நிலவீடுகள் (Earth Hause)

சுவிஸ் கட்டடக் கலைஞனான பீற்றர் வெற்ஷ் (Peter Vetsch) இன் படைப்பாக்கம் இது. “நிலவீடு” என அழைக்கப்படும் இந்த கட்டடத் தொகுதியை அவர் டியற்றிக்கோன் (சூரிச்) இல் அமைத்து இந்த ஆண்டுடன் 30 வருடங்களாகியிருக்கிறது. அதைக் கொண்டாடும் விதத்தில் நிலம் பூத்த அந்தக் கட்டடக்கலையின் நினைவாக திரும்பவும் அவை பேசப்படுகிற பொருளாக செய்திகளில் வருகிறது.

இவ்வாறான 70 க்கு மேற்பட்ட நிலவீடுகளை அவர் சுவிஸ் இல் மட்டுமல்ல, அமெரிக்கா, ஸ்பெயின் நாடுகளிலும் நிர்மாணித்திருக்கிறார். அதுமட்டுமல்ல கிரைமியா உக்ரைனிடம் இருந்தபோது தொடங்கிய இவ்வகை நிலவீட்டுத் திட்டம் 2015 கிரைமியா யுத்தத்தின் பின்னர் கைவிடப்பட்டது.

பீற்றர் வெற்ஷ் அவர்கள் 1970 இல் ஜேர்மன் (Düseldorf) பல்கலைக்கழகத்தில் தனது கட்டடக் கலை பட்டப்படிப்பை மேற்கொண்டவர். 1978 இல் தனது சொந்த கட்டடக்கலை நிறுவனத்தை சூரிச் இல் நிறுவினார். சுற்றுச்சூழல் குறித்த பிரக்ஞையில் பிரபல்யமான 20ம் நூற்றாண்டின் கட்டடக்கலை நிபுணர்களைப் போலவே, இவரும் தனது படைப்பாக்கத்தை நிகழ்த்த முனைப்புக் கொண்டார். நிலவீடு எனப்படுகிற இந்த அவரது படைப்பு அவற்றின் தாக்கத்திலிருந்து எழுந்தது. 20ம் நூற்றாண்டின் பேசப்பட்ட கட்டடக்கலை நிபுணரான பிறாங் ளோயிட் றைட் (அமெரிக்கா) இன் தாக்கம் அவரிடம் இருந்தது.

1908 இல் பிறாங் ளோயிட் ரைட் “organic architecture” என்ற கட்டடக்கலைசார் தத்துவத்தை அறிமுகமாக்கினார். சூழவுள்ள இயற்கையோடு பொருந்திப் போகிற விதத்தில் அந்தந்த நிலவமைப்புக்கும் சூழலுக்கும் மட்டுமல்ல, அந்த இயற்கைப் பொருட்கள் தருகின்ற புலனுணர்வுத்தன்மைக்கும் (தொடுகை அல்லது பார்வை) ஏற்றவாறு அவரது படைப்புகள் இருந்தன. அதனால் அவை நேர்கோடுகளாலான வடிவமைப்பை -தேவையான இடங்களில்- தகர்த்து கட்டற்ற வடிவமைப்புகளாக பரிணமித்தன. இன்றுவரை கட்டடக்கலையில் தாக்கம் செலுத்துபவர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். “குன்றின்மேல் வீடு குந்தி இருக்கக்கூடாது. குன்றினதாக அது இருக்க வேண்டும். அதற்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும். குன்றும் வீடும் ஒன்றுக்கு மற்றது மகிழ்ச்சியளிப்பதாக இணைந்து வாழவேண்டும்” என்றார்.

பீற்றர் வெற்ஷ் இன் இந்த நில வீடுகள் இதே organic architecture வடிவில் உருவாகியிருக்கிறது.

“நிலத்தின் மேல் கட்டப்படும் வழமையான வீடுகளைப் போன்றதல்ல நிலவீடு. நிலத்தன் மேல் வாழ்தலுமல்ல. நிலத்துக்குக் கீழ் வாழ்தலுமல்ல. அது நிலத்தோடு வாழ்தல்” என ஒரு கவிதை வரிபோல் சொல்லிவிடுகிறார் அவர்.

“மலைக் குன்றுகளுக்கும், அதன் அலைபோன்ற ஏற்ற இறக்கமான தரைஅலை மடிப்புகளுக்கும் இடையில் தாய் மடியில் ஒரு குழந்தையைப் போல் உள்ளமைந்து இருக்கும்” என்கிறார் அவர். உண்மைதான் அவரது இந்த சூரிச் நிலவீடுகளும் அதன் சுற்றுச் சூழலோடு இயைந்து தாய்மண்ணின் குழந்தைகள்போல் காட்சியளிக்கின்றன.

வடிவமைப்பில் மட்டுமல்ல, நிலத்தின் தன்மையையும் அவர் தரைவீட்டுக்கு ஆனதாக ஆக்கிவிடுகிறார். நிலத்தின் மேல் உள்ள வெப்பநிலையும் நிலத்தின் கீழுள்ள வெப்பநிலையும் வெவ்வேறானவையாக இருப்பதால் இந்த வீடு வெயில்காலத்திலும் பனிக் காலத்திலும் அதற்குள் வாழும் மனிதர்களை இதமாக போர்த்தி வைத்திருக்கிறது. வெயில் காலத்தில் வெளியில் வெக்கையாகவும் நிலத்தின் கீழ் குளிராகவும் இருக்கும். பனிக்காலத்தில் வெளியில் குளிரும் நிலத்தின்கீழ் சூடுமாக இருக்கும்.

“வெயில்காலத்தில் அது ஒருபோதுமே 25 பாகைக்கு மேல் செல்வதில்லை” என்கிறார், அங்கு ஆரம்பத்திலிருந்தே வாழும் ஒருவர். தனது விருந்தினர்கள் போக மனமின்றி விடைபெற்றுச் செல்வர் என வேறு சொல்லிப் புன்னகைக்கிறார்.

வசதிப்படின் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை மேலிடுகிறது.

காணொளி : http://www.erdhaus.ch

  • ravindran.pa
  • 10022025
  • Thanks: erdhaus. ch, archup. net, Limmettalerzeitung, wikipedia

Leave a comment