கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்க ஜனநாயகத்தின் இழிநிலைகளில் ஒன்று இப்போ காஸா குறித்து ட்றம்ப் முன்மொழிகிற திட்டம். ஒருவரது பூர்வீக நாட்டை போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் திட்டமிட்ட குடியேற்றத்தாலும் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற காலனிய அதிகார மமதைதான் அது. அது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா என்ற நாடே அப்படித்தான் உருவாகியது. கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என வேறும் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. காஸாவின் இடத்தில் அதன் பூர்வீக மக்களை துடைத்தழித்து இஸ்ரேலை அகலக் கால்பதிக்க வைப்பதும் அதே காலனிய முறைமைச் சிந்தனைதான். இன்னும் ஒருபடி போய் காஸாவின் கடல்சார் பகுதியை அண்டி அதை உல்லாசப்பிரயாண நிலமாக (மத்திய கிழக்கின் rivera வாக) ட்றம்பின் றியல் எஸ்ரேற் மருமகன் (யறெட் குஸ்னர்) இன் திட்டத்துக்கான நிலமாக மாற்ற முயற்சிக்கிற இழிநிலை அது. இது பல்கட்சி ஆட்சிமுறை ஜனநாயகத்தை செழிக்கப் பண்ணும் என்ற விதியை கேலிசெய்வதாக அமைகிறது. காஸா மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலமாம். வாழத் தகுதியில்லாத நிலமாம். துயர நிலமாம். அழிவுகளின் கூடாரமாம். அமெரிக்கக் குண்டுகளினால் இடிபாடாக்கப்பட்ட நிலத்தைப் பார்த்து அமெரிக்க சனாதிபதி இப்படியெல்லாம் சொல்கிறார். குண்டுகள் தானாக அமெரிக்க களஞ்சியத்திலிருந்து பறந்து வந்துதானே மக்களைக் கொன்றது!

இவளவு இஸ்ரேலியக் குண்டுவீச்சுக்குள்ளும் மனிதவதைகளினுள்ளும் உணவு, நீர், மின்சாரம் என எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி வதைத்தும், கூட்டமாக ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு காஸாவுக்குள் துரத்தி அலையவிட்டும்கூட இன்னமும் அந்த மண்ணில் மக்கள் வாழ்கிறார்கள். வாழ்வை மீண்டும் கட்டியமைக்க அவர்கள் கட்டியமைக்கும் நம்பிக்கையோடு இடப்பெயர்வுகளிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எமது நிலம். இங்கிருந்து போக மாட்டோம் என்கிறார்கள். அது வாழத் தகுந்த நிலமா இல்லையா என்பதை அவர்கள் இரத்த சாட்சியாக உலகத்தின் முன் நிரூபித்திருக்கிறார்கள். அதை அமெரிக்காவோ இஸ்ரேலோ தீர்மானிப்பது ஜனநாயகமா என்ன. ஐநா உட்பட உலகின் பெரும்பான்மை நாடுகளும் சமூகப் புத்திஜீவிகளும் இந்த பழைய காலனிய ஒழுங்கின் மீள்வரவை எதிர்த்து கருத்துச் சொல்லியபடி இருக்கிறார்கள். ஜேர்டானும் எகிப்தும் இந்த 2 மில்லியன் பலஸ்தீன மக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ட்றம் கட்டளையிடுகிறார். அந் நாடுகள் மறுத்திருக்கின்றன. நெத்தன்யாகுவோ சவூதி அரேபியாவிடம் பெரும் தரிசு நிலங்கள் இருப்பதாகவும் அங்கு பலஸ்தீன நாட்டை அமைத்துக் கொள்ளலாம் என இன்னொரு கோமளித்தனத்தை முன்வைக்கிறார். இவ்வாறு ட்றம்ப் இன் அறிவித்தல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி தன்னும் இதற்கு எதிராக மூச்சு விடவில்லை. இது ஏன்?.

பல்கட்சி ஆட்சிமுறை என்பது ஜனநாயகக் கட்டமைப்பில் அவசியமான ஒரு முறைமைதான். அது deep state நிலவுகிற அமெரிக்கா போன்ற நாடுகளில் எதையும் பிடுங்காது. ஏனெனில் அந்த deep state தான் வெளிநாட்டுக் கொள்கையை மாறாமல் வைத்திருக்கவோ அதன்வழியில் இற்றைப்படுத்தவோ செய்கிறது. அரசாங்கங்கள் அல்ல. அது பலம்படைத்த உளவு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள், சியோனிச லொபிகள், இலுமினாட்டிகள், இனமேலாதிக்க புத்திசீவிகள் போன்றவர்களால் state என்பது deep state வடிவம் எடுக்கிறது. அமெரிக்கா உலகம் பூராக நடத்திய போர்கள் இரு கட்சிகளாலும் நடத்தப்பட்டன. பல கட்சி ஆட்சிமுறையின் பன்மைத்துவம் என்பதை அந்த அரசு வடிவம் பொய்மையாக்கிவிடுகிறது. சுவிஸ் போன்ற நாடுகளில் பல்கட்சி ஆட்சிமுறை மேன்மைப்பட்ட நிலையில் இருப்பதற்குக் காரணம் இந்த deep state அற்ற தன்மைதான். 7 பேர் கொண்ட உயர் சபைதான் சுவிஸை ஆள்கிறது. அதுவும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு தலைவராக தேர்வு அடிப்படையில் வருகிறார்கள். மக்களுக்கான நேரடி ஜனநாயகம் கொண்டதாகவும் இருக்கிறது. சில விமர்சனங்கள் இருக்கிறபோதும் அந்த முறைமை பயனளிக்கும் வகையிலேயே செயற்படுகிறது.

இந்த deep state முறைமைதான் இருபெரும் வல்லரசாக இருந்த அமெரிக்கா சோவியத் யூனியனுக்கு இடையில் சமாதானம் என்பதை நிலைநாட்டிய கெனடியைக் கொன்றொழித்தது. 1962 இல் சோவியத் யூனியனின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் துருக்கியில் அமெரிக்கா நிறுவிய (அணுவாயுதம் உட்பட்ட) தளத்துக்கு எதிர்வினையாக சோவியத் யூனியன் கியூபாவில் அணுவாயுத்தை நிறுவியது. அப்போது அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க சிஐஏ கெனடியை வற்புறுத்தியோது அதை அவர் மறுத்தார். சமாதான முயற்சியை முன்வைத்தார். அவரும் குருச்சேவ் உம் பேசித் தீர்த்துக் கொண்டார்கள். துருக்கியிலிருந்தும் கியூபாவிலிருந்தும் அணுவாயுதங்கள் திரும்பப் பெறப்பட்டன. அது அமெரிக்க deep state இனை மீறிய செயலாக அமைந்ததால் அவர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

உலகம் முழுவதுமான ஆட்சிக் கவிழ்ப்புகள், போர்கள், தலைவர்களை கொலை செய்தல் என இயங்குகிற deep state இன் முக்கிய தூண்கள் சிஐஏ உம் எப்.பி.ஐ உம் ஆகும். இப்பே ட்றம்பின் வருகைக்குப் பின் ஒரு சுவாரசியமான முரண் எழுந்துள்ளது. ட்றம் deep state க்கு எதிரானவராக இருக்கிறார். state என்ற வடிவத்தை அவர் பேண விரும்புகிறார். அதேநேரம் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை முழு அளவில் தனது கையில் மட்டுமே வைத்திருக்க விரும்புகிறார். சிஐஏ இலிருந்து பலரை வேலைநீக்கம் செய்திருக்கிறார். அந்த கட்டமைப்பினுள் ஊழல் நிலவுவதாகவும் பெருமளவு நிதியை அது விழுங்குகிறது என்றும் வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார். தனது முதலாவது ஆட்சிக் காலத்தின்போது தன்னை சுயாதீனமாக இயங்க விடாமல் செய்தது என்கிறார். இருந்தபோதும் அதையும் மீறி இந்த deep state வடிவத்துக்கு எதிராக அவரது முதல் ஆட்சிக்காலத்திலும் இருந்திருக்கிறார். அதனால் அவர் போர் எதையும் செய்யவில்லை. புட்டினோடு உறவாக இருந்தார். வடகொரியாவுக்கு விஜயம் செய்தார்.

இம்முறை ட்றம் கையில் எடுத்திருப்பது பொருளாதாரப் போரைத்தான். சீனாவினதும் ப்ரிக்ஸ் அமைப்பினதும் வளர்ச்சி அமெரிக்க பொருளாதாரத்தை சாய்த்துவிடலாம் என்ற அச்சம் அது. மீண்டும் அமெரிக்காவை மேல்நிலையில் நிறுத்துவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். இந்தப் பொருளாதாரப் போர் அரசியல் போர்களில்தான் முடியும் என பொருளாதார நிபுணரும் அரசியல் விஞ்ஞானியுமான ஜெப்ரி சக்ஸ் கூறுகிறார். சீனாவின் பொருளாதாரத்தை வீழ்த்த ட்றம்ப் தாய்வானை இன்னொரு உக்ரைனாக மாற்றும் நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது.

deep state இனை மறுத்து, அதற்கு பதிலீடாக தனிப்பெரும் தலைவராக தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து ட்றம்ப் செயற்படுவதும்கூட ஒன்றும் ஜனநாயகப் பெறுமதியைத் தரப்போவதில்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான். பொருளாதாரப் போர் அரசியல் போராக பரிணமிக்கும நிலைக்கு சாத்தியம் இருப்பதால், deep state முறைமைக்கும் ட்றம்ப் க்குமுள்ள முரண்பாடுகள் புஸ்வாணமாகியும் போகலாம். கனடா, மெக்சிக்கோ, சீனா என தொடங்கும் மோசமான வரிவிதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தையும் வந்தடையலாம் என ஏற்கனவே தயார்ப்படுத்தல்கள் ஆரம்பமாகிவிட்டன.

டென்மார்க்கின் கிர்ின்லாண்ட் இனை வாங்க அல்லது அழுத்தம் கொடுத்து தனதாக்க ட்றம் புற்பட்டிருக்கிறார். பனாமாக் கால்வாயை மீள எடுக்கப் போகிறோம் என்கிறார். யமேய்க்கா BRICS இல் சேர தடைவிதிக்கிறார். தென்னாபிரிக்காவில் காணிச் சீர்திருத்த சட்டத்தை பயங்கரமானது என வர்ணித்து அந்த அரசுக்கு எச்சரிக்கை விடுகிறார். ட்றம்பின் வலதுகையும் தென்னாபிரிக்காவில் பிறந்தவருமான எலான் மஸ்க் இந்தச் சட்டத்தை இனவெறிச்சட்டம் என கேலிக்குரிய வியாக்கியானம் கொடுத்திருக்கிறார். 7.7 வீத வெள்ளையர்கள் தென் ஆபிரிக்காவின் 78 வீதமான விவசாய நிலங்களை சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர். நெல்சன் மண்டேலா சாதித்த அரசியல் விடுதலை காலத்திலிருந்து இன்றுவரை காணி மீள் பகிர்தல் என்பதை எந்த தென்னாபிரிக்க அரசும் சாத்தியமாக்க முடியாமல் திண்டாடுகிறது. அந்தளவுக்கு வெள்ளையின அதிகாரம் தென்னாபிரிக்க அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில் இப்போ தென்னாபிரிக்க அரசு கொண்டுவந்திருக்கிற காணிச் சீர்திருத்தச் சட்டத்தை இனவெறிச் சட்டம் என்று மஸ்க் சொல்வதையெல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

  • ravindra.pa
  • 07022025

Leave a comment