The ‘Poorest’ President

Jose Mujica

ஒரு நல்ல தலைவர் என்பவர் தனது காலத்தில் நல்லனவற்றை செய்வது மட்டுமல்ல, தனக்குப் பின்னரான காலத்தில் தன்னைவிட சிறந்த மக்களை உருவாக்கி விடவும் வேண்டும்.

அரசியல் என்பது தொழிலல்ல. அது ஒரு வாழ்முறை. போராடவேண்டிய தேவை ஏற்படுகிறபோது, சிலவேளைகளில் புரட்சி என்பது தனது சொந்த பிள்ளையைக்கூட தின்று செரிக்கும்.

ஓர் அரச தலைவர் என்பவர் நாட்டை நிர்வகிக்கும் உயர் நிர்வாக உத்தியோகத்தராக மக்களால் தேர்வுசெய்யப்படுபவர். அவர் ஓர் அரசனல்ல, கடவுளும் அல்ல. அவர் ஒரு பழங்குடி சூனிய வைத்தியருமல்ல. அவர் ஒரு மக்கள் சேவகர். அவர் நாட்டுக்காக செயற்படுவது தியாகமல்ல. கடமை!

உருகுவே என்றால் நமக்கு கால்பந்து விளையாட்டு காட்சியாக விரியும். சுமார் 3.5 மில்லியன் சனத்தொகையைக் கொண்டதும், தென் அமெரிக்காவில் அமைந்துள்ளதுமான நாடு அது. உலகின் இலஞ்ச ஊழல் குறைந்த நாடுகள் தரவரிசையில் 14 வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. ஜனநாயகப் பெறுமதியில் உலகின் 11 வது இடத்தில் இருக்கிறது.

2010 இலிருந்து 2015 வரை உருகுவே நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர் இடதுசாரியான யோஸே முஜிகா (Jose Mujica). உருகுவே அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்ட இயக்கத்தில் செயற்பட்டு, 14 வருடங்கள் சிறைவாழ்வையும் அனுபவித்த ஒரு போராளியான அவர், 2010 இல் அந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்தார். நெல்சன் மண்டேலா போன்றே அவரது அரசியல் வாழ்வும் ஆயுதப் போராட்டத்திலிருந்து, கட்சி அரசியலுக்குள் வந்து பின்னர் நாட்டின் தலைவர் ஆகுமளவுக்கு உயர்ந்து சென்றது.

ஜனநாயகத்தின் காவலர்களாக பணம்படைத்தவர்களை ஜனாதிபதிகளாக உருவாக்கிக் கொள்கிற அமெரிக்காவினாலும் மேற்குலகினாலும் “உலகின் ஏழை ஜனாதிபதி” (The World’s Poorest President) என ஒரு விசித்திரமான அடைமொழியால் விளிக்கப்படவர் முஜிகா. அதற்கு பதிலடி கொடுத்த அவர் நான் ஏழையல்ல, ஒருவகையில் நீங்கள்தான் ஏழை. நான் சிக்கனமானவன். சிக்கனமாக வாழ்வது என்பது ஒரு தத்துவம் என்றார்.

பொருளாதார படுகுழியில் வீழ்த்தப்பட்டவர்கள் பொருளாதார ஏழைகள். அவர்கள் கரிசனைக்கு உரியவர்கள். அதேநேரம் தமது வாழ்வில் மிக அதிக தேவையை உருவாக்கிக் கொள்பவர்கள் அல்லது பெருக்கிக் கொள்பவர்கள் எவராயினும் அவரும் ஏழைதான் என்கிறார். அதை இப்படி விளக்குகிறார்.

“அதிகளவு தேவைகளை உருவாக்கி அதை அடைய ஓடுபவர்கள் ஒருபோதுமே திருப்தி அடைய முடிவதில்லை. நீங்கள் ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்குவதாக மட்டும் நினைக்கிறீர்கள். அது தவறு. இந்தப் பணத்தை உழைக்க நீங்கள் உங்கள் வாழ்காலத்தை விற்கிறீர்கள். இழந்த பணத்தை பெறலாம். ஆனால் நீங்கள் இழந்த வாழ்காலத்தை திரும்பப் பெற முடியாது. வாழ்க்கை மகிழ்ச்சிக்கானது. அதற்கு சமூகத்துடனான உறவும், தனிநபர் உறவுகளும், நட்பும், அன்பும், காதலும் வேண்டும். அதை சாதிக்க நேரம் வேண்டும். தேவையை அதிகரிப்பதும் அதற்காக கடுமையாக உழைப்பதும் உங்களுக்கான நேரத்தை இழக்கச் செய்துவிடுகிறது. நீங்கள் வாழ்க்கையைத் தொலைத்த ஏழை ஆகிவிடுவீர்கள்” என்கிறார்.

தேவைக்கதிகமான பொருட்களை வாஙகுவது மட்டுமல்ல, அதை வீசுவதும்கூட மனித வாழ்வின் மகத்தான நேரத்தை வீசுவதாகிவிடுகிறது. இதன்மூலம் அந்த நேரமானது நுகர்வோரினது உழைப்பினது மட்டுமல்ல அதை உற்பத்தி செய்ய உழைத்தவர்களினது உழைப்பும் ஆகும் என சொல்கிறார். ஒரு சராசரி அமெரிக்கரின் நுகர்வின் அளவை உலக மக்கள் கொண்டிருந்தால் எமக்கு மூன்று பூமிகள் தேவைப்படும் என்றார்.

அவர் நாட்டின் ஜனாதிபதியாகியபின், கொடுக்கப்பட்ட அரச மாளிகையை மறுத்து தலைநகர் மொன்ரவிடியோ (Montovideo) இன் நகர்ப்புறத்திலுள்ள தனது சிறு பண்ணை வீட்டில் மனைவியுடன் தொடர்ந்து வாழ்ந்தார். மிக எளிமையான வாழ்வு அவரது. ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு கொடுக்கப்பட்ட அரச வாகனத்தை மறுத்தார். தனது சொந்த VW Beetle மொடல் சிறிய காரையே தொடர்ந்தும் பயன்படுத்தினார். அந்தக் காரின் பெறுமதி 1800 டொலர் ஆக அப்போது இருந்தது. ஜனாதிபதி என்ற முறையில் அவர் பயன்படுத்த ஒதுக்கப்பட்ட விமானத்தை மக்களுக்கான ஒரு வைத்திய அவசர சிகிச்சைப் பிரிவு கொண்டதாக மாற்றி சேவையில் ஈடுபடுத்தினார்.

அவருடைய மாத சம்பளமான 12’000 டொலரில் 90 வீதத்தை சமூகநலத் திட்டங்களுக்கு நன்கொடையாக மாதாமாதம் வழங்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவி லுஸியா (Lucía Topolansky) ஒரு முன்னாள் கெரில்லா போராளியாக முஜிகாவுடன் இயக்கத்தில் இருந்தவர். அவரும் செனற்றராக தேர்வுசெய்யப்பட்டிருந்ததால் அவரது மாத வருமானத்தில் இருவரும் வாழ்க்கைச் செலவை வரையறுத்து வாழ்ந்துகொண்டனர். அவரதும் அவரது மனைவியினதும் மொத்த சொத்தின் பெறுமதி 215’000 டொலர்கள் மட்டுமே. முஜிகா ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்று சென்றபின் தனக்கான ஓய்வூதியப் பணத்தையும் நிராகரித்தார்.

முஜிகா மெய்ப் பாதுகாப்பாளர்களுடன் திரிவதில்லை. அவர் தனியாகவே கடைதெருக்களுக்குக்கூட போய்வந்தார். ஒருமுறை ஒருவன் நேரடியாகவே வந்து அவரிடம் பிச்சை எடுக்கிறான். அவன் தண்ணியடிப்பதற்குத்தான் பணத்தை வாங்குகிறான் என சொல்லியபடி பணத்தை கொடுத்து “போய் உழை” என கலைத்து விடுவார். அன்றைய காலகட்டத்தில் அவரது புகைப்படமொன்று பரவலாக உலவியது. வைத்தியசாலைக்கு சுகவீனம் காரணமாக சிகிச்சைபெறச் சென்ற அவர் இலக்க வரிசைப்படி வைத்தியரிடம் செல்வதற்காக வெளிநோயாளர் பிரிவு மண்டபத்தின் கதிரையொன்றில் தனது முறைக்காக மக்களோடு காத்திருந்ததை பத்திரிகையாளர் ஒருவர் படம்பிடித்து வெளியிட்டிருந்தார்.

