“கொரில்லா” – உள்ளும் புறமும்…

– ஒரு குறிப்பு-

ஷோபாசக்தியின் கொரில்லா நாவலிற்கான அடையாளத்தினை சாதிக் கொடுக்கும்போது இந்த எதிர்பார்ப்பை தந்து நாவலுக்குள் அனுப்புகிறார்.
ஊத்தையர்களோடு ஊத்தையர்களாக… விளிம்புநிலை வாழ்வை வரித்துக் கொண்ட… என்றெல்லாம் அடையாளம் ஷோபாசக்தியை அறிமுகம் செய்கிறது. பொருளாதார ரீதியிலும் வசதிவாய்ப்புகளிலும் ஏன் வேலை இல்லாதவனுக்கும் சமூகநலன் உதவியும் சமூக உத்தரவாதமும் இருக்கும் ஒரு நாட்டில் ஊத்தையனாக இருந்து தன்னை விளிம்புநிலை மனிதனாக காட்டவேண்டிய தேவை இருப்பதாக தெரியவில்லை.

சமூக அனுபவம் என்ற பெரும் பிரிவுக்குள்ளிருந்து இயக்க அனுபவம் என்ற பகுதிக்குள் நாவல் இழுத்துச் செல்கிறது. அதனால் இயக்க அனுபவம் வாய்க்கப் பெற்றவர்களிடம் இந்த நாவல் இன்னும் அதீதமாகப் பேசத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் ஆழ்மனதில் உறைந்துபொயிருக்கும் இயக்க அனுபவங்கள் அதன் பேசப்படாத பக்கங்களையும் புரட்டுவதில் கொரில்லா ஒரு காவியாகச் செயற்படுகிறது. புதியதோர் உலகம் நாவலுக்குப்பின் செழியனின் நாட்குறிப்புகள் ஊடாக… இந்தத் தளத்தில் இயங்கிய இன்னொரு நாவலாக கொரில்லா இருப்பது அதீதமாகப் பேசப்படுவதற்கான ஒரு காரணம் என நினைக்கிறேன். சாதாரண ஆதரவாளனிலிருந்து இயக்கத்தின் மத்தியகுழு வரையிலுமுள்ள போராளிகளின் பல அனுபவங்கள் நாவலாக இதுவரை பதிவுசெய்யப்படவில்லை என்று கூறலாம். இந்த நீண்ட இடைவெளியுள் கொரில்லா இப்போ வந்திருப்பது கொரில்லாவை பேசுபொருளாக்கியிருக்கிறது.

ஒரே மூச்சில் அதன் முதல் பாகம் எழுதப்பட்டதுபோன்று வேகம் பெறுகிறது. அதற்கு ஷோபாசக்தியின் எழுத்துமுறையும் ஒரு காரணம். ஏற்கனவே அவரின் சிறுகதைகளில் இவ்வகை மொழிக் கையாள்கை வரப்பெற்றிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனாலும் கொரில்லா சமூகத் தளத்துள் விரிவடையாமல் போயிருக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது. இயக்க அனுபவச் செறிவும் நாவலில் இல்லை. இயக்கத்தில் பெயர் கொடுக்கும் நாளிலிருந்து இயக்கத்தில் ஊடாடும் இறுதிநாள் வரை அனுபவம் இன்னொரு உலகத்தில் விட்டிருக்கும். இதில் சுய அனுபவம் துளியாய்க் கரைவது. கொரில்லாவில் சுய அனுபவங்களினூடே -அதாவது தன்னைச் சுற்றியே- கதைசொல்லி பயணிக்கிறார். ஆனாலும் இது நாவலின் குறைபாடல்ல. நாவலின் செறிவைக் குறைத்திருந்தாலும் அற்புதமான நாவலாக வரையப்பட்டிருப்பது இலக்கியத் தளத்தில் கிடைத்த வெற்றிதான்.

கடற்கரையின் மண்அரிப்பைத் தடைசெய்யும் நோக்கோடு தடைசெய்யப்பட்ட இடத்தில் மண்ணேற்றிய லொறிமீதான இழுபறியினை நாவல் ஒரு வேகத்தோடு சொல்கிறது. இது இயக்கத்தக்கு வேண்டியவர்கள் எடுத்துக்கொள்ளும் சலுகையை அழகாகவே படம்பிடித்துக் காட்டுகிறது. அதேபோல் ஊர்ச்சண்டியனாக இருந்த கொரில்லாவை எதிர்கொண்டதில் உள்ள இயக்க உள்பலவீனம் வெளிச்சம்போட்டுக் காட்டப்படுகிறது. இது ஊர்ச்சண்டியர்கள் விடயத்தில் மட்டுமல்ல தாக்குதல் சம்பவங்களின்போதும்கூட களத்தில் நடந்த பலவீனமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு வெளியில் (சனத்திடம்) சாகசமாக காட்டப்பட்டன. இவை உள்ளுக்குள் சொல்லிச்சொல்லி சிரிக்கும் சம்பவங்களாக போராளிகளுக்குள் உலவின. உதாரணமாக மட்டக்களப்பு சிறையுடைப்பை செய்த ஒரு போராளி சொன்னார்…கடவுள் செயலாலை தப்பினம்@ சரியான பிளான் எதுவும் எம்மிடம் இருக்கவில்லை@ ஒரு குளறுபடியாக நடந்துமுடிந்தது என்று. ஆனால் வெளியில் அசலான ஒரு தாக்குதலாக சாகசப்படுத்தப்பட்டது.

கொரில்லாவின் சண்டித்தனக்; கலாச்சார சூழலினுள் வாழ்ந்த அல்லது அதை எதிர்கொண்ட ரொக்கிராஜ் புலிகளின் விசுவாசமிக்க போராளியாக உருவெடுக்கிறான். தலைமை-மெயின்-குஞ்சன்வயல் என்ற பாதையினூடு போவதும் வருவதுமாக இருக்கும் நாவல் பின்னர் குஞ்சன்வயல்-கொழும்பு-வெளிநாடு என பயணித்துப் போகிறது. இயக்க அனுபவம் என்பது விரிந்தது. இயக்கத்துள் நிலவிய நிலையும் இயக்கம் பற்றி வெளியில் நிலவிய நிலையும் பல விதங்களில் முரண்பட்டு நின்றது என்பது காலம் தாழ்த்திக் கிடைத்த வரலாற்றுச் செய்திகள். இயக்க இரகசியம் என்ற மூடிமறைப்பகள்கூட காலப்போக்கில் கசிந்து முகாம்களுக்குள் வருவதும் சகல மட்டத்திலும் கால்கைமுளைத்தும்கூட பரவுவதும் ஏமாற்றமளிக்கும் ஜனநாயகசூழலும் உட்கொலைகளும் உளவியல்தாக்கங்களும்… என்றெல்லாம் ஒரு போராளியின் அனுபவம் விரிந்துசெல்லும். செய்திகள் காவப்படும். ஆனால் ரொக்கிராஜ் தனது சொந்த அனுபவங்களுக்குள் மட்டும் நாவலுள் உலாவுகிறார். ஏதோ தனிப்பட்டவர்கள் இயக்கத்துள் தமது அதிகாரத்தை தவறாகப் பாவித்தார்கள் என்பதுபோல் நாவலின் சாராம்சம் அமைந்துவிடுகிறது. இது இயக்கத்தின் போக்கை மூடுண்டதாக்கி ஒரு தற்காப்புநிலை எடுக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பக்கம் 54 இலிருந்து பக் 56 வரையான நாவலின் நடுப்பகுதியில் உதயமாகிற போராளிகளில் ஒருவனாக இந்த நாவலின் ரொக்கிராஜும் இருக்கிறான். அவன் புலிகள் இயக்கத்தின் ஒரு விசுவாசப்; போராளியாக -தலைவர் சத்தியமாக…என குரலெடுக்கும் போராளியாக- பரிணமிக்கிறான். மற்றைய இயக்கங்கள் புளொட் ஈரோஸ் ரெலோ ஈபிஆர்எல்எப் ரெனா… என ஒரு தட்டுதட்டிவிட்டுப் போகிறார் நாவலாசிரியர். விசுவாசிகளை உருவாக்கல் ஆட்சேர்ப்பை முக்கியப்படுத்தல் இந்திய அரசின் கரங்களுக்குள் சுகம்கொள்ள முனைதல்..என்பதற்கு எந்த இயக்கம் தப்பிக்கொண்டது. இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்ட வெறியாலும் மாணவ பருவத்து துடிப்பாலும்… என்றெல்லாம் இயக்கங்களுக்கு போனவர்களும் ஏராளம்தான். இருந்தாலும் இவற்றிற்கும் அப்பால் சமூக நேசிப்பில் போராளியாகிப் போனவர்களை நாம் இருட்டடிப்புச் செய்யமுடியாது. போராட்டத்தின் வித்துக்களாகிப் போனவர்களே இவ்வகைப்பட்ட போராளிகள்தான். இன்று புலிகளின் மாவீரர்கள் என்ற பிரமாண்டத்தின் பின்னால் இவ்வகைப் போராளிகள் எல்லாம் இருட்டடிப்புச் செய்யப்பப்படுவதுபோல் இந்த நாவலும் ஒரு விசுவாசப் பங்கை ஆற்றுகிறதா என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகிறது. ஆனாலும் இந்த 54-56 வரையான பக்கங்கள் எழுதப்படவேண்டிய பல நாவல்களின் களனாக உள்ளதை கோடிட்டுச் செல்வதாகக் கொள்ளலாம்.

புலிகளினால் குரூரிக்கப்பட்ட மாற்று இயக்கப் படுகொலைகள் ரயர் போட்டு எரிக்கப்பட்ட ஒரு சம்பவத்தோடு மட்டும் கடந்துசெல்லப்படுகிறது கொரில்லாவில். எந்தவித வரலாற்று அதிர்வுமின்றி வாசகனை அனுப்புகிறது. இந்த காலகட்டத்தில் மாற்று இயக்க போராளிகளை உயிருடன் ரயர் போட்டு எரித்து மனித விழுமியத்தையே பொசுக்கியது புலிகள் இயக்கம். அதுமட்டுமல்ல இதை செய்ய மறுத்த தனது இயக்க போராளிகளுக்கும் தண்டனை வழங்கியது. இந்தக் காலகட்டத்தில் ஷோபாசக்தி இயக்கத்தில் இருந்தார். புலம்பெயர்ந்தபின் அதிகாரங்கள் செயற்படும் நுண்களங்கள் பற்றியெல்லாம் பேசும் அவர் இதுபற்றிய சுயவிமர்சனத்தினை இடைவெளியாகவே விட்டுவைத்திருந்தார். கொரில்லாவில்கூட இயக்க விசுவாசம் இதை ஜீரணிக்கவைத்தது என்றளவில்கூட சொல்லாமலே சென்றது ஒன்றும் தற்செயலானதாகப் படவில்லை. அதுவும் தலித் சமூகத்திலிருந்து ஒப்பீட்டு ரீதியில் கணிசமானோரை உள்வாங்கியிருந்த ஈபிஆர்எல்எப் இயக்கப் போராளிகள் மீதான தலித் உணர்வையாவது தலித்தியத்துக்கு குரல்கொடுக்கும் ஷோபாசக்தியிடமிருந்து கொரில்லா விட்டுவைக்காதது வேடிக்கையானதுதான்.

புனைவும் உண்மையும் கலந்து எழுதுவது தவறா சரியா என்றெல்லாம் விவாதங்கள் தொடர்கின்றன. அடிக்குறிப்புகளோடு உண்மைத் தகவல்களைக் கொடுத்து புனைவுகளையும் குழைத்துவிடும்போது புனைவுகளே உண்மைகளாகவும் தோற்றம்பெற்றுவிடுகின்றன. வசதிக்கேற்ப உண்மைகளை புனைவுகளாக்கி தப்பித்துக்கொள்ளவும் அல்லது புனைவுகளை உண்மைகளாக்கி தனக்கு சாதகப்படுத்திக்கொள்ளவும் ஒருசிறு தயார்நிலை உருவாக்கப்படுகிறது. சபாலிங்கத்தை புலிகள் கொலைசெய்தது பற்றிய அடிக்குறிப்பை கொரில்லா தொலைத்துவிட்டது. அந்த நிகழ்தல் எந்தவித அதிர்வையும் ஏற்படுத்தாதவாறு விவரிக்கப்படுகிறது. பாரிஸ் பொலிஸ் கைதுசெய்தது சம்பந்தமான நிகழ்தல் ஏற்படுத்ததும் பாதிப்பைக்கூட சபாலிங்கம் கொலையை கொரில்லா ஏற்படுத்தவில்லை. அதை இன்னும் இலேசுபடுத்தும் விதத்தில் சபாலிங்கத்தின் சமூக அக்கறையுள்ள அவரின் வேலைகளின் பக்கங்களும் எழுத்தின்மீதான அவரின் கரிசனையும் ஜனநாயகத்தின்மீதான அவரின் வேட்கையும் மறைக்கப்படுகின்றன. அரசியல்தஞ்சக் கோரிக்கைக்கான கேஸ் எழுதுபவராக குறுக்கப்பட்டுவிட்டார்.

கொரில்லா இயங்கும் தளம் என்று வருகிறபோது, புதியதோர் உலகம் நாவல் எடுத்தாளப்படுவது தவிர்க்க முடியாமல் ஆகிறது. ஈழப்போராட்டத்தின் குறிப்பிடத்தக்க நாவலாக -எண்பதுகளின் நடுப்பகுதியில்- இயக்கங்களின் உள்விவகாரங்களை சமூகத்துள் உதறிப்போட்டு அதிர்வை ஏற்படுத்திய நாவலாக புதியதோர் உலகம் அமைந்தது. (இந்த நாவலின் இரண்டாம் பதிப்பு 1996 இல் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது)
புதியதோர் உலகம் நாவல் இயக்கங்கள் சம்பந்தமாக மக்கள் மத்தியில் நிலவிவந்த மாயையை உடைத்தெறிவதில் மிக முக்கியமான பங்காற்றியது. (இந் நாவலை வெளிப்படையாக விநியோகிக்க முடியாத அளவுக்கு புளொட் இன் கண்காணிப்பு இருந்தது. இரவோடு இரவாக -பிரசுரங்கள் விநியோகிப்பதுபோல- வாசிகசாலைகள், புளொட் இல் இணைந்த போராளிகளின் வீடுகள் தோறும் வேலிக்குமேலால் இரகசியமாக வீசப்பட்டன.) தீப்பொறி குழுவினர் மக்கள் மத்தியில் வருவதற்கும் புளொட் அம்பலமாகிப் போனதிற்கும் மற்றை இயக்கங்களின்மீதான கேள்விகளை மக்களிடம் எழுப்பியதிலும் இந் நாவல் கணிசமான பங்கை ஆற்றியது. இதன்மூலம் புதியதோர் உலகம் இலக்கியத் தளத்தில் மட்டுமல்ல அரசியல் தளத்தில் இயங்கிய ஒரு காத்திரமான நாவலாக வெளிவந்தது. கொரில்லா இந்த இரண்டு தளங்களிலும் இயங்கும் ஒரு நாவலல்ல. அப்படி இயங்க வேண்டும் என்பதுமல்ல.

அதேபோல் கொரில்லா நாவலின் ரொக்கிராஜ்க்கும் சந்ததியரினால் எழுதப்பட்ட வங்கம் தந்த பாடம் படிக்க கிடைத்த சந்தர்ப்பம் புதியதோர் உலகம் நாவலை படிக்க கிடைக்காமல் போனதோ என்னவோ தெரியவில்லை. அதைப்பற்றிய பதிவு எதுவுமே நாவலில் காணப்படவில்லை. அதேபோல் அந்த நாவலினை எழுதிய கோவிந்தன் 80 களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் வைத்து புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் கொன்றொழிக்கப்பட்ட நிகழ்வுகள் எதுவும் ரொக்கிராஜ்க்கு தெரியாமல் போய்விட்டது அல்லது கேள்விகளை எழுப்பாமல் போய்விட்டது வேடிக்கையானதுதான். புளொட் இயக்கத்தை இந்திய அரசின் ~அரவணைப்பிலிருந்து| பெயர்த்தெடுக்க வங்கம் தந்த பாடத்தை புலிகள் வாங்கி விநியோகித்ததுபோலவே, புளொட் இன் அராஜகப் போக்கினை அம்பலப்படுத்திய புதியதோர் உலகம் நாவலும்கூட புலிகளால் பெருமளவில் விநியோகிக்கப்பட்டன. அது குஞ்சன்வயலை எட்டாமல் போய்விட்டதோ என்னவோ!

புனைவுகள் உண்மைகள் இரண்டும் கலந்து கொடுக்கப்படுவது பற்றிய விவாதம் கிளம்புவதற்கு கொரில்லாவும் ஒரு காரணம்தான். அடிக்குறிப்புகள் எல்லாம் ஒரு வரலாற்றுப் பதிவுகள் போல கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏகே47, எஸ்.எம்.ஜி.. என்று ஆயுதங்களின் பயரிங் ரேஞ்ச் கில்லிங் ரேஞ்ச் எல்லாம் தப்புத்தப்பாகக் கொடுக்கப்பட்டிருப்பதுபோல் அடிக்குறிப்புகளின் உண்மைத் தன்மை கேள்விக்கிடமாதுதான். இதை கண்டறிவது நாவலை இலக்கியத் தளத்தில் வைத்து விமர்சிப்பதற்கு அவசியமற்றன என்பதே என் கருத்து. அதேநேரம் நாவல் இயங்கிய காலப்பகுதியான புலிகள் இயக்கத்தை வேறு இயக்கங்கள் விஞ்சிவிடாத படியும், கொரில்லாவின் ரொக்கிராஜ் அல்லது அந்தோனிதாசன் பாத்திரத்தை தனிநபர்கள் (எந்தக் கதாபாத்திரமோ அல்லது வந்துபோனவர்களோ) விஞ்சிவிடாதபடியும் கையாளப்பட்டிருக்கிறார்கள். அதற்கு இந்தப் புனைவும் உண்மையும் கலந்த கலவை நாவலாசிரியருக்கு உதவித்தானிருக்கிறது. குஞசன்வயலில் மட்டுமல்ல பிரான்சிலும் இது சாதிக்கப்பட்டிருப்பது தற்செயலானதாகப்படவில்லை. உதாரணமாக சபாலிங்கத்தின் இலக்கிய அரசியல் பாத்திரங்கள் மறைக்கப்பட்டு ஒரு அரசியல் தஞ்சக் கேஸ் எழுதும் நபராக குறுக்கப்பட்டிருப்பதைச் சொல்லலாம். நான்காம் அகிலத்தின் தோழரை அகதிக் கடத்தலில் சம்பந்தப்படுத்துகிறார்@ அதேபோல் கலாமோகனும் ((நாவலில் பெயர் குறிப்பிடப்படவில்லை) தப்பவில்லை.

புலம்பெயர் இலக்கியத்தில் தம்மைப் பரபரப்பாக்கிக் கொள்பவர்கள் மத்தியில் ஒரு காத்திரமான படைப்பாளியாக ஆர்ப்பாட்டமில்லாமல் இருப்பவர் கலாமோகன். பிரெஞ்சுப் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில் பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் உண்மையான அரசியல் அகதிகளல்ல என்ற சர்ச்சையை எடுத்து அந்தோனிதாசன் மூலம் வாங்கு வாங்குகிறார் ஷோபாசக்தி. இந்த நாட்டவனிடம் நாம் முண்டியடிச்சு நியாயப்படுத்துவதுபோல் எமக்குள் இந்த அபிப்பிராயத்தை அல்லது கருத்தை இலகுவாக நியாயப்படுத்த முடியாத அளவுக்கு விவாதப்பொருளாகவே இது இருந்துவருகிறது. இந்த விவாதம் இங்கு அவசியமற்றது. நான் ஷோபாசக்தயிடமே செல்கிறேன். நிறப்பிரிகையின் கடைசி இலக்கிய இணைப்பில் புலம்பெயர் இலக்கியம் சம்பந்தமான பேட்டியில் அவர்… 1987 இல் இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தபின்னரான காலப்பகுதியில் போராளியொருவன் புலம்பெயருகிறான் (இது அவராகத்தான் இருக்குமென ஊகம்) அதன்பின்னரே உண்மையான அரசியல்அகதிகள் புலம்பெயர்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதுவும் அந்தோனிதாசனுக்கு முந்தி இடம்பெயர்ந்த உண்மையான அரசியல் அகதிகளிடம் எப்படி பேசியிருக்கும் என்பது இந்த விமர்சனத்தின் பின்னிணைப்பு. அதேபோல் ஈழத் தமிழ்மக்களுக்கு எதிரான ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமாக இந்திய இராணுவம் செயற்பட்டது என்ற பொதுமையை உள்ளங்கையால் பொத்திக்கொண்டு, முதன்முதலில் தலித்துகளுக்கு எதிராக இந்திய இராணுவம் செயற்பட்டதாக தாக்குதலொன்றை உதாரணம் காட்டி (இது எத்தனை பேருக்குத் தெரியும் என்று வினா எழுப்பியிருந்தார் நிறப்பிரிகை இலக்கிய இணைப்பில்) அதையே பொதுமையாக்க முனைந்தார் ஒரு கண்டுபிடிப்பாளன் போன்று. இந்த அரசியல் அப்பாவித்தனமாவது (பெருமளவு தலித்துகள் இணைந்து போராடிய) ஈபிஆர்எல்எப் இயக்கத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலின்மீது செயற்படாமல்போனது வியப்பாக இருக்கிறது. அடிக்குறிப்பிலோ அல்லது நாவலின் புனைவிலோ ஷோபாசக்தியின் தலித்தியக் குரலாக இது பதியப்படாமலே போய்விட்டதானது அவரது தலித்தியக் குரலை கேள்விகேட்க வைக்கிறது.

எனக்கு ராஜீவ் காந்தி சுடப்பட்டாலும் சரி, பிரபாகரன் சுடப்பட்டாலும் சரி என்பதுபோன்று நாவலின் இடையில் ஒரு வசனம் வந்துபோகிறது. இது ஏதோ துணிகரமானது போன்றோ விருப்புவெறுப்புகளற்ற நேர்மையான குரல் போன்றோ தெரியலாம். ஆனால் புலிகளின் தலைமையை நாவல் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்றானபோது நாவலின் போக்கு இந்த ஒற்றை வரியை அடித்துச் சென்றுவிடுகிறது. ஏதோ பொறுப்பாளர்களாக இருந்தவர்களின் குறைபாடுபோல குறுக்கப்பட்ட பார்வையைத் தவிர நாவலில் ஆழமான அரசியல் பார்வை இல்லை. இதன்மூலம் தனக்கான ஒரு தற்காப்புநிலையை எடுத்திருப்பது ஒன்றும் தற்செயலானதாகப் படவில்லை. ஒரு நாவவலை விமர்சிக்க இஙகு போகவேண்டிய அவசியமில்லை என்று கருதுபவர்கள் ஷோபாசக்தியை ஒரு |செயற்பாட்டாளராக| பிம்பப்படுத்துவதை அழித்துக்கொள்கிறார்கள் என்பதே அர்த்தம். என்றளவில், இலக்கியப் படைப்பாளி ஷோபாசக்தியால் எழுதப்பட்ட கொரில்லா நாவல் -இலக்கியத் தளத்தில்- பேசப்படக்கூடிய ஒரு நாவல்தான் என்பதை -காலந்தாழ்த்திய இந்த விமர்சனமும்- மறுக்கவில்லை.

– ரவி (சுவிஸ்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: