அனுபவக் குறிப்பு

2019.
எனது முதல் பயணம் அந்த ஊருக்கு. மாசி மாத வெயில் கையில் ஒரு தண்ணீர்ப் போத்தலுடன் ஆட்டோவில் எனை ஏற்றி அனுப்பிவைத்திருந்தது. மலைகளற்ற பூமி இன்னொருவகை அழகை உடுத்தியிருந்தது. சுவிசிலிருந்து புறப்பட்டபோது வீதியோர பனித்திரள்களின் குளிரசைப்புக்கு எதிர்நிலையாக, நான் புழுதி அளைந்து திரிந்த மண் சூட்டை கொளுத்திப் போட்டிருந்தது. வியர்வையற்ற நாட்களின் உலகிலிருந்து -உள்ளங்கால் தொடங்கி உச்சந் தலைவரை- வியர்வைத் துளிகளை பெய்துகொண்டிருந்த நாட்களின் உலகிற்குப் பெயர்க்கப்பட்ட எனது உடல் ஏதோவொன்றை சுகித்துக் கொண்டிருந்தது.
வீதியின் இருமருங்கும் பசுமையிடம் தோற்றுக்கொண்டிருந்தது வெயில்!. வீதியின் குறுக்கால் ஓடிய குரங்குகளின் நிச்சயமற்ற ஓட்டத்தை கண்டு ஆட்டோவை நிறுத்தச் சொன்னேன். எனது கமரா அந்தக் குரங்குக் குட்டியை வீதியின் நடுவில் நிறுத்திக் கொண்டது. வீதியருகில் தாய் தனது ஓட்டத்தை நிறுத்தி குட்டியை எச்சரிக்கைப்படுத்தி அழைத்தது அல்லது திரும்பிவர தயாராக இருந்தது.
அவளது வீட்டுக் ‘கேற்றை’ அடைகிறோம். கேற்றை திறக்கிறபோது இருமருங்கும் பூந்தோட்டம் மேய்ந்துகொண்டிருந்தது. வேலியோரம் இரு இளம் தென்னம் பிள்ளைகள் வெயிலுலர்த்திக் கொண்டிருந்தன. வீட்டின் விறாந்தையில் அவள் சிரித்தபடி இருந்தாள். ஏற்கனவே பழக்கப்பட்டுவிட்ட முகம்போல இருந்தது. ஆனால் அப்படியில்லை. அவள் எந்த வேலிகளுமற்று “வணக்கம், வாங்க அண்ணா” என பேச்சைத் திறந்தாள்.
சக்கர நாற்காலியில் அவள் இருந்தாள். கட்டிமுடிக்கப்பட்டு நிறமும் பூசப்பட்ட அந்த வீட்டின் விறாந்தையில் நாம் இருந்தோம். அரசாங்க (எட்டரை இலட்ச ரூபா) வீட்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட வீடு அது. அதை உதவிநிறுவனமொன்று பூசிப் புணர்த்தி நிறமுடுத்தி விட்டிருந்தது.
“இந்தளவு அழகாக பூந்தோட்டத்தை வளர்த்துவிட்டது யார்” என கேட்டேன். “நான்தான்” என்றாள். இரு கால்களும் முழங்கால்களுக்குக் கீழ் இல்லாமலிருந்தது. அதனால் ஆச்சரியத்தை எனது முகம் ஒளித்துவைக்க முடியாமல் நெளிந்தது. அவள் தனது உடையை முழங்கால்வரை உயர்த்திக் காட்டினாள். அதிர்ச்சியாக இருந்தது. இரு கால்கள் முடியும் இடங்களும் போர் விட்டுச் சென்ற வடுக்களையும் மீறி உராய்வில் கருமைபட்டுப் போயிருந்தன. நிலத்தில் அரக்கி அரக்கி அவள் தனக்கான நிறங்களை அந்த மரங்களில் பொழிந்துவிட்டிருந்தாள். இந்த சமூகமும் அவளது போர்க்கால மூதாதையரும் அதன் முரசறைந்தோரும் கைவிட்டதால் அவள் தனது ஆளுமை கொண்டு தனக்கான உலகை நிறங்களால் சிருஷ்டித்திருந்தாள். அதற்குள் அவள் தன்னை ஆசுவாசப்படுத்தினாள். ஆறினாள். வாழ்தலின் மீதான பிடிப்பை அங்கு அவள் மெல்ல மெல்ல வளர்த்து சோலையாக்கிக் கொண்டிருந்தாள்.
