சேய்!
என்னைத் தண்டித்துவிடு
உனது புதைகுழியை
தென்னமெரிக்கக் காற்றில் விதைத்து
புரட்சியின் குறியீடாய்ப் போனவன் நீ.
உன்முன் நான் மண்டியிடுகிறேன்
என்னைத் தண்டித்துவிடு, நான்
ஓர் இலங்கையனாய்ப் பிறந்ததிற்காய்.
சேகுவேரா
உனது பெயரில் ஓர் ஏப்ரல் கிளர்ச்சி
வெடித்து பின்
சிதறிப்போய் முப்பத்திமூன்று ஆண்டுகளாகிறது.
இன்றும் சேகுவேரா என்றால் உனது
பெயரென்றறியாமல்
தவறியிருப்பவர்களிடம் நினைவில்
வந்துபோபவர்களை உனக்குக் காட்ட
வெட்கப்படுகிறேன்.
உனது தாடியை பிரதிபண்ணியதற்கும் அப்பால்
சம்பந்தமற்றுப்போனவர்கள் அவர்கள்.
கிளர்ச்சியின் நாயகர்களாய்
வதந்திகளை நாளுக்குநாள் காற்று
எழுதிக்கொட்டிய அந்த நாட்களில் நாம்
திகில்கொண்டிருந்தோம்
புரட்சியை ஒரு மாயக்குகைபோல்
அவசர அவசரமாய்ப் புனைந்துகாட்டி பின்
தோற்றுப்போனார்கள்.
எல்லாம் போயிற்று
வதந்திகள் பிணங்களின் எண்ணிக்கையையும்
இந்திய இராணுவத்தின் கொலை வெறியாட்டத்தையும்
காவி வரவர
ஊதிப் பெருத்த செய்திகளில் நாம்
களைப்படைந்தோம்.
அழகுராணி மன்னம்பெரியை நிர்வாணமாய்
வீதியில் நடத்தி பின்
கொலைசெய்த பொலிஸ்கோரத்தில்
மனிதம் அதிர்ந்துநிற்க, உலகின் முதல்
பெண் பிரதமர் அரசவைக் கட்டிலை
அலங்கரித்துக்கொண்டிருந்தார்.
இப்படியாய்
பரம எதிரியாய்ப் போனோர் இன்று
தேர்தலில் ஓரணியான புதினம்
இருக்கிறதே பார், சொல்லிட
வெட்கப்படுகிறேன் நான் ஓர்
இலங்கையனாய்ப் பிறந்ததில்.
இளைஞர்களேயற்ற கிராமங்களையும்
பிணங்கள் காவிய களனிகங்கையையும்
நிர்மாணித்ததில்
கொலைக்கரங்களிற்குக்கூட வலி எடுத்திருக்கும்.
உயிர்களை புதைகுழிக்குள் கொழுவி
வீசியதில்
கடிகார முட்களும் சோர்வுற்றிருக்கும்.
சோசலிசக் கனவுகளோடு புதைக்கப்பட்ட
தோழர்களின் புதைகுழியில்
மலர்களுக்குப் பதில்
இனவாத முட்களோடு அஞ்சலிக்காய்
அணிவகுக்கின்றனர், உனது பெயரில்
முன்னர் புயல்கொண்டவர்கள்.
இதற்காய்
வெட்கம்கொள்ள ஏதும் இல்லை எனின்
அம்மணமாய் நான் வீதியில்
நடப்பது ஒன்றும் அசாதாரணமல்ல.
தண்டித்துவிடு,
என்னைத் தண்டித்துவிடு!
உன்முன் நான் மண்டியிடுகிறேன்
என்னைத் தண்டித்துவிடு சே, நான்
ஓர் இலங்கையனாய்ப் பிறந்ததிற்காய்!
– ரவி (160204)