அமெரிக்காவின் இன்னொரு தவறான கணிப்பு ஈரான் மீதான போரை முன்னெடுத்திருப்பது ஆகும். ஏற்கனவே ஜேர்மன் எல்லையிலிருந்து ஒரு அங்குலம்கூட நேட்டோ நகராது என 1990 இல் கோர்பச்சேவுக்கு உறுதியளித்துவிட்டு, ரசிய எல்லைவரை நேட்டோவை நகர்த்தினார்கள். பிறகு ரசியாவால் ஐரோப்பாவுக்கு “பாதுகாப்பு அச்சுறுத்தல்” என கதையாடலை உருவாக்கினார்கள். ஆனால் அதன் உள்நோக்கம் ரசியாவை பலவீனப்படுத்துவது என்ற நிகழ்ச்சி நிரல் ஆகும். இதை பின்னாளில் வெளிப்படையாகவே பொதுவெளியில் ஐரோப்பிய தலைவர்கள் பேசும் நிலைக்கு வந்தார்கள். இந்த நோக்கத்தை ஏதோ மாதக் கணக்கினுள் செய்து முடித்துவிடலாம் என நேட்டோ உக்ரைனை வைத்து திரைமறைவில் களமடியது. ஆனால் ரசியா நீண்டகாலப் போருக்கு தயார் பண்ணிவிட்டே இறங்கியது. அதன் விளைவாக உக்ரைன்-ரசியா போர் தொடர்கிறது.
சென்ற ஆண்டு பொருளாதாரப் போரை அமெரிக்கா இதே வகைப்பட்ட தவறான மதிப்பீட்டோடு தொடங்கியது. “எல்லோரும் சமனற்ற வரி விதிப்பால் அமெரிக்காவை இதுவரை ஏமாற்றிவிட்டார்கள். எமது முன்னைய தலைவர்கள் முட்டாள்களாக இருந்துவிட்டார்கள். நான் அப்படி அல்ல. இனியும் அமெரிக்காவை மற்றைய நாடுகள் ஏமாற்ற முடியாது” என ட்றம்ப் ஒரு கதையாடலை உருவாக்கினார். ஆனால் அதன் உள்நோக்கம் அமெரிக்காவை மேவும் விதத்தில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் சீனாவை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்துவது என்பதே. அதனால் மற்ற நாடுகளை விட சீனாவுக்கு வரம்பு மீறிய வரியை விதித்து அந்தப் போரை நடத்தினார். இன்னும் முடியவில்லை. சீனாவோ இந்தப் போரை நீண்டகாலத்துக்கு உரியதாக மாற்றி அமெரிக்க பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இப்போ ஈரானிடம் வந்திருக்கிறது அமெரிக்கா. “அணுவாயுதம் செய்யும் நிலைக்கு ஈரான் வந்துவிட்டது. உலகுக்கு ஆபத்து” என கதையாடலை முன்வைத்தது. ஆனால் அதன் உள்நோக்கம் மத்திய கிழக்கில் இஸ்ரேலின் பிராந்திய வல்லரசுக் கனவுக்கு சவாலாக வேகமாக வளரும் ஈரானை அடித்து வீழ்த்துவது என்பதே. அத்தோடு G7 க்கு சவாலாக மேவி வரும் பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு, குறிப்பாக சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் ஒரு முக்கிய தூணாக இருப்பதால், அமெரிக்க நலன் அடிப்படையில் ஈரானை ஒரு வழி பார்த்துவிட வேண்டும் என்ற இரண்டாவது கள்ள நோக்கத்தையும் அமெரிக்கா கொண்டிருந்தது. இந்த இரு கள்ள நோக்கங்களையும் மனதில் வைத்து ஈரானில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை செய்ய இறங்கியது. ஆனால் ஈரான் ஒரு நீண்டகாலப் போருக்கான தயாரிப்பை கடந்த 40 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது என்பதையும், தலைமைகள் வீழ்ந்தால் உடனுக்குடன் பிரதியிடக் கூடிய அரச மற்றும் பாதுகாப்புக் கட்டமைப்பை பலமாக நிறுவி வைத்திருந்தது என்பதையும் அமெரிக்கா அறியாமலிருந்தது.
மறுபுறத்தில் தனது 40 ஆண்டுகால கனவை ட்றம்ப் சாத்தியப்படுத்த வந்திருப்பதாக நெத்தன்யாகு புகழாரம் சூட்டினார். ஏதோ ஓரிரு வாரங்களில் ஈரானை மண்டியிடச் செய்யலாம் என நினைத்த அமெரிக்கா ஆழமறியாமல் இன்னொரு சேற்றுள் கால்வைத்திருக்கிறது. நிலைமை எதிர்பார்த்ததுபோல் சுலபமாக அமையவில்லை. மாட்டிக்கொண்டிருக்கிறது. இப்போ தனது உலக மேலாதிக்க பவுசுக்கு பங்கம் ஏற்படாதபடி இந்தப் போரிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் தத்தளிக்கிறது.
அமெரிக்க மக்களில் 70 வீதத்துக்கு அதிகமானோர் இந்தப் போருக்கு எதிராக நிற்பதாக தரவுகள் சொல்கின்றன. இஸ்ரேலில் 80 வீதத்துக்கு அதிகமானோர் இந்தப் போரை ஆதரிக்கிறார்கள் என்பது மற்றொரு தரவு. இந்த கணக்கெடுப்பு என்பது எந்தளவு சரியானது என சொல்ல முடியாவிட்டாலும், அதிகமான அமெரிக்க மக்கள் போரை விரும்பவில்லை என்பதும் அதிகமான இஸ்ரேலிய மக்கள் போரை விரும்புகிறார்கள் என்பதும் இதற்குள்ளால் பெறப்படுகிற முடிவு ஆகும். “இந்தப் போர் எமது போரல்ல. இஸ்ரேலின் போர். எதற்கான எமது இராணுவம் பலியாக வேண்டும்” என அமெரிக்க மக்கள் கேட்கிறார்கள். அமெரிக்காவின் எல்லா நகரங்களிலும் வீதிக்கு வந்து குரல்கொடுக்கிறார்கள். “அமெரிக்கா ஒரு சரியான திட்டமிடலுடன் இந்தப் போரை தொடங்கவுமில்லை. எவ்வாறு இதிலிருந்து வெளியேறுவது என திட்மிடவுமில்லை” என இராணுவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். காரணம் “இது அமெரிக்காவினது போர் அல்ல” என்கிறார்கள் அவர்கள்.
ஆப்கான் போரையும் ஈராக் போரையும் தவறானது, தேவையில்லாமல் எமது இராணுவத்தை பலிகொள்ள வைத்த முட்டாள்தனம் வாய்ந்தது என்றும், பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தின என்றும் ட்றம்ப் இந்தப் போர் தொடங்கும் வரை விமர்சித்துக் கொண்டிருந்தவர். இப்போ தவிர்க்க முடியாமல் அதே வழிமுறையில் ஈரானை அணுக விழைகிறாரா என்ற கேள்வி எழும்புகிறது. ஈரான் க்குள் அல்லது அதன் எரிசக்தி இதயமான கார்க் தீவுக்குள் அமெரிக்க இராணுவம் கால்வைக்கப் போகிறதான சாத்தியப்பாடுகள் பற்றி பலமாக விவாதிக்கப்படுகிறது. இன்னொரு கோணத்தில் மத்திய கிழக்கு அடிவருடி நாடுகளுடன் சேர்ந்து ஹோர்மூஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலலாம் என்றும் விவாதங்கள் எழுந்துள்ளன.
எது எப்படியோ இந்த அணுகுமுறை எல்லாமே ஈரானுள் காலடி வைப்பதாகவே அர்த்தப்படும். அப்படி கால்வைத்தால் நீண்ட காலத்துக்கு மீள முடியாத சேற்றுள் அமெரிக்கா அகப்பட்டதாகவே அமையும். ஏற்கனவே பொருளாதார ரீதியில் சவாலை எதிர்கொண்டிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரம் பலமான அடியை சந்திக்க நேரும். 2003 ஈராக் போரில் மட்டும் அமெரிக்கா 4 திரில்லியன் டொலரை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஈராக்கைவிட பல மடங்கு பலம் பொருந்திய ஈரானின் இராணுவக் கட்டைப்பும், ஏவுகணை மற்றும் ட்றோண் தொழில் நுட்பமும், பெருநிலப் பரப்பும், மலைகள் கொண்ட நில அமைவும் அமெரிக்க இராணுவத்துக்கு இன்னும் கடினமான காலங்களையும் இழப்பையும் பரிசளிக்கும். அதேநேரம் பலம்பொருந்திய அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலுக்கு ஈரான் மக்கள் பெருமளவு விலைகொடுக்கவும் நேரும். அழிவுகள்தான் எஞ்சும்.
உலகப் பொருளாதார கட்டமைவில் ஏற்படக்கூடிய தாக்கத்தைப் பொறுத்தளவில் யூகோஸ்லாவியா, ஈராக், ஆப்கான், லிபியா, உக்ரைன் போர்களைப் போலல்ல ஈரான் போர். உலக இயக்கத்தின் இதயமான எண்ணெய் மற்றும் எரிசக்தி வளத்தை மோசமாக பாதிக்கக் கூடிய போர் இது. இந்த 26 நாட்களுக்குள்ளேயே அந்த நெருக்கடி பல்வேறு வடிவில் உலக மக்களின் வாசல்படிவரை வந்துள்ளது. எனவே இந்தப் போரை நீண்ட நாட்கள் இழுத்தடிக்க முடியுமா என்ற கேள்வி பலமானதாக உள்ளது.
அமெரிக்கா ஈரானுக்குள் கால் பதித்தால் இந்த கால முரணுக்குள் அகப்பட்டு நசிபடும். எதிர்காலத்தில் தோல்வியை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு வெளியேற நேரும். அதையும்விட இப்போது “நாம் போரில் வென்றுவிட்டோம்” என அமெரிக்கா ஒரு கதையாடலை உருவாக்கி வெளியேறுவது சுலபம். “எல்லா தலைவர்களையும் கொன்றுவிட்டோம், ஈரானின் ஏவுகணை தயாரிப்பு நிலையங்களை அழித்தொழித்து விட்டோம், யூரேனியம் செறிவூட்டும் அணுசக்தி நிலைகளை இயங்கமுடியாதபடி புதைத்துவிட்டோம், எமது எரிசக்தி தேவைக்கு ஹோமோஸ் நீரிணை முக்கியமானதல்ல. அதற்குரியவர்கள் அதைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்றவாறான கதையாடலை உருவாக்கிவிட்டு தப்பிச் செல்வது எல்லோருக்கும் நல்லது. இவையெல்லாவற்றையும் ட்றம்ப் ஏற்கனவே பேசிப் பேசி மறந்து மறந்து விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்.
நெத்தன்யாகுவோ தனது கனவு மெய்ய்பட கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் ட்றம்ப் இந்தப் போரிலிருந்து வெளியேறவிடாமல் பார்த்துக் கொள்வதில் கவனமாகவே இருக்கிறார். மறுபுறத்தில், தற்காலிக போர் நிறுத்தம் என்பது மீண்டும் தமக்கெதிரான தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்காது எனவும், அதனால் நிரந்தரமாக ஈரான் மீது போர் தொடுக்க மாட்டோம் என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா தர வேண்டும், அன்றேல் பேசிப் பயனில்லை என்கிறது ஈரான். தனது இருப்புக்கு அச்சுறுத்தல் இருக்கக் கூடாது என்பது அதன் அர்த்தம்.
இந்தப் போரில் ஐரோப்பியர்கள் மற்றும் நேச பாச நாடுகளான யப்பான், அவுஸ்திரேலியா என்பன இதுவரை பங்குபெற மறுத்துள்ள நிலைதான் உள்ளது. ஸ்பானியாவைத் தவிர, இவர்களை நம்ப முடியாது. இவர்கள் ஏற்கனவே நேட்டோ பெயர்ப்பலகையின் கீழ் நிகழ்த்திக் காட்டிய போர் வரலாறுகளிலிருந்து பெறப்படக்கூடிய பாடம் இதுவாகும். யூகோஸ்லாவியா, லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் என அவர்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து ஆடிய ஆட்டம் அந்த நாடுகளை சிதைத்து சின்னாபின்னமாக்கியது. அவை முன்பிருந்த நிலையைவிட மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டன.
ஏற்கனவே ட்றம்ப் ஐரோப்பாவை கைவிட்டது போன்ற தோற்றம் என்பது அவர்களுக்கு இடையில் ஒரு விரிசலை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்குமான நிரந்தர விரிசலாக இருக்க சாத்தியமில்லை. ஏனெனில் இரு தரப்புக்கும் நேட்டோ என்ற இராணுவ வல்லாதிக்க கருவியாக செயற்படுபவை. அடிப்படையிலேயே இந்தப் போர்களுக்கான மனநிலையை பேணிவைத்திருப்பது காலனிய மனோபாவமும், வெள்ளை மேலாதிக்கமும்தான். அதை காக்கும் கருவி நேட்டோ அமைப்பு. அவைகளுக்கு வெளியில் எந்த நாடும் வல்லரசாக வருவதையோ, பொருளாதார தொழில்நுட்ப ரீதியில் மேவுவதையோ, வேறு எந்த வடிவிலும் ஆதிக்கம் செலுத்துவதையோ அந்த மனநிலை சகிப்பதில்லை. எனவே ஐரோப்பா இந்தப் போருக்கு எதிராக நிற்கிறது என்பதற்கோ, தேவைப்படும்போது அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரானை சேறாட மாட்டார்கள் என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை.
உயர் நாகரிகம் அடைந்தவர்கள் தாம் என்ற கதையாடலை உருவாக்கி இப்போதுவரை அதைப் பேணும் காலனிய மனநிலை அவர்களிடம் இன்றும் தொடர்கிறது. மனிதநீக்கம் (dehumanisation) செய்கிற கதையாடல்களை உக்ரைன் போரின் போதும் கேட்டோம். காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட எல்லா கொடுமைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கமாஸ் 1200 இஸ்ரேலியர்களைக் கொன்றதை முன்தள்ளிய கதையாடலின் போதும் அதைக் கேட்டோம். ஆனால் ஈரானில் 168 பள்ளிச் சிறுவர்கள் மீது அமெரிக்கா வேண்டுமென்றே குண்டுவீசிக் கொன்றபோதும், இருபதினாயிரம் சிறுவர்கள் உட்பட 70000 க்கு மேற்பட்ட பலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய சியோனிச அரசால் கொல்லப்பட்டபோதும் அமெரிக்காவையோ இஸ்ரேலையோ யாரும் ‘மனிதநீக்கம்’ செய்து பேசுவதில்லை. இந்தப் போரில் இதுவரை ஈடுபடாத ஐரோப்பிய நாடுகளும் அப்படிப் பேசுவதில்லை. குறைந்தபட்சம் கண்டனங்கள் கூட தெரிவிப்பதில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களை குற்றப்படுத்துவதையே தொடர்ந்து செய்கிறார்கள்.
இஸ்ரேல் அணுவாயுதம் வைத்திருப்பதையோ, அதை IAEA பரிசோதிக்க அனுமதிக்காமல் இருப்பதையோ பேசாத நாடுகள் மேடைக்கு வந்து “ஈரான் அணுவாயுதம் வைத்திருக்கக் கூடாது” என பேச என்ன அறம் இருக்கிறது. அணுவாயுதத்தை வைத்திருக்கும் நாடுகள் அதைப் பேசுவது இன்னும் நகைச்சுவையாக இருக்கிறது. இப்போது அணுவாயுதம் வைத்திருக்கும் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் கேட்டா செய்தன. அல்லது ஐநாவைத் தன்னும் கேட்டா செய்தன. அணுவாயுதம் செய்யக் கூடிய எல்லா வளத்தையும் தொழில்நுட்பத்தையும் எட்டிய ஈரான் இதுவரை அதை செய்யாமலிருந்தது. இந்தப் போரும் அதன் பின்னான கெடுபிடிகளும் ஈரானின் இருப்பு மீது தொடர்ந்து அச்சுறுத்தலலாக மாறினால், எதிர்காலத்தில் ஈரான் அணுவாயுத தயாரிப்பை நோக்கி தள்ளப்பட சாத்தியம் உண்டு. “பலமற்ற நாடுகளின் பலம்” அணுவாயுதம் என வடகொரிய அதிபர் சொல்வது ஒன்றும் பயமுறுத்தல் அல்ல. பாதுகாப்பு!
கடந்த வருடம் 2025 ஆனி மாதமும் மற்றும் இவ் வருடம் பெப்ரவரி கடைசியிலும் நடந்த இரு வெவ்வேறு பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படும் நிலை கனிந்து வரும்போது, திடீரென சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்கா -இரண்டு சந்தர்ப்பங்களிலும்- ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியது. முதுகில் குத்திய சம்பவங்கள் இவை என ஈரான் வெளிநாட்டமைச்சர் இதை விபரித்திருந்தார். பெப்ரவரி கடைசி பேச்சுவார்த்தையில் எல்லாம் பேசி ஒரு தீர்வுக்கு அருகில் வந்துவிட்டதான திருப்தியில் இருந்தபோது, மறுநாள் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என -பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்து நடத்திய- ஓமான் வெளிநாட்டமைச்சர் வெளிப்படையாகவே கூறினார். ஆக அமெரிக்கா விரும்பியது தீர்வை அல்ல. இஸ்ரேலின் நிகழ்ச்சிநிரலை அமுல்படுத்தவே என்பதுதான் அதன் அர்த்தம்.
அதனால் “சீனா, ரசியா, இந்தியா போன்ற பலம்பொருந்திய நாடுகள் ட்றம்ப் உடன் நேரடியாகவே தொடர்பு கொண்டு கறாராக ஒன்றைத் தெரிவித்துவிட வேண்டும்” என்கிறார் உலகின் முன்னணி அரசியல் விமர்சகர் ஜெப்ரி ஸாக்ஸ். “இந்தப் போர் உலகத்தில் எல்லோரையும் பாதிக்கிற விடயம். அதைச் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை. அது எம்மையும் பாதிக்கிறது. உலகில் உள்ள எல்லா நாடுகளையும் பாதிக்கிறது. இன்னொரு உலகப் போரில் போய் முடிவடையக் கூடிய ஆபத்தும் கொண்டது. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்” என அழுத்திச் சொல்ல வேண்டும் என்கிறார் அவர். இது அவர்களின் கடமை. மவுனமாக இருக்கக் கூடாது என்கிறார்.
பதவியேற்ற நாளிலிருந்து ஈரான் போர் வரை மாத்தி மாத்தி கதைக்கும் ட்றம்ப் இன் கோமாளித்தனம் உலகம் அறிந்தது. அவரது நடவடிக்கைகளையும் பேச்சுக்களையும் ஆதாரமாக கொண்டு, அவை டிமென்ஸியா நோயின் அறிகுறிகள் என உளவியல் நிபுணர்கள் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெப்ரி ஸக்ஸ் இத் தகவலை சில பேட்டிகளில் தெரிவித்து வருகிறார். கோமாளித்தனமோ டிமென்ஸியாவோ என்ன கோதாரியோ அவையாவது இந்தப் போரை நிறுத்தச் சொல்லி ட்றம்ப்பின் மண்டைக்குள் சொல்லிவிட்டால் பெரும் உதவியாக இருக்கும். உலகம் நிம்மதியாக இருக்கும்!
- ravindran.pa
- 27032026
- Thanks for image: VictorStock
