விடுதலையின் நிறம்

அடுத்தநாள் காலையில் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்படப்போகும் தனது குழந்தைகளை ஊடுருவிக் கவனித்துக் கொண்டிருப்பாள்; விடிவதற்குமுன் அந்தக் குழந்தைகள் செத்துவிட வேண்டும் என்றுகூட அவள் விரும்புவாள், தனது குழந்தைப்பருவத்திலிருந்தே தன்னை காட்டுத்தனமாக நடத்திய அந்த அமைப்பால் இழிவுபடுத்தப்பட்ட ஓர் அப்பாவித் தாய் அவள். “(பக்.90)

அடிமைமுறைமையிலிருந்து வடியும் ஊனமாக இந்த வரிகள் நெளிகின்றன.

மனிதர்கள் களவாடப்பட்டார்கள்
பண்பாடுகள் சிதைக்கப்பட்டன.
மொழிகள் சிதைக்கப்பட்டன.
மதங்கள் அழிக்கப்பட்டன
வளங்கள் களவாடப்பட்டன
உழைப்புகள் களவாடப்பட்டன
கனவுகள் சிதைக்கப்பட்டன
சுயம் சிதைக்கப்பட்டது
சுதந்திரம் களவாடப்பட்டது
எல்லாமுமான வாழ்வு களவாடப்பட்டது.

அந்நிய மண்
அந்நிய மொழி
அந்நியப் பண்பாடு
அந்நிய மதம்
வாழ்வீர்ப்புவிசை அற்ற சூனியப் பிரதேசம்
அந்தர நிலை
அடிமை வாழ்வு

மனித வரலாற்றில் நிகழ்ந்த உச்சபட்ச கிரிமினல்தனமான அடிமை முறைமைக்குள் அகப்பட்டு சுழன்ற கறுப்பின மக்களின் குரல்களைப் பதிவுசெய்த நூல்களையெல்லாம் வாசிக்கிறபோது எழுத்துகளுக்கிடையால் பாறாங்கல்லை யாரோ உருட்டிச் செல்வது போன்ற உணர்வு எழுகிறது. அங்கு வானம் நீலமாக இல்லை. சூரியன் கதிர்களை உதிர்த்து கிழடுதட்டிப்போய் காட்சி தருகிறது. துயரமும் கோபமும் மூளைக்குள் புகுந்துகொள்கிறது.

ஹரியட் ஜக்கோப்ஸ் தனது அடிமைவாழ்வின் அனுபவங்களை மீட்டி எழுதிய நூல்.

“அடிமையாக இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. சட்டத்தால் அல்லது பழக்கவழக்கத்தால் எந்தப் பாதுகாப்பும் தரப்படாமல் இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. இன்னொருவரது விருப்பத்துக்கு முழுமையாக அடிபணிய வேண்டியவராக சட்டங்களால் விற்பனைக்குரிய ஒரு பொருளின் நிலைக்குத் தள்ளப்பட்டவராக இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது…” என்கிறார் ஹரியட்.

ஹரியட் ஜக்கோப்ஸ் தனது அடிமைவாழ்வின் அனுபவங்களை மீட்டி எழுதிய நூல் Incidents in the life of a slave girl. (தமிழில் “விடுதலையின் நிறம்” என தலைப்பிடப்பட்டிருக்கிறது).1861 இல் எழுதப்பட்ட இந்நூல் விற்றுத் தீர்ந்தபின் 1973வரை திரும்ப பதிப்பிக்கப்படாமல் இருந்தது. அமெரிக்க வெள்ளைக் கலாச்சார இலக்கியத்திலிருந்து இருட்டடிப்புச் செய்ய மேற்கொள்ளப்பட்ட கள்ளநோக்கம்கூட காரணமாக இருக்கலாம்.

ஒரு பெண்ணாக இந்த ஆணாதிக்க சமூகத்துள் எதிர்நோக்கும் சவால்களும், ஒரு கறுப்பின சமூகத்தவளாக நிறவெறிகொண்ட சமூகத்துள் எதிர்நோக்கிய சவால்களும், அடிமை முறைமையை இயல்பானதாக ஆக்கிய வெள்ளை சமூகநிறுவன மனப்பான்மைக்குள் எதிர்நோக்கிய சவால்களும் கொடுமைகளும் என நூல் பல பரிமாணங்களைத் தொட்டு நிற்கிறது. ஒரு சுயசரிதையாகவும் அதேநேரம் வரலாற்று ஆவணமாகவும் விரிகிறது. லிண்டா என்ற பாத்திரப் பெயருடன் அவள் இந் நூலுக்குள் திரிகிறாள்.

1813 இல் ஹரியட் பிறந்தார். தாயும் தந்தையும் இருவேறு எசமானர்களின் அடிமைகள். ஆறு வயதில் தாய் இறக்கிறார். 13 வயதாகும்போது தந்தையும் இறக்கிறார். அவளின் பாட்டி மோல்லியின் அரவணைப்பில் இருக்கிறாள். மோல்லி விற்கப்படுகிறாள். அவளை வாங்கிய எசமான் அவளுக்கு விடுதலை அளிக்கிறான். மோல்லியுடன் வளர்கிறாள் ஹரியட். அதாவது லிண்டா.

அடிமைகளுக்குப் பிறந்ததால் அடிமையாகவே -சட்டத்தாலும் மரபாலும்- வாழ நிர்ப்பந்திக்கப்படுகிற ஒரு சிறுமியாக அவள் வளர்கிறாள். அடிமையாக வேலைசெய்கிறாள். எஜமானின் பாலியல் பண்டமாக இருக்க மறுக்கிறாள். அதை அவள் சாதிப்பதில் நல்ல பிசாசை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு வருகிறாள். வெறும் மனிதாபிமானம் மட்டுமே கொண்ட அயல்வீட்டு வழிக்கறிஞர் சாண்ட்ஸ் இவள் மீது கொண்ட காதலை அவள் ஏற்கிறாள். கர்ப்பம் தரிக்கிறாள். அதை அவள் துணிச்சலாக எசமானுக்குச் சொல்ல அவன் வெடித்தெழுகிறான். இதன்மூலம் அவளது எஜமானுக்கு அவள் சாத்தானாகத் தெரிகிறாள். சவாலாகத் தெரிகிறாள். இரண்டாவது குழந்தைக்கும் சாண்ட்ஸ்தான் தகப்பன். சாண்ட்ஸ் நினைத்தால் அவளை அடிமையாக வாங்கி அவளுக்கு சுதந்திர அந்தஸ்தை கொடுத்து அடிமை முறையிலிருந்து விடுவிக்கலாம். அவன் அதை விரும்பினானா இல்லையா என்பது தெரியாது. ஆனால் எசமான் “உன்னை நான் ஒருபோதும் எந்த விலைக்கும் அவனுக்கு (சாண்ட்ஸ் க்கு) விற்கப்போவதில்லை. எனது அடிமையாகவே நீ இருக்க வேண்டும்” என தீர்மானகரமாக அறிவித்துவிட்டிருந்தான்.

அன்பாலும் பாசத்தாலும் தன்னால் பெற முடிந்ததைத் தவிர வேறு எந்தக் கட்டுப்பாட்டையும் உங்கள்மீது செலுத்தாத ஒருவரை காதலராகக் கொள்வதில் சுதந்திரத்தோடு தொடர்புடைய ஏதோவொன்று இருக்கிறது. (154)

தப்பியோடுதல் என்பது சுலபமானதல்ல என்றபோதும் அவள் துணிச்சலாக தப்பியோடுகிறாள். மனிதாபிமானமுள்ளவளாக இருந்த ஒரு வெள்ளையினப் பெண்மணி அவளுக்கு இரகசிய அடைக்கலம் கொடுக்கிறாள். சட்டப்படியும் அது ஒரு குற்றச் செயல். அடிமை வேட்டைக்காரர்களின் தேடுதல் அசுகை அந்தப் பெண்மணிக்குத் தெரிந்துவிடுகிறது. அவளும் கண்காணிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறபோது லிண்டா மீண்டும் பாட்டி வீட்டுக்கு இரகசியமாக வந்து சேர்கிறாள். அந்த வீடு எசமானின் மாளிகையிலிருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவில்தான் இருக்கிறது. இரகசிய இருப்பிடம் அந்த வீட்டுக்குள் அமைக்கப்பட்டு அங்கு அவள் தலைமறைவாக இருக்கிறாள். தனது இரு குழந்தைகளுக்கும்கூட தன்னை காட்டிக்கொள்ள முடியாதபடி ஒன்பது அடி நீளமும் ஏழு அடி அகலமும் கொண்ட அந்த இரகசிய இருப்பிடத்துள் ஏழு வருடங்களை கழிக்கிறாள். அந்த பொந்துபோன்ற இருப்பிடத்துள் இருந்தபடி சிறு துவாரமொன்றினூடாக தனது குழந்தைகள் கட்புலத்துள் தென்படுவதை காண காத்திருப்பாள் அவள். சிறுவெளியுள் சிறைப்பட்டிருந்த அவளது உடலும் பலவீனமாகிறது. மனம் மட்டும் ஓர்மமாக இருந்தது. தன்னைப்போல் தனது குழந்தைகளும் அடிமையாக வாழ நேரக்கூடாது. சுதந்திர மனிதர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அதற்கு வட மாநிலங்களுக்கோ அல்லது கனடாவுக்கோ தப்பிப் போய்விட வேண்டும். குழந்தைகளோடு குடும்பமாக இணைந்து சுதந்திர மனிதராக இருக்க வேண்டும் என அவள் விடாப்பிடியாக இருந்தாள். மீண்டும் தப்பி, வட மாநிலத்துக்கு கள்ளப் பயணம் செய்கிறாள்.

அந்த வாழ்வும் போராட்டமும் உடல் உபாதைகளும் மன உளைச்சல்களும் அவளது எழுத்தை நனைக்கிறது. தனது சுதந்திரத்தை சாத்தியமாக்க வடக்கு நோக்கிய அவளது பயணமும் எதிர்கொண்டவைகளும் சுதந்திர மாநிலங்களாக தம்மை அறிவித்துக்கொண்ட வடக்கு மாநிலங்களின் நிறுவனமயப்பட்ட இனவெறி மனப்பான்மைகளும் எல்லாமுமாகி லிண்டாவை அலைக்கழித்த கதை விடுதலையின் நிறம். நேரடி சாட்சியமான இந்த எழுத்துகள் தம்மை நாகரிகடைந்தவர்களாக பிரகடனப்படுத்திய வெள்ளையின மேலாதிக்கத்தின் அருவருப்பான முகத்தை தனது பங்குக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் நடைமுறையில் இருந்த அடிமை முறைமையை வடக்கு மாநிலங்கள் அமைப்பு முறையில் கொண்டிராத போதிலும் நிறுவனமயமாக்கப்பட்ட வெள்ளையின மேலாதிகக் கருத்தியல் கள்ள ஆதரவு வழங்கிக் கொண்டே இருந்தது. அவை கண்ணுக்குத் தெரியாத சிறையாக (invisible prision) கறுப்பின மக்களுக்கு இருந்தன. தெற்கிலிருந்து தப்பியோடி வடக்குக்கு வந்தால் தாம் சுதந்திரமான மனிதர்களாக மாறலாம் என கறுப்பின மக்கள் நம்பினார்கள். நல்ல பிசாசை அவர்கள் தேர்ந்தெடுப்பது தவிர்க்க முடியாததாக இருந்தது. ஆனால் தெற்கிலிருந்து தப்பியோடி வருபவர்களை அடையாளம் கண்டு பிடித்துச் சென்று தெற்கின் பழைய எசமானர்களிடம் ஒப்படைக்கும் அமைப்புகள் வடக்கில் இருந்தன. அதேநேரம் அடிமைமுறை எதிர்ப்பு இயக்கங்கள் செயற்பட்டதையும் அவர்களது ஆதரவுநிலை செயற்பாடுகளையும் ஹரியட் சுட்டிக்காட்டத் தவறவில்லை. “கறுப்பு அடிமைகளின் கதை” (Uncle Tom’s Cabin) நூலில் இவர்களின் துணிச்சலான காட்சிகள் விவரிக்கப்பட்டதை நினைவுமருகிச் செல்ல வைக்கிறது

அடிமைத்தனத்திலிருந்து தப்பியோடி வடக்குக்கு வந்தவர்களை மீண்டும் அடிமைத்தனத்துக்குள்ளேயே தூக்கியெறியக்கூடிய சட்டத்தை சுதந்திர மாநிலங்கள் ஆதரிக்கின்றன. இந்த நிலையில் அடிமைகள் (சுதந்திர) மனிதர்களாக மாறிவிடலாம் என எவ்வாறு தீர்மானிக்க முடியும்” என்கிறார் ஹரியட்.

அடிமைகள் எழுத வாசிக்க தடைசெய்யப்பட்ட அடிமைமுறை சூழ்ச்சிக்குள் லிண்டாவின் எசமானி அவளுக்கு எழுத வாசிக்கவும் தையல்வேலை செய்யவும் பயிற்றுகிறாள். தனது சகோதரியின் மகளுக்கு எதிர்கால அடிமையாக லிண்டாவை உயில் எழுதி வைக்கிறாள். லிண்டாவின் வயதை ஒத்தவள் அவள். கள்ளங்கபடமற்ற குழந்தைகள் இருவரும் கூடி விளையாடி குதூகலிக்கின்றனர். தோழிகளாக இருக்கின்றனர். காலம் அவர்களுக்கு கருத்துகளை ஊற்றி வளர்க்கிறது. லிண்டா வட மாநிலத்தில் அச்சத்தோடு வாழ்ந்துகோண்டிருந்தபோது, எசமானியாக வளர்ந்துவிட்ட அந்த முன்னாள் தோழி லிண்டாவுக்கு கடிதம் எழுதுகிறாள். என்னிடம் வா என்கிறாள். நீ எனக்கு அடிமையாக இருக்க விரும்பாவிட்டால் சுதந்திரமானவளாக இருக்க உன்னை அனுமதிக்கிறேன் என்கிறாள். லிண்டா எந்தக் குழப்பமும் அடையவில்லை. ஒரேயடியாக அந்தக் குரலை மறுக்கிறாள்.
அடிமை முறைமைக்குள் வாழ்ந்த அவளது வாழ்வனுபவங்கள் எல்லாவற்றையும் எல்லோரையும் சந்தேகிக்க வைத்தபடியே இருந்தது, அது சிறுவயதுத் தோழியாக இருந்தாலும்கூட!


“அடிமைகள் தந்திரக்காரர்களாக இருப்பதை யாரால் குற்றம் சொல்ல முடியும். அவர்கள் அப்படி இருக்கும்படி இடைவிடாமல் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். தங்கள்மீது அதிகாரம் செலுத்தும் கொடுங்கோலர்களின் பலத்துக்கு எதிராக பலவீனமானவர்களிடமும் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இருக்கும் ஒரே ஆயுதம் அதுதான்” (229)

ஆபிரிக்கர்களை அடிமையாக இறைவன் படைத்தான் என பாதிரிகள் இந்த அடிமை முறைக்கு சேவகம் செய்தனர். “வேலைக்காரரே, நீங்கள் கிறஸ்துவுக்கு கீழ்ப்படிகிறவர்கள்போல சரீரத்தின்படி உங்கள் எசமானர்களாக இருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடமற்ற மனத்தோடும் கீழ்ப்படியுங்கள்” என அவர்கள் ஓதினர். கறுப்பின மக்களை அவர்களின் பாரம்பரிய மண்ணிலிருந்தும் பாரம்பரிய கடவுளர்களிடமிருந்தும் பிய்த்து எடுத்து, நாடு கடத்திக் கொண்டுவந்து பைபிளை நீட்டி எல்லோரையும் கிறிஸ்தவர்களாக மாற்றினர். அடிமை முறையின் கொடுமைகளை துயரங்களை சொல்லவும் கதறி அழவும் மனிதர்கள் இல்லாத ஒரு பூமியில் அவர்கள் சிலுவையின் நிழலில் அதை செய்தார்கள். உருகினார்கள். கண்ணீர் விட்டார்கள். சிலுவை செழித்து வளர்ந்தது. பாதிரிகளின் இந்த சூழ்ச்சிகரமான வார்த்தைகளையெல்லாம் ஹரியட் விலாவாரியாகப் அம்பலப்படுத்துகிறார்.

“அடிமை முறை என்பது அறவியல் ரீதியிலான சமூக ரீதியான அரசியல் ரீதியான மாபெரும் வரப்பிரசாதம். அது எசமானருக்கு வரப்பிரசாதம். அடிமைக்கு வரப்பிரசாதம்” என மிசிசிப்பி செனற்றர் பிரவுண் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிவித்தார் (263)

இந்த எல்லா கொடுமைகளையும் சூழ்ச்சிகளையும் ஆபத்துகளையும் மூளைத்தோய்ப்புகளையும் எதிர்கொண்டு வாழ்ந்த ஒரு அடிமை மனிதரை அவரது மனக் கொந்தளிப்புகளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு எமது மனிதாபிமானம் மட்டும் போதாது. அதனால்தான் ‘அடிமையாக இருத்தல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது’ என வாசகரை மறித்து சொல்லிவிடுகிறார். வாசிப்பை கவனப்படுத்தி அனுப்புகிறார்.

அடிமைமுறை ஏதோ வெள்ளையினத்தவரில் ஒரு பகுதியினர் புரிந்த கொடுமை என்று மட்டும் புரிந்துகொள்ளப்பட முடியாதது. அது நிறுவனமயப்படுத்தப்பட்ட கருத்தியலைக் கொண்ட மிகவும் சிக்கலான ஒரு வடிவம். அந்தக் கருத்தியல் வெள்ளையின மேலாதிக்கக் கருத்தியல். இந்த இனவெறி அல்லது நிறவெறி வெள்ளையின மேலாதிக்கத்தின் அடித்தளம் என்பதால் அது கால மாறுதல்களோடு பல பரிமாணங்களை எடுத்து நாகரிகமாக சொல்லுடுத்தி வெவ்வேறு வடிங்களில் வெளிப்பட்டு இப்போ நுண்களங்களில் தன்னை உருமாற்றி இயங்கியபடியே இருக்கிறது. “உலகின் மிகப் பெரும் கிரிமினல்கள் வெள்ளையர்கள்” என மல்கம் எக்ஸ் பிரகடப்படுத்தியதை இந் நூலை வாசிக்கும்போதும் உணர முடியும். ஆம். அடிமைமுறைமை என்பது உலகின் உச்சபட்ச கிரிமினல்தனம். அந்தக் கறை எதனாலும் கழுவப்பட முடியாதது.

  • ரவி (19072021)

*

Incidents in the life of a slave girl என்ற இந்நூல் தமிழில் விடுதலையின் நிறம் என தலைப்பிடப்பட்டு 2004 இல் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. வி.நடராஜ் அவர்கள் இதை தமிழாக்கம் செய்துள்ளார்.

2 thoughts on “விடுதலையின் நிறம்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: