காலத்தைக் கைப்பற்றிய நூல் !
வன்னிப் போர்க்களத்தை குறுக்கறுத்து அதன் அவலத்தை முன்வைக்கிற நூல் இது. புகைப்பட ஊடகவியலாளர் அமரதாஸ் இன் 400 பக்கங்களைக் கொண்ட இந் நூலில் உள்ளடக்கப்பட்டிருக்கிற இந் நிழற்படங்கள் கறுப்பு வெள்ளை என சொல்லப்படுகிற சாம்பல்நிற (grey) வடிவில் உள்ளன. A4 தாள் அளவீட்டில் வந்திருக்கிறது. இது ஒரு வரலாற்று ஆவணமாக பார்க்கப்படக் கூடியது. புலிகளின் நிழல் அரசு கட்டியமைக்கப்பட்டிருந்த வன்னி பிரதேசத்துள் ஒரு சுயாதீன புகைப்பட ஊடகவியலாளராக அமரதாஸ் இருக்க முடிந்தது ஒரு அதிர்ஷ்டம்தான்.
போர்க்கள படப்பிடிப்பு சூழல் என்பது உயிர் ஆபத்து நிறைந்தது மட்டுமல்ல, உளவியல் தாக்கங்களையும் ஏற்படுத்த வல்லது. உயிர் அறுந்து போகிற அல்லது மோசமாக காயப்பட்டு தவிக்கிற மனிதர்களை படம்பிடிப்பது ஓர் உளவியல் சித்திரவதை. அத்தோடு தன்னுடன் இருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் மரணம் மிகப் பெரும் மனச்சோர்வையும் விரக்தியையும் தரக்கூடிய நிலையில் கமராவை ஏந்தி நிற்பது இலகுவானதல்ல. அத்தோடு ஒவ்வொரு படத்தையும் எடுப்பதற்கான கால அவகாசம் என்பது பல வேளைகளில் கணப்பொழுதுகளாகவே அமைந்துவிடுகின்றன. இவைகளையெல்லாம் எதிர்கொண்டு, மக்களோடு தானும் இடம்பெயர்ந்து, காயப்பட்டும் தனது சகோதரனையும் அவரது மகனையும் போர்க்களத்தில் பறிகொடுத்தும் அலைந்து திரிந்து எடுக்கப்பட்ட படங்களிலிருந்து தேர்வுசெய்து இந் நூலை வடிவமைத்துள்ளார் அமரதாஸ்.
உள்ளடக்கம்
போர்க்கள காட்சி மீதான ஒரு மனவோட்டத்தோடு நூலை திறக்கிறபோது எழும் இருண்மை மனநிலையை நூல் ஒளியால் விலக்குகிறது. நூலின் முதல் பக்கங்கள் ஒளிநிறைந்த மனவெளியில் வியாபிக்கிற அழகியலை வெளிப்படுத்துகிறது. அது குழந்தைப் பருவத்தின் வியாபகம். தூரத்தே தமை நோக்கி வந்துகொண்டிருக்கும் போரை அறியாதவர்களாய் மரத்தில் ஏறி மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டு நிற்கிறார்கள், குழந்தைகள்!. இந்த பக்கங்கள் விலக இடையில் ஒரே களபரமாகத் தொடர்ந்து, நூலின் முடிவு புயலடித்து ஓய்ந்துபோன ஒரு வாழ்வுச் சாம்ராச்சியமாக மௌனமாக கலைகிறது.
போர் தொலைவிலிருந்து வன்னிக்கு வந்துகொண்டிருக்கிறது. குழந்தைகள் விளையாடி மகிழ்ந்திருக்கிறார்கள். போர் நெருங்குகிறது. இடப்பெயர்வு தொடங்குகிறது. கிடுகோ தகரமோ ஓடோ எல்லாவற்றையும் தமது வீட்டின் கூரையை பிரித்து எடுத்துச் செல்ல ஆயத்தமாகிறார்கள். எடுத்துச் செல்கிறார்கள். சமையல் பாத்திரங்கள் கோழிக் கூடுகள் செல்லப் பிராணிகள் என மொத்தமாக இடம்பெயர்க்கிறார்கள். போர் அருகில் வருகிறது. அவர்கள் தங்குமிடங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. காவிச் செல்லும் பொருட்களின் அளவு படிப்படியாகக் குறைகின்றன. தரப்பால்கள் முளைக்கின்றன. நீருக்கான தேடலில் தண்ணீர்க் குடங்களுடன் அலைகிறார்கள். உணவுப் பண்டங்களுக்கான தேடலில் அலைகிறார்கள். பின் போர் அவர்கள் தலைமேல் கவிழ்கிறது. மரணம், ஓலம், தற்காலிக வைத்தியசாலைகள், பங்கர்கள் என எல்லாமும் வாழ்வியலாக மாறுகிறது. எடுத்துவந்த பொருட்களில் எஞ்சியவையும் இல்லாமல் போகின்றன. இந்த வாழ்வியல் அல்லது நிலைமை மாற்றங்களை அமரதாஸ் இன் கமராக்கள் ஒரு தொடராக படம்பிடித்திருக்கின்றன. நூல் தொகுப்பும் அதே கால ஒழுங்கில் தொகுக்கப்பட்டிருக்கிறது.
Amarathas
இந்த படங்களை எப்படி பார்ப்பது – வாசிப்பது
- பார்ப்பது
Surface View என்பது விம்பம் அல்லது மேற்தளக் காட்சி. பார்வைப் புலத்தில் நிறுத்தி சம்பவங்களை அல்லது செய்தியை சொல்கின்றன. அதன் உயர்ந்த கட்டம் படம் சார்ந்த கதையை சிந்தனையில் உருவாக்குதாக இருக்கலாம். - வாசிப்பது
அது சொல்ல வருவதை காண்பது அல்லது கதையை தாண்டி கருத்தை புரிந்துகொள்வது. ஒரு தேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர் நடந்த கதையை சொல்வதையும் தாண்டி, கதை உடனான படத்தின் உறவை வெளிப்படுத்த வேண்டும். விம்பம் அல்லது மேற்தள காட்சிகளை வெளிப்படுத்தும் நிழற்படங்கள் இதை சாதிக்காது. சில சந்தப்பங்களில் படத்தில் காண்பிக்கப் பட்டிருப்பதை விடவும் சம்பவங்கள் கூடிய விளைவை ஏற்படுத்தியிருத்தல் கூடும்.
அறம், பொறுப்புணர்வு
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விடவும் பெறுமதியானது என்பர். இது எப்போதுமல்ல. நாங்கள் பல தளங்களிலான காட்சி வெளிப்பாட்டு யுகத்தில் வாழ்கிறோம். காணொளியோ நிலைக்காட்சி படங்களோ நல்லதையும் தர முடியும். தீங்குவிளைவிக்கவும் முடியும். உள்ளடக்கத்துக்கு வெளியே போய் மூளைச்சலவை செய்யும் எண்ணற்ற காட்சி உருவாக்கங்கள் வருகின்றன. குறிப்பாக போர்களில் வெற்றி அல்லது தோல்வியை நிறுவிக் காட்டவோ, முரண்பாடுகளை கூர்மைப்படுத்தவோ அவைகளால் முடியும். அதனால் சமூகம் சார்ந்த புகைப்பட கலைஞர்களுக்கு -எழுத்தாளர்களுக்கு தேவையானது போன்று- பொறுப்புணர்வு இருக்க வேண்டும், அறம் இருக்க வேண்டும். அமரதாஸ் அதை பேணியிருக்கிறார்.
காட்சி ஊடகவியல் அறம்
24 மணிநேரமும் ஓடும் (போர்க்கள) செய்திச் சுற்று படிப்படியாக உணர்ச்சிகளை மரத்துப் போகச் செய்துவிடுகின்றன. போர்க்கள கொலைகளினதும் அழிவுகளின் மீதும் ஒருவித நுகர்வு மனநிலையை, கொசிப்புத்தன்மையை ஏற்படுத்த வல்லது. அதற்கான தகவல் அவாவை அது ஏற்படுத்தும். பிரக்ஞையை பின்னுக்குத தள்ளுகிற இந்த நுகர்வுத் தன்மைக்கு தீனி போடுவது இந்த செய்தித் தொடர்கள்.
அவை உண்மைகளை கொண்டிருக்கலாம். பொய்களையும் கொண்டிருக்கலாம். பார்வையாளர் தனக்கான சுயசிந்தனை அல்லது பகுப்பாய்வுக்கான நேரத்தை எடுத்துக்கொள்ள விடாது. தமது கருத்துநிலை அல்லது நோக்கம் சார்ந்து பார்வையாளரை மந்தை நிலைக்கு இட்டுச் செல்லும். அதன்மூலம் ஒருவித மூளைச்சலவையை அது ஏற்படுத்தியபடி இருக்கும். அதனால் அவை மட்டுப்படுத்தப்பட்ட ஊடகவியல்; பெறுமதியைக் கொண்டவை. அவை அறம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
ஒரு சமூக ஊடகவியலாளரால் மேற்படி குரூரங்கள் மீதான பசிக்கு தீனி போடுவதை தவிர்க்க முடியும் அல்லது தடைபோட முடியும். சமூகத்தை புத்தாக்கமான உணர்வுத் தளத்துக்கு இட்டுச் செல்ல உதவ முடியும்.
தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமல்ல!
ஒரு நல்ல புகைப்படம் என்பது காட்சிகளின் வெளிப்பாடுகளை விட கருத்துகளின் வெளிப்பாடு என சொல்லப்படுகிறது. அதனால் போர்க்களத்தில் புகைப்பட உருவாக்கத்திலுள்ள உண்மையான சவால் என்னவெனில் கொடுமையின், துயரத்தின், வன்முறையின் அர்த்தமற்ற தனத்தின் மீதான கருத்துகளை எண்ணத்தை படம் பிடிப்பதுதான். அதற்கு படம் எடுத்துக்கொண்டிருக்கிற ஒருவருக்கு இந்தப் போர்களை முன்தள்ளுகிற அல்லது நடத்துகிற காரணிகள் குறித்தான தெளிவு வேண்டும். இந்த அறிவுதான் இந்த போர்க்களத்தின் அல்லது முரண்பாடுகளின் மீதான பார்வைக்கோணத்தை அல்லது உட்பொருளை அதுவயப்பட்ட கருத்தை அதன் மேற்தளத்தைத் தாண்டிய பார்வைக் கோணத்தில் படம்பிடிக்க உதவும்.
கருத்து வெளிப்பாட்டு உத்தி
உதாரணமாக பக்கம்.126 இல் பின்புலத்தில் ஒரு விளம்பரத் தட்டி (கட் அவுட்) இருக்கிறது. இந்தத் தட்டிக்கு முன்னால் ஒரு லாண்ட மாஸ்ரரில் ஒரு இளம் ஆணும் இளம் பெண்ணும் இடம்பெயர்ந்து போகிறார்கள். லாண்ட் மாஸ்ரர் நிறைய வீட்டுப் பொருட்கள். கூரையை பிரித்து கிடுகுகளை ஏற்றிச் செல்கிறார்கள். அதாவது வீட்டை இடம்பெயர்த்துச் செல்கிறார்கள். வாழ்வை எனவும் சொல்லலாம்.
“போரெடுக்கும் தலைவனுக்கு தோள் கொடுப்போம். ஊரெரிக்க வந்தவனின் உயிரெடுப்போம்” என்பதே அந்தத் தட்டியில் இருக்கும் கோசம்.
அடுத்த பக்கத்தில் சுதந்திரமாக சுற்றிட நிரந்தரமாக ஒரு நிலம் வேண்டும் என்ற வாசகத்துடன் தட்டி. அதன் முன் இன்னொரு லாண்ட் மாஸ்ரரில் இன்னொரு வீடு உதிர்ந்து இடம் பெயர்ந்து செல்கிறது. கோழிக்கூடு, சைக்கிள், லாம்பு என தொங்குகின்றன.
பக்கம் 300 இல் கட்டாய ஆட்சேர்ப்புக்கு தனது பிள்ளையை பறிகொடுத்துவிட்டு தாய் அழுதுகொண்டு செல்லும் காட்சி. துயர காட்சி.
இவையெல்லாம் மேற்தள காட்சியை தாண்டி கருத்தை வெளிப்படுத்துகிற நிழற்படங்களுக்கான உதாரணங்கள் ஆகும்.
கலைவெளிப்பாடு – சந்தர்ப்பமும் சவாலும்
புகைப்படவியலானது இவ்வாறு காட்சிகள், கதைகள், கருத்துகள் என்பவற்றை வெளிப்படுத்துவது மட்டுமல்ல கலையம்சத்தையும் வெளிப்படுத்துகிற பண்பைக் கொண்டவை. இதனடிப்படையில் யுத்தகளத்தில் எடுக்கப்படும் படங்கள் அதற்கான சந்தர்ப்பத்தையும் சவாலையும் ஒரே நேரத்தில் முன்வைக்கும்.
கலை என்கிறபோது படிமம், குறியீடு, அழகியல் அம்சங்களை அவை எவ்வாறு வெளிப்படுத்துகிறது அல்லது முன்வைக்கிறது என்பதாகும். அமரதாஸ் இந்த சந்தர்ப்பத்தையும் சவாலையும் இயன்றவரை சந்தித்திருக்கிறார் என்பதை கீழே பார்க்கலாம்.
படிமம், குறியீடு
உதாரணங்களாக சிலவற்றை வரிசைப்படுத்தலாம்.
- சிமிளி துண்டுகளாக உடைந்து லாம்புக்குள் சொருகி வைக்கப்பட்டிருக்கும் (குளோஸ் அப்) காட்சி (240)
- ஒருவர் சைக்கிளில் நான்கு மூட்டைகளை அடுக்கி கட்டி தள்ளிச் செல்லுகிற காட்சி. ஒரு கை சைக்கிளில் பிடித்திருக்க மறு கை மூட்டைகளை தள்ளுகிறது. அந்தக் கையின் விரல்கள் சிமிளியே இல்லாத லாம்பிற்கு உள்ளால் சென்று மூட்டையைத் தள்ளுகிறது. (241)
- ஒருவர் அணிந்திருக்கும் மூக்குக் கண்ணாடியில் ஒருபக்க கண்ணாடிப் பாகம் இரண்டாக வெடித்து இருக்க, மறுபக்க கண்ணாடிப் பாகம் முழுசாக இருக்கிறது.
- முறிந்த மரக்கிளையில் ஒற்றைக் குருவி
- கூரையாக பாதுகாப்பளிக்கிற ரென்ற் ஆனது இறக்கையை விரித்தபடி விழுந்து மரணமடைந்த இராட்சதப் பறவை போலான காட்சி (274)
- மரக்கிளையில் தொங்கும் வானொலிப் பெட்டி. (இங்கு அந்த வானொலிப் பெட்டி அந்த மூடுண்ட உலக மக்களுக்கும் வெளி உலகத்துக்குமான உறவின் குறியீடு).
- மரக்கிளையில் தொங்கும் ஏணை.
- தேவாயலய முற்றத்தில் ஒடிந்து வீழ்ந்த மரம் போல் சோர்ந்து வீழ்ந்து கிடக்கும் வயோதிபர் (346)
- நாய் தனது வீட்டுக்காரரை தொலைத்துவிட்டு தேடும் காட்சி (216)
- No Fire Zone க்குள் குண்டுகள் வீழ்வதால், அங்கிருந்து தப்பி (கொட்டும் மழையிலும்) இடம்பெயர்தல்
- தரையில் ரென்ற் வரிசை (தரை), கரையில் மாடுகளின் வரிசை, ஏரிக்குள் மக்கள். (272)
- நாய் வண்டிலுக்குக் கீழ் பதுங்குதல்.
இவ்வாறான புகைப்படங்கள் படிமம், குறியீடு அல்லது கருத்தை உள்ளகத்தே கொண்டிருப்பதால் பார்வையாளரிடம் வாசிப்பைக் கோருகின்றன.
கலை அழகியல்
- துயர அழகியல்.
- மனிதர்கள் தாம் வளர்த்த பிராணிகளை தமது உயிரளவுக்கு நேசிக்கும் ஒரு உள்ளார்ந்த பண்பை படங்களில் காணலாம். நாய் பூனை மாடு ஆடு கோழி குரங்கு என்பவற்றை தம்முடன் எடுத்துச் செல்வது வாழ்தலின் ஓர் அழகியல்.
- இவ்வாறான நிலைமையிலும் குழந்தையின் மழலையில் திளைத்தல் இன்னொரு அழகியல்.
குளோஸ் அப்
குழந்தைகள் ஆண்கள் பெண்கள் வயதானவர்களின் துயரம், அழுகை, ஆற்றாமை, ஏக்கம், வெறுமை, விரக்தி, சூனிய உணர்வு, வாழ்வின் முடிவை நோக்கி குத்தி நிற்கும் பார்வை என புகைப்படக் கோணங்கள் வெளிப்படுத்தும் பல பரிமாணங்கள் இதயத்தை அண்மித்து நிற்கின்றன.
கோரமான படம்
- பெண்குழந்தை முகத்தில் இரத்தம் சிதறி அப்பியிருக்கிறது. அது அவள் கண் முன்னால் அருகாமையில் தனது தகப்பன் செல்லடியில் சிதறிய உடலிலிருந்து தெறித்தது. (246 ம் பக்கத்திலும் அட்டைப் படத்திலும் இது வருகிறது).
- இறந்த சிறுமியின் (மகளின்) நெஞ்சில் ஒரு கையை விரித்து வைத்தபடியும் மறு கையால் தனது மடியில் அழும் சிறுகுழந்தையை தாங்கியபடியும் உடைந்துபோய் இருக்கும் தாய். அருகில் வேறு இறந்த உடல்களும் தெரிகிறது. (377)
- துப்பாக்கிக் குண்டு முதுகினுள் பாய்ந்து, வெளியேறும் வேகத்தை இழந்து நெஞ்சுப் பகுதிக்குள் வந்திருக்கிறது. ஒரு வீக்கம் போல தள்ளிக்கொண்டிருக்கும் காட்சியுடன் அந்தத் தாய். (387)
- வாகனத்தின் திறந்த பகுதியில் மடியில் இறந்த குழந்தையை வைத்திருக்கும் சிறுவன். தங்கையாக இருக்கலாம்.
இக் கோரங்களையும் அமரதாஸ் இன் கமரா தவறவிடவில்லை.
விமர்சனம்
- அட்டைப் படம்
1.1 நூலின் பெயர் அல்லது தலையங்கம் சர்வதேச வாசகர்களை மையப்படுத்தியதால் ஆங்கிலத்தில் வந்திருப்பது பொருத்தமானதுதான். ஆனால் தமிழ்நிலத்தில் நடந்த யுத்தம் என்றளவில் ஆங்கில தலைப்பின் கீழ் தமிழிலும் -கொஞ்சம் சிறியதாக- குறிப்பிடப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. நூலினுள் அமரதாஸ் இனால் எழுதப்பட்டிருக்கும் வரலாற்றுப் பின்னணி அறிமுகம் ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழிலும் வந்திருப்பதுபோல நூலின் முகப்பும் பேணப்பட்டிருக்கலாம்.
1.2 அட்டைப் படம் ஒரு போர்க்களத்துள் அழைத்துச் செல்வதாக கொலாஜ் முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் அட்டைப் படம் ஒரு படிமமாக அல்லது குறியீடாக தம்மை நிலைநிறுத்தியிருக்கும் படத்துடன் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. போர்க்களத்தின் மேற்தள காட்சிகளாக (surface view) ஒருவருக்கு சாதாரணமாகத் தோன்றக்கூடிய போர் விமானம், பதுங்குகுழி, குண்டுவீச்சுக்கு பதுங்குதல், இரத்த சாட்சி என்பன அட்டையில் நிறைந்துபோய் இருப்பதை விடவும் ஒரு படிம அல்லது குறியீட்டுக் புகைப்படம் அல்லது கருத்தை வெளிப்படுத்துகிற ஒரு ஆழமான புகைப்படத்தை அட்டைக்கு தேர்வு செய்திருக்கலாம். அந்த சிறுமியின் முகத்தில் அப்பியிருக்கிற இரத்தம் அவளது தந்தையின் உடற் சிதறலிலிருந்துதான் பீறிட்டது என்ற விடயம் அட்டையைப் பார்க்கும்போது யாருக்குமே புலப்படாது. அதனால் அது அதற்கான அர்த்தத்தை நூலை கையில் எடுக்கும்போது ஒருவருக்கு வழங்காது. - நூலினுள் அமரதாஸ் இனால் எழுதப்பட்ட வரலாற்றுப் பின்னணி அறிமுகத்திலும் அடிக்குறிப்புகளிலும் நான் என தன்மையில் எழுதுவதை தவிர்த்து படர்க்கையில் அமரதாஸ் என குறிப்பிடப்பட்டிருப்பது செயற்கைத்தனமாக இருக்கிறது. அறிமுகவுரை தன்மையில் அல்லது தன்னிலையில் நின்று எழுதப்பட்ட ஒழுங்கை எழுத்துரை எல்லாவற்றிலும் பேணியிருக்கலாம். அவரே எடுத்த புகைப்படங்கள். அவரே தொகுத்து அவரே வடிவமைத்து உருவாக்கிய நூலுக்குள் படர்க்கை எழுத்துரை புகுந்தமையானது வாசிக்குமபோது இடற வைக்கிறது.
- அடிக் குறிப்பு :
3.1 படைப்பாளி தரப்பில் தேவையானவற்றுக்கெல்லாம் அடிக்குறிப்பு இடப்பட்டதாக இருந்தாலும் பார்வையாளர் அல்லது வாசகர் தரப்பில் உணரக்கூடிய அடிக்குறிப்பின் போதாமை என்று ஒன்று இருக்கிறது. அதுவும் ஈழம் தவிர்ந்த சர்வதேச வாசகர்களை கவனத்தில் கொண்டால் அதற்கான தேவை இருக்கிறது என சொல்ல முடியும்.
3.2 ஒரே சம்பவத்தின் வௌ;வேறு கோணத்திலான புகைப்படங்கள் இருக்கிறபோது அந்த சம்பவம் பற்றிய அடிக்குறிப்பை -தொடர்பான பக்க எண்களைக் குறிப்பிட்டு- ஒரு பக்கத்தின் அடிக்குறிப்பாக இட்டிருக்கலாம். (உதாரணமாக 263 264 265 267 268 269) - மக்களின் தரப்பில் நின்று பேசப்படும் புகைப்படங்களே நூலை நிறைத்திருக்கின்றன. போரை நடத்தும் இரு தரப்புகளினதும் புகைப்படங்களையும் -குறிப்பாக எதிர்த் தரப்பினர் குறித்த புகைப்படங்களை- இறுதிப் பேரின்போது எடுக்கும் சாத்தியங்கள் குறைவானதாக இருக்கலாம், அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் முள்ளிவாய்க்காலுள் முடக்கப்பட்ட மக்கள் கூட்டத்தினரிடையே போராளிகளின் நடமாட்டம் செயற்பாடுகள் இருந்திருக்கிறது. அவை குறித்த ஓரிரு புகைப்படங்களே இந் நூலில் வந்திருக்கின்றன. சிலவேளை தப்பிப் பிழைத்த போராளிகளின் மீதான அல்லது அவர்களின் உறவுகள் மீதான பொறுப்புணர்வுடன் அவை தவிர்க்கப்பட்டுமிருக்கலாம் என்பதையும் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.
முடிவாக,
போர் இலக்கியங்களை இனியும் எப்போதும் எழுதிக் கொள்ளலாம். புனைவுகள் அதற்கு துணைகொடுக்கும். ஆனால் போர்க்களக் காட்சிகள் புனைவுகளல்ல. அவை அபுனைவுகள். அந்த சம்பவங்கள் காட்சிகள் கதைகள் எல்லாமும் போர்க்களத்தில் உயிர்களாய்த் தோன்றித் தோன்றி மரணித்தவை. அந்த உயிர்களை கணம் தவறாது படம்பிடித்து ஆவணமாக்குவது என்பது தன்னுயிரை பணயம் வைக்கிற ஒரு செயல். அந்தக் காட்சிகளை ஓவியமாக வரைய முடியும். ஆனால் இனி புகைப்படமாகத் தர முடியாது. இந்தப் பணியை பொறுப்புணர்வுடன் செய்து இன்று நூல் வடிவில் எம்முன் வைத்திருக்கிற அமரதாஸ் ஒரு வரலாற்றுப் பணியை செய்து முடித்திருக்கிறார். போர்க்குற்றச் சாட்சியாக இந்நூல் பார்க்கப்பட போதுமானதல்ல என்றபோதும்;, ஒரு தவிர்க்க முடியாத அல்லது அவசியம் தேவையான ஓர் வரலாற்று ஆவணம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஒவ்வொருவரினதும் புத்தக அலுமாரியில் இருக்கவேண்டிய நூல்.
காலத்தைக் கைப்பற்றிய நூல் இது !
- ரவி 14112022