அரசு(கள்) என்பதே ஒரு வன்முறை இயந்திரம். அதன் விளைபொருளாக எதிர்ப் பயங்கரவாதம் உருவாகுவது ஒன்றும் அதிசயமல்ல. இலங்கையில் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஒரு பகுதியினரால் தமிழ்மக்களுக்கான போராட்டமாகவும் இன்னொரு பகுதியினரால் பயங்கரவாதமாகவும் வரைவுசெய்யப்பட்டது. எது எப்படியோ புலிகளின் அழிவு (ஆயுதரீதியிலான இயங்குதளம்) முற்றாக 2009 உடன் முடிந்துபோயிருக்கிறது. தமிழ் மக்களுக்கான தீர்வை கொடுத்துவிட புலிகளே தடையாக இருக்கின்றனர் என்ற அரசின் அல்லது அரச ஆதரவாளர்களின் வாதத்தை இந்த 3 ஆண்டுகள் பரிட்சைக்காலமாக எடுத்துக்கொண்டால் பெறுபேறுகள் என்னவாக இருக்கிறது? கடைசியில் நடந்துள்ள வைத்தியர் சங்கரின் கைது பற்றிய செய்தி இன்னமும் உலரவில்லை.
எப்பொழுதுமே ஒரு மக்கள் சார்ந்த அரசியல் செயற்பாட்டாளர் என்பவர் அதிகாரங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பவராக, இயங்குபவராக இருக்க வேண்டும். புலிகளின் அதிகாரத்துவத்துக்கு எதிராக குரல் கொடுத்ததுபோலவே, புலிகளற்ற இன்றைய நிலையில் அந்த அதிகாரத்துவ இடைவெளியை நிரப்பியிருக்கும் அரசும் அதன் துணையாளர்களுக்கும் எதிராக அரசியல் செயற்பாட்டாளர்களின் குரல் ஒலிக்க வேண்டும். மேலெழுந்து நிற்கும் அதிகாரத்துவ சக்தியை எதிர்ப்பது என்பது மற்றைய அதிகாரத்துவ சக்திகளை சார்வது அல்லது கண்டுகொள்ளாமல் விடுவது என்பதல்ல. புலிகளுக்கு எதிராக குரல்கொடுத்த புகலிட சிறுசஞ்சிகைக்காலத்தில் அரசுக்கு எதிராகவும் மட்டுமல்ல வேளாள ஆதிக்கத்துக்கு எதிராக, ஆணாதிக்கத்துக்கு எதிராக… என்றெல்லாம் (அதிகாரத்துவங்களுக்கு எதிரான) குரல்கள் எழுந்ததை பதிவுசெய்தாக வேண்டும்.
அரசு அதிகாரத்துக்கு எதிரான போராட்ட அமைப்புகள் எதுவுமற்ற இலங்கையில் இன்றைய அதிகாரத்துவ வெளியை நிரப்பியிருப்பவர்கள் யாராக இருக்க முடியும். அரசு அன்றி வேறென்ன? இந்த அதிகாரத்துவ சக்திக்கு எதிராக குரல் எழுப்பாமல் இப்போதும் செத்த புலிகளுக்கு “அதிகாரத்துவ ஆடை” போர்த்து வெளுத்து வாங்குவதில் எந்த மாற்று அரசியலைக் காண்பது?. அரசு அதிகாரத்துவத்தையோ இந்த அதிகாரத்துவத்துக்கு துணைபோகும் அறிவுசீவிகளையோ விமர்சிக்காத எந்த அரசியலும் தமது மாற்று அரசியற் கதவுகளை திறந்து திறந்து அடிச்சுச் சாத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான். விவாதங்கள் வெளியில்தான் குந்திப்பிடிச்சுக் கொண்டு இருக்கும், எந்த நம்பிக்கையும் அற்று!