மத்திய கிழக்கு போர்க் குறிப்பு
கேள்வி கேட்கப்பட முடியாதவர்களை யாராவது துணிந்து கேள்வி கேட்டால் அதற்கு ஒரு பெறுமதி உண்டு. அது ஏற்படுத்துகிற மகிழ்ச்சி என்ற ஒன்று உண்டு. இவை அடிமையாக வாழ மறுக்கிற, அடங்க மறுக்கிற மனித உணர்வுகளிலிருந்து எழுபவை. ஈரான் தன் மீதான பாதிப்பையும் பொருட்படுத்தாமல் இன்று கொடுத்துக் கொண்டிருக்கும் பதிலடி என்பது இவற்றின் குறியீடுகளாக இருக்கின்றன. மேற்குலகு உருவாக்கி கட்டமைத்திருக்கிற இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையிலும், ஜனநாயகத்தை பண்பாக வலியுறுத்துவதற்கும் மேலால் அதை வெறும் கட்டமைப்பாக மட்டும் வைத்து புரிந்துகொள்கிற மனநிலையிலும் நின்று இப்போரை அல்லது முரண்களின் மோதலை புரிந்துகொள்ள முடியாது. கொலோகாஸ் யூதப் படுகொலையிலிருந்து எப்ஸ்ரைன் வக்கிரமாளிகைக்குள் நடத்தப்பட்டது வரையான கொடடூரமான செயல்களெல்லாம் மேற்குலக ஜனநாயகத்தின் பண்பை தோலுரித்துக் காட்டுபவை.
அவர்களின் ஜனநாயகக் கட்டமைப்புக் கூட காலனிய நவகாலனிய சுரண்டல்களால் பெறப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பொருளாதார அடித்தளத்தைக் கொண்டவை. சலுகைபெற்ற மக்களாக (நாம் உட்பட) மேற்குலக நாடுகளில் வாழ இதுவே காரணம். இதை இந்த மக்கள் இழக்கத் தயாராக இல்லை. எத்தனையோ மனிதாபிமானப் போராட்டங்களையும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்களையும் கண்ட மேற்குலக வீதிகள் காலனிய/நவ காலனிய வளச் சுரண்டலுக்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்தைத் தன்னும் கண்டதாக வரலாறு இல்லை.
மேற்குலகம் வலியுறுத்தும் இந்த ஜனநாயக அளவுகோலை சர்வ உலகத்துக்குமான பொதுமையாக பிரதியெடுத்து சிந்திக்கும் அறிவுநிலையில் எம்மை நிலைநிறுத்தினால், மனிதஜீவியின் மேற்சொன்ன அடங்க மறுக்கும் இயல்பை விளங்கிக்கொள்ள முடியாது. அதுவே நூற்றாண்டு கால பல்வகைப் பண்பாட்டுத் தொடர்ச்சிகொண்ட மனித இன நாகரிகங்களின் பன்முக வளர்ச்சிப் பாதைகளை தேர்வு செய்கின்றது. நாகரிகம் என்பது மேற்குலகப் பண்பாட்டை அச்சும் அசலுமாக பிரதிபலிப்பதல்ல. அது ஒற்றைப் படித்தானதுமல்ல. அதை மற்றவர்கள் மீது மேற்குலகம் திணிப்பது வெள்ளை மேலாதிக்கம் கொண்ட காலனிய மனநிலையிலிருந்து பிறந்தது. அது ஐரோப்பிய மையவாத தன்மை கொண்டது. அவர்கள் வலியுறுத்துகிற இந்த கருத்தமைவை அப்படியே ஏற்றுக் கொள்வதானது காலனிய சிந்தனைமுறைக்குள் அகப்பட்டு வெளியேற முடியாத நிலையின் வெளிப்பாடு ஆகும்.
