போர்ப் பறப்பு
Posted May 12, 2008
on:- In: கவிதை
- Leave a Comment
என் இரவுகளைக் கொத்தி
துளைகளிடும் பறவைகளின் ஒலி
தூக்கத்தைக் கலைக்கிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர்
சமாதானத்துக்கான போர்
சனநாயகத்துக்கான போர் என்றெல்லாம்
நிறம் விரித்து வருகிறது பறவைகள்
அவ்வப்போது.
அது ஒரு ஈழக்குழந்தையையோ
அல்லது பலஸ்தீனக் குழந்தையையோ
இரத்தம் சொட்டச் சொட்ட தன்
கூரலகால் காவிச்செல்கிறது.
போர்களுக்கான நியாயங்களை நிரப்பியபடி
அதன் எசமானர்கள் போலவே
என் நண்பனோ நண்பியோ மதுக்கோப்பையுடன்
விவாதித்துக் கொண்டிருத்தலும்கூடும்.
முரண்களின் வெடிப்புகளில்
கசியத் தொடங்கும் நீர்க்கோட்டை
நீர்வீழ்ச்சியாய், பின் காட்டாறாய் ஓடவைக்கும்
கலையறிந்த மானுடர் சபைமுன்
“போர்நிறுத்தம் போர்நிறுத்தம்” என
கூவியபடி கடைவிரிப்பர் பான்கீமூன்கள்.
தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உரிமை
இஸ்ரேலுக்கு உண்டென
ஒபாமா வெள்ளையாய்ச் சிரிக்கிறார்.
எப்போதுமே அவர்களிடம்
போர்களுக்கான நியாயங்கள்
பிறந்தபடியேதான் இருக்கின்றன.
அதை ஆதரிப்பவர்களும் வசதியாய்
கேள்விகளைத் தொலைத்துவிடுகின்றனர்
அவர்களின் அளவுகோல்கள்
கிளைவிடத் தொடங்கிவிடுகின்றன.
அழிவுகளின் பின்னரான துயிலெழலில்
போர்களை எதிர்ப்பதான அவர்களின் கூச்சலிடை
போர்களுக்கான நியாயங்களும்
எங்கோ ஓர் மூலையில்
முட்டை இட்டுவிட்டுப் போய்விடுகிறது,
என் இரவுகளைக் கொத்தி
துளையிடும் பறவைகளை அவர் கண்டாரில்லை.
– ரவி
Leave a Reply