உயிரைக் கொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என
குரலெழுகிற இதே உலகில்தான்
“மன்னித்துவிடு” என்று வேறு கேட்க வேண்டியுமிருக்கிறது.
அவலம்தானெனினும் கேட்டுக்கொள்வோம்
அதிகாரம் படைத்த சீமான்கள்
நவீன உலகில் வீற்றிருந்தபடி
ஆதியுலகத் தண்டனைகளை ஏவுகின்றனர்
அடிமைப்பட்டவர்கள்மேல்.
சிவப்புதிர்கால மங்கிய ஒளியில்
அந்தப்புர நனவுகளில் உடல் தேய்த்தபடி,
இயல்பாய் எழும் பாலியல் வேட்கைக்காய் – அடிமைப்பட்டோருக்கு
தண்டனை வழங்குகிறார்கள்.
கிறங்கிப்போகிற உலகை
அவர்களுக்கு மதுவும் மாதுவும் பரிசளித்துக்கொண்டிருக்க
உணர்வுவெளி பரவி
உடல்புகுந்து தொடுகையுறும் அடிமைப்பட்டவர்களின்
காதலுக்கு தண்டனை வழங்குகிறார்கள்.
சவுக்கின் நுனியிலோ கல்லின் சொரசொரப்பிலோ
வண்ணத்துப் பூச்சியின் நிறங்களை தேய்த்தழிக்கின்றனர்.
வாழ்வு நிறங்களையுதிர்த்து இரத்தமாய் வடிவதை
அவர்கள் “நீதி” என்று கொண்டாடுவர்.
அதை நீதிதான் என ஏற்று முழந்தாளிட
அடிமைப்பட்டவர் உலகிலும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
என்றாகிறபோதும் சகோதரியே
சபிக்கப்பட்ட இந்த உலகு நீங்கி
சிறகு முளைத்து நீ மரணக் குகையிலிருந்து
உந்தியெழுந்து பறக்கும் கனவை
நான் இழந்திலன்.
நான் இழந்திலன்.
- ரவி (01122015)
fb link: