ஜெய் பீம் – சூழும் அரசியல்!

தமிழ்ச் சமூகத்துள் இன்று அதிர்வை ஏற்படுத்தியுள்ள ஒரு திரைப்படம் ஜெய் பீம் என்பதற்கு எழுந்திருக்கிற சர்ச்சைகள் ஓர் அசல் சாட்சி.
• உண்மை-புனைவு முரண்பாடு
• திரைப்படத்துறையின் பொதுப் போக்கு
• அரசியல் கட்சிகள் நடத்துகிற தேர்தலிய அரசியல்
• இழிவுபடுத்தல்கள்
• புனிதங்கள்
• காலம்-வெளி
என பல காரணிகள் இந்த சர்ச்சைகளை வடிவமைக்கின்றன.

• உண்மை – புனைவு முரண்பாடு

உண்மைக்கும் புனைவுக்குமான பிரச்சினை என்பது கலை இலக்கியங்களில் தொடரும் சர்ச்சைதான். புதிதல்ல. இலக்கியத்தில் சுயசரிதை வடிவத்தில் எழுதப்படுகிற நூல் நாவலாக எழுதப்படுகிறபோது புனைவின் பாத்திரம் அவசியமானது. திரைப்படம் புனைவு என்ற வடிவத்துள் வராவிட்டால் ஆவணப்படம் ஆகிவிடுகிறது. ஆவணப்படத்தில் உண்மைத் தன்மையையும், திரைப்படத்தில் புனைவு உண்மைக்கு அருகில் வருவதையும் படைப்பாகத் தரமுடியும். புனைவு என்பதை பொய் என விளங்கிக்கொள்வது தவறான புரிதல் கொண்டது. அந்த குறிப்பிட்ட காலத்தைய சூழலில் நிகழும் உண்மைகளை புனைவு இன்னொரு வடிவில் தழுவிக் கொள்கிறது. அந்த படைப்பாக்க சுதந்திரத்தை கலை வடிவம் வழங்கும். அது அழகியல் கூறு கொண்டது. இருளரா குறவரா? அந்தோனிசாமியா குருவா? பார்வதியா செங்கேணியா? என மயிர் பிளக்கும் விவாதங்களுக்கு ஒரு காரணம் புனைவின் தன்மையைப் புரிந்த கொள்ளாதது எனலாம். புனைவையும் உண்மையையும் போட்டு குழப்புகிற வரண்டுபோன விமர்சனங்கள் சலிப்பூட்டுவது. இதை பாரதிராஜா மிக தெளிவாக தனது பதிலில் விளக்கியிருந்தார்.

• திரைப்படத்துறையின் பொதுப்போக்கு

தமிழ்ச் சினிமா என்ற காட்சியூடகத்தின் பொதுப் போக்குக்கு வெளியே இன்னொரு போக்கு ஏற்கனவே தோன்றி மெல்ல வளர்ந்து இன்று ஜெய்பீம் ஊடாக மெருகேறுகிற தன்மை உருவாகியிருக்கிறது. அண்மைக்காலத்தில் வெளிவந்த மெட்றாஸ், காலா, சர்ப்பட்டா பரம்பரை, அசுரன், பரியேறும் பெருமாள், கர்ணன், மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற இன்னும் சில படங்கள் அந்தப் பாதையை செப்பனிடத் தொடங்கியிருந்தன. அதே பாதையில் ஜெய்பீம் வருகிறது. இப் படமும் விளிம்புநிலை மக்களின் பக்கம் திரும்பியிருக்கிறது.

விளிம்புநிலை மக்களை கள்ளச்சாராயம் காய்ச்சிகளாகவும், குடிகாரர்களாகவும், நாகரிகமற்றவர்களாகவும், களவு செய்பவர்களாகவும், பாலியல் தேவையை தீர்க்க இலகுவில் அணுகக்கூடியவர்களாகவும் காட்சிப்படுத்தும் நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மனோபாவத்தின் பொய்மையை இந்தப் படங்கள் தோலுரிக்கின்றன. பேசப்படாதவற்றை பேசத் துணிந்திருக்கின்றன. ஒரு கலை என்ற வடிவத்துள் அவை இதை செய்ய வேண்டும் என ஏங்கும் ஒரு சமூகஜீவிக்கு திருப்தியளிக்கிற படங்களாக அவை அமைகின்றன.

மேலும் காலம் காலமாக மறைக்கப்பட்டு வரும் உண்மைகளை இளம் சந்ததியிடம் கொண்டுவந்து சேர்க்கும் ஊடகமாகவும் இந்தவகைப் படங்கள் இருக்கின்றன. இது ஒரு நல்ல மாற்றம். பொழுதுபோக்கு என்ற லேபலில் தொழிலாக மட்டும் வரைவுசெய்த பொதுப்பாதைக்கு இணையாக, தொழிலோடு சமூகப் பொறுப்பையும் இணைக்கும் ஒரு மாற்றுக் கலைப் பாதை உருவாகுவதை -திரைத்துறைக்குள்ளும் வெளியேயும்- விரும்பாத பகுதியினர் உள்ளனர். இந்தக் கள்ளத்தனமும், தொழில் ரீதியிலான போட்டி பொறாமையும் திரைப்படத்துறையினரை கலைஞர்கள் என்ற தளத்தில் இணைந்து நின்று குரல்கொடுக்க முடியாமல் ஆக்கிவிடுகிறது. இது கலைத்துறைக்கு நேருகிற ஒரு அவலம்.

வெளிப்படையாக உரத்து பாரதிராஜா போன்று மிகத் தெளிவான, கலை நோக்கினாலான கருத்துகள் -பெயரின் முன்னால் அடைமொழியை கட்டித் தொங்கவிட்டு அலையும்- கலைஞர்களிடமிருந்து வராதது திரைப்படத் துறையின் கலைப் பிரக்ஞை எந்த நிலையில் வீழ்ந்து கிடக்கிறது என்பதை காட்டி நிற்கிறது. பாரதிராஜா சொல்வது போன்று திரைப்படக் கதையை அரசியல்வாதிகளின் வாசலில் காத்துநின்று வாசித்துக் காட்டி அனுமதி எடுக்கும் நிலை உருவாகலாம் என்பதன் பொருளை அவர்கள் உணரவேண்டும். குடிதண்ணீருக்கே ஏங்கும் சமூகமும் பாலுக்கு ஏங்கும் குழந்தைகளும் இதே இந்தியாவிலும் தமிழகத்திலும் இருப்பதைக்கூட கணக்கில் எடுக்காது, கட் அவுட் க்கு பாலூற்ற தமது இரசிகர் மன்றங்களுக்கு கற்றுக் கொடுக்கும் கதாநாயகர்களிடம் இவற்றை எதிர்பார்ப்பது அதீதம்தான். அரசியல் கட்சியினர் சாதிய அமைப்புகளைப் பகைத்தால் வாக்குகள் போய்விடும் என ஏங்குவதுபோல், தாமும் இரசிகர்களை இழந்துவிடலாம் என்பதிலும் திரைப்படத்துறையினர் கவனமாகவே இருக்கின்றனர். இரண்டுமே பிழைப்புவாதம்தான்.

• அரசியல் கட்சிகள் நடத்துகிற தேர்தலிய அரசியல்

அரசியல் கட்சிகளை சாதியச் சங்கங்களாக குறுக்கி தேர்தல் அரசியல் நடத்துபவர்களுக்கு இந்தப் போக்கு அச்சம் தரத் தொடங்கியிருக்கிறது. சாதிய மனநிலையை, அதுவழிப்பட்ட சிந்தனையை மறைத்து மக்கள் முன்னால் முகமூடியுடன் திரிபவர்களுக்கு மவுனம் வசதியாக இருக்கிறது. எல்லா சாதியினரினதும் தேர்தல் வாக்குகளை குறிவைத்து அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு பம்முவது நிலைப்பாடாக மாறியிருக்கிறது.

தமிழர் என்ற அடையாளம்தான் எல்லா பிரிவு மக்களையும் இணைக்கும் என ஒற்றை அடையாளமிட்டு முழங்கும் தமிழ்த் தேசியவாதிகளும் குரல்தாழ்ந்து அடக்கி வாசிக்கிறார்கள். மேடையில் கத்திப் பேசும் சீமான் போன்றவர்கள் எச்சில் விழுங்கி விழுங்கி நமட்டுச் சிரிப்புடன் ஒலிவாங்கிகளின் முன்னால் வளைந்து நெளிகிறார்கள். மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். வன்னியர்கள்தான் அந்தப் பிரச்சினையில் போராடினார்கள் என கோவிந்தனை உதாரணம் காட்டி பேசுகிறார் சீமான் அவர்கள். ஒரு கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை ஏற்று நடப்பவர் மீதே வன்னியர் என அடையாள அரசியல் பேசுகிற சீமானை செய்தியாளர் அவர் வன்னியரா கம்யூனிஸ்டா என கேட்டபோது அசடு வழிந்தது. கோவிந்தன் அவர்களோ தான் சாதி அடையாளங்களை கடந்த கம்யூனிஸ்ட் என்பதை மிகத் தெளிவாகவே சொல்லிவிட்டார்.

ஒரு இயக்குநராகவும் தமிழ்த் தேசியவாதியாகவும் இருக்கும் கவுதமன் அவர்கள் இயக்குநர் ஞானவேல் ஒரு தமிழர் இல்லை என வேறு கண்டுபிடித்துச் சொல்கிறார். அந்தோனிசாமி (படத்தில் குருமூர்த்தி) யின் வன்முறைகளை அரசின் வன்முறை இயந்திரமான காவற்துறைக் கட்டமைப்புள் வைத்துப் பார்க்காமல் ஒரு மனநோயாளியாகக் காண்கிறார். ஓர் அரசியலாளராகவும் திரைப்பட இயக்குநராகவும் இருக்கும் அவர் இந்த உணர்ச்சிசார் புரிதலை வைத்து விளக்கமளிப்பது அவலமாக இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மட்டும் தனது கருத்துகளை வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் முன்வைக்கிறார். இன்று எல்லோரையும்விட சாதிய அரசியலை கையிலெடுக்கிற வசதிவாய்ப்பு அதிகம் கொண்டிருந்தும்கூட, அவர் அதைச் செய்வதில்லை. அறிவார்ந்த ஒரு தலைவராகவே அவர் இருக்கிறார்.

எவரையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என சொல்லும் சீமான் மேடைகளில் சக அரசியல்வாதிகளை, தலைவர்களை டேய் என்பது போன்ற விளிப்புடனும், வன்முறை கொண்ட வார்த்தை மற்றும் உடல் மொழியாலும் சீண்டி விசிலடிகளை பொறுக்குகிறார். எவரது மனமும் பாதிக்காமல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பேசும் நுட்பத்தை சீமான் போன்ற அரசியலாளர்களிடம்தான் நாம் கேட்டு அறிய வேண்டும். ராஜபக்சேயின் மனம் நோகாமல் புலிகள் எப்படி போராட வேண்டும் என அவர் புலிகளுக்கு வகுப்பு எடுத்துக் காட்டியிருக்கலாம்.

• இழிவுபடுத்தல்

இழிவுபடுத்தல் என்ற சொற்பிரயோகத்தோடு பா.ம.க வருகிறது. இன்னொருபுறம் சக மனிதர்களின் தோற்றத்தை கேலிசெய்து பெண்களை தாழ்த்தி பேசி நகைச்சுவை பண்ணிய சந்தானம் யாரையும் தாழ்த்தக் கூடாது என்கிறார். நீங்கள் உங்களை உயர்த்தலாம் மற்றவர்களை தாழ்த்தக் கூடாது என கொசுறுத் தத்துவம் வேறு பேசுகிறார். ஒன்றை உயர்த்தினால் மற்றையது தாழும் என விரல் சூப்பும் பிள்ளைக்குக் கூட தெரியும்.

காலம் காலமாக பெண்களை பிகர் என்று இழிவுபடுத்தியும், காட்சிப் பொருளாகவும் பாலியல் பண்டமாவும் சித்தரித்தபடி நகர்ந்த ஆண்மையவாத சிந்தனைகளில் ஊறித்திளைத்த திரைப்படங்களுக்கு எதிராக பெண்களை ஏன் இழிவுபடுத்துகிறீர்கள் என இன்று இழிவுபடுத்தல் பற்றிப் பேசும் யாரும் கேள்வி கேட்டாரில்லை. திரைப்படங்களில் விளிம்புநிலை மக்களையும் மாற்றுப் பாலினத்தவரையும் இழிவுபடுத்துவதையும் கேட்டாரில்லை. சக மனிதரை மதிப்பது என்ற விழுமியமற்று உருவ அமைப்புகளை நக்கலடித்து சிரிக்கவைத்த (கவுண்டமணி, சந்தானம் வகையறாக்களின்) நகைச்சுவைக் காட்சிகளையும் கேள்வி கேட்டாரில்லை. வில்லன்களை கறுப்புநிறத்திலும் சுருட்டை மயிரிலும் காட்சிப் படுத்துகிற, வெள்ளைக் கதாநாயகிகளைத் தேடுகிற நிறவாத மனப்பான்மையையும் அதன்மூலம் கறுப்பின மனிதர்களை இழிவாகக் காட்டுவது குறித்தும் கேட்டாரில்லை.

சாதியப் படிநிலையின் கடைநிலையில் இருக்கும் விளிம்புநிலை மக்களை உலகுக்கு எடுத்து வந்து காட்டியதை வரவேற்பதற்குப் பதிலாக, இடைநிலைச் சாதியினர் தாம் சார்ந்த சாதியினரை இழிவுபடுத்திவிட்டது, சாதியப் புனிதத்தை ஜெய்பீம் நாசமாக்கிவிட்டது என சிந்திக்கிற நிலை இருப்பது சாதியைக் காப்பாற்றி வைத்திருக்கும் ஒரு செயல்தான். தேர்தல் அரசியலுக்கு அது தேவையாக இருக்கிறது.

• புனிதங்கள்


மதப் புனிதம், அரசியல் புனிதம், தலைமைப் புனிதம், சாதியப் புனிதம் இனப் புனிதம் என எல்லா புனிதங்களும் மாற்றங்களுக்கு தடையாக நிற்பது. ஜெய்பீம் அதன் மையப் பிரச்சினையாக சொல்வதை விட்டுவிட்டு தீச்சட்டியை சாதியப் புனிதம் வேவு பார்க்கிறது. குருமூர்த்தி என்பது காவல்துறை கட்டமைப்புக்குள்ளும், சாதிய மனநிலைக்குள்ளும், (சமூகத்தில் உள்ளடக்கமாக இருக்கும) வன்முறை மனநிலைக்குள்ளும் மட்டுமல்ல, அதிகார கட்டமைப்புக்குள் பலியாகிற ஒரு கீழ்நிலை காவல்துறை அதிகாரியின் பிம்பமும் ஆகும். குருமூர்த்தியின் பாத்திரம் இன்னொரு சாதி, இன, மத அடையாளம் கொண்ட அமைப்புக்குள்ளும் இயங்குகிற ஒரு மாதிரி நபர்தான். குருமூர்த்தியின் இடத்தில் ஒரு வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் காவல்துறை அதிகாரியாக இருக்க வாய்ப்பில்லை என நினைப்பதே சாதியப் புனிதம்தான்.

வன்முறை மனோபாவம் எப்படி இயங்குகிறது என்பதை விளக்க ஒன்றை குறிப்பிடலாம். ஈழவிடுதலைப் போராளிகள் சரிகளோடும் தவறுகளோடும் இயங்கியவர்கள். இனவிடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்க முன்வந்தவர்கள். சமூகத்தில் உள்ளடக்கமாக இருக்கிற வன்முறை மனோபாவம் ஒரு இனவிடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்கப் போன போராளிகளிடம்கூட எவ்வாறு வினையாற்றியது, அது எவ்வாறு இயக்கங்களை சீரழித்தது, விடுதலையை சீர்குலைத்தது என தமிழகத்திலுள்ளோர் அறிந்துகொள்ள முன்வர வேண்டும். அப் போராட்டத்தை புனிதப் போராட்டமாகவும் தலைவர்களை புனிதர்களாகவும் தமிழ்நாட்டு இனவுணர்வாளர்கள் சொல்லிபடி இருக்கிறார்கள்.

இயக்கங்களுக்குள் வெற்றுச் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்ட சக போராளிகள் எதிர்நோக்கிய சித்திரவதை முறைமைகள், சக இயக்கப் போராளிகளை கொன்றொழித்த முறைகள் என்பன ஜெய்பீம் இல் காட்டப்பட்டிருப்பதை விட இன்னொரு வகையில் மோசமான முறைமைகள் கொண்டது. இவற்றை அம்பலப்படுத்தி ஈழவிடுதலைப் போராடத்தையோ, தான் சார்ந்த இயக்கத்தையோ விமர்சித்த நூல்கள் வெளிவந்தன. வந்துகொண்டிருக்கின்றன. ஈழமக்களை இழிவுபடுத்திவிட்டார்கள், ஈழவிடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்திவிட்டார்கள் எனக் கிளம்பினால் எமது போராட்டம் ஏன் தோல்வியடைந்தது என்ற மதிப்பீட்டை எப்படி நாம் எட்ட முடியும். தோல்வியிலிருந்து என்ன படிப்பினைகளைப் பெற முடியும். எதுவும் புனிதமல்ல.

தமிழ்ச் சமூக மனநிலையில் வன்முறை மனோபாவம் என்பது குடும்பத்துள் தொடங்கி, பக்கத்துவீட்டுக்காரன் பிடரியில் தட்டுவதினூடாக, பாடசாலையில் பிரம்பால் அடிப்பதிலும் அதிகாரம் செலுத்துவதிலுமென கிளைகள் விட்டு வளர்பவை. இந்த மனோபாவமே ஈழவிடுதலை இயக்கத்துள்ளும் செழிப்பாக வளர்ந்தது. புனித மதிப்பீடு துரோகத்தால் வீழ்ந்தோம் என்ற ஒற்றை வரியில் ஈழவிடுதலைப் போராட்டத்தை விளக்கிவிடுகிறது.

ஜெய் பீம் இல் கலண்டரை மோந்துபிடித்தவர்கள் எழுப்பிய குரலும் போலிப் புனிதங்களின் கதைதான். அது முழு வன்னிய மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதுமில்லை. இப் புனிதங்களால் குழைக்கடிக்கப்படவர்களைத் தவிர, தற்கால இளம் சந்ததி இதற்கு வெளியில் நிற்கும் சந்தர்ப்பமே அதிகம்.

• காலம்-வெளி

இப்படியொரு திரைப்படம் ஒரு 15, 20 ஆண்டுகளுக்கு முன்னர் வந்திருந்தால்,பொதுச் சமூக மனநிலையை இந்தளவு அசைத்திருக்குமா என்பதே கேள்வி. (எழுந்திருக்கிற சர்ச்சைகளை குறிப்பிடவில்லை. சமூகத்தில் குறிப்பாக இளைஞர் பட்டாளத்திடம் எழுந்த விழிப்புணர்வைக் குறிப்பிடுகிறேன்). ஒரு கலைப்படைப்பாக வகைப்படுத்தப்பட்டு ஒரு குறிப்பிட்ட மட்டத்தால் மட்டுமே கொண்டாடப்பட வாய்ப்பு இருந்திருக்கும். இது உங்களுக்கும் ஒத்திசைவான கணிப்பாக இருந்தால்…அது ஏன்?

இன்று அரசியல் கட்சித் தொண்டர்களுக்கு வெளியே சுயமாக சிந்திக்கும் பெரும் இளம் பட்டாளம் இருக்கிறது என்பதை சமூகவலைத்தளங்கள் வெளிக்காட்டுகின்றன. விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை திரைப்படங்களின் பொதுப் போக்கும், ஆதிக்கசாதி மனோபாவமும் கட்டமைத்ததுக்கு வெளியே வைத்து பார்க்க அவர்களுக்கு ஜெய்பீம் இன்னொரு சாளரத்தைத் திறந்திருக்கிறது.