முஜிகா முழுவதுமாக ஒரு மாறுபட்ட ஜனாதிபதியாக வாழ்ந்து காட்டினார். சுற்றுச் சூழல், நுகர்வுக் கலாச்சார மறுப்பு, மனிதாபிமானம் என்பவற்றை வலியுறுத்தியே அவரது உரைகள் பெரும்பாலும் இருக்கும். பொருளாதார அபிவிருத்தியும் முன்னேற்றமும் மனித மகிழ்ச்சியுடன் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பார். சக மனிதர்களுடனான உறவுகளை திருப்திகரமாகப் பேணுவது, பிள்ளைகளை கல்வியில் உயர்த்திவிடுவது, நட்புகளை சம்பாதிப்பது, இந்த உலகத்தில் அன்பை பரவச் செய்வது என்பவற்றை மனித மகிழ்ச்சியின் அத்திவாரமாக சொல்வார்.

அவர் பணத்தை மையப்படுத்தி வாழவில்லை. அது சுதந்திரமாக இருப்பதற்கு முக்கியம் என கருதினார். அத்தியாவசிய தேவைகளோடு மட்டும் வாழ்வதையே தனது வாழ்க்கையின் அழகியலாக கொண்டார். பணத்தைத் தேடி நேர்மையற்ற வழியினை அவர் நாடவில்லை அல்லது கடுமையாக உழைப்பதன் மூலம் வாழ்க்கையை அவர் விற்கத் தயாராகவும் இல்லை. அது குடும்பத்தோடும் நட்புகளோடும் பண்ணை மிருகங்களோடும் பயிர்களோடும் செலவழிக்க அதிக நேரத்தை வழங்கியது. அதை அவர் தனது சுதந்திரமாக வரைவுசெய்து கொண்டார்.

தனது ஆட்சிக்காலத்தில் நாட்டை 98 வீதம் எழுத்தறிவு கொண்ட நாடாக மாற்றினார். நாட்டில் 40 வீதமாக இருந்த வறுமைக்கோட்டை 13 வீதத்துக்கு குறைத்தார். மிக இறுக்கமான கத்தோலிக்க மரபுகொண்ட தென் அமெரிக்க நாட்டில் முதன்முதலாக (2012 இல்) கருக்கலைப்பு உரிமை அங்கீகரிக்கப்பட்டது. கரு உண்டாகி 12 வாரத்துள் கருக்கலைப்புச் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல, 2013 இல் ஒருபால் திருமண உரிமையும் அங்கீகரிக்கப்பட்டது. நாத்திகரான அவரது ஆட்சிக்காலத்தில் இவை நடந்தன.

வேலையில்லா பிரச்சினை (சராசரி 6.5 வீதம் அளவுக்கு) வீழ்ச்சிகண்டது. ஆனால் மற்றைய பல தென் அமெரிக்க நாடுகளைப் போன்றே உருகுவேயிலும் போதைப்பொருள் கடத்தல்களும் பாவனையும் அவசியம் கையாளப்பட வேண்டிய பிரச்சினையாக இருந்தது. சட்ட ரீதியில் பொலிஸாாரின் துணையோடு அதை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. எனவே முஜிகா அதை கையாள 2012 இல் ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொண்டார். அதை அவர் பிரேரித்து 2 வருடங்களின் பின்னே அது பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. marijuana பாவனை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. மருந்தகங்களில் பதிவுசெய்து குறிப்பிட்டளவு பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. வழமைக்கு மாறாக தொடர்ச்சியாகவும் அதிகளவிலும் பாவனை செய்ய முயற்சிப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. உக்கிரமான மற்றைய வகைப் போதைப் பொருள் பாவனையை இதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம் எனவும் அந்த போதைப்பொருள் வியாபாரத்தை இதன்மூலம் பலமிழக்கச் செய்யலாம் எனவும் நம்பினார் முஜிகா. ஆனால் அவரது நோக்கம் வெற்றியடையவேயில்லை. அந்த பரிசோதனை முயற்சி தோல்வியடைந்தது.

அவரது அரசியல் வாழ்வின் தொடக்கம் ஒரு புரட்சிகர கெரில்லா அமைப்போடு இணைந்ததிலிருந்து தொடங்கியது. 60கள், 70 களில் மார்க்சிய கோட்பாட்டின் வழியான சோசலிச சித்தாந்தத்தின் அலையும், தேசிய விடுதலைப் போராட்டங்களின் எழுச்சிகளும், ஆக்கிரமிப்புக்கு எதிரான யுத்தங்களும் மூன்றாம் உலக நாடுகளில் எழுச்சியாய் வீசத் தொடங்கியிருந்தது. சோசலிச சித்தாந்தத்தை முதன்மையில் வைத்து கெரில்லா போராட்டக் குழுக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. கியூப விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய உந்துதலில் உருகுவேயில் ருப்பமாறோ (Tupamaro) கெரில்லா இயக்கம் கரும்புத் தோட்ட தொழிலாளர்களின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக றாவுல் சென்டிக் (Raul Sendic) தலைமையில் ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்தது.


இந்த ருப்பமாறோ அல்லது MSN-T எனப்படுகிற புரட்சிகர இயக்கத்தில் முஜிகா 60 களின் தொடக்கத்தில் இணைந்தார். இந்த அமைப்பு வங்கிக் கொள்ளை, கசீனோ கொள்ளை, அரசியல் பணயக்கைதிகள் சிறைவைப்பு, தனிநபர் அழித்தொழிப்பு என வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டது. அவரது காதலியும் சகபோராளியுமான லுயிஸா வேலைசெய்த வங்கியொன்றில் நடந்த மோசடிகள் பற்றிய கோப்புகளை கைப்பற்றவும் பணத்தை கொள்ளையடிக்கவும் நடாத்தப்பட்ட தாக்குதலில் இருவருமே பங்குபற்றிய சுவாரசியமும் நிகழ்ந்தது. தலைமறைவு வாழ்க்கையில் இருந்த முஜிகா 1971 இல் பிடிபட்டார். ஒரு பொலிஸ் அதிகாரியைக் கொன்றதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். முஜிகா ஒருமுறை சுரங்கம் அமைத்து சிறையிலிருந்து தப்பினார். ஆனாலும் திரும்பவும் பிடிபட்டார். அவருக்கு வழங்கப்பட்ட 14 வருட சிறைவாழ்வில் இரண்டு வருடங்கள் நிலத்தடி சிறைக்குள் கழிந்தது.

1973-1985 இல் உருகுவே சர்வாதிகார ஆட்சியின் கீழ் அவதிப்பட்டது. பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் சர்வாதிகார ஆட்சி 1985 இல் சனநாயக ஆட்சிக்கு முறைக்கு மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முஜிகா உட்பட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ருப்பமாறோ உட்பட சமூக ஜனநாயகக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என இணைந்து இடதுசாரிக் கூட்டணி உருவாக்கப்பட்டது. ருப்பமாறோ ஒரு சட்டபூர்வமான கட்சியாக MPP (Movement of Popular Participation) அங்கீகரிக்கப்பட்டது.

1995-2000 முஜிகா சட்ட சபைக்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார். 2000 இல் செனேற் சபைக்கு தெரிவுசெய்யப்பட்டார். 2004 இல் திரும்பவும் செனேற்க்கு தெரிவுசெய்யப்பட்டார். இடதுசாரிக் கூட்டணி இரண்டு சபைகளினதும் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியதோடு, அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சோசலிஸ்டான Tabare Vazquez அவர்கள் ஜனாதிபதியாக வெற்றிபெற்றார். 2005 இல் முஜிகா செனற் சபைக்கு தலைவர் ஆனார். அத்தோடு 2005-2008 விவசாய அமைச்சராகவும் பணியாற்றினார். 2010 இல் ஜனாதிபதியாக வெற்றிபெற்றார் முஜிகா.

மக்களால் Pepe என செல்லமாக அழைக்கப்பட்ட யோஸே முஜிகா 2010-2015 ஜனாதிபதி பதவிக்காலத்தை வெற்றிகரமாக நடத்தினார். 2005 இல் தனது சக போராளியும் காதலியுமான லுயிஸாவை திருமணம் செய்திருந்தார். முஜிகா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் இருவரும் தமது பண்ணை வீட்டிலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தினர். இப்போ முஜிகாவுக்கு 89 வயதாகிறது. புற்றுநோய் அவரை ஆட்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

“நான் ஒரு மிக சிக்கலான வாழ்வை தரிசித்தவன். எனக்கு ஆறாத காயங்கள் உள்ளன. எனவே நான் இப்போ என்மீது கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார். ஒரு போராளியாக மட்டுமல்ல, ஒரு நாட்டின் தலைவர் மக்களோடு மக்களாக இப்படி வாழ முடியும் என்பதை, இன்னொருவகையில் சொன்னால் ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற பிம்பத் தோற்றப்பாட்டை நொருக்கியும் காட்டியவர் என்று சொல்ல முடியும். உருகுவேயின் அரசியல் வரலாற்றை அவரைத் தவிர்த்து பேசவே முடியாது.

2 thoughts on “The ‘Poorest’ President”

Leave a comment