1994 மே மாதம் நாம் சூரிச் புகையிரத நிலையத்தில் பிரசுரங்களுடன் மூவர், நால்வர் கொண்ட குழுவாக நிற்கிறோம். அன்றைய காலகட்டத்தில் தமிழர்களிடத்தில் கார் பாவனை என்பது அரிதான ஒன்று. அதனால் முக்கிய புகையிரத நிலையங்கள் எமது “மனிதம்” சஞ்சிகையின் விற்பனை இடமாக இருக்கும். இன்று பிரசுரத்துடன் நிற்கிறோம். ஒருவித பயம். பிரசுரங்களை விநியோகிக்கின்றோம். தமிழ்மொழியிலும், யேர்மன் மொழியிலுமான பிரசுரங்கள் அவை. பதட்டத்துடனும் கோபத்துடனும் அடுத்து எதுவெல்லாம் நடக்கப்போகிறது என்ற கேள்விகளுடனும் நாம் நின்றோம். ஆம், நண்பர் சபாலிங்கம் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் பிரசுரங்கள்தான் அவை.
1994 மே முதலாம் திகதி என்றதும் உழைக்கும் மக்கள் தமது உரிமைப் போராட்டத்தை இரத்தம் தோய்ந்த கொடியினூடு உயர்த்திக் காட்டிய நாள் நினைவுக்கு வரும். இன்றோ மக்களின் உரிமைகளை நசுக்குபவர்கள் மேதினத்தை அரசியல் திருவிழாவாக மாற்றியிருக்கும் கேணைத்தனம் ஞாபகத்துக்கு வரும். நமது போராட்ட வரலாற்றில் மாற்றுக் கருத்துகள் மீதான புலிகளின் கொலைவெறி புகலிடத்தில் பாய்ந்து குதறிய மேதினம் நமக்கு எப்போதும் ஞாபகத்தில் வரும். ஆம், அன்றுதான் பாரிசில் நண்பர் சபாலிங்கம் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இது நடந்தது 1994 மே தினத்தன்று.
மாற்றுக் கருத்துகளின் மீதான புலிகளின் படுகொலை முறைமையில் பலர் பலியாகினர். ராஜினி திரணகம, கோவிந்தன் (கேசவன்), செல்வி, சபாலிங்கம் இவர்கள் மாற்றுக் கருத்துகளுக்கான போராட்டத்தின் அழிக்க முடியாத குறியீடாய்ப் போயினர் எமக்கெல்லாம். மாற்றுக் கருத்து என்பதை புலியெதிர்ப்பு மட்டுமாய்ச் சுருக்கிக் காட்டாதவர்கள் இவர்கள். ராஜினியின் “முறிந்த பனைமரம்” நூல் புலிகளை, இலங்கை அரசை, இந்திய அமைதிப்படையை, அவர்களுடன் சேர்ந்தியங்கிய ஈபிஆர்எல்எப் இனை, உட்கொலை புரிந்த புளொட் இனை, உட்கட்சி ஜனநாயங்களை மறுத்த வன்முறைகள் புரிந்த மற்றைய இயக்கங்களை என எல்லாத் தளங்களிலும் விமர்சனங்காய் விரித்துக் காட்டியது. எல்லாவகை அதிகாரத்துவங்களுக்கும் எதிராய் நின்று காட்டியவர்கள் அவர்கள். இதையே மாற்றுக் கருத்து என்று மிகத் தெளிவாக அடையாளம் காட்டிய குறியீடுகள் அவர்கள். ஆனால் மேதினம்போல் மாற்றுக் கருத்து என்பதும் உருமாற்றப்பட்டிருக்கிற ஒரு காலகட்டத்தில் இக் குறிப்பு இன்னொரு முக்கியத்துவம் பெறுகிறது.
1980 களின் நடுப்பகுதியிலிருந்து 90 களின் நடுப்பகுதிவரை புலிகளின் புகலிட அதிகாரம் வன்முறை கோலோச்சிய காலம். கோவில் உட்பட வெகுசன அமைப்புகள், தொலைக்காட்சி உட்பட ஊடகங்கள் என எல்லாவற்றையும் கையகப்படுத்தினர் அவர்கள். மற்றைய அமைப்புகளின் கூட்டங்களுக்குள் புகுந்து தாக்கினர். தம்மை விமர்சித்த நபர்களை தாக்கினர். தமக்கு பணம் தர மறுத்தவர்களை பயமுறுத்தினர். இந்த அகோரங்களுக்குள் கனடா, ஜரோப்பா நாடுகளில் புகலிட சிறுசஞ்சிகைகள் தாக்குப்பிடித்து மாற்றுக் கருத்துக்கான தளத்தை தக்கவைப்பதில் படாத பாடுபட்டன. எந்த குழுவாதமுமின்றி இந்த ஜனநாயக மறுப்புகளுக்கு எதிராக நின்றன. நண்பர் சபாலிங்கம் இந்த சக்திகளோடு கூட்டாகவும் தனியாகவுமென இந்த ஜனநாயகப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்தியவர். இவரது கொலை ஒரு பேரதிர்ச்சியாக இந்த புகலிட சஞ்சிகைகளைத் தாக்கியது. புகலிடத்தின் ஜனநாயக அரசியல் முறைமைக்கள் தமக்கு ஒரு பாதுகாப்பைத் தேட முடியும் என நம்பிய இந்த சக்திகளுக்கு அது பொய்ப்பிக்கப்பட்டதே அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.
இதற்கான உடனடி எதிர்வினையை -ஜனநாயகத் தளத்தில்- ஆற்றுவது அவசியமாகப் பட்டது. எல்லாத் தளங்களையும் தமக்குக் கைமாற்றிய புலிகளிடமிருந்து இன்னமும் கைமாறாமல் தாக்குப்பிடித்த சிறுசஞ்சிகைத் தளத்தை, அதற்கான இற்றைவரையான உழைப்பை இழக்க முடியாது என்பது முதன்மையான பிரச்சினையாகியது. சுமார் 38 சஞ்சிகைகள் அப்போ வெளிவந்துகொண்டிருந்தன. இலக்கியச் சந்திப்பு என்பது இந்தச் சிறுசஞ்சிகைகள் பலவற்றின் சந்திப்பு மையமாக இருந்தபோதும் சபாலிங்கத்தின் கொலை தொடர்பில் “இலக்கியச் சந்திப்பு நண்பர்கள்/ தோழர்கள்” என ஒரு கூட்டுப் பிரசுரமோ அறிக்கையோ உடனடி எதிர்வினையாற்றி வரவில்லை. அதற்கான ஒரு வடிவம் அதற்கு இல்லாததுதான் காரணம்.அதை இலக்கியச் சந்திப்பு முன்னின்று உடன் செய்யத் தவறியது பதியப்பட வேண்டிய ஒன்று.
ஆனால் சிறுசஞ்சிகைகளிடமிருந்து அதை முன்னெடுப்பதில் மனிதம் (சுவிஸ்), தாயகம் (கனடா), சமர் (பிரான்ஸ்), தூண்டில் (ஜேர்மன்) சஞ்சிகைகயாளர்கள் முன்கையெடுத்தனர். இணையம் இல்லாத காலமது. இருந்தும் பல முயற்சிகளினூடு மற்றைய பல சஞ்சிகைகளையும் இதில் இணைத்துக்கொண்டு ஒரே நாளில் எல்லா நாடுகளிலும் இந்தக் கொலைக்கு எதிரான பிரசுரத்தை வெளியிடுவது என தீர்மானித்தோம். பக்ஸ் மூலம் ஒரு வரைவு பரிமாறப்பட்டு, கருத்துகள் பொது உடன்பாடுகளின் அடிப்படையில் திரும்பத் திரும்ப திருத்தப்பட்டு, அந்தந்த நாடுகளில் பிரதி எடுக்கப்பட்டு, பிரசுரமாக வடிவமைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. (அதன் பிரதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது) இப் பிரசுரம் (சுவிசிலும் யேர்மனியிலும்) யேர்மன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இரவிரவாக தொலைபேசியில் செலவுசெய்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை.
இதில் இணைந்துகொண்டு செயற்பட்ட சஞ்சிகைகள்:
சுவிசிலிருந்து மனிதம், பிரான்சிலிருந்து சமர், யேர்மனியிலிருந்து தூண்டில், சிந்தனை, தேனீ, ஊதா என்பனவும், நோர்வேயிலிருந்து சுவடுகள், சுமைகள் என்பனவும், லண்டனிலிருந்து தாகம், ஈழபூமி என்பனவும், கனடாவிலிருந்து தேடல், தாயகம், காலம், நான்காவது பரிமாணம், விழிப்பு, கிரிய குரல் என்பனவும் ஆகும். இத்துடன் Tamil Resource Centre (canada), Srilankan for Human Rights (canada), Campaign for Democracy in Sri Lanka (Canada), South Asian Solidarity Commitee (Germany), Interculture Media Point (Grenzenlos-Germany) அமைப்புகளும் இதில் இணைந்துகொண்டன.
முழு சஞ்சிகைகளும் இந்தச் செயற்பாட்டில் இணைக்கப்பட முடியாமல் போனது நடைமுறை சார்ந்த பிரச்சினையாகவும் பின்வாங்கலாகவும் இருந்தபோதும் மிக முக்கியமான செயற்பாடாக கணிசமானளவில் இது செய்து முடிக்கப்பட்டது. இதன் பின்னர் நண்பர் புஸ்பராசாவின் முக்கிய ஒழுங்குபடுத்தலுடன் இலக்கியச் சந்திப்பில் பங்குபற்றியவர்களுமாகச் சேர்ந்து பாரிசில் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடாத்தப்பட்டது. பகிரங்கமாக மேடையில் பலர் புலிகளின் அராஜகத்தை கண்டித்து உரையாற்றினர். சிறுபத்திரிகைகள் இச் சம்பவம் பற்றி புலிகளை நேரடியாகவே குற்றஞ்சாட்டி தொடர்ச்சியாக எழுதின. மனிதம் பத்திரிகை (1994 மே, யூன்) இதழின் ஆசிரியர் தலையங்கம் இதுபற்றியே இருந்தது. (கீழே அது இணைக்கப்பட்டுள்ளது).
பின்னர் நண்பர் சபாலிங்கத்தின் 5 வருட நிறைவையொட்டி “தோற்றுத்தான் போவோமா” என்ற தொகுப்பு நண்பர் புஸ்பராசாவின் முயற்சியில் வெளிவந்தது. இவை எல்லாமுமே இந்த மாற்றுக் குரலுக்கான தளத்தை பேணுவதற்கு ஒரு தொடர்ச்சியை வழங்கின. இருந்தபோதும் சபாலிங்கத்தின் கொலை நேரடியாகவும் மறைமுகமாகவும் சஞ்சிகைகள் பல நின்றுபோவதற்கான காரணமாக அமைந்தது. இதையும் தாண்டி சில சஞ்சிகைகள் மட்டும் கால ஒழுங்கின்றி வெளிவந்தன. சபாலிங்கத்தின் கொலைக்குப் பின்னான நிலைமையை தாண்டி தொடர்ந்து வந்த மனிதம் சஞ்சிகை உள்முரண்பாட்டில் 1994 வருட இறுதியுடன் நின்று போனது.
1990 களின் நடுப் பகுதியில் புகலிட இலக்கியம் பாரிசில் மையம் கொண்டது. ஏற்கனவே தக்கவைக்கப்பட்டிருந்த சிறுபத்திரிகைத் தளத்தின் தொடர்ச்சியை அது பேணியது. இது ஒரு முக்கியமான விடயம். அரசியல் இலக்கிய தளத்தில் சில ஆளுமைகள் உருவாகினர். நல்ல பல எழுத்துகளையும் அது வெளிக்காட்டியது. அதேநேரம் குழுவாதத்தின் பிறப்பிடமாகவும் அது மாறியது. பன்முக கருத்துக்கொண்டோரை அல்லது எதிர்க் கருத்துகள் கொண்டோரை ஒரு ஜனநாயக மரபுக்குள் சந்திக்க வைத்து உரையாடலை நடத்தும் திறனற்று அது இருந்தது. மொட்டைப் பிரசுரத்திலிருந்து கல்வெட்டுப் பாடுவதுவரை இந்தக் கசமுசாக்கள் தொடர்ந்தன. (ஐரோப்பிய அரசுகளின் புலிகள் பற்றிய அரசியல் நிலைப்பாட்டினாலும், வரம்புமீறிய புலிகளின் கிரிமினல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவேண்டி ஏற்பட்டதாலும்) புலிகளின் புறநெருக்கடி தளர்ந்துபோயிருந்ததன் வெளிப்பாடாகவே இதைக் கொள்ளலாம். மாற்றுக் கருத்து என்பது இந்தப் புதிய புகலிட சூழலுக்குள் அல்லாடியது.
போதாக்குறைக்கு புலிகளின் அராஜகம் உச்சநிலையில் இருந்த காலங்களில் காணாமல் போனோரும் பிற்பட்ட காலங்களில் இணைந்துகொண்டு -ஆபத்தற்ற நிலையின் உறுதிப்பாட்டுடன்- மாற்றுக் கருத்தை புலியெதிர்ப்பாகக் குறுக்குவதில் தம் பங்கை ஆற்றினர். அதேபோல் ஊடகங்கள் சிலவும் அறம்புறமாக தமது “மாற்றுக் கருத்துக்களை” அவிழ்த்துவிட்டது மட்டுமன்றி தாமே அத் தளத்தை உருவாக்கியதாகக்கூட புலுடா விட்டன.
இன்று மாற்றுக் கருத்து என்பதற்கான அர்த்தங்களின் சிதைவும் இலக்கியச் சந்திப்பை இயல்பாகவே பாதித்துள்ளது. அரசியல் இலக்கிய தளங்களில் உலவுபவர்களிடையே ஒரு சந்திப்புக்கான சந்தர்ப்பங்களை அது ஏற்படுத்திக் கொடுப்பதாகவும், தனிநபர்களின் இருப்புகளுக்கு பயன்பட்டுப் போவதாகவும், தமக்கான அடையாளங்களை செதுக்கும் இடமாகவும், கூட்டுச் செயற்பாடின்மையின் வடிகாலாகவும், அதிகாரத்துவத்தை தத்தம் அரசியல் நலன் சார்ந்து எதிர்க்கும் குரல்கலவிகளாகவும் இலக்கியச் சந்திப்பு மாறியிருக்கிறது. கூட்டுச் செயற்பாடு மட்டுமன்றி இலக்கியச் சந்திப்பின் விவாதங்கள் ஆய்வுகள் எதையுமே ஒரு அச்சுப் பதிவில் கொண்டுவரும் குறைந்தபட்ச நடைமுறையைக்கூட காண இயலவில்லை.
நண்பர் சபாலிங்கம் ASSEY (ஈழம் கலைகள் சமூக விஞ:ஞானக் கழகம்) எனும் இடம்பெயர்ந்த தமிழர்களின் வெளியீட்டு நிறுவனத்தை நடாத்தி வ.ஜ.ச ஜெயபாலன், சேரன், அருந்ததி, செல்வம், சோலைக்கிளி, ஆகிய கவிஞர்களின் கவிதைத் தொகுதிகளையும், தராகியின் (Eluding Peace) பத்தி எழுத்துகளையும் வெளியிட்டுள்ளார். புத்தளம் முஸ்லிம் மக்கள் வரலாறு, புதியதோர் உலகம், எமர்ஜென்சி 58, யாழ்ப்பா வைபவமாலை போன்றவற்றை மறுபதிப்பும் செய்தார். இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றிய யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் குழுவின் அறிக்கைகளை பிரெஞ்ச் மொழியிலும் வெளிக்கொணர்ந்தார். கணனிகளற்ற காலத்தில் புதியதோர் உலகம் நாவலைக்கூட போட்டோப் பிரதி எடுத்து புத்தகமாக்கி வெளியிட்டார்.
பிரெஞ்ச் மொழியில் புலமைபெற்ற அவர் அந்தப் புலமையை உழைப்புக்கானதாக மாற்றுவதைவிட சமூகத்துக்கானதாக கூடியளவு செலவுசெய்தார். அத்தோடு அரசியல் தஞ்சம் கோரும் அகதித் தமிழருக்கு இலவசமாகவே அவர்களுக்கு கேஸ் எழுதுபவராக உதவிபுரிந்தார். கேஸ் எழுதும் விடயமாகத்தான் தாம் வருவதாக அவரின் சமூக மனக் கதவைத்திறந்து வீட்டிற்குள் நுழைந்த புலிகள் அவரை இரக்கமின்றிக் கொலைசெய்தனர்.
70 களிலிருந்தான விடுதலைப் போராட்ட வரலாற்றை தகவல்களுடனும் வாக்குமூலங்களுடனும் புகைப்படங்களுடனும் ஆவணப்படுத்தும் பெருமுயற்சியின் இறுதிக் கட்டத்தில் அவர் கொலைசெய்யப்பட்டார். புலிகள் பற்றி முக்கியமாக பிரபாகரன் பற்றி மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளியில் வந்துவிடலாமென கொண்ட அச்சம்தான் காரணம் என பலராலும் பேசப்பட்டது. சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டார். அவரது பேனா பிடுங்கி எறியப்பட்டது. அவரது இந்த ஆவணங்கள் எங்கு போயின என்பது கேள்விகளோடுதான் இப்போதும்!