சமூகவலைத்தளங்கள் பெருவெளியாகப் பரவியிருக்கும் காலம் இது. அது கட்சி அரசியலாளர்களின் குரலைத் தாண்டி பயணிக்கிற வெளியை விரித்துப் போட்டிருக்கிறது. அதாவது தொழில்நுட்பம், விஞ்ஞானம் என்பவற்றின் அபரிதமான வளர்ச்சி கடந்த 30 வருடங்களுக்குள் நிகழ்ந்து காலம்-வெளியை அபரிதமாக மாற்றியமைத்துள்ளது. பிரபஞ்சத்தை கட்டுடைக்க அல்லது கண்டறிய இயற்கை விஞ்ஞானத்தில் காலம்-வெளி என்ற கருத்துருவாக்கம் தோன்றி இயற்பியலில் பல முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறது. சமூக விஞ்ஞானம் என்ற புரிதலில் அரசியலிலும் இது பொருந்திப் போவதை காண முடிகிறது.

இன்று நாம் வந்தடைந்திருக்கிற அரசியல் வெளி சென்ற நூற்றாண்டைப் போன்றதல்ல. அது அறிவையும் அறிதலையும் நுனிவிரலில் கொண்டுவந்து நிறுத்துகிறது. மனித உரிமைகள், சுற்றுச்சூழல் போன்றவற்றிலான கரிசனைகளையும், இனவெறி நிறவெறிகளை அதனதன் நேரடிக் களத்திலிருந்து நுண்களத்துள் விரட்டியிருக்கிற தன்மைகளையும், சக மனிதர்களை மொழி கடந்து இனம் கடந்து எல்லை கடந்து அறிந்துகொள்கின்றதும் பழக சந்தர்ப்பம் தருகின்றதுமான நிலைமைகளையும் உருவாக்கியுள்ளது. இவை அறிவை விசாலமாக்குகிறதும் உலகப் பொதுமையாக்குகிறதுமான புதிய சூழலின் காலத்தை தோற்றுவித்தள்ளது.

இந்த விசாலமான வெளியானது சாதிய ஏற்றத்தாழ்வு மீதான ஒவ்வாமையை இளம் சமூகத்தினரிடம் ஏற்படுத்துவதை காண முடிகிறது. இந்த ஒவ்வாமையை சமூகப் பிரக்ஞையாக உருமாற்ற கல்வி மட்டுமல்ல அதையும்விட அறிவு தேவைப்படுகிறது. கல்வி என்பதை அறிவாக போட்டுக் குழப்பி சமூக மனிதர்களை உருவாக்குவதற்கு தடையாக எமது கல்வி முறைமை இருக்கிறது. பிரபல பாடசாலைகள் கல்லூரிகள் என்பதே சப்பித்துப்பி பரீட்சை எழுதி குவிக்கும் புள்ளிகளின் அடிப்படையிலேயே தமது தரங்களை விளம்பரப்படுத்துகின்றன. இவ்வாறான கல்விநிறுவனங்கள் சமூகப் புத்திஜீவிகளை உருவாக்குவதில்லை. தத்துவவாதிகளை உருவாக்குவதில்லை. கவிஞர்களை உருவாக்குவதில்லை. இவர்களெல்லாம் அதற்கு வெளியிலேயே தமது சுயதேடல்களில் உருவாகிறார்கள்.

எனவே உருவாகியிருக்கும் புதிய காலம்-வெளி க்கு ஏற்ப அதற்கு ஈடுகொடுக்க எமது அறிவையும் கல்வியையும் முன்கொண்டுவர வேண்டும். இளம் சந்ததியினரின் தாகத்தை தணிக்க, ஈடுகொடுக்க இறுகிப்போயிருக்கிற ஒழுங்குகள் குலைந்து புதிய ஒழுங்குகள் உருவாக வேண்டும். அம்பேத்கார், பெரியார் போன்ற தலைவர்கள் சாதியத்துக்கு எதிராக அமைத்தது பலமான அஸ்திவாரம் மட்டுமே. அதே அஸ்திவாரத்தில் இன்றைய காலம்-வெளி இல் நாம் கட்டியெழுப்பப் போகிற புதிய சிந்தனைகளை, செயற்பாடுகளை, போராட்ட வடிவங்களை விளிம்புநிலை மனிதர்களுக்காக பேசுபவர்களும் வகுக்க வேண்டியிருக்கிறது. இன்றைய இடதுசாரிகளுக்கும் இது பொருந்தும். அன்றைய காலம்-வெளி இல் தடங்கிநின்றபடி அதாவது அத்திவாரம் பற்றியே பேசிப் பேசி அதில் குந்தியிருந்தால் எதுவும் ஆகாது.

இயங்கிக்கொண்டே இரு என இடதுசாரிய தத்துவவியலாளர்கள் சொன்னவற்றின் பொருளும் அதுதான். அன்றைய போராட்ட முறைகள் வைக்கப்பட்ட தீர்வுகள் இன்றைய காலவெளிக்கானதாக புதிய வடிவம் பெற வேண்டும். அரசு அதிகாரத்தில் தலையீடு செய்து சட்ட ரீதியாகவும், சர்வதேசம் (பெயருக்குத்தன்னும்) ஏற்றுக்கொண்டிருக்கிற மனித உரிமைகள் போன்ற சமூகப் பெறுமதிகளையும் நடைமுறைப்படுத்தும்படியாக நிர்ப்பந்தம் கொடுக்க சமூகம்சார் அரசியல் சக்திகள் வளர்ச்சியடைய வேண்டும்.

கல்வியும் அறிவும் அதிகாரத்தையும் பணபலத்தையும் வைத்திருக்கும் மையத்திலும் அதைச்சுற்றி அலையும் நடுத்தர வர்க்கத்திடமும் மட்டுமன்றி, விளிம்புநிலை மக்கள் வரை வளர்ச்சி காண உழைக்க வேண்டும். இன்னொரு கோணத்தில் சொல்வதென்றால், விளிம்புநிலை மனிதர்கள் மையத்தை நோக்கி நகர இன்று கல்வியும் அறிவும் முக்கியமானது. இதில் சிவில் சமூக இயக்கங்கள் புத்திஜீவிகள், வெகுஜன அமைப்புகள் தத்தமது வலுவுக்கு ஏற்ப ஒரு புறம் உழைக்க வேண்டும். இத் தளத்தில் தமது வலுவுக்கு ஏற்ற செயற்பாடுகளை செய்யும் பல அமைப்புகளில் அகரம் பவுண்டேசனுக்கும் ஒரு இடம் இருக்கிறது. அகரத்தை தோற்றுவித்தவர்களில் முக்கியமான நபராக சூர்யா இருப்பதன் மூலம் இன்றைய காலம்-வெளி இல் தன்னை சரியாகவே பொருத்தியிருக்கிறார்.

கலைத் தளத்தில் ஜெய் பீம் உம் இந்த காலம்-வெளியில் பொருந்திப் போகிற ஒரு திரைப்படமாக இருக்கிறது. அதிர்ச்சிகளை உருவாக்கியிருக்கியிருப்பதற்கும், பேசுபொருளாக மக்களிடம் -குறிப்பாக இளஞ் சந்ததியிடம்- எழுந்திருப்பதற்கும் அதுவும் ஒரு காரணம். தமிழக அரசு விரும்பியோ விரும்பாமலோ துரித செயற்பாடுகளை செய்ய முன்வருவது தனது கடமையை உணரத் தலைப்பட்டதாக இருக்கலாம். தேர்தல் வாக்குகளை குறிவைத்து செய்ய முன்வருவதாகவும்கூட இருக்கலாம். அதை ஜெய் பீம் அருட்டிவிட்டதாக எண்ணுவதில் தவறில்லை.

• முடிவாக


ஜெய் பீம் எங்கள் முன் வைக்கப்பட்டிருக்கிற கலைப் படைப்பு. அரசியல் படைப்பு. அரசியலை சமூக விஞ்ஞானமாக புரிந்துகொள்பவர்களுக்கும், அரசியலை தேர்தல் அரசியலாக புரிந்துகொள்பவர்களுக்குமான எல்லைக் கோட்டில் ஜெய்பீம் நிறுத்தப்பட்டிருக்கிறது. எல்லைச் சண்டை நடக்கிறது. சாதிய அமைப்பை அடிப்படையாகக் கொண்டியங்கும் சமூக ஒழுங்குகளும் சிந்தனை முறைகளும் வெளிப்படுவது ஒருபுறமாகவும் அவை கேள்விக்குள்ளாவது இன்னொரு புறமாகவும் இந்த சர்ச்சைகள் மோதிக்கொள்கின்றன. முக்கியமாக சுயாதீனமான இளம் சந்ததியினரின் குரல்கள் மாற்றத்துக்கான தேவையை வெளிப்படுத்துவனவாக இருக்கின்றன. சிந்தனை மாற்றத்துக்கான நல்ல அறிகுறிகளில் இதுவும் ஒன்று. அதை ஜெய் பீம் மட்டும் சாதித்துவிடாது. அது நிற்கிற மாற்று கலைப் பாதை காப்பாற்றப்படுதல் கலைத் தளத்தில் முக்கியம்.

சூர்யா அவர்கள் ஒரு அரசியல், சமூகப் போராளியல்ல. கலைப் போராளி என மதிப்பிடுவதற்குக்கூட ஜெய் பீம் மட்டும் போதாது. அப்படியெல்லாம்தான் இருக்க வேண்டும் என கோரவும் முடியாது. அவர் ஒரு தொழில்முறை நடிகர். அதேநேரம் எப்போதையும்விட இன்று முக்கியத்துவம் பெறுகிற கல்வி விடயத்தில் விளிம்புநிலை மாணவர்களுக்கு அல்லது ஏழை மாணவர்களுக்கு உதவுகிற மிக முக்கியமான பணியில் அவர் 2006 இலிருந்து இருக்கிறார். அது அவரை வெறும் நன்கொடையாளராக மட்டுமன்றி ஒரு பக்குவப்பட்ட மனிதராகவும் மாற்றியிருக்கிறது என்பதற்கு அவர் அன்புமணிக்கு அளித்திருந்த பதில் ஒரு சாட்சி. அவரை அப்படியே விட்டுவிடுங்கள். தேர்தல் கட்சிகளின் அரசியல் சித்துவிளையாட்டுக்குள் இழுத்து வார்த்தைகளால் வாள் வீசி சூர்யா போன்றவர்களையும் ஞானவேல் போன்றவர்களையும் ஜெய் பீம் போன்ற படங்களையும் இல்லாமலாக்கிவிடாதீர்கள்!

  • ரவி 19112021

2 thoughts on “ஜெய் பீம் – சூழும் அரசியல்!”

  1. ரவி, உங்களது ஜெய். பீம் படம் தொடர்பான பார்வை சிறப்பானதும் இன்றை தேவையானதாகவும் இருக்கிறது. மகிழ்ச்சி. இலங்கை அரசியலில் சிறுபான்மை இனங்களின் தேவையாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட, அரசியல் யாப்பில் இடம்பிடித்திருக்கும் விடயங்களை பாதுகாக்க
    வேண்டிய அவசியம் நிறையவே யிருக்கிறது. அவற்றை ண்டியதும் மிகமிக அவசியமானது. நீங்கள் செல்வது போல அதற்கப்பாலும், நாம் செயற்படவேண்டியது இன்றியமையாதது.

    1. நன்றி சுதா. நீங்கள் 13ம் சட்டத் திருத்தம் குறித்து சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். அத்தோடு நான் குறிப்பிடும் அந்தப் பகுதி இக் கட்டுரைக்குள் தேவையில்லாததாக இப்போ எனக்குத் தோன்றுகிறது. சொருகப்பட்டதுபோல ஒரு உணர்வு. அதனால் அதை நீக்கிவிட்டிருக்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: