1983 யூலை கடைசிப் பகுதி. இரத்மலானை விமான நிலையம் அகதிமுகாமாக உருமாறியிருந்தது. ஆயிரக்கணக்கான அகதிகள். குழந்தைமையிலிருந்து கிழம்வரை பருவமுற்றிருந்தனர் அவர்கள். நாம் 55 பேரும் ஓரிடத்தில் குழவாகியிருந்தோம். படுக்கை, இருப்பு எல்லாம் அந்த இடத்துண்டை எமது பிரதேசமாக ஆக்கியிருந்தது. அனைவரும் மொரட்டுவ பல்கலைக் கழகத்திலிருந்து பத்திரமாக கொண்டுவரப்பட்டிருந்தோம். எம்மாலான உதவிப் பணிகளில் நாம் அநேகமாக ஓய்வற்றிருந்தோம். ஒரு கண்டத்தை கடந்து வந்ததான நினைப்பு எல்லாக் களைப்பையும் வெற்றிகொண்டது.
யூலை 24ம் தேதியென நினைக்கிறேன். எனது இரண்டாம் வருட பரீட்சை அன்றுதான் முடிவுற்றிருந்தது. நாம் வீடு கிளம்பும் ஆர்வத்தையெல்லாம் வாரியள்ளி தீயில் கொட்டியபடி புகை மண்டலம் எழுந்தது, தொலைவில்!
பயம். சந்தேகம். பதட்டம். எல்லாமுமாய் தோய்ந்த அந்தப் பொழுதில் எல்லா சிங்கள மாணவர்களும் வளாகத்தை காலிபண்ணிப் போய்விட்டிருந்தனர்.
நாம் தனித்துவிடப்பட்டதாய் உணர்ந்த அந்தப் பொழுதில் அவர்கள் வந்தனர். சக சிங்கள மாணவர்கள். ஜேவிபியினர். (ஏற்கனவே அவர்களில் சிலருடன் தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தப்பட்ட அரைகுறை உரையாடல்கள் செய்வதுண்டு.) அவர்கள் எம்மை அரவணைத்தனர். வளாகத்துள் இருந்த தங்குமிட கட்டடத்துள் (ஹொஸ்ரல்) தங்கியிருந்தோம் நாம். பின்னால் இருந்த காடு உருத்திரண்டு கிடந்தது. அவர்கள் சாப்பாட்டுப் பார்சல்களுடன் வந்தனர். “எம்மாலியன்றவரை உங்களை பாதுகாப்போம்“ என்றனர். தம்மால் முடியாதநிலை வந்தால் பின்வழியால் காட்டுக்குள் ஓடிவிடும்படி சொல்லிவைத்தனர்.
இரவு அரக்கிக்கொண்டிருந்தது. நாம் மின்விளக்குகளை அணைத்துவிட்டு யன்னலோரமாய் பார்த்துக்கொண்டேயிருந்தோம். அன்றைய இரவு தூக்கம் என்ற சொல்லை தொலைத்திருந்தது. விடியும்வரை அந்த சக மாணவர்கள் கையில் பொல்லுகளுடன் ‘சென்றி’யாயிருந்தனர்.
மறுநாள் அவர்கள் மீண்டும் பார்சலுடன் வந்தனர். “இனி உங்களை எம்மால் பாதுகாப்பது முடியாத காரியம்போல் தெரிகிறது. வீதிநிறைந்த சனம். கையில் கொலைக் கருவிகளுடன் நின்று கத்துகின்றனர். நாம் டீனுடன் (Dean) கதைத்திருக்கிறோம். பொலிசார் வருவர். அவர்கள் உங்களை இரத்மலானை விமாநிலையத்துக்கு அழைத்துச் செல்வர்.“ இப்படி அவர்கள் சொன்னபோது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நிற்பதாக உணர்ந்தோம்.
பொலிஸ் ஜீப், வான் என ஐந்தாறு வாகனங்களினுள் நாம் அடைக்கப்பட்டோம். வளாக வாயிலினூடு நழுவிக்கொண்டிருந்தன வாகனம். வீதி முழுவதும் பொல்லுகளும் கத்திகளும் முளைத்து உயர்ந்து உயர்ந்து பதிந்துகொண்டிருந்தன. காட்டுக் கத்தல்களை அவை உற்பத்தி செய்தன.
இப்போ நாம் இரத்மலானை விமான நிலையத்தில். வெறுமை எமைத் தொற்றியது.
கட்டடக்கலை கற்கைநெறியின் கடைசிவருட மாணவன் குரு. பாலச்சந்தரின் படத்தில் கொசுறுத் தத்துவங்களோடு அலைபவனைப் போன்ற தோற்றம் அவனுக்கு. நான்கு பக்க சுவர்களிலும் அவனது மாடிக் கட்டடத்தின் டிசைன்ஸ் (architectural drawings) விரித்து கொழுவப்பட்டிருந்தது. அவனது பரீட்சைக்கான முறை அது. நிமால் என்ற விரிவுரையாளர் வரிக் கோடுகளாலான அந்த படைப்பினுள்ளே புகுந்து கேள்விகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டிக்கொண்டிருந்தார். எல்லாவற்றுக்கும் சரியாகப் பதிலளிக்க வேண்டும்.
ஒரு கட்டடக்கலைஞனாக உருவாகும் தவம் கலையாமல் இருக்க போராடிக்கொண்டிருந்தான் குரு. இடைநடுவில் சற்று தடுமாற்றமடைந்தபோது, “நீயெல்லாம் ஒரு ஆக்கிரெக்ரா ஏன் வர யோசித்தாய்? பேசாமல் போய் குண்டு வைக்கிறதைப் பற்றி யோசி“ என்றார் நிமால். சுற்றியிருந்த சிங்கள மாணவர்கள் வெடித்துச் சிரித்தனர். நாம் மௌனமாயிருந்தோம்.
எமது வகுப்பில் செனிவரட்ன ஒரு கலகலப்பானவன். எப்பவுமே ஒரு சிங்கள (வெறி)அடையாளம் அவனது குத்தல் பேச்சில் இருக்கும். ஒருநாள் பேணியொன்றுக்குள் சில கற்களை போட்டு அட்டகாசமாக கிலுக்கியபடி எம்மருகே வந்தான். நாம் தமிழில் கதைத்துக்கொண்டிருந்தோம். என்னடா செய்கிறாய் என்று கேட்டதற்கு “நானும் உங்களோடு தமிழ் கதைக்கிறேன்“ என்றான்.
எமைத் தைத்திருந்த நினைவுகளை இரைமீட்டபடி இரத்தலானையில் மூடுண்டு நகர்ந்தது காலம். ஓரிரு வாரங்களின் பின் செஞ்சிலுவைச் சங்கம் படிப்படியாக கப்பல் மூலமாக அகதிகளை காங்கேசன்துறைக்கு கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டது. நாம் கடைசி கப்பலில் பயணித்தோம்.
“எனது பிள்ளை ஏன் வரவில்லை. நீங்களெல்லாம் வந்திட்டியள். என்ரை பிள்ளை எங்கே?.“ இந்தக் குரல் இன்றுவரை என்னைத் துரத்துபவை.
சோமசுந்தரம் எமது அயல் கிராம பாடசாலை அதிபர். அவரின் மகன் வேல்மருகன் என்ஜினியரிங் கடைசி வருடத்தின் பரீட்சையை முடித்திருந்தான். எம்முடனேயே இரத்மலானையில் இருந்த அவன் “கலவரம் அடங்கிவிட்டது, இப்போ கொழும்பிலை பிரச்சினை எதுவுமில்லையாம்” என்ற பேச்சொழுக்கில் நனைந்த ஓர் நாளில் அவனும் இன்னும் மூவருமாக ஒரு ரக்சி பிடித்து வெள்ளவத்தைக்கு தமது உறவினர்நிலை அறிய சென்றிருந்தனர். நாம் தடுத்தோம். நிச்சயமற்ற தன்மையில் போகவேண்டாம் என்றோம். அவர்கள் போனார்கள்.
டெகிவல சேர்ச்சுக்கு முன்னால் வைத்து அவர்கள் நால்வரும் ரக்சியோடு எரியூட்டப்பட்டதான செய்தியை நான் சோமசுந்தரத்தாரிடம் எப்படிச் சொல்வது. “அவன் வருவான். இன்னமும் கொஞ்சப் பேர் வர இருக்கு“ என்ற சொல் அவர் என்னை அடிக்கடி வீடுதேடி வந்த பொழுதுகளால் தேய்ந்து நாராகிப் போகத் தொடங்கியிருந்தது. பின்னர் அவர் வருவதில்லை.
இப்போ அவரை வீதியில் கண்டால் நான் சைக்கிளை திருப்பி தப்பியோடும் படலம் ஆரம்பமாகியது. அவர் மனநோயாளராக ஆகியிருந்தார். புசத்தியபடி திரிந்தார். என்னைக் கண்டால் “என்ரை பிள்ளை எங்கையடா? நீயெல்லாம் உயிருடன்தானே வந்திட்டாய். எங்கையடா என்ரை பிள்ளை“ என கத்தத் தொடங்குவார். “ங்கள்“ எல்லாம் “டா“ என மாறியிருந்தது. அவரது நிலைமையை, தோற்றத்தை பார்க்க எனக்கு வலு இருப்பதில்லை.
வேல்முருகன் வாட்டசாட்டமான உயரம். ஆனாலும் சிரித்தபடியே பதுமையாக நடந்துசெல்லும் செல்லப்பிள்ளை. சோமசுந்தரத்தார் “தவமிருந்து” 16 வருடங்களின்பின் பிள்ளையாய் உருவாகியவன். அவர் இடிந்துவிழாமல் என்ன செய்வார்.
சைக்கிளில் செல்லும்போதெல்லாம் வீதியில் அவர் தென்படுகிறாரா என்ற கவனிப்பை நான் தொலைத்துவிடுவதில்லை. அவரை பார்க்க முடியாமல் இருந்தது. வேல்முருகனின் இழப்பு தொந்தரவு செய்தது.
இனி ஒருபோதும் மொரட்டுவ வளாகத்துக்கு திரும்பிப் போவதில்லை என்ற முடிவை நான் அடைகாத்தேன். பின்னரான காலங்களில் நான் சென்றடைந்த இயக்கத்தின் அணைப்புச் சூட்டில் எனது முடிவு குஞ்சாய்ப் பொரித்து வளர்ந்துவிட்டிருந்தது, எதிர்கொள்ளப்போகும் பயங்கரத்தை அறியாதபடி!
(எதுவும் புனைவல்ல)
FB links :