ஈரானை விளங்கிக் கொள்ளல்!

பேராசிரியர் Patrick Ringgenberg அவர்களின் விளக்கம்

// அமெரிக்கா புவியியலை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே கடவுள் போரை தோற்றுவித்தார்//

– Mark Twain (1835-1910, அமெரிக்க எழுத்தாளர், விரிவுரையாளர்).

4000 வருட வரலாறு கொண்ட ஈரானின் பண்பாடு குறித்து 250 வருட பண்பாடு கொண்ட அமெரிக்காவும், வெறும் 77 வருட பண்பாடு கொண்ட இஸ்ரேலும் எமக்கு அமைத்துத் தருகிற பிம்பத்தை மேற்குலக ஊடகங்கள் செரித்து வீங்கிப்போயிருக்கின்றன. ஈரான் ஒரு மதஅடிப்படைவாத நாடு எனவும் சர்வாதிகார நாடு எனவும் நாகரிகத்தில் பின்தங்கிய நாடு எனவும் மேற்குலக ஊடகங்களால் கடந்த 47 வருடமாக வரையப்படுகிற சித்தரிப்புகளை மென்று விழுங்கி நம்மில் பலர் அவதிப்படுகிறோம். அதனடிப்படையில் ஈரானை புறநிலையில் நின்று புரிந்துகொள்கிறோம். விமர்சனங்களையும் அதனடிப்படையில் வைக்கிறோம்.

மையநீரோட்ட ஊடகங்களுக்கு வெளியே போய் மாற்று சிந்தனைமுறையை வளர்க்க நாம் முயலாதவரை எமது அறிவு உண்மையை கண்டுபிடித்துத் தராது.

“விவேகம் இல்லாத அறிவு எங்கள் சிந்தனையை வளர்க்காது” என்கிறார் சுவிஸ் (Laussane) பல்கலைக்க கழக பேராசிரியர் Patrick Ringgenberg . இவர் ஈரானில் சிலகாலம் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டவருமாவார். 2025 யூனில் அமெரிக்கா ஈரானைத் தாக்கிய காலத்திலும் அங்கு இருந்திருக்கிறார். அவரது கருத்துகளில் சில பகுதிகளை இங்கு தருகிறேன்.

இஸ்லாமியக் குடியரசு என்பது ஒரு சிக்கலான கலவை கொண்ட கட்டமைப்பு ஆகும். அது ஒரேநேரத்தில் மேற்கத்தைய வகைமாதரியான தேசிய அரசு ஜனநாயக அமைப்பும், 1906ம் ஆண்டின் அரசமைப்புப் புரட்சியின் வாரிசான குடியரசு அமைப்பும், ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான அரசாட்சி பாரம்பரியத்தில் வேர்களைக் கொண்ட ஒரு பேரரசு அதிகாரமும், மற்றும் புராதன வேர்களைக் கொண்ட மதவழிகாட்டல் ((imamocracy rather than theocracy கொண்ட அமைப்பும் என சேர்ந்த கலவையான ஆட்சிமுறையை ஈரான் கொண்டுள்ளது என்கிறார்.

வளர்ச்சி என்பது இதையெல்லாம் துடைத்தழித்து மேற்குலகு வகுத்துத் தரும் சட்டகத்துள் ஒடுங்கி நிகழ்வதல்ல. அந்தச் சட்டகத்துள் மற்றமைகளை அடக்க முனைவது காலனிய மனப்பான்மை கொண்ட சிந்தனை முறை ஆகும் என்பதை இந்த இடத்தில் கருத்தில் கொள்ளலாம்.

1979ம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சி என்பது பழமையான அரசியல் நடைமுறையை நவீன அரசியல் அமைப்பில் சட்டபூர்வமானதாக அமைத்தது எனலாம். இஸ்லாமியக் குடியரசை வெறும் முல்லாக்களின் ஆட்சி என்பது தவறானதாகும். மத தலைவர்கள் பல நிலைகளில் இருந்தாலும், முக்கிய கொள்கைகள் பெரும்பாலும் புராதனப் பேரரரசுப் பாரம்பரியத்திலிருந்து தோன்றுகின்றன என்கிறார் . 6ம் நூற்றாண்டு Achaemenid பேரரசு தொடக்கம், மத்திம காலத்தில் பிராந்திய வல்லரசாக இருந்தது வரையான மேலாதிக்க அரசியல், சட்ட அமைப்பு மற்றும் நிர்வாக கட்டமைப்பு என்பவற்றின் அடிப்படையில் நூற்றாண்டு காலமாக தனது அரசியல் அமைப்பு வடிவ வளர்ச்சியை கட்டமைத்த வரலாறு ஈரானுக்கு உண்டு.

7ம் நூற்றாண்டில் இஸ்லாமின் வருகைக்குப் பின்னரும் அபாசிட் கலிபாக்கள் மற்றும் துருக்கிய சுல்தான்களுடன் சேர்ந்து இராசதானிகளை அல்லது பேரரசுகளை நிர்வகித்தவர்கள் ஈரானிய மந்திரிகள். அதன் விளைவு புரட்சிக்குப் பின்னரான அரசு பகுதியளவு இஸ்லாமியப்படுத்தப் பட்டதாக இருந்தது. ஆனால் உண்மையில் அது முன் நவீனத்துவ அல்லது இஸ்லாமுக்கு முன்னான அரசமைப்பு வடிவமும், அதனடிப்படையிலான மூலோபாய அணுகுமுறையும், அடையாளமுமாக இருந்தது.

பல அம்சங்களில் இஸ்லாமியக் குடியரசின் கொள்கைகளானது இஸ்ரேலை விடவும் குறைந்தளவில்தான் அரச வடிவத்துள் மத செல்வாக்குச் செலுத்துகிறது. கடும்போக்கு யூதர்கள் தமது ஆக்கிரமிப்பு நோக்கத்தை வரலாற்று மாயையையும் மெஸாயானிச (மீட்பரிஸம்) நம்பிக்கையையும் வைத்து நிகழ்த்துகிறார்கள். இஸ்ரேலிய அரசு வடிவத்துள் அது மிகுந்த செல்வாக்கு செலுத்துகிறது. அதேபோல் அமெரிக்காவில் அவர்களது தற்போதைய இஸ்ரேல் சார்புக் கொள்கையானது சியோனிச மெஸாயிசத்தின் ஊடுருவலால் வலுப்பெற்ற ஒன்றாகும் என விளக்குகிறார்.

மத அடிப்படைவாத அரசு என மேற்குலகால் சுட்டப்படும் ஈரானில் கிறிஸ்தவர்கள், யூதர்கள், இந்துக்கள் என எல்லோருக்குமான மதவழிபாட்டு இடங்கள் இருப்பதையும், மத சுதந்திரம் எந்தவித ஒடுக்குமுறையும் இல்லாமல் இருப்பதாகவும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார்.

ஈரான் சமூகம் ஒரு படித்தானதல்ல. வெவ்வேறு சமூக இனக் குழுக்களை கொண்ட கலவை எனவும் குறிப்பிடும் அவர்,

தற்போதை ஈரான் 3 அடையாளங்களைக் கொண்டது என்கிறார்

1. அந்த மண்ணின் பூர்வகுடிகள்

2. 7ம் நூற்றாண்டிலிருந்து வந்த முஸ்லிம்கள் மற்றும் 16ம் நூற்றாண்டு சியா முஸ்லிம் பிரிவினர்

3. ஐரோப்பியர்களின் தலையீட்டின்போதான 19ம் நூற்றாண்டு மேற்கத்தையர்

அரைவாசி மக்கள் பேர்சியர்கள். மிகுதி அரைவாசி பல்லின அடையாளம் கொண்டவையான துருக்கி மொழி பேசுபவர்கள், அராபியர்கள், குர்துகள், ஆர்மேனியர்கள், பலூச்சிஸ் ஆகியோர் ஆகும்.

அத்தோடு ஈரானுக்கு ஈரானிய, முஸ்லிம், மேற்கத்தைய கலண்டர்கள் மூன்று இருப்பதாகக் குறிப்பிடுகிறார். தினசரி வாழ்க்கையில் ஈரானிய மரபு, முஸ்லிம் பெறுமதி, மேற்கத்தையம் மூன்றும் கலந்துள்ளது என்கிறார்.

அதனால் ஈரான் பன்முகத்தன்மையான அடையாளம், மொழிப் பண்பாடு, மதப் பண்பாடு, வாழ்நிலை என்பன கொண்டதாக இருக்கிறது. இதையெல்லாம் விளக்காமல் மேற்குலக மையநீரோட்ட ஊடகங்கள் ஈரான் குறித்த மோசமான, இருளான பிம்பங்களை உருவாக்கி நமக்குத் தருகின்றன. அங்குள்ள யதார்த்த நிலைமைக்கும் மேற்கத்தைய ஊடகங்கள் சொல்லித் தருகிற பிம்பத்துக்கும் மிகப் பெரிய இடைவெளி இருப்பதை தான் நேரிலேயே கண்டுகொண்டதாக கூறுகிறார். ஈரான் தோற்கடிக்கப்பட முடியாத தேசம் என்கிறார்.

பெரும்பாலும் ஈரான் குறித்த மேற்கத்தையப் பார்வையானது மூன்று வகையான முற்கற்பிதங்களால் உருவானது.

1. ஓரியண்டலிசம்

எட்வேர்ட் சைத் விவரிக்கிறபடி, அவர்களின் அந்த கற்பிதம் ஈரானுக்கும் பொருந்திப் போகின்றது. இவை கீழைத்தேய மக்களை பகுத்தறிவற்றவர்கள், வஞ்சகமானவர்கள், கொடுரமானவர்கள், அடிதடிக்காரர்கள் அல்லது போர்வெறி பிடித்தவர்கள், சோம்பேறிகள், வரலாற்றுக்கு வெளியே நிற்பவர்கள் என்ற அவமதிப்பு கருத்தியல்கள் கொண்டவை.

2. இஸ்லாமோபோபியா

இதன் வேர்கள் மத்திம காலத்தில் முளைக்கத் தொடங்கியது. இது இஸ்லாம் ஆனது மத ரீதியான, கலாச்சார ரீதியான, இராணுவ ரீதியான அச்சுறுத்தல் கொண்டது எனவும், உலகை தன்வசப்படுத்தி கிறிஸ்தவர்களை முஸ்லிம்களாக மாற்றும் நோக்கம் கொண்டது எனவும் அச்சுறுத்தும் கருத்தியல்களைக் கொண்டது.

3. ஈரானோபோபியா

1979 இஸ்லாமியப் புரட்சிக்கு பின்னர் உருவான கருத்தியல் இது. இஸ்ரேலிய லொபிகளாலும், அமெரிக்க அரசியல்வாதிகளாலும் உருவாக்கப்பட்ட கருத்தியல். இந்த கருத்தியலை உயிர்ப்பித்து வைத்திருக்க 1979 நவம்பர் 4 இலிலிருந்து 1981 ஜனவரி 20 வரையான ஈரானிய மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க பயணக்கைதிகள் விவகாரத்தின் தழும்பை இதுவரை ஆறவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர், அமெரிக்க அரசியல்வாதிகள்.

இந்த மூன்று அம்சங்களோடு, நவகாலனிய அல்லது நவ ஏகாதிபத்திய பார்வையும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். இது 20ம் நூற்றாண்டின் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற போராட்ட வரலாறுகளைப் புறக்கணித்து, உலக ஒழுங்கில் மேற்குலக நாடுகள் அல்லது மேற்குலக மயப்படுத்தப்பட்ட நாடுகள் நாகரிகத்தின் ‘நியமம்’ எனவும், அதை அளவுகோலாக வைத்து நாடுகளை நல்லது-கெட்டது என்றும் வகைப்படுத்துகிறது. இதன்மூலம் அந்த நியமத்தை ஏற்றுக்கொள்ளாத அல்லது கடைப்பிடிக்காத நாடுகளின் இறைமை என்பதை கீழ்நிலையில் வைக்கிறது. அத்தோடு அந்த நாடுகளின் முழுமையான குரலும் அந்தஸ்தும் மறுக்கப்படுகிறது. இந்த அசமத்துவ நிலையானது 2010 இலிருந்து இன்று வரையான “ஈரான்- மேற்குலகு” பேச்சுவார்த்தைகளில் தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது என்கிறார், Patrick Ringgenberg !

*

“போரில் ஈரான் ஏற்கனவே வென்றது ஏன்?” என்ற அவரது விரிவான கட்டுரை இணைப்பு:

Leave a comment