எனவே நூற்றாண்டு கால இஸ்லாமியப் பண்பாட்டை நீக்கம் செய்து ஈரானை புரிந்துகொள்ள முடியாது. ஈரானில் மதத் தலைவர் இருக்கிற அதே நேரம் ஈரானில் பாராளுமன்ற (ஜனநாயகக் கட்டமைப்பு) முறைமையும் செயல்வடிவத்தில் உள்ளது. இஸ்லாமியப் பண்பாட்டை வைத்து இப்போதும் மன்னராட்சி செய்கிற நிலையோடு ஒப்பிடுகையில், மத்திய கிழக்கில் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பைக் கொண்ட நாடாக ஈரானை பார்க்க முடியும். அதன் ஜனநாயகப் பண்பானது மதப் பண்பாட்டிலிருந்து உருவானதாக இருக்கிறது. இந்தப் பாரம்பரிய பண்பாட்டை மறுதலிப்பதோ ஏற்றுக்கொள்வதோ ஈரான் மக்களினது தேர்வுக்கு உரியது. காலம்-வெளி உடனான உலக இயங்குநிலையில் இத் தேர்வு மாற்றமடையவும் கூடும். (என்னளவில் அரசை மத நீக்கம் செய்ய வேண்டும் என்பது ஈரானுக்கும் பொருந்தும் என நம்புகிறபோதும், ஈரான் மக்களது தேர்வை நான் புரிந்துகொள்ளவே செய்கிறேன்).
ஈரானின் அரசுக் கட்டமைப்பினுள் வைத்தே அதன் ஜனநாயக மறுப்புக்கு எதிராக வீதியில் மக்கள் இறங்கினார்கள். (அதற்குள் மொசாட் புகுந்துவிளையாடி சேறாடியது வேறு கதை). அவர்கள் மதப் பண்பாட்டை புறக்கணித்துவிட்டு, அரசுக்கு எதிராக இறங்கவில்லை. அதனாலேயே மதத் தலைவர் கமெய்னியின் கொலையை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இன்னும் சொல்வதானால் ஈரானிய மக்களிடத்தில் ஜீரணிக்க முடியாத பெரும் இழப்பாக இருக்கிறது. ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பழிவாங்க வேண்டும் என அவர்கள் -அமெரிக்க இஸ்ரேல் குண்டு வீச்சுக்கு நடுவிலும்- வீதியில் இறங்கி ஊர்வலம் போனார்கள்.
மற்றைய நாடுகள் மீது கமெய்னி பயங்கரவாதச் செயல்களை செய்தார் என்பதற்கும், ஈரான் செய்தது என்பதற்கும் என்ன ஆதாரங்களை அமெரிக்கா முன்வைக்கிறது. உலகம் முழுவதும் பல ஆயிரம் பேரைக் கொன்றார்கள் என சொல்கிறது. அது எங்கு நிகழ்ந்தது என அவர்களால் முன்வைக்க துப்பில்லை. (ஈரான்-ஈராக் இடையிலான போரை எட்டு வருடங்களாக நிகழ்த்தியதில் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் பங்குதான் இருக்கிறது). வியட்நாமிலிருந்து வெனிசுவேலா வரை மில்லியன் கணக்கான மக்களை கொன்ற அமெரிக்காவும், பலஸ்தீன மக்களை நக்பா படுகொலையிலிருந்து காஸா படுகொலை வரையான தொடரும் இரத்தக்கறை வரலாற்றையும் கொண்ட இஸ்ரேலும் இதைச் சொல்வது வேடிக்கையானது. இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் மேற்கொள்வதற்கான காரணம் இஸ்ரேலின் பலஸ்தீன மக்கள் மீதான படுகொலையும் நில ஆக்கிரமிப்பும் ஆகும். இதில் கொல்லப்படும் பலஸ்தீன மக்களும் இஸ்ரேல் மக்களும் குறித்து இஸ்ரேலிய அரசுக்கு எந்தக் கவலையுமில்லை.
அமெரிக்கா என்ற ஏகாதிபத்தியம் தனது உளவுப்படை மூலம் தான் விரும்பாத ஆட்சிகளை திரைமறைவில் நின்று கவிழ்க்கிய அல்லது அத் தலைவர்களைக் கொல்கிற வேலையை நீண்ட காலமாகவே செய்துவந்தது. கம்யூனிச எதிர்ப்பை வைத்து வியட்நாமுடன், நிக்கரகுவாவுடன் போர் புரிந்தது. சோவியத் ஆதரவு ஆப்பானிஸ்தானுடன் போரிட அல்கைடா என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி அதனூடாக போரிட்டது. பின் அதே அல்கைடா அமெரிக்காவுக்கு எதிரியாக மாறியது இன்னொரு கதை. சோவியத் இன் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்தியம் மறைமுகமாக அன்றி, நேரடியாகவே நாடுகளில் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தியது. தனது நலனுக்கு குறுக்கே நின்ற அரசுகளை அச்சுறுத்தியது. இதன் தொடர்ச்சி இன்று ஈரான் வரை வந்து நிற்கின்றது.
இதற்குமுன்னர் வெனிசுவேலாவுக்குள் புகுந்து அதன் அதிபர் மடுரோ அவர்களை கடத்தியது அமெரிக்கா. உலகம் மௌனமாக செயலற்று பார்த்துக் கொண்டிருந்தது. எந்தவகை உலக சட்டவிதிகளுக்கோ, தார்மீக அறத்துக்கோ உட்படாத இந்தச் செயலை அமெரிக்கா செய்து காட்டியபோதும், ஐநா கூட செயலற்றே இருந்தது. இதே வகைப்பட்ட அணுகுமுறையை ஈரான் விடயத்தில் அதன் உச்சபட்சத் தலைவரை மட்டுமல்ல, படைத்துறை சார்ந்த மற்றும் பாராளுமன்றம் சார்ந்த 40 க்கு மேற்பட்ட தலைவர்களையும் கொன்றொழித்திருக்கிறது. ஓர் அரச கட்டமைப்பினை ஆட்டம் காணச் செய்யக்கூடிய இந்தக் கூட்டுப் படுகொலைகூட ஈரானில் ஆட்சிமாற்றத்தை நிகழ்த்த முடியாமல் போனது அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரும் அதிர்ச்சி.
அந்தளவுக்கு கமெய்னி அவர்கள் ஏகாதிபத்தியத்தின் தன்மையை புரிந்துகொண்டு அரச கட்டமைப்பிலுள்ள தலைவர்களை தாமதமின்றி பிரதியீடு செய்யக் கூடிய வகையில் ஒரு பன்முகப்பட்ட அமைப்புமுறையை உருவாக்கியிருக்கிறார். இது சர்வாதிகாரியாக இருக்கும் ஒருவரின் பண்புநிலைகளுக்கு முரணானது. சர்வாதிகாரிகள் தன்னைத் தவிர ஒருவரையுமே நம்புவதில்லை. இரண்டாம் கட்டத் தலைமையைக்கூட வளர விடுவதில்லை. இந்தத் தன்மைகளை கமெய்னி அவர்கள் கொண்டிருந்திருந்தால் அவரின் திடீர் மரணத்தோடு, ஈரானின் ஆட்சி பொலபொலவென உதிர்ந்து கொட்டுண்டு, ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும். 46 வருடமாக ஈரானைவிட்டு அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்க எடுபிடி ஷா மன்னின் வாரிசு கறல்பிடித்த அரசமுடியோடு மீண்டும் பதவிக்கு வந்திருக்கவும் முடிந்திருக்கும்.
ஈரானின் இன்றைய அரசை விரும்பாத ஈரானிய மக்கள்கூட மீண்டும் ஒரு முடியாட்சியை விரும்பப் போவதில்லை. ஈரானிய அரசோடு தீர்த்துக் கொள்ள வேண்டிய பல விடயங்கள் இந்த மக்களுக்கு இருக்கிறது. அவர்கள் அதற்காக வீதிக்கு இறங்கிப் போராடவும் செய்தார்கள். அதற்குள் ஊடுருவி மொசாட் ரெஹ்ரான் கிளர்ச்சியை (2014 உக்ரைன்) மைடான் கிளர்ச்சி போன்று மாற்ற எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. அதில் ஈரான் அரசு நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்கு உரியதாக இருக்கலாம். அந்தக் கணக்கை ஈரானிய மக்களே அரசுடன் சுயமாகத் தீர்த்துக் கொள்வார்கள். அல்லது ஒரு சுயபரிசீலனையினூடாக அரசு தன்னை மாற்றிக் கொள்ளலாம்.
இந்தப் பணியை அமெரிக்காவோ இஸ்ரேலோ மேற்குலகோ காலனிய மனப்பான்மையுடன் அணுகி தலையிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தவகை தலையீடுகளான ஆட்சி மாற்ற சதிகள், தலைவர்களை கடத்துவது, கொலைசெய்வது என்ற சர்வாதிகார செயல்களை அடையாளம் கண்டு முதன்மையில் வைத்து எதிர்ப்பதற்குப் பதிலாக, அதற்குப் பலியாகும் நாடுகளை குற்றப்படுத்துவது அல்லது பலியாக்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. (அது ஒடுக்கும் எந்த அரசையும் நியாயப்படுத்துவது என பொருள் கொள்வதாகாது). அத்தோடு அமெரிக்கத் தலையீட்டைக்; கோருவது அல்லது அதை நியாயப்படுத்துவது ஒரு தேர்ந்த அரசியல் பார்வையும் அல்ல. உண்மையில் அது ஆபத்தானது. அதிகாரமற்ற மெலிந்த நாடுகளின்; கதவுகளையும் இந்தப் பிசாசு எதிர்காலத்தில் தட்டவும் கூடும். அதற்கு பலியாவது உங்கள் நாடாகவும்கூட இருக்க முடியும் என்ற புரிதலாவது தேவை. இப்படியாக அமெரிக்கா கதவுகளை உடைத்துத் திறந்து ஜனநாயகத்தை மலரச் செய்துகாட்டிய ஒரு நாட்டையாவது உதாரணமாகக் காட்ட முடியாது.
1979 இல் ஏற்பட்ட ஈரானியப் புரட்சியின் பின் தமக்கு ஒவ்வாத அரசு என்ற ஒரேயொரு காரணத்துக்காக மேற்குலகு பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. இந்தப் புற அழுத்தத்தில் நாட்டின் பொருளாதாரத்தை நலிவடையச் செய்து அதன்மூலம் மக்களின் வாழ்நிலையை நெருக்கடிக்கு உள்ளாக்கி, மக்கள்; அரசுக்கு எதிராக கிளர்ந்து எழப் பண்ணுகிற கேடுகெட்ட உத்தி; அது. இந்த அணுகுமுறை வெனிசுவேலாவுக்கு எதிராகவும் செயற்படுத்தப்பட்டது. உச்சபட்சமாக, அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிசத்துக்கு எதிரான வெறித்தனத்தோடு கியூபாவுக்கு எதிராக இன்றுவரை செயற்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அடுத்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நாடு கியூபா.
இவளவு அழுத்தங்களுக்கு இடையேயும் மத்தியகிழக்கில் அதிகளவு கல்வியறிவு படைத்தவர்களாகவும், விஞ்ஞானம் உட்பட பல துறைகளில் முன்னேறியவர்களாகவும், பாராளுமன்றத்தில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றி வைத்திருப்பவர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை கவனம் கொள்ள வேண்டும். அவ்வாறான ஓர் ஆட்சிமுறைமையை சர்வாதிகாரம் என்ற எல்லைக்குள் வைத்துப் புரிந்துகொள்வது சாத்தியமா?. அதன் ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசுவது என்பதற்குப் பதிலாக, சர்வாதிகாரம் என்ற ஒற்றைச் சொல்லால் போகிற போக்கில் உச்சரித்துவிட்டு கடந்து செல்வது ஒரு அரசியல் பார்வையே அல்ல.
ஈரான் மீதான போர் என்பது இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரலுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அது அமெரிக்காவின் நலன்களோடும் சம்பந்தப்பட்டது. வளங்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு சம்பந்தப்பட்டது. ஜி-7 இனை மேவியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின்; பொருளாதார வளர்ச்சியை அடித்து வீழ்த்துவதோடு சம்பந்தப்பட்டது. ஒற்றைத் துருவ அதிகாரத்தை தக்கவைப்பதோடு சம்பந்தப்பட்டது. பெட்ரோ டொலர் நீக்கத்தை தடுத்து நிறுத்துவதோடு சம்பந்தப்பட்டது. மத்திய கிழக்கை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு சம்பந்தப்பட்டது.
இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரல் பலஸ்தீனத்தை மறுத்து (அதாவது இரு அரசுத் தீர்வை மறுத்து), அதை சிதைத்து இஸ்ரேல் என்ற ஓர் அரசுத் தீர்வை நிலைநாட்டுவது. அத்தோடு அகண்ட இஸ்ரேலை -அயல் நாடுகளுக்குள் எல்லைகளை அரக்கி- உருவாக்குவது. அதற்குத் தடையாக அல்லது சவாலாக இருக்கும் ஈரானை பலமிழக்கச் செய்வது அல்லது ஈரானில் எடுபிடி அரசை நிறுவுவது. ஈரானின் உதவியோடு பலஸ்தீன மக்களுக்காக நிற்கும் ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை பலமிழக்கச் செய்வது. மத்திய கிழக்கில் ஈரான் இஸ்ரேலைவிட மிதப்பான அதிகார சக்தியாக நிற்பதை தடுப்பது. இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் நிகழ்த்தப்பட்டதுதான் ஈராக் மீதான அமெரிக்காவின் போரும்கூட. அமெரிக்காவும் இஸ்ரேலும் பிரிக்க முடியாத சக்திகளாக பிணைந்து உள்ளன என்பது உலகறிந்த விடயம். சதாம் குசைனை அழித்துவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி நிலவும் என அப்போ நேரடியாகவே நெத்தன்யாகு பேசியிருந்தார். இப்போ ஈரானை அதன் தலைமையை அழித்துவிட்டால் மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலகிலேயே அமைதி நிலவும் என கூறுகிறார்.
இதையெல்லாம் சாத்தியப்படுத்தவும் மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கவும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் பலதையும் தனது தொங்குதசையாக மாற்றியது. அந்த நாடுகளின் பாதுகாப்பை தானே பார்த்துக் கொள்வதாக உறுதியளித்து படைத்தளங்களை நிறுவியது. அது இன்று அந்த நாடுகளுக்கே அழிவை தேடிக் கொடுத்துள்ளது. அந்த நாடுகளின் மன்னராட்சி முறைக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் ஒருபோதுமே ஜனநாயகம் மசிர் மட்டை என அளவுகோல்களை நீட்டியது கிடையாது. பெண்விடுதலை என குமுறியது கிடையாது. ஆப்கானில் பயங்கரவாதத்தை எதிர்த்த போராக பிரகடனம் செய்தது. பின் பெண்விடுதலையை எடுத்துக் கொடுக்கப் போகிறோம் என உப பிரகடனத்தையும் செய்து கிழிச்சுக் காட்டிய அமெரிக்கா இந்த தொங்குதசை நாடுகளின் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக குரலை உயர்த்தியதே இல்லை.
ஆக மத்திய கிழக்கை தனது இழுவைப் படகு அரசாக வைத்திருக்கிற அமெரிக்காவுக்கு ஈரான் ஒரு தலையிடி. பலஸ்தீன மக்களை கொன்று குவித்து நிலத்தை அபகரித்து அதை மீண்டும் மீண்டுமாய் அகண்ட இஸ்ரேலாக மாற்றும் சியோனிஸ்டுகளுக்கு ஈரான் ஒரு தலையிடி. இரண்டுபேரும் இந்தப் புள்ளியில் இணைகிறார்கள். அமெரிக்காவின் சியோனிஸ லொபியும், பெரும் மூலதனமும், அதுக்கு வெளியே செயற்பட முடியாத அமெரிக்க அரசியலும், அரசியல் தலைவர்களும,; காங்கிரசும், உளவுப்படையும் என அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இருக்கிற பிணைப்பு வலுவானது.
பலஸ்தீன போராட்டத்தையும் மண்ணையும் நேசிப்பதோடு, அவர்கள் மீதான படுகொலைகளையும் ஒடுக்குமுறையையும் சகித்துக் கொள்ளாத ஒரு நாடு ஈரான். இதன்விளைவாக உருவாகிய ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கு ஈரான் உதவியும் செய்தது. இவர்களை பயங்கரவாத அமைப்பு என சுட்ட இஸ்லாமிய எதிர்ப்பு மட்டுமே காரணமாக இருக்கிறது. அவர்களது தாக்குதல்கள் பலஸ்தீன மக்கள் சார்ந்து இஸ்ரேலுக்கு வெளியில் நிகழ்ந்ததில்லை. இஸ்ரேல் மீதான அவர்களின் தாக்குதல்கள் குறித்த அரசியல் விமர்சனங்கள் என்;பது அவர்களை பயங்கரவாதிகளாக வரையறுக்க போதுமானதல்ல. அமெரிக்காவும் பிரித்தானியாவும் உருவாக்கிய அல்கைடா, ஐஎஸ், பொக்கோகராம் போன்ற அமைப்புகள் உலகு தழுவிய பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியவை. அமெரிக்க நலனுக்கு ஏற்ப இப்போதும் அவர்கள் நண்பர்களாகவும் எதிரிகளாகவும்தான் மாறி மாறி பாத்திரம் வகிக்கிறார்கள். அசல் உதாரணம் இன்றைய சிரிய அதிபர். அல்கைடா, ஐஎஸ் என களமாடிய அவர் பெரும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இப்போ ட்றம்ப்புக்கு அவர் ஒரு ஸ்மார்ட் மனிதர். வெள்ளைமாளிகைக்கு விஜயம் செய்யக் கூடிய சிரிய அரசுத் தலைவர். ஆப்கானின் புரட்சியாளராக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பின்லாடன், பின்னர் உலகப் பயங்கரவாதி என அதே அமெரிக்காவால் வரையறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.
மத்திய கிழக்கில் அணுகுண்டை வைத்திருக்கிற ஒரே நாடான இஸ்ரேலை பாதுகாக்கும் கள்ள நோக்கில் அமெரிக்கா மூன்று கோரிக்கைகளை மேசையில் வைத்த அதேநேரம், ஈரானிய மக்களின் விடுதலைக்கான போரை தொடங்கியுள்ளதாக குரலெடுத்து ட்றம்ப் மீட்பராகவும் மாறினார். “எனது அன்புக்குரிய ஈரானிய மக்களே உங்களுக்கு உதவிசெய்ய இதோ விரைந்து வருகிறேன். உங்கள் விடுதலையை நீங்கள் பெறும் காலம் வந்துவிட்டது. ஆயத்தமாக இருங்கள். இதோ வருகிறேன்” என ட்றம்ப்பு அழைப்பு விடுக்கிறார். ஆமென்!
- ravindran pa
- 03032026
