அமெரிக்காவும் இஸ்ரேலும் கனவு கண்டதைப்போல ஈரான் அரசாங்கத்தை விரைவாக கவிழ்த்து தமக்கு சார்பான அடிவருடி -ஷா இன் புத்திரனான- றேசா பாலவியை ஆட்சிக்குக் கொண்டுவர முடியவில்லை. தலைவர்களைக் கொல்வதன் மூலம் அல்லது உள்நாட்டு மக்களின் அரசுக்கு எதிரான நியாயமான போராட்டங்களினுள் புகுந்து மடைமாற்றி அல்லது அதை செயற்கையாக உருவாக்கி ஆட்சியைக் கவிழ்த்த அமெரிக்க நரித்தன வரலாறு ஈரானிடம் வந்து முட்டி மோதி நிற்கிறது. அதற்கான காரணங்களில் மிக முக்கியமானது, ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புத்தான். உச்சத் தலைவரை மட்டுமல்ல இராணுவத் தளபதிகள் ஆலோசகர்கள் என சுமார் 50 பேருக்கு மேல் இதுவரை அமெரிக்காவும் இஸ்ரேலும் கொலைசெய்தபோதும் ஈரான் அரசை சரிக்க முடியவில்லை.
1979 ஈரானியப் புரட்சியின் பின் கட்டமைக்கப்பட்ட அரசாட்சி வடிவமே ஈரானின் அரசியல் அமைப்பாக இருக்கிறது. உச்சத் தலைவர் என ஒருவர் இருக்கிறபோதும், அவர் ஒருவரே அந்த இடத்துக்கான தகுதி படைத்தவர் அல்ல. அவர் வீழ்ந்தால் தாமதமின்றி அந்த இடத்தை நிரப்பக்கூடிய வகையில் “வல்லுனர் சபை” என்ற கட்டமைப்பு உள்ளது. அதிலிருந்து ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு தாமதமின்றி பதவியேற்பார். 86 மதத் தலைவர்களைக் கொண்ட சபை அது. இச் சபை உச்சத் தலைவரை நியமிக்கும் அதிகாரம் மட்டுமல்ல, அவரை நீக்கக் கூடிய அதிகாரமும் கொண்டதாகும். இந்த 86 பேரையும் 8 வருடத்துக்கு ஒருமுறை மக்கள் தெரிவுசெய்வர். இதைவிட பாதுகாப்புச் சபை, நிபுணர் சபை, பாராளுமன்றம், ஜனாதிபதி என எல்லாமும் சேர்ந்த ஒரு வலைக் கட்டமைப்பு கொண்டது ஈரானிய அரசு முறைமை.
பாதுகாப்புப் படை கட்டமைப்பைப் பொறுத்தவரை 1979 ஈரானியப் புரட்சியின்பின் உச்சத் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தும்; ஐ.ஆர்.ஜி.சி மற்றும் பாராளுமன்றம் பிரதிநிதித்துவப் படுத்தும் அரச இராணுவம் (ஆர்ற்ரெஷ்) என இரு பெரும் பிரிவுகள் தோன்றின. மையப்படுத்தப்பட்ட முறையில் இந்த இராணுவ பிரிவுகள் இயங்கின. அரச இராணுவமும் ஐஆர்ஜசியும் தத்தமக்கான காலாட் படை, வான்படை, கப்பற்படை, உளவுப்படை, சேவைப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு என்பவற்றைக் கொண்டன. 2003 இல் ஈராக் இன் தலைவர் சதாம் வீழ்த்தப்பட்டவுடன் அந்த நாடும் வீழ்ந்தது. இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டனர், ஐ.ஆர்.ஜி.சி ராணுவத் தலைவர்கள்!. தலைவர் கொல்லப்படுகிறபோது, மையப்படுத்தப்பட்ட இராணுவக் கட்டமைப்பும் வீழ்ந்து போய்விடும்; என்பதை கண்டுபிடித்தனர். 2005 இல் ஜெனரல் மொகமட் ஜபாரி அவர்கள் இராணுவக் கட்டமைப்பில் “மொசைக்” என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தினார். அது உச்சத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதன்படி ஈரானின் 31 மாகாணங்களையும் கவனத்தில் எடுத்து இராணுவக் கட்டமைப்பு 31 பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டது.
