ஓர் இரசனைக் குறிப்பு
வழமையான தமிழ்த் திரைப்படங்கள் போல வெட்டுக் குத்தாக இருக்குமோ என்ற எண்ணம் “அந்தோனி” திரைப் படத்தைப் பார்க்கப் போகும்போது மனதில் எழாமலில்லை. அந்த எண்ணத்தை அந்தோனி தரைமட்டமாக்கியது. அசையா நிலையிலான தரைகளிலேயே வாழும் எம் போன்ற மனிதர்க்கு அசையும் நிலையிலான கடல் வாழ்வு அனுபவம் நாளாந்த வாழ்வாகக் கிடைப்பதில்லை. ஒரு சிறிய தீவான இலங்கையின் நான்கு கரையும் இருக்கும் கடல்வாழ்வைக் கொண்ட மனிதர்கள் பலர் இருப்பார்கள். அவர்களது அனுபவமும் கடல் போன்றதே. கடல் இயற்கையை அவர்கள் நேசிக்கிற விதம் அவர்களது வாழ்வாதாரத்தோடும் வாழ்வோடும் உணர்வுகளோடும் இழையாகப் பின்னிக் கிடக்கிறது என்பதை அதுசார்ந்த திரைப்படங்களைப் பார்க்கிறபோது உணர வைக்கும்.
ஹேமிங்க்வேயின் “கிழவனும் கடலும்” நாவலை நான் கொரோனாவில் இருந்தபோது வாசித்தேன். பெருங் கடலை சிறு நூலுக்குள் புகுத்தி வைத்திருக்கும் வித்தைகொண்ட எழுத்து அது. சோர்வாக இருந்த எனது உடலுக்குள் அலைகள் புகுந்து ஆற்றுப்படுத்துவதுபோல உணர்ந்தேன். (இரண்டையும் இணைத்து அப்போ ஒரு பதிவையும் எழுதியிருந்தேன்). அந்தோனி திரைப்படத்தை பார்த்து முடிக்கிறபோது அந்த நாவலின் கிழவன் சன்ரியாகோ நினைவுக்கு வந்தான். “நானும் நீயும் நண்பன். என்னை மன்னித்துவிடு. துர்ரதிஷ்டம். நான் வாழ்வதற்கு நீ தேவையாக இருக்கிறது” என கடலலையின் தாலாட்டில் அசைவுறும் படகில் நின்றபடி மீனோடு பேசுவான் ஹெமிங்வே.
அந்தோனி (கயல் வின்சென்ட்) இன்னொரு கடல் மனிதனாக இந்தத் திரைப்படத்தில் வாழ்ந்து தொலைக்கிறான். மீன்பிடியின் நுட்பங்களையெல்லாம் அறிந்தவன் அவன். அவ்வாறாய் ஆழ்கடல் வரை அலைந்து திரிந்த அவனது வாழ்வை நளினி (தி.ஜா.பானு) குறுக்கிடுகிறாள். அவளை அந்தக் கடலன்னை அந்தோனியிடம் ஒப்படைத்திருக்கிறாள் என்கிறார் பாதிரியார். யார் அவள், அவளுக்கும் அந்தோனிக்கும் இடையிலான உறவு எப்படியாகிறது. வாழ்வு அவர்களை எதுவரை அழைத்துச் செல்கிறது என்பதையெல்லாம் கடல்கொண்ட திரையும் இளையராஜாவின் இசையலையும் இழுத்துச் சென்று காட்டுகிறது.
கடலை தனது அம்மா என்கிறான். தான் கவலையுறும் நேரத்திலெல்லாம் தன்னைத் தாலாட்டுவாள். அமைதியாக்குவாள் என அவன் தனது சிறு மகளுக்கு சொல்வான். கடல் அவனது வாழ்வின் ஆதாரம் என்பதையும் தாண்டி, ஒரு தாயின் தொப்புள்கொடி உறவு போன்றது என்ற உணர்வை தனது குழந்தைக்குள்ளும் புகுத்துகிறான். தான் கடல் மீதும், கடல் தன் மீதுமாக இருவழிப்பாதையாக அன்பு பிணைந்திருப்பதாக அவனது மனது நம்புகிறது.
அதே அன்பை அவன் தனது மனைவியிடமும் குழந்தையிடமும் ஒரேமாதிரியாக பிணைத்து வைத்திருப்பது அவனது வாழ்வாக இருக்கிறது. மனைவியும் குழந்தையும் இருபக்கமும் அவனது இரு கைகளினதும் அணைப்புக்குள் புகுந்தபடியேதான் நித்திரைக்குப் போகிறார்கள். கதைபேசுகிறார்கள். கடலன்னையுடனான அவனது மாறா அன்பு போலவே, அவனது அன்பும் இருவருடனும் இறுதிவரை மாறாமலே இருக்கிறது. வாழ்வியல் மாற்றத்துடனான மனித இயல்பின் பண்பு மாற்றத்தை இயற்கையால் பிரதியீடு செய்கிறபோது, மாறாத அன்பை பேணலாம் என்றவகைக் குறியீடாகவும் எடுத்துக் கொள்ள முடியும் என தோன்றியது. அதை வலுப்படுத்துவதுபோல படத்தின் முடிவும் அமைந்துவிடுகிறது. ஆனாலும் முடிவை அறிவும் மனமும் ஒப்ப மறுக்கிறது.
கடலின் அசையும் பரிமாணத்தை இன்னொரு அலையாக இசை வியாபித்துவிடுகிறது. எல்லா நடிகர்களினதும் நடிப்பு மிக இயல்பாக செயற்கைத்தனமின்றி ஆர்ப்பாட்டமின்றி இருக்கிறது. ஈரானிய திரைப்பட பாத்திரங்களின் சாயலோடும், வித்தியாசமான மலையாள திரைப்படத்தின் சாயல்களோடும் ரசிக மனத்தை அள்ளிச் சென்றது. குறிப்பாக அந்தோனி தனது பாத்திரத்தை வாழ்ந்திருக்கிறார். நளினியும்தான்!.
கடலும், கரையை அண்டிய அந்தச் சிறு குடிலும், கடற்கரை இருளும், அதைப் பொந்தாக்கும் ஹரிக்கன் லாம்பு வெளிச்சமும், நளினியின் முகத்தை மொய்க்கும் அந்த வெளிச்சமும், அவளது மவுனக் காத்திருப்பும், அமைதியும், அமைதியின் கால்களை நனைத்து கரைந்தழியும் அலையும், அலைகளின் மெல்லோசையும், தந்தைக்கான மகளின் காத்திருப்பும் என எல்லாவற்றையும் கமரா உள்ளடக்கியிருக்கிற விதம் விதந்துரைக்கத்தக்கது. கடலையும் கடல்சார் நிலத்தையும் உள்வாங்கி கமராவும் ஒளிப்பதிவும் உருவாக்குகிற சட்டகமானது சிறைப்பிடித்தது போல அன்றி, இயற்கையின் அழகை திறந்து காட்டும் சாளரங்களாக, அல்லது கரைகளற்ற சட்டகங்களாக நம்முன் வைக்கிறது. இளையராஜாவின் இசையானது இரசனையை போதையூட்டி மயக்கநிலையில் வைத்திருக்கிறது. முழுமையான ஒரு மாற்று சினிமா அல்ல. நிறைவடைந்த சினிமாவும் அல்ல இது. அதை நோக்கிய வழித்தடத்தில் பயணிக்க தகுதியுள்ள இளம் சினிமா என சொல்ல முடியும்.
மையநீரோட்டமான தமிழ்த் திரைப்படங்களிலிருந்து கணிசமானளவு முறித்துக் கொண்டு தன்னை அடையாளப்படுத்தியிருக்கிற படங்களில் அந்தோனியும் ஒன்று. அத்தோடு ஈழத்து பேச்சுவழக்கில் தனது பண்பாட்டு அடையாளத்தை முன்வைப்பது இன்னொரு கலையழகு. இலக்கியத்திலும், ஈழத்து திரைப்படம் அல்லது தொடர்களிலெல்லாம் “பலருக்கும் சென்றடைய வேண்டும்” என்ற காரணத்தோடு அந்த மொழியை தமிழக சினிமா மொழிக்கு மாற்றிவிடுகிற நிலை தொடர்ந்தவண்ணமே இருக்கிறது. இலக்கியத்தில் அது வாசிப்புக்கு தடையாக இருக்கிறது என்றுகூட சொல்லும் வாசகர்களை கண்டிருக்கிறேன். இது “சோறின்றி அமையாது சாப்பாடு” என்பது போன்ற பரீட்சிப்பு மனப்பான்மையற்ற போக்காக இருக்குமோ என நான் எண்ணுவதுண்டு.
ஈழத்து சினிமாக்களுக்கு ஈழத்தவர்கள் கூட எந்தளவு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது மிக விசனத்துக்கு உரியதாக இருக்கிறது. நேற்றும் இந்த படம் சினிமாலயத்துள் திரையிடப்பட்டிருந்தபோதும், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பார்வையாளர்கள் இருந்தார்கள்.
ஒருமுறை பிரசன்ன விதானகேயின் With You Without You திரைப்படத்தைப் பார்க்க சென்றிருந்தோம். அந்த Arena இலுள்ள கபேயில் கோப்பி குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு சொகுசு பஸ்ஸிலிருந்து ஒரு குழுவாக தமிழ்ச்சனம் வந்திறங்கியதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. நமக்குத் தெரியாமலே தமிழ் இரசிகர்கள் மாறிவிட்டார்களா என்ற வியப்புடன் இருந்தபோது, அவர்களெல்லோரும் மாடிக்கு படியேறிப் போய்க் கொண்டிருந்தார்கள். நாம் பார்க்க வந்த திரைப்படம் கீழ் மாடியில் இருந்தது. “எங்கை போறாங்கள்” என மேலே ஏறிப் போய்ப் பார்த்தபோது இன்னொரு சினிமாலயத்தின் வாசலில் விஜய் ‘கத்தி’யோடு நின்றார்.
ஈழம் தமிழகம் என்றில்லாமல் மையநீரோட்டப் படங்களை விலத்தி புதிய தரிசனங்களைத் தந்து முன்னேறத்துடிக்கிற, பொருளாதார ரீதியில் போராட்டம் நடத்துகிற இவ்வகைத் திரைப்படங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியவை. புதிய இரசனை அனுபவங்களை தரக்கூடிய மாற்று திரைப்படங்களை தர முடியும் என்பதை நிறுவிய படங்களில் அந்தோனியும் ஒன்றுதான். இதை இயக்கிய (சுகிர்தன், ஜெனோசன்) இளம் படைப்பாளர்களையும் அதில் பங்குபற்றியவர்களையும் பங்களித்தவர்களையும் பாராட்டியே ஆக வேண்டும். இதுபோன்ற மாற்று வழித்தடத்தில் முன்னேற வாழ்த்துக்கள்!.
- ravindran pa
- 15032026
- Thanks for image: tamil.indiaglitz .com
- fb:https://www.facebook.com/ravindran.pa/posts/pfbid02SVthJHBoV1M7eQwbW63DzoaBsfNtmZcnhNTkh2CNGRJkmmUTUHTqa1ooSpeSeTpwl
