசம் நிறைய ஆவணங்கள் இருந்தன. “நான் நாட்டைவிட்டு விலகியபோது எழுதிவைத்திருந்த விசயங்களை, அனுபவங்களை நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன். அவர் அதைப் புதைத்து பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்திய ராணுவம் ஈழத்தின் மீது ஆக்கிரமிப்புச் செய்த போது அவர் பதுகாப்புக் கருதி அவற்றை வெளியே எடுத்து எரிக்க நேரிட்டது.” 35 ஆண்டுகளின் பின் அந்த ஆவணங்கள் என் மூளைக்குள் இல்லை, இருக்கும் ஞாபகங்களை கைக்கொண்டு நாவல் வடிவில் எழுத தீர்மானித்தேன்”

கதைசொல்லல் என்பது சுயானுபவத்தின் விரிவு. ஆவணம் என்பது வரலாறு. வரலாறு ஒருபோதும் நாவலாகாது. மணல் என்ற எனது நாவலின் சொந்த அனுபவத்தில் இதை விளக்க முடியும். நான் சேகரித்து வைத்த ஆவணங்கள் மடி நிறைந்து கொட்டியது. கதை சொல்வதினூடு அங்கங்கு ஆவணங்களை இணைத்து இருந்தேன். “ஆவணப் படுத்தி, தொகுத்து , வாசிக்க அளிப்பது எனில் அது வரலாறு ; ஆனால் கதை சொல்லலில் உங்கள் வாசகன் நெட்டோட்டமாய் தொடர்ந்து ஓடிவரவேண்டும். மட்டுமல்ல, நீங்கள் போகாத திசைக்கெல்லாம் அவன் பயணிப்பான். நீங்கள் கதை சொல்லுங்கள்” என்று பதிப்பாளர் உணர்த்தினார்.

ஒருவேளை அந்த ஆவணங்கள் பாதுகாக்கப் பட்டிருந்தால் , இன்று ’பிளட் ’ எனப்பட்ட தமிழீழ விடுதலைக் கழகத்தினதும், பிற ஆயுதக் குழுக்களினதும் தெளிவான சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கும். சிறு பிராயம் முதலே இவனை உருவாக்கிய அப்பா, ஒரு இலகுவான கற்பித்தல் ஆசிரியர். (ப-22) தமிழ் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர் எளிதான புரிதலுக்கு உரித்தான வழிமுறைகளை கண்டிருந்தார். எழுத்து கற்பிக்கும் முறையில் புதிய உத்திகளைக் கையாண்டார். பிள்ளைகள் முதலில் எழுதப் பழகுகிற எழுத்து ‘ட’ வாக இருக்கும். பின்னர் ‘ப’ என அது இலகுத் தன்மையிலிருந்து பயணிக்கத் தொடங்கும். வகுப்பறையின் எல்லைகளை அவர் குறுகலாக உணர்ந்தார். தந்தை குடும்பத்துக்கு வெளியில் இயங்குவதில் தான் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருந்தார் – பின்னர் இந்தக் குழந்தை ஆயுதக் களத்தில் நின்றதற்கான மூல சூத்திரம் இது.

“மண்ணுக்காய் மரித்தவர்களின் சாம்பலிலிருந்து தமிழ் அன்னை என்ற அடையாளத்துடன், தமிழன் என்ற அடையாளத்துடன் நான் எழுந்தது பொய்யில்லை; எல்லாப் பொய்களையும் நம்பியதும் கூடப் பொய்யில்லை” (பக்கம் 26)

நடுக்கடல் கள்ளத்தோணி வானத்திலிருந்து தொங்கவிடப்பட்ட நீர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்குக்கும் ஆபத்தான விளையாட்டு என விவரிக்கையில், ஒரு வரலாற்று ஆசிரியனினும் கூடுதலான ஒரு கலைஞன் மேல்கை எடுக்கிறான். “தீப்பந்துகள் இப்போ எமது தோணிக்கு சற்றுத் தொலைவில் விழுந்தன. பிறகு அவை தூரத்தில் விழுந்தன. நாங்க நடுக்கடல் இப்போ தாண்டி விட்டிருந்ததை யூகிக்க முடிந்தது. சிறைப்பட்டிருந்த மூச்சுக் காற்று எட்டிப் பார்த்தது.” (பக் -33)

போர்க்கள நாயகர்களை அல்லது ஆயுதமேந்திய யுத்தப் பிரபுக்களை பெயர் சொல்லி விமர்சித்து எழுதுகிற ஈழ எழுத்துக்கள் இப்போது நிறைய வரத் தொடங்கிவிட்டன. பேரழிவுக்குப் பின்னரான நிலையை – அதற்கெல்லாம் மூல காரணமான நடைமுறையை பேசாமல் இருக்க இயலாது. அவ்வாறு பேசாமல் வாழ்ந்தால் அது மக்களுக்கு செய்யும் துரோகம். இந்தப் புதினம் போகிறபோக்கில் அல்லாது , செவிளில் அறைகிற மாதிரி நிறுத்தி கேள்விகள் எழுப்பி விமர்சனங்களை கொக்கியிட்டு நடக்கிறது. சுயாதீனமான எழுத்தின் கம்பீரம் இது. தற்போது இயக்கங்கள் களத்தில் இல்லை, தலைமைகள் உயிரோடுமில்லை, எது வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என்று ஒரு தர்க்கம் முன்னெடுக்கப்படலாம். இத் தர்க்கத்தினூடு சனநாயக இயங்குதல் மறுக்கப்பட்ட உண்மையும் பூனைக்குட்டி போல் மறைந்துள்ளமை வெளிப்படுகிறது. தன்னை, தம்மை மறு விமர்சனத்துக்கு உட்படுத்தும் ஒரு சுய ஆய்வு நாவல் இந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாகவே கைப்பற்றிப் பேசுகிறது. இப்போது விட்டால் வேறு எப்போது சுய விமர்சனத்துக்கு ஆட்படுவது?

“விடுதலை அரசியலைப் புரிந்துகொள்ளாமல், ஒரு போராளியாக ஆவதிலுள்ள போதாமையின் சாட்சியாக அவர்களிருந்தார்கள்” (பக்-193) என உணர்ந்ததை, பட்டதை வெளிக் கொட்டுகிறார் படைப்பாளி. இந்தப் போதாமையின் தொகுப்பு பூதாகரமான இயக்கங்களாகி வெறுமையில் முடிந்தன. தனியொரு ஜோன் உதிர்க்கிற மனசாட்சியின் வாசகம் அல்ல; இந்த நாவல் போதாமைகளின் கூட்டுக்குரல்களது சாட்சியம். ஆரம்பத்தில் காட்டுக்குள் ஒரு சிறிய குழுவாக இருந்தபோது நடத்தத் தொடங்கிய துரோகிகள் அழிப்பில் இருந்து தொடங்கி, இயக்கங்களின் உட்கொலை ஊடாகப் பயணித்து, வைத்தியசாலைகளில் வைத்துப் படுகொலை செய்வதிலும், எண்பதுகளின் நடுப்பகுதியில் கூட்டாக சகஇயக்கத் தோழர்களை சுட்டுத்தள்ளி உயிரோடு ரயர் போட்டு எரித்ததிலும், பள்ளிவாசலுக்குள் தொழுகையில் இருந்தவர்களைப் படுகொலை செய்ததிலும் , அனுராதபுரத்தில் சிங்களப் பொதுமக்களை கூட்டாக சுட்டுத்தள்ளியதிலும், கந்தன் கருணைப் படுகொலையிலும், சுழிபுரத்தில் ஆறு இளைஞர்களைக் கொன்று புதைத்ததிலும், இயக்க உட்படுகொலையிலும், சமூக விரோதி அழிப்பிலும் எனத் தொடர்ந்த இயக்கங்களின் வரலாறு பூராவும் இந்த காட்டுமிராண்டித்தனம் தன்னை பலமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது ” (பக்கம் 194)

கூடவே இதனோடு தனது மூளையின் கக்கத்தில் இடுக்கிக் கொண்டிருந்த ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறார். “எங்கடை சனம் விடுதலை அடைவதற்கு தகுதியில்லாத சனம். நாங்கள் உள்ளுக்கை காட்டுமிராண்டித் தனத்தோடுதான் இருந்திருக்கிறோம் எண்டு தெரியுது. விடுதலைக்கெண்டு வெளிப்பட்டு, உள்ளுக்குள் இருந்தவன், பக்கத்தில் நின்றவன், எதிர்த்து நின்றவன் எல்லோரையும் போட்டுத் தள்ளுகிற கூட்டம். இந்த கேட்டுக்கு எங்களுக்கு விடுதலை கேக்குது”. இது ஆயுத அரசியல். தேர்தல் அரசியலிலும் இதுபோலவொரு விரக்தியின் குரல் எழும்புவதுண்டு. படிப்பறிவில்லாத கூட்டம் வாக்கு என்றால் என்ன, வாக்களிப்பின் முதன்மை நோக்கம் யாது எனப் பகுத்தறியும் அரசியல் தெளிவில்லாச் சனம். இந்த சனம் கெட்ட கேட்டுக்கு வாக்குச்சீட்டு வேணுமா என்னும் சாதாரண மக்கள்மீதான பாய்ச்சல், இதிலும் கேட்கிறது. இவை யாவும் மக்களின் பிழையல்ல. ஆயுதக் குழுக்களின் சண்டித்தனத்தால் விளைந்தவை.

ஒரு இனத்தின் விடுதலைப் போர் ஒரு சோப்புக் குமிழி போல் ஆயுதங்களால் உடைக்கப்பட்ட போது பாதிக்கப்பட்டோர், அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாது போனோர் அவர்கள்தாம். மனிதன் இயந்திரத்தை இயக்க ஆரம்பித்ததும், இயந்திரமாக மாறிவிடுகிறான். இயந்திரம் வேகம் அவனது வேகமாகிறது. அவனால் மட்டுப்படுத்த முடிவதில்லை.அதுபோலவே ஆயுதம் ஏந்தியவன் ஆயுதமாக ஆகிவிடுகிறான். “துப்பாக்கி ஒரு மரண வாயிலாகவும் அதேநேரம் மரண வாயில் காவலாளியாகவும் மாறி மாறித் தெரிந்தது” (பக்கம் 200.) தெளிவாக ஜோன் வரையறுக்கிறான்.

படைப்பின் பிற்பகுதி, ( 200 முதல் 223 ஈறாக) ஒரு துப்பறியும் நாவல் போல் விறுவிறுப்பாய் ஓடுகிறது. பின்தளத்திலிருந்து தளத்துக்கு வந்த பின்னும் தொடருகிற தேடுதல் வேட்டை, தலைமறைவு, வெளிநாட்டுக்குத் தப்பியோடல், கொலை ,காணாமல் ஆக்குதல் என அத்தனையும் துப்பாக்கியால் இயக்கப்படும் காட்சிகள் தாம். அரசுக்கு எதிரான அதிகாரம் துப்பாக்கியிலிருந்து பிறப்பதாக ஒவ்வொரு இயக்கமும் கூறிக்கொண்டு திரிந்தனர்.மாறாக அது மக்களுக்கு எதிரான நகர்வாகவே அமைந்தது. சிங்கள ராணுவம் நிகழ்த்தும் அட்டகாசங்களை பேசுவதற்குப் பதிலாக, அதை ஈடு செய் கடமை போல பயிற்சி முகாமினை ராணுவ ஒழுங்குகள் குவிப்பாக ஆக்கி இருந்தனர். இவ்விடத்தில் குணா.கவியழகனின் ’நஞ்சுண்ட காடு’ நாவல் போராளிகள் பயிற்சி முறை எனப் பலவற்றை ஒப்பிட முடிகிறது.

“அடிப்படையில் நாம் ஒரு முதலாளித்துவ இராணுவக் கட்டமைப்புடன் இயங்குகிறோம். போராளிகள் பிரக்ஞை பூர்வமாக இயங்க பயிற்றுவிக்கப் படாதவரை, அரசுக்கெதிரான அதிகாரமென்பதை விடவும் மக்களுக்கெதிரான அதிகாரம் எமது துப்பாக்கியிலிருந்து பிறக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மக்கள் சார்ந்த பிரக்ஞை என்பது போராளி எனப்பெயர் பெற்றுவிடுவதால் வருவதில்லை.” அறிவார்ந்து ,மக்கள் சார்ந்து, உணர்வு பூர்வமாக, காஸ்ரோ போல சுய சிந்தனையைக் கோதிவிட்டுக் கொள்கின்றோரும், அதில் தம்மைக் கொளுவிக் கொள்வோருமுள்ளனர். வெளிப்படையாக சிந்திப்பைப் பறிமாறிக் கொள்ள முடியா நிலை அங்கே.

முகாம் தோழர்கள் எல்லோரும் மோட்டார் சைக்கிளை நன்கு செலுத்தக் கற்றுக் கொண்டிருந்தனர். எப்போதும் பெண் தோழர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது, அல்லது அவர்கள் கண்டுகொள்ளப்படாமல் இருந்தனர். முகாம் பொறுப்பாளர் ’பதி ‘ அல்லது பெண் தோழர்கள் உட்பட எவருமே இதுகுறித்துக் கதைக்கவில்லை. சிந்திக்கவில்லை என்றும் சொல்லலாம். சோசலிச தமிழீழத்துக்கான போராளியம் இப்படியாய் வளர்ந்தது என கசந்து போகிறான்.

ஆயுதங்கள் பற்றியும் அதை கழட்டிப் பூட்டுவது பற்றியுமான வகுப்புகளை எடுத்துக்கொண்டிருந்த தேவன் ஒரு கட்டத்தில் எஸ்.எல்.ஆர். துப்பாக்கியை கையில் வைத்திருந்து அதை கட்டுவதற்கு எத்தனித்தபோது கொஞ்சம் வில்லங்கமாக இருந்தது. அதன்படியே சீமந்து(சிமெண்ட் ) தரையில் மெல்ல செல்லமாகக் குத்தினான். “ஆயுதத்தை பெண்களைக் கையாள்வது போல பக்குவமாக கையாள வேண்டும்” என்று அவன் சொல்லியபோது, அதிலிருந்து பொறி கிளம்பியது. “அதென்ன பெண்களைக் கையாளுவது?” என்று கேட்டான் யோகன். தேவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. “பெண்கள் என்ன, ஆண்களால் கையாளப்பட வேண்டியவர்களா? அவர்களையும் ஆயுதத்தையும் ஒப்பிடுகிறீர்கள் , அவர்களென்ன பண்டமா?” என்று கேட்டான் ஜோன். “பெண் விடுதலை பற்றி கதைக்கிறம், சோசலிசம் பற்றி, சமத்துவம் பற்றிக் கதைக்கிறம் . நாம் இப்படி ஒப்பிடலாமா?” எனக் கேட்டான் எர்னஸ்ரோ. ” பிழைதான்” என மன்னிப்பு கேட்டுவிட்டு வகுப்பைத் தொடர்ந்தான் தேவன்.

தமிழகப் பின்தளப் ’பிம்ப உருவாக்கம்’ தாயகத்தின் தளம் வரை தொடர்ந்தது. அலைஅலையாய் பரிணமித்தது. பிளாட்டில் ‘பெருசு’ : புலிகள் இயக்கத்தில் ’அண்ணை’ : இன்னொரு இயக்கத்தில் ‘தலைவர்’. “ஆனால் ஆயுதம் தாங்கிய குழு தானே நாம். முந்திக் கொள்பவர் தான் பிழைக்கலாம் என்ற ஒரு உள்விதி இதற்குள் இயங்குகிறது. அரசியல் மனோபாவத்தில் தோழமை என்று நாம் வரையறுக்கையில், அது சக மனிதர்களின் அன்னியோன்னியத்தைக் கோருது ; சக மனிதர்களில் தன்னைக் காணக் கோருது. ராணுவ மனோபாவத்தில் தற்காப்பு என்ற வேட்கை, அது சக மனிதரை சந்தேகிக்கிறது ; அவங்களை தன் எதிரியாய்க் காணக் கோருது” யோகன் அந்த நடைமுறை உண்டுபண்ணும் மனோபாவத்தைச் சுட்டிக் காட்டுகிறான். தோழமை மனோபாவத்துக்கும் இராணுவ மனோபாவத்துக்குமான பாரதூரமான வேறுபாடு அடிக்கோடு போட்டுக் காட்டப்படுகிறது.

“தீப்பொறி இதழ்” தளத்தில் இருந்து வெளியானபோது பின் தளமான தமிழகத்துள்ளும் எங்களை வந்து சேர்ந்தது. மனஓசை, கேடயம், புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் போன்ற இதழ்களுக்கும் வழங்கப்பட்டது. பின் தளத்தில் ’பிளட்’ போன்ற இயக்கங்களில் இன்னுமிருப்போர் கலைச்சல் மாடுகளாய் ஓடிக் கொண்டிருந்தனர்.

ஒரு இரங்கற்பா போல் வருகின்றன துயர வரிகள் .”அண்ணாந்து பார்த்த நிலை போய் கவிஞர்கள் கற்பனையில் கவியெறியும் முகில் திரளுக்கு மேலாக மும்பையிலிருந்து விமானத்தில் பறந்து கொண்டிருந்தோம். புகைப்பாலை வனத்தில் குன்றுகளாய்த் திரட்சியுற்றிருந்தன இளம் சாம்பல் நிற முகில் கூட்டங்கள்! அவைகளின் பின்னாலும் தேடிப் பார்க்கிறேன். ஏந்திய கனவுகளைக் காணவில்லை; மாலியையும் (பிரியத்துக்குரியவள்) காணவில்லை.”

ரகு, ஜோன், யோகன்., அன்பு, காஸ்ரோ,ஏர்னெஸ்ரோ போன்ற அர்ப்பணிப்பாளர் பலரும் செய்த பிழை என்ன? ஆயுதக் குழுக்களை போராளிக் குழுக்கள் என நம்பியது! இந்நூற்றாண்டின் விடுதலைக் கனவு நிர்க்கதியாகி, உடைத்து சில்லுசில்லாய் வீசப்பட்டுப் போனது. ஒரு இனவிடுதலைப் போரை எப்படி நடத்தவேண்டுமென்ற உணத்தி இல்லாமல் நடத்தியதால், லட்சக்கணக்கில் உயிர்கள் இழப்பு. பல பத்தாயிர எண்ணிக்கையில் போராளிகள் இழப்பு. இறுதியில் ஈழம் இழப்பு.

ஒரு கையறு நிலைப் பாடலைப் பாடும் ரவியின் எழுத்தில் ஒரு நாதம் உண்டு. அது வெங்கல உலோகத்தில் எழும் நாதம். அந்த இசை அதிர்வு அதிர்வுகளாய் நடந்து போகும். அதனால்தான் கோவிலில் வெங்கல மணியைக் கடினார்கள். நகர்மய மாக்கலில், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மாசு கெட்டிக்காத லகுவான காற்று அன்றிருந்தது. காற்று வெங்கல இசையை தொலைதூரம் எடுத்துச் சென்றது. ரவியின் இந்த நாவல் வெளிவராது போயிருந்தால், வெங்கல ஒலியின் இசையை இழந்து போயிருப்போம். இந்த எழுத்து கிடைக்காமல் இருந்திருக்குமாயின், ஈழ விடுதலையின் முக்கியமான வரலாற்று மாணவர் கிடைக்காமல் போயிருப்பார்; எழுத்தில் கலைவண்ணம் தெளித்த தேர்ந்ததொரு கலைஞன் மேல்வாராது போயிருப்பார்.

குமிழி – நாவல்.

படைப்பாளி: ரவி -2020.

கதைக்களம்: ஈழம், தமிழகம்.

காலம் : 1984- 1985

விடியல் பதிப்பகம், கோவை.

விலை ரூ.180 / =


***

வாசிப்பு-19

 • யசோதா பத்மநாதன் (அவுஸ்திரேலியா)

’குமிழி’ – புத்தகப் பார்வை – பொதுசன கண்வழியே

குமிழி – ஈழத்தின் விடுதலை இயக்க (புளொட்) உள்ளக முரண்பாடுகளின் / தோல்வியின் அடிப்படைக் கூறுகளை உள்ளே நின்றபடி சாட்சிப்படிமமாக முன்வைக்கும் ஓர் இலக்கிய வடிவம்.

நாவலுக்குள்ளோ ஆவணத்துக்குள்ளோ சுயசரிதைக்குள்ளோ அகப்பட்டுக் கொள்ளாத ஓரு நளின வார்ப்பு.

அட்டைப்படமும் வடிவமைப்பும் கச்சிதமாய் கோலி வைத்திருக்கிறது அதன் உள்ளடக்கத்தை. குறிப்பாக அட்டையை விரித்து பெரிதாக்கும் போது விரியும் தோற்றம் கனம் ஒன்றை கொண்டிருப்பதை காட்சியாக விரிக்கிறது.

அது கொண்டிருக்கும் உள்ளடக்கம் ஓர் உள்காயம்; ஏமாற்றத்தின் கதை; உள்வலி; ஊமைக்காயம்; போராட்டத்தின் இரத்தவாடை; உள்குலைவு; ஓர் இளம் தமிழ் போராளியின் இலட்சியக் கனவு சிதைக்கப்பட்டதன் சின்னாபின்னக் கூறுகள் சிதறிக்கிடக்கும் இடம்; அதே நேரம் நமக்கே நமக்கான பாடங்களை கற்கக் கூடிய அரிச்சுவடியும் ஆகும்.

மேலும், மக்களுக்காகப் போராடப் புறப்பட்ட  இளம் போராளியின் உள்மனக் காயம் ஒன்று இறுதியில் ஈழத்தமிழ் மக்களின் உள்காயமாக பரவி விரியும் ஆற்றலின் பிரவாஹம் இது எனிலும் தகும்.

ஓர் இனத்தின் பாரத்தைத் தூக்கிய தோள்கள் – அதன் பாரத்தை சமூகத்தின் மடியில் இருத்தி இருக்கிறது.

அது ஒரு தோல்வியின் சுமை.

’பிணக் கனம்.’

இது இவ்வாறிருக்க,

இதில் நான் முக்கியமாகக் காண்பது புத்தகம் முன்வைக்கும் சமூகம் மீதான ஒரு விமர்சனம்.’ எங்கட சனம் விடுதலை அடையிறதுக்குத் தகுதி இல்லாத சனம். நாங்கள் உள்ளுக்குள்ள காட்டுமிராண்டித்தனத்தோட தான் இருந்திருக்கிறம் எண்டு தெரியுது. விடுதலைக்கெண்டு வெளிக்கிட்டு உள்ளுக்க இருந்தவன் , பக்கத்தில நிண்டவன், எதிர்த்து நிண்டவன் எல்லாரையும் போட்டுத் தள்ளுற கூட்டம். இந்தக் கேட்டுக்க எங்களுக்கு விடுதலை கேக்குது.’

இந்த ’சமூகத்தின் காட்டுமிராண்டித்தனம்’ என்பதை இயக்கத்தின் உள்ளேயே ரவி காண்கிறார்.

1. தளத்திற்கும் பின் தளத்திற்கும் இடையே; மற்றும் பயிற்சிமுகாமில் காணப்பட்ட / பேணப்பட்ட அரசியல் சித்தாந்த – நடைமுறை இடைவெளி. (அண்ணன் – தோழர், உணவு,உடைப் பாவனை; அதிகார துஸ்பிரயோகம்; சுயநலப் பேணுகை, உயிர்கள் மீதான எதோச்சதிகாரம்… இன்னபிற..)

குறிப்பாக வாழைப்பழ பகிர்வு பற்றிய சம்பவம் சமூகத்தை ருசிபார்க்க ஏதுவாயிருந்த அச்சொட்டான உதாரணம். – சமூகத்தின் அங்கத்தவர்களாக அங்கிருந்து உள்ளே வந்தவர்களிடம் காணப்பட்ட இத்தகைய இயல்புகள் எவ்வாறு இயக்கத்தின் போக்கை வழிநடத்திற்று என்பதை புத்தகம் சிறப்பாகப் பேசுகிறது.

2. மக்களுக்கும் இயக்கத்துக்கும் இடையே இருந்த வேறுபட்ட நம்பிக்கைப் பேணுகை.( மக்கள் ஒருநாள் இவர்கள் பெரும் படை திரட்டிக் கொண்டு ஈழத்தை வென்றெடுக்க வருவார்கள் என்ற நம்பிக்கையும்  போராளிகளிடம் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லாதிருந்த வெற்றிடமும்.)

3. தலைமைத்துவத்திடம் இருந்த அறிவு, தூரநோக்கு, ஞான  வெற்றிடம். பண்பற்ற எள்ளல்கள்…

4.பயிற்சிக்கே போதுமான ஆயுதங்கள் காட்டப்படாதிருந்த போதாமை அல்லது இல்லாமை.அல்லது நிரப்பப் படாமை. கேள்வி கேட்க முடியாத இராணுவ சித்தாந்த சிந்தனையும் அதிகார மேலாண்மையும்.

5.வெளிப்படைத் தன்மையும் உண்மையும் அற்றிருந்த; மரணபயம் பின்னிய சுயகம்பிச்சிறை வாழ்வு. மெளனிக்கப்பட்ட சொற்கள் உள்ளடக்கப்பட்ட மனம் கொண்டிருக்கும் அகத்தீ. வாழ்வோடு அடிக்கடி கேட்கும்; காணும் நண்பர்களின் மரண ஓலங்களும் மரணங்களும் அவைகளோடு உள்ளேயே  வாழ நேர்ந்த சாபமும்.

6.சாதி, பெண்ணியம் என்பன கையாளப்பட்ட முறைகள்.

7. இயற்கையின் இயல்பான காமத்தை எப்படியாக இளைஞர்கள் கையாண்டார்கள்; காதலை எப்படி மூடிப் புதைத்தார்கள் என்பது குறித்தவை. சின்னச் சின்ன ஆசைகள், தேவைகள் கூட நிறைவேற்றப்படாமை.

8.தன் இனப்போராளியைத் தன் இனமே கொல்லும்  கொலைகளைக் காணும்; கேட்கும் மனநிலைக்கும் பகிரப்பட முடியாதிருக்கும் ; கேள்வி கேட்க முடியாதிருக்கும் இராணுவ சட்டங்களுக்கும் இடையே அல்லாடும் சக போராளியின் உள்மன உழைச்சல்களும் பாரங்களும் குற்ற உணர்வுகளும்.

9. பீதியோடு நம்பிக்கை ஒன்று அவநம்பிக்கையாகி அருகிலிருப்பவரையே நம்ப முடியாது போன அவலம்.

10. மூடுண்ட மெளனம்

என இவ்வாறாக அது பயணிக்கிறது. இவற்றினை ஒத்த பெரும்பாலான சாராம்சங்களை நாம் மூடுண்ட எனக்குத் தெரிந்த நம் வட ஈழ சமூகத்துக்குள்ளும் காணலாம். இன்றும் கூட.

இவைகள் எல்லாவற்றையும் அவர், ‘அரசியல் அறிவூட்டப்படாத இராணுவம் ஒருபோதும் சோஸலிச விடுதலையை பெற்றுத்தரப் போவதில்லை; வெறும் இராணுவ அதிகாரம் சொந்த மக்களுக்கெதிராகவே தனது துப்பாக்கியைத் திருப்பக் கூடியது. அது விடுதலை அடைந்தால் கூட அதைச் செய்யும்’ என்ற வரிகளால் நிறுவுகிறார்.

ஒரு போராளியின் உள்காயம் ஒன்று இறுதியாக தமிழ் மக்களின் உள்காயமாக எப்படி பரிமாணம் பெற்றது என்பதை உள்பக்கமாக நின்று சொல்ல விளைகிறது ஆவண அடிப்படை கொண்ட இப் புத்தகம். எனினும் ஆங்காங்கே பிரச்சார நெடிகளும் சுய கருத்துத் திணிப்புகளும் அதிகமாகிப் போகும் தன் பக்க வாதங்களும் அதன் இயல்பான ஓட்டத்தை; மக்கள் தாமாக ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு  தடையாக இருக்கிறது என்பதைக் குறிப்பிடாமல் செல்ல முடியாது.

அது சொல்லும் கருத்துகளுக்கு அப்பால் அவற்றைச் சொல்லும் பாணியில் அது கொண்டிருக்கும் வர்ணனைகள் மிக வசீகரமானவை. உடல் களைப்பின் மேல் கோழித்தூக்கம் ஏறிநின்றது என்ற போதிலும் சரி; அவனை இருத்தி வைத்து ஊகங்கள் கதை சொல்லிக் கொண்டிருந்தன என்ற போதிலும் சரி; டாக்குத்தனின் மருத்துவம் கஸ்ரோவின் நோயோடு பகிடி விட்டுக் கொண்டிருந்தது என்ற போதிலும் சரி; இருள் நிலத்தில் ஓர் உயிர்குமிழியாய் முகாம் பூத்திருந்தது அதற்குள் வெக்கை இளைப்பாறிக்கொண்டிருக்கும் அது உடற்களைப்பை வருடி விடுவது போலிருக்கும் என்ற போதிலும் சரி; அவன் புன்னகையைக் கோபத்தால் கொன்று போட்டிருந்தான் என்பதிலும் சரி; கையிலிருந்த ரோச் லைட்டில் இருந்து ஒளியைக் கற்றையாக உதறி முற்றத்தில் வீசிவிட்டார். பூக்கள், காய்கள், கனிகள் என தக்காளி, வெண்டி, கத்தரி, மிளகாய் செடி எல்லாம் ஒரு பூந்தோட்டத்தின் அமைவாக தமது குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து கொண்டிருந்தன என்ற போதிலும் சரி; மகிழ்ச்சி அவனை உலுப்பி உலுப்பி கதை கேட்டது என்ற போதிலும் சரி; இருளை கடல் இழுத்து போர்த்தி இருந்தது என்ற போதிலும் சரி; கடற்கரை மணலில் எனது பாதங்கள் வேர்களுடன் பரவின என்ற போதிலும் சரி; அந்தச் சொற்கள் என் அப்பாவித்தனத்தின் மீதோ அல்லது அவன் மீதான என் நம்பிக்கையின் மீதோ கூடுகட்டி அமர்ந்திருந்தன என்ற போதிலும் சரி; இலக்கியச் சுவை ஆங்காங்கே ஏறி உட்கார்ந்து ஒரு கிராமத்துச் சிறுவனின் விகடமில்லா புன்னகையை உதிர்த்துவிட்டுச் செல்வதை நிச்சயம் இலக்கிய ரசிகர்கள் வாசித்து இன்புறுவர். வாசிக்க வாசிக்க திகட்டாத அச் சொல்லோவியங்கள் ஆங்காங்கே புத்தகத்துக்கு  கசப்பு மருந்தை மூடி வைத்திருக்கும் இனிப்பாக உதவுகிறது. கவிதைகள் கொஞ்சிக்கொஞ்சி கதைகேட்கும் இடங்கள் அவை.

வேப்ப மரம் ஒன்று நம்பிக்கையின் சாயலாய் தோன்றி வெட்டி வீழ்த்தப்பட்ட  மரக்கட்டையாகக் காணும் அவ நம்பிக்கையில் – நிராசையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனநிலையையும் போராளிக் கண்களிடையே கண்டு தெளிகிறோம். அது ஒரு நல்ல உதாரண பிம்பமாக ஆங்காங்கே தலை சிலுப்பி தன் இருப்பை நிலைநிறுத்துகிறது.

தமிழக மக்கள் கொடுத்த ஆதரவு, புகலிடம், முன்னுரிமை, வைத்திருந்த மரியாதை, விருந்தோம்பல், உயர்ந்த எண்ணம் என்பன நெஞ்சை நெகிழ வைப்பன. போராளி இளஞர்களும் அதற்கேற்ப நடந்து கொண்டார்கள் என்பது நெஞ்சை நிறைக்கிறது. மனம் பெருமிதத்தில் பொங்குகிறது.

ஆங்காங்கே இளைஞர்களுக்குள் நடைபெறும் நகைச்சுவைகளோவெனில்  மனசை இலகுபடுத்த வல்ல வீரியம் கொண்டவை. காட்சி வர்ணனைகளும் நகைச்சுவைகளும் அபூர்வமாக இந்த கோட்பாடு, சித்தாந்தம், அரசியல் போன்றவற்றுக்கும் பொருந்திப் போகிறது என்பது அதிசயம். கவிதாம்சமும் தமிழும் சமயோசிதத்தோடு ஆங்காங்கே  லாவண்யமாய் புத்தகம் மீது நடைபோடுகிறன.

இருந்த போதும், உண்மைகள் முரண்டு பிடித்துக் கொண்டு முன் நிற்பதால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் லாவண்யங்கள் விலகி ஓடி விடுகின்றன என்பதையும் சொல்ல வேண்டும். உண்மைக்கு அத்தகைய வீரியம் உண்டு. அது எதற்குள்ளும் மறந்தும் மறைந்து விடுவதில்லை. மேலும் இது நம்மவர் கதை. இரத்தமும் சதையும் உயிரும் மனமும் கொண்ட போராளிகளின் வாழ்வா சாவா என்பது பற்றிய; உண்மை கொண்டெழுதிய திகில் சித்திரம். இங்கு ரசிக்க ஏது அவகாசம்? நின்று பார்க்க ஏது திராணி? நிதானிக்க ஏது நேரம்? எல்லோரும் தப்பினார்களா என்பதே தேடலாக மனம் எங்கும் அவர்களே வியாபித்திருக்கையில்….

இதுவரை பெரும்பாலான பொது சனங்களால் அறியப்படாத செய்தி ஒன்றை; உடலின் உள்பக்கம் ஒன்றை; சத்திர சிகிச்சை மேடையில் வைத்து நம் நோய்வாய்ப் பட்ட உடலை நமக்குத் திறந்து காட்டி இருக்கிறது இந்தப் புத்தகம்.  மேலும், அது ஈழத்தமிழ் சமூகத்துக்காக இதுவரை தூக்கிச் சுமந்த பாரங்களை எல்லாம் சமூகத்தின் மடியில் இறக்கி வைத்து இளைப்பாறுகிறது.

இறுதியாக ஆசிரியர் ரவி யின் தமிழில் சொல்வதாக இருந்தால் ’அலைகொண்ட கடலை உள்ளுக்குள் விழுங்கி இருந்த உயிர் ஒன்று, அதற்குள் மூழ்கடித்திருந்த சொற்களைக் கோர்த்து, அந்த மந்திரக்கயிறைப் பிடித்த படி சுயகம்பிச் சிறைக்குள் இருந்து தன் உடலுக்குள் திரும்பிய கதை இது’.

*

போராளி அன்ப,

இனியேனும் நீ இளைப்பாறுவாயாக; பாரம் சுமந்தது போதும்; பஞ்சுபோல் பாரமற்று இனி நீ இருப்பாயாக!! வரலாறு அதனைச் சுமந்து, எதிர்காலம் ’படிக்கக்’ கொடுக்கட்டும்!

*

இந்தப் புத்தகத்தை எனக்கு அன்பளித்த நீண்டகால சினேகிதி சகோதரி பாமதிக்கு நன்றி. என் புத்தகத் தட்டில் காத்திரமான கனம் ஒன்று தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

 • யசோதா பத்மநாதன்

***

வாசிப்பு-20

 • வாசன் (இலண்டன்)

படுகொலைகளை எழுதுதல்: ரவியின் ‘குமிழி’ நாவல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்!

 • நூல் அறிமுகம்

“வரலாற்றைக் காட்டிலும் நினைவு என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்த நிகழ்வாகும் “– தீபேஷ் சக்ரபர்த்தி (வரலாற்றாசிரியர்)

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமுரசு இதழில் ‘அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை’ என்ற தொடரினை எழுதும்போது தோழர் அற்புதன் அதனை பின்வருமாறு ஆரம்பிக்கிறார். “’அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை’ என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது என் நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் கால அவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி. மாறாக இத்தொடரில் முக்கியமான அரசியல்வாதிகளது கொலைகள் பற்றியே சொல்லப்படும்.அவற்றை ஓட்டி அந்தக் கொலைகள் நடந்த காலச் சூழலின் அரசியல் வெப்ப தட்ப நிலைகள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லப்படும்.” – இன்று தோழர் அற்புதன் படுகொலை செய்யப்பட்டு சுமார் 2௦ வருடங்களுக்கு மேலாகின்றன. ஆயினும் அவர் கூறியபடி ஈழ விடுதலைப் போராட்ட வரலாறானது இன்னமும் எழுதப் படாமலேயே இருக்கின்றது. இப்போராட்ட வரலாறு குறித்து இதுவரை ஏராளமான நூல்கள், தொடர்கள் வெளி வந்து கொண்டிருக்கின்ற போதிலும் அவைகள் அனைத்துமே வெறும் சாட்சியங்களாகவும் அனுபவங்களாகவும் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. சி.புஷ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ கணேசன் ஐயரின் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ செழியனின் ‘வானத்தைப் பிளந்த கதை’ தமிழினியின் ‘கூர்வாளின் நிழலில்’ என்று விரல் விட்டு என்ன முடியாதளவிற்கு சாட்சியங்களினால் நிறைந்திருக்கும் ஈழ விடுதலைப் போராட்ட நூல்கள் ஒரு குறிப்பிட்ட மனிதரின் அனுபவங்களை அல்லது ஒரு ஒரு குறிபிட்ட காலப்பகுதியில் இடம் பெற்ற சம்பவங்களை மட்டுமே மீண்டும் மீண்டும் கூறி நிற்கின்றன.

இப்போது மீண்டும் ஈழ விடுதலைப் போரின் சாட்சியமாக புதியதொரு நூலாக ரவி எழுதிய ‘குமிழி’ என்ற நாவல் வெளிவந்துள்ளது. ‘விடியல்’ பதிப்பகத்தினரால் மிகக் குறைந்த எழுத்துப் பிழைகளுடன் பதிப்பிக்கப்பட்டுள்ள 225 பக்கங்களை உள்ளடக்கிய இந்நாவலில் ரவி, ஈழ விடுதலைப் போரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ஒரு Semi Autobiography வடிவில் எழுதியுள்ளார்.

ரவி, ஈழ புகலிட இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஆளுமை. 80 களின் இறுதியிலும் 9௦ களிலும் ‘மனிதம்’ என்ற இதழினை குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு தொடர்ச்சியாக நடாத்தியதன் மூலமும் பல்வேறு விதமான இலக்கிய, சமூக செயற்பாடுகளின் மூலமும் புகலிடத்தில் நன்கு அறியப்பட்டவர். அவர் தனது இளமைக் காலங்களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயற்பட்டு ஆயுதப்பயிற்சியும் பெற்றுக் கொண்டவர். அவர் 1984 இல் இருந்து 1985 வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

‘இண்டைக்கும் அதே கனவா, அப்பா?’- நள்ளிரவில் கெட்ட கனவொன்றினை கண்டு திடுக்கிட்டு விழித்தெழும் தனது தகப்பனை பார்த்து, ஒரு மகள் கேட்கும் கேள்வியுடன் நாவல் ஆரம்பமாகின்றது. மேற்குலக நாடொன்றில் (சுவிற்சிலாந்தில்) தஞ்சம் புகுந்துள்ள அவன், 27 வருடங்களுக்கு முன்னர் வேலை பார்த்த ஒரு மலை உச்சியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றிற்கு மீள் வருகை புரிவதுடன் ஆரம்பமாகும் அடுத்த அத்தியாயம் அந்த ஐரோப்பிய மனிதர்களுடனான அவனது உறவுகள், பிரிவுகள் அவர்கள் மரணங்கள் ஏற்படுத்துகின்ற துயரங்களை பேசி நிற்கின்றது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் அவனது நினைவுகளாக தாயகம் நோக்கி பயணிக்கும் நாவலானது அவனது வறிய குடும்ப சூழ்நிலைகளையும் அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளையும் விபரித்து நிற்கின்றது. அவனது மொரட்டுவ பல்கலைக்கழக வாழ்வும், 83 இனக்கலவரமும், அக்கலவரத்தில் பலியான, அவன் பறி கொடுத்த நண்பர்களும், அனைத்தையும் இழந்து அவன் அகதியாக கொழும்பில் இருந்து கப்பலில் ஊர் திரும்புவதும் அவனது பறி போன கல்வியும் அவனது அரசியல் வாழ்விற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக அமைந்து விடுகின்றன. அதுவே அவனை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைத்து, அவனை தமிழகத்திற்கு ஆயுத பயிற்சி பெற அனுப்பியும் வைத்து விடுகின்றது.

அதன் பின் இந்நாவலானது தமிழகத்தினை மட்டுமே களமாகக் கொண்டு நகர்கின்றது. ஒரு திகில் நிறைந்த கடல் பயணத்துடன், இலட்சிய வேட்கையுடனும் அரசியல் பற்றுறுதியுடனும் தமிழகத்தில் கால் பதிக்கும் அவனது நம்பிக்கைகள் யாவும் அவனது ஆரம்பகால பயிற்சிமுகாம் வாழ்விலேயே சிதைவடைந்து விடுகின்றன. அங்கு அமைப்பிற்குள் நடைபெறும் கொடூரமான கொலைகளும் குரூரமான சித்திரவதைகளும் உட்கட்சி மோதல்களும் அவனிற்கு அமைப்பின் மீதான நம்பிக்கையை மட்டுமன்றி இந்த ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீதான நம்பிக்கையினையும் இழக்கச் செய்கின்றன. பெரும் முயற்சியின் பின் தாயகம் (தனது வீடு) நோக்கித் திரும்புகின்றான். தனது அமைப்பிற்கெதிராக சில வேலைத்திட்டங்களை முன்னேடுக்கின்றான். தாயகத்திலும் அவனது அமைப்பினரின் அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இறுதியில் தனது அமைப்பிலிருந்து விலகி, தனது ஏந்திய கனவுகளைத் தொலைத்து, மனதில் அரும்பிய காதலினைத் துறந்து, நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு புதிய வாழ்வினை வாழ, மேற்குலக நாடொன்றினை நோக்கி விமானமொன்றில் பறப்பதுடன் இந்நாவல் முற்றுப் பெறுகின்றது.

ஆரம்பத்தில் மேற்கு நாடொன்றிலும், ஈழத்திலும் தன்மை ஒருமையில் ‘நான்’ என நகரும் கதாபாத்திரம் தமிழகத்தினை அடைந்ததும் ரகு என்ற பெயர் பெற்று பின் ஒரு இடைவெளியில் ஜோன் என்ற பெயரினைப் பெறுகின்றது. ஒரேயொரு அத்தியாயத்தில் வேப்பமரமொன்று தன கதையைக் கூறிக் கதையின் பகைப்புலத்தை பலப்படுத்தி நிற்கின்றது.

நேர்த்தியான, ஒரு மென்மையான படைப்பு மொழியில், ஒரு நவீனமான எழுத்து நடையில், பல்வேறு விதமான படிமங்களையும் உருவகங்களையும் புதிதாகப் புகுத்தி, ரவி இந்நாவலை மிகவும் அனாயாசமாக எழுதிச் சென்றிருக்கிறார். தன் மனதில் உள்ள, தான் பார்த்த களங்களை, நிலங்களை மற்றவர்களிடம் கடத்துவதில் ஒரு படைப்பாளியாக அவர் பெரு வெற்றியொன்றினைப் பெற்றுச் செல்கிறார். ஒரு ஐரோப்பிய தேசமொன்றின் வெண் பனி கொட்டும் பனிப் பிரதேசத்தினையும், தமிழகத்தின் எரிக்கின்ற வெயிலினையும் தகிக்கின்ற வெக்கையினையும் மிகவும் இலாவகமாக எம்மிடையே கடத்தி விடுகின்றார். பலத்த வெப்பத்தினையும் சூட்டையும் வெளிப்படுத்தும் சவுக்கந்தோப்புக் காடுகளும் அதற்குள் குடில்களாக அமைந்த பயிற்சி முகாம்களும் அதனை அண்மித்த வயல்வெளிகளும் எம்மை அரவணைத்துச் செல்லும் அதேவேளை , அந்தக் காட்டின் மத்தியில் தனியாக, விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்வதற்கும் கொடூரமான கொலைகள் புரிவதற்குமாக அமைக்கப்பட்ட தனிக் குடிலொன்று நாவலின் இறுதிவரை எம்மைப் பயமுறுத்தியே நிற்கின்றது.

வாசிக்கும் போது எமக்குக் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’ ஞாபகத்திற்கு வருகின்றது. அது சுமார் 3௦ வருடங்களுக்கு முன்பு ஈழ விடுதலைப் போரின், இதே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கொடூரமான பக்கங்களை அங்கு நடைபெற்ற படுகொலைகளை எமக்கு வெளிப்படுத்திய நாவல். இப்போது ரவி அந்தக் கொடூரம் நிறைந்த வரலாற்றுப் பக்கங்களை அதில் இடம் பெற்ற படுகொலைகளை மீண்டும் எழுதிச் செல்கிறார். அதன் மூலம் அதனை மீண்டும் எமக்கு நினைவு படுத்தி நிற்கின்றார்.

இந்நூலினை தான் ஒரு ஆவணமாக எழுத முற்பட்டதாகவும், ஆனால் பல விடயங்கள் தனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லாதபடியினால் இதனை ஒரு புனைவாக நாவல் வடிவில் எழுதியுள்ளதாகவும் தனது பின்னுரையில் ரவி குறிப்பிடுகிறார். உண்மைதான். இது ஒரு வரலாற்றுரீதியான ஆய்வு நூல் இல்லை என்பது எமக்கு கொஞ்சம் ஏமாற்றத்தினையே அளிக்கின்றது. ஆயினும் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளையும் அதன் பரப்புக்களையும் விசாலிக்கும் வகையில் மீண்டுமொரு நாவல் எமக்குக் கிடைத்துள்ளது குறித்து நாம் பெருமை கொள்ளலாம்.

ஈழ விடுதலை வரலாற்றின் தலைவர்களாகவும் தளபதிகளாகவும் தடம்பதித்த நாம் அறிந்த நிஜமனிதர்களான உமா மகேஸ்வரன், சந்ததியார், வாசுதேவா, காந்தன், ராஜன், வாமதேவன் என பலரும் கதை மாந்தர்களாக இங்கு வலம் வருகின்றார்கள். அத்துடன் நாம் அறியாத பல மனிதர்களும் உலா வருகின்றனர். மேலும் ரவியும் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். ”இங்கு ஒருவரின் பாத்திரமானது பன்மைகளின் சிக்கல் நிறைந்த தொகுப்பு என நான் காண்கிறேன். அதாவது ஒத்திசைவானதும் முரண்கள் கொண்டதுமான வெவ்வேறான பாத்திரங்களின் ஒரு சேர்க்கை”. இதன்படியே இங்கு பல கற்பனைப் பாத்திரங்கள் உலா வருவதினையும் எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. எனவே இங்கு எமக்குள் சில குழப்பங்கள் ஏற்படுவதினையும் எம்மால் தவிர்க்க முடியவில்லை. இங்கு வரலாற்றையும் புனைவினையும் பிரிக்கின்ற கோடுகள் எவை? யதார்த்தங்களும் கற்பனைகளும் இங்கு எவ்விதங்களில் வேறுபடுகின்றன? வரலாற்றிற்கும் புனைவிற்கும் இடையே எமது மனம் ஒரு தத்தளிப்பினை எதிர்கொள்கின்றது.

இவற்றினையெல்லாம் வாசிக்கும்போது எம்மிடையே ஒரு கேள்வி தொக்கி நிற்கின்றது. எம்மீது வலிந்து திணிக்கப்பட்ட போரை எதிர்கொண்ட எம் மக்களது போராட்டத்தின் இருண்ட பக்கங்கள் மட்டும்தான் மீண்டும் மீண்டும் எம்மால் எழுதப் பட வேண்டுமா? ஒருதடவை சிந்தனையாளரும் எழுத்தாளருமான தாரிக் அலி கூறினார். “நீங்கள் ஒரு குரூரமான ஆக்கிரமிப்பினை எதிர்கொள்ளும்போது, உங்களின் எதிர்ப்பு அழகானதாக இருக்க முடியாது.” உண்மை. இவ்வகையில் எமது போராட்டமும் அழகானதாக நேர்த்தியானதாக இருக்க முடியாதுதான். ஆனால் அது இத்தனை கொடூரம் நிறைந்தாகவும் குரூரமானதாகவும் ஏன் மாறியது? விடை தெரியாத இந்தக் கேள்விகளுக்கு இந்நூலிலும் விடை இல்லை.

இது போன்ற நூல்களின் வருகைக்குப் பின்பாக உருவாகின்ற சிக்கல்களும் எமது கவன வட்டத்திற்கு வருகின்றன. முக்கியமாக இதே போன்று ஒரு அமைப்பின் மீது மீண்டும் மீண்டும் வைக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் ஆனது மற்றைய அமைப்பினர் தங்களை ஏதோ புனிதமானவர்களாகக் காட்டும் முயற்சிகளுக்கு உறுதுணையாக அமைந்து விடுகின்றது. இதில் முக்கியமாக விடுதலைப்புலிகள் அமைப்பினரைக் குறிப்பிடலாம். ‘புதியதோர் உலகம்’ வெளிவந்த காலப்பகுதியில் அவர்கள் அதனைப் பெரிதாக விதந்தோதியதும் அந்நூலின் விநியோகங்களை அவர்கள் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொண்டதினையும் நாம் அறிவோம். ஆயினும் புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையாவினதும் அவரது அணியினைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான போராளிகளினதும் படுகொலைகளும், முஸ்லிம் சமூகத்தின் மீதான முரண்பாடுகளின் பின்பு அவ் அமைப்பில் இருந்த பல முஸ்லிம் இளைஞர்களினது படுகொலைகளும் இன்னமும் பேசப்படாமலே இருக்கின்றன. அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்குள் நிகழ்ந்த இந்த உடைவுகளுக்கும் பிளவுகளுக்கும் அவ் அமைப்பிற்குள் இருந்த உட்கட்சி ஜனநாயகமும், உட்கட்சி போராட்டங்களுமே காரணம் என்று கூறி, ஒரு அமைப்பிற்கு இவைகள் அனைத்துமே ஆபத்தானவை என்று வாதிடுவோருக்கும் இது போன்ற நூல்கள் ஆதார பலமாக மாறிவிடுகின்ற ஆபத்துக்களும் உருவாகி விடுகின்றன.

வரலாற்றைக் காட்டிலும் நினைவு என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்த நிகழ்வாகும்’ வரலாற்றாசிரியர் தீபேஷ் சக்ரபர்த்தியின் வாசகங்கள் எமது நினைவிற்குள் வருகின்றன. வரலாறு எனும் இடிபாடுகளின் கற்குவியல்களிளிருந்து வரலாற்றாசிரியன் மிகுந்த சிரமத்தின் மத்தியில் உண்மைகளினது பல்வேறு பரிணாமங்களுக்கு மத்தியிலேயே தனது வரலாற்றினை எழுதிச் செல்லுகிறான். இங்கு ரவியும் தனது நினைவுகள் எனும் இடிபாடுகளின் கற்குவியல்களில் இருந்து பலத்த சிரமத்தின் மத்தியில் பல கற்களினை எடுத்து உண்மைகளும் புனைவுகளும் கலந்து ஒரு நாவலினைச் செதுக்கியிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார்.

ஆயினும் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எம்மிடையே? தனது முன்னுரையில் ரவி ஊதிப் பெருத்து ஒரு குமிழியாக அழகு காட்டிய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனும் அமைப்பின் உடைவினை தான் இங்கு எழுதியிருப்பதாகக் கூறுகிறார். ஆனால் வரலாற்றில் வாழ்ந்த எமக்கு அதனை ஒரு குமிழியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிகரான வலிமையினைக் கொண்டிருந்த ஒரு அமைப்பு, மக்களின் தேசிய விடுதலைக்கு முன்பாக அவர்களிற்கிடையேயான வர்க்க விடுதலையினையும் சமூக விடுதலையினையும் கோரி நின்ற, இடது சாரி சிந்தனையாளர்களினாலும் செயற்பாட்டாளர்களினாலும் உருவாக்கப்பட்ட ஒரு பலமான அமைப்பு, ஒடுக்கப்பட்ட மக்களிடையேயும் அடித்தட்டு மக்களிடையேயும் ஆழ ஊடுருவி அவர்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த ஒரு அமைப்பு, விவசாய, கடற்றொழிலாளர் சங்கங்களையும் பல தொழிலார் அமைப்புக்களையும் உருவாகிய ஒரு அமைப்பு, ஒரு பொருண்மிய மேம்பாட்டினை முன்னெடுக்கும் வகையிலும் மக்களின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்த ஒரு அமைப்பு, எல்லைப்புறக் கிராமங்களான, மற்றவர்கள் பெயர்களைக் கூட அறிந்திராத பிரதேசங்களில் தமது காலடித் தடங்களைப் பதித்து மக்கள் இயக்கங்களைக் கட்டியெழுப்பி, போர்முனையில் அவர்களும் தயாராகும் வகையில் உள்ளூரிலேயே ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்ட ஒரு அமைப்பு, இன்று ஒரு குமிழியாக உருவகிக்கப் படுகின்றது.

அன்று எண்பதுகளின் ஆரம்பத்தில் மக்கள் மனதில் ஒரு மாபெரும் விருட்சமாக விஸ்வரூபம் உருவெடுத்திருந்த ஒரு அமைப்பு இன்று ஒரு குமிழியாகச் சித்தரிக்கப்படுகின்றது. எமக்கு ஏற்றுக் கொள்ள கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கின்றது. ஆனால் அது உண்மையாகி விட்டது. அது இன்று சிதறிச் சிதைந்து உடைந்து சின்னாபின்னமாகி விட்டது. இங்கு சிதறிச் சிதைந்து உடைந்து சுக்கு நூறாகியது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற அமைப்பு மட்டும்தானா? இல்லை. கூடவே எமது ஈழ விடுதலைப் போராட்டமும்தான். இந்த துயரம் நிறைந்த வரலாற்றினை எழுதுவதற்கு தொடர்ந்தும் தொடர்ந்தும் சாட்சிகள் முயன்று கொண்டேயிருப்பார்கள். முடிவற்ற இத்தொடர் பயணத்தில் குமிழிக்கும் ஒரு காத்திரமான பங்குண்டு.

vasan456@hotmail.com


***

வாசிப்பு-21

 • சுரேகா பரம் (இலங்கை)

இயற்கை மீதான மோகம் , சமூக நேசிப்பு , கூர்மையான ஆய்ந்தறியும் ஆற்றல் , கல்வி மேல் ஆர்வம் , இவை எல்லாவற்றையும் இயல்பாகவே கொண்டிருந்த ஓர் இளைஞன் , தன் இளமைக்காலத்து நம்பிக்கைகளின் மேல் விழுந்த ஒவ்வொரு அசைவுகளையும் தன் இறந்த காலத்தின் மேல் நின்றுகொண்டு , எதிர்காலச் சமூகத்திடம் பேசுகின்ற ஓர் இலக்கிய வடிவமாகவே நான் ரவியண்ணா எழுதியிருக்கும் இந்தக் “குமிழி ” நாவலைப் பார்க்கின்றேன்.

தந்தையின் இழப்பிற்குப் பின்னர் குடும்பத்தினதும் அக்காமாரினதும் எதிர்காலத் தூணாக / தாயின் நிகழ்காலச் சுமையைத் தணிக்கப்போகும் ஒரு வாரிசாக , தன் மீது சுமத்தப்பட்ட அத்தனை சுமைகளையும் கல்வி என்கின்ற ஓர் ஆயுதத்தினாலே தகர்த்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் மொரட்டுவப் பல்கலைக்கழக மாணவனாக பிரவேசிக்கின்றான் அந்த இளைஞன். இனக்கலவரத்தின் கொடூர முகங்களையெல்லாம் அனுபவிக்கும் ஆரம்ப இடமாக மொரட்டுவ பல்கலைக்கழகம் அமைந்துவிடுகின்றது. ஒரு முறை சிங்கள விரிவுரையாளர் ,கட்டடக்கலைக் கலைஞனாகும் பெருவிருப்புடன் படைப்பாக்க விளக்க வரைபடங்களுடன் போராடிக்கொண்டிருந்த சக நண்பனைப் பார்த்து , “ஏன் நீயெல்லாம் ஒரு ஆக்கிரெக்ரா வர யோசித்தாய் ? பேசாமல் போய் குண்டு வைக்கிறதைப்பற்றி யோசி “எனக் கிண்டலடிக்கின்றார்.பிறிதொருமுறை ,சிங்கள இனத்தைச் சேர்ந்த சக மாணவ நண்பன் இவர்கள் தமிழ் கதைத்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ” பேணியொன்றுக்குள் சில கற்களைப் போட்டு அட்டகாசமாகக் குலுக்கியபடி நானும் உங்களுடன் தமிழ் கதைக்கின்றேன் ” என்கிறான்.

இவையெல்லாம் சிறுக சிறுக இனவிடுதலைக்கான / இனத்தின் இருத்தலுக்கான சிறகுகளை அவனிடம் முளைக்கவைக்கின்றன. 1983 யூலைக் கடைசிப்பகுதி. இரண்டாம் வருடப்பரீட்சை நிறைவுற்ற கட்டத்தில் தான் வாழ்தலின் பொருட்டான புதுப் பரீட்சைகள் அவனை வெகுவாக உலுப்பிவிடுகின்றன.இலங்கையில் மீண்டும் தாண்டவமாடிய யூலைக்கலவரம்சிங்கள மாணவர்களைத் தப்பித்து வெளியேற்றவைக்கின்றன. அதே நேரம் அநாதரவற்ற நிலையில் அவனையும், ஏனைய தமிழ் மாணவர்களையும் தன்னந்தனியன்களாகத் தவிக்கவிடுகின்றன. ரோகண விஜயவீராவைத் தலைவராகக்கொண்டியங்கிய ஜே.வி.பியினர் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து தப்பவைத்து இரத்மலானை விமானநிலையத்திற்கு அனுப்பிவிடுகின்றனர்.

பொறியியல் பீட கடைசிப்பரீட்சையையும் முடித்திருந்த அயல்கிராம நண்பன் மற்றும் அவனது சக நண்பர்கள் மூவரும் டெகிவல தேவாலயத்தில் கொல்லப்பட்ட துயரச்சம்பவமும் அந்த இழப்பும் , சொந்த நாட்டிலேயே அகதியாக அனுபவித்த இதர அவலங்களும் செஞ்சிலுவைச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடைசிக்கப்பலுடன் அவனது கட்டடக்கலை மீதான கனவுகளையும் கற்பனைகளையும் கடலுடனேயே கரைத்துவிட புதிய சிறகொன்றுடன் ஊரை அடைகின்றான்.

“நீயும் இயக்கத்துக்குப் போறியாம் மோனை. எல்லாரும் கதைக்குதுகள். வீட்டிலை எவ்வளவு பொறுப்பு இருக்கடா. எங்களை நடுத்தெருவிலை விட்டிட்டுப் போயிடாதை மோனை . உன்னை ஒரு தூண் போல நம்பித்தான் இந்தக் குடும்பம் இருக்குது….”

” நான் போகயில்லை .ஆர் சொன்னது ? சும்மா ஆக்களின்ரை கதையளைக் கேட்டு ஏன் அழுகிறாய் ? “

“அப்பிடியெண்டு நீ எனக்கு மேலை சத்தியம் பண்ணு “

“நீ பெத்த பிள்ளையில நம்பிக்கை இல்லையெண்டால் சொல்லு. நான் சத்தியம் பண்ணுறன்”

தாயைச் சமாளித்தாலும் , நான்கு அக்காமார். மிக மோசமாக வேரூன்றிக்கிடந்த சீதனமுறைமை , கரை தாண்ட முடியாத கல்விக்கான போராட்டம் , மரண அச்சங்கள் என அப்போதிருந்த சங்கிலித்தொடரான அனைத்துச் சுமைகளிலிருந்தும் விடுபட தான் தேர்ந்தெடுத்த விடுதலைப் போராட்டப் பயணம் உதவும் என்பதே அவனின்அப்போதய இறுதி நம்பிக்கையாகத் திகழ்ந்தது. தமிழ்ச்சமூகத்தில் பரவிக்கிடந்த போராட்டத்தின் மீதான நம்பிக்கைகளும் , போராளிகளைத் தமிழ்த்தேசக்காவலர்களாகவும் மீட்பர்களாகவும் காட்டிக்கொண்ட பிரச்சார உத்திகளும் அவனைப் போராளியாகவே ஆக்கிப்போட்டிருந்தது.

” எனது குடும்பத்துள் மட்டும் புதைந்திருந்த வேர்களைப் புரட்டி இந்தச் சமூகத்துள் ஊன்றிவிட்டதான நினைப்பில் மனம் ஒருநிலையில் நிலைகொள்ளாமல் தவித்தது ” என்றவாறு அவனது நம்பிக்கை வெளிப்படுத்தப்படுகின்றது. சமூகத்திற்காகப் போராடப் போகின்றேன் என்றும் , சுதந்திர சோசலிச தமிழீழ நிழலில் இளைப்பாறுவோம் என்றும் அவன் கண்ட கனவு தமிழ்நாட்டுக் கரைக்கு அவனை கொண்டுவந்து விடுகின்றது.

“எல்லாரும் உங்கடை சொந்தப்பெயரைச் சொல்ல வேண்டாம். உங்களுக்கு ஒரு கழகப்பெயரைச்சொல்லுங்கோ ” அன்றிலிருந்து அவன் , ரகுவாக தன்னை ஆக்கிக்கொள்கின்றான்.எப்படியேனும் தான்ஈழத்தின் கரையில் போராளியாகக் காலடி வைப்பேன். தமிழரின் விடுதலைக் கனவை நனவாக்க பங்களிப்பேன் , போராட்டத்தில் பங்காற்றுவேன். இழந்து போன அனைத்துக்குமான வெறியை தீர்த்துக்கொள்வேன் எனக் காத்திருக்கின்ற ரகுவின் போராளி மனசு , தொடர்ச்சியாக தன் இயக்கத்திற்குள் காண்கின்ற ஒவ்வொரு சம்பவங்களாலும் நொந்துகொள்கின்றது. “யாருடன் எதைப் பகிர்வது என்பது தொடக்கம் எவன் உளவாளி , எப்போது போட்டுக்கொடுப்பான் ” எனத் தெரியாது சொந்த இயக்கத்திற்குள்ளே நிகழும் ஒவ்வொரு சம்பவமும் உளப்போராட்டத்தை மலையளவில் வளர்த்துக்கொண்டே போகின்றது.

“திடீரென சவுக்கம் காட்டுக்குள்ளிருந்து ஒரு அலறல் கேட்டது. மனதில் ஆழ இறங்குகின்ற அலறல். அது நரம்புகளை கைப்பிடியாய்ப் பிடித்து இழுத்து உலுக்கியது. மரணஒலி என்று கதைகளில் படித்ததை இப்போ ரகு அனுபவித்துக்காண்டிருந்தான்”.

“நீ புலியின்ர ஆள்தான்ரா …நாயே…”உனக்கெல்லாம் என்னடா கழகத்தின்ர பெனியன்… எழும்படா துரோகி…”.

வன்மமான பேச்சுக்கள் மட்டுமின்றி போராட வந்தவனையே சிதைத்துப் போடுமளவிற்கு தனிமனிதப் பகை / விரோதங்கள் இரத்தமும் சதையுமாகப் பதியப்பட்டிருப்பதுடன் சவுக்கம் மரப்பச்சை இலைகளில் இயல்பாக ஏற்படும் இச்சைகளையெல்லாம் எங்கோ ஒரு வெளியில் இழுத்துப்போடுமளவிற்கு சவுக்கம் காடுகள் பயங்கர உணர்வை ஏற்படுத்தி , மனதிற்கு வெகுநேர மௌனங்களைப் பரிசளிக்கின்றது.

நாவலில் வரும் கஸ்ரோ என்கின்ற பாத்திரம் அந்த அமைப்பிற்குள் ஓர் சிறு ஔிக்கீற்றென படர்கின்றதும் சமூகத்திற்கு எக்காலமும் பொருத்தமான விடயங்களைப் பேசுவதும் நின்று நிதானிக்கவைப்பவை. “அரசியல் அறிவூட்டப்படாத இராணுவம் ஒருபோதும் சோசலிச விடுதலையை பெற்றுத்தரப்போவதில்லை. வெறும் இராணுவ அதிகாரம் சொந்த மக்களுக்கு எதிராகவே தனது துப்பாக்கியை திருப்பக்கூடியது. அது விடுதலை அடைந்தால் கூட அதைச்செய்யும் ”

கஸ்ரோவிற்கும் ரகுவிற்குமான உரையாடல் தவிர்க்கமுடியாது நோக்கப்பட வேண்டிய ஒன்று என்பதற்கு அப்பால், கஸ்ரோ யதார்த்தமாக பேசுவதை ரகு மனதினால் முழுவாரியாகச் சுவாசிக்கின்ற போதும் , தன் நிகழ்காலத்தின் மீது தானாகக் கட்டமைத்து வைத்திருக்கின்ற தனது இறுதி நம்பிக்கையை எந்தவொரு கருத்தியலோ / சக போராளியோ உடைத்துவிடக் கூடாதபடி தன்னம்பிக்கைகளால் தன்னை ஆள்கின்றான். கதையை நகர்த்தும் பாங்கில் ஒவ்வொரு இளைஞர்களுக்குமான உரையாடல்கள் மூலம் சம கால கருத்தியல்களைப்பதிவு செய்கின்றமை வியந்துபார்க்கக்கூடியதுடன் நாவலின் நகர்விற்கு இதமாக அமைந்திருந்தது.

அந்த இயக்கத்திற்குள்ளே தம்மை முதன்மைப்படுத்தித் திரிகின்ற பொதுவிதிகளைப் பின்பற்றாது, அடாவடித்தனமாக அலைகின்ற சில இளைஞர்களும் வந்துபோகின்றனர். “மொட்டை மூர்த்தியும் அவனது அடியாட்களும் விசுக்கென்று குசினுக்குள் வந்தார்கள். போதுமான இறைச்சித்துண்டுகளை அண்டாவுக்குள் சுழியோடி எடுத்துக் கொடுத்தார்கள், சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள்……. “

“ஏன்ரா இவங்கள் லைனில நிண்டு சாப்பாடு வாங்கிச் சாப்பிடப் பழகயில்லையா ? இரகசியமாய்ப்பேசினான் ஆனந்தன்.

“சந்ததியாரைப் போல ஆரும் சோசலிசம் பேசுற ஆக்களுக்குத்தான் அதெல்லாம் ..”

மேலும் சமூகத்தில் கட்டவிழ்ந்து காணப்பட்ட சாதிய வேறுபாடுகள் , பால்நிலை அசமந்தப் போக்குகள் , கடவுள் , மதம் , காதல் ,வேட்கை , இளம்பருவத்து உணர்வுகள் இவை பற்றியும் நாவல் பேசுகின்றது. ரகுவின் ஆற்றலும் இயல்பான முனைப்பும் தன்னார்வமும் அவனை ஜோனாக மாற்றுகின்றது. புதிய பெயருடன் தொலைத்தொடர்பு முகாமிற்கு வானொலி தொலைத்தொடர்புக் கருவிகளுடனான பயிற்சிக்கெனச் செல்கின்றான். அவனுக்கு இந்த இடம் வித்தியாசமான ரம்மியமான சூழலை ஏற்படுத்துகின்றது. இயற்கை மீதான அவன் ஈடுபாடுகளை யோகனின் “உனக்கு இந்த நிலாவிலை அதுவும் ஆற்றங்கரையில கவிதை வரோணுமே ” என்ற வார்த்தைகள் வெளிக்கொணர்கின்றன.

அந்த முகாமின் அருகே பெண்களுக்கான முகாமும் இருக்கின்றது. பெண் தோழர்களுக்கு ஆங்கில வகுப்பு எடுக்கும் பொறுப்பும் ஜோனை வந்தடைகின்றது. அங்குதான் இளமை தனது இன்னுமோர் சிறகைக் கொடுத்து, அங்கேயே முறித்தும் போடுகின்றது. அங்கிருந்த மாலி என்கின்ற பெண்ணை மனதால் நேசிக்கின்றான். காதலைத் தெரியப்படுத்தினாலே எதுவும் நேரலாம் என்கிற பயம் , அதைவிட மாலி தன்னை விரும்புகின்றாளா என்பதை அறிய எடுக்கும் மென்னுணர்வுப்போராட்டம். இதெல்லாம் மனதை வலிகளுடனும் கண்ணை ஈரத்துடனும் ஏனோ கடக்கவைக்கின்றன. “தனது இலட்சியவாத மூட்டையை மழையில் நனைத்து சுமக்கமுடியாமல் சுமந்துசென்றான் அந்த முட்டாள் ஜோன்..” இளமைக்காலத்து கனவுகள் எதுவுமே அவன் வசமாகியிருக்கவில்லை என்பதே நாவல் முழுவதும் துரத்திவருகின்ற துயர்.

மீதியாக இருந்த துளி நம்பிக்கைளும் ஒன்றன் பின் ஒன்றாக மறைய மத்திய குழு / உட்கட்சி போராட்டம் என அனைத்தையும் அவன் அறிகின்றான். தலைமை மீதிருந்த நம்பிக்கையும் கண்முன் சரிகின்றது. உளவாளிகளைக் கூட ஊகிக்க முடியாமல் கையருகே வைத்துக்கொண்டு உண்மையான போராளிகளிடம் சந்தேகித்து துரோகியாக்குகின்ற தன்மைகள் எல்லாம் அவனை தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்துகின்றன. இத்தகைய கொடூர சம்பவங்களைக் கண்ணுற்ற நேரங்களில் “சமூக விரோதி, துரோகி ” என இராணுவ முகாம் இருந்த பெரு வீதியால் நடந்து வந்தவனைக்கூட கார்ட்போர்ட் மட்டையில் சமூகவிரோதி என அடையாளப்படுத்தி மின்கம்பத்தில் தொங்க வைத்து நெற்றியில் சுடுகின்ற இயக்கமும் கண்முன் வந்துபோவதையும் நினைத்துப்பார்க்கின்றான். இனந்தெரியாத நபர் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் கொலைகளையெல்லாம் ஏனோ ஞாபகப்படுத்துகின்றான்.

ஆக அவனுக்குத் தொலைதூரம் தெரிந்த குமிழிகள் ஒவ்வொன்றும் எட்டிப்பிடிக்க , எட்டிப்பிடிக்கவென கிட்ட நெருங்கித் தொட்டுப்பார்க்கையில் தான் வெற்றுக்குமிழிகளாகி, அவனது இளமை நாட்களையே நொறுங்க வைத்துவிடுகின்றமையை உணர்கின்றான். கடைசியில் ஈழக்கரைக்கு வந்தவன் தன் மறுகரை வாழ்வு ஏற்படுத்திய குமிழிகளுடன், இன்னமும் தமிழ் விடுதலைக் கனவுகள் நனவாகும் என்ற காத்திருப்புடன் இயங்கிக்கொண்டிருந்த மக்களையும் ,போராளிகளை மண்ணிற்கு ஈந்தளித்த பெருமையுடன் வாழ்நாட்களை எண்ணும் போராளிகளின் பெற்றோரையும் எண்ணி வெந்துபோகின்றான்.

“இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்தியபடி முழங்கையை தொடையில் ஊன்றியபடி தேம்பி அழ ஆரம்பித்தேன் “. ஓர் பெண் போராளியின் தாயருகே தன் அத்தனை கால மௌனவலிகளையும் போட்டுடைக்கின்ற போதே அவன் ஓர் புதிய பாதைக்குத் தனக்காக /தன் குடும்பத்திற்காக / தன் இளமைக்காக / தன் இருத்தலுக்காக /தன் வாழ்விற்காக தன்னை தயார்ப்படுத்திவிடுகின்றான்.

புலம்பெயர் தேசத்தில் மனைவி பிள்ளைகள் என தன் வாழ்நாட்களை அழகாக்கிய போதும், மனதில் மாறாத வடுக்களாய் இன்னமும் இளமைக்கால இழப்புகளும் ஏதோவொரு குற்றவுணர்வும் இயல்பான உறக்கத்தை நெருடியே செல்கின்றது என்பதுடன் நாவலை முற்றுப்பெறவைக்கின்றது.

ஆனாலும் “எங்கையடா அவன் …. குறுக்காலை போவானே… எங்கையடா கொண்டுபோய் விட்டனி …… என்ற சக போராளி ஒருவனின் தாயின் கதறலில் , ஈழப்போராட்டத்திற்கென தம் அரிய நாட்களை அர்ப்பணித்து இன்றும் கூட எதனையும் அனுபவிக்கமுடியாது இழந்த இழப்புக்களினை ஈடுசெய்யவியலாது அலைந்துலையும் முன்னாள் போராளிகளும் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதியும் ஏனோ மனதிற்குள் அகப்பட்டு கனதிகளைத் தந்துசெல்கின்றமை நாவல் முழுமைக்குமான வெற்றியாக நான் பார்க்கின்றேன். இந்த இடத்திலிருந்து நகர எனக்கு இன்னும் எடுக்கப்போகும் நாட்களே இதற்குச்சாட்சி.

“இலக்கியவாதி என்பவர் எதிர்காலத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு நபர். அவன் உரையாடுவது உங்களிடம் அல்ல. உங்களின் அடுத்த தலைமுறையினரிடம் தான் ” (பக்.108 “என்கதை” -கமலாதாஸ் )

தன் இளவயது வாழ்க்கையின் இடறல்களை தன்கதை கூறலாக மாத்திரமன்றி, மொழிநேர்த்தியுடன் வாசகர்களைக் கவரும் வகையில் கட்டமைத்திருக்கும் ரவியண்ணாவின் இந்தக் குமிழி நாவல் , எதிர்காலச் சந்ததியினருக்கான ஆவணமாக மட்டுமன்றி வரலாறு வழி வந்த வழிகாட்டியாகவும் அமையும் என நம்புகின்றேன்.


***

வாசிப்பு-22

 • தோழர் (இலண்டன்)

புளட் இயக்கத்தில் இருந்த ரவி என்னும் போராளியால் எழுதப்பட்டு விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் நாவல் இது. நாவல் என்றாலும்கூட இது ஒரு ஆவணமாக கருத்தக்கூடிய வகையில் இருக்கின்றது. இதுவரை வந்த எழுத்துக்கள் பெரும்பாலும் புலிகள் செய்த சகோதரப்படுகொலை பற்றியே வந்திருக்கின்றன. ஆனால் இந் நாவலில் புளட் இயக்கம் செய்த சகோதரப்படுகொலை பற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சுழிபுரத்தில் ஏழு புலிப் போராளிகள் புளட் அமைப்பினரால் கொல்லப்பட்டு அவர்களின் ஆணுறுப்பு வெட்டி வாயில் செருகி புதைக்கப்பட்ட சம்பவம் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் இந்திய புலனாய்வு அமைப்பானது ஈழ விடுதலை இயக்கங்களுக்குள் எந்தளவு ஊடுருவி சீரழித்தன என்பதும் இந் நாவலில் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் புளட் இயக்கத்தில் மத்திய கமிட்டி உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பதையும் அவர் பின்னர் இந்திய அமைதிப்படையுடன் வந்து திருகோணமலையில் இருந்து செயற்பட்டதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையறிந்த இலங்கை அரசு அந்த நபர் இலங்கை வருவதை தற்போது தடை செய்திருப்பதையும் இந் நாவல் பதிவு செய்திருக்கிறது.

தராக்கி சிவராம் புளட் இயக்கத்தில் இருந்தபோது செய்த கொலைகள் பற்றியும் பின்னர் அவர் புலி ஆதரவாளராக ஊடகவியலாளராக இருந்தபோது புளட் இயக்கத்தால் கொழும்பில் கொலை செய்யப்பட்டதும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சிவராமுக்கு முன்னர் இதே கொழும்பில் தலைவர் உமா மகேஸ்வரன் புளட் இயக்கத்தைச் சேர்ந்த சிலரால் கொல்லப்பட்ட விடயம் ஏன் இந்த நாவலில் குறிப்பிடப்படவில்லை என்பது புரியவில்லை. இது ஒரு நாவல். அதுவும் ஒரு சாதாரண போராளியாக மிகவும் சொற்ப காலங்கள் இருந்தவரால் தன் அனுபவங்களை தொகுத்து எழுதப்பட்டுள்ளது. எனவே இதில் புளட் இயக்க கதைகள் முழுவதும் இடம் பெறும் என எதிர்பார்க்க முடியாதுதான்.

ஆனாலும் இது பல முன்னாள் புளட் போராளிகளுக்கு ஒரு உந்துதலைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அவ்வாறு பலரும் எழுத முன்வரும்போது புளட் அமைப்பின் போராட்டம் பற்றிய பல விடயங்கள் மக்கள் அறியக்கூடியதாக இருக்கும் குறிப்பாக, பிரபாகரன் கொலைகள் குறித்து விமர்சித்து புதியபாதை அமைத்த புளட் இயக்கம் பின்னர் அது எப்படி ஒரு கொலைகார இயக்கமாக மாறியது என்பதற்குரிய விடை அப்போது கிடைக்கும் என்று நம்புவோமாக.

கலகம் செய்ய துணிந்தவனுக்கு உதவி செய்வதாகவே இலக்கியம் இருக்க வேண்டும் என்று மார்க்சிம் கார்க்கி கூறுகிறார். அவர் எழதிய தாய் நாவல் இன்றுவரை அவ்வாறே இருக்கிறது. அதேபோல் ஈழப் போராட்டம் பற்றிய பதிவுகள் இன்னொரு போராட்டம் முன்னெடுப்பதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். அதாவது நாம் திரும்பிப் பார்ப்பது முன்னோக்கி சரியாக நகருவதற்காக என்பது ஒவ்வொரு எழுத்தாளர் மனதிலும் இருக்க வேண்டும்.


***

வாசிப்பு-23

 • இராகவன் (இலங்கை)

குமிழி – ஒரு பார்வை, சில வார்த்தை !

வெளிவந்திருக்கவேண்டிய காலங்கடந்து வெளிவந்திருக்கிறது குமிழி. உரிய காலத்தில் வெளிவந்திருந்தால் “புதியதோர் உலகம்” பெற்றிருக்கும் இடத்தைக் ‘குமிழி’யும் பெற்றிருக்கக்கூடும். எனினும் இப்பொழுது குமிழி போன்ற பிரதிகள் வெளிவரும்போது ஒரு சலசலப்பும் படபடப்பும் ஏற்படத்தான் செய்கிறது. இதையும் கடந்து இதைப்போன்ற பிரதிகள் கொண்டிருக்கும் முக்கியத்துவம் என்ன? என்ற கேள்விதான் பிரதானமானது. அநேகமாக இவ்வகைப் பிரதிகள் எல்லாமே காலங்கடந்த ஞானத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கக் காண்கிறோம். இதற்காகத்தான் வெளிவந்திருக்க வேண்டிய காலங்கடந்து வெளிவந்திருப்பதாகக் குறிப்பிடவேண்டியிருக்கிறது.

ஈழவிடுதலைப் போராட்டமானது தோல்வியடைந்தமைக்கான சில அடிப்படைக் காரணங்களாயிருக்கின்றன. அந்தக் காரணங்களைக் குமிழி வெகு இயல்பாகவும் நேர்மையாகவும் பதிவு செய்திருக்கிறது. பேரினவாத அரசிற்கு எதிராக தொடங்கப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டமானது காலப்போக்கில் மக்களுக்கும் சகோதர இயக்கங்களுக்கும் எதிராக மாறிப்போனது எந்தளவுக்கு அபத்தமானது என்பது சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டிதொன்று. ஈழவிடுதலைப் போராட்டத்தில் இந்தியா எத்தகைய பங்கினை வகித்திருந்தது? தனது பிராந்திய நலனைப் பாதுகாக்க இந்தியா ஈழவிடுதலைப் போராட்டத்தை எவ்வாறு கையாள முற்பட்டது? என்பதெல்லாம் இன்னமும் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் முழு உண்மை. புதியதோர் உலகம் (கோவிந்தன்), UP83 (எஸ். ஏ உதயன்) போன்ற பிரதிகள் இது குறித்து ஓரவிற்குப் பதிவு செய்திருக்கின்றன. குமிழியிலும் இதை அவதானிக்க முடிகின்றது. இதைக்குறித்து புனைவாக்கத்தில் பதிவு செய்வதைக் காட்டிலும் ஒரு முழுமையான ஆய்வாக முன்னெடுக்கவேண்டியது அவசியமானது. ஆய்வாளர் இதைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.

குமிழியைப் புதியதோர் உலகத்துடன் ஒப்பிடும்போது கதைப்போக்கில் அழகியல் குன்றியிருப்பதாகத் தோன்றலாம். புதியதோர் உலகம் ஒரு வித மனோரதியப் பாங்கில் புனையப்பட்டிருப்பது இதற்குக் காரணமாகலாம். குமிழியின் தொடக்கமும் அவ்வாறானதொரு சாயலுடன்தான் தொடங்குகிறது. குறிப்பாக வேப்பமரம் கதை சொல்லியாக வருவதைக் குறிப்பிடலாம். ஆனால் அந்த வேப்பமரம் தொடர்ந்தும் கதை சொல்லியாக வரவில்லை. வந்திருந்தால் புதியதோர் உலகத்தில் விரவிய மனோரதியப் பாங்கு குமிழியிலும் விரவியிருக்கக்கூடும். அதையும் தவிர்த்து நோக்குமிடத்து குமிழி தன்னளவில் நேர்மையான பிரதியாக அமைந்திருப்பதுதான் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியதாகக் தோன்றுகிறது.

 • 08112020
 • சஞ்சீவி (10.01.21) பக்15

***

வாசிப்பு-24

 • க. பத்திநாதன் (இலங்கை)

பல உள்ளுடைவுகளில் இருந்து தப்பித்துக் கொண்ட ‘குமிழி’

வரலாறுகள் என்பவற்றை தனி நபர்களின் அனுபவ வெளிப்பாடக வாசிப்பதில் உள்ள பனுவல் சுவைக்கு தரமான தீனிபோட்டது, ரவியின் குமிழி. மிகவும் புதுமையான படிமப் பொருள் கொண்டு படைக்கப் பட்டுள்ளமையும், ஒரே வீச்சில் வாசிக்கத் தோதுவாகப் பண்ணியுள்ளமை நூலாளரின் எழுத்துத் திறனை வெளிக்காட்டியுள்ளது.

தான் உயிரினும் மேலாக மதித்து, தனது விருப்பு வெறுப்புக்களை மறைத்து தியாகம் செய்த ஒருவரின் கண்ணெதிரேயே அது நொறுங்கி கிழிந்து போதலின் பிரதிபலிப்புத்தான் இந் நாவல் வடிவமைப்பு. ஈழ விடுதலைப் போராட்டம் என்பது அதிகாரம், சாதிய மேலன்மை, முட்டாள் தனமான அரசியல் வங்குரோத்து, மேட்டுக்குடிப் பார்வை முதலியவற்றால் தான் கட்டமைக்கப்பட்டு, அது எண்பதுகளிலேயே தோற்று விட்டதையும், அதன் பின் நடந்ததெல்லாம் உறவுக்கொலைகள் தான் என்பதற்கு அண்மைய கால வெருகல் படுகொலை வரை சான்றுண்டல்லவா? இதற்கு எழுத்து வடிவ சாட்சியம் செய்துள்ள மேலுமொரு பனுவலிது.

நாவலின் ஒரு கட்டதில் ரவியின் உளக் குமுறல்கள் இவ்வாறு சாட்சியாகின்றன. “எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாத முகாம் தோழர்களிடையேயான புளியம்பழ உறவையும், ‘ஒரு வேள்விக்கு நேர்ந்து விட்ட கடாய்கள் நீங்கள் எல்லாம்’ என்றவாறான உணர்வையும், அதை தியாகமாக மட்டும் தெரிந்து வைத்திருக்கவும் இராணுவ இரகசியம் சொல்லித் தந்திருந்தது. மூன்று மாதத்தில் அல்லது ஆறு மாதத்தில் பயிற்சி எடுத்து விட்டு ஊருக்கு திரும்பி விடலாம் என்ற உறுதி மொழியை நம்பி வந்தவர்கள் அது நிறைவேறாதது மட்டுமல்ல, போர்க்களமும் காணாது பொழுது போக்கிய நிலையில் எதிர் காலமே என்னவென்று தெரியாத போது, வயதான தனது தாயை எண்ணி அழுதார்கள், தகப்பனை சகோதரங்களை எண்ணி அழுதார்கள், தன் காதலியை எண்ணி அழுதார்கள், தான் வளர்த்த நாயை எண்ணி ஏங்கினார்கள், தனது பயிரின் பசுமையைக் காணமுடியாத அவதியில் அல்லலுற்றார்கள், ஒரு சொக்கலேற் வாங்கி உண்ண தவித்தார்கள். இசை கேட்கத் தவித்தார்கள்”. உலகியல் நடத்தைகள் எல்லாவற்றையும் தாண்டி அனைவரும் மனிதரே அனைவருக்கும் இயற்கைத் தேவைகள் இயல்பானதே என்பதன் வெளிப்பாடக இவ் வரிகளைக் காண முடியும்.

ஒரு இனத்தின் அழிவென்பது இன்னொரு இனத்தால் அழிவதல்ல, இனத்துக்குள்ளே தாமே அழிந்து கொள்வதுதான். அதற்கு தக்க சாட்சிகளாய் எழுத்துக்களில் அமிழ்ந்துள்ளது ‘குமிழி’. அன்று ஆயுதங்களால் அழித்தார்கள். இன்று வங்குரோத்து அரசியலால் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கல்வித் தரப்படுத்தல் என்பது யாழ்ப்பாணிய வேளாளிய உயர் சாதியின் பிரச்சினைதான் என்பதற்கு தனது உண்மைக் குமிழ்களைக் கொட்டத் தவறவில்லை குமிழி. “இந்த நாசமா போன தரப்படுத்தலைக் காட்டி எங்களை எல்லாம் கிழப்பி விட்டுட்டாங்கள். ஆருக்குப் பிரச்சனை? கிழக்கு மக்களுக்கா மலையக மக்களுக்கா அல்லது வன்னி மக்களுக்கா. அவங்கள் எல்லாம் தமிழர் இல்லையா. யாழ்ப்பாணத்துக்குதான் இதாலை பாதிப்பு. ஆனால் ஒட்டு மொத்தமா தமிழர் எல்லாரையும் இதுக்க இழுத்து விடுட்டாங்கள்”.

இவ்வாறு பல சங்கதிகளை பேசும் இந்நாவல் கோவிந்தனின் புதியதோர் உலகத்தையும் இடையிடையே தட்டிச் செல்கிறது.

என்ன இந்தக் குமிழி அன்றே எழும்பி இருந்தால் இன்னும் பலரை காப்பாற்றி இருக்கும்.


***

வாசிப்பு-25

 • குமணன் பஞ்சாட்சரம் (இலங்கை)

குமிழி வாசித்ததால்…

ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் இருந்தவர்களில் அனேகர் தங்களை முழுவதும் ஒப்புக் கொடுத்து ஒரு கதையையும் சொல்ல மாட்டார்கள் என்று ஓரளவுக்கு சொல்லலாம். என்னுடைய அகன்ற பார்வையின்மையும் இவ்வாறான பொதுமைப்படுத்தலுக்கு காரணமாய் இருக்கலாம். நான் சொன்ன அவர்களிடம் சொல்ல முடியாத கோர்வையற்ற நிகழ்வுகளாக மனப்பதிவுகளாக ஒன்றுக்கொண்ரு முரணானதாய் அந்த கதைகள் நியாயப்பாடுகள் இருக்கலாம் அல்லது விடுப்பு கேட்கும் நபர்களுக்கு சொல்வதில் உள்ள சலிப்பாய் இருக்கலாம் அல்லது முழுவதுமாய் இந்த மக்களிடம் ஒப்புக் கொடுப்பதில் அச்சுறுத்தல் இருக்கலாம் அல்லது முழுவதுமாய் ஒப்புக் கொடுப்பதிலுள்ள தயக்கமாய் அது இருக்கலாம். அல்லது நான்றியாத வேறொன்றாய் இருக்கலாம். ஒப்புக் கொடுப்பதிலுள்ள தயக்கம் இலக்கியத் தளங்களில் இருக்கும் பலருக்கே இருக்கிறது. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த போதிருந்த இயக்க நிலைமைகளையும் தனி நபர் மனவலைச்சல்களையும் நிர்வாணப் படுத்துகின்றது “குமிழி”

பல்கலைக் கழகத்தின் ராகிங்க் காலம் வந்து போகின்றது. நினைவுகளை மீட்டிப் பார்க்கும்போது ஏதோ மெல்லிய காற்றுப் போல அவை தடவிச் சென்றாலும் அந்த முதல் நாள் பல்கலைக்கழக விடுதிக்குள் நுழையும் போதிருந்த உணர்வுகள் வேறுமாதிரியானவை. சீனியர்கள் வந்து வழி காட்டி வோர்டனிடம் ஒப்படைத்துவிட்டு செல்கிறார்கள். வாயிலே வைக்கவே முடியாமல் இருக்கிறது அன்றைய இரவு உணவு. அது சுவைக் குறைவால் அல்ல மனதின் ஆர்ப்பரிப்பால்தான் என்று கனகாலத்துக்கு பிறகு விளங்கிக் கொண்டேன். என்னை கட்டிலின் (2 தட்டு கொண்ட கட்டில்) மேலே ஏறி இருக்க சொல்கிறார்கள். மேல் அறை, நடு வறையிலிருந்து நான் தங்கி இருக்கும் கீழறைக்கு வந்து என்னை பார்த்து செல்கிறார்கள். சிரிக்கிறார்கள், ஏதேதோ சொல்கிறார்கள். தமிழ் பேசும் என் சகபாடி ஒருத்தன் எனக்கு முகச்சவரம் முழுவதுமாய் செய்ய சொல்லி குளியலறைக்கு செல்கிறேன். மலம் கழிக்கமுடியவில்லை. ஆரிடம் எதை எப்பிடி கேட்கலாம் என்று புரியவில்லை. சிறைச்சாலையில் இருப்பதாய் உணர்ந்தேன். அன்றிரவு வீட்டை நினைத்து பீரிட்டு வந்த அழுகையை போர்வைக்குள் அடக்கிக் கொண்டு படுக்கின்றேன். A9 பாதை மூடப்பட்டு விசேடமாக வந்த சாமான் கப்பலில் 800 ஆவது ஆளாய் கடைசி நம்பராய் ஏறி வந்த நினைவுகள் என மனசை சுழலவிட்டுகொண்டிருந்தது. உளச்சமநிலையற்ற மோசமான இரவுகளில் இந்த நாளும் ஒன்று.

இவ்வாறான இரவுகள் பல நாட்களாக தொடருமெனில் அதுவும் ஒரு போராட்டத்துக்காய் இயக்கத்தில் இணைந்து அந்த போராட்ட இயக்கத்தின் செயற்பாடுகளை பற்றி ஆரிடம் சொல்வது ஆரிடம் கேட்பது ஆரால் துரோகியாக்கப்படுவோம் என்ன நிகழும் என்று தெரியாமல் மக்களுக்கான அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான இலட்சியப் பாதையில் போராட்டத்தின் மீதும் இயக்கத்தின் மீதும் ஏதாவதொரு நம்பிக்கையை வைத்து மனசை நிலை நிறுத்தி நிறுத்திப் பார்த்து கடைசியில் தோற்றுப் போதல் என்பது நிகழுமெனில் அது நினைத்தே பார்க்கமுடியாத கையறு நிலை. “குமிழி ” மனச்சாட்சிக்கு நெருக்கமாக அந்த கையறு நிலையை பல அடுக்குகளில் பேசுகிறது.

புளொட் இயக்கத்தின் கதைகளை சுவாரஸ்யமாக, இயக்க பக்தியோடு, நக்கலாக, மற்ற இயக்கங்களை விட மேன்மை பொருந்தியதாக என்று பல கோணங்களில் சொல்லக் கூடியஒரு சிறந்த கதை சொல்லி ஒருவர் ஊரில் இருந்தார். அவர் ஆரம்பகால புளொட் உறுப்பினர். ஆரம்பத்திலேயே அதிலிருந்து விலகியும் இருந்தார். அவருக்கும் எனக்கும் போதையான நாட்களில் இந்தியாவில நடந்த கன கதைகள் சொல்லுவார். “எங்கட உமாண்ணை” எண்டு விழிப்பார். சந்ததியாரிண்ட பெயரும் ஒரு சில நாள் அடிபட்ட ஞாபகம்.

தியத்தலாவையில் (நிலஅளவை படமாக்கல் கல்லூரி) ஆண்டு தோறும் நடக்கும் Club Night இல் வயதான ஓய்வு பெற்ற நில அளவையாளர் ஒருவர் Badminton மைதானத்துக்கருகில் மது அருந்திக் கொண்டிருந்த என்னிடம் வந்து உமா மகேஸ்வரனுடன் நான் இதில் Badminton விளையாடி இருக்கிறேன் என்றார்.

பல்கலைக் கழகத்தின் பூகோள விஞ்ஞான பீடத்தின் Get together ஒன்றில் பிரதான சங்கத்தலைவர் இவ்வாறு உரையாற்றுகிறார் “நில அளவையாளர்களால்தான் உலகத்தின் அதி கூடிய நன்மை பயக்கும் விடயங்களையும் அதிக தீமையானவற்றையும் உருவாக்க முடியும். தீமையான விடயத்துக்கு சிறந்த உதாரணம் உமா மகேஸ்வரன். ஆம் அவர்தான் புலிப் பயங்கரவாதிகளை உருவாக்கினார்”அதிக நன்மை பயக்கும் உதாரணம் ஞாபகத்தில் இல்லை.

ஓரிரவில் எடுத்த புத்தகத்தை வைக்காது வாசித்தேன்.”குமிழி”


***

வாசிப்பு-26

 • நிலாந்தி சசிகுமார் (இலங்கை)

குமிழியில் தப்பிய ஓர் உயிர்

போர்க்கால இலக்கியங்கள் தேவைக்கதிகமாக மலிந்தே காணப்படுகின்றன என்பதிலிருந்து ஒவ்வொரு கதைகளும் போரையும் போருக்குப் பின்னரான வாழ்வையும் எடுத்தியம்பி வாசகர்களின் மனங்களில் பதிந்தே உள்ளன. போருக்கான காரணங்கள் அதை முன்னெடுத்தவர்களின் நோக்கம் என்பவற்றைத் தாண்டி அதற்காக தங்களது வாழ்வையும் எதிர்காலத்தையும் பணயம் வைத்த இளைஞர் யுவதிகளைப் பற்றி சிந்திக்க இங்க யாரும் இல்லை. அவர்களை வைத்து அரசியல் இலாபம் தேடும் சுயநலவாதிகளே அதிகம். அவர்களின் எதிர்பார்ப்புகளும் அதற்காக அவர்கள் கொடுத்த அவர்களின் வாழ்வும் விலைமதிப்பற்றவை.

ஒரு காலத்தில் ஆயுதம் தூக்குவது கௌரவமாகவும் பெருமையாகவும் நினைத்து இயக்கத்தில் சேர்ந்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் இயக்கத்தை விட்டு வெளியேறத் துடித்து காணாமல் ஆக்கப்பட்டனர் என்பதையும் தைரியமாகப் பதிவு செய்கிறது இந்நாவல். சுவிஸில் வாழும் ரவிந்திரன் அவர்களால் அவரது அனுபவக் குறிப்புகளின் துணையுடன் எழுதப்பட்ட இந்நாவல் அவர் சிக்கிய குமிழி பற்றியதாகத் தென்பட்டாலும் ஆயுதப் போராட்டத்திற்காக தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் ,உறவுகளையும் கைவிட்டு இயக்கங்கள் என்ற பெயரில் மாயா ஞாலம் காட்டிய பல குமிழிகளில் சிக்கி அலைக்கழிந்த பல இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை என்றும் பார்க்கலாம்.

போர்ச் சூழலில் வாழ்ந்தவர்களும் ,போரில் களம் கண்டவர்களும், போருக்குப் பின்னர் வாழ்ந்தவர்களும் என்று பலரும் தம் அனுபவங்களை கவிதைகளாகவும்,கதைகளாகவும், நாவல்களாகவும் பதிவு செய்திருந்த போதிலும் ரவி அவர்களின் நாவல் அந்த வரிசையில் நின்று வேறுபடுவதை உணரக் கூடியதாக இருந்தது. அதாவது போரிற்காக புறப்பட்ட பயணம் யுத்த களம் காணாமல் எதிரிகளையும் சந்திக்காமல் சொந்த இனத்தின் ஒரே இயக்கத்தைச் சேர்ந்த குழுக்களால் ஏற்பட்ட கொலை அச்சுறுத்தலினால் சொந்த நாட்டினையும் விட்டு புலம் பெயர்ந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு இளைஞனின் ஆதங்கமாக இந் நாவல் பிறந்துள்ளது.

போர்க்கால இலக்கியங்கள் என்று எடுத்துக் கொண்டால் பதிப்புரையில் கூறப்பட்டது போல, அவை மக்களின் அடிப்படை உரிமைகள்,அவர்களுக்குள் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், பல்வேறு பட்ட ஒடுக்குமுறைகள் ,அந்நிய சதிகள்,பொருளாதாரத்தடைகள் அதன்வழி மக்களின் வாழ்வாதாரங்களை இழக்கச் செய்தல், போதிய அரசியல் பார்வை இல்லாததால் எந்த மக்களின் நலத்திற்கு என்று அமைப்புகள் அமைக்கப்பட்டனவோ அவை அந்த மக்களையே அழித்தல்,சக போராளிகளை ஈவிரக்கமின்றி வதைத்தல்,கொல்லுதல்,பண்பாடுகளை,
பண்பாட்டுச் சின்னங்களை திட்டமிட்டு அழித்தல் பழிவாங்கல்கள் போன்ற பலதையும் பேசுபவை. ஆனால் அனேகமானவர்கள் தமது ஆவணப்படுத்தலில் சில பூசி மெழுகுதல் என்ற செயற்பாட்டால் தப்பிக்கும் யுக்தியை பிரயோகிப்பதுமுண்டு. அந்த வகையில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் தனது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தியுள்ள ரவி அவர்களின் தைரியத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

1976 இல் தனித் தமிழீழம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முதல் இலங்கையின் இளைஞர்கள் யுவதிகளின் குருதிகளில் எல்லாம் தமிழீழம் ஊற ஆரம்பித்தது. அதற்காக தமிழ் இனம் பிளவு பட்டு குழுக்களாகப் பிரிந்து யார் முதலில் தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பது என்ற போட்டியில் தம் தோழர்களையும் தம் இனத்தவர்களையும் அழித்த கொடூரம் பற்றியும் இந்நாவல் பேசுகிறது. இவ்வாறாக 1970 இல் தொடங்கிய ஆயுதப் போராட்டம் 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது வரை சொந்த இனங்களாலும் எதிரிகளாலும் எத்தனை எத்தனை இழப்புக்கள்.

புலத்தில் கிடைத்த ஆதரவால் இயக்கங்கள் புற்றீசல்கள் போலே உருவாகிய அதே வேளை இறுதியில் இயக்க அச்சுறுத்தலில் இருந்த இயக்க உறுப்பினர்களுக்கும் புலமே அடைக்கலம் கொடுத்து காத்து வருகின்றது என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.
ரவிந்திரன் அவர்களின் எழுத்துக்களில் அங்கங்கே சுவாரசியங்கள் நிறைந்திருந்து இரசனை மிகுந்த ஒருவராக அவரை எனக்கு இனங்காட்டியது. கவித்துவமான சொல்லாடல்களால் சில இடங்களில் மெய் சிலிர்க்க வைத்தார்.
“முகங்களை வாசித்தல்” மிகவும் அற்புதமான வாசிப்பு. அது பலருக்கும் வாய்ப்பதில்லை என்பேன். அதைப் பற்றி அடிக்கடி பயன்படுத்தியிருந்தார். அதே வேளை ஒரு இடத்தில் “பார்த்திராத கால இடைவெளியை இறுக அணைத்து உதிர்த்துக் கொட்டினர்”என்று குறிப்பிட்டிருப்பார். எத்தகைய ஒரு படிமம் அது. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் தாய் பேசாமல் இருந்த பொழுதினை பேசினாள் என்று எழுதியிருப்பார். எப்படியெனில், “மௌனத்தை ஒரு மொழி போல் பேசியபடி நடமாடுவதை அவதானித்தேன்” என்பதாக அதை முடித்திருப்பார். மேலும், தனது மகன் போய் விடுவானோ என்ற பயத்திலும் அது குறித்து கேள்வியெழுப்பினால் உண்மையில் அவசரமாக கிளம்பிவிடக் கூடும் என்ற பயத்திலும் அந்தத்தாய் வெறும் பார்வையை மட்டும் அவன் பக்கம் அடிக்கடி வீசிக் கொண்டிருந்தாள் என்பதை,”பலமற்ற இழைகளால் மேலும் மேலும் தன் பார்வையை பின்னத் தொடங்கியிருந்தாள்” என்பார்.
உண்மையில் இந்நாவலில் இவ்வாறான பல சொற்றொடர்கள் என்னைக் கவர்ந்திருந்தன.

தந்தையை இழந்த ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளைகளுடன் ஒரே ஒரு ஆண் பிள்ளையை பெற்ற ஒரு தாயின் எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கக் கூடும்? அதைத் தெரிந்திருந்து ஒரு குடும்பம் மட்டும் நம்மதியாக இருப்பதில் என்ன திருப்தி? எல்லாக் குடும்பங்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற ஒரு நப்பாசையிலும் அதற்கு தம்மைப் போன்ற இளைஞர்களின் வீரம் தான் தேவை எனவும் நம்பி இயக்கத்தை நாடிய இளைஞன் தன் நம்பிக்கை எனும் கண்ணாடியில் விழுந்த சம்மட்டி அடியால் நொருங்கிப் போய் பிற தேசத்தில் தஞ்சம் புகுதல் என்பது எவ்வளவு வேதனை தரக் கூடியது. எத்தனையோ வருடங்களாக தன் ஆழ்மனதில் போட்டு வெதும்பிக் கொண்டிருந்த இக்கதையை நாவலாக எழுதிக் கடக்க முயற்சித்திருக்கிறார் ரவிந்திரன் அவர்கள்.

இயக்கத்திற்கு தான் சென்று விட்ட போது தன் வீட்டு வேம்பும் கண்ணீர் விட்டிருக்கும் என்ற கற்பனை கூட மனதைப் பிசந்தே சென்றது. நம்பிச் சென்ற இயக்கத்தில் தன் சொந்தப் பெயரையும் இழந்து தன் சுயத்தையும்இழந்து இருந்த பொழுதுகளையும் அதன் பின் அதிலிருந்து மீண்டு சென்று ஒருவாறாக உயிர் தப்பி நாவல் முடிவுறும் தருணத்தில் ஒரு கெட்ட கனவில் இருந்து விழித்துக் கொண்டதாக என்னை உணரச் செய்தார்.

கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பவர்கள் அதில் இருந்து தம்மை விலத்தி வைத்துக் கொள்வதால் எழும் அதிருப்தியும் கூட ஒரு வித தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது. இக்கழகத்தில் தலைமைப் பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளும் சக தோழர்களிடம் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் அதிகாரத் தோரணைகளும் அக்கழகத்தின் கொள்கைகளுக்கு துளியளவிலும் பொருந்தவில்லை. இது குறித்தான கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களும் வதைகளுமே மிச்சம். ஒரு சித்திரவதைக் கூடமாக விசாரணை அறை இருந்தது என்பதை வாசித்த போது ஒருவித பயம் என்னை ஆட்கொண்டது.இவ்விடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற இந்திரனுடன் நானும் ஓடிக் கொண்டிருந்தேன். இறுதியில் அவன் மாட்டிக் கொள்ளவும் கோவென அழ வேண்டும் போல் இருந்தது.

பயிற்சியின் போது உடலில் ஏற்படும் உணர்வுகளையும் மனதில் ஏற்படும் உணர்வுகளையும் கட்டுப்படுத்தவென அவர்கள் ஒவ்வொருவரும் பட்ட சொல்லொனாத் துயரங்களை வாசித்தறிய முடிந்தது. இவர்கள் பலியாடுகளாகவே வளர்க்கப்பட்டவர்கள். சுதாகரித்துக் கொண்டு தப்பியவர்கள் மண்ணுக்காகப் போராடப் போய் சொந்த மண்ணில் வாழும் தகுதி மறுக்கப்பட்டு புலத்தில் வாழ்கிறார்கள். ஏனையவர்கள் மண்ணுக்காக மண்ணுக்கு இரையானார்கள். கற்க வேண்டிய கல்வி, வாழ வேண்டிய வாழ்க்கை, செய்ய வேண்டிய கடமைகள், ஏற்க வேண்டிய பொறுப்புக்கள் என எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு காலங்கள் ஓடி விட்டிருக்கின்றன.

பெருமிதமாக நினைத்ததெல்லாம் அச்சத்தை விழைவிக்க, சொந்த இனத்திடம் இருந்து தப்ப முயன்ற பொழுதுகள் கொடுமையானவை. தவறு செய்பவர்களுக்கு தண்டனை வழங்குவதும் வீதியில் சுட்டு வீழ்த்தி விட்டு பிற இயக்கங்கள் மேல் பழி போடுவதும் என உட்பூசல்களால் நிறைந்த எந்தவொரு குழுவும் வெற்றி பெற வாய்ப்புகள் குறைவு தான் என்பதை இந்நாவல் அரசல் புரசலாகச் சொல்லிச் செல்கிறது. இனந்தெரியாதோர் என்பவர்கள் ஏதோ வேற்றுக்கிரக வாசிகள் போல என நக்கலாகச் சொன்னது சிரிப்பை வரவழைத்தது. என்னதான் தோழர்கள் என விழித்தாலும் பெண்களுக்கு என அங்கு கட்டுப்பாடுகள் இருந்ததையும் குறிப்பிடத் தவறவில்லை.

எது எப்படியோ ரகு என்றும் ஜோன் என்றும் பெயர்களை மாற்றிக் கொண்டு வலம் வந்தாலும் அங்கு ரவி ரவியாக மட்டுமே வாழ்ந்ததால் பிறந்த நாவல் இது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


***

வாசிப்பு-27

 • ஜெகநாதன் சற்குரு (இலங்கை)

சுவிஸ் இலிருந்து நண்பர் ரவியின் குமிழி நாவல் எனது சக விரிவுரையாளர் மூலம் கிடைத்தது. எனது அலுவலகத்திலிருந்து கண்டிக்கு வரும் மூன்று மணித்தியாலயங்களில் வாசித்து முடித்தேன். பேரூந்தை விட்டு இறங்கிய பின்னர், பேரூந்து தரிப்பிடத்தில் அமர்ந்து, நாவல் எழுப்பிய உணர்வலைகளை அசைபோட்டேன். ஒரு படைப்பின் வலிமையானது சமூக அடையாளங்களை துல்லியமாக பதிவுசெய்துகொள்கின்றது என்பதை பார்க்கும்போது, மிக உயர்ந்த படைப்பை மனிதன் மட்டுமே உருவாக்க முடியும் என்ற மாக்ஸிம்கோர்கியின் சிந்தனையும் நினைவுக்கு வந்தது.

ஏகாதிபத்திய நிகழ்ச்சிக்கு அமைவாக, பயங்கரவாதம் என்ற பெயரில் யுத்தம் முடிவுக்கு வந்தபோது போராட்ட வடிவங்கள் எதனை அறுவடை செய்துள்ளன. ஒதுக்கிவிட்டு போராட்டத் தளங்களில் நடந்த சம்பவங்களை மனச்சாட்சியாக குமிழி நாவல் பதிவு செய்துகொள்கின்றது. PLOTE எனப்படும் கழகத்தின் மாக்சியம் பற்றிய தவறான புரிதல், நடைமுறை கோளாறுகளால் மக்களிடமிருந்து அந்நியமாகியதை யதார்த்தமாக நாவல் வெளிப்படுத்தி நிற்கின்றது. ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையானது மற்றைய தேசிய இனங்களின் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்துடன் இணைக்கப்படாதவரை சாத்தியமில்லை. ஏகாபத்தியதிற்கு எதிரான போராட்டங்களையும் முதலாளித்துவ நிலமானிய சமூக நீடிப்புக்கு எதிரான பேராட்டங்களையும் சாத்தியமாக்காமல் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.

உண்மையில் தமிழ்த் தேசியவாதம் யார் நலனை சார்ந்து யார் தேசியவாதத்தை பயன்படுத்திக் கொண்டது என்ற விவாதத்தினை குமிழி நாவல் முன்வைக்கிறது. கூடவே பெண்ணிய, சாதிய சிந்தனைகளையும் நாவல் உள்வாங்கிக் கொள்கின்றது. தனிநபர் சார்ந்த வழிபாடுகளையும், விமர்சன சுயவிமர்சன மறுதலிப்புகளையும், மக்கள் வாழ்விலிருந்து தமிழ்த் தேசியவாத இயக்கங்கள் அந்நியப்பட்டு இருந்ததையும் நாவல் குறைந்த அளவே பதிவுசெய்து கொள்கின்றது. கூடவே தோழர் சண்முகதாசன் குறித்த பதிவுகளும் காத்திரமாக அமையவில்லை.

நாவலுக்குரிய பண்புகள் பண்டித இலக்கியவாதிகளின் பிழைப்புவாதத்திற்கு அப்பால் உண்மையான சில பதிவுகளை குமிழி நாவல் விவாதிப்பது ஆரோக்கியமானது.


***

வாசிப்பு-28

 • எஸ்.கே.விக்னேஸ்வரன் (கனடா)

(“கலைமுகம் -இதழ் 70” இல் எஸ்.கே.விக்னேஸ்வரன் அவர்கள் எழுதிய -கனவும் நனவும் கதையும் என்ற தலைப்பிலான- பத்தி எழுத்தில் ஒரு பகுதியாக குமிழி நாவல் பற்றிய இந்த அறிமுகமும் வருகிறது.)

குமிழி : நாவலாய் விரியும் ஒரு கவிதை

மேலுள்ள பதிவில் நான் குறிப்பிட்ட நூல் பற்றிய குறிப்பு, யூலைக் கலவரத்தின் பின்னான காலப்பகுதியில் தமிழ் மக்களது விடுதலைக்கான போராட்டத்தில் கலை வடிவமொன்றினூடாக அப்போராட்டத்தில் இடையீடு செய்த ஒரு முக்கிய கலை நிகழ்வான கவிதா நிகழ்வைப் பற்றிப் பேசியதென்றால், இந்தக் குறிப்புக்கான நூல் அதே காலகட்டத்தில், அதே போராட்டத்தின் அரசியற்தளத்தில் இயங்கிய ஒரு விடுதலை (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- புளொட்) இயக்கத்தின் இராணுவப் பயிற்சிக்காகச் சென்றவர்களது அனுபவங்களையும், அவர்கள் எதிர் கொண்ட, தாம் செய்ய விரும்பிய விடுதலை அரசியலுக்கு முழுக்க முழுக்க மாறான நிலையில் நகர்ந்த, பயிற்சிமுகாம் அனுபவங்களையும் அதை அவர்கள் எதிர்கொண்டமையும் அவர்கள் விரும்பிய விடுதலைப் போராட்டம் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்தமையும் பற்றிய ஒரு போராளியின் நினைவுப் பதிவின் வடிவில் அமைகின்ற ஒரு நாவல்- குமிழி.

நாவலின் ‘என்குறிப்பு’ பகுதியில் ஆசிரியர் ரவி இவ்வாறு எழுதுகிறார்:

         “நியதியாகக் கையளிக்கப்பட்ட வாழ்வின் பொது ஓட்டத்தை முறித்துக் கொள்கிறபோது, அல்லது புறநிலைகள் அதற்கு நிர்ப்பந்திக்கிறபோது ஏற்படுகின்ற அனுபவங்கள் சிறிதும்   முன்னனுமானிக்கத் தக்கவையாக இருப்பதில்லை. அது ஏற்படுத்தி விடுகிற சுவடுகள் இலகுவில் அழியாதவை. இங்கும் அது நிகழ்ந்தது. 70களின் பிற்பகுதியில் ஈழ விடுதலை இயக்கங்களின்   தோற்றங்கள் நிகழ்ந்தாலும், 80களின் முற்பகுதியிலே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற   அமைப்பும் ஊதிப்பெருத்து ஒரு குமிழியாக அழகு காட்டியது. அதற்குள் அகப்பட்ட ஒரு இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவை இந் நாவல் பதிவு செய்கிறது”

உண்மையில் இந்த நாவலின் காலத்தில் ஆயுதமேந்திய போராட்டம் ஆரம்பமாகி விட்டிருந்த போதும், நாவல் நடந்து கொண்டிருந்த போராட்டம் பற்றிப் பேசவில்லை. மாறாக,  போராட்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று, அது இல்லாமல் ஒடுக்கப்பட்ட நமது மக்களின் விடுதலையை நோக்கி நகர முடியாது என்று நம்பிய, முழுக்க முழுக்க, மக்கள் போராட்டம், ஜனநாயகம், விடுதலை என்ற இலட்சியங்களைச் சுமந்தபடி, தம்மை முழுமையாகத் தேசத்தின் விடுதலைக்கு அர்ப்பணிப்பது என்ற உத்வேகத்துடன் போராட இறங்கிய  இளைஞர்கள், அதற்கான தயார்ப்படுத்தல்களில் ஒன்றான இராணுவப் பயிற்சிக்குச் சென்றபோது நடந்த அனுபவங்கள் பற்றிப் பேசுகின்ற நாவல் இது.

பயிற்சி முகாமுக்கு வரும்போது அவர்கள் ஒவ்வொருவரிடமும் உறுதியான நம்பிக்கை இருந்தது; ஆர்வமும் முகாமில் கிடைக்கும்  பயிற்சி பற்றிய  பெரும் கற்பனைகளும் இருந்தன; தமது விடுதலைக்கான அரசியல் குறித்து தமக்கிருந்த அர்ப்பணிப்புக் காரணமாக ஒருவகை மனக் கிளர்ச்சியை அவர்கள் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஊரை விட்டு, குடும்பத்தை விட்டு, உறவுகளை நண்பர்களை விட்டு உறுதியுடன் படகேறிய ‘சொல்லாமல் போகும் புதல்வர்கள்’. ஆனால், அவர்களது கண்களுக்கு  ஒரு அழகான குமிழியாக விரிந்திருந்த விடுதலை உணர்வு, போராட்டத்துக்கான உத்வேகம், அதில் ஈடுபடுவதற்குத் தயரான அர்ப்பணிப்பு எல்லாம் பயிற்சிக்கு வந்து முகாமில் இறங்கிய கணத்திலிருந்து ஒவ்வொன்றாக கலைந்து, உயிர் வாழ்வதற்கும் தப்பிப் பிழைப்பதற்குமான போராட்டமாக மாறி, உடைந்துபோய் தாம் ஒன்றுமில்லாதவர்கள் ஆகிவிட்ட கையறு நிலைக்குத் திரும்பும் துயர் என்பவற்றைப் பதிவு செய்யும் ஒரு நாவலாக அமைகிறது குமிழி.

பயிற்சிக்கான குறுகிய காலத்தின் வரலாற்றை, ஒரு துயர்படிந்த உணர்வோட்டத்துடன் பேசும் இந்த நாவல், மக்களின் விடுதலைக்கான அவர்களது அமைப்பின் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து முடிவுவரை கருத்துக்கள், கொண்டிருந்த நடவடிக்கைகள், போராட்டத்துக்குப்  பாதகமான விதத்தில் நடந்த சம்பவங்கள் என்று அனைத்து விடயங்களையும் தனது பரப்பெல்லைக்கு உட்பட்ட அளவில், மிகவும் அழுத்தமாகவும் துல்லியமாகவும் மிகுந்த கலை நேர்த்தியுடனும், மிகவும் வெளிப்படையான திறந்த மனதுடன் உரையாடுகிறது. செட்டான மொழி, கூர்மையான அவதானம், கலைநயமிக்க விதத்திலான காட்சிப்படுத்தல்கள், ஒன்றுக்கொன்று முரணான வெவ்வேறு நிலைகளில் மனித மனம் செயற்படும் விதத்தினை வெளிப்படுத்தும் சிறப்பு என்பவற்றால் இந்த நாவல் ஒரு அழகான பல்பரிமாண வெளிப்பாடுகளைக் காட்டும் ஓவியம் போலவோ அல்லது கவிதை போலவோ நகர்ந்து செல்கிறது.

இந்தக் காலகட்டத்து விடுதலைப் போராட்டம் தொடர்பாக நிறையக் கதைகள் பேசப்பட்டுள்ளன. இராணுவப் பயிற்சி முகாம் அனுபவங்கள் தொடர்பாகவும் சில எழுத்துக்கள் வெளிவந்துள்ளன. இந்திய அரசின் உளவுப்படையின் தொடர்புகள், அவை விடுதலைப் போராட்டத்தை பாதித்த, பயன்படுத்திய விதம் பற்றியும் கூட எழுத்துக்கள் வந்திருக்கின்றன.  ஆனால், அந்த மாதிரியான தகவல்களையும், முகாமில் காணக் கிடைத்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட அனுபவத்தையும் வைத்துக்கொண்டு ஒரு ஒற்றைப்படித்தான போக்கைக் காட்டும் நோக்குடன் பின்னப்பட்டிருக்கக் கூடிய ஒரு நாவலாக அதை அவர் எழுதவில்லை. மாறாக, அந்தச் சூழலின் யதார்த்தத்துக்கேற்ப வாழ்ந்த கதை சொல்லியினதும் சக தோழர்களதும் உணர்வுகளையும், நடவடிக்கைகளையும், அவற்றின் பின்னணிகளையும் தொடர்ச்சிகளையும் வெளிக்கொணரும் விதத்தில் மிகவும் உயிர்ப்புடனும் அழகுடனும்  அவற்றை வெளிப்படுத்தும் ஒரு அருமையான நாவலாக அதை அவர் வடித்துள்ளார். 

இது  அந்த முகாமில் இருந்த போராளிகளின் அக்கால வாழ்வை முழுமையாகப் பதிவுசெய்கிறது. அவர்களை அசல் மனிதர்களாக இரத்தமும் சதையுமாக நம்முன்னே நிறுத்துகிறது. வாசிப்பவர்களை கதை மாந்தர்களுடன் ஒன்றிப்போய்விட வைக்கிற, அடுத்து என்ன நடக்குமோ என்ற தவிப்புடனும் திணறலுடனும் வரிகளில் கண்களை ஓட்டவிட வைக்கிறது. கூடவே, நாவல் தன் போக்கில் விடுதலைப் போராட்டத்தின் அரசியலை, அதன் அமைப்பாக்கலை, அதனுள்ளே வெளிப்படும் தோழர்களுக்கிடையிலான உறவின் கலாச்சாரச் சீரழிவை, பிற்போக்குக் கருத்தாக்கங்கள் வலுப்பெறுவதை, போலித்தனங்களும் பொய்ப்பகட்டும் உண்மைக்கும் நேர்மைக்கும் அர்ப்பணிப்புக்கும் எதிராக வெற்றியீட்டுவதை எல்லாம், கண்டும் தெரிந்தும், தோழர்கள் வெறுமனே கையாலாகாத நிலையில் பார்வையாளர்களாகக் கடந்துசெல்ல வேண்டி இருப்பதை மிகவும் இயல்பான கதைசொல்லலூடாகவே வெளிப்படுத்திவிடுகிறது. போராட்டத்தின் தொடக்கமும் முடிவும் வரையான போக்கையும் அதற்கான காரணத்தையும் அடையாளம் காண முயல்கிற, தெள்ளிய நடையில் அமைந்துள்ள ஒரு அற்புதமான நாவல் இது.

இந்தக் குறிப்பு வழமைபோல ஒரு அறிமுகக் குறிப்பு என்றவகையில் நாவலின் எல்லா விடயங்களைப் பற்றியும் விரிவாகச் சொல்லவோ அல்லது அதைப்பற்றிய ஒரு விமர்சன ஆய்வாகவோ இதை நான் எழுத விரும்பவில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லலாம். அல்லது சொல்ல வேண்டும். ஒரு விடுதலைப் போராட்டம் எப்படி நடக்கக் கூடாது என்பதற்கான சிந்தனை வெளியை இயல்பாகவே வாசகர் மனதில் ஏற்படுத்துவதில் இந்த நாவல் தன் போக்கினூடாக வெற்றி பெற்றுள்ள அளவுக்கு, இதற்கு முன்னான படைப்புகள் எவையும் பெறவில்லை என்று நினைக்கிறேன். இந்தக் கருத்துடன் உடன்படாவிட்டாலும் அனைவராலும் அவசியம் படிக்கப்படவேண்டிய ஒரு நாவல் இது!. நாவலை எழுதிய நண்பர் ரவிக்கு எனது பாராட்டுக்களும் அன்பும்!.


***

வாசிப்பு-29

 • அகரன் பூமிநேசன் (பிரான்ஸ்)

“குமிழி”என்ற நாவல் வாசித்தேன்.நாவல் என்ற பெயரில் நடந்த வரலாறுஅது. அதிகமாக சொல்லாமல் கடத்தப்பட்ட, இறுக்கமாக மறைக்கப்பட்ட காலமொன்றின் கதவு. எமது அறிவும் துடிப்பும் நிறைந்த இளம் சமூகமொன்று புனிதப்பயணமொன்றில் வழிகாட்டிகளாலேயே கனவுகள் எரிக்கப்பட்ட கதை. 1983 இன அழிப்பின் நாட்களில் பல்கலை கல்வியில் முதல் ஆண்டை நிறைவுசெய்த இளைஞன், விளிம்பு நிலையில் வாழும் தாய் சார்ந்த குடும்பத்தை விடுவிட்டு தமிழீழம் நோக்கி நடக்கிறான். அவனை உள்வாங்கிய இயக்கம் உள்ளே நடத்திய கருச்சிதைவை, அவன் பட்ட அகண்டார நாட்களின் இருட்டை, சுதந்திரம் யாசித்த இளைஞர்களை பிசாசுகள் தின்றதை, அந்தமண் அவனை சுவிஸ் மலைகளில் வீசிவிட்டதை குமிழி சொல்கிறது.

இன்று வாழும் இளைஞர்களுக்கு அவசியம் இந்தக் குமிழி. எம் நோய்கள் இன்னும் தீரவில்லை. வைத்தியர்களும் இல்லை.


***

வாசிப்பு-30

 • பரமநாதன் தவநாதன் (நோர்வே)

குமிழி இலக்கிய நயத்துடன் வாசிப்பு ஆர்வத்தை உண்டு பண்ணக்கூடிய மதிநுட்பமான முறையில் சுவாரசியமான கதைப் போக்குடன் நேர்த்தியாக எழுதப்பட்ட உண்மைக்கதை. நாவலாக வெளிவந்துள்ள இப் படைப்பானது நாவல், ஆவணம்,சுயசரிதை இந்த எந்த வகைக்கும் அகப்படாதது அதன் சிறப்பு. மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்து முடித்தேன்.

//”வெற்றிகளுக்கு பொறுப்பேற்கும் உசாருடன் போன நீ, இப்போ தோல்விகளுக்கு பொறுப்பேற்காமல் நழுவுவது என்ன நியாயம்”//

குமிழி: சமூக விடுதலையுடன் கூடிய தேசிய விடுதலையை நேசித்து, அதற்கான கொள்கை இருப்பதாகக் காட்டிக் கொண்ட மக்கள் விடுதலை அமைப்புடன் இணைந்து, அர்ப்பணிப்புடன் ஓட்டு மொத்தவிடுதலைக்காக போராடப் புறப்பட்டபோராளிக்கு, அந்த அமைப்பிற்கு அகச்சிதைவை ஏற்படுத்திய உள்ளக ஜனநாயகமின்மை, வெளிப்படைத்தன்மையின்மை, போராளிகளுக்கெதிரான வன்முறை, வர்க்க விடுதலையுடன் கூடிய தேசிய விடுதலைப் பிரக்ஞை கொண்ட சக்திகளை வேட்டையாடிய கொடூரமான அராஜகப்போக்கு என்பவற்றால் கண்முன்னே சீரழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டவேளை, தன் கனவுகள் கலைக்கப்பட்டு இறுதியில் தன் இருப்புக்கே ஆபத்து வந்தபோது கிடைத்த ஏமாற்றத்தால் ஏற்பட்ட ரண வடுக்களின் மொழி.

தோழர் ரவிக்குநன்றி கலந்த பாராட்டுகள்.


***

வாசிப்பு-31

 • முகுந்தன் குணரட்ணம் (இலங்கை)

நீண்ட நாட்களின் பின் ஒரு புத்தகத்துடன்…

ஒரு தனி மனித உணர்வு பூர்வமான விடுதலைக் கனவு, மேய்ப்பாளர்களின் ஆளுமையற்ற, அரசியல் சிந்தனையற்ற, தலைமை வெறி பிடித்த போக்குகளின் தன்மையால், யாருக்கு எதிராக போராடத் தொடங்கியதோ இறுதியில் அந்த எதிரிகளை விட்டு, பக்கத்தில நிண்டவன், பார்த்திட்டு நிண்டவன் என துரோகிகளை அதிகமாக சம்பாதித்து விட்டு, சொந்த ரத்தத்தை அழகு பார்த்த சோகம்.

“ஏழுதலைமுறைகள்”, “பட்டவிரட்டி” என கடந்து விட்ட நூல்களின் வரிசையில் கண்களை ஈரமாக்கிய, ஒரு எழுத்தாளனின் அழகிய படைப்பு. களத்தின் நிஜங்களை அழகிய எழுத்துக்களால் புத்தகத்தின் பக்கங்களில் நிஜமாகவே உருவாக்கி விடுகிறார். இவரின் விவாதங்களில் தோன்றும் சோசலிசத்தை இவரை விட யாரும் எளிதில் புரிய வைக்க முடியாது. சரி, தவறுகள் அலட்டி கொள்வதை விடுத்து, எத்தனை ரணங்களை தாங்கி கல்வி கற்ற பொறியியலாளனை, கட்டடகலைஞனை, வைத்தியனை இந்த விடுதலை உணர்வு அகதி ஆக்கியும் நிர்மூலமாக்கியும் விட்டது எனும்போது ஒரு அங்கலாய்ப்புத் தானே.

ஏழ்மையைத் தாங்கி, உன்ர பல்கலை படிப்பு, அதால வாற தொழிலால் தான்டா இந்த குடும்பமே தங்கி இருக்கு என கூறிவிட்டு, இரவு விழித்திருந்து படிக்கும் மகனுக்கு ஈர நிலத்தில் குந்தியிருந்து, சுவரில் சாய்ந்து தனது தூக்கத்தையும் தொலைத்து தேநீர் ஊற்றி குடுக்கும் தாயின் ஏக்கத்தை எல்லாம் தூக்கி எறிந்து, விடுதலை உணர்வை பற்ற வைத்து, ஒரு அமைப்பை தேர்ந்து கொள்ளும் ஒருவனுக்கு அந்த அமைப்பின் மீதான நம்பிக்கை குமிழியாக உடைந்த ஒரு துடைத்து விட்ட சோகம் !


***

வாசிப்பு-32

 • சுசீந்திரன் நடராஜா (யேர்மனி)

குமிழி என்ற நாவலின் ஆசிரியர் ரவி அவர்களின் இரண்டாவது நூலாக இது இருக்குமென்று நம்புகிறேன். முதலில் “செட்டை கழற்றிய நாங்கள்” என்ற கவிதை நூல் 90களில் வெளிவந்திருகின்றது. நூலாக்கம், புத்தக வடிவமைப்பு, ஒப்புநோக்கல் போன்ற துறைகளில் அதிக ஈடுபாடு கொண்ட ரவி அவர்கள் தனது முதல் நாவலாக சுமார் 35 வருடங்களாக அவரது தலையினை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தினை ஓர் அழகிய வார்ப்பாக ஆக்கி, எம் முன்னே இறக்கி வைத்திருகின்றார்.

ஏற்கனவே பல வாசகர்கள், விமர்சகர்கள் குறிப்பிட்டது போல வாசிப்பின் போது, இதமாக வழுக்கிச் செல்லும் கவர்ச்சியான மொழியும் கதையமைப்பும் அதை எழுதிச் செல்லும் இலகு பாணியும் எம்மைக் கதைசொல்லியோடு அவரது அனுபங்களை நமது அனுபவங்களாக உள்வாங்கியபடி இறுதிவரை கைகோத்துச் செல்லமுடிகிறது.

”என் இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவைப் பதிவு செய்திருக்கிறேன். […]35 ஆண்டுகள் கடந்து விட்டது, இப்போதும் பல சம்பவங்கள் நினைவில் இருக்கிற போதும் அவை ஆவண வடிவில் என்மூளைக்குள் இல்லை. எனவே இதை நாவல் வடிவில் எழுத தீர்மானித்தேன். எழுதியிருக்கிறேன்.”

‘குமிழி’ எழுதிய ரவி(சுவிஸ்) மேலுள்ளவாறே இந் நூலை முடிக்கின்றார். ஒரு மனிதன் இரண்டு ஆண்டுகள் காலமாக இரண்டு நாடுகளில் பட்டவற்றைப் பேசுகின்றது இந் நூல். இது ஒரு தன்வரலாறுதான். ஆனாலும் இதனை நாவலாக எழுதுவதில் சில வசதிகள் இருகின்றன.

50களின் மத்தியில் பிறந்தவர்கள் 70களின் காலப்பகுதியை நினைத்துப் பார்த்தால், அதன் பின்னர் எமக்குக் கிடைத்த, சபிக்கப்பட்ட வாழ்வின் கட்டங்கள் எங்களை இன்றுவரை தொடர்ந்த வண்ணமே, மகிழ்ச்சியை வாழ்வில் சுகிக்கத்தெரியாத மனிதர்களாகவே ஆக்கிவிட்டிருகின்றன என்பதை உணர்வீர்கள்.

அப்போது சுதந்திர ஆனால் பிரித்தானிய முடிக்குரிய இலங்கையில் நடைமுறையில் இருந்த அரசியல் யாப்பிற்கு 25 வயதாகியிருந்தது. இலங்கையில் வாழ்ந்த ஒருகூட்டம் மக்களின் குடியுரிமைப்பறிப்பு, மோசமான இனக்கலவரம், தமிழையும் ஆட்சிமொழியாகச் சேர்த்துக் கொள்ளாத இழுபறிகள், ஒப்பந்த மீறல் என்பவற்றைக் கடந்து வந்திருந்தபோதும், அரசியற் சட்ட நிர்ணயம் வழங்கிய 29 ஆவது சரத்தில் சிறுபான்மை இனங்களுக்கு அரசியல் ரீதியாகப் பாதுகாப்பு உண்டு என்று சிறுபானமை இனங்கள் யாம் நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் உள்வீட்டுதயாரிப்பான குடியரசு யாப்பு என்ற வலது-இடது கூட்டுத்தயாரிப்பு அடுத்து வந்த எல்லா நாசங்களுக்கும் மேலும் அடித்தளமிட்டது. அதன் பின்னர் தரப்படுத்தல் என்று வழங்கப்பட்ட படிப்பு ஒதுக்கீடுகள் எல்லாவற்றையும் தலைகீழாக்கியது.

70களை நினைவூட்டினால் தெரிவது ரியூட்டறி என்று சொல்லப்பட்ட தனியார் கல்விக்கூடங்கள். கல்வி ஒரு மலினமான சில்லறை வியாபாரமாகியது. பெயரளவில் இலவசக் கல்வி என்ற போதிலும் ஒவ்வொரு பெற்றோரும் தமது உழைப்பின் பெரும்பகுதியினை இந்த ரியூட்டறிகளில் இழந்தனர். கல்வி என்பது தனியாகப் பரீட்சையில் சித்தியடைதல் மட்டுமே என்றானது.

தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது. 80களில் இனக்கலவரம் வந்தது, ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளுக்கு இளைஞர்கள் வேலைதேடிச் சென்ற அனுபவத்துடன், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கும் இளைஞர்கள் இடம்பெயரத் தொடங்கினர். நீடித்த ஓர் இருப்புக்கான போராட்டமாக தனிநாட்டுப் போராட்டத்தில் இளைஞர்கள் இணைந்தனர். ஆயுத இயக்கங்கள் பெருகின, பிரிந்தன, பின் இணைந்தன, சிதைந்தன, அழிக்கப்பட்டன, முடிவில் எல்லாமே அழிந்துபட்டன. இந்த நச்சுச் சுழலுக்குள் இரண்டு யவ்வன கால வருடங்களை இழந்து , அதன் வலிகளுடன் வாழும் ஓர் இளைஞனின் கதை இது.

அக்காலச் சிறுவர்கள் மீது குடும்பச் சுமைகளைக் கையளித்துவிடுவது மிகச் சகஜமானது. வாழ்வின் உன்னத இலட்சியங்களாக அந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றச் சிந்திப்பதற்கு அப்பால் எதுவும் இருந்திருக்க முடியாது. ஆனாலும் தனிநாடொன்று கிடைத்தால்…நாம் சுபீட்சம் அடைந்து விடலாம் என்பதும் வெகுஜனச் சூழல் சொல்லிவிட்டு சென்ற ஒன்று. சின்ன வயதில் இருந்தே எமக்கிருக்கும் பொறுப்புக்களை அறிவுறுத்தியபடி வளர்க்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அவையெல்லாவற்றையும் மீறவும், விட்டுப்பிரியவும் எவ்வகை நியாயங்களை வரித்துக்கொண்டிருப்பார்கள்!

சிறுபராயத்தில் எமக்குத் தெரிந்த உலகளவு, நாம் சிந்திக்க முடிந்த எல்லையளவு, சூழல் வழங்கிய அறிவளவில் இலட்சியங்களை வரித்துக்கொண்டிருப்போம். எல்லாவற்றையும் சகித்துப் போக எம் சமுக வாழ்வு கற்றுக்கொடுத்திருக்கவும் கூடும். ஆனால் ஓர் ஆயுதப் போராட்டத் தில் இணைந்து சில மிகக் குறுகிய காலத்துள்ளேயே ஏற்படும் ஏமாற்றமென்பது வெறும் சொற்களில் சொல்லிக்கொள்ளக் கூடிய விடயமல்ல…அதன் வலிகளை வாசித்துப் பெறுங்கள்.


***

வாசிப்பு-33

 • கருணாகரமூர்த்தி (யேர்மனி)

எனக்கு எப்போதும் வாசிக்கநேரும் ஒரு பிரதி மனதுக்கு நெருக்கமாக அமைந்தால் அதைப்படைத்தவருடன் என் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்வதென்பது என் வழக்கம்.

உங்கள் குமிழியும் போரிலக்கியங்கள் என்கிற வகைக்குள் வரக்கூடியது. உங்களது அடுத்த படைப்பை இன்னும் சிறப்பானதாக அமைக்க ஒருவேளை உதவலாம் எனக்கருதுவதால் குமிழி மேலான சில குறிப்புகளை உங்களுடன் பகிர்கின்றேன்.

குமிழிக்கு நெருக்கமாக என்னை இழுத்த சங்கதிகள் சதா, எந்திரன், ஜோன்போன்ற எளிமையான பாத்திரங்களும் ஜோனின் பல்கலைக்கழகக் கனவுகளும் அது சிலபுள்ளிகளால் சிந்தியபாலாகத் தட்டுப்பட்டுப்போன வாழ்வின் கசப்பு அனுபவங்களுந்தான். உங்களுக்கு Architecture ஆவது கிடைத்தது, எனக்கு Medizine கனவிருக்க   General Science அதுவும் Evening Course தான் கிடைத்தது. அதற்கும் First form மட்டுந்தான் அனுப்பினார்கள் நான் புலம்பெயர்ந்த பின்னால் அதுவும் கிடைத்திருக்குமென்று உறுதியாகச் சொல்லமுடியாது.. உங்களுக்கு அப்பா இறந்துபோனார், எனக்கு அப்பா பாரிசவாதம் வந்து படுக்கையில் வீழ்ந்துவிட்டார். வீழ்ச்சி எதுவாயினும் எம் குடும்பத்தில் ஏற்பட்டதாக்கங்கள் ஒரே விதமானவை. பிள்ளை படித்துமுடித்துத் தூங்கப்போகும்வரை தானும் சுவருடன் சாய்ந்திருந்து தூங்கிவிழும் அம்மாக்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. மனதை நெகிழச்செய்த இடங்கள் அவை.

நீங்கள் கல்விபயின்ற கல்லூரியை வேண்டுமென்றே படைப்புள் மறைதுவிட்டதுபோலத்தெரிகின்றதே………. அதற்கு ஏதும் காரணங்களும் இருக்குமோ?

*

குறைபாடுகள் என்று சொன்னால் அவை மிகச்சொற்பமானவை.

எல்லோருக்கும் தெரிந்திருக்கக்கூடிய சில எளிமையான  வார்த்தைகளுக்கே ஆங்கில வரிவடிவிலும், தமிழிலும் அர்த்தம் எழுதியுள்ளீர்கள். உம் 134:> வெளிவாசல் (Gate)

220:> வாடகைக்கார் (ரக்சி)

ஆனால் நிறைய இடங்களில் வரும் ‘சிக்கிரி போட்’ என்ற சொல்லுக்கும் அப்படியே அரும்பதம் தந்திருந்தால் மேற்படி வார்த்தையை அர்த்தம் பண்ணிக்கொள்ள வாசகனுக்கு ஏதுவாக இருந்திருக்கும்  . அது Security board ஆக இருக்கலாம் என்பது என் ஊகம்.

இன்னும் இந்தியர்கள்தான் Crawling ஐ கிறாவ்லிங் என்று பலுக்குவார்கள். நீங்கள்  பொதுவழக்கில் குறோவ்லிங் என்றே தந்திருக்கலாம்.

இரண்டொரு இடங்களில் வாக்கியங்கள் பொருளமைதிநலிந்து / அல்லது பொருள் மயக்கமேற்படுத்தும்படியாக இருந்தன.

219:> அவனது வாழ்வாதாரம் அப்படியே ஓடிக்கொண்டிருந்தது.

161: > இதில் மாலையில் இந்தப்பாயைச் சுவருக்குச் செங்குத்தாக விரித்தபடி இருக்கவேண்டும் என்றொரு வாக்கியம் வருகிறது. சாதாரணமாகத் பாயைத் தரையில் விரித்தாலே அது சுவருக்குச் செங்குத்தான விரிப்புத்தானே? ஒருவேளை அதை வேறுவிதமாக எழுதமுனைந்து பின் அந்த விவரணம் பூரணமாகாமல் விடுபட்டுப்போச்சா, தெரியவில்லை.

*

முக்கியமான இன்னொன்று இப்போதெல்லாம் எவருக்கும் ஒரு வாக்கியத்தின் எழுவாயோ / செயப்படுபொருளோ பன்மையிலிருந்தால் அவ்வாக்கியத்தின் பயனிலையும் பன்மையிலிருக்கவேண்டுமென்கிற மொழியின் அடிபடைவிதியே மறந்துவிட்டது, அல்லது எப்படியோ கிடந்துதொலையட்டுமென்றோ விட்டுவிடுகின்றனர். இப்பிரதியிலும் பன்மையில் எழுதப்பட்ட வாக்கியங்களின் செவ்விகிதம் பன்மை விகுதியையோ வினைமுற்றுக்களையோ (பயனிலை) கொண்டிருக்கவில்லை

இரண்டொரு எடுத்துக்காட்டல்கள்:>

150:> கேள்விகள் மூட்டமாக அவனுக்குள் பரவியது(ன).

161:> வெடிப்புகள் சீமெந்தினால் நிரப்பப்பட்டது(ன).

161:> உடபுறச்சுவர்கள் வெள்ளை அடிக்கப்பட்டது(ன).

180:> வேலைகளும் முடிந்திருந்தது(ன)

இவ்வகையிலான வழுக்கள் பக்கத்துக்கு இரண்டாவது இருக்குமென்றால் நாவல் முழுவதும் எத்தனை வழுக்கள் என்று நீங்களே பருமட்டாகக் கணிக்கலாம்.

சமீபத்தில் வெளிவந்த ஒருநாவலிலும் அவ்வாறான வழுக்கள் மலிந்திருக்கக்கண்டு அதன் ஆசிரியரிடம் ஒரு தொலைபேசி உரையாடலில்  அதுபற்றிக் குறிப்பிட்டபோது அவரோ “ அண்ணை இப்போ எல்லாரும் அப்படித்தான் எழுதிறாங்கள்……… அதொரு பெரிய விஷயமாக எனக்குத்தெரியேல்லை” என்று முடித்தார்.

எப்படிக் கவிதையில் வழுக்களை ஒருவரியேயாயினும் அனுமதிக்க முடியாது, நாவலிலும் அப்படித்தான். ஒருநாவலை வாசிக்கும் வாசகன் அது நிறைவுறும்வரையில் அதனுடனேயே அதன் ஒவ்வொருவரியையும் ரசித்தபடியே வாழ்வான், இங்கே ஏராளம் சந்திப்பிழைகளும் கவனிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. எ+டு 170:> பூனைக்குட்டி மூளையை(ப்) பிராண்டிக்கொண்டிருந்தது. / வேறுசொல்லி(ப்) புன்னகைத்தார். 185:> பின்னர் அவனை(க்)காணவில்லை.

இலக்கணவழுஅமைதியுடனான வாசகங்கள் அதைத்தெரிந்தவனுக்கு  வாசிப்பில் எரிச்சலூட்டும்.  நாவல்போன்ற பிரதிகள் செம்மை நோக்கப்படுவது மிகமிக அவசியம். துர்நேர்கை என்னவென்றால் இப்போது செம்மை நோக்குபவர்களுக்கே அடிப்படையிலான இலக்கணப்பொதுவிதிகள் தெரிவதில்லை. எஸ்.ராமகிருஷ்ணன், பாலகுமாரன் கோணங்கி போன்றவர்களின் நாவலிலேயே இவ்வழுக்கள் மலிந்துகிடக்கின்றன கொசுறுத்தகவலாக:> (நான் படித்தவரையில்) சமகால நம்மவர்களில் தமிழ்நதி, தமிழ்க்கவி, இரவி அருணாசலம் போன்றோர் இதில் விழிப்பாக இருக்கிறார்கள்.

*

மற்றும் தொலைத்தொடர்புப்பிரிவுப் போரளிகளின் அனுபவங்கள்பற்றிச் சொல்லும்போது Morse Signal கள் அனுப்பும் வேகம் பற்றிச் சற்றே மிகையாகச்  சொல்லப்பட்டிருப்பதாக எனக்குப்படுகிறது. காரணம்: ஒரு ஆங்கில வார்த்தையில் / Group பில் சராசரி 5 Characters எனக்கொண்டால் ஒருவரின் சராசரி Send & Receive செய்யும் வேகம் 20 தான். மிகத்திறமை சாலிகள் 30 வரையில் செய்வார்கள். ஆனால்  181:> நிமிடத்துக்கு 60 அல்லது 70 என்பதெல்லாம் சாத்தியமில்லை. 60 என்றாலே பாருங்கள் ஒரு நிமிடத்தில் 60 x 5 => 300 Characters.  அதாவது செக்கனுக்கு 5 Characters என்றாகும். CW Keys எனப்படும்  Paddle Electronic Keys இனால் மட்டுமே அவ்வேகத்தில் அனுப்பலாம், ஆனாலும் ஒருவர்  அதை வேண்டுமானால் கிரகித்துக்கொள்ளலாம், ஆனால் அவ்வாக்கியத்தை எழுதிமுடிப்பது எனக்குத்தெரிந்தவரை அசாத்தியமே!.

172:> ரவியே உழைத்து உருப்பெருப்பித்த இலங்கை வரைபட மாதிரியைப்பார்த்த பெரிசின் (உமா மகேஸ்வரன்) எதிர்வினை வியப்பாயிருந்தது. பெரிசும் சில ஆண்டுகள் நிலஅளவைத் திணைக்களத்தின் (நரேன்பிட்டிய) கதிரைகளைத்தேய்த்த ஒருவர்தான். ஆகையால்  இலங்கை வரைபடம் எங்கே கிடைக்கும், எவ்வகையான வரைபடத்தில் என்ன விபரங்கள் இருக்கும், என்பதும் வேறெவரைவிடவும்  அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கவேண்டும்.

 B முகாமில் வந்து போராளிகளைச் சந்தித்த / முகாமை மேற்பார்வையிட மத்தியகுழுவிலிருவந்த  வாசு என்பவரிடம் சிலபோராளிகள் தங்களுக்கு வேண்டிய அளவில் உள்ளாடைகள் (பென்டர்கள்) இல்லாததுபற்றி முறையிடவும் அவரோ “ தமிழனுக்குக் கோவணந்தானே முதலான உள்ளாடை……. இருக்கிறதை வைச்சுச்சமாளியுங்கள்” என்று மதியுரைத்துப் போகின்றார். அந்த வாசுவானவர் இங்கே பெர்லினில் சிலகாலம் வாழ்ந்துவிட்டு 83 வாக்கில் தளத்துக்குத்திரும்பி  புளொட்டில் இணைந்து இயங்கியவரும், பின்னர் மட்டக்களப்பில்வைத்து புலிகளின் கண்ணிவெடியில் கொல்லப்பட்ட தோழராகவும் இருக்கவேண்டும் என்பது என் ஊகம்.

இயக்கத்தின் பயிற்சி முகாம்களில் அவற்றின் கெடுபிடிகள், தண்டனைகள், துன்புறுத்தல்கள் தாங்கமுடியாமல் மதன் எனும் அப்பாவிப்போராளி பயிற்சிமுகாமைவிட்டு ஓடிவிடும் முயற்சியில் நள்ளிரவில் அயலூரின் கடையொன்றினுள்போய்த் தஞ்சம் புகுகின்றான். அவன் எதிநோக்கும் உயிராபத்தை அறியாத அக்கடைக்காரரோ மீண்டும் அவனைப்பிடித்து பயிற்சிமுகாமில் ஒப்படைத்திவிட இயக்கத்தினரால் அவன் சவுக்குக்காட்டினுள் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்படுகிறான்.

ரவி மேலிடத்தின் சம்மதத்துடன் தளத்துக்குப் (இலங்கை) போய்விட்டு பின்னால் வெளிநாட்டுக்குப் போய்விடும் யுக்திடன் மும்பாய்க்கு வந்துநின்றகாலத்தில் செல்வா எனும் இயக்கத்துக்கு நிதியுதவிகள் வழங்கும் புரந்தரன் இவருக்கும் தங்குவதற்கு இருப்பிடம்கொடுத்து உதவமுன்வருகிறான். அப்போது செல்வாவுக்கு சென்னையிலிருந்து தொலைபேசி வருகிறது “ நானும் படைத்துறைச்செயலரும் மும்பாய் வருகிறோம்……. உவங்களை ஒளிக்கச்சொல்லு ”  ‘இவங்கள் யார் எந்நேரம் எப்படி மாறுவாங்கள்’ என்று புரியாமல் ரவியும் குழம்புகிறார்.

இவிடத்தில் ரவி தான் சுவிஸ்லாந்து வந்தடைந்தகாலங்களையும் பதிவுசெய்திருக்கலாம்.

ரவியைப்போன்ற ஆயிரக்கணக்கிலான தமிழ் இளைஞர்கள் தமது கல்வி, எதிர்காலம் அத்தனையையும் துச்சமெனத்துறந்து இயக்கங்களையும் போராளிகளென்று சொல்லிக்கொண்டவர்களையும் தம்மை விடுவித்துய்விக்கவந்த ஆபத்துபாந்தவர்களாக, ஆதர்ஸங்களாக நம்பிக்கொண்டு ஒரு சுதந்திர ஈழத்தின் கனவுகளோடு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களது கூடாரத்துள் ஒரு போராளியாகப் புகுந்தபின்னர்தான் அவர்கள் எல்லோரும் மீட்பர்களோ இரக்ஷகர்களோவல்ல , அவர்களுள்ளும் எல்லா படிநிரைகளிலும் சகபோராளிகளைப் போதிய ஆதாரங்களின்றிச் சந்தேகப்படுபவர்களும், காட்டிக்கொடுப்பவர்களும், துன்புறுத்த / கொலைசெய்யத் தயாராகவிருக்கும் மிலேச்சர்களும், ஆயுதமோகமும், அதிகார வாஞ்சையுங்கொண்டவர்கள் என்பதனையும், அவர்கள் நடப்பினை அறியாமிலிருக்கும் / அறியாததுபோல் பாவனையிலிருக்கும் மிடிமைத்தலைமையின்கீழ் இயங்கும் சுயபுத்தியற்ற பாஸிசவாதிகள் என்பதையும் ரவி  உணர்ந்துகொள்கிறார். இலங்கை இராணுவத்துடன் மோதுவதை விடவும் சகபோராளிகளுடன் மோதுவதும், இயக்கத்தைவிட்டு ஓடிவிடுவதும் ஆபத்தானது என்பதுவும் அவருக்குப்புரிகின்றது.

குடும்பத்துக்காக உழைக்கவேண்டிய காலத்தை இயக்கத்துக்கு உழைத்து விரயம் செய்தாயிற்று. மீண்டும்வரமுடியாத காலத்தைத் தொலைத்ததை காலந்தாழ்த்தியே புரிந்துகொண்டதையும் தன்வாழ்வியல் சோக அனுபவங்களையும், இருத்தல் மீதான மானுஷவிருப்பையும்  உயர்வுநவிற்சியின்றிக் குமிழியில் எளிமையான மொழியில் ரவி பதிவு செய்துள்ளார்.

சாகச அல்லது பிரமைக்குவிப்பு  மனோபாவமின்றி நாவலை இயல்பாக நகர்த்தி, நிறைத்தவிதத்துக்கும் மேலும் ஒரு சபாஷ்!

ரவியின் எழுத்தாளுமை விரயமாகக்கூடாது. நீண்டவிடுமுறைகளின்றித் தொடர்ந்து எழுதுங்கள் தோழர்!


***

வாசிப்பு-34

 • எம்.கே.முருகானந்தன்

‘குமிழி’ – இயக்க உள்ளக பிரச்சனைகளைப் பேசும் நாவல்

எழுபதின் பிற்கூறுகளில் இலட்சிய தாகத்துடன் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் அவலமாக முடிந்த காலத்திற்குள் எம் இனத்தின் விடுதலைக்காக, மண்ணின் மீட்புக்காக, தமது உயிரைத் துட்சமாக மதித்து, குடும்பத்தைக் கைவிட்டு, கல்வியைத் தூக்கியெறிந்து, தொழிலைத் துறந்து சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கதைகளை நாம் நிஜ வாழ்வில் கண்டிருக்கிறோம். கேட்டிருக்கிறோம். கதைகளாக, கவிதைகளாக, நாவல்களாக படித்தும் இருக்கிறோம்.

இதுவும் அப்படியான ஒருவனின் கதைதான். ஆயினும் பத்தோடு ஒன்று என்று புறம்தள்ள முடியாத கதை. முற்றிலும் மாறுபட்ட கதை. போராட்ட வாழ்வு பற்றிய எமது வழமையான எதிர்பார்ப்புகளையும் எண்ணப் பதிவுகளையும் புதைகுழிக்குள் தள்ளி அழித்து மூடி, புதிய தரிசனங்களைத் திறந்துவிடும் வாயிற் கதவு எனலாம். ‘குமிழி’ என்ற 220 பக்கங்களைத் தாண்டும் படைப்பாக விரிந்திருக்கிறது. ரவி எழுதியிருக்கிறார். தற்போது சுவிஸ் ல் வதிகிறார்.

இது வெறும் புனை கதை அல்ல, கேட்டறிந்து எழுதியதும் அல்ல, முழுமையான அனுபவம், சொந்த அனுபவம். தனது வாழ்விலும் தன்னைச் சுற்றியிருந்த உலகிலும் அனுபவித்தவற்றை உணர்வுபூர்வமாக, ஆனால் உள்ளதை உள்ளபடி புட்டுவைத்துத் தருகின்ற படைப்பாக இருக்கிறது.

ஆனால் சுயசரிதையாக அல்ல. நாவல் வடிவத்தில்.

தமிழீழம் காண வேண்டும் என்ற பெருங்கனவுடன் புறப்பட்டவன், அதற்காக தனது உயிரையும் கொடுக்க தயாராக இருந்தவன் பிற்பாடு ‘எனது எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது. வாழ ஆசைப்படுகிறேன்’ என்று சொல்கிறான். ஆம் தன்னுயிரைத் தியாகம் செய்யப் புறப்படவன், அந்த இலட்சிய வாழ்வை வெறுத்தொதுக்கி, ‘வாழ ஆசைப்படுகிறேன்’ என்று சொல்கிறான்.