ஒவ்வொரு பிரிவும் தனியாக போரிடக் கூடிய வலுவடன் உருவாக்கப்பட்டது. ஒவ்வொன்றும் தமக்கான தலைமையகத்தையும், ஆயுத இருப்பையும், உளவு வலையமைப்பையும் கொண்டனவாக இருந்தன. தமக்கான ஏவுகணை பிரிவுகளையும் இருப்பையும் கொண்டுள்ளன.
தெஹ்ரானில் மத்தியப்படுத்தப்பட்டகட்டளைத் தலைமையகத்திலிருந்து போர்க் காலங்களில் தகவலை பெற முடியாத சந்தர்ப்பங்களில் அல்லது அது தாக்கப்பட்டு செயலிழந்திருக்கும் பட்சத்தில் இந்த 31 பிரிவுகளும் தனித்தனியாக சுயமாக முடிவெடுத்து இயங்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. அதற்கான முன் அங்கீகாரம் வழங்கப்பட்டுமிருக்கிறது. தெஹ்ரானிலிருந்து எந்த அறிவிப்பும் தேவையில்லை. உச்சபட்ச தலைவரிடமிருந்தும் எந்த கட்டளையும் தேவையில்லை. “எவராவது நிறுத்தும்படி சொல்வது வரை நிறுத்தாதே” என்பது அதன் தாரக மந்திரமாக இருக்கிறது. அதாவது நிறுத்தும் சுவிச் அந்த இராணுவ இயந்திரத்துக்கு இருக்காது. இன்னொரு வகையில் சொன்னால், தமது இருத்தலுக்காக இயக்குபவர் இல்லாமலே இயங்குகிற வல்லமை கொண்ட இராணுவ இயந்திரமாகும். இயக்குபவர் இல்லாமல் போகலாம். ஆனால் இயந்திரம் ஓடிக்கொண்டேயிருக்கும்.
அதனால்தான் ஈரான் இராணுவத்தை குண்டுகளாலோ அல்லது அதன் தலைவர்களைக் கொல்வதாலோ எவராலும் நிறுத்த முடியாது. ஏன், ஈரான் விரும்பினால் கூட இந்த இயந்திரத்தை நிறுத்த முடியாது என்கின்றனர், இராணுவ வல்லுநர்கள். தற்போதைய போர் ஈரான் வெற்றி பெறுவதற்கான போராட்டம் அல்ல. ஈரான் ஒருபோதும் வீழ்ந்துவிடக் கூடாது என்ற போராட்டம். அதாவது இருத்தலுக்கான போராட்டம்.
இராணுவ கட்டமைப்பு ஆர்ற்ரெஷ், ஐ.ஆர்.ஜி.சி என இரு அடுக்குகளைக் கொண்டது என பார்த்தோம். ஆர்ற்ரெஷ் ஆனது மரபார்ந்த இராணுக் கட்டமைப்பு. அது ஒரு நாட்டுக்கான இராணுவக் கட்டமைப்பு ஆகும். மற்றது இஸ்லாமிய புரட்சிக் காவற்படை ஐ.ஆர்.ஜி.சி. இது உள்நாட்டுப் பாதுகாப்பையும் இஸ்லாமியக் குடியரசு அரசியல் கட்டமைப்பின்; இராணுவப் பாதுகாப்பாகவும் இருக்கும். வெளியிலிருந்து வரும் தாக்குதலை அதாவது போரை மரபு இராணுவத்துடன் சமாந்தரமாக நடத்துபவர்களாகவும் இருப்பர்.
மரபு இராணுவத்துக்கும் ஐ.ஆர்.ஜி.சி க்கும் தனித்தனியான கட்டளைத் தலைமையகம் இருக்கிறது. இரண்டுக்கும் இடையில் தொடர்பும் இருக்கிறது. தொடர்புபட்ட நடவடிக்கைகளும் இருக்கின்றன. இரண்டு பிரிவுகளிலும் மொத்தமாக 610’000 நிரந்தர படை வீரர்கள் இருக்கிறார்கள்.350’000 றிசேவ் படை வீரர்கள் இருக்கிறார்கள். 93 மில்லியன் மக்களைக் கொண்ட ஈரானின் நிலப்பரப்பு மிகப் பெரியது. மலையையும் பாலைவனத்தையும் சமதரையையும் கொண்ட இந் நிலத்தை தரைவழியாக அமெரிக்கா ஆக்கிரமிப்பது எந்தளவு சாத்தியம் என தெரியாது. அது நடந்தால் ஆக்கிரமிப்பு இராணுவம் இலகுவில் மீள முடியாத சேற்றுள் காலத்தைப் புதைப்பதாக முடியும்.
மரபு இராணுவக் கட்டமைப்பைக் கொண்ட ஆப்கானிஸ்தானையே வெற்றி கொள்ள முடியாமல் தோற்றுப்போனது அமெரிக்கா. ஈரானின் வித்தியாசமான இராணுவ மூலோபாயக் கட்டமைப்பை முன்வைத்தும், ஏவுகணைத் தொழில்நுட்பத்தை முதன்மையிலும் வைத்தும் ஓர் அசமச்சீர்ப் போர் முறையில் தனது இருத்தலுக்கான போராட்டத்தை ஈரான் நடத்துகிறது. பலவீனமான கடற்படையைக் கொண்டிருந்தாலும் மினி நீர்மூழ்கிக் கப்பலையும் கடற் கண்ணிவெடிகளையும் கொண்ட இன்னொரு அசமச்சீர் கடற் போர்முறையை கொண்டு போராட அதனால் முடியும். அதேபோலவே பலவீனமான வான்படையைக் கொண்டிருந்தாலும் வான்பரப்பை ஏவுகணைகளால் முடிந்தளவு ஆக்கிரமித்து வைத்திருக்கவும் செய்கிறது.
1979 இலிருந்து பொருளாதாரத் தடையை அந்த நாடு எதிர்கொண்டு வருகிறபோதும் அங்கு வேலைவாய்ப்பின்மை 7.2 வீதம் மட்டுமே உள்ளது. படிப்பறிவைப் பொறுத்தவரை வயதானவர்களினது 89 வீதமும் இளஞ்சந்ததியினது 99 வீதமுமாக உள்ளது. பல்கலைக் கழகத்தில் கல்வி கற்போரில் பெண்கள் 60-70 வீதமானோர் என்கிறது புள்ளிவிபரம். எண்ணற்ற விஞ்ஞானிகளை அது உருவாக்குகிறது. எல்லா தடைகளுக்கூடாகவும் தொடரும் அவர்களது இருத்தலுக்கான போராட்டத்தில் இப்போ இன்னொரு போரை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். அழிவுகள் மிகப் பயங்கரமானதாகவே இருக்கிறது. இந்தப் போரின் சூத்திரதாரிகள் மனிதவிரோதிகளான இஸ்ரேலும் அமெரிக்காவும்தான் என்பது உலகு அறியும். வெட்ட வெட்ட தழைக்கும் வலுவும் வளமும் கொண்டது ஈரான் என்பதை அமெரிக்க அதிகாரம் நம்ப மறுக்கலாம். ஆனால் இதுவும் கடந்து போகும் என்ற நிலையில் ஈரான் உறுதியோடு நிற்கிறது.
பாசிஸ்டுகள் பார்ப்பதற்கு விறைப்பானவர்கள் போல் தெரிந்தாலும், அவர்கள் கோமாளிகள் என்றார் சார்லி சப்ளின். எந்தளவு உண்மை என தெரியாது. ஆனால் முன்னுக்குப் பின் மாத்தி மாத்தி பேசுவதிலும், தனது மூளை அக் கணத்தில் எடுக்கும் முடிவுகள்தான் தன்னை வழிநடத்துவதாகவும் கூறும் டொனால்ட் ட்றம்ப் இன் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது சப்ளின் சொன்னது உண்மைதானோ என எண்ணத் தோன்றுகிறது.
