a Gun and a Ring

தவறவிடக்கூடாத படம்

gunring-2

a Gun and a Ring படத்தை முதன்முறையாக நேற்று ஐபிசி தொலைக்காட்சியில் இப்போதான் பார்த்தேன். கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரான லெனின் எம் சிவம் அவர்களால் எடுக்கப்பட்டிருக்கிற படம். புகலிட சினிமாக்களையும் பிடித்து ஆட்டும் இந்தியச் சினிமா பாணியை உதறித்தள்ளிவிட்டு தனித்துவமாக வெளிப்பட்டிருக்கிற படம். புகலிட சினிமாவின் எதிர்காலம் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிற படம்.

கதாநாயக விம்பங்களின்றி மனிதர்களை அவரவர் நிலையில் வைத்து கதைகொள்கிறது படம். வன்முறையின் உளவியல், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அதைப் பிரயோகித்தவர்கள் ஆகியோரின் மனநிலை, அது கிளறப்படுதல், அது தன்னை உக்கிரமாகவோ மென்மையாகவோ வெளிப்படுத்தல் என படம் நகர்கிறது.

மனிதர் என்ற பொதுமைக்குள் உணர்வுகள் உணர்ச்சிகள் பொருந்திக் கொள்ளல், மனிதர்களை இனம் கடந்து நிறம் கடந்து இணைக்கிற அதன் உள்ளார்த்தம் என படம் ஊடுருவிச் செல்கிறது.

சொற்செறிவு, புதிய திரைமொழி, காட்சியமைப்பு, இயல்பான உணர்வுசார் உணர்ச்சிசார் வெளிப்படுத்தலான நடிப்பு என்பன மட்டுமல்ல, போராட்ட வாழ்வின் காயங்களை மறுத்த ஈழத்தமிழர் உளவியலின் சாத்தியமின்மையை படம் பேசுகிறது. எனது நினைவின் இடுக்கில் பொத்திவைத்திருக்கிற அந்த நினைவுகளை தொட்டுவிடும் அந்தக் காட்சிகள் என்னை உள்ளிழுத்துக்கொண்டது.

உள், வெளிக் கொலைகளின் சித்திரவதைக் குறூப்பின் ‘நாயகனாக’ இயக்கவாழ் காலத்தில் இருந்த இரும்பன், அவனது மொழி, உச்சரிப்பு, பாதிக்கப்பட்டவனுக்கு எதிராக அவனது உளவியலையே திருப்பிவிடுகிற உத்தி, அவனுள் உறங்கிக் கிடக்கிற வன்முறைவழி தீர்வு, சைகோ எல்லாமும் உதறவைப்பவை. அவர்கள் அதை சாதாரண மனித வாழ்வுக்கு வெளியே வக்கிரமாக வாழ்ந்த ஒரு நீட்சி கொண்டவர்கள். அது அவர்களை அவளவு இலேசில் விட்டுவைப்பதில்லை. எப்போதுமே வன்முறைக்கு வெளியே தீர்வை அடைவதில் பழக்கப்படாததால் இடக்குமுடக்குப்படக் கூடியவர்கள்.அந்த உளவியலுக்குள்ளும் படம் சென்றிருக்கிறது. புளொட் இன் உளவுப்படையின் கொடுமைக்கார ‘நாயகனான’ சங்கிலி என்பவனை இரும்பன் ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தான்.

சூடான் (ஆண்) அகதியும் இலங்கை (பெண்) அகதியும் இணைகிற தளம் மனிதஉணர்வுகள் சார்ந்தது. ஒருவர் உணர்வுத் தளத்துள் இன்னொருவர் இயல்பாய் உட்புகும் பரஸ்பர உரையாடல் சொற்செறிவோடு கட்டமைக்கப்பட்ட விதம் அருமையானது. இருவருமே படுகொலைகளின் களங்களிலிருந்து எல்லாம் இழந்து, நம்பிக்கைகள் ஈடாடி, தமது எல்லைகளைத் தாண்டி, மொழி தாண்டி உலகின் எந்த மூலைக்குள்ளும் நகரத் தயக்கமின்றி இருப்பைத் தேடி அலைபவர்கள். இதுதான் அவர்கள் உணர்வு ரீதியில் சந்தித்துக்கொள்கிற தளம். துப்பாக்கி துரத்திய அவர்களை மோதிரம் இணைக்கிறது.

போரால் பாதிக்கப்பட்டவளை பரிதாபத்துக்காக அல்லது தான் தியாகம் செய்வதாக நினைத்து மணம் முடிக்க வரும் ஒரு ஆணின் உள்ளே இருக்கிற (அவனேயறியாத) ஆண்மையச் சிந்தனையை அடையாளம் காட்டி தன்னை மணம் முடிக்க தன்னை கனடாவுக்கு கூப்பிட்டவனை உதறித்தள்ளுகிற பெண்ணின் ஆளுமை பெண்களை தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கிற வழமைக்கு நேரெதிரானது.

lenin-sivam Lenin M.Sivam

கமரா ஒரு உரையாடலை காட்சிப்படுத்தும்போது ஒரு பக்கத்தை ஒரு சந்தர்ப்பத்திலும் மிகுதிப் பக்கத்தை (அதே உரையாடலின் மற்ற பக்கத்தை) இன்னொரு சந்தர்ப்பத்திலும் படமாக்குகிற சில காட்சியமைப்பு வருகிறது. அதன்மூலம் கமராவே ஒரு பாத்திரமாக அந்த இடங்களில் மாறிவிடுவது ஒரு நுண்மையான உத்தியாக இருக்கிறது. மனிதர்களுக்கிடையான உரையாடல் வேறுவேறு சந்தர்ப்பங்களில் ஒரு விடயம் குறித்து இருக்க முடியும் என்ற இயல்புத்தன்மையை கமரா மேற்சொன்ன காட்சிப்படுத்தலின் மூலம் எடுத்துக்கொள்வதால் (சில சந்தர்ப்பங்களில் ஒரு பாத்திரமாக மாறிவிடுதலை) நிகழ்த்துகிறது.

பெண்மீதான குழந்தைகள் மீதான இன்னொரு வன்முறை வடிவத்தின் கதையும்  கனடிய சூழ்நிலையில் வைத்து சேர்த்தே பின்னப்பட்டு பல கதைகளையும் வன்முறை உளவியலின் தளத்தில் வைத்து தொடர்புபடுத்தியும் படம்  பரந்த வியூகம் பெறுகிறது..

இதனால் உரையாடலின் களன்களை உருவாக்கி முடிவுறாத ஒரு வாசிப்பை தந்து சிந்திக்க வைத்துவிட்டு படம் முடிகிறது. துப்பாக்கி அழிவின் குறியீடாகவும் மோதிரம் புதிய வாழ்வின் தொடக்கமாகவும் மனித வாழ்வு இதனிடையான போராட்டத்தோடு நகர்வதை இந்தப் படம் தனக்கான பாணியில் சொல்லிச் செல்கிறது. தவறவிடக்கூடாத படம். இளைய தலைமுறையைச் சேர்ந்த லெனின் எம் சிவத்தின் படைப்பாற்றல் அவரிடமிருந்து மேலும் வித்தியாசமான படங்களை எதிர்பார்க்க வைக்கிறது.

  • ravi (30102016)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: