ஓர் இரசனைக் குறிப்பு
// 1988 இல் இப்படித்தான் எங்கள் ஊர் இருந்தது.
இப்படித்தான் எங்கள் வாழ்க்கை இருந்தது.
இப்படித்தான் நாங்கள் பேசினோம்.
இப்படித்தான் நாங்கள் மாண்டோம்.
இப்படித்தான் நாங்கள் உயிர் பிழைத்தோம்
என்பதை பால்யத்தில் நான் பார்த்து அனுபவித்த வாழ்க்கையிலிருந்து திரைக்கதையாக எழுதியிருக்கிறேன்//
– திரைக்கதையாளரும் இயக்குநருமான சோமீதரன்.
இந்த ‘இப்படித்தான்’களின் தொகுப்பில் ஒரு துளியை பேசியிருக்கிறது நீளிரா. எல்லா வெளிகளையும் மேய்ந்து, அலைச்சல் பட்டு, இரகசிகர்களையும் இழுத்துக் கொண்டு திரியாமல், ஒரு சிறிய கதையினூடாகவும், ஓர் இரவினூடாகவும், ஒரு குடும்பத்தினூடகவும், ஒரு வீட்டினூடாகவும் நீளிரா கண்களைச் சுற்றுகிறது. அதன் விரிவாக்கத்தை நினைவுகளும், அனுபவங்களும், உணர்வுகளும், அறிதல்களும், வரலாறும் என பல பரிமாணங்களில்; அவரவர் தளத்தில் புரிய வைப்பதில் இந்தப் படம் வெற்றிபெற்றுள்ளது. 1987 இலிருந்து 1989 வரையான இந்திய இராணுவ காலகட்டமானது 1983 இலிருந்து 2009 வரையான இலங்கை இராணுவ காலகட்டத்தின் இடைவெளிக்குள் சிக்குண்ட காலம். சமாதானப் படை என்ற பெயரில் வந்த இந்திய இராணுவத்தை தம்மை காக்க வந்த மீட்பர்களாகக் கண்ட மக்கள் வரவேற்று குதூகலித்தார்கள். அது ஒரு குரூரமான அனுபவத்துள் வீழும் என அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அது இப்படித்தான் வீழ்ந்தது.
அதில் ஒரு கதையை நீளிரா பேசுகிறது. போர்ப்பட்ட அந்த நிலத்தினது -பேசப்படாமல் இருக்கும்- கதைகள் பல. அவைகளையெல்லாம் அப்படி அப்படியே பேச முடியாத தடைகளும் பல. அதை நுண்மையாக கலை உத்தியால் உடைத்து உணர்வுகளில் தொற்றவைக்கிற ஒரு படைப்பை முன்வைத்தல் என்பது ஒரு கலைஞனுக்கான பெரும் சவால். குறிப்பாக தணிக்கைக் குழுவின் வரையறைகளுக்கும், அவர்தம் அரசிலுக்கும், தேசியப் பெருமிதங்களுக்கும், மனக்கட்டமைப்புக்கும் ஊடாக திரைப்படத்தை சிதையாமல் வெளியே கொண்டுவர வேண்டியிருக்கும்.
ஈழத்துக் கதைதான். ஆனாலும் இதில் சம்பந்தப்பட்டது இந்திய இராணுவம். படம் உருவாக்கப்பட்டதும் இந்தியாவில்தான். தமிழக பார்வையாளர்களில் பலரும் தமது சொந்த இராணுவம் குறித்தும் அதன் பெருமிதம் குறித்தும் அரசினால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களோடு குந்தி இருப்பவர்கள். விமர்சனபூர்வமாக இருப்பவர்கள் இவர்களிலிருந்து வேறுபட்ட பார்வையோடு படத்தை அணுகக்கூடியவர்கள் என்றபோதும், அவர்கள் சிறு பகுதியினராகவே இருக்கின்றனர். இவை எல்லாவற்றையும் உள்வாங்கி ஒரு படைப்பை முன்வைப்பது பெரும் சவால்தான். இதற்குள் ஒரு கலைஞன் படைப்பை சிதைக்காதபடியான சமரசங்களுக்கு வர வேண்டி ஏற்படும். நீளிரா படத்தை எழுதி இயக்கிய சோமீதரனுக்கும் அது நேர்ந்திருப்பதாகவே தெரிகிறது. அது ஒரு குறையல்ல.
ஈழத் தமிழ்ப் பேச்சுவழக்கில் (ஒற்றைப்படித்தானது இல்லை என்றபோதும்) எழுதப்படும் இலக்கியங்கள் மற்றும் கலைகளுக்கு தமிழகத்தில் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டிருக்கிற பரிச்சயம் அல்லது நெகிழ்ச்சித்தன்மை மிக வரவேற்கத்தக்கது. அந்த மொழிக் கையாளுகை இல்லாமல் நீளிரா உண்மைக்கும் புனைவுக்குமான இடைவெளியை நிரப்ப சிரமப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். அதை சோமீதரன் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.
“பேச்சுமொழிதான் முதன்மையான உத்தி. ஈழத்தைத் தொட்டுச் செல்லும் பல படங்கள் தமிழ்ச் சினிமாவில் வந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஈழ மக்கள் பேசும் அசலான பேச்சுமொழி பதிவானது இல்லை. இதில் என் மக்களே அதைப் பேசியிருக்கிறார்கள்” என்கிறார் சோமீதரன்.
ஒரு சிறு கிராமம். நாளை திருமண நிகழ்வு. ஒரு மகிழ்ச்சிப் பொழுது. அது இரவானாலும் பகலானாலும் அதே மகிழ்ச்சிதான். பயங்கரம் என்பதை எப்போதுமே இருள் இன்னொரு பரிமாணத்துக்கு அழைத்துச் செல்வதுண்டு. காரணம் இருளில் நம்மைச் சுற்றிய உலகம் அல்லது வெளி பார்வைப் புலத்தில் குறுக்கப்பட்டிருப்பதுதான். அப்படியான ஓர் இரவு மகிழ்ச்சியை அதிர்ச்சியுடன் எதிர்கொள்ள வைக்கிறது. பின் காலவெளியோடு சம்பவம் சம்பவமாக சிதைக்கத் தொடங்குகிறது. அடுத்தது என்ன நடக்கும் என ஊகிக்க முடியாத ஒரு நிலை தலைக்குள் கத்திபோல் தொங்கிக் கொண்டிருக்கும். அதை காட்சியாக்குவதில் இயக்குநரும் ஒளிப்பதிவாளர் பிரதீபன் செல்வரட்ணம் உம் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என சொல்லலாம். இருளில் படமாக்குவது ஒளியோடு போர் புரியும் செயல். இந்த படத் தொகுப்பை செய்த கலைஞை இளைய தலைமுறையைச் சேர்ந்தவர் (ராதா சிறீதர்) என கேள்விப்பட்டபோது ஆச்சரியமாக இருந்தது. சோமீதரனுக்கு முதல் படம் இது என்பது இன்னொரு வியப்பு.
பொதுவில் இராணுவத் தளபதிகள் மிக காட்டமானவர்களாக இருப்பார்கள். அப்படித்தான் இந்திய இராணுவத் தளபதிகளும் இருந்தார்கள். மிகச் சிலர் விதிவிலக்காக இருந்தார்கள். அந்த விதிவிலக்கானவர்கள் மனிதர்களாகவும் இராணுவமாகவும் இருந்தார்கள். இப் படத்தில் வரும் கப்டன் இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். இந்த இரட்டை நிலையை நவீன் சந்திரா தனது நடிப்பாலும் தோற்றத்தாலும் நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். பொதுமை என்பது விதிவிலக்குகளால் நிராகரிக்கப்படக் கூடாதது என்றபோதும், சமரசம் நிகழ்த்த வேண்டிய இடமாக இது சோமீதரனுக்கு அமைந்ததாகவே எனக்குப் பட்டது. இல்லையெனில் தணிக்கைக் குழு படத்தை வெளியிட தடையாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
அதேநேரம் விதிவிலக்குகளை பேசக் கூடாது என்றும் இல்லையல்லவா. அதை கலையில் பிம்ப அதிர்ச்சிகளை ஏற்படுத்துவதன் மூலம் சிந்தனையை தட்டும் செய்தியாக உருமாற்ற முடியும். வேறு பரிமாணங்களிலும் அந்தச் செய்தியை எடுத்துச் செல்ல முடியும். இத் திரைப்படத்தில் அது சில வசனங்களினூடாக நிகழ்ந்துதானிருக்கிறது. இராணுத்தைப் பார்த்து “போர் என்றால் சமாதானம் எங்கே இருக்கும்” என்பதும், “இப்படி நீங்கள் எத்தனை பேரிடம் மன்னிப்புக் கேட்பீர்கள்” என்பதும், “போர் எல்லாமே இரத்தக் களரியில்தான் முடிய வேண்டும் என்றில்லை” என்பதும் என அந்த செய்திகள் வரத்தான் செய்கின்றன. இந்திய இராணுவம் மோசமான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட செய்தியை மிக நுணுக்கமாக குறியீட்டு வடிவில் படம் சொல்லியிருக்கிறது. பெண்கள் எல்லோரும் தாம் அணிந்திருந்த உடைகளுக்கு மேலால், கிடைத்த உடைகளையைல்லாம் தாறுமாறாக அணிந்து நிற்கும் ஒரு காட்சி வருகிறது. பாலின ரீதியிலோ, தர்க்க ரீதியிலோ, பொருத்தமான உடை என்ற ரீதியிலோ எந்த நினைப்புமற்று அந்த உடைகளை அவர்கள் அணிந்து நிற்கிறார்கள். மிக நுட்பமான காட்சி அது.
ஒரு குழப்பமான கொந்தளிப்பான நிலையில் தனது இருத்தலுக்காகப் போராடுகிற சாத்தியங்கள் அற்றுப் போகிறபோது அந்த வெளியில் மனித மனம் துவண்டு போவது என்ற ஒற்றைப் பரிமாணம் மட்டும் பெறுவதில்லை. அதற்கு எதிர்நிலையிலான துணிவையும் வெறித்தனத்தையும் வெளிக் கொணரும் என்ற செய்தியை சில காட்சிகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. உளவியல் தளத்தில் ஒரு பெறுமதியை அவை உணர்த்தி நிற்கின்றன. அதேபோல பிள்ளைகள் எல்லாவற்றையும் விளையாட்டு துப்பாக்கிகளாக உருவாக்கும் செயல்களும், தாக்குதல் நடத்துவது போன்ற விளையாட்டுகளும் மிகச் சாதாரணமானதாக மாறுகிறது. இந்த அம்சங்கள் எல்லாம் உளவியல் ரீதியில் தனது இருத்தலுக்கான போராட்ட உந்துதலை வழங்கக் கூடியன. இது உளவியல் கோட்பாடு என்பதற்கு வலுச் சேர்க்கும் வகையில், ஆதாரங்களாகவும் நிகழ்வுகளாகவும் எமது மண்ணில் நடந்து முடிந்தவை. இந்தச் செய்திகளையும் படம் காட்சிகளினூடாகச் சொல்கிறது.
புலிகள் நிகழ்த்திக் காட்டிய கெரில்லாத் தாக்குதலின் முழுப் பரிமாணமும் அதை இந்திய இராணுவம் எதிர்கொண்ட கொந்தளிப்பான நிலையும் இன்னும் சிறப்பாக வெளிக்காட்டப் பட்டிருக்கலாம் என படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பொறி மூளைக்குள் தட்டியது.
தமிழக பிரபலங்கள் நடித்த படங்களுக்கு பல கோடி கொட்ட தயாராக இருக்கும் முன்னாள் இயக்க ஆதரவாளர்கள்கூட இந்தப் படத்துக்கு தயாரிப்பாளராக வரத் தயாராக இருக்கவில்லை என அறிய முடிகிறது. அதுவும் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் இது. ஈழத்து போர்ப்பட்ட வரலாறை பதிந்து வைக்கும் கதை என்றிருந்தும் கூட அவர்கள் பங்களிக்க முன்வரவில்லை. இந் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திக் சுப்புராஜ் இதன் தயாரிப்பாளராக வந்ததை இங்கு அழுத்தி சொல்லிவைக்கத்தான் வேண்டும்.
படத்தில் குடும்பமாக வரும் பாத்திரங்கள் உட்பட அநேகமாக எல்லோருமே தமது பாத்திரங்களை யதார்த்தத்தை அறுத்துவிடாத உடல் மொழியுடனும், பேச்சுடனும் வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள். ஓர் ஒன்றரை மணி நேரத்துள் கட்டிப்போட்டு வைத்த திரைப்படமாக இருந்தது. இந்தப் படத்தை பார்க்க வந்த -இங்கு பிறந்து வளர்ந்த- இரண்டாம் சந்ததியைச் சேர்ந்த சிலருடன் கதைத்தபோது அவர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருந்ததை அறிய முடிந்தது. எந்தவித அரசியல் பிரச்சார நெடியும் படத்தில் இல்லை. போர் பாதித்த மனிதர்களின் ஒரு தொகைக் கதைகளில் இது ஒரு கதை. அந்த மனிதர்களின் உயிர்வாழ்தலை நூலிழையில் கட்டித் தொங்கவிட்ட அந்த இரவு விநாடி விநாடியாக அரக்கி எலாஸ்ரிக் போல இழுபட்டு நீண்டு முடிகிறது.
நீண்ட இரவு… நீள் இரவு… நீள் இரா… நீளிரா!


