துயரம்

srilanka-isis-superJumbo

இலங்கைப் பேரினவாத அரசு சிறுபான்மை இனங்களை பிரித்து வைத்து ஆடும் சதுரங்கத்தில் இன்று பலரும் அகப்பட்டிருக்கிறோம். போர் சப்பித் துப்பிய முன்னாள் போராளிகளை அழைத்து இராணுவம் சந்திப்புகளை நடத்துகிறது. இணைந்து வேலைசெய்ய அழைப்பு விடுத்ததாக செய்தி வருகிறது. இவளவு பெருந்தொகையான இராணுவத்தை வைத்துக்கொண்டு, 30 வருட போரை சந்தித்ததின் மூலம் மரபுப்படையணியாக இருந்த இராணுவம் கெரில்லாமுறை உத்திகளோடு அதை களத்திலேயே புலிகளோடு களமாடி கற்றுக்கொண்டது. இவ்வாறான திறமை வாய்ந்தததாக இருந்துகொண்டு ஏன் முன்னாள் போராளிகளை அழைக்கிறார்கள்.

நம்மவர்களில் ஆளாளுக்கு முஸ்லிம் வெறுப்புகளை அமசடக்கி வைத்துக்கொண்டு இருந்தவர்களெல்லாம் முகநூலிலும் ஊடகங்களிலும் கருத்துக் களமாடி தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான இடைவெளியை விசாலமாக வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆக இலங்கை பேரினாவாத அரசின் நோக்கத்தை -அது விரித்து வைத்திருக்கும் பொறிக்குமேல் நின்றுகொண்டு- முட்டாள்தனத்தால் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் தாக்குதல் நடத்தியது ஐஎஸ் பயங்கரவாதிகள் என்றாகும்போது, நடந்தது உள்நாட்டு பயங்கரவாதம் அல்ல சர்வதேசப் பயங்கரவாதம் என்ற புரிதல் அவசியம். அவர்கள் கிறிஸ்தவர்களை குறிவைத்து தாக்குகிறார்கள் என்றால், வெறும் 6.5 வீத கிறிஸ்தவர்களை அதுவும் பரம்பலாகக் கொண்ட இலங்கைத் தீவில் அவர்கள் மினக்கெட வேண்டிய தேவை என்ன. நாட்டில் முக்கியமான தேவாலயங்கள் இருக்கும்போது அவர்கள் இந்த குறித்த தேவாலயங்களை ஏன் தேர்வு செய்தார்கள். தேவாலயங்களை விடவும் எண்ணிக்கையில் கூடிய ஐந்து நட்சத்திர விடுதிகளை ஏன் குறிவைத்தார்கள்.

நடந்தது தமிழ் மக்கள் மீதான இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கை எனில், கிறிஸ்தவர்களை ஏன் தாக்கினார்கள். தமிழ் மக்களை அடையாளப்பாடுத்துகிற மதம் கிறிஸ்தவமா என்ன. அவர்கள் கோவில்கள் மீதல்லவா தாக்குதல் தொடுத்திருக்க வேண்டும். கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மத முரண்பாடு என்று இலங்கையில் இருந்ததுண்டா.

இன்றைய நாடுகள் அதுவும் குறிப்பாக ஏழ்மை நாடுகள் தமது இறையாண்மையை இழந்து உலகமயமாதல் என்ற அமைப்புவடிவத்துள் பொறியாக அகப்பட்டிருக்கிறார்கள். இலங்கையின் மிகப்பெரும் வருமானம் தருகிற துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்று. அது இலங்கையில் துரிதமாக வளர்ச்சியடைந்ததுக்கு சீனாவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அது தாக்கப்பட்டதன் மூலம் இத் தாக்குதலுக்கு ஒரு பொருளாதார பின்னணி இருக்கிற சாத்தியம் உண்டு. அப்படியானால் அது யாருடைய நலனுடன் சம்பந்தப்பட்டது. சீனாவின் பிடிக்குள் இலங்கை வீழ்ந்துவிட்டிருக்கிறது. கேந்திர முக்கியத்துவமான இடமாக இருக்கும் இலங்கையில் சீனாவின் பிடிமானம் யாரை அச்சுறுத்தியிருக்கும்.

பலவீனப்பட்டிருக்கும் ஐஎஸ் இனை ஒரு கருவியாகப் பிரயோகிப்பதில் எந்த நாடுகள் செயற்பட்டிருக்கக் கூடும். ஐஎஸ் இனை பாவித்து உலகை தனது அதிகாரத்துள் கொண்டுவந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் அடுத்த நகர்வு இலங்கையாக இருக்கவும் கூடும்.

ஐஎஸ் இல் இருப்பவர்களில் ஒரு பகுதியினர் இஸ்லாமியரல்லாதோர் என முன்பே விக்கிலீக்ஸ் போட்டுடைத்தது. இப்போ லிபியாவின் ஐஎஸ் தலைவர் கைதுசெய்யப்பட்டபோது (அரபு வேர்கோண்ட இஸ்ரேலியரான) அவர் இஸ்ரேலிய மொசாட் இன் கைக்கூலி என தெரியவந்துள்ளது.

அப்போ ஐஎஸ் யார். அமெரிக்கத் தயாரிப்பா. அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பா. சவுதியின் வகாபிசம் ஊட்டிவளர்த்த கைப்பிள்ளையா. இரண்டுமா. அமெரிக்காவின் நூலில் சவூதியும் சவூதியின் நூலில் ஐஎஸ் உம் ஆடுகிறதா. பலஸ்தீனத்துக்கெதிரான சியோனிசவாதிகள் (இஸ்ரேலியர்கள்) மேல் ஒரு மசிரையும் ஏன் அவர்கள் பிடுங்க எத்தனிக்கவில்லை. என்றவாறான எல்லா கேள்விகளையும் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு ஒரு சர்வதேசப் பயங்கரவாதத்திலிருந்து பிரித்து, இலங்கையின் உள்விவகாரமாக இந்த குண்டுவெடிப்புகளை பார்ப்பது முழுமையாக இருக்குமா.

இந்த பயங்கரவாத செயலில் சம்பந்தப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மத வெறியர்களையும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களையும் வைத்துக்கொண்டு முஸ்லிம்-தமிழ்ப் பிரச்சினையாக, அல்லது முஸ்லிம் சமூகத்தை ஒட்டுமொத்தமாகவே பயங்கரவாத சமூகமாக – மேற்குலகின் பரப்புரைப் பொறிக்குள் வீழ்ந்து- சித்தரிக்கிற போக்கு இலங்கைப் பேரினவாத அரசின் நோக்கத்தை சுலபமாக்கியிருக்கிறது மட்டுமல்ல, மேற்குலகின் நிகழ்ச்சிநிரலுக்குள் வீழ்ந்திருக்கிற துயரத்தையும் கொண்டது!

 

ரவி (02052019)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: