வெட்கம்!

16 வயதான அல்லைப்பிட்டி சிறுவன் சென்ற மாதம் பொலிசாரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டான். அந்தச் சிறுவன் ஊடகங்களாலும் தனிமனிதர்களாலும் கள்ளன், ஒழுக்கமற்றவன், படிக்காதவன்… அது இது என செய்யப்படும் அவதூறுகள் ஒரு மனித உயிரியின் உயிரைப் பறிக்க நியாயம் வழங்குவதானது ஒரு சிந்தனைக் கொடுமை. அவன் அப்படி இருந்தானா இல்லையா என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. அது கதையாடலாகக்கூட இருக்கலாம். சட்டத்தை மீறினானா என்பதை தீர்மானிக்க நீதிமன்றம் என்ற அமைப்புமுறை இருக்கிறது. சரியாகவோ பிழையாகவோ அமையும் தீர்ப்புகளை அது கொண்டிருக்கலாம் என்றபோதும், இந்த அமைப்புமுறையை நிராகரிக்க முடியாது. ஆனால் தீர்ப்புச் சொல்ல அல்லது தண்டனை வழங்க எந்த மக்களுக்கும் உரிமை கிடையாது.

இந்த சமூக அமைப்பாலும் ஆட்சிமுறையாலும் வறுமைக்கும் ஒதுக்கலுக்கும் உள்ளாக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்களில் அந்தச் சிறுவனும் ஒருவன். அவன் இந்த ஒடுக்குமுறைக்குள்ளால், அது தன்மீது ஏற்படுத்திய மோசமான வாழ்வியலுக்கு உள்ளால், திமிறி எழுந்து தனது இருத்தலை உறுதிப்படுத்தப் போராடுவதே அவனளவில் முதன்மைப் பிரச்சினை.

“ஒவ்வொரு நாளும் அன்றைய நாளின் உயிர்வாழ்தலைப் பற்றியும், பசியைப் பற்றியும், இருத்தலைப் பற்றியும் சிந்திக்கிற ஒரு விளிம்புநிலை மனிதன் சக மனிதர்களின் பலவீனங்களை சதா மோப்பமிட்டபடியே இருப்பான். மீறல்களைச் செய்வான். அவனுக்கு இந்த சமூகம் வகுத்துக் கொடுத்த ஒழுக்கம், அரசு வகுத்திருக்கிற சட்டம் என்பதை மீறுவது எளிதான காரியம்” என மல்கம் எக்ஸ் கூறியிருப்பார். இந்த வழியில் 16 வயதில் ‘கிரிமினல்’ குற்றவாளியாக சிறைப்பிடிக்கப்பட்ட மல்கம் எக்ஸ் சிறையிலிருந்து வெளியே வரும்போது ஒரு நிறவெறி எதிர்ப்புப் போராளியாக வந்தார். உலகம் அவரை பார்த்து வியந்தது. வரலாறு அவரது பெயரை ஆழமாக பொறித்தே வைத்திருக்கிறது. போட்டுத் தள்ள வேண்டும் என்ற சிந்தனை முறையில் மல்கம் என்ற ‘கிரிமினலை’ கைதுசெய்யாமல் போட்டுத் தள்ளியிருந்தால் கறுப்பின மக்கள் ஒரு தலைவரை இழந்திருப்பர். உயிரின் பெறுமதியை உணர்த்தவே இந்த உதாரணமே ஒழிய, அல்லைப்பிட்டி சிறுவனை கொணர்ந்து மல்கம் அருகில் வைத்துப் பேசுவதல்ல என் நோக்கம். எமது சயனைட் கலாச்சாரமும் இதை உணர்ந்திருக்கவில்லை. நெல்சன் மண்டேலா சயனைட் அடித்திருந்தால் இன்னொரு தலைவரை தென் ஆபிரிக்கா இழந்திருக்கும். உயிரின் பெறுமதியை உணர்த்துகிற இன்னொரு உதாரணம் இது.

அந்தச் சிறுவன் தனது குடும்பத்தை தாங்கிநிற்க குழந்தைமையை இழந்து பெரியவன் ஆகினான். அதுவே அவனது போராட்டம். இன்று அவன் தாங்கிநின்ற குடும்பம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. ஒரு மனிதஜீவியை உருவாக்குவதில் குடும்பம் என்ற அமைப்புமுறையையும் தாண்டி, பாடசாலை என்ற சிவில் நிறுவனத்தையும் தாண்டி, சமூகத்துக்கு பெரும் பொறுப்பிருக்கிறது. அரசுக்கு பெரும் பொறுப்பிருக்கிறது.

அடிப்படை வசதிகளை கொண்ட அல்லது அதைத் தாண்டி வாழ்வுநடத்துகிற நடுத்தர அல்லது மேல் வர்க்கங்களின் வாழ்வுநெறிகள், ஒழுக்கங்கள் போன்ற அளவுகோல்களால் அவனை மதிப்பிடுவது சுத்த அபத்தம். தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் ஒருவர் உயர்சாதியினருக்கு கீழ்ப்படிந்து நடப்பதை ஒழுக்கம் என்கிறது, சாதிய மனப்பான்மை!. கணவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதை பெண்களின் ஒழுக்கம் என்கிறது, ஆணாதிக்க சமூகம்!. இதை மீறுவதை ஆதிக்க சக்தியாக உள்ளோர் ‘சீரழிவு’ என்பர். ‘குற்றம்’ என்பர். அந்த மீறலை ஒடுக்கப்படுவோர் போராட்டம் என்பர்.

அந்த அளவுகோலானது விளிம்புநிலை மனிதன் தன் வறுமையால் களவு செய்தால் அவனை “கள்ளன்” என்கிறது. வசதி படைத்தவன் களவு செய்தால் அதை “கொள்ளை” என்கிறது அல்லது “ஊழல்” என்கிறது. இந்த வர்க்கங்களேதான் விளிம்புநிலை வர்க்கங்களுக்கான ஒழுக்கங்களை வரைவு செய்தும் வைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் அந்த சிறுவன் களவு எடுத்தான். மாட்டைத் திருடினான். ஒழுக்கம் இல்லாதவன், சமூக விரோதி, படிப்பறிவில்லாதவன், வளர்ப்புச் சரியில்லாதவன் என்ற வார்த்தைகளோடு வந்து சிலபலர் சமூகவலைத்தளங்களில் எழுதித் தள்ளுகிறார்கள். இதில் சாமான்ய மனிதரிலிருந்து கல்விமான்கள் வரை ஒரு கணிசமான பகுதி உள்ளடங்குகிறது. மார்க்சியம் பேசியோர் சிலர்கூட இதற்குள் அடக்கம். வெட்கப்பட வேண்டியவர்கள் இந்த எல்லா வகையினருமே ஒழிய சிறுவனின் குடும்பத்தாரல்ல!

இந்த மனநிலை ஒன்றும் புதிது அல்ல. அது நீண்ட வேர் கொண்டது. இயக்க காலங்களில் இதே வகைப்பட்ட குற்றச் சாட்டுகளுடன் சமூகவிரோதிகளாக மின்கம்பங்களில் கட்டப்பட்டு சுடப்பட்டபோதும் இந்த சமூகம் அதை ஆதரித்தே நின்றது. மற்றைய இயக்கப் போராளிகளை கொன்றபோதும், உட்கொலை புரிந்தபோதும் அதை ஆதரித்து நின்றவர்கள் இருந்தது வரலாறு. அந்த சிந்தனைமுறை வளர்ச்சியடைந்து இன்று சாதாரணமாக “போட்டுத் தள்ள வேண்டும்” என்ற வார்த்தைப் பிரயோகங்கள் சமூகத்தில் (ஓர் உயிரை அழித்தல் என்ற) எதுவித மனச்சங்கடம்கூட இல்லாமல் புழக்கத்துக்கு வந்துவிட்டது. அது ஏதோ தங்களுக்கு அதைச் சொல்லவும் செய்யவுமான உரிமை இருப்பதுபோல மிகச் சாதாரணமாக கதைக்கும் நிலைக்கு வீழ்ச்சியடைந்து கிடக்கிறார்கள். கல்விகற்ற சமூகமாக மட்டும் இருப்பது முக்கியமல்ல, அறிவுசார்ந்த சமூகமாக இருப்பதே முக்கியமானது. இங்குதான் எமது கல்வி முறைமை தோல்வியடைந்திருக்கிறது.

*

Leave a comment