எப்போதுமில்லாதவாறு இந்த வருடம் ஒரு நீளமான கோடைகாலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் வெப்பமாக இருந்தது. இன்று வேறு அலுவல்கள் இல்லை. அல்லது அவற்றை முக்கியமற்றதாக்கிவிட்டு எனக்காக ஒதுக்கிக்கொள்வதான முடிவுடன் வேலையால் வந்துகொண்டிருந்தேன். உடலை உரசிய இதமான காற்றும் வெப்பமும் “அதைச் செய்” என்பதுபோல் சைக்கிளையும் வருடிச் சென்றது. இண்டைக்கு (உடற் பயிற்சிக்காக) ஓடுவம் என்று முடிவெடுத்தேன்.
பல்கனியில் நின்று கிழக்குத் திசையைப் பார்த்தேன். வானம் நீலமாக இருந்தது அசைந்து உருளும் வெள்ளை முகில் திரள்களின் அலைகள் காலநிலையை அமைதியாக விடுவதாக இல்லை என அறிவித்துக்கொண்டிருந்தது. மேற்கே என்னவோ நடப்பதாகவும் அசுமாத்தம் தெரிந்தது. சப்பாத்தை எடுத்து வந்து அணியும் போது மெல்ல இடியோசை சத்தம் கேட்கிறது. கையில் ஒரு சப்பாத்துடன் நூல்கள் தொங்க மீண்டும் பல்கனிக்கு போய் நோட்டம் விடுகிறேன். சப்பாத்தை அணிவதா பொறுத்துப் பார்ப்பதா என்ற இழுபறிக்குப் பின், அணிந்துகொண்டு கிளம்புகிறேன்.
நான் கீழிறங்கும்போது பக்கத்து அறையில் வசிப்பவன் “நேற்றிரவு மழைத்தூறலின் அசுமாத்தத்தை உணர்ந்தியா” என கேட்க, “அப்படி எதுவுமே தெரியவில்லை. நான் நன்றாகவே உறங்கிப் போயிருந்தேன்” என்றேன். வெளிக்கதவை திறந்தபோது ஒளி கருகத் தொடங்கியிருந்தது. வெள்ளை முகில்கள் தோற்றுக்கொண்டிருந்தன. “ஓடப் போகிறேன். என்ன நினைக்கிறாய் மழை வருமா” எனக் கேட்டேன். தோளை உயர்த்தி தன்னால் சொல்ல முடியாதுள்ளது என்று சைகை செய்த அவன், “நீ ஒரு குறுகிய தடத்தில் ஓடிவிட்டு திரும்பிவரப் பார்” என்றான். மாடியை கடக்கும்போது மேற்குத் திசையில் கருமுகில்கள் பெருமெடுப்பு எடுத்துக் கொண்டிருந்தன. துளிகள் ஏதுமில்லை. ஓடத் தொடங்குகிறேன். காற்று மகிழ்ந்திருக்க வேண்டும். அது வருடிக் கொண்டிருந்தது.
கடற்கரையில் மெர்சோ உலவுகிறபோது வெய்யிலும் வெக்கையும் சினமூட்டியிருந்ததால், தான் அந்த அரேபியனைச் சுட்டேன் என்கிறான். மெர்சோவினது நண்பனுடன்தான் அந்த அரேபியன் பிரச்சினைப்பட்டிருந்தான். கடற்கரை வெளியில் தனியாக உலாத்துவதற்கு விருப்பம் கொண்ட மெர்சோ நண்பனின் துப்பாக்கியை வாங்கி சொருகிக் கொள்கிறான். மெர்சோ எதிர்பார்த்திருக்கவில்லை அல்லது எதிர்பார்த்தான், வில்லங்கத்தை! அந்த அரேபியன் இப்போ தனியாக வந்த மெர்சோவை எதிர்கொள்கிறான். கையில் வைத்திருந்த கத்தியில் சூரிய ஒளி கூராய் தீட்டுப்பட்டு மெர்சோவின் பார்வையை சீவியது. அவன் அண்மிக்கிறான். மெர்சோ திடீரென துப்பாக்கியை உருவி சுட்டான். முதற் குண்டை மெர்சோ சுட்டபின், ஏன் இடைவெளிவிட்டு மற்றைய குண்டுகளால் சுட்டுக் கொல்கிறான். அந்த இடைவெளி சொல்கிற கதை என்ன.
ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆல்ப்ஸ் மலையினை கருமுகில்கள் முற்றாக மறைத்துவிட்டிருந்தன. வழமையாய் பச்சையாய் தெரிகிற “முன்-அல்ப்ஸ்” (Front Alp) மலை கருமை படர்ந்து தெரிந்தது. மேற்குப் புறமாகவும் பார்க்கிறேன். மழையொன்றை நடத்திவிடுவதான தீர்மானத்தில் முகில்களுக்கிடையில் முரண்பாடுகள் தோன்றியிருக்கக் கூடும். திரண்டிருந்த கருமுகில்கள் ஆர்ப்பாட்டமின்றி அலைகளற்று அமைதியாக பரந்து விரிந்திருந்தது.
மெர்சோவால் தனது வயதான தாயை வைத்து பராமரிக்க முடியாது. கையில் காசும் இல்லை. முதியோர் இல்லத்தில் விட்டிருந்தான். பிறகொருநாள் தாய் இறந்துவிட்ட செய்தி அவனுக்கு வர தாயைப் பார்க்க புறப்படுகிறான். அம்மா இன்று இறந்திருக்கவும் கூடும். சிலவேளை நேற்றாகவும் இருக்கக் கூடும் என அவன் இந்த சம்பிரதாய அறிவிப்புக்கு உரையெழுதுகிறான். சவப்பெட்டியைத் திறக்கத் தேவையில்லை என்கிறான் அவன். கண்ணீர் விட்டு அழுதானில்லை. காவலாளியுடன் சேர்ந்து வெளியில் போய் புகை பிடிக்கிறான். வேறேதோவெல்லாம் உரையாடுகிறான். தாயின் இறுதி ஊர்வலத்தின்போது தனது தாய்க்கு முதியோர் இல்லத்தில் காதலனாக இருந்திருக்கக்கூடிய வயோதிபர் ஒருவரின் துக்கத்தைப் பார்க்கிறான். அம்மா சந்தோசமாகத்தான் இருந்திருக்கிறா என அந்த மனிதரின் துக்கம் மெர்சோவுக்கு சொல்கிறது. அதை இயல்பாக ஏற்றுக்கொள்கிறான்.
மெர்சோ எப்படி இன்னொரு சகமனிதனை சர்வசாதாரணமாக கொல்ல முடியும். அவனின் வாழ்தல் இயல்பானதாக இல்லையா. வாழ்தல் மீதான அவனது வேட்கையை, உரிமையை மெர்சோ எப்படி மறுக்க முடியும். நோயால் மயிர் உதிர்ந்து பரிதாபமாக இருக்கிற நாயையும் அப்படி நோய்வாய்ப் பட்டபின்னும், அதனோடான இழுபறியுடனும் அந்த நாயை கைவிடாமல் வளர்க்கிற அந்த வயதான நண்பனையும் அவனது பரதேசிய வாழ்வையும் ஏற்றுக்கொள்கிற மெர்சோவுக்குள் இருக்கிற மனிதன் அரேபியனின் வாழ்வை அழித்தது தற்காப்புக்கானதா. தனது நண்பனுடன் அரேபியன் பிரச்சினைப்பட்டதால் எழுந்த கோபமா. அல்லது மெர்சோ சொல்வதுபோல் வெயில் வெக்கை சினமூட்டியது காரணமா அல்லது எல்லாமுமா?
தம்மை இந்த நிலைக்குத் தள்ளுகிற சக்திகள் மீதான விளிம்புநிலை மனிதர்களின் கோபம் அவர்களுக்குள் புதைந்திருக்கிற கொந்தளிப்பையும் இயலாமையையும் தம்மை வெறுப்பூட்டுபவர்கள் அல்லது இழிவுபடுத்துபவர்கள் யார்மீதும் கொட்டிவிட நேர்கிறதா? சிறிய விசயங்களின் மீதும் ஆசைகொள்ள முடியாதபடி ஆக்கப்படும் விளிம்புநிலை மனிதர்கள் அல்லது பரதேசிய வாழ்வுநிலை மனிதர்களிடம் கொந்தளிப்பான மனநிலையை அன்றி வேறெதை எதிர்பார்க்க முடியும் என்பதன் சாட்சியா இந்தக் கொலை? தனது இருத்தலை, வித்தியாசத்தை மறுக்கும் ஒரு சமூகத்தின் மீதான வெறுப்புகள் சேகரமாகிய வெடிபொருளாய் இருந்ததா அவனது அந்தக் கணம்?
நிகழ்த்தப்பட்டது ஒரு கொலையேதான். அதற்கு அவன் தண்டனை பெற்றும் ஆக வேண்டும். அல்பேர்ட் காம்யுவின் (Albert Camus) பெயரால் மெர்சோவுக்கு பாவமன்னிப்பு வழங்கவும் முடியாது. பாவமன்னிப்பை மெர்சோ கோரவுமில்லை. காம்யு அழைக்கவுமில்லை. பிரச்சினை அதைத் தாண்டியது. மெர்சோக்களை உருவாக்குகிற சமூக அமைப்புமுறையினதும் அரசியல் முறைமையினதும் மீதான குற்றத்தை மூடி மறைத்து, அதன் ஓர் அங்கமான நீதிமன்றம் அவனது இருப்பு மீது குற்றத்தை சுமத்துவதுதான் கொடுமை.
கால்கள் பாரமாகிக் கொண்டிருந்தன. இருமருங்கும் அடர்ந்த மரங்களின் நடுவே நான் ஓடிக்கொண்டிருந்தேன். இப்போ இடது பக்கமாய் பச்சைப் புல்வெளி திறந்துகொண்டது. அநேகமாக நீலவானம் முற்றாக அற்றுப்போயிருந்தது. காற்று கொஞ்சம் வேகமாக வீசத் தொடங்குகிறது. சருகுகள் என்னை முந்திக்கொண்டு இழுபட்டுப் போய்க்கொண்டிருந்தன. நடைபாதைத் தார்த்தரையை உரசிச் செல்கிற அவற்றின் ஒலி பறந்துகொண்டிருக்கிற வண்ணத்துப்பூச்சிக்கோ, புற்களுக்கடியில் ஊர்ந்துகொண்டிருக்கிற எறும்புகளுக்கோ பேரிரைச்சலாய் கேட்டிருக்கும்.
நிமிர்ந்து வானத்தை அளக்கிறேன். பச்சைப்புல்லை வெட்டிக்கொண்டிருந்த இயந்திரத்துடன் தோட்டக்காரன் வீடு திரும்புகிறான். திரும்பி, ஒருமுறை மேய்ந்துகொண்டிருக்கும் தனது மாடுகளை கண்காணித்துக்கொண்டு அவன் போகிறான். பச்சைப் புல்லின் மணம் காற்றை அரைத்து நாசிக்குள் ஊட்டுகிறது. ஆழ உள்ளிழுத்தேன். சுவாச நரம்புகளில் பச்சையம் படர்ந்தன.
மெர்சோவை மேரி காதலிக்கிறாள். “உனக்கு என்மேல் காதல் இல்லையா” என அவள் கேட்க மெர்சோ உணர்ச்சியற்று “இல்லை” என்கிறான். “என்னை கல்யாணம் பண்ணுறியா” என கேட்க, சற்று தாமதித்தவன் பின் “ஆம்” என்கிறான். இந்த காதல் மறுப்புக்கும் கல்யாண உடன்பாட்டுக்கும் இடையில் அவன் என்ன கதையைச் சொல்கிறான். அவனது ஆழத்தை என்னால் தொடமுடியவில்லையா. தெரியாது. “வெண்ணிற ஆடை… அவிழ்த்து விடப்பட்ட கூந்தல்… அவள் அழகாக இருக்கிறாள் என்று சொல்ல அவள் மகிழ்ந்து சிரித்தாள்” என்கிறான் மெர்சோ.
புல்வெளியின் பறக்கும் பூக்களாய் மெல்லிய சாம்பல் நிறம் கலந்த வெள்ளைப் பறவைகள் கூட்டமாய் இரை தேடுவதும் சேர்ந்து காற்றில் அலையலையாய் தாளப் பறப்பதும் கூட்டாக தரை தட்டுவதுமாய் அசைந்தன. எனது முதல் காதலை அவளிடம் நான் ஏன் சொல்லாமல் தவிர்த்தேன். அவளை நான் பிரிய நேர்ந்தபோது அவள் ஒரு செடியை வரைந்துகொண்டிருந்தாள். அந்த செடி வாடிக்கொண்டிருந்தது. குருத்து தலைகவிழ்ந்து கசங்கிப்போய்க் கொண்டிருந்தது. அவள் வாயால் தன் காதலை சொல்லிவிடக் கூடாது என அந்தரப்பட்டுக்கொண்டு இருந்தேன். தெரியாததுபோல் நடித்தேன். அவள் என்ன முட்டாளா. என்னை நான் கேலிசெய்தேன் என்று நினைக்கிறேன். மண்ணுக்காக இறந்துவிட நேர்கிற நிச்சயமற்ற வாழ்தலில் அவளை கோர்த்து துன்பப்படுத்திவிடக் கூடாது என விடாப்பிடியாக எனது மனதின் விருப்பை கொன்றுகொண்டிருந்தேன். என்ன நினைத்திருப்பாள். தெரியாது. அவளை பிரிந்தபின் எனக்கு அவள்மேல் கரிசனை அதிகமானது. அவள் குறித்து அதிகம் கவலைப்பட்டேன். அவளை காணவேண்டும் போல் இருந்தது. கண்டிருந்தால் என்ன பேசியிருப்பேன் என்றும் நிச்சயமாகத் தெரியாது.
கற்பிக்கப்பட்ட இந்த வாழ்வின் விதிமுறைகளுக்குள் அடங்காத மெர்சோ தனி உலகம். போலிமைகளை சம்பிரதாயங்களை அவன் தன்னருகே அணுக விடுவதில்லை. இந்த கட்டமைப்புகள் கற்பிதங்களின்மேல் இயங்குகிற மனித வாழ்வில் அவன் எப்ப வேண்டுமானாலும் குற்றவாளியாகலாம். துரோகியாகலாம். விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட அவனுக்கு இந்த வாழ்வும் நிச்சயமற்றதுதான். அதனால் காதலை தவிர்த்தானா? அல்லது அப்படியொன்றை உணராதவனாய் இருந்தானா? அல்லது காதலை போலியாகப் பார்த்தானா? அதேநேரம் மெர்சோவை சரியாகவே அடையாளம் கண்ட மேரியின் துணை அவனது தனியுலகத்திற்கு தேவையாக இருந்ததா? எல்லா கேள்விகளுடனும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
புல்வளர்வதற்காக மாட்டின் மூத்திரத்தை சேகரித்து தோட்டத்தில் விசுறுகிற வேலையை அந்த உழவு இயந்திரம் செய்துகொண்டிருந்தது. மணம் காற்றை கீழிறக்கி வீசவிட்டுக்கொண்டிருந்தது. எனக்கு இந்த மணம் வெறுப்பூட்டுவதில்லை. சிலவேளைகளில் ஆழ உள்ளிழுத்து சுவாசிப்பதும் உண்டு. அது ஆரோக்கியமாக இருக்கலாம் என காரணமற்று நம்பும் ஒரு பழக்கம் என்னிடம் இருக்கிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் மாட்டின் சாணத்துக்கும் மூத்திரத்துக்கும் மருத்துவக் குணம் இருப்பதாக எனக்கு தரப்பட்ட அறிவாகவும் இருக்கலாம். அல்லது சின்ன வயதில் மாட்டை புனிதமாக வழிபட்டுப் பழக்கிய மனப்பதிவாகவும் இருக்கலாம். துர்மணத்தை வாசனையாக இவையெல்லாம் எனக்கு ஊட்டியுமிருக்கலாம்.
மெர்சோ கொலையாளி என்பதை நிரூபிக்க நீதிமன்றம் சம்பவம் பற்றி விசாரிப்பதையும் தாண்டி, அவனது கடந்தகாலத்தை மோப்பம் பிடிக்கிறது. சமூகத்தின் எல்லா கற்பிதங்களையும் காலில் போட்டு மிதிக்கிற, எல்லா துர்மணங்களையும் வாசனையாக நுகருகிறவர்களை வெறுத்தொதுக்குகிற அவனது நடத்தைகளை, மனப்போக்கை, அந்த அந்நியத்தை குற்றத்தை நிரூபிக்கிறதுக்கான ஆதாரங்களாக இழுத்துவருகிறது. தாயை முதியோர் இல்லத்தில் அநாதரவாக விட்டவன், தாய் இறந்தபோது அழாதவன் என்றதிலிருந்து தொடங்கி இழையிழையாக இழுத்தெடுத்து மரணக் கயிற்றை பின்னிவிடுகிறது நீதிமன்ற வாதம்.
“நான் ஒரு புதுவாழ்வை தொடங்க தயாராக இருப்பதுபோல் உணர்ந்தேன். இந்த கோபக் கொந்தளிப்பு என்னை கைவிட்டதைப்போல், நம்பிக்கைகள் வெளியேற்றப்பட்ட நிலையில் நட்சத்திரங்கள் நிரம்பியிருந்த இந்த இரவின் முன்னால் முதல் முறையாக- ஆமாம் முதல்முறையாக- இவ்வுலகின் மென்மையான அலட்சியத்தை மனம் திறந்து வரவேற்றேன். என்னைப் போலவே அவை இருப்பதை உணரும்போது, அந்த சகோதர மனப்பான்மையில், நான் மகிழ்ச்சியாக இருந்தேன். மகிழ்ச்சியாகவே இருந்துகொண்டிருக்கிறேன் என்பதை அறிந்துகொண்டேன். ஆக எல்லாம் முழுமைபெற வேண்டுமானால், என் தனிமை உணர்வு ஓரளவு குறைய வேண்டுமானால், நான் விரும்புவது ஒன்றேயொன்றுதான். என் தலை துண்டிக்கப்படும் தினத்தன்று பெரும் எண்ணிக்கையில் பார்வையாளர்கள் இருக்க வேண்டும். வெறுப்புக் கலந்த கூக்குரலுடன் என்னை அவர்கள் வரவேற்க வேண்டும்” என்கிறான் மெர்சோ.
துமிக்கத் தொடங்கியது. எனது இடதுகை விரல்களுக்குள் ரிசுத்துணியொன்று எப்போதும் இருக்கும். ஓடும்போது களைப்பு ஏற்பட்டு முக்கால் ஒழுகுவதுண்டு. மூக்கை துடைப்பதற்காக அதை வைத்திருப்பேன். அந்த கைப்பொத்தலின் சிறிய இடைவெளிக்குள் இலக்கு வைத்ததுபோல் முதல் துளி விழுந்தது. அது ஈரமாகி விரல்களுக்கு செய்தியை அறிவித்தது. பிறகு துளிகள் விழத் தொடங்கின. இன்னும் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் வீடு வந்துவிடும். முகில்கள் பழுத்து கருமையடைந்து கொண்டிருந்தது. எந்த நேரமும் நீருதிர்ந்து கொட்டுப்படலாம். வேகத்தை கூட்டி ஓடத் தொடங்குகிறேன். காற்று என்முன்னால் நகர்த்திச் செல்கிற சரைகளின் ஒலி செத்துக்கொண்டிருந்தது. வீதி ஈரமாகிக்கொண்டிருந்தது. மெர்சோவின் நட்சத்திரங்கள் காணாமல் போய்விட்டிருந்தன!
15092018
A novel by Albert Camus – தமிழில் ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம்.