ஈழத்தில் சாதிய மனநிலை மீண்டும் வன்முறையை முன்னுக்குத் தள்ளி வீரியமடைவதை வட்டுக்கோட்டையில் 19.09.2021 நடந்த சாதிய ரீதியிலான தாக்குதல் நிரூபித்துள்ளது. வெறும் கையுடன் தமது அன்றாட வாழ்வை கூலித்தொழில் மூலம் ஓட்டிக்கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக, வேலைவெட்டியின்றி வெளிநாட்டுப் பணத்தில் சீவியம் நடத்தும் ஆதிக்கசாதி இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வாள்சுழற்றியிருக்கிறார்கள். அரை மணித்தியாலம் அந்தத் தெருவையே கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்கள். வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள்.
வாள்வெட்டில் குடும்பஸ்தரின் இரண்டு கைகளும் அகப்பட்டு ஒரு கையில் விரல் துண்டாடப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் அவர் ஒரு கராத்தே மாஸ்ரர். அவர் வன்முறையை கையில் எடுக்கவேயில்லை. அவரது தற்காப்பானது கழுத்தைக் காப்பாற்றி கையோடும் விரலோடும் சறுகியிருக்கிறது. இன்னொரு வயோதிபரின் கால்களில் வாள்வெட்டுக் காயம். தலையில் கல்லடிபட்ட காயம். சரமாரியான கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியுமிருக்கின்றனர். காவற்படை காணாதிருந்தது. எல்லாம் நடந்துமுடிந்தபின் அவர்கள் உருண்டு வந்தார்கள்.
அருகிலுள்ள பெரிய வீடொன்றை வாடகைக்கு ஒருவர் எடுக்கிறார். அதற்குள் இந்த இளைஞர்கள் குடி கும்மாளம், சண்டித்தனம், சாதிவெறித்தனம் என வாழ்க்கை நடத்துகின்றனர். காவற்படைக்கு அதை தெரிவித்தபோதும்கூட அவர்கள் அங்குசென்று பார்க்க தயாரில்லை. போக்குக்காட்டிவிட்டு திரும்புகிறார்கள். ஆதிக்க சாதியுடன் கைகோர்த்து நிற்பதால் பெறும் கள்ள இலாபங்களை சுகிக்க அவர்களின் கடமையுணர்வு வாளாதிருந்திருத்தல் கூடும். ஊடகங்கள் சாதிவெறியென அழுத்தி சொல்லாமல் கள்ள மௌனம் காக்கிறது. அரசியல்வாதிகள் ஈழப்பிரச்சினை தீர்வுக்காக போராடிய களைப்பில் உறங்கிக் கிடக்கிறார்கள். தீராத ஆசையோடு இறந்துபோன வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் (தமிழீழத்தின்) ஆவி அங்கு உலவுவதாக அவர்கள் கனவு கண்டிருத்தலும் கூடும்.
உயர்சாதியையும் ஒடுக்கப்பட்ட சாதியையும் பிரிக்கும் தெருவில் ஒரு பக்க தகர வேலி பளபளப்பாய் இருக்கிறது. மற்றப் பக்க தகரவேலி முற்றாக வீழ்ந்து கிடக்கிறது. அதை வீழ்த்திக் கடந்த சாதிவெறியானது கதவுகளை வாளால் கொத்துகிறது. இருசக்கர வாகனங்களை உடைத்து நொருக்குகிறது. பிறகு கல்மழை பொழிகிறது. ஒடுக்கப்பட்ட அந்த மக்களின் வாழ்வு, இருத்தல் எல்லாம் இந்த வன்முறைக்கு அஞ்சியிருக்க, ஒவ்வொரு காலையும் தொடங்குகிறது. மாலை முடிகிறது. கைப்பற்றப்பட்ட ஒரு பிரதேசம்போலான அச்ச வாழ்வு அவர்களதாகிறது. இது இன்றுநேற்றல்ல… இருபது ஆண்டுகளுக்கு மேலாக அச்சவுணர்வுடன் கழிந்துகொண்டிருக்கிறது வாழ்வு என்கிறார்கள். அதாவது 2009 க்கு முன்னரும்கூட!
இந்த நிலையில் தமிழீழம் கேட்டு நாம் போராடினோம் என நினைக்க சிந்தனை கூசுகிறது. தமிழீழம் கிடைத்தால் சாதி ஒழியும் என எடுத்த பாடக்கொப்பிகளின் கிழிசலோடு தமிழ்த்தேசிய வீரர்கள் இப்போதும் வரக்கூடும்.
தமிழகத்தில் கூச்சலிடும் சீமான் “இந்தச் சேட்டைகளை (எந்தச் சேட்டை… சாதியவாதத்தை) இயக்கத்துக்குள்ளை வைச்சுக்காதையுங்க, வெளியிலை வைச்சுக்கோங்க என அண்ணன் சொன்னான்” என்று குரலை முறுக்குகிறார். வெளியிலை வைச்சுக்கோங்க என பிரபாகரன் சொன்னாரா இல்லையா தெரியாது. ஒருவகையில் அதைத்தான் அவர் செய்தார். சமூகத்துள் சாதிய மனநிலை பொங்கி எழாமல் சட்டத்தால் அடக்கி வைத்தார். கருத்தியல் தளத்தில் சாதிய மனநிலையை தகர்க்க முயலவில்லை. மாறாக தமிழர்களின் ஒற்றுமையை குலைத்துவிடும் என நம்பினார். அந்த சாதிய மனநிலை வாலைச் சுருட்டிவைத்துக் கொண்டு பொந்துள் உறங்கியது. இப்போ ஒட்டுமொத்த சமூகத்துள்ளும் போராட்டமும் போரும் வளர்த்துவிட்டிருக்கும் வன்முறை உளவியலின் தடத்தில் நகங்ளைப் பதித்தபடி பதுங்கித் திரிகிறது.
சாதியப் பிரச்சினையை தமிழனுக்கு நாடு கிடைச்சால் தீர்த்துவிடுவோம் என இப்போதும்கூட நம்புகிற லூசுத்தனம் இங்கை சிலுப்பி முடிஞ்சு அங்கை (தமிழகத்தில்) இப்போ மேடையில் சிலுப்புகிறது. எந்த விடுதலை இயக்கமானாலும் அது தேசியவிடுதலைக்குள் எல்லாவித சமூக விடுதலையையும் உள்ளடக்கிவிடலாம் என்று கண்ட கனவு சிந்தனை வளர்ச்சியின்மையால் ஏற்பட்டது. இயக்கத்துள் அதை தண்டனை முறையால் அமுக்கி வைப்பது சுலபம். ஒருவேளை பிரக்ஞை பூர்வமாகவும் பல போராளிகள் செயற்பட்டிருக்கலாம். அதே வன்முறைகளாலும் சட்டத்தாலும் அமுக்கிவைக்கப்பட்ட சாதிவெறியானது நீறுபூத்த நெருப்பாக யாழ் சமூகத்தில் எரிகிறது. தலைவர் இருந்தால் இதெல்லாம் நடக்குமா என சொல்ல இப்பவும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது இன்னொரு குரூரமான சுவாரசியம்.
சாதியவிடுதலைக்காக உழைக்க எந்த இயக்கமும் இல்லை. எந்த தமிழ் அரசியல் கட்சியும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடப் போவதில்லை. அதற்கான பாரம்பரியமும் கடமையும் இடதுசாரியக் கட்சிக்கு உள்ளது. சாதியத்தை உரக்கப் பேசி வாக்குகள் கேட்கிற வேட்கை அதை எதிர்த்துப் போராட வழிவகைகளை செய்வதில் இருக்க வேண்டும். கருத்தியல் தளத்தில் வேலைசெய்ய வேண்டும், வெகுஜன அமைப்பாதலை சாதியத்துக்கு எதிராக அணிதிரட்ட வேண்டும், களப்பணியில் ஈடுபட வேண்டும்… என்றெல்லாம் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. இந்த மார்க்சிய பாலர் பாடம் தெரியாமல் அவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் அவர்களாக இல்லை.
“சாதிய ஒடுக்குமுறைகளுக்கு தீர்வுகாண மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஒற்றுமையும் வெகுஜன எழுச்சியும் எற்படவேண்டும்” என பொத்தாம் பொதுவாக அறிக்கைவிடுவது பிரயோசனம் தராது. ஒருவகை பொறுப்பற்றதனமும் கூட. இவையெல்லாம் ஒரு ஒளியாக பிரவகித்து வந்து இறங்குமா என்ன. அதை செய்ய இடதுசாரிகளைவிட யார் பொருத்தமானவர்கள். ஈழத்தில் நிலவிய மோசமான சாதிய ஒடுக்குமுறைகளை 60 களில் இடதுசாரிகள் எதிர்கொண்டதால்தான் தீண்டாமை அம்சங்கள் பல நொருங்கி வீழ்ந்தன. அதன் தொடர்ச்சி அற்றுப்போனது ஒரு துயரம். அந்தப் பாராம்பரியத்தை இடதுசாரியம் மீண்டும் சிந்தனையில் எடுக்குமா, செயற்படுமா?
இன்னொருபுறம் பிரக்ஞையுள்ள மனிதர்களை உருவாக்க பாடசாலை குடும்பம் மதம் போன்ற சிவில் சமூக நிறுவனங்கள் எப்போ முன்வரப் போகின்றனவோ தெரியவில்லை. வாழ்வியல் முறைமைகளில், அறிவுத்தளத்தில், பிரக்ஞையூட்டும் வழிவகைகளில் அதாவது உணர்வுத் தளத்தில்… என ஒரு ஆரோக்கியமான அகம் கொண்ட மனிதரை உருவாக்கும் விதத்தில் சிவில் சமூக நிறுவனங்கள் மாற்றம் பெறுமா?
- ரவி (05102021)
தொடர்புடைய வேறு இணையத்தளப் பதிவு: https://vithaikulumam.com/2021/09/30/30092021/