பெருங்கனவுகளுடன் தமிழகத்திற்கு பயிற்சிக்காக வந்தவன் மீண்டும் தளதிற்கு திரும்பும்போது, தளத்தில் தொலைத் தொடர்ப்பு வலையமைப்பை அமைப்பதற்காக, அவனிடம் இயக்கத்தால் கொடுக்கப்பட்டிருந்த சாதனங்கள் சில, இலங்கை கடற்படையினரின் ஏவகணைகளிலிருந்து தப்புவதற்காக வேகமாக படகில் ஓடியபோது கடலில் தவறி விழுந்துவிட்டன. இதையிட்டு கிஞ்சித்தேனும் கவலைப்படவில்லை. குற்றவுணர்வு கொள்ளவில்லை. மாறாக, படையினரின் தாக்குதலிலிருந்து தப்பித்து, உயர்பிழைத்து வாழ்வது பற்றி மட்டுமல்ல, தன் எதிர்கால வாழ்வு பற்றியும் சிந்திக்கிறான்.

இயக்கதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. சுதந்திர தாயகம் என்ற தனது இலட்சியத்தைப் பற்றியும் சிந்திக்கவில்லை. தனது வாழ்வு பற்றிய அவா மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இத்தகைய முற்று முழுதான மாறுபட்ட மனநிலைக்குள் அவனைத் தள்ளியது என்ன?

அவன் மாத்திரமல்ல அவனது பல நண்பர்களும் கூட தங்களது இயக்க வாழ்வு பற்றி அதிருப்தியும் கவலையும் ஏக்கமும் கொண்டிருந்தனர். ‘எங்கடை வாழ்க்கையை நாசமாக்கிப் போட்டம் மச்சான்’ என அவனது நண்பன் ஒருவனும் கூறுகிறான்.

ஆம்! அவன் மட்டுமல்ல அவனைச் சுற்றியிருந்த பலரும் கூட அந்த மனநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

இதைப் படிக்கும் போது அவனைப் பற்றி, அதாவது போராளியான அவனைப் பற்றியும் அவனை ஒத்தவர்கள் பற்றியதுமான உங்கள் மனப்பிம்பம் உடைந்து நொருங்குவதை உணர முடிகிறது. ஏனெனில் போராளிகள் பற்றி எங்களிடையே நிலவுவது புனிதமான, மரியாதைக்குரிய, போற்றுதற்குரிய மதிப்பீடுகள் மட்டுமே. அவர்களை வீரபுருசர்களாக, கதாநாயகர்களாக மதிக்கிறோம். அவர்கள் வீழ்ந்துபட்டபோது மாவீரர்களாக துதிக்கின்றோம்.

ஆனால் இவன் மாறிவிட்டான். வேறு சிலரும் மாறினார்கள். ஏன் அவர்கள் மாறினார்கள்? அவர்களை மாற்றியது என்ன?

சுயநலமா? இல்லவே இல்லை

இவர்கள் சவுக்கம் காட்டிலிருந்த முகாமிற்று சென்ற மூன்று நாட்களுக்கு பின் ஒரு நாள்

‘திடீரென சவுக்கம் காட்டுக்குள்ளிலிருந்து ஒரு அலறல் சப்தம் கேட்டது. மனதில் ஆழ இறங்குகிற அலறல். அது நரம்புகளை கைப்பிடியாய்ப் பிடித்து இழுத்து உலுக்கியது. மரணஒலி என்று கதைகளில் படித்ததை…..’

… ‘அவன் …..யின்ரை உளவாளி. அதாலைதான் அவனை விசாரிக்கிறம்’

‘நான் சொல்லிறதை கேட்டுப் போட்டு அடியுங்கோ’ என்று திரும்பத் திரும்ப மதனிடமிருந்த உருக்குலைந்த வார்த்தைகள்..

‘கொட்டிலுக்குள் மதனின் ஈன ஒலியும் மூர்த்தியின் உரப்புகளும் நின்று போயிருந்தன.’

எடுத்துக் காட்டியவற்றின் இடைவெளிகளை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

மதன் காணமல் போய்விடுகிறான். அவன் மட்டுமல்ல. வேறு பலருக்கும் இதே கதை தொடர்கிறது.

‘சவுக்கம் காட்டுக்குள் நாய் தோண்டியெடுத்த இரண்டு அழுகின பிணங்களை வயல்காரர்கள் பார்த்துவிட்டு…..’ இந்த வாசகம் முடிவைத் தெளிவாகியிருக்கும் உங்களுக்கு.

இத்கைய சூழலில் ‘சோசலிச தமிழீழம் ஒன்றை கனவு கண்டேன்…’ என்றவன் ‘… போராளிகளா குற்றவாளிகளா நாமெல்லாம்’ என்றவாறாக சஞ்சலம் கொள்ள நேர்கிறது. அவனது நம்பிக்கைகள் ஆரம்பத்திலேயே தகரத் தொடங்கின்

இவ்வளவும் தோழர் உமா மகேஸ்வரனுக்கு தெரியாமல்தான் நடக்கிறது என்றிருந்தான்.

தோழர் என்று சொல்லதையுங்கோ. பெரிசு அல்லது பெரியவர் என்று சொல்லுங்கோ’ என்று ரகுவின் காதோரம் சொன்னான்.

‘பனங்காணிக்குள், சுடலைக்குள், தோட்ட ஆடுகாலுக்கு கீழ், ஒதுக்கமா கோயில் மண்டபத்திற்குள் என்றெல்லாம் வகுப்பெடுக்கும் தருணங்களில் தளத்தில் தோழர் உமா மகேஸ்வரன் என்றுதானே சொன்னோம்’ என்று சொல்ல ரகுவுக்கு எந்த உந்துதலும் இல்லாதிருந்தது.’ ஆம் மனம் திறந்து பேச, கருத்துச் சொல்ல வாய் திறப்பது ஆபத்தானது என அவனுக்கு தெளிவாகிறது.

மற்றொரு காட்சி. ‘தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரினை யார் அறிவார் என்ற வாசகத்தை யாரோ எழுதிவிட்டிருந்தார்கள். அதைப் பார்த்த பெரிசு ஒரு புன்னகையை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தது…… சில மணி நேரத்தில் கந்தசாமி மோட்டார் சைக்கிளில் வந்தான்….. அந்த வசனத்தை எழுதிய தோழரோடு வெளியே வந்தான். அங்கும் ஒற்றனொருவன் செயற்பட்டிருந்தான். இதன் பின்னர் மோட்டார் சைக்கிள் சத்தம் என்பது ஒரு உளவியல் பேயாக அவர்களிடம் குடி கொண்டது.’

எனக்குள்ளிருந்த உமா மகேஸ்வரன் மீதான பிம்பம் உடைந்து நொருக்கியது.

இந்த நூலானது புளட் இயக்கத்தை பற்றியது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

ஆனால் இத்தகைய விடயங்கள் அந்த இயக்கத்திற்கானது மட்டுமல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு இயக்கத்திலும் இலைமறை காயாக நடந்து கொண்டுதானிருந்தன. சாதாரண பொது மக்களான எங்களுடைய கண்கள் கட்டப்பட்டிருக்க நாமோ வீர ஆராதனையில் மூழ்கியிருந்தோம். ரவியின் பேனா எழுத ஆரம்பித்தது போல ஏனைய இயக்க முன்னாள் உறுப்பினர்களும் வாய் திறந்தால் எமது இளைஞர்கள் எத்தகைய சகதிகளுக்குள் மூழ்கிக் கிடந்தார்கள் என்பதை நாம் அறியக் கூடும்.

‘ஆரம்பத்தில் காட்டுக்குள் ஒரு சிறிய குழுவாக இருந்தபோது நடத்தத் தொடங்கிய துரோகிகள் அழிப்பிலிருந்து தொடங்கி, இயக்கங்களின் உட்கொலைகள் ஊடாக பயணித்து, வைத்தியசாலைக்குள் வைத்து படுகொலை செய்ததிலும்,
80 களின் நடுப்பகுதியில் கூட்டாக சக இயக்கத் தோழர்களை சுட்டுத்தள்ளி உயிரோடு எரித்ததிலும், பள்ளிவாசலுக்குள் தொழுமையில் இருந்தவர்களைப் படுகொலை செய்ததிலும், அனுராதபுரத்தில் சிங்கள பொதுமக்களை கூட்டாக சுட்டுத் தள்ளியதிலும், கந்தன் கருணைப் படுகொலையிலும், சுழிபுரத்தில் ஆறு இளைஞர்களை கொன்று புதைத்ததிலும்,
இயக்க உட்படுகொலையிலும் சமூகவிரோதி அழிப்பிலும் எனத் தொடர்ந்த இயக்கங்களின் வரலாறு பூராவும் இந்தக் காட்டுமிராண்டித்தனம் …’ என்று அந்த நூலே பேசுகிறது.

தமது இயக்க உள்ளக பிரச்சனைகள் பற்றிப் பேசிய மற்றொரு நூலான ‘புதியதோர் உலகம்’ மும் புளட் இயக்கத்திலிருந்தே வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. சுய விமர்சனம் செய்யக் கூடிய துணிவும் வெளிப்படைத்தன்மையும் அவர்களிடம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இறுதியாக ஒரு கொசுறுத் தகவல் நூலிலிருந்து. ‘நாம் இயக்கத்தவரா இல்லையா என்பது பற்றியெல்லாம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எந்த விசாரிப்பும் இன்றி வேகமாகச் செயற்பட்டார். வைத்தியராகவும் இலக்கியவாதியாகவும் இருக்கும் சாத்தியத்தை நிருபித்த அந்த மனிதரின் சமூகப் பொறுப்பே எமது மூவரினதும் உயிரைக் காத்துத் தந்தது’

இது என்னைப் பற்றியது என இந் நூலை வாசித்த நண்பர்கள் இருவர்கள் சொன்னார்கள். அந்த தொப்பி இந்தத் தலைக்குப் பொருந்துமா என்பது எனக்கு நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை.

ரவியிடம் சிறப்பான மொழி வளமும் படைப்பாளுமையும் இருப்பதை ஆரம்பத்தில் வரும் மூன்று அத்தியாயங்களும், இறுதியில் வரும் சில பகுதிகளும் எடுத்துக்காட்டுகின்றன. மிகுதியில் பெருமளவு சம்பவங்களின் சித்தரிப்பாகவே இருக்கின்றது. இருந்தபோதும் தொய்வின்றி வாசிக்கக் கூடியவாறு சுவார்ஸமாக நகர்த்தியிருக்கிறார்.

இன்றைய (10 Jan 2021) தினக்குரலில் இக் கட்டுரையின் சுருக்கிய வடிவம் வெளியாகியுள்ளது. ஞாயிறு தினக்குரலுக்கும் அதன் ஆசிரியருக்கும் எனது நன்றி.

‘குமிழி’ – ரவி எழுதிய நாவல்

விடியல் வெளியீடு

இந்திய விலை 180/=


***

வாசிப்பு-35

 • சரவணன் மாணிக்கவாசகம் (இந்தியா)

ஆசிரியர் குறிப்பு:

ரவி, 80 களின் இறுதியிலும் 9௦ களிலும் ‘மனிதம்’ என்ற இதழினை குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு தொடர்ச்சியாக நடத்தியதன் மூலமும், பல்வேறு விதமான இலக்கிய, சமூக செயற்பாடுகளின் மூலமும் பரவலாக அறியப்பட்டவர். தனது இளமைக் காலங்களில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு ஆயுதப்பயிற்சியும் பெற்றுக் கொண்டவர். அவர் 1984 இல் இருந்து 1985 வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார். இது நாவல்.

புத்தகத்திலிருந்து:

” வௌவால்களைக் காணாத விருட்சமாக வேப்பமரத்தின் குடும்பம் போல் வளர்ந்திருந்த அந்த மரத்தின் நிழலொளியின் கீழ் அவளது புதைகுழியின் காலடியில் மண்டியிட்டேன். கைவிடப்பட்டிருந்த இந்த விடுதியும் அவளது மரணமும் என்னை என்னிடமே மீட்டுத்தந்த இடத்தையும், மனிதரையும் இழந்த துயரமாக வடிந்தது. மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது, நான் இப்போதைய நானாக மாறிக் கொண்டிருந்தேன்.”

சமீப காலத்தில் வேறெந்தப் போரையும் விட ஈழப்போர் நாவல்கள் அதிகம் வந்திருக்கின்றன. LTTE க்கு ஆதரவாக, விமர்சனம் செய்பவையாக, நடுநிலைப் பார்வையில் என்று பல. இது PLOTல் இருந்த ஒருவரது நாவல். இரண்டு பெரிய இயக்கங்களும் கடைசிவரை ஒன்றாய் இருந்திருந்தால், ராஜிவ் கொலையில் புலிகள் பெயர் அடிபடாமல் இருந்திருந்தால்…………If “ifs” and “buts” were candy and nuts, wouldn’t it be a Merry Christmas?

துரோகி என்று சின்ன சந்தேகம் வந்தாலும் சித்திரவதைக்குள்ளாக்குவது, இயக்கத் தோழர்களுக்கு நடுவிலும் ஜாதி, பொருளாதார அந்தஸ்தினால் ஏற்றத்தாழ்வுகள், இயக்கத்திற்குள் இருக்கும் ஆண்பெண் போராளிகள் தங்களுக்குள் காதல் வசப்படக்கூடாது போன்றவை எல்லாம் ஒரு நாட்டின் இயக்கத்தில் மட்டும் இருப்பது அல்ல.

வகுப்புகள் நடந்து கொண்டிருக்கையில் இடையில் இயக்கத்தினர் தங்களது கவர்ச்சிகரப் பிரச்சாரத்தைப் பிஞ்சுகளுக்கு செய்வதாக ஒரு குறிப்பு வருகிறது. எந்த தீர்மானமும் எடுக்கும் முதிர்ச்சி இல்லாதவர்கள் எப்போதும் கவர்ச்சிக்கே மயங்குவர். தமிழக கிராமங்களில் இயக்கத்தில் இருக்கும் எல்லோருமே விடுதலைப் புலிகள் தான். தொலைதொடர்பு பிரிவில் இருப்போர் களத்தில் இருக்கும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை. மக்கள் இவர்களைத் தங்கள் பிள்ளைகள் போல் அன்பு செலுத்தியதாய் பதிவு செய்யப்படுகிறது.

இந்த நாவல் சுயஅனுபவங்களை நாவல் வடிவில் எழுதியது. ஈழத்தை விட்டுத் தப்பிக்குமுன் தன் இயக்க அனுபவங்களைக் கொடுத்துப் பாதுகாக்க வைத்திருந்தது அழிந்து போகிறது. முப்பத்தைந்து வருடங்கள் கழிந்து நாவல் உருவம் எடுத்து வருகிறது. நினைவிலிருந்து எழுதப்படுவதால் இறந்த பாண்டி வெளிநாடு தப்புவது போல் சிறு நினைவுப்பிழைகள் உண்டு. என்றாலும் இது ஒரு ஆவணம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. இது மற்ற போர்நாவல்களிலிருந்து வித்தியாசப்படுவதை வாசித்தவர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.

ஆரம்பத்தில் ஆங்கில நாவல்களின் தொடக்கம் போல் ஒரு Nightmareல் தொடங்கும் நாவல், தன்னிலையில் பின் வேறுவேறு கதைசொல்லிகளால் வளர்கிறது. இடையில் ஒரு அத்தியாயத்திற்கு வேப்பமரம் கதைசொல்லி. ரவியின் மொழிநடை இனிமை. ஈழத்தில் தமிழாசிரியர்கள் வேறுவிதமாக சொல்லிக் கொடுக்கிறார்களா!

இந்த நாவல் ஒருவகையில் ரவி இத்தனை வருடங்கள் சுமந்த பாரத்தை இறக்கி வைக்க உதவியிருக்கும். இயக்கம் எதுவாயினும், தாய், தந்தை, உடன்பிறந்தோர், நண்பர்கள், காதல் எல்லாவற்றையும் விட்டு உணர்வின் உந்துதலில் நாட்டுவிடுதலைக்காக போராடிய அப்பாவிகளின் ரத்தம் ஒரே மண்ணில் தான் கலந்திருக்கிறது. தலைமையின் தவறுகள் வேறு வஞ்சங்கள் அவர்கள் தியாகத்தின் அடர்த்தியை ஒருநாளும் குறைக்கப் போவதில்லை. கடைசியில் அத்தனைக்கும் அர்த்தமில்லாமல் போனது. போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனது.

#நாவல்கள்

 • குறிப்பு :

இரு தகவல்கள் -ரவி

 1. //இறந்த பாண்டி வெளிநாடு தப்புவது போல் சிறு நினைவுப்பிழைகள் உண்டு// என இப்பதிவில் வருகிறது. அது தவறு. நாவலில் பாண்டி என்ற பெயரில் மூன்று வெவ்வேறு நபர்கள் வருவதால் வாசகருக்கு குழப்பம் வந்திருக்கிறது என நினைக்கிறேன். ஒருவர் B முகாம் (ஆரம்ப முகாம்), இரண்டாமவர் தொலைத்தொடர்பு முகாம், மூன்றாமவர் வண்டி (வள்ளம்) ஓட்டியாக இருந்தவர். இவர் கடலில் இலங்கை கடற்படையால் கொல்லப்படுகிறார். தொலைத்தொடர்பு முகாம் பாண்டிதான் வெளிநாட்டுக்கு தப்பிப் போகிறார். (அது நாவலில் சரியாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது).

2. மனிதம் குறித்து…
சுவிசிலிருந்து வெளிவந்த
“மனிதம்” சஞ்சிகை ஒரு கூட்டு வேலைமுறையாக இருந்தது. அதன் ஆசிரியர் குழுவில் நானும் ஒருவராக இருந்தேன். 1988 இலிருந்து மனிதம் வீடியோ சஞ்சிகை 4 காணொளிகள் வெளிவந்தன. பின்னர் 1989 செப்ரம்பர் இலிருந்து 1994 ஒக்ரோபர் வரை மொத்தம் 30 மனிதம் சஞ்சிகைகள் வெளிவந்தன. 1989 இலிருந்து 1992 வரை கையெழுத்துப் பிரதியாகவும் 1992 இலிருந்து 1996 வரை கணனிப் பதிப்பாகவும் அவை வெளிவந்தன.


***

வாசிப்பு -36

 • பற்றிக் பாலராஜா (சுவிஸ்)

***

வாசிப்பு -37

 • டி.சே.தமிழன் (கனடா)

வரலாற்றின் வழித்தடங்களில்

குமிழியையும், நீண்ட காத்திருப்பையும் முன்வைத்து

டிசே தமிழன்

……………………..

“History is unkind to those it abandons, and can be equally unkind to those make it.”

-Salman Rushdie (Two Years Eight Months and Twenty-Eight Nights)

1.

ரஷ்யப் புரட்சி பற்றியும், அதன் முன்னணிப் புரட்சி வீரர்களான செம்படை (red army) பற்றியும் நாம் விரிவாக அறிந்திருப்போம். அவர்களின் புரட்சிக்கால நினைவுகள், உலக மகா யுத்தங்களில் அவர்களின் மிகப்பெரும் பங்களிப்புக்கள் குறித்து எழுதப்பட்ட நூல்களினூடாக நாங்களும் செம்படைகளில் ஒருவராக மாறியிருப்போம். புரட்சி முடிவடைந்த பின், செம்படையினர் நெடும் மலைகளுக்கும், கொடும் பனிப்பாலைகளுக்கும் இடையிலிருந்த குக்கிராமங்களுக்கும் சேவையாற்ற அனுப்பப்பட்டதையும் வியந்து பார்த்திருப்போம்.

புரட்சி நடக்கும் வரை தொழிலாளர்களாலும், விவசாயிகளும் வழிநடத்தப்பட்ட இப்படையை பின்னர் லியோன் டிராஸ்கி உழைப்பாளிகளுக்கு இருக்கும் ‘அதிகாரத்தை’ விலத்தி, முறைப்படுத்தப்பட்ட ‘இராணுவமாக’ அமைப்புப்படுத்துகிறார். அவ்வாறு ஒழுங்குபடுத்திய டிராஸ்கியையும், உள்கட்சி சதி செய்ததாகக் குற்றஞ்சாட்டி பல்லாயிரக்கணக்கான செம்படைகளையும், ஸ்டாலின் பின்னாட்களில் இல்லாமலும் செய்தார் என்பது வேறு கதை. புரட்சியின்போது லெனின், ஜார் மன்னனை மட்டுமில்லை,  அவரது குடும்பத்தினரையும் கழுவிலேற்றியதை அவ்வாறு எளிதில் வரலாற்று மறக்கவில்லை ஸ்டாலினது குலாக் கடுழீயச் சிறை, உள்ளிருந்தவர்களையும் எதிராளியாக்கப் பார்த்ததன் விளைவென எடுத்துக்கொள்ளலாம். இப்போது ரஷ்யப்புரட்சி, புரட்சியின் பின் அங்கே நிகழ்ந்தவற்றை, அதன் அரசியல் சரி/பிழைகளைச் சற்று ஒதுக்கிவைப்போம்.

ஒருகதைக்கு ரஷ்யப் புரட்சி தோற்றிருந்தால், நாம் இன்னும் வியந்துகொண்டிருக்கும் செம்படைகளின் வீரம்/அர்ப்பணிப்பு என்பவற்றுக்கு இன்று வரலாற்றில் என்ன இடம் இருக்கும் என்று யோசித்துப் பார்த்திருக்கின்றோமா? அப்படித் தோல்வியடைந்திருந்தால் நாம் வாசித்த புத்தகங்களில் எழுதப்பட்டவை எல்லாம் வேறு விதத்தில்தான் எழுதப்பட்டிருக்குமா அல்லது அப்படி எழுதியிருந்தாலும் நாம் அதை வாசிக்கும்போது – வெற்றியடைந்த புரட்சி/உலகமகாயுத்த எதிர்ப்பு- என்ற வாசிப்பை விடுத்து வேறு விதமாகத்தான் செம்படைகளை வாசித்திருப்போமா?

அதை வேறுவிதமாக, இன்று நமது ஆயுதமேந்திய ஈழப்போராட்டம் வெற்றியடைந்திருந்தால் அல்லது ஆகக்குறைந்தது சுயநிர்யணத்துடன் கூடிய அதிகாரப் பரவலாக்கத்துடன் சுமுகமாய்  நமது ஆயுதப்போராட்டங்கள் முடிந்திருந்தால் நாம் எழுதும் ஈழப்போராட்ட வரலாறுகள் வேறு விதத்தில் எழுதப்பட்டிருக்குமா? அல்லது இவ்வாறு எழுதப்பட்டிருந்தாலும் – வெற்றியடைந்த யுத்தத்தின் முன் – இதெல்லாம் பேசப்படாமல் தவிர்க்கப்பட்டிருக்குமா? இன்றைக்கு ஸ்டாலினின் கொடுங்காலம் பேசப்பட்டாலும் ‘என்னவென்றாலும் ரஷ்யாவை இறுக்கமான தேசியத்துக்குள் கட்டமைத்தவர், ஹிட்லரின் பாஸிச நாஸிப்படைகளுக்கு ஸ்டாலின்கிராட்டின் சமாதி கட்டியவர்’ என்று ஸ்டாலினும் ஏதோ ஒரு தருணத்தில் வியந்து பலரால் நினைவுகூரப்படுகின்றார் அல்லவா?

ஆகவேதான் வரலாறு குழப்பமானது மட்டுமில்லை வரலாற்றை எழுதுவது என்பதும் சிக்கலானதுதான். நமது ஈழப்போராட்டத்தின் ஆயுத வரலாறு என்பது தொடக்கத்திலேயே உள் இயக்க/ சகோதரப் படுகொலைகளுடன் தொடங்கியிருக்கின்றது. ஆகவே தொடக்கமே சிக்கலானது. அப்போது இயக்கத்தைத் தொடங்கியவர்களும் இருபதுகளிலும் இருந்தவர்கள்.  இவர்களை சரியாக வழிநடத்தாமல் ஒருபக்கம் எமது தமிழ் அரசியல்வாதிகள் உசுப்பேத்தினார்கள் என்றால், இன்னொருபுறம் இந்திய அரசு தனது நலன் சார்ந்து ஆயுதங்களையும், பயிற்சிகளையும் அள்ளியும் கொடுத்தது. இயக்கங்கள் வீக்கமடையத் தொடங்கிய காலத்துக்கு முன்,ஒரளவு இடதுசாரி/களப்பணிகளுடன் இயங்கியவர்களும் பின்னர் அமைதியாக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்களத்திலிருந்து அகற்றப்பட நமது இயக்கங்கள் அனைத்தினதும் தலைமைகள், அதிகாரம் குவிந்த மையங்களாக  இயக்கங்கள் தொடங்கிய காலங்களிலேயே மாறிவிட்டிருந்தன என்பதும் கசப்பான உண்மை.

2.

அன்று – எழுபது/எண்பதுகளில்- இருபதுகளுக்குள்ளும், இருபதையொட்டிய வயதில் இருந்தவர்களே இயக்கங்களைத் தொடங்கியவர்களும், இணைந்தவர்களாகவும் இருந்தார்கள். அந்த ‘முதிர்ச்சியற்ற’ வயதின் போதாமைகளும், எதையாவது செய்தாகவேண்டும் என்ற உத்வேகமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. அன்றைய சூழல் அப்படிப் பலரை உந்தித்தள்ளத்தான் பலர் இயக்கங்களில் இணைந்துகொண்டார்கள். பிறகு நடந்தது எல்லாமே கசப்பான வரலாற்றுப் பக்கங்களாய் நம்முன்னே விரிந்துகிடக்கின்றன.

இவ்வளவு கசடான பக்கங்களாய் நமது ஆயுதப்போராட்டம் இருந்ததற்காய், ஒருவர் அன்று வளர்த்த கனவை- ஒடுக்குமுறைக்கு எதிராக எழுதல்- கொடுங்கனவாக நினைத்துப் பார்க்கத் தேவையில்லை. காலம் நம்மை இப்படி ஆக்கியது என்பதற்காய், அன்று துணிந்துகொண்ட இலட்சியத்தில் ஒரு அப்பாவித்தனத்தை ஏன் நாம் வேண்டுமென்றே ஒளித்துக்கொள்ளவேண்டும். ஆனால் இன்று நமது போராட்டச் சூழலை வைத்து எழுதப்படுகின்ற  தன் வரலாற்று பனுவல்கள் அனைத்துமே குற்றவுணர்வுடனேயே எழுதப்படுகின்றன. அதை ஒருவகையில் தன்னை எழுதித் தன்னிடம் வைத்திருக்கும் ஆற்றொண்ணவொண்ண துயரங்களைக் கடத்தல் என்பதென ஒருவகையில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி எழுதுதல் பலருக்கு ஒரு தெரபியாக இருப்பதை நாம் மறுக்கத் தேவையில்லை. ஆனால் trauma இற்குள் இருப்பவர்க்கு traumaவைப் பேசுதல் முதல் கட்டமெனில், அவர்களின் கடந்தகாலத்தில் நடந்த நல்ல விடயங்களைப் பேசுவது என்பது அவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான ஒரு வழியாகவும் இருக்கும்.

அதற்காகத்தான் ‘குமிழி’யையும், ‘The long watch’ (தமிழில் நீண்ட காத்திருப்பு) என்ற இரண்டு தன் வரலாற்றுப் பனுவல்களை எடுத்துக்கொள்கின்றேன். குமிழி புளொட்டில் 1985-1986 இல் இணைந்து அதன் உள்ளே இயங்கிய கொடூரமான நிகழ்வுகளைப் பார்த்து அந்த இயக்கத்தைவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிய ஒருவருடைய (பல்வேறு பாத்திரங்களுள்ள தன்னிலைகளால் இங்கே நான் என்னும் கதைசொல்லி இவற்றைச் சொல்கின்றார்) அனுபவங்களை புனைவின் மொழியில் சொல்கின்றது. ‘நீண்ட காத்திருப்பு’ என்பது ஒரு இராணுவக்கப்பலுக்குப் (சாகரவர்த்தனா) பொறுப்பான அதிகாரியான ஒருவர்,  அவரின் கப்பலைப் புலிகள் தகர்த்து அவரை எட்டு வருடங்கள் சிறை வைத்த அனுபவங்களைப் பேசுகின்ற ஒரு நினைவுகளின் தொகுப்பாகும்.

இந்த இரண்டு நூல்களையும் அடுத்தடுத்து வாசித்து தற்செயலானது என்றாலும் இரண்டுமே  trauma பற்றிச் சொல்கின்றது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ‘குமிழி’யில் ஒருவர் இரண்டு வருடங்கள் இயக்கம் ஒன்றில் பார்த்த அனுபவங்கள் என்றால், ‘நீண்ட காத்திருப்பில்’ ஒருவர் எட்டு ஆண்டுகள் சிறையில் பெற்ற அனுபவங்களின் தொகுப்பாகும்.

இவ்விரு அனுபவங்களும், ஒருவருக்கு பல்வேறு உளவியல் சிக்கல்களைக் கொடுத்திருக்கின்றது என்றாலும், ‘நீண்ட  காத்திருப்பில்’ அஜித் போயகடா அதை மீள நினைத்துப் பார்ப்பதினூடாக அந்தத் துயரத்தை ஒருவகையில் கடக்கமுயல்கின்றார் என்பதை அவர் கதை சொல்லும் தொனியில் கண்டடைய முடியும்,  தனக்கு நிகழ்ந்த கடும் விடயங்களைக் கூட எந்தப் பக்கமும் சாராது (அல்லது அளவுக்கதிகமாய் அந்த நிகழ்வுகளில் அரசியல் சரிபிழைகளைப் பேசாது) தான் உணர்வதைச் சொல்வதால் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக விரிகின்றது.

இப்போது ‘குமிழி’ உள்ளிட்ட நமது ஆயுதப்போராட்டம் பற்றிய இவ்வாறான நூல்களில் ஏன் அளவுக்கதிகமாய் குற்றவுணர்வு மேலோங்கி நிற்கின்றது என்பது குறித்து யோசித்துப் பார்க்கவேண்டியிருக்கின்றது. ஏன் அஜித் போயகொடா இராணுவத்தை விமர்சித்தாலும், தான்  தனித்த ஒரு மனிதன் என்கின்ற ரீதியில் கதை சொல்லும்போது, நமக்கு இராணுவம் செய்த கொடும் நினைவுகள் உடனே நிகழ்வுக்கு வராது அதனோடு ஒன்றிப்போகமுடிகின்றதே? அது ஏன்? எப்படி அவரால் இவ்வாறான மனதைத் தொடும் ஒரு கதையை – எட்டு வருடங்கள் சிறைத்தண்டனை- பெற்றபோதும் சொல்லமுடிகின்றது என்ற திசையில் வைத்து நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.

அஜித் போயகொட புலிகளால் விடுவிக்கப்படும்போது கிட்டத்தட்ட அவரவர் கால அளவுக்கு ( 8 ஆண்டுகள்) இலங்கைச் சிறையில் வைக்கப்பட்டிருந்த புலிகளின் முக்கியஸ்தவரான கெனடி என்பவரும் கைதிகள் பரிமாற்றத்தின்போது விடுவிக்கப்படுகின்றார். இன்று அந்தக் கெனடி இருந்திருந்தால் எப்படி தன் சிறைக்கால அனுபவங்களை எழுதியிருப்பார். அவரும் தோற்றுப்போன போரின் சாட்சி என்ற குற்றவுணர்வுடந்தான் அவரது தன் வரலாற்று சிறை அனுபவங்களை எழுதியிருப்பாரா?

இவ்வாறு சிந்திக்கக் கோருவதன் நோக்கம், நமது இயக்கங்களின்/ஆயுதப்போராட்டங்களின் கொடூரங்களைப் பேசுவதைத் தவிர்ப்பதோ அல்லது அவை சென்று சேர்ந்து திசைகளின் துயரங்களைப் பேசாமல் இருக்கவேண்டுமோ என்பல்ல அர்த்தம். ஆனால் நாம் எல்லோரும்  ஏன் ஒரேமாதிரியான வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கின்றோம் என்பதைப் பற்றி யோசிக்கவேண்டும் என்பதற்காக இதைச் சொல்கின்றேன்.

3.

குமிழியையோ, புதியதோர் உலகையோ, இன்னபிற நூல்களையோ வாசிக்கும்போது, இதில் கொடுமையானவர்களாக/சித்திரவதையாளர்களாக இருப்பவர்களின் நிலையிலிருந்து அவர்களின் சார்பிலிருந்து ஒரு நூல் எழுதப்பட்டால் எவ்வாறு இருக்குமெனவும் யோசித்துப் பார்த்தேன். அவர்களும் ஒருவகையில் எல்லோரையும் போன்று தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற ஒத்த கருத்தோடுதானே இயக்கங்களுக்குப் போயிருப்பார்கள். அவர்களுக்கு என்றும் ஒரு குரல் இருக்குமல்லவா? அவர்கள் ஏன் அந்த இடத்தைச் சென்றடைந்தார்கள் என்பதற்கும் ஒரு கதையிருக்கும் அல்லவா?

இதையெல்லாவற்றையும்விட, இந்தக் குற்றவுணர்வும், செய்துவிட்ட வாதையுணர்வும் அவர்களுக்கு அல்லவா எல்லோரையும் விட மிகுந்த தொந்தரவாக தொடர்ந்து அவர்களின் வாழ்விற்குள் சுழன்றாடியபடி இருக்கும். அப்படியெனில் அவர்கள் எப்படி தமது  traumaஇற்குள் இருந்து மீண்டிருக்கின்றார்கள் அல்லது மீளாமலே தமது வாழ்நாளைக் கழித்துக்கொண்டே இருக்கின்றார்களா? அவர்களும் தமது தன் வரலாற்றுக் கதைகளை எழுதவேண்டும். ஆகக்குறைந்தது தமது சொந்தப்பெயர்களிலோ/இயக்கப்பெயர்களிலோ எழுதாவிட்டால் கூட, அவர்கள் தமது குற்றங்களிலிருந்து நீங்குவதற்காய்/பாவமன்னிப்புக்களைப் பெறுவதற்காய் ஏதோ ஒரு புதிய புனைபெயரிலாவது எழுதலாம். 

உதாரணத்துக்கு அஜித் போயகொடா தம்மைச் சிறையில் வைத்த காலங்களில் இருந்த பதினம் விசாரணையாளன் ஒப்பிலான் என்பவரைப் பற்றி நமக்குக் கூறுகின்றார். அவர் புலிகளின் புலனாய்வளராக இருந்துகொண்டு இந்திய றோவினது உளவாளியாகவும் இருந்திருக்கின்றார். பின்னர் இலங்கையிலிருந்து தப்புவதற்காக இலங்கை அரசுக்கும் புலிகளுக்குள் இருந்து வேவுபார்த்தாகவும் கூறுகின்றார். இந்த ஒப்பிலான் (அவருக்கு வேறு ஒரு பெயரும் இருக்கின்றது. அது இங்கே வேண்டாம்) அஜித் போயகொட சிறையிலிருந்து வெளிவந்தபின் (அநேகமாய் போர் முடிந்தபின்னதாக இருக்கவேண்டும்) கனடாவிலிருந்து முகநூலில் தன்னைத் தொடர்புகொண்டதாகவும், ஒப்பிலான் தனது கதைகளைச் சொல்லித்தான் தப்பித்திருப்பார் என்றும் போயகொடா தனது நூலில் சந்தேகம் தொனிக்க எழுதிச் செல்கின்றார்.  இந்த ஒப்பிலான் தனது அனுபவங்களை எழுதினால் இன்னொருவகையாக இருக்கும் அல்லவா?

நமக்கு முதல் எதிரியாய், பல தசாப்தங்களாய் நம்மை ஒடுக்கிய/சித்திரவதைகள் செய்த அரசை/இராணுவத்தை இன்று ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொண்டுவிட்ட, அவர்களையும் சக மனிதர்களாய் மதித்து, எமக்கு இழைத்த எல்லாக் குற்றங்களுக்கும் மேலாய் பழகத் தொடங்கிவிட்ட இந்தக் காலத்தில், சகோதரப்படுகொலைகளைச் செய்தவர்களும்/சித்திரவதையாளர்களாக மாறியவர்களும் ஓடி ஒளிந்துகொள்ளத்தேவையில்லை. இற்றைக்கு இவ்வாறு சித்திரவதைக்குட்பட்டவர்களோ, இவர்களினால் தமது குடும்ப உறவுகளைப் பலிகொடுத்தவர்களோடு ‘கண்ணுக்கு கண்’ கேட்கும் பழிவாங்கும் நிலையில் இருக்கப்போவதில்லை. அவர்கள் தமக்கும் தமது உறவுகளுக்கும் ஏன் இவ்வாறு நடந்தது எனக் கேட்கவும் அந்தத் துயர்களுக்கு ஓரிடத்தைக் கொடுத்துவிட்டு நகரக்கூடியவர்களுமாகவே பெரும்பாலும் இருப்பார்கள். ஒருவகையில் நெல்சல் மண்டேலா சொன்னதுமாதிரி ‘ உங்களை மன்னிக்கின்றோம், ஆனால் நடந்தவற்றை மறக்கமாட்டோம்’ என்ற மனோநிலைக்கு பாதிக்கப்பட்டவர்கள் வந்திருக்கவும் கூடும்.

இன்றையகாலத்தில் நம் ஆயுதப்போராட்டம் சார்ந்து எழுதப்பட்டும் தன் வரலாற்று நூல்களில் பெரும்பாலானவை  இன்னொரு போராட்டத்தைத் தொடங்குவதற்கான நம்பிக்கையைத் தராவிட்டாலும்,  இனியும் ஆயுதப்போராட்டங்களைத் தொடங்க விருப்பமுள்ளவர்க்கு  எவ்வளவு ஒடுக்குமுறை ஈழத்தில் இருந்தாலும் ஆயுதங்களைத் தூக்குவதற்கான காலம் இனியெப்போதுமே வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யக்கூடியதாக இருக்கின்றன என்பது முக்கியமானது. அத்துடன் ஆயுதங்களைத் தூக்கிய எந்தப் போராட்டத்துக்கும் இவ்வாறு உட்படுகொலைகளையும், எதிரியென/உளவுபார்ப்பவர்களை உறுதியான தகவல்களே இல்லாது போட்டுத்தள்ளிய வரலாறுகளும் இருப்பதை, உலகப் புரட்சி வரலாறுகளை சும்மா மேய்ந்து பார்த்தாலே நம்மெல்லோருக்கும் புரியும். ஆகவே நமது ஆயுதப்போராட்டங்கள் தவறான பாதையில் போனது என்றாலும் அதை உலகப் புரட்சிப் போராட்டங்களின் முன்வைத்துப் பார்த்து இவ்வாறு தன் வரலாற்று புதினங்களை எழுத முயற்சி செய்யும்போது அவை நமக்கு வேறொரு பரிணாமத்தைத் தரவும் கூடும்.

இவ்வாறு தன் வரலாற்றை எழுதுபவர்கள் அல்லது அனுபவங்கள் உள்ளவர்களிடம் நான் தனிப்பட்ட உரையாடல்களில் ஒரு கேள்வியை அடிக்கடி கேட்பதுண்டு. நீங்கள் அன்றைய 20களில் அவ்வளவு முதிர்ச்சியற்றுத்தான் இருந்தீர்கள், இப்போது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலே ஆனபின்னர் என்னமாதிரியான போராட்டவடிவத்தின்/வடிவங்களின் மூலம் நாம் உரிமைகளைப் பெற்றுக்கொண்டிருக்கலாம் என நம்புகின்றீர்கள் எனக் கேட்பேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழிகளைத் தங்களால் இயன்றளவு சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கே இது hypothesis என்ற சந்தேகம் இருப்பதை அவர்களின் பதில்களால் அறியமுடியும். ஒரு தெளிந்த பாதை இவ்வாறான விடயத்துக்கு இருப்பதுமில்லை.

தத்துவத்திற்கும், கனவுக்கும், செயற்பாட்டுக்கும் ஒரு பெரும் தொலைவு இவற்றுக்கிடையில் இருப்பதை நாம் அறிவோம். ஏற்கனவே நடந்துவிட்ட  கியூபாப் புரட்சியைப் பார்த்துவிட்டு  சேகுவேராவின் ‘கொரில்லாப் போரை’ வாசித்து மட்டும் அந்தப் பாதையை நம்பிச் செல்லவும் முடியாது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதிய மார்க்ஸ் கூட புரட்சி இன்னொரு நாட்டில் நடக்குமென எதிர்வுகூற,  வேறொரு நாட்டில், வேறொரு சூழலில் ரஷ்யாவில் புரட்சி நிகழ்ந்து முடிந்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகியும் விட்டது. ஆக, நாம் வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ள நிறைய இருக்கின்றன. எதைச் சரியாகச் செய்வது என்பதற்காக மட்டுமில்லை, சிலவேளைகளில் நமது பாதைகள் தவறாகச் செல்கின்றது என்பதைக் கற்றுக்கொள்வதற்காவும் கூட, வரலாறு நமக்குத் தேவையாக இருக்கின்றது.

 • 27012021

***

வாசிப்பு-38

 • தேவ அபிரா (நெதர்லாந்து)

குமிழி என்கிற இப்படைப்பு  திரு பா.ரவீந்திரன் அவர்களால் எழுதப்பட்டது. திரு பா.இரவீந்திரன் அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் இணைந்திருந்து பின்னர் அதன் சனநாயகமற்ற போக்கினால் விலகியவர். புலம் பெயர்ந்து தற்பொழுது சுவிற்சிலாந்தில் வசித்து வருகிறார். சமூக ஆர்வலரான இவர்  தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டுத்தளத்திலும் அரசியற் தளத்திலும் நிகழ்கின்றவைகள் பற்றிய கூர்மையான பார்வையைக் கொண்டிருப்பவர். அவைபற்றிய விமர்சனங்களை வெளிப்படுத்துபவர். இவர் ஊடறு  என்னும் பெண்களுக்கான செயல் தளத்தையும் இணைய வெளியையும் செயற்படுத்தும் பத்மனாதன் ரஞ்ஜனி அவர்களின் தோழர்.

இப்படைப்பு 1984 க்கும் 1985 க்கும் இடையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்னும் விடுதலைப் போராட்ட அமைப்புள் நிகழ்ந்தவற்றை  அதில் இணைந்திருந்த இளைஞன் ஒருவனின் பார்வையிற் பதிவு செய்கிறது. விடுதலைக்கான கனவுகளைச் சுமந்து சென்ற இளைஞர்கள் விடுதலைப் போராட்ட அமைப்பொன்றினுள் நிகழ்ந்த பெரும் பிழைகளால் உயிர் இழந்தும் உளக் காயம் அடைத்தும் போராட்டக்களத்தைவிட்டு நீங்கிய அவலத்தை இப்படைப்புச் சொல்கிறது

எனது, நட்பு மற்றும் உறவுத்தளங்களினூடாக நான் அறிந்துகொண்ட பல விடையங்கள் இப்படைப்பில் வந்து செல்கின்றன. ஆயினும் வாசிக்கத் தொடங்கியபொழுது இப்படைப்பு  இடைநிறுத்த முடியாதபடி ஆர்வமூட்டி என்னைத் தொடர்ந்து வாசிக்க வைத்தது.

கீழ் வருவன இப்படைப்பிற் தெரிகிற களங்களாகும்

 • இலங்கையின் தென் பகுதியில் நிகழ்ந்த இனக்கலவரம்
 • கதை நாயகனின் குடும்பநிலமை
 • ஈழத்தின் விடுதலைப்போராட்ட அரசியற்சூழ்நிலை
 • தமிழ் நாட்டில் இவ்வமைப்பைச் சேர்ந்த  இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்ட மூன்று வேறுபட்ட முகாம்களில் நிகழ்ந்தவைகள்
 • திரும்பி ஈழம்  வந்தபோது இருந்த நிலமை
 • புலம் பெயர்வு

இக்களங்களில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் பேசுபொருட்களாக இருந்த பல விடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவையாவன:

 • சாதியம்
 • மதம் அல்லது கடவுள் நம்பிக்கை
 • இலங்கை அரசின் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியிற் கொண்டு வரப்பட்ட கல்வித் தரப்படுத்தல் முறைமை
 • இனப்பிரச்சனையை இடது சாரிகள் அணுகிய விதம்
 • போராளிகள் சட்டத்தையும் நீதியையும் கையில்  எடுத்துகொண்டமை (எடுப்பதாக நினைத்துக் கொண்டு நீதியின்மையை நிகழ்தியமை)
 • சோசலிச தமிழீழம் பற்றிய சிந்தனைகள்
 • சோசலிச ராணுவம் பற்றிய சிந்தனைகள்
 • தென்னிந்தியத் தமிழ் மக்கள் போராளிகள்மீது கொண்டிருந்த பரிவு;கொடுத்த ஆதரவு
 • பயிற்சி முகாம்  வாழ்க்கையின் பரிமாணம், அங்கிருந்த மனிதர்களின் உடல்  உளப் போராட்டங்கள் மற்றும் வாதைகள்
 • ஆளுமையற்ற தலைமைத்துவம் 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ஈழத்தில் அரசியல் வேலைகளில் ஈடுபட்ட ரகு, ஆயுதப்பயிற்சி பெறுவதற்காக இந்தியா செல்கிறான். இந்தியாவில் பயிற்சி முகாம்களில் நிகழும் சம்பவங்கள்,   தான் இணைந்திருந்த அமைப்புப்பற்றி அவன் கொண்டிருந்த கனவுகளைத் தகர்த்துவிடுகின்றன. இந்தியாவிலிருந்து மீண்டும் ஈழத்துக்குத் திரும்பி வரும் ரகு இங்கும், வாழ்வதோ அரசியல் வேலைகளில் ஈடுபடுவதோ சாத்தியமற்றதாக இருப்பதை உணர்கிறான்.  இறுதியில். வெளிநாட்டுக்குப் புலம்பெயர்கிறான். இது தான் இப்படைப்பின் பருமட்டான வரைவு.

தமிழீழ  மக்கள்  விடுதலைக்கழகத் (People Liberation Organisation Tamil Eelam) தினுள் நிலவிய கொடுமையான நிலைமைகள் அதன் அமைப்பு வடிவத்தையே தகர்த்துவிட்டன என்பதை இப்படைப்பை வாசிக்கும்போது உணர முடியும்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் உருக்கொண்ட ஒரு அமைப்பு என்னவிதமான அதிகாரப் பண்பாட்டைக் கொண்டிருந்தது? என்ன விதமான அரசியல் பாண்பாட்டைக் கொண்டிருந்தது? அதன் தலைமைத்துவம் எப்படித்தொழிற்பட்டது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக முகாம்களில் நிலவிய வாழ்க்கைமுறை விரித்து வைக்கப்பட்டுள்ளது. சனநாயக மற்ற இராணுவவாத  அதிகாரமே அங்கு நிலவியது  என்பதை மிகத்தெளிவாக இப்படைப்பு முன் வைக்கிறது.

திறமையும் அர்பணிப்பும் சமதர்ம வாழ்க்கையில் ஈடுபாடும் கொண்ட போராளிகள் பொறியிற் சிக்கிக் கொண்ட எலிகள்போலச்  சிதைந்துபோவதைப் படைப்பாளி துயரம் தோய்ந்த வார்த்தைகளால் விபரிக்கிறார்.

இப்படைப்பில் வரும் சில சம்பவங்களைச் சுட்டி  அவற்றில் வெளிப்படும் விடையங்களையும் குறிப்பிட விரும்புகிறேன்.

சம்பவம் 1 :

போராளிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும் முகாமில் இருந்த கொட்டில்கள் ஒன்றிலிருந்து(சித்திரவதைக் கொட்டில்) நள்ளிரவில் இதயத்தைப் பிளக்கக் கூடியஅவல  ஒலி கேட்கிறது. இரவுக்காவலில் இருந்த பரம் என்கிற போராளிக்கு  அவ்வவல ஒலிக்கான காரணம் புரிகிறது. அவன்அதிர்ச்சியில் மயங்கி விழுகிறான்.

PLOTE இன் உளவுப்பிரிவின் சந்தேகக்கண்களுக்குள் அகப்பட்டுக்கொள்ளும்  போராளிகளும் முகாம்களிலிருந்து தப்பிச் செல்லமுயலும் போராளிகளும் கைது செய்யப்பட்டுச்  சித்திரவதை செய்யப்படும்பொழுது  எழுந்த அவல ஒலியைக்கேட்டே பரம் மயங்கி விழுந்தான்.

முகாமிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற மதன் எனப்படும் போராளி(முன்னாள் முகாம் பொறுப்பாளன்)  புலிகளின் உளவாளியெனக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் எதுமின்றி உளவுப்பிரிவுப் பொறுப்பாளனான மொட்டை மூர்த்தியால்  தாக்கப்படுகிறான். அப்பொழுது,  முன்பு மயங்கி விழுந்த பரம் என்கிற போராளியும் அழைக்கப்பட்டு  மதனைத் தாக்கும் படி நிர்பந்திக்கப்படுகிறான். மனிதத்தன்மை கொண்ட  பரம் என்கிற  போராளியை மிருகமாக மாற்றும் முயற்சியில் மொட்டை மூர்த்தி என்னும் உளவுப்படைத் தலைவன் ஈடுபாடு காட்டுகிறான்.

இச்சம்பவம் அங்கு என்னவிதமான அதிகாரக் கலாசாரம் நிலவியது என்பதைச் சொல்லிவிடுகிறது. 

வெறும் சந்தேகத்துடன் கூடிய இராணுவ வாத அணுகு முறை அங்கிருந்த போராளிகளுக்கு  உடல் உளச் சித்திர வதைகளைத் தருவதாக மாறிவிட்டிருந்தது. அச்சம் நிறந்த சூழல்கள் முகாம்களுக்குள் உருவாகி விட்டிருந்தன.

ரகு முகாம் மாறி வேறு முகாமுக்குப் போகும்போதும் கூட அங்கும் இவ்வச்சமான சூழ்நிலை  தொடர்வதையும் காண்கிறான். அர்ப்பணிப்புள்ள போராளிகள் ஒரு புறமும் உண்மையான தலைமைத்துவப் பண்புகள் அற்ற எல்லோரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற உளவுப்படையுடன் கூடிய தலைமை மறுபுறமுமாக இந்த அமைப்பு அல்லாடிக்கொண்டிருந்ததைப் படைப்பு எங்கள் முன் விரித்து வைக்கிறது.

இராணுவ வாதம் பாசிச வாதம் போன்றவை ஒரு சமூகத்துள் அல்லது கட்டமைப்புக்குள் நுழையும்போது ஒருவரை ஒருவர் சந்தேகிப்பதும் ஒருவர் மீது இன்னொருவர் அச்சம் கொள்வதும் நிகழத் தொடங்கும். இறுதியில் இவ்விரு வாதங்களும் அது நிலவும் களத்தில் உள்ளவர்களை இறுகப்பற்றி அவர்களின் கலாசாரமாகியும் விடும். இந்நிலமை  தன்னழிவுடன் மற்றவர்களையும் அழிப்பதிற் கொண்டு சென்று விடும்.

சம்பவம் 2 :

இளம் வயதில் பாடசாலையில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட  வாங்கில் அமர்ந்திருக்கும் ஜெயவீரசிங்கத்தின் மீது ஏற்படுகிற அனுதாபத்தினால் அவனுக்கருகில்  போய் இருக்கும் ரகு அதற்காக ஆசிரியரால் தண்டிக்கப்படுகிறான் இது தொடர்பாக ரகுவின் தந்தையாரிடம் முறையிடப்படுகிறது. அவரோ, அவன் தான் விரும்பிற இடத்தில் போய் இருக்கட்டும் அது அவன் சுதந்திரம் என்று சொல்லி விடுகிறார். பாடசாலை அதிபரும் ஆசிரியரும்  எதிர்பார்த்த படி ரகுவின் அப்பா ரகுவைத் தண்டிக்க வில்லை.

உண்மையிலும் ஜெயவீர சிங்கம் என்கிற மாணவனுக்குத்தான்  மற்றைய மாணவர்களைப் போலத் தான் விரும்பிய இடத்தில் போயிருக்கச் சுதந்திரம் கிடைத்திருக்க வேண்டும்.

சம்பவம் 3 :

முகாமில், தாழ்த்தப்பட்டவன் எனச் சொல்லப்படும் சிவனை  உயர் சாதி எனப்படும் சங்கர் வார்த்தைகளாலும் நடத்தைகளாலும் அவமானப்படுத்துகிறான். அதனாற் கோபம் கொண்ட சிவன் சங்கரைத் தாக்குகிறான். அவ்வாறு தாக்கியதற்காக முகாம் பொறுப்பாளனாற் சிவன் தண்டிக்கப்படுகிறான். அது முகாமின் இராணுவ விதிகளை மீறியமைக்கான தண்டனையெனச் சொல்லப்படுகிறது. மறுவளத்தில் அமைப்புள் சாதிய ஒடுக்குமுறைக்கு இடமில்லையென முகாம் பொறுப்பாளன் கடுமையாகக் கூறவும் செய்கிறான். அதன் வழி பிற்பாடு சங்கர் காணாமல் ஆக்கவும் படுகிறான்.

உண்மையிலும் சிவனுக்கும் சங்கருக்கும் இடையில் மனிதத்தன்மையும் அரசியற் தெளிவும் கொண்ட உரையாடலை, ஏற்படுத்துவதன் மூலம் சங்கர் கொண்டிருக்கும் பிழையான மனப்பான்மையை உணரச் செய்து அவனுள் மனமாற்றத்தை ஏற்படுத்துவதே அரசியல் அமைப்பொன்றின் பணியாகும் ஆனால் அவ்வாறு நிகழவில்லை.இங்கும் இராணுவ வாதமே பிரச்சனையைக் கையாள்கிறது

சம்பவம் 4 :

இதரா என்னும் பெண்போராளி வீட்டுக்குத்திரும்பிச்செல்ல அல்லது தப்பிச் செல்லமுடியாதவாறு அமைப்பின் அதிகாரத்திடம் சிக்கி இருக்கிறாள். ஈழத்துக்குத் திரும்பிச் செல்லும் ஜோனிடம் (ரகு- கதையின் நாயகன்) முடிந்தால் அம்மாவைச் சந்தியுங்கள் என்று மட்டும் இதரா சொல்கிறாள். அந்த மூன்று வரிகளுக்குள் அவளது முகாம் வாழ்க்கையும் அவளது தன்னுணர்வுகளும் அடங்கியுள்ளன.   அதனை விரித்துச் சொல்ல வேண்டியது ஜோனின் கடமை ஆகிறது. ஆனால் ஈழம் சென்று இதராவின் அம்மாவைச் சந்திக்கும் ஜோனால் உங்கள் மகள் நலமாக இருக்கிறாள். படிப்படியாக அவர்கள் எம்மை ஊருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதரா விரைவிற் திரும்பி வருவாள் என்று மட்டுமே சொல்ல முடிகிறது.

பின்னர்  மீண்டும் அந்தத் தாயைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது  ரகு(ஜோன்) இதராவின் உண்மை நிலைமையைச் சொல்கிறான். அவன் சொல்வதைக்  கீழே தருகிறேன்

 “முன்பு அந்தத் தாய்க்குச் சொன்னதை தலைகீழாக இன்று மாற்றிச் சொல்லவேண்டி ஏற்படுவதில் எழும் குற்றவுணர்ச்சியுடன் சென்றேன்.என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கள் அம்மா என்று நான் சொன்னபோது என்னை என்னாற் கட்டுப்படுத்த முடியவில்லை. 

இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்தியடி தேம்பி அழ ஆரம்பித்தேன். எனது அம்மாவுக்குச் சொல்லமுடியாமல் எனக்குள் தேங்கித் தழும்பி நின்ற வார்த்தைகள் கண்ணீராய் மேவி வந்தன. அருகே வந்த அந்தத் தாய் எனது தலையைத் தடவியபடி மௌனமாக இருந்தாள்.”

நாவல் ஒன்றுக்கு இப்படியான சம்பவங்கள்தான் ஆதார இழைகள் ஆகவமையும். இவ்வாதார இழைகளினூடு தான் நாவல் ஒன்று நகர்கிறது.  இப்படியான சம்பவங்களும் இவற்றின் மூலம் உருவாக்கப்படுகிற விம்பஉலகமும்  உணர்வுகளும் தான் படைப்பிலக்கியத்தின் அச்சாணி.

படைப்பினை விமர்சன நோக்கில் வாசிக்கும்போது தனிமனித அனுபவங்களும்  காட்சிக்களங்களும் எப்படி முன்வைக்கப்படுகின்றன?  அவை எப்படி இணைக்கப்பட்டுப் படைப்பு நகர்த்தப்படுகிறது? போன்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.

படைப்பாளியின் வியாக்கியானங்கள் எதுவுமின்றி வாசிப்பவர் தனக்கான உணர்வுகளையும் உலகங்களையும் உருவாக்குவதற்கு  ஒரு படைப்பு இடமளிக்க வேண்டும். படைப்பாளி தான் சொல்ல வருவதைச் சொல்லாமற் சொல்கிறபொழுது கலைத்துவம் உருவாகிறது. வாசிக்கிறவர் சொல்லாமற் சொல்லப்பட்டவற்றுள் தனக்கான அர்த்தங்களைக் கண்டடைவதற்கான விரிவைப் படைப்பொன்று கொண்டிருக்கிறபொழுது படைப்பின்  கலைத்துவம் முழுமை பெறுகிறது.

நான் மேலே குறித்த நான்கு சம்பவங்களையும் குறிப்பிட்டமைக்கு அவை கொண்டுருந்த உள்ளீடு மட்டும் காரணமல்ல. குறித்த நான்கு சம்பவங்களிலும் படைப்பாளியின் வியாக்கியானங்கள் எதுவுமின்றி  எனக்கான வாசிப்பை (நான்  மேலே விபரித்தபடி)  என்னால் நிகழ்த்த முடிந்தது  என்பதைச் சுட்டவும் விரும்பினேன்.

இப்படைப்பு முழுமையும் மேற்குறித்தவாறான இழைகளாற் பின்னப்பட்டதா? என்ற கேள்விக்கு விடை இல்லை என்பதாகும்.

இங்கு இறைநம்பிக்கை அல்லது மதம்பற்றிய சிந்தனைகள்,  சோசலிஸ தமிழீழம் பற்றிய சிந்தனைகள், இலங்கையில் கொண்டுவரப்பட்ட  உயர்கல்விக் தரப்படுத்தல் பற்றிய பார்வை. இடது சாரிகள் இனப்பிரச்சனையைக் கையாண்ட விதம்பற்றிய பார்வை போன்றவை பெருமளவு அரசியல் வகுப்புகள்போல் உரையாடல் வடிவில் தரப்பட்டுள்ளன. இதனைத்  தவறென்று கூற முடியாது.  ஆனால் படைப்பிலக்கியம் என்று வரும்போது  புனைவின் சாத்தியங்களைப் பயன்படுத்தி இவற்றையும் மேற்கூறியவாறான ஆதார இழைகளாக மாற்ற முடியும்.

இயல்பாகப் படைப்பின் போக்கில்  உணர்ந்துவிடுகிற பல விடையங்களை அல்லது உணர்த்தப்பட  வேண்டிய விடையங்களை  ஆசிரியர் முன்கூட்டியே சொல்லி விடுகிறார்.

இரு  சிறு உதாரணங்கள்:

 • ரகுவின் பல்கலைக்கழகக் கால உற்ற நண்பன் குமார், ரகுவுக்கு முதலில்  இந்தியாவுக்குப் பயிற்சிக்குச் சென்றுவிடுகிறார்.  அவரை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற மனக்கிடக்கை இந்தியாவுக்குப் போகும்போது ரகுவுக்கு வலுக்கிறது.   ரகுவின் நண்பனான குமார்   பலஸ்தீனப் பயிற்சி பெற்றுத் திரும்பி வந்திருக்கிறார் என்கிற சுவாரசியமான சம்பவத்தை ஆசிரியர்  முன் கூட்டியே சொல்லி விடுகிறார்
 • பயிற்சிக்குச் செல்பவர்களின் சொந்த உடுப்புக்களையும் ஏனைய உடைமைகளையும்   முகாம் பொறுப்பாளர்கள் பறித்து வைத்துக்கொள்கிறார்கள்   ஏன் அவ்வாறு செய்யப்படுகிறது என்பதும் உடனேயே ஆசிரியராற் சொல்லப்பட்டு விடுகிறது.

இதனாற்றான் படைப்பாளி பல இடங்களில் வாசகரைப் பின்னோக்கிச் சென்று சிலவற்றை உறுதிப்படுத்த வேண்டுகிறார் அல்லது சிலவற்றை  மீள ஞாபகப்படுத்துகிறார் என்று தோன்றுகிறது.

சில பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட முன்னரேயே கதைக்குள் வந்து விடுகின்றன. சில சம்பவங்கள் அவை இணைக்கப்பட்ட இடங்களை விடவும் வேறு இடங்களில் இணைக்கப்பட்டிருந்தால்  படைப்பின் உணர்வோட்டத்துக்கு வலுச்சேர்த்திருக்கும் என்ற உணர்வும்  ஏற்படுகிறது.

புலம் பெயர்ந்து வாழும் களத்தில் ரகு உணர்பவைகளும்  அனுபவிப்பவைகளும்  ரகுவின் அனுபவங்களினுடே அடைந்த  உளக்காயங்களிலிருந்து வருபவை  இவ்வுளக்காயங்கள் எப்படி உருவாகின என்பது தான் நாவலின் உயிர் பொருள் ஆவி எல்லாமும்  ஆனால் அவற்றுக்கான விளக்கம் படைப்பின் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டு  விடுகிறது.

இப்படைப்பில் சில இடங்களில், வேற்றுமை உருபுகளின் தவறான பாவனை காரணமாக வாசிப்புத் தடங்கலுறுகிறது. மேலும் பல இடங்களில்  எழுவாய் ஒருமையாக இருந்தால் பயனிலை பன்மையாக அல்லது எழுவாய் பன்மையாக இருந்தால் பயனிலை  ஒருமையாகவும் வருகிற வசன அமைப்புகளும் உள்ளன. பல இடங்களில் குற்றெழுத்துக்கள் தவறவிடப்பட்டுள்ளன.

இத்தகைய பிரச்சனைகள் அனேகமாக எல்லா எழுத்தாளர்களுக்கும் ஏற்படுபவைதான். இவற்றைப் படைப்பை ஒழுங்கு படுத்திச்  செப்பனிடும்போது திருத்த வேண்டும். இத்திருத்தங்களைச் செய்வதற்குப்  படைப்பின் கருவுக்குள்ளும் உணர்வுட்குள்ளும் ஆழாது தொழில் முறையாக எழுத்தை வாசிக்க வேண்டியது தேவையாகிறது.

இப்படைப்பில் மொழி அழகு பெறும் பல இடங்கள் உள்ளன. ஜோன் (ரகு)க்கு மாலி மேல் ஏற்படும் காதலைச் சொல்லும் பகுதிகளும் அழகானவை

“வாழ்வை அவன் சிறகுகளின்றி வளர்த்தான். ஆனாலும் அவன் மாலியின் விழிகளுக்குள்தான் அமிழ்ந்துபோய்க்கொண்டிருப்பதை உணர்ந்தான். மெல்லச் சிறகுகள் முளைப்பது போலவும் உணார்ந்தான். ”

 “மாலி தன் முன் இருந்த தாளில்  சூரியகாந்தி மரத்தை வரைந்திருந்தாள். அவ்வொவியத்தில் சூரியகாந்திப் பூவாடித் தலை சரிந்திருந்தது.அவளும் அவளின் விழிகளும் வாடியிருந்தன. ஜோன் சூரியகாந்தியைக் காட்டி இதென்ன இப்படி வாடிப்போச்சு தண்ணியைக் கொஞ்சம் காட்டிறதுதானே! என்றான்.

அவளது ஈர வழிகள் கொஞ்சம் ஒளிவீசின. தனது இலட்சியவாத மூட்டையை மழையில் நனைத்து சுமக்க முடியாமல் சுமந்து சென்றான் முட்டாள் ஜோன்”

ஈழத்துக்குச் திரும்பிச் செல்ல முன்னர் மாலியை ஜோன் சந்திக்கும் சந்தர்ப்பத்தில் வரும் விபரிப்புகளில் வருபவையே மேற் தரப்பட்டவை.

ஜோன் தனது காதலை மாலியிடம் கடைசிவரை சொல்லவேயில்லை.

அராஜகம் நிறைந்த, சனநாயகம் அற்ற, ஆண் போராளிகளும் பெண்போராளிகளும் பிரித்து வைக்கப்பட்டிருக்கிற சூழலில் எந்த வகையான உறவுக்குத்தான் சிறகு முளைக்கும்?

விடுதலைக்குப் போராடிய  எல்லாவகையான அமைப்புக்களிலும் போராட்டக்களத்தில்  ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவுநிலை குறித்த தெளிவு இருக்கவில்லை என்பதையும் இங்கு நினைவு கூர வேண்டும். அனேகமான அமைப்புகளில் மரபுவழியான, ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைக்கும் அணுகுமுறை  நிலவியது அல்லது ஆண்களின் ஆதிக்கம் மேலோங்கிய சூழ்நிலையுள் பெண்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தம்மை இணைத்துக்கொண்டிருந்த ஒவ்வொருவருக்குள்ளும் நிறைய உளக்காயங்கள் உள்ளன. போராட்டத்துக்குப் பின்னான உளவடுக்கள் என்றும் அவற்றைச் சொல்லலாம் இவையும் போருக்குப் பின்னான உளவடுக்கள் போலவே தனி மனித ஆத்மாக்களை அவர்கள் வாழும் காலம்வரை  வதைக்கக் கூடியவை. இப்படைப்பில் வருகிற எல்லாப்பாத்திரங்களுமே பெரும் உளக்காயங்களைச் சுமந்து கொண்டிருப்பவை.

இப்படைப்பில் வேம்பு பல  இடங்களில் வருகிறது கதையின் ஆரம்பத்தில் ரகுவின் இளமைக் காலம்பற்றிய  சித்திரத்தை  அவர்களின் வளவில் நின்ற  வேம்பு சொல்கிறது. பின்னர்  ரகு செல்லும் முகாம்களிலும் வேம்பு அவனைத் தொடர்கிறது.வேம்பு என்பது  வெறும் மரமல்ல.  வாழ்வின் குறியீடு.  வேம்பு நிற்கிற வளவில் வளர்ந்த பிள்ளை வேம்பு இல்லாத வெற்று வளவுக்குத் திரும்புகிறான்.

வேம்புக்கும் எங்களுக்குமான உறவை எப்படி விபரிக்க முடியும்?

எனது கவிதையொன்றில்

இலையிழந்த லிண்ட மரங்களுக்கும் குத்தீட்டியாகச் சிலிர்த்து நின்ற பைன் மரங்களுக்குமிடையிற் பனியுள் எதிலோ தடக்கி விழுந்தேன்.

எங்கள் முற்றத்தில் நின்றதே வேம்பு!

அதன் வேராகத்தானிருக்க வேண்டும்.

என எழுதி இருப்பேன். இக்கணத்தில் கவிஞர் சேரனின் பாடல்  ஒன்று ஞாபகத்தில்   வருகிறது.

வேம்பின் குழல்கள் விசும்பில் நடுங்க

வேனில் இரவுகள் விண்மீனாய் அனுங்க

போக விடு என்று சொன்னான்.

போராடப்போன  தலைமுறையும் போகவிட்ட தலைமுறையும்  துயரில் அழுந்திய  கதையினைக் குமிழி எங்கள் முன் வைத்திருக்கிறது.

அதுதான் என்னை இப்படைப்பை   ஒரே மூச்சில் வாசிக்க வைத்தது.

 • 24022021 

குறிப்பு:

திருமதி பவானி தம்பிராஜா அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு திரு  ராஜ் குலராஜா அவர்களாற் தொகுக்கப்பட்டு பைந்தமிட்சாரல் என்ற பெயரில் இணைய வழியில் ஸூம் (Zoom) ஊடாக நிகழ்த்தப்பட்ட விமர்சன அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின்  திருத்திய வடிவம்.


***

வாசிப்பு-39

 • அன்பாதவன் (இந்தியா)
என் இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவை பதிவுசெய்திருக்கிறேன். எனது ஆழ்மனதுள் இறங்கிப்போய் முகாமிட்டிருக்கும் இவை, அவ்வப்போது எழுந்து எனது நினைவை பிராண்டிக் கொண்டிருப்பவை. கனவுகளை சிதைப்பவை. இதைப் பதிவு செய்யவேண்டும் என நினைத்து சுமார் கால் நூற்றாண்டுகள் எழுதுவதும். கிடப்பில் போடுவதுமாக கழிந்துபோயிருக்கிறது. உலகை சிலகாலம் மறு ஒழுங்குக்குள் வைத்திருந்த இந்த கொரோனா காலத்தின் (2020 ஏப்ரல், மே) Lock down இந் நூலை எழுதிமுடிக்க வைத்தது. எனது கதை இது. நான் நாட்டை விட்டு விலகியபோது எழுதி வைத்திருந்த இயக்க விசயங்களை, அனுபவங்களை நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டு வந்திருந்தேன். அவர் அதை புதைத்து பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்திய இராணுவம் ஈழத்துக்கு வந்தபோது அவர் பாதுகாப்புக் கருதி அவற்றை வெளியே எடுத்து எரிக்க நேர்ந்தது. அது ஓர் ஆவணமாக எழுதப்பட்டது. 35 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போதும் பல சம்பவங்கள் நினைவில் இருக்கிறபோதும் அவை ஆவண வடிவில் என் மூளைக்குள் இல்லை. எனவே இதை ஒரு நாவல் வடிவில் எழுத தீர்மானித்தேன். எழுதியிருக்கிறேன்”[ பிற்குறிப்பு : பக்கம் 223]- -நூலாசிரியர் ரவி  

                         சாத்தியமாவதற்கு வாய்ப்பில்லை! ஒரு புதினத்தை வாசித்த பிறகும் அந்த நூல் குறித்து ரெண்டு வரியாவது எழுதாமல் இருக்க முடியுமா? ஆனால் ‘குமிழி’ எனும் புதினத்தை வாசிப்பதற்கே பெருமளவு காலம் தேவைப்படுகிறது. காரணம், நூலைத் தொடர்ந்து வாசிக்கையில் துளிர்க்கும் விழிநீரை  துடைத்தெறியாமல் அடுத்த பக்கத்துக்கு தாவுவது சாத்யமல்ல.

                பால்யங்களில் பிரமிப்புடன் தூரத்திலிருந்து பார்த்த விடுதலைப் போராட்டமொன்றினையும், அமைப்புகளையும் பற்றிய பிரமைகள் தகர்ந்து நொறுங்குவதை அலட்சியப்படுத்த இயலாது.

                இந்த பின்னணியோடு ‘குமிழி’க்குள் எந்தவொரு வாசகனும் நுழைய வேண்டியிருக்கிறது அதற்கும் காரணமிருக்கிறதே, புதினத்தின் முதல் பக்கத்தில் ரவி குறிப்பிட்டுள்ள ஒரு சங்கதிதான் அது!

“கதைக்களம் : ஈழம், தமிழகம், காலம் 1984-1985

மேலும் இப் புதினத்தின் நாயகனும், படைப்பாளியும் வேறு வேறு நபர்கள் அல்ல! வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் நம்பிக்கையோடு அமைப்பொன்றினுள் நுழைந்த இளைஞன் ஒருவனுக்கேற்பட்ட/கண்ணுற்ற அனுபவங்களின் தொகுப்பாக ‘குமிழி’ எனும் புதினம்.

                “போர்கள் என்பன அவை நடக்கும் களங்களில் உள்ள மக்களை சொல்லொணாத் துயர்களுக்குள் தள்ளிவிடுவது என்பது இயல்பானது. இப்படியான துயர்கள் உலக வரலாற்றில் போதிய அளவு பதியப்பட்டுள்ளது. இந்தப் பாடுகளுக்கு முகம் கொடுத்த மக்களின் வாழ்க்கையானது சிறுகதை, புதினம், கவிதை, கட்டுரை, ஓவியம் போன்ற பல வடிவங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இன்று உலகில் புகழ்பெற்ற புராண, இதிகாச, காவியங்கள், கவிதைகள் எல்லாம் இப்படி எழுந்தவைகளே தமிழுள்ளும் 3000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட புற நானூற்று பாடல்களில் இருந்தே இந்த வரலாறு தொடங்குகிறது.    போர் இலக்கியங்கள் மக்களின் அடிப்படை உரிமைகள், அவர்களுக்குள் நிலவும் ஏற்ற தாழ்வுகள், பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகள், அந்நியச் சதிகள், பொருளாதாரத் தடைகள், அதன்வழி மக்களின் வாழ்வாதாரங்களை இழக்கச் செய்தல், போதிய அரசியல் பார்வை இல்லாததால் எந்த மக்களின் நலத்திற்கு என்று அமைப்புகள் அமைக்கப்பட்டனவோ அவை அந்த மக்களையே அழித்தல், சகபோராளிகளை ஈவிரக்கமின்றி வதைத்தல், கொல்லுதல், பண்பாடுகளை, பண்பாட்டுச் சின்னங்களை திட்டமிட்டு அழித்தல், பழிவாங்கல்கள் போன்ற பலதையும் பேசுபவை.” [பக்-5-6]

                ஈழவிடுதலைப் போராட்டத்தின் இன்னொரு முகத்துக்கான ரத்த சாட்சியாக, நல்லவேளையாக கதை நாயகன் உயிரோடு கிடைத்ததால் இந்நூல் முக்கியமானதோர் வரலாற்று ஆவணமாகிறது.

                சின்னதாயொரு பின் திரும்பல் [FLASH BACK]

                1980 களில் தமிழகத்தின் பெரும்பாலான முக்கிய ஊர்களுக்கு அமிர்தலிங்கம் அவர்களும் அம்மா மங்கையர்க்கரசி அவர்களும் வந்திருந்து மக்களை சந்திப்பார்கள். ‘எதற்காக ஈழவிடுதலைப் போராட்டம்?’ என அய்யா உரையாற்ற, அம்மா, விடுதலைப் போராட்ட பாடல்களை பாடுவார். படைப்பாளியும், களப்போராளியுமான ஈழவேந்தன் தமிழகத்தின் அறிவுசார் அமைப்புகளை சந்தித்தார். விடுதலைப் போராட்டத்துக்கான பின்பலம் சொல்லி, பேராதரவு திரட்டுவார்.

                தமிழகத்தின் அரசியல் கட்சிகள் ஈழவிடுதலைக்கான ஆதரவுக்குரல் எழுப்பி கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தி, மக்களின் -குறிப்பாக மாணவர்களின்- கவனம் ஈர்த்தன. கல்லூரி மாணவர்கள் தன்னிச்சையாக தமிழ் உணர்வோடு எழுச்சி ஊர்வலங்களை நடத்தினர். “தமிழனுக்கு மதிப்பு, சிங்களனுக்கு செருப்பு ”என்றெல்லாம் ஒற்றைச் செருப்புடன் கரம் உயர்த்தி; குரலுயர்த்தி, கோஷமிட்டு ஊர்வலத்தில் நடந்த நாட்கள் நினைப்பில் வருகின்றன. ஜுனியர் விகடன் இதழில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை எனும் போராளிளைப் பற்றிய தொடர் ‘கரிகாலன்’ என்பவரால் தொடராக எழுதப்பட்டது. தமிழகம் முழுவதும் அத் தொடர் பரவலாகப் பேசப்பட்டது. (தொகுத்து வைத்தது தொலைந்து போனதே!)

”ஒரு நாவல் என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்துகொண்டு வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக்கோவை தான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனைகதைதான். ஆனால்  மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்சனைகளிலும் நிலைகளிலும் ’பிரத்தியட்சங்கள்’ எனப்படும் உண்மை வடிவங்களை தரிசித்த பின்னர் அந்த அனுபவங்கள் எனது இதய  வீணையில் மீட்டிவிட்ட சுரங்களைக் கொண்டு, நான்  இசைக்கப் புகும் புதிய வடிவையே நாவல் என்று கருதுகிறேன்” என்னும் படைப்பாளி இராஜம் கிருஷ்ணன் அவர்களின் மேற்கோளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது ரவியின் குமிழி எனில் எவரும் மறுக்க வியலாது

                “1970 களின் மத்தியில் உருவான ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதம் முடிந்து போனது. 9.11.2001 இல் அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுர தகர்ப்புக்குப் பின்னால் உலக அரசியல் வெகுவாக மாறியதையோ, புவிசார் அரசியலையோ, பெரும்பாலான ஈழ அமைப்புகளும் அவர்களின் ஆதரவாளர்களும் கண்டுகொள்ள வில்லை. மாறாக தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் கட்சியான தி.மு.க வையும் அதன் தலைவரையும் ஈழ பின்னடைவுக்கு காரணமாக காட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்தினர். போராளிகள் அறிவித்தபடி அவர்களின் துவக்குகள் மௌனித்துப் போயின. நீண்ட காலம் நீடித்து வந்த போர் இது.” – முன்னுரை [பக்கம் 8]

                மலைக்கிராமங்களில், நகரங்களின் சாயல்படாத உள்கிராமங்களில் விடுதலை போராட்ட அமைப்புகளின் முகாம்கள் கட்டப்பட்டன, உள்ளூர் அரசியல்வாதிகள் அல்லது கட்சிகள் உதவியோடு!. (அப்படியொரு முகாம் பின்னணி தான் ‘குமிழி’ முளைத்த கதை). தேவைகருதியே புதினத்தின் வரிகள் இங்கு அப்படியே எடுத்து கையாளப்படிகின்றன.

முகாம் முகம் 01:

                பசுமையற்றிருந்த புழுதித் தரையை நிலவு குளிர்மையால் நனைத்தது. ஒளிபுகமுடியாத சவுக்கம் தோப்புகளின் கருமை இந்த நிலாத் துண்டு வெளியை சிறைப்படுத்தியிருந்தது. பார்வை எல்லையை அந்த தோப்பு அறுத்துப் போட்டிருந்தது என்றபோதும், நிலாவின் வியாபிப்பு உடலுள் எல்லையற்று புகுந்துகொண்டதை ரகு அனுபவித்தான்.

                முகாமினுள் ரகுவும் ஆனந்தனும் கூட்டம் பற்றி கதைத்துக் கொண்டிருந்தார்கள். இந்திரனும் சந்திரனும் வந்தார்கள் அவர்களுடன் தனியாக பேசும் விருப்பத்தை சைகையால் காட்டிச் சென்றார்கள். “நீங்கள் இந்தத் தோழர் பிரச்சினையை எழுப்பாதையுங்கோ. அதைக் கேட்ட தோழர்களுக்கு ஏற்கனவே சில பிரச்சினையள் நடந்திருக்கு. அதாலை எல்லாரும் பயம். கொஞ்சம் கவனமாயிருங்கோ”. இதற்குமேல் அவர்கள் பேசவில்லை. ரகுவிடம் புதிர்கள் முளைக்கத் தொடங்கின. கரனின் பெருவிழிகளுள்ளும் அவை தெரிந்தன அவர்களைக் காணும் போதெல்லாம் பாண்டி ‘தோழர்’ என்று சொல்லி நக்கலாகச் சிரித்தான். சுவறிய அந்தச் சிரிப்பில் புதிர்கள் மேலும் வளரத்தொடங்கின. ஆனாலும் அவர்கள் மூவருக்கும் ‘அண்ணை’ என்று அழைப்பது முடியாமலிருந்தது. இறுதிவரை அவர்கள் தவிர்த்துக்கொண்டனர். சக பயிற்சித் தோழர்களை மட்டும் தோழர் என விழித்தார்கள். அங்கு அதுவே வழமையாகவும் இருந்தது.[ பக் – 52]

முகாம் முகம் 02:

                “அப்ப நேற்று இரவு இவங்கள் திடுதிடுப்பெண்டு எங்கடை வாகனத்தை மறிச்சது, ஒடித்திரிஞ்சது எல்லாம் இந்தக் கொட்டனை வைச்சுக்கொண்டுதானா?. இதுதான் எங்கடை ஆயுதமோ? ஆனந்தன் குறும்பாகப் பேசினான். அதேநேரம் பயிற்சி பற்றிய பிரமையில் அவர்களுக்கு விழுந்த முதல் அடியாகவும் அது இருந்தது. பின்னர் ஆயுதம் குறித்து அவர்கள் வகுப்பெடுத்ததையும் அந்த ஆயுதங்களை கொப்பியில் பிஸ்ரல், ஏகே-47, எஸ்எல்ஆர், எல்எம்ஜி, ஆர்பிஜி-7 என படம்கீறி வைத்திருந்ததையும், சிலர் காலையில் விழித்தவுடன் அந்தப் படங்களை பார்வையால் ‘வணங்கிவிட்டு,’ எழுந்து அந்த நாளை தொடங்குவதையும் நீங்கள் பார்ப்பீர்கள். இந்த ஆரம்ப முகாம் பயிற்சியை முடித்து வெளியேறுவது வரையான காலத்தில் எந்த ஆயுதத்தையும் பயிற்சித் தோழர்கள் எவரும் கண்ணால் கண்டதே கிடையாது என்பதையும் தெரிந்து கொள்வீர்கள்”[ பக் – 46]

முகாம் முகம் 03:

                                ”காலையிலை கடலை அல்லது பயறுதான் மாறிமாறி வரும் மத்தியானம் சோத்தோடை இறைச்சி அல்லது முட்டை, இரவு புக்கை அல்லது கஞ்சி வரும். சிலவேளைகளிலை றொட்டி அல்லது புட்டு எப்பவாவது அபூர்வமாய்க் கிடைக்கும். எல்லாமே அளவுச் சாப்பாடுதான், இரண்டாம் முறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றான் சந்திரன்.

                சுமார் 320 பேர்வரை அந்த முகாமில் அப்போது இருந்தார்கள். எல்லோரும் 40 பேர் கொண்ட பிளட்டுன்களாக பிரிக்கப்பட்டு, ஒரு சார்ஜன் தலைமை கொள்வார். 10 மணிக்கு விசில் சத்தம் வீரிட்டது. பிளட்டூன்கள் அணிபிரிந்து நின்றுகொண்டன. ‘பிளட்டூன் சார்ஜன்கள்’ எல்லோரும் எல்லா பிளட்டூன்களுக்கும் பொறுப்பான சார்ஜனுக்கு நேர்த்தியாக சல்யூட் அடித்து தத்தமது…”[ பக் – 47]

முகாம் முகம் 04:

                ”அன்று சனிக்கிழமை நாளை ஓய்வுநாள். எல்லோரும் இடைஞ்சலற்று தூங்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென எழும்பி லைற்றைப் போட்டு, உடன் நிற்பாட்டினான் சிங்கப்பூர். ரகு விழித்துக்கொண்டான். “மஞ்சளையும் மீறி வேலைசெய்யுது பார்” என்றான். அருகருகில் இரு தோழர்கள் கைபோட்டு இச்சைப் பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களின் இரகசிய மூச்சொலி சிங்கப்பூருக்குக் கேட்டுவிட்டது. முஸ்பாத்தி பண்ணுவதிலுள்ள ஆபத்து அவர்கள் எல்லோரினதும் பம்பலையும் சிரிப்பையும் கட்டிப்போட்டது. தெரிந்தால் அவர்களைத் ‘தூக்கியிடுவாங்கள்’.

                பாலியல் வேட்கையை மஞ்சள் குறைத்துவிடுமாம். எந்த கிரகத்தைக் கடைந்து இந்த அறிவியல் உண்மையைக் கண்டு பிடித்தார்களோ தெரியாது. அதனடிப்படையில் இந்த ஏற்பாடு தொடர்ந்தது. மஞ்சள் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவல்லது என்றளவில், இப்படி பெருந்தொகையானோர் கூடிவாழும் நிலையில் அதை சாப்பாட்டுக்குள் சேர்த்தார்களோ தெரியாது.  ஆனால் கதை ‘உள்ளாலை’ இப்படித்தான் உலாவியது. மஞ்சள் பாலியல் வேட்கையைத் தூண்டும் சுரப்பியினை (testosterone) ஊக்குவித்து அதன் மட்டத்தை அதிகரிக்கக்கூடியது என மருத்துவம் சொல்கிறது”[ பக்கம் 81]

முகாம் முகம் 05:

                “சிம்பிளாக இருக்கிறார் தோழர்” என்றான் ரகு. அருகில் வந்த இந்திரன் “தோழர் என்று சொல்லாதையுங்கோ, பெரிசு அல்லது பெரியவர் எண்டு சொல்லுங்கோ” என்று ரகுவின் காதோரம் சொன்னான். “பனங்காணிக்குள், சுடலைக்குள், தோட்ட ஆடுகாலுக்குக் கீழ், ஒதுக்கமா கோயில் மண்டபத்துள் என்றெல்லாம் வகுப்பெடுக்கும் தருணங்களில் தளத்தில் ‘தோழர் உமா மகேஸ்வரன்’ என்றுதானே சொன்னோம்” என்று சொல்ல ரவுக்கு எந்த உந்துதலும் இல்லாமலிருந்தது [பக்கம் 55]

 திம்பு பேச்சுவார்த்தையும்,

பிரபாகரன் – LTTE, உமாமகேஸ்வரன் – PLOTE, பத்பநாபா – EPRL, பாலகுமார் – EROS  என முக்கிய அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து செய்தியாளர்களை சந்தித்ததும்,

வெளிப்படையாக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஈழ ஆதரவும், அன்னை இந்திராவின் முக்கிய முடிவுகளும் பெரும் நம்பிக்கையை வளர்த்தன. வை கோ, நெடுமாறன் போன்றவர்களின் ஈழவிஜயம் வெகுவாக  கவனிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் மறைவும், அன்னை இந்திராவின் படுகொலையும் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு பின்னடைவைக்கொடுத்தன.

ராஜீவ் காந்திக்கு, வெளியுறவுத்துறையில் வேண்டுமென்றே சொல்லப்பட்ட தவறானத் தகவல்கள் போராட்டத்தை திசைமாற்றின

‘அமைதிப்படை’ எனும் பெயரில் இந்திய தேசிய ராணுவம் ஈழத்தில் நடத்திய நிகழ்வுகள் கடும் விமர்சனத்துக்குள்ளான

இதற்கிடையில், அமைப்புகளுக்கிடையேயான ‘சகோதர யுத்தங்கள்’ மற்றும் ராஜீவ்காந்தியின் மரணம் இரண்டும் தமிழ் மக்களிடமிருந்து ஈழவிடுதலைப் போராட்டத்தை அந்நியப்படுத்தின

                மேற்கண்ட யாவும் ஒரு சராசரி மாணவனாக, இளைஞனாக பொதுமக்களில் ஒருவனாக அவதானித்தது.

 ஈழவிடுலைப் போராட்டத்துக்காக அமைப்புகளிடம் பணம் பெற்று கொண்டு ஊர் ஊராக மைக் பிடித்த ‘வாயாடர்’ களையும் வரலாறியும்!

                மேற்கண்ட பின்னணியில் குமிழி புதினத்தை வாசிக்க தொடங்குகையில் எழுந்தன பல வினாக்கள்.

                இப்படியுமா விடுதலை அமைப்புகள் நடந்து கொள்ளும் இப்படிப்பட்ட அமைப்புகளையா நம்பினோம் ஆதரவளித்தோம்!           

                ”இன்னும் 18 பேரையும் காவிச்சென்று கொண்டிருந்தது. எனது தாய், சகோதரங்கள் எல்லோரையும் அந்தரத்தில் விட்டுச் செல்வதால் எழும் உணர்வை இந்த மண்ணுக்காய் உழைக்கச் செல்வது பற்றிய நினைப்பு தட்டிக்கழித்துக் கொண்டது என நீங்கள் நினைக்கக் கூடும். சொல்லத் தெரியவில்லை.

                நான் ஒரு கட்டடக் கலைஞனாகி பின் எனது உழைப்பில் இந்தக் குடும்பத்தைத் தாங்குவது, எனது சகோதரிகளுக்கான சீதனத்தால் அவர்களை ‘மீட்பது’ போன்றவற்றுக்கான சாத்தியத்தை விட, ஒரு சுதந்திர சோசலிச தமிழீழம் உருவாகினால் எம்போன்ற எல்லோருக்கும் மீட்சி கிடைக்கும் என நம்பியதும் பொய்யில்லை. எனது “என்ஜினியர்” கனவை பழிவாங்கிய அரசுக்கு எதிராக கோபம் கொண்டதும் பொய்யில்லை. கொலையுண்ட சக மாணவர்களில் என்னைக் கண்டதும் பொய்யில்லை, மண்ணுக்காய் மரித்தவர்களின் சாம்பலிருந்து தமிழன் என்ற அடையாளத்துடன் நான் எழுந்ததும் பொய்யில்லை. வண்ணை ஆனந்தனின் ‘வெளவால்கள்’ எனக்கு திசைகாட்டியதும் பொய்யில்லை. எல்லா பொய்களையும் நம்பியதும்கூட பொய்யில்லை.

                வாழ்க்கையில் ‘றிஸ்க்’ எடுப்பது ஒரு மாற்றத்தின் பாய்ச்சல் அல்லது முறிவு என நினைக்கிறேன். அது ஆச்சரியங்களை தர வல்லது வேறு உலகத்தை அதன் மாந்தர்களை அறிமுகப்படுத்தவும் கூடியது. இவை ஒன்றுமேயில்லாமல் வாழ்க்கையை சப்பி துப்பிடவும் வல்லது. முன்னுமானிக்க முடியாத இந்த பாதை எனக்கு மர்மமாகவே இருந்தது. அங்கு போய்வந்து யாரும் அனுபவங்களைச் சொன்னாரில்லை. அவர்கள் சொல்லியிருந்ததாலும் நான் கேட்டிருப்பேனா என்றும் தெரியாது.” [பக்கம் 26]

                ”நேரம் இரவு பன்னிரண்டு மணியை தாண்டிக் கொண்டிருந்தது. எல்லையற்றுத் தெரிந்தது வானம். நட்சத்திரங்கள் எல்லாம் ஏதோ அர்த்தங்களை எழுதிக்கொண்டிருக்க, எமது வண்டியின் இரகசிய இரைச்சலைத் தவிர வேறெந்த இரைச்சலையும் அந்த நீர்வெளியில் அவதானிக்க முடியவில்லை. வண்டி 20 பேரையும் தூக்கிக் கொண்டு அலைகளற்ற நீர்ப்பரப்பை மெல்ல நீவிச் சென்றது. வேகமில்லை. திடீரென ஓட்டி கத்தினான். “டேய் அந்தா ஒரு கரும்புள்ளியடா, அடியடா எஞ்சினை!” ஓட்டி சொன்னதால் எல்லோருமே அதை நம்பினோம். நரம்புகளில் விறுவிறுப்பு புகுந்து கொண்டது. இப்போ எல்லோருக்கும் கரும்புள்ளி ஒரு பிசாசுபோல் துரத்துவதாய் பிரமை ஊட்டியது. பிரமை உண்மையாய் உருவெடுத்தது. நெருப்புப் பந்துகளாய் வண்டியை அண்மித்து செல்கள் விழுந்தன. இரண்டு மீற்றர் தூரம் தள்ளி ஒன்று விழுந்தபோது நாம் மரணத்தை நெருங்கியிருப்பதாக உணர்ந்தோம். எல்லாம் முடிந்துவிட்டது என நான் நினைத்தேன். மூன்று எஞ்சின்களும் தமது முழு வலுவையும் காட்டத் தொடங்கின. வண்டி வெறிபிடித்த குழுமாடுபோல் ஒடியது. நீர்ப்பரப்பை பிளந்து கொண்டு விரைந்தது. இடையிடையே நீர்ப் பரப்பை விட்டு மேலெழுவதும் பொத்தென விழுவதுமாய் அது துள்ளிக் குதித்தது. அதன் கீழ்ச் சட்டங்களை கொம்பில் பிடிப்பது போல் நாம் பிடித்திருந்தோம். இடறுப்படாமல் குந்தியிருந்து பற்றினோம். எமை எத்தி எத்தி போட்டு அடித்து வலியூட்டியது . சிலர் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்கள் எதையும் சட்டை செய்யும் நிலையில் நாம் இல்லை. வண்டி பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. தீப்பந்துகள் இப்போ எமது வண்டிக்கு சற்றுத் தொலைவில் விழுந்தன. பிறகு அவை தூரத்தில் விழுந்தன. பின்னர் மறைந்து கொண்டிருந்தன. நாம் நடுக்கடலை இப்போ  தாண்டிவிட்டிருந்ததை ஊகிக்க முடிந்தது வண்டி இப்போ தனது கலகத்தை நிறுத்தியது. எஞ்சின்களின் வேகம் குறைக்கப்பட்டது. சிறைப்பட்டிருந்த மூச்சுக்காற்று வெளியே வந்து எட்டிப் பார்த்தது.”{ பக்கம் 32]

‘கடல் விழுங்கிய இளைஞர்களின் கதியென்ன..? அந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு அமைப்புகளின் நியாயமான பதிலென்ன?

                ”திடீரென சவுக்கம் காட்டுக்குள்ளிருந்து ஒரு அலறல் கேட்டது. மனதில் ஆழ இறங்குகிற அலறல், அது நரம்புகளை கைப்பிடியாய்ப் பிடித்து இழுத்து உலுக்கியது. மரணஒலி என்று கதைகளில் படித்ததை இப்போ ரகு அனுபவித்துக்கொண்டிருந்தான். மனிதர்களின் ஒலி இப்படி குரூரமாகவும் ஒலிக்க முடியும் என்பதை அன்றுதான் அவன் உணர்ந்திருத்தல் கூடும். ஒரே உரப்பல் ஒலியும் கேட்டது. “உங்களுக்கு அண்ணா இல்லையா… தம்பி இல்லையா…” என்றெல்லாம் குரல் நடுங்கி எழுவதும், அதைச் சிதைக்கும் அதட்டல்களுமாக சவுக்கம் தோப்பின் அமைதி உடைந்து நொருங்கியது. ஈனக் குரல் இருளில் கசிந்து வழிந்தது. பதட்டமாக இருந்தது. என்ன நடக்கிறது”[ பக் – 53]

‘காணாமல்போன’ இளைஞர்களின் கதியென்ன..?          

                “தான் உருவாக்கியோ அல்லது புறநிலையால் நிர்ப்பந்திக்கப் பட்டோ ஒருவர் பல பாத்திரங்களை ஆற்றுகிறார். பொதுவில் நாம் ஒருபடித்தானதாகக் காண்கிற ஒருவரின் பாத்திரமானது, பன்மைகளின் சிக்கல் நிறைந்த தொகுப்பு என நான் காண்கிறேன். அதாவது ஒத்திசைவானதும், முரண்கள் கொண்டதுமான வெவ்வேறான பாத்திரங்களின் ஒரு சேர்க்கை”.

”பின்னை நவீனத்துவம்  மையப்படுத்தப்பட்ட, முழுமைப்படுத்தப்பட்ட வரிசை முறைக்கும் இறுதிநிலைக்கும் உட்பட்ட அமைப்புகளை/ஒழுங்கமைவுகளை எதிர்த்து கேள்வி கேட்கிறது. ஆனால் அவ்வாறு அழிக்க நினைப்பதில்லை. பண்பாட்டில் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட விழுமியங்களை அல்லது மதிப்புகளை இது இடைமறித்துக் கேள்வி கேட்கிறது. ஆனால் இந்தக்  கேள்விகளோ ,குறிப்பிட்ட ஒரு முறைமைக்குட்பட்டன அல்ல. மாறாக அந்தந்த விஷயங்களையும் சந்தர்ப்பங்களையும் ஒட்டியனவேயாகும்” எனும் லிண்டா ஹூட்சியோ வின் மேற்கோளை [தி சு நடராசன்,திறனாய்வுக்கலை,பக்237] அடிப்படையாகக் கொண்டு இப் புதினத்துக்குள் நுழைவோமேயானால், மிக எளிதாக வாசகன் கதைக்குள் பயணப்பட இயலும்.

அமைப்பின் முகம் 01:

                ” சித்திரவதையின்போது உடலில் சதையைக் கீறி, அதற்குள் மிளகாய்த் தூள் தடவி விசாரிக்கும் முறை பற்றி… இதையே ஒரு சிறிய விசயம் ஆக்குவதுபோல் ரதன் சொன்ன தகவல் ரகுவுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. உடம்பின் மேல் நெருப்புக்குச்சியின் மருந்தை உதிர்த்துப் போட்டு கொழுத்தி விசாரிக்கும் முறை பற்றி அவன் சொன்னான். செத்தல் மிளகாய்ச் சாக்கால் தலையை மூடி விசாரிக்கும் முறை பற்றியும் சொன்னான். நம்பிக்கையின் அடிப்படையில் அவன் அவவ்ப்போது ரகுவிடம் சொல்லும் இப்படியான தகவல்கள் ரகுவிடம்  படிப்படியாக உள்காயங்களை ஏற்படுத்தத் தொடங்கியது. பயத்தை உருவாக்கத் தலைப்பட்டது. [பக்கம் 82]

அமைப்பின் முகம் 02:

”இப்போ தளத்தில் காட்டுத் தீயாக செய்தி பரவிக்கொண்டிருந்தது. பெரிசு தளத்தில் நின்ற காலத்தில் சுழிபுரத்தில் ஆறு இளைஞர்கள் கொல்லப்பட்ட அந்தச் செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அந்த இளைஞர்கள் அறுவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார எழுத்தப் பிரதிகளை மதில்களில் ஒட்டிக் கொண்டிருந்தபோது, கழகத்தின் உளவுப்படையால் கைதுசெய்யப்பட்டார்கள் எனவும், அவர்களது கோரமான படுகொலைக்கு கழகம்தான் பொறுப்பு எனவும் விடுதலைப் புலிகள் அறிவித்துவிட்டார்கள். ஆனால் அதை பின்தளத்தில் மட்டுமன்றி தளத்திலும் அரசியல் பிரிவு மறுப்பறிக்கை விட்டு ‘ஞாயம்’ பேசியது. கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட அந்த இளைஞர்களின் உடலை புதைகுழியிலிருந்து தாம் கண்டுபிடித்தபோது அவர்களின் ஆண்குறிப் பகுதி வெட்டப்பட்டு வாயில் திணிக்கப்பட்டிருந்ததாகவும் விடுதலைப் புலிகள் பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.”

அமைப்பின் முகம் 03:

”பரம் தோழரை ரகு தனியாகச் சந்தித்தான் “ஏன் உன்னை கூட்டிக் கொண்டு போனவங்கள் அங்கை என்ன நடந்தது? யார் அங்கை நிக்கிறாங்கள்?”  என்றெல்லாம் அவதி அவதியாய் விசாரித்தான் ரகு. அவன் அழுதான். “தோழர்! என்னிட்டை ஒரு கொட்டனைத் தந்து மதனை அடிக்கச் சொன்னான் மொட்டை மூர்த்தி. என்னாலை முடியாமலிருந்ததடா. கை நடுங்கிச்சு.  உனக்கு போராளியாகிறதுக்கு துணிவு காணாது. அதாலைதான் சென்றியிலை மயங்கி விழுந்தனி. அடியடா.. எண்டு கத்தினான். அவன் காலாலை என்ரை குண்டியிலை அடிச்சான். அடியடா… என்றான் பயத்தில நடுங்கி நடுங்கி அடிச்சன். அடிச்சனா தொட்டனா தெரியாது. என்னாலை முடியாமலிருந்ததடா….”  என்றவாறு கண்ணீர்விட்டு அழுதான்.. “இங்கை என்ன நடக்குது எண்டு ஒண்டும் புரியவில்லை” என்றான். “மதனை தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டிருக்கிறாங்கள். செத்துக் கொண்டிருக்கிறான். பார்க்க முடியவில்லையடா” என்று விம்மி அழத் தொடங்கினான். மனங்குலைந்து போயிருந்தான் அவன்.”[ பக்கம் 63

                70களின் பிற்பகுதியில் ஈழ விடுதலை இயக்கங்களின் தோற்றங்கள் நிகழ்ந்தாலும், 80களின் முற்பகுதியிலேயே அவற்றின் வீச்சமும் வீக்கமும் நிகழ்ந்தன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற அமைப்பும் ஊதிப்பெருத்து ஒரு குமிழியாக அழகு காட்டியது. அதற்குள் அகப்பட்ட ஓர் இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவை இந் நாவல் பதிவு செய்கிறது

                தப்பி பிழைத்த ஒரு இளைஞன் கொடுத்ததே ‘குமிழி’ எனில், பிற இளைஞர்களும் பேசத் தொடங்கினால் பெருவெள்ளமல்லவா எழும்!

“தனிமனிதர்களுக்கான இந்தப் பண்புகள் போற்றுதற்குரியவை. ஆனால் இயக்கத்தின் போக்கு, எதிரியின் அணுகுமுறை, தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையிலான முரண்கள், புறநிலை மாற்றங்கள் அல்லது நெருக்கடிகள், நடைமுறைப் பிரச்சினைகள், தனிமனித பலம் பலவீனங்கள், தன் முனைப்பு, அதிகாரம், புகழ், பிம்ப உருவாக்கம் என பல காரணிகள் இந்த தனிமனிதர்களை இப்படியே தொடர்ந்து காப்பாற்றி வைத்திருக்கும் என நாம் அப்பாவித்தனமாக நம்பத் தேவையில்லை. லெனின் இப்போ இருந்திருந்தால்…. சேகுவேரா இப்ப இருந்திருந்தால்… மாவோ இப்ப இருந்திருந்தால்… என்றெல்லாம் அவர்கள் நடந்த அதே தடத்தில் வைத்து சமன்பாட்டு ரீதியில் கணிப்புகள் செய்ய முடியாது. அத் தடத்திலிருந்து முறித்துக்கொண்டு அவர்கள் வீரியமான அல்லது வீழ்ச்சியான பாதையில் பயணித்திருத்தல் கூடும்

                “சொந்தத் தோழர்களையும் சக இயக்கப் போராளியளையும் கொலை செய்துகொண்டு எந்த மக்களுக்காகப் போராடப் போறம். குறைந்தபட்சம் அதை ஏற்றுக்கொள்ளிறதுக்கோ, அதற்கான காரணத்தை பகிரங்கமா முன்வைக்கிறதுக்கோ, சுயவிமர்சனம் செய்யிறதுக்கோ, திருந்திக்கொள்ளிற முனைப்பை காட்டுறதுக்கோ வக்கில்லாத இயக்கம் தனக்காக போராடுதா அல்லது மக்களுக்காக போராடுதா” என்று கடுப்பாக பேசினான் எர்னஸ்ரோ. [பக்கம் – 159]. இது தான் குமிழி எழுப்பும் பெருவினா.

                ஒரு வேளை உமாமகேசுவரனிடம் வினவினால் ‘குமிழி’ குறித்த வேறு மாதிரி விளக்கமல்ல கிடைக்கலாம். ஆனால் பாவம் அவரும் ‘சகோதர யுத்தத்தில்’ கொல்லப்பட்டது சரித்திரம்.

                சாதியும் பெண்கள் மீதான வன்மமும் விடுதலை அமைப்பொன்றினுள் எப்படி இருந்தது என்பதற்கு கீழ்க்கண்ட வரிகளே சாட்சி:

.               01:“அந்த பறை வேசைமக்கள் தப்பி ஓடியிட்டாங்கள்….. ஆஸ்பத்திரியிலை ஒருத்தி இருக்கிறாள் அவளை கண்காணிக்க வேணும். இரண்டு பேர் அவளோடை நிற்க வாங்கோ”[ பக்கம் 190]

                02:அதென்ன பெண்களை கையாள்வது” என்று கேட்டான் யோகன். தேவன் அதை எதிர்பாத்திருக்கவில்லை.

                “பெண்கள் என்ன ஆண்களால் கையாளப்பட வேண்டியவர்களா, அவர்களையும் ஆயுதத்தையும் ஒப்பிடுகிறீர்கள். அவர்களென்ன பண்டமா?.” என்று கேட்டான் ஜோன்.                “பெண்விடுதலை பற்றி கதைக்கிறம், சோசலிசம் பற்றி சமத்துவம் பற்றி கதைக்கிறம்… நாங்கள் இப்பிடி ஒப்பிடலாமா..” என கேட்டான் எர்னெஸ்ரோ.[ பக்கம் 145]

                புதினத்தின் சிறப்பம்சங்களாக வேம்பு (வேப்பமரம்) பேசுவது, நாவலில் விரவியிருக்கும் தமிழீழ பேச்சுமொழி (சில இடங்களில் சொற்களைப் புரிந்து கொள்ள சற்று அவகாசம் தேவைப்பட்டது) என்பவற்றை குறிப்பிடலாம்.

                “ஒருவர் நாவல் எழுதத் தொடங்கும்போது, சில கடந்த கால நிகழ்வுகளை எழுதும் அவசியம் ஏற்படலாம். நாவல் நிகழும் காலத்திற்கும், நாவல் எழுதும் காலத்திற்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்படுவது இயல்பு. இதை இட்டுநிரப்ப கள ஆய்வும், நூலறிவும் அவருக்குத் தேவைப்படுகின்றன. சுய அனுபவத்தின் அடிப்படையில் நாவல் எழுதுவோருக்கு இத்தகைய இடர்பாடு இல்லை. ஏனெனில் அவர்கள் தேர்ந்தெடுத்த களத்துடனும், அங்கு வாழும் மனிதர்களுடனும் நிகழும் நிகழ்வுகளுடனும இணைந்த ஒன்றாக அவர்களது வாழ்க்கை அனுபவம் அமைந்திருக்கும்”எனக் குறிப்பிடும் ஆய்வர்.ஆ.சிவசுப்ரமணியணின் கருத்தும் இங்கு முக்கியமானதே

குமிழி… நிஜமா… புனைவா… அமைப்பொன்றில் இணைந்து, இயங்கி, விலகி… அந்த அனுபவங்களில் இருந்து அமைப்பின்   மீது வைக்கப்படும் விமர்சனமா? அதிகார மமதையின் மீதான சவுக்கடியா? வரட்டு சித்தாந்த வாதிகளின் கருணையின்மையின் பதிவா?. எல்லாம் தான் குமிழி,  வரலாற்று பெருந்துயரொன்றின் ஆவணம். ஆம், குமிழி சமகால சரித்திரத்தின் கோப்பு என வகைப்படுத்தலாம்.


***

வாசிப்பு -40

 • திருஞானசம்பந்தன் லலிதாகோபன் (இலங்கை)

இரவி எனும் அன்பரினால் எழுதப்பட்ட “குமிழி” நாவலினை வாசித்து முடித்துள்ளேன்.இந்த எழுத்தாள அன்பர் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் (புளொட்) உறுப்பினராக இருந்து பின்னர் புலம்பெயர்ந்து தற்போது சுவிஸ் நாட்டில் வதிகின்றார்.தமிழ்நாட்டு விடியல் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

சில குறிப்புகள்.

1.நாவல் என்பது புனைவின் வகைக்குள் அடங்குகின்றதாயினும் இந்த கதை நாவலாசிரியரின் சொந்த அனுபவங்களை சார்ந்துள்ளதனால் இதனை நாவல் வடிவில் அமைந்த “அல்புனைவு” எனக்கொள்ளலாம்.

2.கதையின் காலப்பகுதி நெடிதானதன்றி இரு வருடங்களுள் நிகழ்கின்ற சம்பவங்களாகும்.

3.இந்த கதையினை வெறுமனே வாசகனாகவன்றி அந்த காலத்தை அனுபவித்த ஒரு சாதாரண மனிதனாகவுமிருந்தே வாசித்து முடித்தேன்.

குமிழியும் காலத்தை பின்நோக்குதலும்.

ஈழவிடுதலை போராட்டமானது அமைப்புக்களின் கைகளுக்கு சென்று விட்ட எழுபதுகளின் பிற்பகுதியிலும் எண்பதுகளின் முற்பகுதியிலும் ஏராளமான அமைப்புக்கள் ஈழவிடுதலைக்காக உதயமாகின. இந்த அமைப்புக்கள் யாவற்றிலும் காணப்பட்ட ஒற்றுமை யாதெனில் மாவோ, கார்ல் மார்க்ஸ் மற்றும் லெனின் போன்றவர்களினால் தத்துவார்த்த ரீதியில் உருவாக்கப்பட்ட  “சமவுடமை” கருத்தியலை குறித்தளவில் உள்வாங்கி செயற்பட்டமையாகும்.

சமவுடமை தத்துவமானது ஈழப்போராட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டமை மற்றும் செல்வாக்கு பெற்றமை குறித்த பின்னணிகளை ஆராய்கையில், ஈழத்தில் காணப்பட்ட சாதிய அடக்குமுறைகள், பெண்கள் மீதான அடக்குமுறைகள், சீதன முறைமை போன்ற இன்னோரன்ன காரணிகளை பட்டியலிட முடியும். பேரினவாதத்தின் பிடியிலிருந்தான விடுதலை பெறுதலும் மானுட விடுதலையும் ஏககாலத்தே நிகழ வேண்டும் என்பதே ஈழப்போராட்ட அமைப்புக்களின் ஆரம்ப கால சிந்தனையாகவிருந்தது.

உமாமகேஸ்வரன் அவர்களை செயலதிபராக கொண்டிருந்த புளொட் அமைப்பானது ஈழவிடுதலை அமைப்புக்களில் அதிகம் உறுப்பினர்களை கொண்டிருந்த அமைப்பாகும். இந்த அமைப்புக்குள் அதிகமான உறுப்பினர்கள் இணைந்தமைக்கான காரணமாக, இது சமவுடமை தத்துவத்தை தன்னகத்தே கொண்டிருந்தமையை கூற முடியும். ஆனால் அதிகம் உறுப்பினர்களை அது கொண்டிருந்தாலும் அதாவது குமிழியாக வீங்கி பருத்திருந்த போதிலும், அதன் செயல்வீச்சும் கட்டுக்கோப்பும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவில்லை. இதனாலேயே இந்த அமைப்பு இறுதியில் “குமிழியாய்” வெடித்தும் சிதறியும் போனது.

இதனை விடவும் சமவுடமை தத்துவங்களை அது தனது உள்மையங்களில் பலப்படுத்தாமையும் அதாவது உள்ளே காணப்பட்ட தத்துவ வெறுமையும் இந்த பெயர் தெரிவுக்கு காரணமாக இருக்கலாம்.

இந்த முன்னாள் போராளி புளொட் அமைப்பிலிருந்து பிரிந்து தனியே ஓர் இரகசிய குழுவாக இயங்கிய சந்ததியாரின் “தீப்பொறி” குழுவிலும் இயங்கிய ஒருவர். புளொட் அமைப்பின் தேசிய கீதமாக இருந்த பாடலான “புதியதோர் உலகம் செய்வோம் தோழா” என்ற பாடலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்றொடரான “புதியதோர் உலகம்” என்ற பெயரில் அந்த அமைப்பின் உள்ளக முரண்கள் வெளிக்கொணரப்பட்டன. அதாவது ஒரு எள்ளல் தனமான பெயர் தெரிவே இது.”புதியதோர் உலகம்” நூலின் இரண்டாம் பாகமாக சொல்லக்கூடிய இந்த நாவலின் தலைப்பு கூட ஒருவிதமான எள்ளல்தன்மையுடனேயே உள்ளதென்றும் கூறிவிட முடியும்.

வேம்பும் சவுக்கும்

இந்த நாவலிலே வேம்பு மரமும் சவுக்கு மரமும் படிமங்களாக பயணிக்கின்றன. வேம்பு மரமானது எமது நாட்டுக்கு உரித்தானதுடன் மிகவும் புனிதமான விருட்சமாகவும் பார்க்கப்படுகின்றது. மருத்துவ குணங்கள் நிறைந்த இது, குளிர்மையை அள்ளி வீசுகின்ற மரமாகவும் விளங்குகிறது.

கதாசிரியர் ரவியாக, ரகுவாக, ஜோனாக என மாறி மாறி அவதாரம்  எடுக்கும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் வேம்பின் தொடர்ச்சி அவரது வாழ்விலே இருக்கிறது. அதிலும் அவர் ரவியாக இருக்கும் நாட்களிலே அவரின் வீட்டு முற்றத்தில் இருக்கும் வேம்பு மரம் கதை கூறுவதாக ஒரு அத்தியாயத்தை ஒதுக்கியிருப்பது சிறப்பு. ஒரு கட்டத்தில் வேம்பு மரம் ரவி எனும் பாத்திரத்தை தனது புத்திரனாகவே குறிப்பிடுகிறது.

ஆனால் ரவி பயிற்சி முடித்து தனது வீடு வரும் போது அந்த வேம்பு அங்கில்லை. இதற்கு காரணமாக வீட்டின் வறுமை குறிப்பிடப்பட்டாலும், அதன் ஏக பரிணாமம் இவ்வாறு உள்ளதாக குறிப்பிட்ட முடியும். போரும் தொடர்ச்சியான வாழ்வியல் அலைக்கழிப்புகளும் ஈழத்தமிழரின் பாரம்பரிய சிந்தனைகளில் பல்வேறு  மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் காரணமாக அவர்கள் புனிதங்களை கூட சாதாரணங்களாக கடக்க வேண்டியவர்களாயினர். இதன் ஒரு வெளிப்பாடே வேம்பின் அழிப்பாகும். வேம்பு ஈழத்தமிழர் வாழ்வியலின் தொன்ம குறியீடு. இந்த குறியீட்டின் உச்சம் ரகு மீண்டும் ரவியாகி புலம்பெயர் வாழ்க்கையில் இருக்கும் போதும் சாளரத்திற்கு வெளியே வேம்பு மரம் இருப்பதாக காட்டியுள்ளமையே.

இந்த தொன்மக் குறியீட்டின் எதிரிடை குறியீடே சவுக்கு மரங்களாகும். உண்மையிலேயே சவுக்கு, இபில் இபில், விக்ஸ் போன்ற மரங்கள் அந்நிய தேசங்களில் இருந்து எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டவை. அவற்றினால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் பின்னாட்களிலேயே உணரப்பட்டு, காலப்போக்கில் அவற்றுக்கான மவுசு சுதேச மக்களிடையே அற்றுப் போனது.

இங்கே வரும் சவுக்கு மரங்களானவை அடையாளம் காணப்பட வேண்டிய பல மர்மங்களை கொண்டிருக்கிறது. இன விடுதலைக்காக தம் ஆசாபாசங்கள் அத்தனையையும் துறந்து வந்த பல நூறு இளைஞர்களின் கனவுகள் சவுக்கு மரங்களினால் காவு கொள்ளப்பட்டமை காலக்கொடுமையே. சூழலியல் ரீதியில் கூட வெப்பத்தை மிகுதியாக சேமித்து வைக்கும் மரங்களே இவை. ஆக சவுக்கு தோப்புகள் “ஒவ்வாத உலர்காற்று”.

நமக்கு ஒவ்வாத கூட்டுக்களின் குறியீடாக சவுக்கு மரங்களை நாம் கருதினால்,”சவுக்கு மரங்களை” அடையாளம் காண வேண்டிய தேவையை வலியுறுத்தும் முதலாவது வெளியீடாக “வங்கம் தந்த பாடம்” என வெளிக்கொணர்ந்த “குமிழி யின்” பணி காலமறிந்து ஞாலத்தின் கண் செய்த பெரும் சேவையே. ஆனால் துரதிஷ்டவசமாக அது நீட்சி பெறாது அமுக்கிப் போனமை நமது வரலாற்றை நாமே சிருஷ்டிக்க முடியாமல் போனமைக்கான காரணியாகும்.

சவுக்கு மரத்துக்கு இணையாக பல பாத்திரங்களை இந்த நூலில் நாம் தரிசிக்க கூடியதாக உள்ளது. ஒவ்வொரு முகாமிலும் ஒவ்வொரு சவுக்கு மரங்கள்; லெனின்,சேகர்,தோப்புக்கார கிழவன் என! இந்த பாத்திரங்கள் கூறும் கனமான செய்தி “எங்களை மீறி எதுவும் நீங்கள் செய்ய முடியாது”என்பதே.

“இருளை நம்பினோம். இருளை கண்காணிக்கவும் செய்தோம்”(பக்-27)

இருளாகிய படிமத்தை நாங்கள் இரு வகையில் இந்த நூலில் அடையாளம் காணலாம்.
1.புற இருள்
2.அக இருள்

விடுதலைக்கான பாதை இருளாகவே இருக்கிறது. ஒளியைத்தேடி நகரும் பயணங்கள் இருளினூடாகவே இடம்பெறுகின்றன. ஒரு வகையான துணைவனாக இருள் இருந்தாலும், மறுபுறத்தே அது ஆபத்தான எதிரியாகவும் இருக்கின்றது. இது புற இருள் தொடர்பான ஆற்றுகை.

ஆனால் அகவிருளோ ஆபத்தானதும் மர்மங்கள் நிறைந்த மரணக்குழி போன்றதுமாகும். அதாவது அமைப்பின் உள்ளே இருந்த இருள். அதன் பரப்பும் விஸ்தீரணமும் கண்கட்கு புலனாவதில்லை. உண்மையில் புற இருளுக்கு பலியான “பாண்டி” போன்ற தோழர்களை விடவும், அகவிருளில் காணாது போன “மதன்” போன்ற தோழர்களே அதிகம். இதுவே குமிழி சொல்கின்ற கதையாகும்.

அமைப்பில் இணையும் தனிமனிதனை பொறுத்தளவில் தன்னினத்தை சூழவுள்ள “புற இருளிலிருந்து” வெளியேறுவதற்கான விடுதலை பயணத்தில் , தன்னையே “அகவிருளுக்கு” பலியாக தருகிறான். புறவிருளினை விடவும் அவன் அகவிருளுக்கே அதிகம் அஞ்சுகிறான். இந்த தனிமனிதர்களின் அகவிருள் மீதான அச்சமே விடுதலை அமைப்பின் குலைவுக்கும் காரணமாகின்றது.

அறியமுடியாத இருளுக்கு இந்த அமைப்புக்குள் சூட்டப்பட்டிருந்த பெயர் “இராணுவ இரகசியம்”. உண்மையில் விடுதலை என்பது கூட்டு மனித உளவியலாகும். ஆனால் இந்த கூட்டு மனித உளவியலை வளர்த்தெடுப்பதில் “குமிழி” தோல்வி காண்கிறது. குமிழி எனும் சுழலுக்குள் உழலும் மாந்தர்கள் ஒருவரை ஒருவர் நம்ப முடியாதவாறே வளர்க்கப்படுகின்றனர். எதிரில் உள்ள மனிதன் நண்பனா அல்லது எதிரியா என இனங்காணமுடியாதவாறே இந்த மனிதர்களின் பயணம் நீள்கிறது. சோகம் என்னவெனில் புற மனிதர்களின் விடுதலைக்காக புறப்பட்ட தோழர்கள் புறமாந்தரை விடவும் உளரீதியான பாதிப்புக்குள்ளிருந்தமையே.

கடவுள் பெற்ற பிள்ளைகள்.

அனைத்து இயக்கங்களையும் “விடுதலைப்புலிகள்” என்றவாறே தமிழ்நாட்டின் சாதாரண மக்கள் அடையாளம் கண்டனர். இதனை ஏனைய இயக்கங்கள் மறுதலிக்கவுமில்லை; தங்களின் தனித்துவ பெயர்களை திணிக்கவும் முயற்சித்திருக்கவில்லை என்பதை இந்த நூலினூடு அறிந்து கொள்ள முடிகிறது.

ரகுவாக இருந்த காலம் வரைக்கும் அவனாலோ அல்லது தோழர்களினாலோ சாதாரண மக்களுடன் பழகும் வாய்ப்பு அவனுக்கு கிட்டவில்லை. ஆனால் ஜோனாக அவன் மாறிய பின்னர் சாதாரண மக்களுடன் பழகும் வாய்ப்பு கிட்டுகிறது. சாதாரண கிராமப்புற மக்கள் இவர்களை “கடவுளின் பிள்ளைகள்” என்பதுடன் ஈழப்போராளிகளை தமது உறவுகள் போன்றே நடாத்துவதாக நாவல் கூறுகின்றது.

ஆனால் உண்ட வீட்டுக்கு நஞ்சு வைப்பது போல் தமிழ்நாட்டு பண்ணையார் ஒருவர் ஈழ அமைப்பினால் கொலை செய்யப்படுகிறார். இது நீதிமன்றுக்கு கூட செல்லாது தமிழ் நாட்டின் முதல்வரினால் சம்பவம் அமிழ்த்தப்படுகிறது.

ஏறத்தாழ இதனையொத்த சம்பவம் ஒன்றின் விபரிப்பினை சயந்தனின் “அசேரா” நாவலிலும் காணக்கிடைக்கிறது. இது போன்ற பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் ஈழப்போராளிகளால் நிகழ்த்தப்படுகின்றன. கடைசியில் கடவுளின் பிள்ளைகள் “சாத்தானின் புதல்வர்களாகினர்”.

பேசிய தத்துவங்களும் பேசப்படாத யதார்த்தங்களும்.

குமிழி அமைப்பு சமவுடமை தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருப்பினும் கூட, அங்கே சமவுடமை தத்துவம் என்பது வெறுமனே ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்துள்ளது. அடிப்படை பயிற்சி முகாமிலேயே வலம் வரும் பண்ணையாளர் போன்ற தோற்றமுடைய மொட்டை மூர்த்தி முதலான பாத்திரங்கள் போராளிகளை “ஆண்டான் அடிமை” முறையிலேயே நடாத்துவதனை காணக்கூடியதாகவுள்ளது. இது தவிர தமக்கு பிடிக்காத எந்தவோர் உறுப்பினரையும் தண்டிக்கும் வல்லமையுடையதாய் இருக்கும் “உளவுப் படை” என்ற அமைப்பின் இயங்குதலும் “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்” போன்றதாகும்.

போராளிகளை பார்வையிட வரும் மத்திய குழு உறுப்பினர் வாசு மடிப்பு குலையாத ஆடைகளுடன் வலம் வர, சாதாரண போராளிகள் மாற்றுவதற்கு உள்ளாடை கூட வழங்கப்படாது இருக்கின்றனர். இதற்காக கூறப்படும் தத்துவம் “போராட வந்தால் யாவற்றையும் சகிக்க வேண்டும்” என்பதாகும்.

ஆரம்ப காலத்தில் பொடிநடையாக வந்த செயலதிபர் அவர்கள் மிகக்குறுகிய காலத்திலேயே பல வாகனங்கள் சகிதம் ஒரு தளபதி போல் வந்திறங்கியதாக குறிப்பிடப்படுகிறது. இதனை அமைப்பின் வளர்ச்சி என்ற கோணத்திலும் பார்ப்பதை விடவும், மக்களுக்கான புரட்சி அமைப்பானது சாதாரண முதலாளித்துவ இராணுவ அமைப்பாக தனது நிலையை இறக்கி கொண்டதாக அடையாளப்படுத்த முடியும். தொடரும் அத்தியாயங்கள் இதற்கான சான்றாகின்றது.

ஈழப்போராட்டத்தில் பல்வேறு அமைப்புக்களும் பெண்களை அமைப்புக்குள் உள்ளீர்த்துக்கொண்டன அல்லது பெண்கள் பிரிவை தங்கள் அமைப்பில் வைத்து கொள்வதை ஒரு கௌரவமாக கருதியிருந்தன. ஆனால் பெண்கள் தொடர்பான பரந்த பார்வையை எந்த அமைப்பும் பெரிதாக கொண்டிருக்கவில்லை என்றே கூறி விடலாம். ஆண்களே அங்கு தீர்மானிப்பாளர்களாயினர். ஆகக்குறைந்தது மத்திய குழுக்களிலாவது பெண்களின் பிரதிநிதிகள் இருந்தார்களோ தெரியவில்லை.

“ஆயுதங்களை பெண்கள் போல கையாள வேண்டும்” என பயிற்சி ஆசான் தேவன் கூறுவது தனிமனிதனின் கூற்றாக கொள்ள முடியாது. மாறாக அமைப்பினுள் பெண்கள் தொடர்பிலான ஆண்களின் பிரதிபலிப்பாகவே கொள்ள முடிகிறது.

ஆக சமவுடமை தத்துவம் என்பது இந்த விடுதலை அமைப்பினுள்ளே வெறுமனே வாசிப்பிற்கானதாக இருந்ததேயன்றி, அது நடைமுறை ரீதியில் பரீட்சார்த்த முறையிலேனும் பிரயோகிக்க படவில்லை என்றே கூறிவிடலாம்.

காஸ்ரோ எனும் இலட்சிய போராளி

இந்த நூலில் வருகின்ற காஸ்ட்ரோ எனும் பாத்திரம் உண்மையானதா அல்லது தனது அரசியல் கருத்துக்களை கூறுவதற்காக கார்டியர் உருவாக்கிய கற்பனையோ தெரியவில்லை. ஆனால் காஸ்ட்ரோ பேசும் அரசியல் உன்னதமானது.

“அடிப்படையில் நாம் ஒரு முதலாளித்துவ இராணுவ கட்டமைப்புடன் இயங்குகின்றோம். போராளிகள் பிரக்ஞை பூர்வமாக இயங்க பயிற்றுவிக்கப்படாதவரை, அரசுக்கெதிரான அதிகாரம் என்பதை விடவும் மக்களுக்கு எதிரான அதிகாரம் எமது துப்பாக்கியிலிருந்து பிறக்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை”(பக்-92).

“அரசியல் அறிவூட்டப்படாத இராணுவம் ஒருபோதும் சோசலிச விடுதலையை பெற்றுத் தரப்போவதில்லை. வெறும் இராணுவ அதிகாரம் சொந்த மக்களுக்கு எதிராகவே தனது துப்பாக்கியை திருப்பக் கூடியது. அது விடுதலை அடைந்தால் கூட அதைச் செய்யும்”(பக்-93).

இந்தியாவில் காணாமல் போன காஸ்ட்ரோ இலங்கையில் மீண்டும் திரும்ப வருகின்றான். அவனின் வருகை குறித்த காட்சிப்படுத்தல்கள் ஒரு கனவினை போலவோ அல்லது கவிதையை போன்றோ உள்ளதால் ; காஸ்ட்ரோ எனும் பாத்திரமானது தனது அரசியலை கூறுவதற்கான கதாசிரியரின் ஒரு உத்தியாகவே எனது வாசக மனது கூறுகின்றது.

” எனக்கு அழிவில்லை”(பக் 208)


முடிவாக…

பொதுவாக ஈழப்போராட்டம் சார்ந்த நூல்கள் அமைப்புக்களை அல்லது தனிநபர்களின் சாகசங்களை நேரடியாக அல்லது மறைமுகமாக தூக்கி நிறுத்துவனவாகவே வெளிவந்தன. ஆனால் அண்மைக்கால வெளியீடுகள் பலவும் போராட்டத்துள் சிக்கிய தனிமனிதர்களின் உணர்வுச் சிக்கல்களை வெளிக்கொணர்பவையாக அமைந்துள்ளமை ஆரோக்கியமான ஒரு போக்கே. அந்த வரிசையில் “குமிழி” ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.

இந்த கதாசிரியரும் கூட “குமிழி” அமைப்பினை விமர்சிக்கும் விதமாக இந்த நூலை எழுதியிருப்பினும் கூட, அதற்கு எதிர்நிலை அமைப்பில் இயங்கிய சந்ததியாரை கூட கதாநாயக நிலைக்கு உயர்த்தி பிடிக்காது அவரையும் யதார்த்த நிலைக்குள் வைத்தே புனைந்திருப்பது எழுத்தாளரின் அறத்தை பறைசாற்றுகிறது.

மக்களுக்காக கட்டமைக்கப்பட்ட அமைப்பினது சீரழிவுகளை “காஸ்ட்ரோ” வின் மொழிதலுடன் நிறைவு செய்வதுடன் ஒரு அமைப்பு எவ்வாறு இயங்க கூடாது என்பதற்கான கட்டியங்கூறுதலினையும் குமிழி கூற விழைகிறதெனலாம்.

“கழகத்தின் வளர்ச்சி என்பது படிப்படியாகவோ இயல்பாகவோ நடந்தேறிய வளர்ச்சியல்ல.அது ஒரு வீக்கம்.இதை கவனத்திலெடுத்து நாம் நிதானமாகவும் சரியாகவும் சோசலிச பாதையில் பயணிப்பதே அடிப்படையில் முக்கியம்”(காஸ்ட்ரோ-94)

 • 03042021
 • fb link : https://www.facebook.com/thirugnanasampanthan.lalithakopan/posts/1736794209826824
 • ஜீவநதி (இலங்கை) சஞ்சிகையின் 150 வது இதழ் ஈழ நாவல்கள் குறித்த சிறப்பிதழாக ஏப்ரல் 2021 இல் வெளிவந்திருக்கிறது. அதில் லலிதாகோபனின் இந்த வாசிப்புடன் குமிழி பதிவாகியிருக்கிறது.

***

வாசிப்பு -41

 • எம். ரிஷான் ஷெரீப் (இலங்கை)

நூல் திறனாய்வு

ஹனாவின் டயறியும், ரவியின் குமிழியும்

உயிர் மீண்ட சரிதங்கள்

            புதிய ஆண்டின் தொடக்கம் அடுத்தடுத்த இரண்டு நாட்களில் இரண்டு நூல்களை வாசிக்கும் வாய்ப்பினை அளித்தது. இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட காலகட்டங்களில், வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு நாடுகளிலிருந்து எழுதப்பட்ட நூல்கள் என்ற போதிலும், ஒன்று போலவே வேதனையை உணரச் செய்யும், கடந்த நூற்றாண்டின் கலவர காலங்களில் நிகழ்ந்த வலி மிகுந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட அனுபவப் பதிவுகள் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றன.

(01)

            முதல் நூல் ஹனா ப்ரவ்தா எழுதிய ‘I Was Writing This Diary For You, Sasha’ எனும் ஆங்கில நூல். உண்மையில் இது ஹனா ப்ரவ்தா எழுதிய அன்றாடக் குறிப்புகளின் தொகுப்பு. இவ்விடத்தில் ஹனாவைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு நூலைப் பற்றி மேலே தொடர விரும்புகிறேன்.

            ஹனா ப்ரவ்தா செக்கோஸ்லொவெகியாவில் வாழ்ந்த ஒரு யூத இனப் பெண்மணி. 1939 ஆம் ஆண்டில் ஹிட்லர் செக்கொஸ்லொவெகியாவை ஆக்கிரமித்த வேளையில் அவர் ஒரு திரைப்பட நடிகையாக பிரசித்தமாகியிருந்த ஒரு இளம்பெண். அவர் கம்யூனிச கொள்கையைக் கொண்டிருந்த இளைஞரான ஸாஷா முன்க்கை அப்போதுதான் திருமணம் முடித்திருந்தார். நாஸி வன்முறைக் காலத்தில் பல இன்னல்களை அனுபவித்தவாறு மறைந்து வாழ்ந்த அவர்களிருவருக்கும் 1942 ஆம் ஆண்டு வரைதான் அவ்வாறும் இருக்கக் கூடியதாகவிருந்தது. அந்த ஆண்டு முடிவதற்கும் முன்பு கைது செய்யப்பட்ட அவர்கள் ஆரம்பத்தில் டெரசின் எனும் இடத்தில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் அவுஷ்விட்ஸ் படுகொலை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

            இந்த நூலிலுள்ள நாட்குறிப்புகள், அவுஷ்விட்ஸில் தன்னிடமிருந்து பலவந்தமாக பிரித்து அகற்றி அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவனான ஸாஷா முன்க் மற்றும் அக் காலகட்டத்தில் தன்னைச் சூழவும் பற்றியெரிந்து கொண்டிருந்த படுகொலை பூமியை நினைவுபடுத்தி எழுதப்பட்ட குறிப்புகளாகும். தனது உயிர் எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் அதைக் குறித்து எவ்விதத்திலும் கலவரப்படாமல் எழுதப்பட்டுள்ள இந்தக் குறிப்புகள் ஒரு பெண்ணின் நொருங்காத மன தைரியத்துக்கு மிகப் பெரும் சாட்சியாக அமைந்துள்ளது.

            அக் கால கட்டத்து நினைவுகளைக் கொண்டு அநீதம் இழைத்தவர்களாலும், பாதிப்புக்கு உள்ளானவர்களாலும் பல நூல்கள் இதுவரைக்கும் எழுதப்பட்டுள்ளன. ஒரு வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஹனா எழுதிய  இந்த நூறு பக்கங்களைக் கொண்ட சிறிய நூல், அவரது 1945 ஆம் ஆண்டின் நாட்குறிப்புப் பதிவுகளைக் கொண்டது. ஹனாவின் கைப்பட எழுதப்பட்ட நாட்குறிப்பு ஏடு அவருக்கு நெருக்கமானவர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, அதை எழுதிய ஹனாவே அதை மறந்திருந்த அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் 1996 ஆம் ஆண்டில் ஹனாவுக்கே மீண்டும் கிடைத்திருக்கிறது. அதைக் கொண்டே இந்த நூல் உருவாகியிருக்கிறது.

            ஹனா, போலந்தின் பெண்கள் முகாமொன்றுக்கு வந்து சேர்ந்ததிலிருந்து, மரண அணி வகுப்பிலிருந்து தப்பி பிராக் எனும் இடத்துக்கு வந்து சேரும் வரையான நாட்குறிப்புகள் அவரால் எழுதப்பட்டிருக்கின்றன. அவ்வாறே இந்தக் குறிப்புகள் திரும்ப ஹனாவின் கைவசம் சேர்ந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவரால் எழுதப்பட்ட குறிப்பும்,  நாட்குறிப்பைக் கண்டெடுத்து ஹனாவுக்கு அனுப்பி வைத்தவரால் எழுதப்பட்ட கடிதமும் இந்த நூலில் இடம்பெற்றிருப்பது நூலை முழுமையான ஆவணமாக்கியிருக்கிறது. 

            தரமான இலக்கியப் படைப்பாகவும் முழுமை பெற்றுள்ள இந்த நூல் உயிர் மீண்ட சரிதத்தை வாசகருக்குக் காட்சிப்படுத்துவதோடு தன்னம்பிக்கையூட்டச் செய்வதாகவும் அமைந்துள்ளது. எவராலும் சகித்துக் கொள்ளக் கூட முடியாத கொடுமைகளை அனுபவித்த ஹனா தன்னிடமிருந்து பிரிக்கப்பட்ட கணவன் ஸாஷாவை நினைத்துச் சோர்ந்துதான் இந்தக் குறிப்புகளை எழுதிய போதிலும் அவர்கள் இருவரும் அவுஷ்விட்ஸுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கவேயில்லை.

            வாசகரால் ஒரே தடவையில் வாசித்து முடிக்க முடியுமான இந்தச் சிறிய நூலில் தொகுக்கப்பட்டுள்ள ஹனாவின் நாட்குறிப்புகளில் பல விடயங்கள் நபர்களின் பெயர்களோடும், சம்பவங்களாலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. எனவே, சலிப்பூட்டாமல் வாசிக்கச் செய்யக் கூடிய வரலாற்று ஆவண நூலாக இது மேலும் முக்கியத்துவம் மிக்கதாகிறது.  

(02)

            இந்த நூலைப் போலவே நான் மேலே குறிப்பிட்ட இரண்டாவது நூலான ‘குமிழி’ எனும் தமிழ் நாவலும் ஒரு வரலாற்று ஆவண நூலாக முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது. ஹனாவைப் போலவே, கலவர காலத்தில் எழுதப்பட்ட ரவியின் நாட்குறிப்புகள் அடங்கிய தொகுப்பு இது என தயங்காமல் கூறலாம்.

            ஹனாவின் நாட்குறிப்புகளை காலம் எவருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக வைத்திருந்தது போல ரவி தனது அனுபவக் குறிப்புகளை எழுதி அவற்றை ஒரு நண்பரிடம் கொடுத்து வைத்திருக்கிறார். இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை தந்த காலப் பகுதியில் அந்த நண்பர் பாதுகாப்பு காரணம் கருதி அந்தக் குறிப்புகளை எரிக்க நேர்ந்திருக்கிறது. இப்போது சம்பவங்கள் நிகழ்ந்து 35 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 2020 ஏப்ரல், மே காலப் பகுதியில் இந்த நினைவுகளை முழுமையாக மீட்டெடுத்து  ஒரு நாவலாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ரவி.

            விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நாவல் எடுத்துரைக்கும் காலப்பகுதி 1984 – 1985, கதைக் களம் : ஈழம், தமிழகம் எனும் வகையில் ஈழத்துப் போரிலக்கிய வகைக்குள் உள்ளடக்கக் கூடிய ஆவணமாக இந்த நாவல் உள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறையப் பேர் அறிந்திராத, அறிந்திருந்தும் வெளிப்படையாகப் பேசாத ஈழப் போராளிகளுக்கு இந்தியப் போர்ப் பயிற்சியின் போது வழங்கப்பட்ட மனிதாபிமானமற்ற சித்திரவதைகளையும், போராளிகளின் மனக் குமுறல்களையும் இந்த நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.

            இதற்கு முன்னர் இலங்கை எழுத்தாளர் த.மலர்ச்செல்வன் தொகுத்த அவரது ‘பெரிய எழுத்து’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘குறி நீளுகிற மரம்’ சிறுகதையில் இலேசாக இந்த விடயத்தைத் தொட்டிருக்கிறார். எனினும், 1985 ஆம் ஆண்டில் எழுத்தாளர் கோவிந்தனால் எழுதப்பட்ட ‘புதியதோர் உலகம்’ நூல் இதே விடயத்தை மிக விரிவாகப் பேசியுள்ளது. அதை எழுதிய கோவிந்தன் பின் வந்த நாட்களில் காணாமலாக்கப்பட்டார். அந்த கோவிந்தனைப் பற்றியும், அந்த நூலைப் பற்றியும் விரிவான விவரங்கள் ‘குமிழி’யில் தரப்பட்டிருக்கின்றன.

            யாழ்ப்பாணத்தில் புரையோடிப் போயுள்ள சாதிய மனப்பாங்கு, அது போரைப் பாதித்த விதம், கல்வியில் சிறந்து விளங்கிய மிகவும் வசதி குறைந்த ஏழை மாணவர்கள் பின் தள்ளப்பட்ட அவலங்கள், போரில் தோல்வியைத் தழுவியதற்கான காரணங்கள் என நவீன தலைமுறையினர் அறிந்திராத புலங்களைத் தொட்டுச் செல்கிறது ‘குமிழி’. அவற்றுள் ஒரு நாள் ஊதிப் பருத்து வெடித்துப் போன குமிழியொன்றை அவாவி அலைக்கழிக்கப்பட்ட இளைஞனொருவனது வாழ்க்கைதான் நாவலில் கூறப்பட்டிருக்கிறது.

            தமிழகத்தில் போராளிகள் மீது கட்டியெழுப்பிய விம்பங்கள் தமிழகத்தின் கிராமப்புற மக்களில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தின என்பவற்றை விவரிக்கையில் கேலி மின்னவும், பயிற்சியின் போது வழங்கப்பட்ட உணவில் எப்போதும் கறிமஞ்சள் அளவுக்கதிகமாகக் கொட்டப்பட்டிருக்கும் காரணத்தை நகைச்சுவை இழையோடவும், சக போராளிப் பெண்ணின் மீது தோன்றிய ஈர்ப்பை விவரிக்கையில் உணர்வு ததும்பவும், சித்திரவதைகள் மற்றும் பயிற்சிகளை விவரிக்கையில் அனுதாபம் மிகைக்கும் விதமாகவும் மொழியைக் கையாண்டிருக்கிறார் எழுத்தாளர் ரவி. சம்பந்தப்பட்ட இயக்கங்கள் மற்றும் இயக்கத்தின் முக்கியமான நபர்களது பெயர் விபரங்கள், அவர்களால் வழங்கப்பட்ட குரூரமான தண்டனைகள், பெற்ற பயிற்சிகள் என எவற்றையும் விடாமல் குறிப்பிட்டிருக்கும் ரவியின் தைரியம் பாராட்டப்பட வேண்டியதோடு, அனைத்து வாசகர்களுக்கும் குறிப்பாக நவீன தலைமுறையினருக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரக்கூடிய உண்மைகளின் விவரிப்புகளாக  நாவல் உள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

            போரிலக்கியங்களாக, நிஜமான வரலாற்று நிகழ்வுகளை வெளிப்படுத்தும் ஆவணங்களான இந்த நூல்கள் இரண்டுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.  ஹனாவாகட்டும், ரவியாகட்டும். இன்னல்கள் மிகுந்த காலகட்டத்தில் இருவரும் அனுபவித்துள்ள துயரம் செறிந்த அனுபவங்கள் எவ்விடத்திலும் மிகையுறாமலோ, திகட்டச் செய்யாமலோ இந்த நூல்களில் எழுதப்பட்டிருப்பதுவும், போராட்டத்துக்குள் சிக்குண்டவர்கள் என்ற அனுதாபத்தை வாசகரிடத்தில் கோராமல் இயல்பாக எழுதிச் சென்றிருப்பதுவும் கவனத்துக்குரியது.

            போர்க்கால அவல அனுபவங்களை நினைவில் சுமந்து திரிய விதிக்கப்பட்டவர்களின் இளமைக்கால ஞாபகங்கள் அனைத்தும், துயர் செறிந்த நிகழ்வுகள் அடர்ந்த சிதிலங்களால் ஆனவை. எனவே நவீன தலைமுறையினரான நாங்கள் அறிந்திராத பல விடயங்களை எடுத்துரைக்கும் இந்த நூல்களை வாசித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

 • 01042021
 • கலைமுகம் ஏப்ரல் 2021 இதழில் இது பிரசுரமாகியது.

***

வாசிப்பு -42

 • சர்மிளா செயத் (துருக்கி)


குழந்தைப் பருவத்தில் சவர்க்கார நுரையிலிருந்து ஊதிப் பறக்கும் குமிழிகளை உடைத்து விளையாடும் குதூகலமான விளையாட்டை, ‘குமிழி’ என்ற சொல் நினைவூட்டியது.

ஒரு குமிழி ஆரம்பத்தில் என்ன வடிவத்தில் இருந்தாலும், அது ஒரு கோளமாக மாறும். வெளியிலிருந்து ஏதாவது உந்துதல் ஏற்பட்டால் அது உடையும். சில சமயம் அது தானாகவே உடைந்து விடும். இந்தக் குமிழிகள் நீரின் மீதான காற்று மூலக்கூறுகளின் மோதலால் உண்டாகிறது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். அது எப்படி, எல்லாக் குமிழிகளுமே உருண்டை வடிவத்திலேயே வருகின்றன. ஏன் அது சதுர வடிவத்திலோ முக்கோண வடிவத்திலோ வேறு ஏதாவது வடிவத்திலோ வரக்கூடாதா? வரக் கூடாது என்பதை விட வரமுடியாது என்பதே சரியான பதில். பரப்பு இழுவிசையைக் காரணமாகக் கூறுகிறது விஞ்ஞானம். குமிழிக்கு உள்ளிருக்கும் காற்று மூலக்கூறுகள் வெளியேறுவதற்காக அதை சிறைப்படுத்தி வைத்திருக்கும் நீர்ச்சுவர்களை முட்டிக்கொண்டே இருக்கும். அதே சமயம் வெளியில் இருக்கும் காற்று மூலக்கூறுகளில் கூட குமிழிகள் மோதிக்கொண்டே இருக்கும். ஓரிடத்தில் நில்லாமல் அலைந்துகொண்டே இருக்கிறதல்லவா, அது அலைவதோ வெட்டவெளியில். அங்கோ ஆயிரக்கணக்கான காற்று மூலக்கூறுகள் திரிந்துகொண்டே இருக்கின்றன. அவையும் அடைபட்ட தமது சகாக்களை விடுவிக்க நீர்ச்சுவர்களை மோதிக்கொண்டே இருக்கும். உள்ளிருந்தும் அழுத்தம், வெளியில் இருந்தும் அழுத்தம். இதனால் வேறு எந்த வடிவத்தையும் எடுக்கமுடியாது. உடையாமல் தன்னைத் தக்கவைக்க உருண்டை வடிவத்தை எடுப்பது மட்டுமே ஒரே தீர்வு.

குமிழியின் இயற்பியல் ஆயுதக் குழுக்களின் சமூக இயங்கியலுடன் அவ்வளவு பொருந்துகின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழீழ விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு தோன்றிய ஆயுத/நிராயுதபாணிக் குழுக்கள் உதிரி இயக்கங்களுக்கு இந்தக் ‘குமிழி’ கனகச்சிதமான குறியீடு. 1970களிலேயே தமிழீழ அரசின் தேவையை தமிழ் இளைஞர்கள் யோசித்திருந்தாலும், பிரிவினை பற்றிய யோசனையைத் தமிழ் தலைவர்கள் பலரும் தீவிரமானது என்று கருதினார்கள். ஆனால், உள்நாட்டு இன நெருக்கடியின் உளவியல் திருப்புமுனைக்கு 1983 பெருங்காரணமாகிறது. தமிழீழம் ஒன்றே தமிழ் மக்களுக்கு விடுதலையைச் சாத்தியப்படுத்தும் என்ற யோசனையை விவாதமின்றி ஏற்றுக் கொள்ளும் சூழலை 1983 ஜூலைக் கலவரம் ஏற்படுத்தியது. கொழும்பிலும் பிற நகரங்களிலும் 1983 ஜூலை மாதம் நடந்த கொடூரமான தமிழ் எதிர்ப்பு கலவரங்களும், தமிழர் பாதுகாப்பிலும் நலனிலும் அக்கறை இல்லாத சிங்கள அரசாங்கத்தின் வெளிப்படையான புறக்கணிப்பு, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதை நிராகரித்தது.

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த ‘குமிழி’ நூலாசிரியரும் பிரதான பாத்திரமுமான ரவி, 1983 ஜூலைக் கலவரத்தின் நேரடிச் சாட்சியங்களில் ஒருவராகிறார். இந்த அனுபவத்தின் பாதிப்பு ஒரு சமூகத்தின் ஒத்திசைவான எண்ணம் கொண்ட உறுப்பினர்களால் பகிரப்பட்ட கருத்துக்களை ஆதரிக்கும் அல்லது வலுப்படுத்தும் செயல்பாட்டின் ஒரு இணைக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட கோளத்திற்குள் அவரை நகர்த்துகின்றது.

1980 களின் பிற்பகுதியில் அரசியல் ஆய்வாளர்கள் முப்பது தனி கெரில்லா குழுக்களைக் கணக்கிட்டனர். அவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட ஈ. வி.பாலகுமார் தலைமையிலான மாணவர்களின் அமைப்பு (ஈரோஸ்), உமா மகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), ஈ.பி.ஆர்.எல்.எஃப், டெலோ ஆகிய ஐந்தும் முக்கியமானவை. இந்த குழுக்கள் ஒவ்வொன்றும் உத்திகளினதும் சித்தாந்தங்களினதும் அடிப்படையில் கணிசமாக வேறுபடுகின்றன. ஆனால் இவை அனைத்தும் தமிழீழ மக்களின் விடுதலையை இலட்சியமாகக் கொண்டிருந்தன.

‘குமிழி’ நூலாசிரியர் ரவி, உமா மகேஸ்வரன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (PLOTE) மீது பற்றுக் கொள்கிறார். நாவலாசிரியரும் சக தோழர்களினதும் கள அனுபவங்கள், எண்ணச் சிதறல்கள், கிளர்ச்சிகள், குழப்பங்களால் உடனுக்குடன் உருவாகிச் சிதையும் குமிழிகளும், நிரந்தரமான விடுதலையைக் கோரும் குமிழிகளுமாக நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் குமிழிகள் மிதக்கின்றன. தத்ரூபமான உணர்வின்மைக்குப் பொறுப்பேற்க முடியாத அளவு முதிர்ச்சியடையாதவர்களும், தங்கள் செயல்களின் விளைவுகளை எதிர்கொள்ள விரும்பாதவர்களும் குமிழிகளாக அலைகிறார்கள்.

அதே நேரத்தில் அவர்களின் உண்மையான எண்ணங்களை மறைக்கும்போது, ​​பொதுவாக மிகவும் துயரமான, சுயநலமான , சத்தியத்தின் ஒரு சிறிய பகுதி அல்லது நியாயமான கோபம் ஒன்று தாக்கும்போது குமிழிகள் எளிதில் வெடிக்கும் யதார்த்தமும் நிகழ்கின்றது. ஒரு குமிழியின் உள்ளே வாழும் அங்கத்தவர்கள் தங்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைச் சொல்லும்போதும், ஒழுக்கக்கேடான அறஉணர்வற்ற சமூக நடத்தையைக் கொண்டிருக்கும்போது உணர்திறன் கொண்ட உறுப்பினர்கள் புதிய குமிழிகளாக மேலெழுகின்றனர். கழகக் குமிழினுள் வாழும் உறுப்பினர்கள் வெளியுலகத்திற்கு அஞ்சுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தொடர்பில்லாத சொற்களைத் தங்கள் முட்டாள்தனத்துடன் கலக்கிறார்கள். தனிப்பட்ட ஆக்ரோஷங்களுடன் ஒருவரைப் புண்படுத்துவது, தண்டிப்பது, மற்றவர்களை அறியாமையில் வைத்திருப்பதற்கான நிகழ்ச்சி நிரலுக்கு பொருந்தக்கூடிய வாதங்களுடன் எதிர்மறையான தேய்மானத்தைப் பயன்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளால் கழக குமிழி வெடிக்கும் அபாயத்தைப் பார்வைக்கு வெகு தொலைவில் வைத்திருக்கிறார்கள்.

கழக கொள்கையில் வாழும் உறுப்பினர்கள் அவர்கள் கேட்கும் எதையும் நம்புகிறார்கள். ஆனால் எப்போதும் தங்கள் நம்பிக்கைகள் சுயாதீனமானவை என்று கருதுகிறார்கள். ஏனெனில் கழக குமிழி அவர்களை மேலும் பார்ப்பதிலிருந்தும் அறிவதிலிருந்தும் தங்களால் பார்க்கவோ ஏற்றுக்கொள்ளவோ ​​முடியாத ஒன்றை ஒப்புக்கொள்வதையும் தடுக்கிறது. சிங்கள கடும்போக்கு அழுத்தத்தினால் உருவான கழகம் என்ற குறியீட்டுக் குமிழிக்கு மட்டுந்தான் இந்தத் தடுமாற்றங்களும் குழப்பங்களும் என்று பொருள் கொள்ள முடியாது.

1985 இல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், ஈரோஸ் ஆகியவையும் ஒன்றுபட்ட முன்னணி அமைப்பான ஈழம் தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.எல்.எஃப்) ஒன்றை உருவாக்கியது. ஐந்து பெரிய கெரில்லா குழுக்களில் மார்க்சிச-லெனினிஸ்டான PLOTE அமைப்பு கூட்டணிக்கு வெளியே இருந்தது. 1986 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கூட்டணியிலிருந்து விலகிய பின்னர் ஈ.என்.எல்.எஃப் பெரும்பாலும் செயல்படவில்லை. இருப்பினும் மற்ற குழுக்கள் அதன் பங்களிப்பு இல்லாமல் ஒரு முன்னணியை உருவாக்க முயன்றன.1986, 1987 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் தங்கள் போட்டியாளர்களை விழுங்கத் தொடங்கினர். 1986 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களால் டெலோ அழிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் புலிகள் இந்திய துருப்புக்களை மட்டுமல்ல, PLOTE மற்றும் EPRLF உறுப்பினர்களையும் எதிர்த்துப் போரிட்டனர். அசாத்திய ஊமைகளையும் மூளையில்லாதவர்களையுமே இந்த விடுதலை இயக்கங்கள் தக்கவைத்துக் கொண்டன. உணர்திறன்கொண்டவர்கள் ”துரோகிகள்” என்பது இந்த இயக்கங்களினது எழுதப்படாத விதி.

முழுநேரமும் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் அகத்தாலும் புறத்தாலும் போராடிக் கொண்டிருந்த ரவியின் ‘குமிழி’யும் வெடிக்கிறது. நம்பப்பட்ட, நம்பகமான, அல்லது போற்றப்பட்ட ஒன்றின் உண்மை நிலவரம் உணரப்படும்போது உருவாகும் வலியும் இழப்பும் இயலாமையும் வாழ்வை அலைக்கழிக்கிறது. இங்கே உடைவது ரவியினதும் அவரது வாழ்வில் கதாபாத்திரங்களாக வரும் ஒரு சில தோழர்களினதும் ‘குமிழி’கள் மட்டுமில்லை. ஓர் இனத்தின் கனவுக் ‘குமிழி’யும், ஓர் இளைஞர் சமுதாயத்தின் விடுதலைத் தாகம் எனும் ‘குமிழி’யும் .

எத்தனை விடுதலை இயக்கங்கள் தோன்றினாலும், பலஸ்தீன் மண்ணில் ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டுவந்தாலும் சாதிய மேலான்மையும், அதிகாரப்போக்கும், தனிநபர் புனிதப்படுத்தலும் கொண்ட கட்டுமானங்களிலிருந்து சுயவிடுதலை அடையாத எந்த ஒரு நபராலும் குழுவாலும் இனவிடுதலையைச் சாத்தியப்படுத்த முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வியின் அடித்தளத்தில் நிர்மாணிக்கப்பட்ட கனவுக்கோட்டை என்பதற்கு ‘குமிழி’ இன்னொரு சாட்சியமாகின்றது.

 • 26052021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: