இவ்வாறாகத்தான் பிறந்தோம்.

காஸாவில் நாம் இவ்வாறாகத்தான் பிறந்தோம்.
காஸாவின் புதல்விகளாய் புதல்வர்களாய்
மரணத்தைப் போர்த்தியபடிதான் நாம் பிறக்கிறோம்.
எனது மகளும் அவ்வாறேதான் பிறந்தாள்.
நாட்கள் அவளது வாழ்வில் முளைத்து, குருத்தெறியத் தொடங்கியிருக்கின்றன.
குண்டுவீச்சுகள், வெடிச் சத்தங்கள், மரண ஓலங்கள்
எல்லாவற்றையும் அவள் கேட்டாள்.
போரற்ற உலகில் தூங்கியெழும் மனிதர்
கேட்டிலர், தன் வாழ்நாள் முழுதிலும் இவளவையும்!

Continue reading “இவ்வாறாகத்தான் பிறந்தோம்.”

இயல்பு

எனது இதயத்தில் உயிரின் இழை இருக்கிறது என்கிறான்
ஒருவன்.
இரத்தக் குழாய் நதியின் ஓட்டத்தில்
உயிரின் படகு பயணிக்கிறது என்கிறான்
இன்னொருவன்.
இரண்டும் ஒன்றுதான் என்கிறாள் ஒருவள்.
எனது மனதின் சிறகு ஒடுங்கினால்
உடல் ஒரு சடப்பொருள் ஆகிவிடுகிறது.
அந்த வரண்ட உடலில் இதயம் இயங்கியென்ன
குருதிநதி குதித்து விழுந்து பாய்ந்தென்ன
மனதின் இறகில் அதன் பறப்பில்
கிறங்கும் என் வாழ்வை
உடல் காவுவதுவரை காவட்டும்.
வாழ்வின் மரணம் வானவில்லின்
நிறங்களாய் விரியும்
நினைவுகளை எழுதும்.
காலம் அதை மெல்ல மெல்ல
கலைந்தழிக்கும் நுண்கலையை அறியும்.
எல்லாம் காணாமல் போகும்.
புதிய புதிய வானவில்கள் தோன்றும்
இப் பிரபஞ்சத்தில்
காலம் பயணித்தபடி இருக்கும்,
எதுவும் நடவாததுபோல!

  • 28062024

எனது பெயரை எழுது அம்மா!

  • ஸைனா அஸாம்

காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர். குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதுகுறித்து “ஸைனா அஸாம்” என்பவர் எழுதிய இந்தக் கவிதை இதயத்துள் இறங்கி ஏதோ செய்தது. மொழிபெயர்த்திருக்கிறேன். (இந்தக் கவிதை வாசிப்பு காணொளி வடிவில் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. கவிதையின் இறுதியில் இணைப்பு உள்ளது).


எனது பெயரை எழுது அம்மா!

Continue reading “எனது பெயரை எழுது அம்மா!”

வெறுக்கிறேன்!

உணர்ச்சிவசப்படாதே என அறிவுரை கூறுவோர் மீது
வெறுப்பு வருகிறது,
உணர்ச்சி அறிவுக் கண்ணை மறைக்கும் என்பவர் மீதும்தான்!

உணர்ச்சிகளற்ற உடலும் மனமும் இறந்துபோவதற்குச் சமம்.
அறிவற்ற உடலுக்கு இந்த துரதிஸ்டம் வாய்ப்பதில்லை.
மகிழ்ச்சி கோபம் அழுகை சந்தோசம் என எல்லாமும் அறிவினுள் இருப்பதில்லை.
ஆதலால் நான் உணர்ச்சிவசப்படுவதை சுகிக்க ஆவலாக இருக்கிறேன்.

அதற்குள் ஓர் “மன்னிப்பு” என்ற வார்த்தை உறங்கியிருத்தல்கூடும்.
அது அறிவின் அளவுகோலால் ஆனது.
மனதின் ஆழத்திலிருந்து எழுந்துவரும் அந்த வார்த்தை ஒரு பிரசவத்தின் தொப்பூழ்க் கொடியோடு வாயிலிருந்து வெளிவருதலில் ஓர் உயிர் இருக்கும். அருகாமை இருக்கும்.
ஆதலால் அறிவையும் நான் சுகிக்க ஆவலாக இருக்கிறேன்.
அறிவையும் உணர்ச்சியையும் எதிரணியில் நிறுத்தும் உங்கள் வார்த்தைகளை நான் வெறுக்கிறேன்.

ஆசைப்படுகிறேன்

கிழக்கு என எதை நீ அறிவிக்கிறாயோ அது எனக்கு மேற்காய்த் தோன்றுகிறது
சூரியன் கிழக்கில் உதிப்பதாக நீ அறிவிக்கிறபோது அது மேற்கிலிருந்து எழுவதாய்த் தோன்றுகிறது.
ஒரு மாலைநேர சூரியன் இழுத்துப் போட்டிருக்கிற வானம் எனக்கு காலைக் காட்சியாகத் தோன்றுகிறது.
தோன்றுதல்களுக்காய் எனை நீ தண்டிக்கவும் செய்கிறாய்.
சொல்லித்தரப்பட்டவைகளை உன்போலவே நானும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விதிக்கிறாய்.
அதை என்னுடன் எடுத்துச் சென்று அடுத்த சந்ததியிடமும் கையளித்துக் கொண்டே இரு
போதித்துக் கொண்டே இரு என்கிறாய்.
கடவுளைக் காட்டி மிரட்டுகிறாய்.
மறுபிறவியைச் சொல்லி மிரட்டுகிறாய்
இருளைக் காட்டி மிரட்டுகிறாய்.
இருளற்ற வெளியில் ஒளிக்கு அர்த்தமேது
மனிதர்களற்ற உலகில் கடவுளுக்கு அர்த்தமேது.
வாழ்தல் அற்ற உலகில் மறுபிறவிக்கு அர்த்தமேது
யதார்த்தத்தை நம்பிக்கைகளால் இடம்பெயர்த்தல்தான் நீ கண்டுசொல்லும் வாழ்வு எனில்,
அது எனக்குத் தேவையில்லை.
மனதின் பிரபஞ்சத்தில் சுழன்று திரிய
நான் ஆசைப்படுகிறேன்.

பெப்ரவரி-4

இந்தக் கொடியை நான் எரிப்பதாயில்லை.
எரிப்பதாயின் முதலில் என் இலங்கை கடவுச் சீட்டை எரித்தாக வேண்டும்.
இந்தக் கொடியை நான் ஏற்றுவதாயில்லை.
ஏற்றுவதாயின் முதலில் பேரினவாதத்தை அவர்கள் இறக்கியாக வேண்டும்.
இந்தக் கொடிக்கு நான் நிறங்களும் தீட்டுவதாயில்லை.
தீட்டுவதாயின் முதலில் அவர்கள் என் தூரிகையைத் தரவேண்டும். !

Continue reading “பெப்ரவரி-4”

என்ன நடக்கிறது, இந்த உலகில்?

என்ன நடக்கிறது, இந்த உலகில்?
பல விடயங்கள் தெரியாது என
நினைத்திருந்தேன் – இப்போ,
எதுவுமே தெரியாது என உணர்கிறேன்.
வெளவாலை கூண்டில் நிறுத்தினார்கள்
வூகானை பிசாசுகளின் தீவாக அறிவித்தார்கள்
உலகின் வைத்தியசாலைகளில் மரணங்களை
திரையில் காட்சியாக்கினார்கள்.
என்ன நடக்கிறது, இந்த உலகில்?

Continue reading “என்ன நடக்கிறது, இந்த உலகில்?”

2022

இந்த வருடமும் கடந்து போகிறது
இன்றைய திகதியை வாசித்து முடிக்கமுன்னே அது
மற்றைய பக்கத்துக்கு திரும்பிவிடுகிறது -அது
குப்பைக் கூடையுள் நிறைவேறாத ஆசைகளுடன் மரணித்துவிடுகிறது.
ஒவ்வொரு நாளும்,
வேலைத்தளம் தூண்டில் போட்டு இழுக்கிறது.

Continue reading “2022”

வருவதாயில்லை!

எனது கல்வி தகைமையைக் கேட்கிறாய்,
கொடுப்புக்குள் சிரிக்கிறாய்.
என்னருகில் நின்று உயரத்தைப் பார்க்கிறாய்,
நீ உயரம் என்கிறாய்
மயிரற்றுப்போன எனது தலையைப் பார்த்து
உனது முடியை கோதிவிடுகிறாய்.

Continue reading “வருவதாயில்லை!”

பனி பொழிந்த நிலம்

வெண்முகில்களை சீவி
துருவலாய்க் கொட்டிக்கொண்டிருந்தாள் அவள்.
இலைகள் சருகுகளாய் உதிர்ந்து கொட்டியிருந்தபோது
மரங்கள் தமது அர்த்தத்தை இழந்திருந்தன – அப்போ
எனது கமராவை நான் உறைக்குள் புதைத்திருந்தேன்.
இப்போ உறைக்குள்ளிருந்து உருவி எடுத்தேன்.

Continue reading “பனி பொழிந்த நிலம்”