ரத்தம் விற்பவனின் சரித்திரம்

– இலக்கியமும் அரசியலும்

Yu Hua nool

“தலைவர் மாவோ பேசத் தொடங்கினார். தலைவர் மாவோ பெரும்பாலும் எல்லா நாட்களும் பேசினார். நாம் ஆயுதம் கொண்டல்ல, வார்த்தைகள் கொண்டுதான் போராட வேண்டும் என்று சொன்னபோது எல்லோரும் கத்தியையும் கம்பையும் கீழே வைத்தார்கள். நாம் புரட்சியை வகுப்பறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னபோது யீலியும் ஏளும் ஸான்லியும் புத்தகப் பைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பள்ளிக்குச் சென்றார்கள். புரட்சி உற்பத்திக்கு உதவ வேண்டும் என்று தலைவர் மாவோ சொன்னபோது ஸன்க்வான் பட்டுத் தொழிற்சாலைக்குச் சென்றான்.  யுலான் பலகாரம் செய்வதற்காக தினமும் காலையில் வேளைக்கே எழுந்துசென்றாள். யுலானின் முடி மீண்டும் நீண்டு வளர்ந்து காதுகளை மூடுமளவுக்கு வந்தது.”  ( பக்.216)

அன்றைய சீன அரசியல் சூழலில் கதைமாந்தர்களான ஒரு குடும்பத்தின் அசைவியக்கம் இது. இந்த நாவல் ஓர் அரசியல் நாவல் என்ற வகைமைக்குள் தன்னை பொருத்திக்கொள்கிறது.

யூகுவா என்ற சீன எழுத்தாளர் எழுதிய இந் நாவல் யூமா வாசுகி அவர்களால் தமிழுக்கு பெயர்க்கப்பட்டுள்ளது. (சந்தியா பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது).

பிரமாண்டமான சீன தேசத்தின் நரம்புகளை ஊடறுத்து செல்கிற எண்ணற்ற தொன்மக் கதைகளும், மரபுகளும், புரட்சி பற்றிய உரைப்புகளும், புரட்சியின் எதிர்விளைவுகளைப் பற்றிய உரைப்புகளும் படிப்பினைகளும், பண்பாடுகளும், உடலுழைப்பின் சாதனைகளும், தற்கால சீனாவின் வல்லரசு நோக்கிய அசைவுகளும் என பல்வேறுபட்ட பரிமாணங்களால் பிம்பமாக்கப்பட்டிருக்கிற சீன தேசத்தினை கலாச்சாரப் புரட்சிய காலகட்டத்திற்கு இழுத்துச் சென்று தனது கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார் நாவலாசிரியர்.

கலாச்சாரப் புரட்சியின் (1966-1976) காலகட்டத்தில் அதன் விளைவுகளில் கடுமையான விமர்சனங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. இக் காலகட்டத்தை நிகழ்புலமாகக் கொண்ட நாவல் “ரத்தம் விற்பவனின் சரித்திரம்”. நாயகன் ஸன்க்வானுக்கு யுலான் மீது காதல் வருகிறது. வறுமையில் உழலும் அவனுக்கு உடலுழைப்பை விட இரத்தம் விற்பது குறுகிய காலத்தில் அதிக பணத்தை காண வைக்கிறது. இப்படியாக தனது கல்யாணத்துக்காக இரத்தம் விற்கத் தொடங்கியவன் பிறகு பிள்ளைகளுக்காக குடும்பத்துக்காக.. என இரத்தம் விற்பதை தொடர்கிறான். கடைசியில் பிள்ளையின் கடுமையான சுகவீனத்தால் ஆஸ்பத்திரிக்கு போகிற நெடும் பயணத்தின் வழியில் பலமுறை (அங்கீகரிக்கப்பட்ட கால இடைவெளியை மீறி) இரத்தம் விற்கிறான்.

கலாச்சாரப் புரட்சிக்கு முந்தைய சீனாவில் 70 வீதம் விவசாயிகள் இருந்தாலும், சிறுபான்மையாக இருந்த நிலச்சுவாந்தர்கள், பணக்கார விவசாயிகள், தேசிய முதலாளிகள், மிகச்சிறிய வீதத்தினரான தரகு முதலாளிகள் கொண்ட வசதியான மக்கட் பிரிவின் கைகளில்தான் பணம் குவிந்திருந்தது. அதிகாரமும் குவிந்திருந்தது. படித்துப் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் வலுவும் அவர்களிடமே அதிகமும் இருந்தது. இவற்றை கலாச்சாரப் புரட்சி மாற்றியமைத்தபோது பல அனர்த்தங்களும் விளைந்தன.

பல்கலைக் கழகங்கள் திட்டத்தின் அடிப்படையில் மூடப்பட்டு, மாணவர்கள் வகுப்பறையை விட்டு கிராமங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்வதற்கும் உழைப்பில் ஈடுபடுவதற்கும் அவர்கள் கற்பது, கிராமப்புற மக்களை கல்வியூட்டுவது (அதாவது கற்றலும் கற்பித்தலும்) என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்கள் அனுப்பப்பட்டனர்.

இந்த நடைமுறைத் தேர்வில் அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு அந்தப் புள்ளிகளின் அடிப்படையில் பல்கலைக் கழக படிப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இது கிராமப்புற மாணவர்கள் போலன்றி, வசதி படைத்த மாணவப் பிரிவினருக்கும் நகரப்புற மாணவர்களுக்கும் வாழ்நிலை அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்களின் வர்க்க மனோபாவத்தின்மீது அடிவிழுந்தது. 1974 இல் பல்கலைக் கழகங்களை தொழிலாளர்கள், விவசாயிகளின் பிள்ளைகள் நிரப்பும் நிலைக்கு தலைகீழாக மாறியிருந்தது.

ஏழையான ஸன்க்வானின் மகன் ஒருவனும் இந்த முறைமையின் அடிப்படையில் கிராமத்துக்கு அனுப்பப்படுகிறான். அங்கு அவன் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. அதுகுறித்து பெற்றோர் கவலையடைகின்றனர். மகனது மேற்பார்வையாளரை திருப்திப்படுத்துவதன் மூலம் மகனுக்கு அதிக புள்ளிகளை பெற்றுக்கொடுப்பதற்காகவும் அதன்மூலம் கால நீடிப்பின்றி விரைவாக வீடு திரும்பும் நிலையை உருவாக்குவதற்காகவும் இரத்தம் விற்று பணம் பெற்று, (மேற்பார்வையாளருக்கு) விருந்து வைக்கிறான் ஸன்க்வான். இதேபோலவே அனுமதிக்கப்படும் கால இடைவெளியை மீறி (அதனால் நேரக்கூடிய உயிராபத்தைப் புறக்கணித்து) இரத்தம் விற்பதற்காகவும் இலஞ்சம் கொடுக்கிறான் ஸன்க்வான்.

இந்த நாவல் மிக எளிமையான மொழியில் பேசிச் செல்கிறது. இந் நாவலில் இரத்தம் ஒரு பாத்திரமாக நம்மை பின்தொடர்கிறது. இரத்தம் விற்றுவிட்டு வரும் கணவனிடம் மனைவி சொல்கிறாள், “உங்களுக்குள் ஓடும் இரத்தம் உங்கள் முன்னோர்களிடமிருந்து தலைமுறை தலைமுறையாக உடல்மாறி வந்தது. நீங்கள் எண்ணெய், பலகாரம் விற்கலாம். உங்கள் இடத்தை விற்றுத் தொலைக்கலாம். ஆனால் இரத்தம் விற்கக்கூடாது. நீங்கள் இரத்தம் விற்பதைவிட உங்கள் உடலை விற்பதுதான் நல்லது. உங்கள் உடல் உங்களுடையது. ஆனால் இரத்தம் விற்பது என்பதற்கு உங்கள் முன்னோர்களை விற்பது என்பதுதான் அர்த்தம். நிங்கள் உங்கள் முன்னோர்களை விற்றீர்கள்” என்கிறாள். அதனால் இரத்தம் விற்பது என்பது சீன சமூகத்தில் ஓர் இழிவான செயலாக இருந்திருக்கிறது. அந்த “இழிவான” செயலை அவனது வறுமை இயலாமை எல்லாம் செய்யத் தூண்டுகிறது.

3 பிள்ளைகளில் ஒரு மகன் (யீலி) தனக்குப் பிறக்கவில்லை என்ற சந்தேகத்துடன் சதா -அந்தப் பிள்ளையின் முகச்சாயலூடாகவும் ஊரவர் பேச்சினூடாகவும்- அலைக்கழிக்கப்படுகிறான் ஸன்க்வான். அது அவ்வாறு உண்மையென மனைவியினூடாகவே தெரியவருகிறபோது வெடித்துச் சிதறுகிறான். பிள்ளையை வெறுக்கிறான். வீட்டைவிட்டுக்கூட துரத்துகிறான். விரட்டப்பட்ட அந்தப் பிள்ளையின் (உண்மையான இரத்த உறவு) உருவாக்கத்துக்குக் காரணமானவனிடம் அடைக்கலம் தேடிச் சென்று, பிள்ளை மண்டியிட்டு மன்றாடுகிறது. தன்னை ஏற்றுக்கொள்ளவேண்டுமென எதிர்பார்க்கிறது. அவனும் மறுத்து விரட்டுகிறான், அந்தப் பிள்ளையை!. கொடுந்துயர்.

வேறு வழியேதுமின்றி திரும்பிவந்த பிள்ளையை ஏற்று, பின்னர் படிப்படியாக அவனை தனது குடும்பத்துள் ஒருவராக காண்கிறான் கதையின் நாயகன் ஸன்க்வான். இறுதியில் மிகவும் நோய்வாய்ப்பட்ட அந்தப் பிள்ளை மரணத்தை எட்டப்போகிறதா என ஏங்கவைத்த நாவலாசிரியர் ஆஸ்பத்திரி வழியெங்கும் இரத்தம் விற்றபடி தனது மகனை காப்பாற்ற தன்னை அழித்துக்கொண்டு பயணித்த ஸன்க்வானை ஒரு உண்மை மனிதனாக எம்மிடம் உயிரோடு விட்டுவிடுகிறார். இந்த இரத்த உறவு என்ற கருத்துநிலை எவளவு அபத்தம் என்பதை நாவல் ஸன்க்வானின் அலைக்கழிவினூடாக சொல்கிறது.

குடும்ப உறவுமுறையை மட்டுமல்லாது, தனியுடமையைக் காப்பாற்ற “இரத்த உறவு” என்பது முக்கியமான கருத்துநிலையாக இருக்கிறது. தனது சொத்துகளை ஆண்வாரிசு ஊடாக கடத்தி தொடர்ச்சியைப் பேணுகிற தந்தைவழிச்சமூக அமைப்புமுறையின் ஒரு சூழ்ச்சிகரமான உரைப்பு இந்த இரத்த உறவு என்பதை நாவல் உரசிக் காட்டவும் செய்கிறது.

இந் நாவலை வாசிக்கிறபோது எழும் வாசிப்பு அனுபவம் ஸன்க்வான் இன் உடலை பௌதிக ரீதியிலான உடலாக முதன்மைப்படுத்துகிறது. பண்பாட்டு உடலாக அது தரும் வாசிப்பு அனுபவம் சக்தியிழந்ததாக இருக்கிறது. அதாவது ஒரு physical experience தூக்கலாக இருக்கிறது. அதேநேரம் மனைவி யுலான் பெண்நிலையில் நின்று அனுபவிக்கிற துயரங்கள் மேற்குறித்த வாசிப்பனுபவத்தைத் தாண்டி பல பரிமாணங்களினூடும் வெளிப்படுகிறது.

ஒரு கட்டத்தில் அவள் “நடத்தை கெட்டவள்” என குற்றஞ்சாட்டப்பட்டு, தலை மழிக்கப்பட்டு, சந்தியில் பகல்பூராக காட்சிப் பொருளாக செம்படைக் காவலர்களால் நிற்கவைக்கப்படுகிறாள். அந்தத் தண்டனை நமது ஈழவிடுதலைப் போராட்டத்தில் “சமூகவிரோதி” என மின்கம்பங்களில் கட்டப்பட்டதை நினைவுகூர்கிறது. மின்கம்பத்திலிருந்து எந்த “சமூக விரோதி”யும் உயிருடன் மீண்டதில்லை. ஆனால் இங்கு யுலான் மீள்கிறாள்.

வீடுவருகிற அவளின் மீது குடும்பத்துள் விசாரணை நடத்தப்பட வேண்டிய கட்டாயம். ஆனாலும் குடும்ப அங்கத்தினரை தவிர எவரும் அங்கு இருக்கவில்லை. தலைமழிக்கப்பட்டிருந்த யுலானை விசாரணைக் கூண்டில் ஏற்றி கணவனும் பிள்ளைகளும் “விசாரணை” செய்கிறார்கள்.  அந்த விசாரணை குடும்ப உறவுகளின் விழுமியங்களை பின்தள்ளி இயந்திரத்தனமாக ஆசிரியரால் விபரிக்கப்படுகிறது. இந்த இடத்தில் குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கிவிடுகிற குரூரத்தை நாவலாசிரியரின் எழுத்து செய்ய முயல்கிறது. இன்னொருவனால் தான் உடலுறவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட விபரிப்புகளை தாய் சொல்கிறாள். இன்னொரு பெண்ணுடன் தான் காமமுற்று நடந்துகொண்டதை தகப்பனும் சொல்கிறான். மூன்று குழந்தைகளுக்கும் முன்னிலையில் இவை சொல்லப்படுகிறது. அதுமட்டுமன்றி அந்த குழந்தைகளுக்கு தயாரிக்கப்பட்ட கேள்விகளையும் உரையாடலையும் நாவலாசிரியர் ஒப்புவிக்கிறார். இதன்மூலம் நாவலாசிரியர் ஒரு நாடகீயத்தனமான நிகழ்த்துகையை செய்கிறார்.

இரத்த உறவு கருத்துநிலைக்கு ஆதாரமாக விளங்கும் தனியுடமைக்கு எதிரானது சோசலிசம். தன் இரத்த உருத்தாக இல்லாத தனது மகனை அவன் வெறுத்தொதுக்கியதும், பின்னர் படிப்படியாக அவனை ஏற்றுக்கொண்டு கடைசியில் அவனது உயிரைக் காப்பாற்ற தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அளவுக்கதிகமாக இரத்தம் விற்று எம்மை துயரப்படுத்திச் செல்கிறான் ஸன்க்வான். இரத்த உறவு என்ற கற்பிதத்தை அல்லது புனிதத்தை உடைத்துப் போடுவதாக இதை வாசிக்க முடியும்.

yu hua

இந் நாவலின் ஆசிரியர் யூகுவான் பேட்டியொன்றில் குறிப்பிடுகிறபோது,
“கலாச்சாரப் புரட்சி சீனாவும் இன்றைய சீனாவும் அடிப்படை விடயத்தில் ஒன்றாகத்தான் இருக்கிறது. அன்று அரசியல் மீதான வேட்கை இருந்தது. இன்று பணத்தின் மீதான வேட்கை இருக்கிறது. அன்று புரட்சியின் பேரால் வன்முறை நிகழ்ந்தது. இன்று பொருளாதார அபிவிருத்தியின் பேரால் வன்முறை நிகழ்கிறது” என்கிறார்.

கம்யூனிசத்துக்கு எதிராக மேற்குலகம் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மறுப்புகள், படுகொலைகள் உரிமை மறுப்புகள்… என முழக்கமிட்ட காலம் போயினும், அதே குரல்களை இன்று பொருளாதாரப் பலப்பரீட்சையில் மேற்குலகத்துக்கு சவால் விடுகிற இன்றைய சீனா மீதும் பிரயோகித்தபடியே இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை ஆக்கிரமிப்புப் போர்களையும் “பயங்கரவாதத்துக்கு” எதிரான போர்களையும் செய்து பல மில்லியன் கணக்கான மக்களை கொன்றொழித்தும் அகதிகளாக்கியும் நாட்டின் இறையாண்மைகளை அழித்தொழித்தும் பண்பாடுகள் மீது தாக்குதல் தொடுத்தும் சுற்றுச்சூழலை அழிவுக்குள்ளாக்கியும் வெறியாட்டம் ஆடுகிற அமெரிக்காவும் மேற்குலகும் சீனாவுக்கு விரல் நீட்டுவது வேடிக்கையானது.

நாவலாசிரியர் யூகுவான் ஒரு பல்வைத்தியராக இருந்தவர். சிறுகதைகள், கட்டுரைகள் என எழுதிய அவர் பின்னர் நாவலாசிரியராக பரிணமித்தார். இதுவரை 5 நாவல்களை எழுதியுள்ளார். இரத்தம் விற்பவனின் சரித்திரம் நாவல் 1995 இல் எழுதப்பட்டது. To Live என்ற அவரது நாவல் 20 வருடங்களாக மறுபதிப்புகளுக்கு உள்ளாகி 6 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின. 2015 இல் The Seventh Day என்ற நாவல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. நியூ யோர்க் ரைம்ஸ் இன் கட்டுரையாளராக அவர் இருக்கிறார்.

இந்த விடயங்கள் ஒருவருக்கு உவப்பானதாக அல்லது உவப்பின்மையாக இருக்கலாம். எது எப்படியோ இதைவைத்து நாவல் இயங்குகிற யதார்த்தமான தளத்தை நாம் மறுதலிக்கவே முடியாது. தீவிரமான (சீரியஸான) ஓர் அரசியல் விமர்சகருக்கு இதுவும் கடந்த தேடல்கள் பகுப்பாய்வுகள் தேவை. அது ஓர் இலக்கிய வாசகருக்கு இருக்கவேண்டுமென்பதில்லை.

கலாச்சாரப் புரட்சியின் மீதான விமர்சனங்களை கம்யூனிசத்துக்கெதிராக புரட்சிகளுக்கு எதிராக ஆதாரப்படுத்தும் நோக்கத்தோடு செயற்படுகிறது மேற்குலகம் என்பது உண்மை. அதை வைத்துக்கொண்டு கலாச்சாரப் புரட்சி மீதான விமர்சனங்களையோ அல்லது நியாயப்பாடுகளையோ நாம் புறந்தள்ளிவிடவும் முடியாது. விமர்சனங்கள் வெளிவரவேண்டும். எதிரிக்கு உதவிவிடுகிறது என்பதற்காக இவற்றை மூடிமறைப்பது ஆபத்தானது மட்டுமல்ல,  தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்பதையும் இயலாததாக்கி விடுகிறது. இந்த மனப்போக்கு ஈழவிடுதலை இயக்கங்களிடமிருந்தது. அது இறுதியில் தவறுகளிலிருந்து பாடம் கற்பதற்குப் பதிலாக பெருந் தோல்வியைப் பரிசளித்தது என்பது நினைவுகொள்ள வேண்டியது.

எப்போதுமே இப்படியான நாவல்கள் யதார்த்தமா புனைவா என்ற கேள்வியை வாசகரிடம் எழுப்பத் தவறுவதில்லை. புனைவு என்பதை பொய் என வியாக்கியானம் கொள்பவர்களுக்கு இந்த சந்தேகம் பலமாகவே இருக்கும். யதார்த்தத்தின் தளத்தில் அல்லது சாத்தியப்பாடுகளின் தளத்தில் அல்லது அதன் தர்க்க நீட்சியின் தளத்தில் வைத்து புனைவுகள் உருவாக்கப்படுகிறது அல்லது உருவாகிறது என்ற புரிதல் முக்கியமானது. இவற்றை மறுதலித்து பொய்யை புனைவாக கொள்கிற படைப்பாளர்களிடத்தில் ஒரு அறம் இருப்பதில்லை. தேடல் இருப்பதில்லை.

யூகுவானின் மொழியில் பேசுவதானால் “சமூக விமர்சனத்தை நாவலில் நேரடியாக முன்வைக்கிற வகைமை மிக மோசமானது. சமூக யதார்த்தங்களின் மீதான விமர்சனத்தை செய்வதற்காக நாவல் எழுதப்படுவதில்லை. ஆனால் அதன் உள்ளுடன் எப்போதுமே யதார்த்தத்தை விமர்சித்தபடியேதான் இருக்கும்” என்கிறார்.

இந்த தெளிவான பார்வை வாசகர்களுக்கு இருக்கிறபோது இந் நாவல் யதார்த்தமா புனைவா என்ற கேள்விக்கு இடமில்லாமல் போகிறது. கலாச்சாரப் புரட்சியும் வறுமையும் விளிம்புநிலை மக்களையும் நடுத்தர மக்களையும் பாதித்த விடயங்களை இந்தவகை நாவல்களினூடாகக் கண்டடைகிற அரசியல் பார்வை ஆபத்தானது என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். அந்த நேர் அல்லது எதிர் அம்சங்களை அறிவுபூர்வமாகக் கண்டடைய நாம் கலாச்சாரப் புரட்சி பற்றிய படிப்பில் கவனம் கொள்ள வேண்டும். இந் நாவலை ஓர் அரசியல் நாவலாகக் காண்கிற வாசகருக்கு அது முக்கியமானது. ஆனாலும் இந் நாவலை வாசிக்க அது முன்நிபந்தனையல்ல. இந் நாவலை தனி இலக்கிய வடிவத்துள் வைத்து காண்கிற வாசகருக்கு கலாச்சாரப் புரட்சி பற்றிய அறிவு முக்கிமானதுமல்ல. ஒரு மனிதஜீவியாக இருத்தல் போதுமானது.

– ரவி (19.03.18)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: