– வானொலி விவாதத்தின்போது…-
பெண்கள்மீது உளவியல் ரீதியில் தாக்கம் கொள்பவற்றில் முக்கியமானது கருத்தியல். ஆண் அதிகார கருத்தியல்கள்தான் அவை. பெண்சம்பந்தமான -அதாவது பெண்மை பற்றிய- வரையறைகள் இந்த ஆண்நோக்கின் அடிப்படையில்தான் வரைவு செய்யப்பட்டன.
பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள்@ ஆண் அவர்களை பாதுகாப்பவன் என்ற மனோநிலைகள் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் பெண் இரண்டாம்தர -அதாவது தங்கிவாழும் மனோநிலைக்கு உள்ளாக்கப்படுகிறாள். இது ஒரு முக்கியமான உளவியல் தாக்கம்.
மற்றது, இன உற்பத்தியை மையமாகக் கொண்டே குடும்பங்கள் வரைவு செய்யப்பட்டன. பெண்ணானவள் பிள்ளை பெறுபவளாகவும் பிள்ளையை பராமரிப்பவளாகவும் மட்டுமன்றி சமையல் தோயல் என்றெல்லாம் குடும்பத்திற்கு பணிவிடைசெய்பவளாக ஆக்கப்பட்டிருக்கிறாள். இந்த உழைப்புக்கு அவள் ஊதியம் எதுவும் பெறுவதில்லை. ஆனாலும் ஆணின் உழைப்பிலான பொருளாதாரத்தில்தான் குடும்பம் பொறுத்துநிற்பதாக மாயைப்படுத்தப்படுகிறது. இதன்மூலமும் பெண் பொருளாதார பலமற்ற இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுவதான -தங்கி வாழ்வதான- உளவியல் தாக்கத்திற்கு உட்படுகிறாள்.
பெண்ணடிமைத்தனம் என்ற சொற்பதம் பலருக்கு ஜீரணிக்க முடியாமல் இருப்பதுபோல் தெரிகிறது. அடிமைத்தனம் என்ற சொல்லைக் கேட்டதும் அடிமை பற்றி மனதில் தோன்றும் பிம்பம்தான் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போதெல்லாம் இந்தச் சொல்லாடலுக்குப் பதிலாக பெண்ஒடுக்குமுறை என்ற சொல்லே பெண்ணிய எழுத்துக்களில் காணக்கிடைக்கிறது. ஒடுக்குமுறை என்பது பல பரிமாணங்களில் இப் பிரச்சினையின் தோற்றப்பாட்டைத் தரலாம் என்ற காரணமாக அது இருக்கலாம். ஏனெனில் ஆணாதிக்கமானது அதிகாரத்தால் மட்டுமன்றி தந்திரமாகவும் செயற்படுகிறது. பெண்ணை மண்ணுக்கு ஒப்பிடுவது, தெய்வமாக உருவகிப்பது, பாசம் நேசம் கண்ணீருக்கு சொந்தமான உருவழியும் தியாக மனப்பான்மை கொண்டவர்களாக உருவகிப்பது என்றெல்லாம் பல தளங்களில் அது விரிவடைகிறது. தனக்கு வசதிப்படும்போது இதை வைத்தே பெண்ணை பலவீனமானவளாக காட்டும் கைங்கரியத்தையும் ஆணாதிக்கம் செய்யத் தவறுவதில்லை. இதேபோலவே தத்துவங்களை பொதுப்புத்திக்கு ஏற்றவாறு எளிமைப்படுத்தி ஜனரஞ்சகப்படுத்திய கண்ணதாசனிடமிருந்தும் பல உதாரணங்கள் கிடைக்கும். அவரது சினிமாப் பாடல்களிலும் அவை வெளிப்பட்டு நிற்கின்றன. எனது கருத்தை இந்தத் திசையில் நான் இழுத்துச் செல்லாமல் விடயத்துக்கு வருகிறேன்.
அடுத்து, பெண்களை உளவியல் தளத்தில் தாக்குவதில் சடங்குகள் குறிப்பாக சாமத்தியச் சடங்கு முக்கிய பங்காற்றுகின்றது. அந்தச் சடங்கு செய்யப்படும் சந்தர்ப்பம் பெண்ணின் முதல் மாதவிடாய் ஆரம்பம் என்றிருந்தாலும்கூட, அது ஒரு தனிமனித செய்தியை பகிரங்கப்படுத்துகிறது. இவள் இனி கருத்தரிக்கக்கூடிய பாலியல் எல்லையை தொட்டிருக்கிறாள் என்பதுவே அது. பாலியல் பற்றி வெளியே பேசுவது அதுவும் பெண்கள் பேசுவது என்பதே பாதகமான செயல் என்றுள்ள ஒரு சமூகத்தில் இந்த பாலியல் பருவ செய்தியை பகிரங்கப்படுத்துவதன் மூலம் பெண்ணின் உளத்தில் பலமான அடி கொடுக்கப்படுகிறது. அதாவது பலமான உளவியல் தாக்கம் நிகழ்த்தப்படுகிறது. முதல்நாள் ஓடிப்பிடித்து விளையாடியவள் மறுநாள் தலைகுனிந்து நடக்கிறாள். மரத்தில் ஏறி மாங்காய் பிடுங்கியவள் மரத்தில் ஏற முடியாத நிர்ப்பந்தம் மட்டுமல்ல மாங்காயை கையில் காவிச் செல்லவே தயக்கப்படுகிறாள். இதெல்லாம் உடலியல் தாக்கத்தால் நிகழவில்லை. அவள் உளத்தின்மேல் உருக்கி ஊற்றப்பட்டதால் ஏற்பட்ட தாக்கம். அதாவது உளவியல் தாக்கம். உடலியல் ரீதியல் இதை அப்பாவித்தனமாக விளக்க முற்படும் எவரும் ஆண்களின் முதல் விந்து உற்பத்திக்காலத்துக்கு ஏன் சடங்கு இல்லை என்ற கேள்வியை பொறுப்புடன் எதிர்கொண்டே ஆக வேண்டும்.
மேலும் சமூகத்தின் நன்மைக் காரிய கொண்டாட்டங்கள் அல்லது சடங்குகளில் மலடி என்று பெயர் குத்தப்பட்ட பெண், கணவனை இழந்த பெண் முன்னுக்கு நிற்கமுடியாதவளாக பின்தள்ளப்படுகிறாள். இதுவும் உளவியல் தாக்கத்தை நிகழ்த்துகிறது. வேதனையை பரிசாக அளிக்கிறது. இங்கு வேடிக்கை என்னவென்றால் இன உற்பத்திக்கான உடலியல் குறைபாடு ஆணில் இருந்தாலும்கூட மலடி என்ற பாத்திரத்தை அவள் ஏற்கவேண்டியிருக்கிறது என்பதே. இதேபோலவே கணவனை இழந்தவளின் பொட்டழிப்பு வெள்ளைச் சீலை திணிப்பு போன்ற செயல்களும் பெண்களுக்கு உளவியல் தாக்கத்தை நிகழ்த்துகிறது.
அடுத்து பாலியல் நிந்தனைச் சொற்கள் -அதாவது தூஷண வார்த்தைகள். இவ்வார்த்தைகள் ஒருவரை இழிவுபடுத்துவதற்காக கூறப்படுபவை. இச் சொற்கள் எமது மொழியில் பெண்களின் பாலியல் உறுப்புகளை அல்லது ஆணின் பாலியல் அதிகாரத்தை குறிக்கும் சொற்களாக இருப்பது கவனிக்கத்தக்கது. இவ் வார்த்தைப் பிரயோகங்களும் பெண்ணிற்கு உளவியல் தாக்கத்தை உசுப்பிவிடுகிறது. படித்தவர் படிக்காதவர் என்ற வகை பிரிப்பையும் தாண்டி இது இழிவுபடுத்தலுக்கான ஒரு வார்த்தைப் பிரயோகமாக வழக்கில் இருந்துவருகிறது. தெருச் சண்டையிலிருந்து பல்கலைக்கழக பகிடிவதைவரை இவ் வார்த்தைப் பிரயோகங்களை நாம் கேட்கலாம்.
துணிவற்ற ஒரு ஆணை என்ன பெட்டையன்போல இருக்கிறாய் என்று சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். பெண் என்பவள் பயந்த சுபாவம் உள்ளவளாக உடலியல் ரீதியில் பலமற்றவளாக காலம் காலமாக உபதேசிக்கப்பட்டு இந்த மனோநிiலியல் இருத்தப்படுகிறாள். ஆதாவது உளவியல் ரீதியல் பாதிப்பு நிகழ்த்தப்பட்டு செதுக்கப்படுகிறாள். ஆனால் நடைமுறையில் இன்று ஈழப் பெண்போராளிகளின் செயல்திறனை இந்தவகை பெண்மை பற்றிய படத்தினால் விளக்க முடியாது. மரணத்தின் வாயிலுக்கு சென்று மீள்வதுபோன்ற வலியுடனான பிரசவத்தின்போது மனைவியின் அருகில் நின்ற கணவன் மயங்கி விழுந்த கதைகள் புலம்பெயர் நாட்டில் சுவாரசியமான விடயம். ~~நான்தாளே பிள்ளை பெத்தேன் இந்தாள் ஏனப்பா மயங்கி விழுந்தது~~ என மற்றவர் முன்னிலையில் அவளை சுவாரசிக்கமுடியாமல் அடக்கி வாசிக்கச் செய்வதும் ஆண்மை பற்றிய சமூக வரையறை தனது கணவனை குறைபாடுடையவனாக காட்டிவிடும் என்ற அச்சமாக இருக்கிறது.
அடுத்து ஒரு ஆணின் வன்முறைக்கு உட்பட்டு பெண் கற்பமுறுகின்ற சந்தர்ப்பங்களில் அவள் தகப்பன் பெயர் தெரியாத பிள்ளையைப் பெற்றுவிட்டதாக சமூகம் பழிக்கிறது. அவள் அவப்பெயருக்கும் அருவருப்புக்கும் ஆளாகின்றாள். இது அவளின் இறப்புவரையிலான உளவியல் தாக்கமாக நீழ்கிறது.
அடுத்து யுத்தத்தால் சமூகத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. எதிரிகளின் அடாவடித்தனம் ஆண்களுக்கு சித்திரவதைகளாக மட்டும் அமைந்துவிடும்போது பெண்களுக்கோ சித்திரவதையோடு சேர்த்து சமூகத் தாக்கமும் ஏற்படுகிறது. அதாவது சமூகத்தில் தனது எதிர்கால ஸ்தானம் பற்றிய அச்சம் சேர்ந்து துன்புறுத்துகிறது. நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை அல்லது பாலியல் வல்லுறவு எல்லாமே அவளை இரட்டைத் துயரத்துள் ஆழ்த்துகிறது. ஆண்கள் வக்கிரகிக்கும் இவ்வகை வன்முறைக்கு பெண் தலைகுனியவேண்டி ஏற்படுவது ஒரு அவலம். மற்றவர் முகத்தில் எப்படி முழிக்கப்போகிறேன் என்ற அவளின் துயரக் குரலுக்கு சமூகம் தனி மனிதாபிமானத்தை மட்டும் வெளிப்படுத்துவது போதாது. இக் குரலின் விளைநிலமாக இருக்கும் பாலியல் பற்றிய, கற்புப் பற்றிய கருத்தியல்களில் கைவைக்கவேண்டியிருக்கிறது. அவள் சித்திரவதையிலிருந்து விடுதலை பெற்றாலும்கூட சமூகத்தின் கோணல் பார்வையிலிருந்து அவள் விடுதலைபெற முடியாமல் உளவியல் ரீதியில் துன்புறுகிறாள். சுமூகம் அவர்களை வித்தியாசமான கண்கொண்டு பார்க்கிறது. அவளுக்கு திருமணம் என்பது ஒரு ஆணின் தியாக மனப்பான்மையை கோரும் கடினமான நிலையைத் தோற்றுவிக்கிறது. இன்னும் அவள் தன் உடல் அசிங்கப்பட்டுவிட்டதான மனோநிலையை கற்பு என்ற கருத்தாக்கம் வளர்த்து பாதுகாக்கிறது. கற்பு என்பதற்கு காலம்காலமாக கொடுக்கப்பட்டுவரும் விளக்கங்கள் பல. கற்பு என்பது உடலோடு சம்பந்தப்பட்டது. இன்னும் சரியாகச் சொன்னால் உடலுறவோடு சம்பந்தப்பட்டது என்பதே உண்மை. இதை மறைத்து இதை மனத்தோடு சம்பந்தப்படுத்துவது ஆணாதிக்கத்தின் ஒருவகை சூழ்ச்சி. இதன் அளவுகோல் என்ன? மனதுக்குள் புகுந்து கற்பைத் தேடுவது என்பது சுத்துமாத்தானது.
பாலியல் சம்பந்தமான ஒரு சமூகத்தின் கருத்தாக்கம் எந்தளவுக்கு இறுக்கமாக இருக்கிறதோ அந்தளவுக்கு இராணுவ வன்முறைக்குள் அகப்பட்ட பெண்களின் உளவியல் தாக்கமும் அதிகரிக்கிறது. எனவே ஒருபுறத்தில் இராணுவத்தின் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மறுபுறத்தில் இச் சமூகத்தின் பாலியல் பற்றிய கருத்தாக்கங்களை கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்@ சமூகத்தில் இவ்வகை வன்முறைகளை செய்யும் ஒவ்வொரு ஆணுக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டும். இவை இல்லாதபோது அரசியல் எதிரியை அம்பலப்படுத்தும் ஒரு ஆயுதமாக பெண்கள் பாவிக்கப்படும் அவலம்தான் நேரும்.
பெண் சகோரங்களுடன் பிறந்தேன் என்பதெல்லாம் பெண்மீதான ஒடுக்குமுறை பற்றிய கேள்வியை எதிர்கொள்ளும் தகைமையைத் தந்துவிடுவதில்லை. ஏனெனில் பெண் என்பவள் தனியொரு மக்கட் பிரிவல்ல. அவள் இந்த சமூகத்தின் ஒரு அங்கம். பெண்ணோடு எந்தவகையிலாவது சம்பந்தப்படாமல் எந்த ஆணும் ஒரு தனியான வாழ்வியலை கற்பனை செய்தும் பார்க்கமுடியாது. இப்படியிருக்க பெண்கள் பற்றிய ஒடுக்குமுறையை எதிர்கொள்ள இந்த வழியால் வர நினைப்பவர்களை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர வேறுவழியில்லை.
மரபு ரீதியில் வழிவழியாய் தரப்பட்ட கருத்தியல்களுக்குள்ளிருந்து கருவுற்று உருப்பெற்ற நாம் அந்தக் கருத்தியல்களில் கேள்வி எழுப்புவது என்பது அதிர்ச்சி தரக்கூடியதாகவோ ஜீரணிக்கமுடியாததாகவோ இருக்கிறது என்பதை சில நேயர்களின் குறிப்பாக ஆண் நேயர்களின் வார்த்தை வெளிப்பாடுகள் காட்டுகின்றன. இது அவர்களிடமிருக்கும் சகிப்பின்மையை வெளிப்படுத்துகிறது. குறைந்தபட்சம் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கும் பெண்களின் உணர்வுகளைத்தன்னும் புரிந்துகொள்ள மறுக்கின்றனர்.
மாறிவரும் வாழ்வியல்கள் இக் கருத்தியல்களுடன் அல்லது நடைமுறைகளுடன் முரண்படும் இடங்களில் கேள்விகள் எழும்புகின்றன. இது அனுபவரீதியிலானது. இது தேவையானதும்கூட. ஆனால் பெண்மீதான காலம் காலமான ஒடுக்குமுறை என்னவென்று புரியவும் அது செயற்படும் களங்களையெல்லாம் கண்டறியவும் இதையும் தாண்டி நாம் தேடவேண்டும். ஆண்நோக்கிலான கருத்தியல்களை நோக்கி கேள்விகேட்பவர்களை குறைந்தபட்சம் சகிப்புத் தன்மையுடனாவது எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள இது உதவலாம். வெறும் பெண் ஆண் என்ற வெட்டொன்று துண்டு இரண்டான பிரிப்பின்மூலமோ அனுபவங்களை அல்லது உதாரணங்களை ஆதாரமாகக் காட்டுவதாலோ இதை எதிர்கொள்ளவும் முடியாது. ஏனெனில் ஆண்நோக்கிலான கருத்தியல்களே சமூகத்தின் கருத்தியலாக வளர்க்கப்பட்டிருக்கிறது. இங்கு சமூகம் என்பதற்குள் பெண்களும் அடங்குவதால் பெண்களிடமும் இந்த ஆண்நோக்கிலாக கருத்தியலே சரியானதாக அல்லது நியமமானதாக ஏற்றுக்கொள்ளச் செய்யப்பட்டிருக்கிறது அல்லது திணிக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். எனவே பெண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை பெண்நிலையில் நின்று அணுகவேண்டும் என்பது முக்கியமானதாகிறது. இன்னும் சரியாகச் சொன்னால் ஆண்நோக்கிலிருக்கும் எமது சிந்தனைத் தளத்தை பெண் நோக்கில் மறுவரைவு செய்யவேண்டியிருக்கிறது என்று சொல்லிக் கொள்ளலாம்.
இறுதியாக, ஓரு கலாச்சாரத்தை இன்னொரு கலாச்சாரத்துக்கு எதிராக நிறுத்தி பேசுவதில் பயனில்லை. மொழிக்கு பொருந்துவதுபோலவே ஒரு கலாச்சாரம் மற்றைய கலாச்சாரங்களிலிருக்கும் பொருந்திவரக்கூடிய நலல அம்சங்களை தன்னுள் உள்வாங்கிக் கொள்வதன்மூலம் வளம்பெறுகிறது. இந்த மாற்றத்தை புரிய மறுப்பவர்கள் அச்சடித்த கலாச்சாத்தைப் பற்றி புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். சாதி ஒடுக்குமுறை பெண்ஒடுக்குமறை என்றெல்லாம் ஒரு சமூகம் தனக்குள்ளேயே ஒடுக்குமறைகளைப் பேணிக்கொண்டு இன்னொரு மேற்கத்தைய கலாச்சாரம் எங்களை சீரழிக்கிறதே என்று கூக்குரலிடுவதில் பயனில்லை. வேற்றுக் கலாச்சாரத்திலிருந்து பயனுள்ளதை உள்வாங்கிக் கொண்டு தனது தனித்தன்மையை இழக்காமல் வளம்பெறச் செய்ய குறுக்கே நின்று புலம்புவதில் பிரயோசனம் ஏதுமில்லை.
-ரவீந்திரன்
சுவிஸ்