பொத்துவில்லிலிருந்து பொலிகண்டிவரை! – அடையாள நடைப்பயணம்.
அரசியலில் சாத்தியப்பாடுகள் குறித்தே பேசமுடியும். பெரும்பா1லும் வெளித்தெரிகிற சாத்தியப்பாடுகளையே பொதுப்புத்தி முன்வைத்து வியாக்கியானம் செய்யும். வெளித்தெரியாமல் இயங்கும் நுண்ணரசியல் பற்றி புரிவது அவளவு இலகுவல்ல. ஆனால் இந்த நுண்ணரசியலின் உணர்வுதான் சமூக இயங்குதளத்தை நிர்மாணிக்கிறது. அது பொதுப்புத்தியின் வழி செயலூக்கம் பெறுகிறது.
பொதுப்புத்தி என்பதை கிராம்சி இப்படி வரையறுக்கிறார். அது மதம், வரலாறு, ஐதீகம், மூடநம்பிக்கைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், அனுபவங்கள் என்பவற்றை உள்ளடக்கியிருக்கிற அதேநேரம், ஒவ்வொரு தத்துவ, சித்தாந்தப் போக்குகளின் அனுபவத் தொகுப்புகளின் வரலாற்று ரீதியிலான விளைவு பொதுப்புத்தி என்கிறார். பொதுப்புத்தி என்ற வடிவத்தில்தான் தத்துவம் பரந்துபட்ட மக்களிடையே நிலவுகிறது. அதனால் அதற்கு ஓர் உலகக் கண்ணோட்டம் இருக்கிறது என்பார் கிராம்சி. அதனால் பொதுப்புத்தி நிராகரிக்க முடியாதது. அதேநேரம் மாறக்கூடியது. புறநிலையிலிருந்து தரப்படுகிற விஞ்ஞானக் கருத்துகள், தத்துவங்கள், சித்தாந்தங்கள், செயற்பாடுகள், அனுபவங்கள்… என்பன அதன்மேல் தாக்கம் செலுத்துகிறது. அதை மாற்றி வளர்ச்சிநிலைக்கு இட்டுச் செல்கிறது.
இந்த வளர்ச்சிநிலை ஒரு சீராக நடைபெறுவதில்லை. அதில் பாய்ச்சல் இடம்பெறவும் முடியும். தாம் அடக்கப்படுகிறதாக உணர்கிற மனிதஉயிரி அல்லது சமூகம் அந்த அடக்குமுறைவழி பெறுகிற உணர்வும் அனுபவமும் உடைப்புகளை ஏற்படுத்தலாம். அல்லது வடிகாலாக தனக்கு கிடைக்கிற பல்வேறுபட்ட தளங்களை அது பயன்படுத்த முயலலாம். இந்த இடங்களில் சரியான வழிகாட்டல் இல்லாதவிடத்து, அது பாதகமான விளைவுகளை உற்பத்தி செய்துவிடுகிறது. இலங்கை அரசியலில் தேர்தல் அரசியல்வாதிகள் அதை நிரப்புகிற நிலைதான் இருக்கிறது. (இங்கு தேர்தல் அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம் செயற்படலாம் அல்லது அம்பலப்படலாம்).
இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் சமூகப் புத்திஜீவிகள் வெளியிலிருந்து ‘விமர்சனம்’ செய்வதோடே தம்மை மட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்றே தோன்றுகிறது. இன்னொருபுறம் சமூகத்தின் பொதுப்புத்தி மட்டத்தை உயர்த்துவதில் அவர்களின் பங்களிப்பும் முக்கியமானது. இதையும் அவர்கள் தவறவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என சொல்லத் தோன்றுகிறது.
பொத்துவில்லிலிருந்து பொலிகண்டிவரை (P2P) என்ற இந்த அடையாள நடைப்பயணம் திட்டமிடப்பட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட அகிம்சைவழி போராட்ட முறைமையை கொண்டதல்ல என்ற அவதானிப்பை சொல்ல முடிகிறது. அதனால் ஒரு பெரும் மக்கள்திரட்சியை அது நிகழ்த்த முடியாமல் இருக்கிறது. என்றபோதும் அது நுண்ணரசியல் தளத்தில் ஏற்படுத்தக்கூடிய முக்கிய புள்ளியாக தமிழர் என்ற அடையாளத்தின்கீழ் அல்லது ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்கள் என்ற அடையாளத்தின்கீழ் தமிழ்-முஸ்லிம் மக்களின் இணைவுக்கான தொடக்கப் புள்ளியையாவது சாதிக்கும் சாத்தியம் உண்டு.
தமிழ் முஸ்லிம் மக்களை பிரிக்கிற மேலாதிக்க அரசியல் அல்லது அதிகாரம் குறித்து நாம் பேசுகிறபோது, அந்த சமூகங்கள் பிணைந்திருக்கிற தளத்தையும் சேர்த்தே அடையாளம் காண சொல்கிறது. “பிரித்தல்” என்ற சொற்பதம் முற்றாக பிரிந்திருக்கிற நிலைமையில் அர்த்தமற்றது. எனவே பிரித்தல் எனும்போது, இரண்டு சமூகங்களையும் இணைக்கும் தளமொன்று உண்டு என்பதும் சேர்ந்தே அர்த்தப்படுகிறது. அது பண்பாட்டு இசைவாக்கம், மொழிவழி பொதுமை, வாழ்விட அல்லது பிரதேச சார்புகள், பரஸ்பர வாழ்வியல் ஊடாட்டம், பொருளாதார சார்புகள், பகிர்வுகள், மரபுகள், நம்பிக்கைகள்.. என பல காரணிகளைகளைக் கொண்ட இயங்குதளம்! அது இந்த P2P போராட்டத்தால் அருட்டப்பட்டாலே அது நேரம்சம்கொண்ட மாறுதல்தான்.
2009 யுத்தத்தின்பின் புகலிடத்திலிருந்து எழுகின்ற குரல்கள் சில விசித்திரமானவையாகவே இருக்கிறது. அது போர் ஏற்படுத்திய தாக்கமும் அழிவும் மட்டுமல்ல, அந்த மக்கள் இனியும் அப்படி பொறிக்குள் மாட்டிவிடக்கூடாது துயரப்படக்கூடாது என்ற ஆதங்கமும்தான் என்பதை நாம் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். இதன் அடிப்படையில் அரசை ஆத்திரமூட்டக்கூடாது என்ற குரல்கூட எழுகிறது. கணவனை ஆத்திமூட்டக் கூடாது, பொறுமையாக இருக்கோணும் என சொல்லியனுப்பும் ஒரு தாயின் பச்சாதாபக் குரலாக அதை புரிந்துகொள்ள முடியும். அடிமையாகவே இருந்துவிடு, தாறதைப் பெற்று உயிர்வாழ், அதுவே விதி, அதுவே வழிமுறை என்றவாறாக ஒருவர் அதை அர்த்தப்படுத்தவும் முடியும்.
தமிழ்த் தரப்பு அரசியல் அல்லது இயக்க அரசியலின் வங்குரோத்துத்தனம் அல்லது போதாமைகளை சதா காரணம் காட்டியபடி எல்லாவற்றையும் எதிர்த்தும் கிண்டலடித்தும் புத்திசொல்லியும் எழும் எழுத்துகள் பலிவீனங்களுக்கும் அறிவுச் சோம்பேறித்தனத்துக்கும் தீனி போடலாம். சமூகத்தை முன்தள்ள அவை உதவா. (அப்ப என்ன சொல்லிறியள் சனத்தை பேந்தும் அடிபடச் சொல்லுறியளா என்று மொழிபெயர்க்காமல் இருந்தால் சரிதான்).
இந்திய அரசையே உலுக்கிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிடப்பட்ட போராட்டத்தை அரசை ஆத்திரப்படுத்தக்கூடாது என்ற கொசுறுத் தத்துவத்தினூடாக எப்படி விளங்கிக் கொள்ள முடியும். போரால் உருக்குலைந்துபோன நிலையிலும், ஒரு சமூகம் தன்மீது தொடரும் புதியவகை ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ள தனக்குத் தெரிந்த சிறு துரும்பையாவது பற்றிப்பிடிக்க எத்தனிக்கும். அந்த மக்களே தமது இருப்பின் மீதான அச்சுறுத்தலை எதிர்கொள்ள தனக்கான போராட்ட வடிவங்களை அரசியல் செயற்பாடுகளை தீர்மானிப்பர். அது நெடிய வரலாறாகக்கூட அமையலாம். ஆயுதப் போராட்டம் எதிர் அகிம்சைப் போராட்டம் என்ற இரு முனைகளை மட்டுமல்ல, வேறு சாத்தியப்பாடான புள்ளிகளை இயங்குநிலையிலிருக்கிற ஒரு சமூகம் அடையாளம் கண்டபடி முன் நகரும். அதன் இயங்குதளத்தில் P2P யும் ஒன்று. அவ்வளவுதான் !
- 05022021