“அந்த தென்னை மரம்?” என்றேன். அது வீதியில் சிறு கன்றாக வீசப்பட்டிருந்தது. அதை எடுத்துவந்து நாட்டினேன்.”
“நீங்களேதான்?” என்றேன். “ஆம்” என்று பெருமிதத்தை கொட்டினாள்.
“அதென்ன விறகுகள் குவித்திருக்கிறீங்க. சமையலுக்கா? எப்படி சமைப்பீர்கள்?” என ஓர் அறிதலுக்காகக் கேட்டேன்.
“விறகு அடுப்புத்தான். மரக்கறிகளை வெட்டி, தேவையான பாத்திரங்கள், சேர்க்கைகள் எல்லாவற்றையும் அடுப்புக்கு அருகில் வைத்துவிடுவேன். பிறகு அடுப்பு அருகில் வைக்கப்பட்டிருக்கிற மேடையில் (ஸ்ரூல்) சக்கர நாற்காலியிலிருந்து தாவி ஏறி அமர்ந்து கொள்வேன். சமையல் முடியும்வரை அங்குதான். சிலவேளை ஏதாச்சும் மறந்துபோய்விட்டிருந்தால் மீண்டும் சக்கர நாற்காலிக்கு திரும்ப வேண்டும்.” என்றாள். அப்போதும் சிரித்தாள்.
ஓரிரவில் எமது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆயினர் என சிவரமணி எழுதிய வரிகள் உயிர்த்திருந்தன. இப்போது அவள் இளம் பெண்ணாக இருந்தாள்.
“நான் கல்யாணம் முடிக்க முடிவெடுத்திருக்கிறேன்அண்ணா ” என்றாள்.
“நல்லது… நல்ல விசயம்… கட்டாயம்” என்றேன்.
“ஒரு சாமான்ய மனிதனை” என்றாள்.
“ஆண்போராளிகள் இதுவிடயத்தில்…” என கேட்டேன்.
“அவர்களில் பலரும் சாதாரணமான ஆண்களை விடவும் மோசமானவர்களாக நடந்துகொண்டு விடுகிறார்கள். மனைவிமாரை அடிப்பதிலிருந்து சந்தேகம் கொள்வதுவரை இருக்கிறார்கள்” என்றாள். “எல்லாரும் அப்படியென்றில்லை” என சொல்லியும் வைத்தாள்.
அவளது உடற்கட்டை தோள்கள் எடுப்பாக வைத்திருந்தது. ஆளுமையும், துடிப்பான பேச்சும், நகைச்சுவையும் அவளை ஆக்கிரமித்திருந்தது. அவளுக்கான சுயதொழில் முயற்சிக்கு நாம் உதவ முன்வந்திருந்தோம். சந்தித்தோம்.
முள்ளிவாய்க்கால் இறுதிப் போர். வாழ்வை நாராகக் கிழித்துப்போட்டுக் கொண்டிருந்த கடைசி நாளில் அவள் கண்விழித்தபோது அவளைச் சுற்றி பிணக்காடாக இருந்தது. சுமார் 500 மீற்றருக்கு அப்பால் சனக்கூட்டம் பரதேசிகளாய் அசைந்துகொண்டிருந்தது. அது இராணுவ ‘சென்றிப் பொயின்ரை’ நோக்கி உருகிப் போய்க்கொண்டிருந்தது. இவள் இரத்த பூமிக்குள் சிறைப்பட்டிருந்தாள். வாழ்தலின் மீதான விருப்பு மகத்தானது. தனது சிதிலமடைந்த கால்களையும் இழுத்துக்கொண்டு உருக்குலைந்தழிந்த உடல்கள்மீது அங்குலம் அங்குலமாய் மரணத்தை விலத்தியபடி ஊர்ந்து செல்கிறாள். அந்த உடல்களை அவள் அவ்வாறுதான் தாண்டிக்கொண்டிருந்தாள். அந்தத் தாண்டலில் அவளது வலது கை ஊன்றலில் உடலொன்றின் சிதைவினுள் கை மணிக்கட்டுவரை புதைந்துவிடுகிறது. தனது கை தனக்கே அந்நியமாய்ப் போன உணர்வு அவளுக்கு. சுமார் 6 மாதங்களாக அவள் தனது உணவை கரண்டியால் சாப்பிட வைத்தது அது.
தனது உடல் மட்டும் அசைவதுபோல் எழுகிற நினைப்பை அவளின் வாழ்தலின் மீதான வேட்கை செரித்துக்கொண்டிருந்தது. அவள் சனம் நடக்கும் வீதியை நெருங்குகிறாள். இன்னொரு தோழி அவளை தனது தோள்மீது சுமந்துகொள்கிறாள். சென்றிபொயின்றுக்கு சற்று தொலைவில் தனது இயலாமையையும் துயரத்தையும் கடிந்தபடி, இவளை கீழே இறக்கி விழிகளால் மண்டாடிவிட்டு போகிறாள் தோழி. அவளுக்கு தனது வாழ்தலின்மீதான வேட்கை இந்தளவைத்தான் அங்கீகரித்தது. அவள் இவளது குருதியின் இழையை தனது உடலில் படரவிட்டு நகர்ந்து சென்றாள். இவள் மீண்டும் தனது உடலை கைகளை தரையில் ஊன்றி வலிக்கத் தொடங்குகிறாள். சென்றி பொயின்ற். “நீ இயக்கம்தானே” கேட்கிறான் ஒரு இராணுவத்தான். “இல்லை” என்கிறாள் இவள். “ஓமோம்.. எங்களுக்கு எல்லாம் தெரியும்” என்கிறான் அவன். இவளுக்கு உதவுகிறான். காயத்துக்கு கட்டுப் போடுகிறான்.
இப்போ அவள் அகதி முகாமில் விடப்பட்டிருந்தாள். இராணுவத் தளபதி முகாமுக்கு வருகிறான். விசாரணைகள் நடக்கின்றன. இவளும் அழைத்துவரப்படுகிறாள்.
“நீ இயக்கம்தானே?”
“இல்லை” என்கிறாள் இவள்.
“ஓமோம்… தெரியும். இப்படியே நீ எப்போதும் எல்லோருக்கும் சொல்லு. உனக்கு ஒன்று சொல்கிறேன். கால்கை இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அவர்களது தீர்ப்பு எல்லோருக்கும் ஒன்றாய்த்தான் இருக்கும். அதனால் நீ இப்படியே சொல்லிக்கொண்டு இருப்பதுதான் நல்லது.” என்கிறான். இராணுவ உடைக்குள்ளிருந்து வெளியே வந்து ஒரு மனிதன் பேசிக்கொண்டிருந்தான் அல்லது எதிர்பாராது அதிர்ச்சியளித்துக் கொண்டிருந்தான்.
அவளது கண்களில் நீர் ஒளித்துக்கொள்ள இடம் போதாமல் இருந்ததை பின்நகர்ந்திருந்த அவளது புன்னகை கண்டுகொண்டது. துளிகளை தூசியாய் உதிர்த்து வீசியது. புன்னகை விழிகளில் மலர்ந்தது. அவளது ஈரவிழிகள் வாழ்வின் மகத்துவத்தை போதித்தது. “அழுதுவடிபவர்களை கூட்டிவந்து உங்களைக் காட்டவேண்டும்” என்று மட்டும் சொல்ல என்னால் முடிந்தது. உங்களை வைத்து பணம் சேர்த்தோரை கூட்டிவந்து காட்ட வேண்டும் என்று சொன்னேனில்லை. உங்களை வைத்து மாவீரர்தினத்தில் கண்ணீரை விற்பவர்களை கூட்டிவந்து காட்ட வேண்டும் என்று சொன்னேனில்லை. உங்களை வைத்து எழுத்துகளை விற்போரை கூட்டிவந்து காட்ட வேண்டும் என்று சொன்னேனில்லை. உங்களை வைத்து அரசியல் நடத்துவோரையோ அவர்தம் கனவுகளை மீண்டும் ஏற்றிவைக்கத் துடிப்பவர்களையோ கூட்டிவந்து காட்ட வேண்டும் என்றும் சொன்னேனில்லை.
இயக்கப் பிளவின்போது நடந்ததாக -திரும்பவும் திரும்பவும்- சொல்லப்படுகிற ஒரு குற்றச்சாட்டை அல்லது சாத்தியப்பாட்டை அல்லது உண்மையை அவளுலகைப் புரியாமல் நான் -வெகுளித்தனமாக- கேட்டபோது, “இன்னொருமுறை இயக்கத்துக்குப் போய்ப் பார்த்திட்டுவந்து சொல்லிறன் அண்ணா” என முகத்திலறைந்து எனை விளிக்கவைத்த அவளின் சொற்களை சுமந்துகொண்டு ஆட்டோவில் ஏறினேன்.
- ரவி (24032019)
(எதுவும் புனைவல்ல)