‘வெள்ளை’ நெஸ்லே

நெஸ்லே (Nestle) நிறுவனம் மீது சுவிஸ் Public Eye அமைப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. “நெஸ்லேயின் இந் நடவடிக்கையானது நீண்ட வரலாறு கொண்ட காலனியம், சுரண்டல் மற்றும் நிறவாதத்தை வெளிப்படுத்துகிறது. நெஸ்லே வேண்டுமென்றே ஆபிரிக்காவில் உடற் பருமனையும், மிகை-இனிப்பு சம்பந்தப்பட்ட வியாதிகளையும் சீனியூற்றி வளர்க்கிறது” என தென் ஆபிரிக்கCape Town பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த லோறி லேக் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

நெஸ்லேயானது உலகின் மிகப் பெரிய பிரபல்யமான உணவு உற்பத்தி நிறுவனமாகும். 258.6 மில்லியன் பெறுமதி கொண்ட இந் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் சுவிஸ் இன் -பிரெஞ்சு மொழி பேசும்- “வெவே” பகுதியில் அமைந்துள்ளது. முக்கியமாக குழந்தைகளுக்கான தயாரிக்கப்பட்ட உணவுகளுக்கு பெயர்போனது இந் நிறுவனம். ஆறுமாதக் குழந்தையிலிருந்தே ஊட்டச் சத்தை வழங்கக்கூடிய நூற்றுக்கு மேற்பட்ட உணவு வகைகளை தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறது.

ஆபிரிக்காவில் நெஸ்லேயின் ஸெரெலக் (Cerelac) என்ற குழந்தைகளுக்கான உணவு வகை பிரபலமானது. ஆபிரிக்காவிலிருந்து நெஸ்லே பெறும் வருமானம் ஆண்டொன்றுக்கு 250 மில்லியன் டொலர்கள் ஆகும். ஆபிரிக்காவின் 20 நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 100 நெஸ்லே தயாரிப்பான ‘ஸெரெலக்’ உணவு வகைகளை விசேட உணவுப் பரிசோதனைக்கான ஆய்வுசெய்தPublic Eye அமைப்பானது அதிர்ச்சியடைந்தது. குழந்தைகளுக்கான உணவு வகைகளில் செயற்கையாக சீனியை சேர்க்கக் கூடாது என்ற உலக சுகாதார நிறுவனத்தின் விதியையும் மீறி, ஆபிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90 வீதத்திற்கும் மேற்பட்ட ‘ஸெரெலக்’ குழந்தை உணவு வகைகளில் பல மடங்கு சீனி சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் நெஸ்லே உற்பத்தியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிற ‘ஸெரெலக்’ உணவுப் பொதியில் சீனியின் அளவு பூச்சியமாக உள்ளது. இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு எதிராக ஆபரிக்காவிலுள்ள 20 சமூக நிறுவனங்கள் உலக சுகாதார அமைப்புக்கு முறையிட்டுள்ளன. “எல்லா நாட்டுக் குழந்தைகளும், எல்லா உடல் நிறமுடைய குழந்தைகளும் ஒரேவிதமாக ஆரோக்கியமான ஊட்டச் சத்தை பெற உரிமை உடையவர்கள். எல்லா குழந்தைகளும் ஒன்றுதான். எனவே சரியானதை செய்யுங்கள். உலகம் உங்களை அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறது” என அவர்கள் நெஸ்லேயை எச்சரித்துள்ளனர். உண்மையில் இந்த விடயம் 2024 இல் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கெதிரான மனுவில் 105’555 பேர் கையெழுத்திட்டிருந்தனர். இதுவரை நெஸ்லே இதை துளியும் கண்டுகொள்ளாமல் அதே வேலையைச் செய்கிறது.

ஒருநேர உணவாக ஊட்டப்படுகிற ‘ஸெரெலெக்’ உணவுப் பொதியில் சராசரியாக ஏழு கிராம் சீனி சேர்க்கப்பட்டிருப்பது ஆபிரிக்காவின் ஏழு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிகூடியளவாக 7.5 கிராம் சீனி (2 கட்டி) கென்யாவின் ஆறு மாதக் குழந்தைகளின் உணவில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.

பல ஆண்டுகளாக உலக சுகாரார நிறுவனம் (WHO) பொதுவில் ஓர் எச்சரிக்கையை விட்டபடி இருக்கிறது. ஆரம்பத்திலேயே ஏற்படுத்தப்படும் சீனி பாவனையானது தமது உணவில் இனிப்புப் பண்டங்களுக்கு தொடர்ச்சியான முன்னுரிமை கொடுப்பதை ஊக்குவித்து, அதை தொடரச் செய்யும் எனவும் இது மிகையான உடல்நிறையையும் உடற் பருமனையும் அதிகரிக்கும் ஆபத்தைக் கொண்டது எனவும் கூறிவருகிறது.

ஆபிரிக்கக் கண்டத்தில் உடற் பருமனானது எச்சரிக்கை எல்லையைத் தொட்டிருக்கிறது எனவும், அதன் விளைவாக நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், அதோடு தொடர்புடைய இதய நோய்கள் போன்றவற்றை உருவாக்குகிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆபிரிக்காவில் குழந்தைகளின் உடற் பருமன் அதிகரிப்பு குறித்தும் கரிசனைப்பட வேண்டியிருக்கிறது. 1990 இலிருந்து அங்கு ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் உடற் பருமன் அதிகரிப்பு நிகழ்ந்து வருகிறது. பல ஆபிரிக்க நாடுகளும் ஊட்டச்சத்து குறித்த வழங்கலில் இரட்டைச் சுமைகளை சுமக்க நேர்ந்திருக்கிறது. ஒருபுறம் நிறைக்குறைவும் மறுபுறம் உடற் பருமனும் அருகருகாக நிலவுகிற முரண்நிலை காணப்படுகிறது.

ஆபிரிக்க பொது சுகாதார நிலைமையில் உடற்பருமனானது குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடருமானால் 2050 இல் உடற்பருமன் எண்ணிக்கையானது 250 வீதம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வயதானவர்களில் இரண்டு பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உடல்நிறை அதிகரிப்பு அல்லது உடற் பருமன் அதிகரிப்பு ஏற்படும் சூழலை இது உருவாக்கலாம்.

ஆபிரிக்காவில் விற்கப்படுகிற ‘ஸெரெலக்’ உணவுப் பொதியில் சேர்க்கப்பட்டிருக்கிற சீனியின் அளவானது நெஸ்லேயால் குறிப்பிடப்படுவதில்லை. இந்த வெளிப்படைத்தன்மை யின்மை பொதுமக்களின் சுகாதாரத்தையும், நுகர்வோரின் உரிமையையும் குறைத்து மதிப்பிடும் செயலாகும் எனவும், பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கான உணவுத் தேர்வை கண்டடைய தெளிவானதும் சரியானதுமான தகவல்களை பெறும் உரிமை கொண்டவர்கள் எனவும் நைஜீரிய நுகர்வோர் அமைப்பு (CADEF) ஒன்றின் இயக்குநர் Chiso Ndujkwe-Okafor அவர்கள் தெளிவுபடுத்தினார். வருடமொன்றில் 50 மில்லியன் டொலர் பெறுமதியான ‘ஸெரெலக்’ நைஜீரியாவில் மட்டும் விற்பனையாகிறது. நெஸ்லே நிறுவனத்துக்கு ஆபிரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய சந்தையாக நைஜீரியா திகழ்கிறது.

ஆபிரிக்காவில் காசு பார்க்கும் நெஸ்லே நிறுவனம் ஆபிரிக்க மக்களுக்கு என்ன பெறுமதியை வழங்குகிறது என்ற கேள்வி எழுகிறது. இது எதைக் காட்டுகிறது. இது சாதாரண விடயமல்ல கடந்து போவதற்கு!. காலனியம் இன்னும் ஒழிந்துவிடவில்லை. அது நவ காலனியம் என்ற நிலையையும் தாண்டி நுண்களங்களை வந்தடைந்திருக்கிறது என்பதற்கு நெஸ்லேயின் இந்த நடவடிக்கை இன்னொரு சாட்சியாக உள்ளது. காலனிய மனக் கட்டமைப்பு என்பது ஒரு நோய். அது வெள்ளை மேலாதிக்க நிலைக்கு வெளியே உலக அதிகாரம் இடம் மாறுவதையோ, தொழில்நுட்ப வளர்ச்சியையோகூட சகித்துக்கொள்ள தயாராக இல்லை என்பது தற்போது நிகழும் பொருளாதாரப் போரின் அடித்தளமாக உள்ளது.

என்றானபோது ஆபிரிக்கா மீது அப்படியென்ன கரிசனை தோன்றிவிடப் போகிறது. பணக்கார நாடுகளின் நிதியில் தனது உலக பொதுமைக்கான தனித்துவத்தை இழந்து நிற்கும் உலக சுகாதார நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பூனைக் காலில் நடக்கிறது. சென்ற ஆண்டு ஏப்ரலில் இருந்து இப் பிரச்சினை அதன் மேசையில் உறங்குகிறது. ஆபிரிக்கா மட்டுமல்ல, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகள் பலவும் இந்தப் பிரச்சினைக்குப் பலியாகியிருக்கின்றன

“நாங்கள் இரட்டை நிலைப்பாட்டுடன் நடக்கவில்லை. எல்லா நாடுகளுக்குமான எமது அணுகுமுறை ஒரே சீரானது. எல்லா குழந்தைகளையும், அவர்கள் எங்கிருந்தாலும், ஒன்றாகவே நடத்துகிறோம்” எனக் கூறி தம்மீதான குற்றச் சாட்டை நெஸ்லே மறுத்திருக்கிறது. இதை ஆய்வுசெய்து கண்டறிவதிலும் நடவடிக்கை எடுப்பதிலும் உலக சுகாதார நிறுவனத்துக்கு பொறுப்பில்லையா அல்லது இன்னும் காலம் தேவைப் படுகிறதா தெரியவில்லை.

  • ravindran.pa
  • 19112025
  • Thanks for info & images: Public Eye

Public Eye 1968 இல் சுவிஸ் தலைநகர் Bern இல் தொடங்கப்பட்டு, 29000 அங்கத்தவர்களால் ஆதரவளிக்கப்படும், அரசு சாரா அமைப்பு. ஏழை நாடுகளின் மீதான சுவிஸ் இனதும் சுவிஸ் கம்பனிகளினதும் அணுகுமுறைகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கறாரானதும் விமர்சன ரீதியிலானதுமான ஆய்வுகளை முன்வைக்கும் பணியை கடந்த 50 வருடங்களாக செய்து வருகிறது.

*

Leave a comment