போரும் நிறுத்தமும்

அரசியல் விஞ்ஞானி றிச்சர்ட் ஜே மேர்பி அவர்களின் கருத்துக்கள் இவை.

An army marches on its stomach என்பார்கள் முந்திய போர் முறையில். களத்தில் நிற்கும் இராணுவங்களுக்கான உணவு வழங்கல் மிக முக்கியமானதாக இருந்தது. இப்போ போர்முறை முற்றிலும் வித்தியாசமானது. இன்றைய கள நிலைமை ஏவுகணைகளாலும் ட்றோண்களாலும் ஆளப்படுகிறது. அவற்றின் வழங்கல் என்பது இப்போதைய போர்முறையில் முக்கியமானது.

இந்தப் போரில் அமெரிக்கா மோசமாக தோல்வியை தழுவியிருக்கிறது. அமெரிக்க இராணுவ வலு சில வாரங்களிலேயே ஈரானால் பலவீனப்படுத்தப் பட்டுள்ளது. அமெரிக்காவின் மேலாதிக்க நிலை மோசமாக பாதிக்கப் பட்டிருக்கிறது. இந்தப் போரானது அமெரிக்க இராணுவத்தின் யதார்த்த நிலைமையை தோலுரித்துக் காட்டியுள்ளது.

இந்தப் போரில் பல நூற்றுக் கணக்கான ரொமொஹக் ஏவுகணைகள் பாவிக்கப்பட்டிருக்கின்றன. சுமார் ஆயிரமாக இருக்கலாம். அமெரிக்காவின் இந்த ஏவுகணை உற்பத்தியானது வருடத்துக்கு 100 என்ற அளவில் மட்டுமே உள்ளது. எனவே கடந்த நான்கு வாரங்களில் அமெரிக்கா ஏவிய இந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்ய எட்டிலிருந்து பத்து வருடங்கள் தேவைப்படும். எல்லா வகை ஏவுகணைகளுக்கும் இதே நிலைதான். இதேபோலவே யுத்த விமானங்களுக்கான ஏவுகணைகளினது தட்டுப்பாடும் உள்ளது. விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு அது ஒரு முக்கிய காரணம்.

அமெரிக்க ராடர்களும் அழிக்கப்பட்டுள்ளன. அது ஒவ்வொன்றையும் கட்டியமைக்க ஏழு வருடங்கள் தேவை. அதேபோல் பி-52 போன்ற காலாவதியான விமானங்களை பிரதியீடு செய்ய வருடங்கள் தேவை. அமெரிக்கா இப்போ ஈரானுடன் போருக்கு திரும்ப முடியாது.

இதன் விளைவாக அமெரிக்க மேலாதிக்க பிம்பம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு வேறு நாடுகளில் தலையிடுவதற்கான அதன் வல்லமை குறைந்தளவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே அமெரிக்கா இன்னும் சில வருடங்களுக்கு அல்லது தசாப்தத்துக்கு போருக்கு போக முடியாது அல்லது ஏவுகணை இல்லாத போரை நடத்த வேண்டும். இந்த 4 வாரப் போரில் அமெரிக்க இராணுவ வல்லமை பலவீனப்படுத்தப் பட்டுள்ளதானது தற்காலிகமானது என்று அல்ல. அது கட்டமைப்பு ரீதியில் பலவீனப்படுத்தப் பட்டுள்ளது என்பது முக்கியமானது.

அமெரிக்க தொழிற்துறை முறைமையானது நியோ லிபரலிச (நவ தாராளவாத) முறைமையாகும். அது சந்தையை மையமாகக் கொண்டது. இம்முறைமை தற்போதைய போர்ச் சூழலுக்கு முகங்கொடுப்பதாக இருக்காது. அவ்வாறாக வடிவமைக்கப் பட்டதுமல்ல. மாறாக அது வியாபார ரீதியிலானது. வாடிக்கையாளருக்கான விநியோக காலக் கெடுவை அதாவது குறித்த நேரத்துக்கான விநியோகத்தை இலக்காக வைத்து செயற்படுகிற ஒன்றாகும். அத்தோடு தனது வரையறுக்கப்பட்ட காலத் திட்டத்தையும், திறனையும் அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது.

இந்த முறைமைக்குள் திடீரென அபரிதமான உற்பத்தியை நிகழ்த்த முடியாது. இது அதிக இலாப நோக்கின் அடிப்படையில் இயங்குமாறு வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அதனால் தனது திறனை குறுகிய காலத்துள் செலவழிப்பதை தவிர்க்கிறது. குறுகிய கால உற்பத்தியை செய்ய, அதாவது திடீரென விரைவான உற்பத்தியை செய்ய போதியளவு முதலீடு ஒதுக்கப்பட்டு இருக்காது. அத்துடன் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையையும் எதிர்கொள்ள நேரும்.

அத்தோடு அது விநியோக சங்கிலி வர்த்தக முறையிலும் தங்கியுள்ளது. ஒவ்வொரு ஏவுகணையினதும் அரைப் பகுதி அமெரிக்காவுக்கு வெளியில் உருவாக்கப்படுகிறது. அதற்கான உதிரிப் பாகங்களுக்கு அந்தந்த நாடுகளில் அல்லது கம்பனிகளில் தங்கியிருக்க வேண்டியிருக்கிறது. அதில் அலுமீனியம் மிக முக்கியமான உலோகம் ஆகும். இன்றைய போரின் விளைவாலும் ஹோமோர்ஸ் நீரிணையில் மூடலாலும் இதை விரைவாக பெறமுடியாத நிலைமை தோன்றியிருக்கிறது. அதனால் அமெரிக்கா தான் இழந்த ஏவுகணைகளை விரைவாக உற்பத்திசெய்ய வாய்ப்பு இல்லை.

இது ஒரு தற்காலிக இடைவெளி அல்ல. மாறாக கட்டமைப்பு ரீதியிலான பின்னடைவு. இதில் துரித மீளலுக்கான வழி ஏதுமில்லை.

அமெரிக்கா இந்த நேரத்துக்கான அதாவது இருப்பிலுள்ளதை வைத்துக்கொண்டு செயற்படும் இராணுவத்தைத்தான் கொண்டிருக்கிறது. ஒரு போர் அவ்வாறு நிகழ்த்தப்படுவதில்லை. குறைந்த ஆயுத தளபாட இருப்புடன் அமெரிக்க இராணுவம் தற்போது செயற்படுகிறது. போர்க்கால முகாமைத்துவ கலாச்சாரமானது நியோ லிபரலிச சிந்தனை முறைமையால் பிரதியீடு செய்யப்பட்டிருக்கிறது. இராணுவமோ தலைமைகளோ எந்த புதிய சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார்கள். இந்தப் போர் அவ்வகையான தோல்வியை வெளிக்காட்டி நிற்கிறது.

ஈரானின் இராணுவ மாதிரி இதற்கு எதிரான முறைமையில் உள்ளது. எளிமையான முறைமை. புத்தாக்க மாற்றத்தின் (innovation) இலகுத்தன்மை. எளிதாகவே பிரதியீடு செய்யக் கூடிய வகையிலான ஆயுதங்களை உருவாக்குகிறது. மிக மலிவாக அதைச் செய்கிறது. அதனால் அத்தியாவசியமான விரைவான வழங்கலை செய்வது முடியுமானதாக இருக்கிறது. இந்த இருவார போர் நிறுத்தம் தமது ஆயுத வளத்தை மீளமைத்துக் கொள்ள ஈரானுக்கு போதுமானது. அமெரிக்காவுக்கு அப்படியல்ல.

இதன் விளைவாக இராணுவ அதிகாரச் சமநிலை மாற்றமடைந்துள்ளது. இதனால் தாம் நிலைத்து நிற்கமுடியாது என அமெரிக்காவுக்கும் தெரியும். எல்லாம் ஈரானுக்கு சாதகமாக இருக்கிறது. ஈரானின் கை ஓங்கியிருக்கிறது.

அதனால் ட்றம்புக்கு போர்நிறுத்தம் தேவையாக இருந்தது. அவர் இந்தப் போருக்குள்ளாலிருந்து வெளியே வர விரும்புகிறார். அதற்கு போர்நிறுத்தம் உதவுகிறது. அவர் போர் தொடங்கும்போதே நான்கிலிருந்து ஆறு வாரத்துள் போரை முடிப்பேன் என கூறியிருந்தார். தம்மிடமுள்ள ஆயுதங்களின் அளவை கவனத்தில் எடுத்தே அதை அவர் சொல்லியிருக்கிறார். அவை கிட்டத்தட்ட பாவிக்கப்பட்டுவிட்டன. அதனால் போர்நிறுத்தம் அவருக்கு தேவையானதாக இருக்கிறது. அவர் தானாகவே பாகிஸ்தானை நாடி போர்நிறுத்தத்துக்கான தரகராக செயற்பட கேட்டுக்கொண்டதாக பினான்ஸியல் ரைம்ஸ் எழுதியுள்ளது.

  • ravindran.pa
  • 11042026

Leave a comment