இந்த வருடமும் கடந்து போகிறது
இன்றைய திகதியை வாசித்து முடிக்கமுன்னே அது
மற்றைய பக்கத்துக்கு திரும்பிவிடுகிறது -அது
குப்பைக் கூடையுள் நிறைவேறாத ஆசைகளுடன் மரணித்துவிடுகிறது.
ஒவ்வொரு நாளும்,
வேலைத்தளம் தூண்டில் போட்டு இழுக்கிறது.
நாட்களின் சில்லு வேகமாகவே இயங்கத் தொடங்குகிறது.
அது இயந்திரத்துடன் என்னை பொருத்திவிடுகிறது.
சுற்றுச் சூழல் பற்றி நான் பேசுவதை கேலிசெய்கிறது.
பிளாஸ்ரிக் போத்தல்களை கக்கிகொண்டேயிருக்கும் ஓர் இயந்திரத்துக்கு
நான் தீனி போடத் தொடங்குகிறேன்.
மாதம் முடிய அது எனக்கு தீனி போடுகிறது.
வேலை வேலை வேலை !
முடிந்தபின்,
வீடு குளியல் சாப்பாடு பின் முகநூல் தொலைபேசி எல்லாமும்
தத்தமது பங்குக்கு நேரத்தை கொறித்துவிட்டு
எஞ்சுவதை
நித்திரைக்குத் தருகிறது.
புத்தக அலுமாரியை நெருங்கினால் உறுத்துகிறது.
ஆனாலும்,
புதிய புத்தகங்களை வாங்கிக் கொண்டே இருக்கிறேன்.
அடுத்த வருடத்துள்,
பலதை வாசித்து முடித்துவிட வேண்டும் என
ஓர் அரசியல்வாதிபோல் வாக்குறுதியை
எனக்கு நானே வழங்குகிறேன்.
‘முடியும் ஆனால் முடியாது’ என சொல்லிபடி
ஒவ்வொரு நாளும் கண்சிமிட்டிக் கடந்துபோகிறது.
பேசாமல் ஒரு புத்தகத்தை வாசிப்பதுபோல்
படத்தை எடுத்து முகநூலில் போட்டுவிட்டு
நித்திரைக்குச் செல்கிறேன்.
நாளை “இனிய புத்தாண்டு வாழ்த்து” என எழுதிவிட வேண்டும்!
- 31122021
- fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/6856989254372110