
“குற்றமும் தண்டனையும்” என்ற இந் நாவல் தஸ்தவெஸ்கி அவர்களால் எழுதப்பட்ட பெரும் நாவல். 1866 இல் ரஸ்ய மாதப் பத்திரிகை ஒன்றில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இத் தொடர் பின்னர் நாவலாக தொகுக்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
கதை சொல்லல் என்பதையும் தாண்டி தனிமனிதர்களின் மனவமைப்பு, மனச்சாட்சி, ஒழுங்கு, அறம், அன்பு என்பவற்றை தாங்கி நிற்கும் அக வாழ்வின் மீதான விசாரணைகளையும் சட்டம், நீதி, அதிகாரம் என்ற கட்டமைப்பு மனித வாழ்வோடு பொருதுதல் குறித்தான விசாரணைகளையும் தாங்கிய நாவல் இது. மனித உளவியலின் இடுக்குகளை ஆராயும் வலு கொண்டதால் இந் நாவல் 150 வருடங்களுக்கும் மேலாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. காலத்தையும் இடத்தையும் தாண்டி ஒவ்வொரு மனிதரோடும் பேசும் ஆற்றலின் அதன் இரகசியம் இங்குதானுள்ளது. “எதையாவது எப்போதும் நான் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரே உளவியலாளர் தஸ்தவேஸ்கிதான்” என நீட்ஷே எழுதினார்.
இந்த நாவலின் நாயகன் ரஸ்கொல்னிகோவ் (றோடியன்) கிராமப்புறத்தில் ஓர் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து சென் பீற்றர்ஸ்பேர்க் என்ற பெரு நகரத்துக்கு பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொள்ள வரும் 24 வயது இளைஞன். எதையும் ஆழமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்ட அவனின் விளிம்புநிலை வாழ்நிலை, பொந்து போன்ற அறை, அதற்குள்ளான தனிமை, தனது படிப்புச் செலவுக்காக ஏழ்மை தின்ற தாயில் தங்கியிருக்க வேண்டிய நிலை, ஆளுமையானவளாகவும் அதேநேரம் அதி அன்பைச் செலுத்துபவளுமான தங்கை, தனது படிப்புக்காக தாயினதும் தங்கையினதும் அர்ப்பணிப்பும் உழைப்பும், அது அவர்களின் வாழ்நிலையை மோசமாக பாதிக்கிற நிலைமை என பல சிக்கல்களினுள் அல்லாடி, அவன் தனது படிப்பை இடைநிறுத்திவிடுகிறான். இந்த சமூகத்தை பேன் போல பிடித்து இரத்தத்தையும் உழைப்பையும் உறிஞ்சும் மனிதர்கள், அவர்களின் மீதான அறச் சீற்றம், அந்த மனிதர்களுக்கு எதிர்நிலையில் அவனை நிறுத்தியிருக்கும் அறம்சார் சிந்தனைகள் கருத்துகள் என அவன் ஒரு வாழ்நிலைக்குள் தள்ளப்பட்டுவிடுகிறான்.
தன்னிடமிருந்த சிறு பொருட்களை பணத்தேவைக்காக அடகு வைக்கிறான். தனது தந்தையின் நினைவாக வைத்திருந்த மணிக்கூட்டையும்தான். அதை அறாவிலைக்கு அடகாகப் பெற்று இந்த சமூகத்தின் பேன் போல வாழும் கிழவி அல்யோனா இவானோவ்னா. அவள் தனியாக வாழ்பவள். அவளை அவன் கொன்றுவிடுகிறான். அந்த வேளையில் எதிர்பாராமல் அங்கு வந்த கிழவியின் சகோதரியையும் தாமதிக்காமலே கொன்றுவிடுகிறான். இந்தக் கொலையை தடயங்கள் இல்லாமல் புத்திசாலித்தனமாக அவன் செய்தாலும், அச் சம்பவத்தின் தொடர்ச்சி குட்டிப் பிசாசாய் அவனது மூளைக்குள் புகுந்து வாழத் தொடங்கிவிடுகிறது. மற்றவர் துன்பப்படும்போது தன்னிடமுள்ள கொஞ்சப் பணத்தைக்கூட தானமாய் வழங்கிவிட்டு பட்டினி கிடக்கும் அறம் கொண்ட ஒரு மனிதனை, எதையுமே ஆழ்ந்து சிந்திக்கும் பழக்கமுள்ள ஒருவனை அந்தப் பிசாசு ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிடுகிறது.
இது ஒரு கொலை பற்றிய சாகசக் கதையல்ல. ஒரு மனிதரை இந்த குற்றச் செயலுக்குத் தள்ளுகிற நிலைமைகள் பற்றியதாக எடுத்துக் கொண்டாலும், அதுகூட நிறைவான விளக்கமல்ல. அவன் இந்தப் பேனை அழித்தது அப்படியொன்றும் குற்றமல்ல. அவள் அழிக்கப்பட வேண்டியவள் என்ற மனவோட்டம் அமைதியாகப் பாய்ந்துகொண்டும் இருந்தது. ஒருவகையில் அவளை அழித்தது சமூகத்துக்கு தான் நல்லது செய்ததாக எண்ண வைக்கிறது. தான் குற்றம் செய்தவனாக தன்னை எண்ணவில்லை. இந்தக் காரண காரியம் அவனை குழப்பமற்ற மனநிலையில் வைத்திருந்தது என்றுமில்லை.
இந்த நாவலை ஓர் அணுச் சிமிளுக்குள் அடைத்தால், “குற்றம் என்பது என்ன” என்ற கேள்வியை மையமாகக் கொண்ட வெடிகுண்டு உருவாகும். குற்றம் என்பது என்ன?. தவறு செய்யத் தூண்டுபவர் செய்வது குற்றமல்ல. தூண்டப்படுபவர் செய்வது குற்றமாகிறது. பெரும் சுரண்டல் முறையில் பணக்காரராகுபவர் செய்வது குற்றம் இல்லை. ஆனால் சுரண்டப்படுபவர் செய்யும் சிறு களவு குற்றம் என்றாகிறது. காலனி பிடித்து பெருங்களவாடியவர், போர்கள் செய்து வகைதொகையின்றி கொன்றொழிப்பவர் செய்வது குற்றம் இல்லை, தண்டனை இல்லை. சாமான்யர் செய்யும் சிறு தவறு குற்றம் என்றாகிறது, தண்டனை கிடைக்கிறது. இந்த சட்டம் நீதி என்பது யாருக்கானது. அது வரைவுசெய்யும் குற்றம் என்பதன் பொருள் என்ன.
தாம் வரையறுத்து அதிகாரம் செலுத்தும் சட்டதிட்டங்களுக்கு எதிராக மட்டுமல்ல, தான் கொண்ட கோட்பாடுகளுக்காக, தாம் சரியென நம்பும் கருத்துகளுக்காக மக்கள் பெயரில் செய்யப்பட்ட கொலைகளெல்லாம் குற்றமற்றதாகுமா. எந்தத் தரப்பின் நலனில் நின்று இந்த குற்றம் என்பது வரையறுக்கப்படுகிறது. ஆக அதிகாரம் என்பது குற்றம் எது என தீர்மானிக்கிறது. அதிகாரத்திற்கு அடங்கிப் போகிற, அதை சிரமேல் ஏற்றுக் கொள்கிற, அதை மீறுவதை குற்றமாக உணருகிற அல்லது அச்சம் கொள்கிற மனிதர்கள்தான் உலகத்தின் பெருந்தொகையினர். இதற்கு எதிராக சிந்திப்பவர்கள் இந்த எல்லையை கடக்க பெரும் விலையைக் கொடுக்க நேர்கிறது. அவர்கள் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள். பொதுமனித உளவியலை தாண்டுவதற்கான செயல் என்பது அசாதாரண மீறலாகிறபோது அவர்களின் நடவடிக்கைகளும்கூட திடீர் முடிவுகளாலோ குழப்பங்களாலோ வடிவமைக்கப்படும் சாத்தியமும் தோன்றுகிறது. அது தொடர் விளைவுகளை ஏற்படுத்தி அவற்றுடன் தொடர் போராட்டத்தை செய்ய வைக்கிறது. அந்த விளைவுகள் நன்மையாவோ தீமையாகவோ அமையலாம்.
இந்த நாவலை புரிந்துகொள்ள இந்த அறிதல் அவசியம் என எனக்குப் படுகிறது. ஆனால் அதற்கு வெளியிலான அணுகுமுறைகளும் வாசிப்புகளும் இருக்கவே செய்யும். இங்கு ரஸ்கொல்னிகோவ் (றோடியன்) ஒரு புரட்சியாளன் என்றெல்லாம் அட்டவணைப்படுத்தக் கூடாது. புதிய வடிவில் அதிகாரத்தை தோற்றுவிக்கும் புரட்சியும்கூட அவனது கேள்விகளுக்கு விடையளிக்கும் ஆற்றல் அற்றவை என்பதை நாவலை ஆழ்ந்து வாசிக்கிறபோது உணர முடியும். குற்றம் குறித்த அவனது கேள்விகள் உட்பட, அவனது பகுத்தறிவு சிந்தனைகள் அவனை ஆட்கொள்வதால் அவன் தான் குற்றம் செய்தவனாக உணரத் தயாரில்லாமல் வாழ்கிறான். இந் நாவல் எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளில் அல்லது அந் நிகழ்வுகளை இயல்பானதாக ஏற்று சமாதானமடையும் மனநிலையில், அல்லது இயலாமையில் அமைதியடையும் மனப் போக்கினை தொந்தரவு செய்கிறது. இதை விளங்கிக் கொள்ள எந்தக் கோட்பாடோ கோதாரியோ தேவையில்லை. எமது வாழ்வனுபவம் போதுமானது. அதனால்தான் இந் நாவலின் உயிர்வாழ்தல் நூற்றாண்டு கடந்தும் நிலைக்கிறது. இதன் வாசக அனுபவம் என்பது மேல்தளத்திலிருந்து அதன் அடியாழம் வரை பல விதமான அடுக்குகளிலும் பலவிதமான வாசக அனுபவத்தைத் தரக் கூடியது. வெவ்வேறு கோணங்களில் சிந்திக்கத் வைக்கிறது. அதுவே திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டும் உள் இரகசியமாகவும் இருக்கிறது.
இந்த நாவலில் வரும் மர்மலாதோவ் இன் குடும்பம், அதன் ஒரு அங்கத்தினரான சோனியா என்பவர்கள் விளிம்புநிலை மாந்தர்கள். அதனால் அவனது உறவு அவர்களுடன் தொடங்குகிற விதமும், தொடர்கிற விதமும் அந்தவகை மாந்தர்களுக்கிடையிலான ஆத்மார்த்தங்களை தொட்டுரசியபடி இருக்கிறது. அதை நாவல் முழுவதும் தரிசித்துக் கொண்டே இருக்க நேர்கிறது. அவனது தங்கையும் சோனியாவும் விளிம்புநிலை வாழ்வு புடம்போட்டெடுத்த இரு பெரும் பெண் ஆளுமைகளாக துலங்குகின்றனர். மர்மலாதேவ் குடும்பத்தின் வறுமைநிலை சோனியாவை பாலியல் தொழிலாளியாக நிர்ப்பந்தித்துவிடுகிறது. அவள் மிக மத நம்பிக்கை கொண்டவள். அதனடிப்படையிலான அறத்தைக் கொண்டிருப்பவள்.
இருந்தாலும், அவள் கதை நாயகனை (ரஸ்கொல்னிகோவ்), அவனது நிலைமையை நன்றாக புரிந்து கொள்கிறாள். அவளது அறம் அவனை ஒதுக்கித் தள்ளவில்லை. மாறாக அவனோடு இறுக்கமாக பிணைத்துவிடுகிறது. தனது கொலை குறித்த இரகசியத்தை றோடியான் இவளோடு மட்டுமே பகிர்ந்து கொள்கிறான். தான் செய்தது குற்றம் இல்லை என்றே அவன் தொடர்ந்தும் நினைக்கிறான். ஆனால் அவனுக்கு இந்தக் கொலையின் தொடர் விளைவுகளானது மனவெளியுள் அகத் தண்டனைகளாக தொடர்கின்றன. அவனது தூக்கத்தைக் கெடுக்கிறது. தனிமையை நேசித்து சுருண்டு படுத்துக் கிடக்கிறான். சில சந்தர்ப்பங்களில் சனக்கூட்டம் மோதுகிற வீதிகளில் இலக்கற்று நடந்தும் திரிகிறான்.
குற்றம் என்பதை அவன் உணராவிட்டாலும் அல்லது மறுத்தாலும் அவனுக்குள் இயங்கும் ஏதோவொன்று அவனது உளத்தை காயப்படுத்தியிருக்க வேண்டும். அது தாயுடனும் நண்பன் ரஸ்மிகின் உடனும் இயல்பாகப் பேச முடியாத நிலையை பல சந்தர்ப்பங்களில் தோற்றுவிக்கிறது. பிறகு தான் அப்படி நடந்துகொள்ள நேர்வது குறித்து கவலைப்படவும் செய்கிறான். ஏதோ புதிர்களை அமுக்கிவைத்திருப்பது போன்று துலங்க மறுக்கும் தனது மகனின் முகத்தை நினைத்து தாய் வேதனையோடு இருக்கிறாள். தான் அவனை சந்திக்க நினைக்கும் போதெல்லாம் அவன் அதை இடையூறாக எண்ணிவிடுவானோ என அச்சப்படுமளவுக்கு அவள் இருந்தாள். அன்பு குழைந்த சில வார்த்தைகளையாவது அவன் என்னுடன் பேச மாட்டானா என அந்தத் தாய் ஏங்கினாள்.
அவர்கள் எவருக்குமே அவன் தனது கொலை இரகசியத்தை சொன்னானில்லை. சோனியாவுக்கு மட்டுமே சொல்கிறான். தான் செய்தது குற்றம் இல்லை என சோனியாவிடம் வாதாடுகிறான். சோனியா அதை ஏற்கவில்லை. காவல்துறையிடம் சரணடையக் கோருகிறாள். அவளைப் பொறுத்தவரை, றோடியன் செய்தது சட்டப்படி மட்டும் குற்றமில்லை; அவளது மத நம்பிக்கையின் படியும் குற்றம்தான். சோனியாவின் வேண்டுகோள்படி… காவல்துறையிடம் சரணடையப் போகும் வழியில் தேவாலயத்தின் முன்னாலுள்ள நாற்சந்தியில் அவன் தரையை முத்தமிட்டு வணங்கி “நான் ஒரு கொலைகாரன்” என கதறி அழ வேண்டும். அவன் அந்த நாற்சந்திக்குப் போனான். பூமியை முத்தமிட்டான். ஆனால் “நான் ஒரு கொலைகாரன்” என அவன் கதறவில்லை. தான் குற்றமற்றவன் என்ற சிந்தனையிலிருந்து விடுபட மறுத்தான். குழப்பமான மனநிலையும் சோனியாவின் வேண்டுகோளும் அவனை வழிநடத்த, அவன் காவல்துறையிடம் சரணடையப் போய்க்கொண்டிருக்கிறான்.
தான் செய்தது குற்றம் என்பதை ஏற்க மறுக்கும் அவன் “ஏன் நான் சரணடைய வேண்டும்” என்ற கேள்விக்கு விடையின்றி காவல்துறைக் கட்டடத்தின் மாடிப் படியில் தயக்கத்துடன் ஏறி போகிறான். திரும்பி சில படிகள் இறங்கி வருகிறான். திரும்ப ஏறுகிறான். பின் காவல்துறை அலுவலகத்துள் போய்விடுகிறான். அங்கு விசாரணை அதிகாரி போர்பிரி பெத்ரோவிச் நிற்கிறார். அவரிடம் தான் வேறு அலுவலாக வந்ததாக சொல்கிறான். தனக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி சமெடோவ் இனை சந்திக்க வந்ததாகச் சொல்கிறான். அவர் அங்கு இல்லை என பதில் வரவும், கீழிறங்கி வருகிறான். பயத்தினால் அல்ல. இப்போதும் தான் செய்தது குற்றம் என அவன் ஏற்கத் தயாராக இல்லை. இந்த சட்டம் நீதி எதையுமே அவன் தனது புரிதலில் அல்லது கொள்கையில் ஏற்றுக் கொண்டவனல்ல.
சோனியா இவனை நன்றாகப் புரிந்துகொண்டவள். கீழே அவள் காத்திருக்கிறாள். சிலவேளை இவன் திரும்பி வரலாம் என அவள் ஊகித்திருந்திருக்கலாம். றோடியனின் அலைவுறும் மனதுக்கு சோனியா மீண்டும் அதே வழியையே காட்டிவிடுகிறாள். அவன் போய் சரணடையப் போகிறானா? நானே அந்தக் கொலையாளி என அவன் சொல்லப் போகிறானா? என்பதை நீங்கள் நாவலில் வாசித்தறிய விட்டுவிடுகிறேன்.
*
சோனியா தன்னால் அடையும் துன்பமான மனநிலை குறித்து அவன் கரிசனை கொள்கிறான். அவளுக்காக அவளது உணர்வுகள், விருப்பங்கள் இவற்றையெல்லாம் குறைந்தபட்சம் நான் மதிக்கவாவது வேண்டுமல்லவா என்ற உணர்வுநிலைக்குள் அவன் தள்ளப்படுகிறான்.
மனிதவாழ்வில் உணர்வுநிலை மிக இன்றியமையாதது. என்றபோதும் அது மனிதரை வழிநடத்துவதில்லை. மனிதர்கள் மிக சிக்கலான மனக்கட்டமைப்புக் கொண்டவர்கள். தர்க்கங்கள் நிரம்பிய சிந்தனை முறைமைக்குள் அகப்பட்டுச் சுழல்பவர்கள். அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்கள். அதேநேரம் முட்டாள்தனமாகச் செயற்படவும் கூடியவர்கள். நம்பிக்கைகளை உருவாக்கி ஒழுகுபவர்கள். அதேநேரம் பகுத்தறிவோடும் செயற்படுபவர்கள். அறச் சீற்றம் கொள்பவர்கள் அதேநேரம் நிலவும் சூழ்நிலைக்கு சமரசம் செய்து ஓடிக்கொடுப்பவர்கள். இது மந்தைத்தனமாக சமூகத்தோடு சேர்ந்து ஓட மறுக்கும் ஒரு தனி மனிதஜீவிக்குள்ளும் நிகழும் போராட்டம் என்பதுதான் மிக முக்கியமானது.
றோடியனின் அலைச்சலுக்கு ஓய்வுநிலை கிடைத்ததா? சோனியாவின் அன்பிற்கும் அரவணைப்புக்கும் ஆளாகி உணர்வுநிலைக்குள் அமைதியுற்றானா, இல்லையா? என்பதும் நீங்கள் வாசித்தறிய வேண்டியவை. இனி அவனது சிந்தனையை யதார்த்த வாழ்வு வழிநடத்தப் போகிறதா, அல்லது தொடர்ந்து பகுத்தறிவு வழிநடத்தப் போகிறதா அல்லது புதிய வாழ்க்கையை தொடங்குவானா என்பதெல்லாம் தெரியாது. அது என்ன யதார்த்தம், அது என்ன புதிய வாழ்க்கை என்பதையெல்லாம் ஒரு வாசகர் தனது சிந்தனையில் தெளிவாக்கவோ, சுபம் என்று கதையை முடிக்கவோ, நிம்மதியுறவோ நாவல் முழுவதும் விரவியிருக்கும் அலைக்கழிப்பு இலகுவாக விட்டு வைக்காது. அவை இந் நாவலின் தொடராக எழுதப்பட வேண்டிய றோடியன் இன் இன்னொரு கதையாகக்கூட ஆகலாம் என்ற நிலையில் எம்மை விட்டுச் செல்கிறார், தஸ்தவெஸ்கி!
இந்த நாவலில் வரும் வெவ்வேறு பாத்திரங்களும் தனக்குத் தனக்கான தனித்தன்மைகளை கொண்டு இயங்குகிற போதும், அந்தப் பாத்திரங்களின் உளவியல் தொடர்புபட்டவைகளாகவே நகர்ந்து, அங்கங்கு அவர்களது கதைக் களங்களாகக்கூட மாறிவிடுகின்றன. வாசித்து முடித்த பின்னும் றோடியனைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களும் வாசக மூளைக்குள் இயக்கமுறுகின்றன.
தாய் பல்கேரியா, தங்கை துனியா, வழிப் போக்கன் மர்மெலாதோவ், அவனது மனைவி கத்ரீனா, மகள் சோனியா, அடைவுகடைக்காரி அல்யோனா இவானோவ்னா, வேலைக்காரி நற்றாஸ்யா, துனியாவை மணமுடிக்க அலையும் பீற்றர் பெட்ரோவிச் லூசின், துனியாவின் எஜமான் ஸ்விட்ரிகைலோவ், ரோட்யாவின் நண்பன் ரஸ்மிகின், விசாரணை அதிகாரி போர்பிரி பெத்ரோவிச் என்ற பாத்திரங்கள் அவற்றில் முக்கியமானவை. தூக்கலாக, எனது வாசிப்பின் இறுதியில் நண்பன் ரஸ்மிகின் மற்றும், எழுதி முடிக்கப்படாத வாழ்க்கைகளின் சொந்தக்காரிகளான (தங்கை) துனியா, ரோட்யாவை நேசித்த சோன்யா ஆகியோரும் மிகப் பலமான தாக்கத்தை உண்டு பண்ணும் ஆளுமைகளாக தெரிகின்றனர். அவர்கள் மூவரும் -றோடியன் என அழைக்கப்படும்- கதைமாந்தன் ரஸ்கொல்னிகோவ் உடன் சேர்த்து மறக்க முடியாத பாத்திரங்களாக மூளைக்குள் புகுந்துவிடுகின்றனர்.
- ravindran.pa
- 04012025
*
“குற்றமும் தண்டனையும்”
ஆசிரியர்: தஸ்தயெவ்ஸ்கி (1866)
தமிழில்: எம்.சுசீலா (2017)
வெளியீடு: நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள்: 1072

நன்றி ரவி.நாவல் பற்றி மிக ஆழமான ஆராய்ச்சியோடு கூடிய விமர்சனத்தை முன்வைத்திருக்கிறீர்கள். நானும் தஸ்தாயாவேய்கின் நூல்களை ஆர்வமுடன் வாசிப்பேன். அவரின் விவாதங்களை நாவலுக்குள் நுழைந்தாலே மூளைக்குள் ஆட்டிபடைக்கும் வலு கொண்டவை. ,,குற்றமும்,தண்டனயும் ,,நாவலை தொடர்ம்து தேடிக்கொண்டிருந்தேன். பெற முயல்வேன்.மீண்டும் நன்றி ரவி