ஹிப்பி

1970 களில் எமது விடலைப் பருவத்தில் ஹிப்பி பற்றிய செய்திகளை வாசித்தும் கேட்டும் அறிந்தேன். அவர்களை சடை வளர்ந்த தலையுடன், கசங்கிய உடையுடன், வாழ்க்கை வெறுத்த மனிதர்களாக, போதைப் பொருள் பிரியர்களாக வெள்ளைநிறத்துடன் ஒரு தோற்றத்தை வரைந்துகொண்டேன். பின் யாழ் நகரில் அந்த மனவரைவுத் தோற்றத்தில் ஒருசிலரை அப்படி பார்த்தேன். அவர்கள் ஹிப்பிதானா இல்லையா என எனக்கு இப்போதும் தெரியாது. 80 களின் ஆரம்பத்தில் கொழும்பில் பார்த்த உருவம் எனது மனவரைவை தோற்றத்தில் மட்டும் செழுமைப்படுத்தியிருந்தது. பின்னரான காலத்தில்தான் அவர்களின் எதிர்க் கலாச்சார எழுச்சி பற்றி அறிந்துகொண்டேன்.

அரைத்த மாவையே அரைக்கும் சமூக நியமங்களை மீறுபவர்களையும், பண்பாடு ஆணியடித்த மூளை பதிந்துவைத்திருந்த ஒழுங்குவிதிகளின் ஆணியை பிடுங்கி எறிபவர்களையும் இந்த உலகமும் ஊடகங்களும் எமக்கு அறிமுகப்படுத்துகிற அழகு அத்தகையது.

சுவிசுக்கு வந்தபின் ஒட்டோனம் குழுவினரில் ஹிப்பியை நான் கண்டேன். ‘கட்டுக்காயள்’ என ஒரே விழிப்பில் அடித்துவீழ்த்தும் தமிழர்களின் அறியாமையை அவர்களுடன் நாம் (மனிதம் குழு) பழகியபோது உணர்ந்தோம். 80 களில் தமிழர்களை வேண்டாத விருந்தாளிகளாக மட்டுமல்ல நிறவெறியோடும் இழிவுபடுத்தல்களோடும் நாசிக் குழுக்களும் சில ஊடகங்களும் பொதுமனித மனநிலையும் ஓரம் கட்டி வைத்திருந்த காலம் அது. அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட தமிழர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப அரசு முயன்றபோது, அதை எதிர்த்து நடாத்திய ஊhவலத்தில் முன்னணியில் அவர்கள் தீவிரமாக கோசமெழுப்பி தமது எதிர்ப்பை ஓங்கி ஒலித்தார்கள்;. இதில் நாம் (மனிதம் குழு) பங்குபற்றியிருந்தோம். இடதுசரியச் சிந்தனை கொண்டவர்களாகவும் சமூகப் புத்திஜீவிகளாகவும் சர்வதேச மனிதர்களாகவும் வாழும் அவர்கள் மீது ஈர்ப்பு வந்தது. 60,70 களில் நடந்த ஹிப்பி கலாச்சார எழுச்சியின் ஒரு நீட்சியாக அவர்களை நான் பார்த்தேன்.

அண்மையில் அய்யனார் விஸ்வநாத் அவர்கள் எழுதிய நாவலின் தலைப்பு ஹிப்பி என்று இருந்தபோது, அதை வாசிக்கும் ஆர்வமும் மேலிட்டது. ஆனால் ஏமாற்றமே கிடைத்தது. வாசிக்கவேண்டிய ஒரு நல்ல நாவல் அது. ஒரு விளிம்புநிலை மாந்தராக இருந்த ஆட்டோ ஓட்டுநருக்கும் ஹிப்பி என இன்று அடையாளப்படுத்தப்படும் ஒரு வெள்ளைக்காரக் குழுவுக்கும் இடையில் ஊடாடும் கதை நாவலின் ஒரு பகுதி மட்டுமே. நுட்பமான எழுத்து. கட்டற்ற போதை, திறந்த பாலியல் வாழ்வு, திருவண்ணாமலை இயற்கையின் உலகம் என ஒரு வழியில் பயணிக்கும் கதையும், ஆட்டோ ஓட்டுநரின் விளிம்புநிலை வாழ்வின் குடும்ப சிக்கல்களோடு பயணிக்கும் கதையும், அவனின் கடந்துபோன கால நினைவுகள் என இன்னொரு கதையுமாக முடிவில் சந்திக்கும் புள்ளியில் நாவல் முடிகிறது.

இதில் விளிம்புநிலை மனிதனான ஆட்டோ ஓட்டுநரின் வாழ்வு மையக் கதை. அதில் இடையீடு செய்யும் இடம்தான் தற்கால ஹிப்பிகளை அவன் சந்தித்து பெற்ற அனுபவம். அந்த அனுபவம் அவனது மனநிலையில் தாக்கம் செலுத்தியதா என கேள்வியை போட்டுவைக்கும் அவனது திருமணம் சம்பந்தமான முடிவு என நாவல் நகர்கிறது. இது ஹிப்பியின் கதை அல்ல.

ஹிப்பி எனப்பட்டவர்களில் அவர்களில் பல வகையான குழுக்கள் இருந்தபோதும் அவர்களின் அடிப்படையான மைய சிந்தனை போரொதிர்ப்பும் சமாதானமும் சுதந்திரமும் கொண்ட எதிர்க் கலாச்சார உள்ளுடனாக இருந்ததுதான் வரலாறு. plastic Hippie எனப்பட்டவர்கள் ஹிப்பி எழுச்சியின் வேர்களை பிரதிபலிக்காதவர்களாகவும் மேலெழுந்தவாரியான எதிர்க்கலாச்சாரப் பண்பை கொண்டிருந்தவர்களாகவும் அக் காலகட்டத்தில் இருந்தார்கள். அவர்களின் வாரிசுகளும் ஆன்மீகத் தொடர்பினூடாக சுதந்திரத்தை நாடி -இந்தியப் பக்கமாக அள்ளுப்பட்ட- Freaks and Heads ஹிப்பிக் குழுவின் வாரிசுகளுமே தற்காலத்தை ஹிப்பிகளாக உருமாறி வீழ்ச்சியடைந்து கிடக்கின்றனர். இந் நாவலில் வருகிற இன்றைய ஹிப்பிக் குழுவை இவர்களின் தொடர்ச்சியாகவே நான் காண்கிறேன். (மற்றைய முக்கியமான குழுக்களின் வரலாற்றுப் பாத்திரம் இரண்டு சதாப்தங்களுடன் முடிவுக்கு வந்திருந்தது.)

ஹிப்பி என்ற தலைப்பு ஏற்படுத்திய குழப்பத்தால் அந்த நாவல் என்னை ஏமாற்றியதான உணர்வு வந்தது. தலைப்பை பிடுங்கி எறிந்துவிட்டு நாவலை மதிப்பிடுகிறபோது சிறியதாக இருந்தாலும் ஒரு நல்ல நாவலாக தெரிகிறது. இத் தலைப்பை எழுத்தாளர் அன்றி இதை வெளியிட்ட ஸீரொ டிகிரி சாருதான் கொடுத்திருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது. கஞ்சாவும் கட்டற்ற போதையும் திறந்த பாலியலும் நாவலின் கருப்பொருளையும் மீறி அவருக்கு கிளுகிளுப்பை ஊட்டியிருக்கலாம் என குறுக்குமறுக்காக யோசிக்க வைத்தது. உண்மை தெரியாது. ஆனால் விஸ்வநாத் அய்யனார் இவை எல்லாவற்றையும் நாவலினுள் விபரிக்கிற எந்த இடத்திலும் அதை கிளுகிளுப்பாக்கும் நோக்கமோ சொல்விளையாட்டோ காட்டவில்லை. எழுத்தை அவர் ஆள்வதில் வெற்றிகண்டிருக்கிறார்.

  • 08052023

Leave a comment