2024 ஜனாதிபதித் தேர்தல்
ஊடகங்கள் -முக்கியமாக சமூகவலைத் தளங்கள்- உருவாக்கிக் காட்டுகிற அநுர அலை இலங்கையின் யதார்த்த அரசியல் நிலைமையை பிரதிபலிக்கிறதா என தெரியவில்லை. இருந்தபோதும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இம்முறை இந்தளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு “அரகல” 2022 காலிமுகத்திடல் போராட்டத்தின் அரசியல் விளைவுதான் முக்கிய காரணமேயொழிய, கடந்த அரசாங்கங்களின் ஊழல் இலஞ்சம், ஏமாற்றுகள் அல்ல. இந்தச் சேற்றில் உழலும் ஒவ்வொரு அரசாங்கமும் அதன் அரசியல்வாதிகளும் ஜனநாயக முகமூடியை அணிந்து நடனமாடுவது ஒன்றும் புதிதல்ல.
இந்த அதிகாரத்துடன் மோதி மாற்றமுடியாதென வாழாவிருந்த மக்களிடம் காலிமுகத்திடல் போராட்டம் சாத்தியப்பாடொன்றின் கீற்றுகளை பரவ விட்டது. அது ஒரு தன்னியல்பான மக்கள் எழுச்சி. அதை ஜேவிபியினர் முன்னின்று நடத்தவில்லை. அதை லாவகமாக கையாண்டார்கள். இப்போ அறுவடை செய்கிறார்கள்.
அரகலவை விதைத்தவர்கள் -கட்சிகள் கடந்த- இளம் சந்ததியும் மாணவர்களும் ஆவர். அவர்களின் பின்னால் மக்கள் அணிதிரண்டனர். அரகல ராஜபக்ச அன்ட் கோ வினரின் ஆட்சிக்கு எதிரானது என்பது மட்டுமானதல்ல, அதிகாரத்துக்கு எதிரானது என்பதும்தான். அத்தோடு இனவாதத்துக்கு எதிராகவும் இலஞ்ச ஊழலுக்கு எதிராகவும் பண்பாட்டுத் தளத்தில் முனைப்பாகவும் அந்த இளம் குரல் ஒலித்தது. அதாவது “முறைமை மாற்றம்” (sytem change) என்பது அதன் அடிநாதமாக ஒலித்தது. அந்தக் குரலை, அவர்களின் உழைப்பை இன்று ஜேவிபி தனதாக்கியிருக்கிறது.
இதற்கு வெளியில் அநுர புதிதாக எதையுமே மேடைகளில் பேசவில்லை. அதற்கு அவர்கள் உண்மையாக இருக்க முடியும் என ஒரு பொதுமனம் ஏங்குவது அரகல ஏற்படுத்திய விழிப்பின்பாற்பட்டது. அதாவது சாத்தியப்பாடுகளை உணர்த்தியதன்பாற்பட்டது. நம்பிக்கையின் பாற்பட்டது. அதனடிப்படையில் அநுரவை ஆதரிக்கும் மக்களது நம்பிக்கையை நாம் புரிந்துகொள்ள முடியும்.
அடுத்த விடயம். இன்றைய ஜனநாயக முறைமை என்பதற்கு அழகான விளக்கங்களும் விரிவுபடுத்தலும் செழுமைப்படுத்தலும் இருக்கிறபோதும் நடைமுறையில் உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளிலும் ஆட்சி நடைமுறை அதற்கு முரண்நிலையில் இயங்குகிறது. நம்பிக்கை அடிப்படையில் ஆட்சியை தெரிவதும், பின் நடைமுறை கண்டு வெறுப்பதும் மாறிமாறி நடக்கின்றன. அடுத்த தேர்தலில் தமது நம்பிக்கைக்கான தீனியை இன்னொரு ஆட்சியதிகாரத்திடம் எதிர்பார்க்கிறார்கள். வாக்களிக்கிறார்கள். தேர்தல் மூலம் அரசாங்கத்தை மாற்றுவதுதான் அவர்கள் அளவில் மாற்றம் என்றாகியிருக்கிறது. இதற்குப் பெயர் “முறைமை மாற்றம்” என்பதல்ல. தவிர்க்க முடியாத கையறு நிலையில் அதிகாரமற்றவர்களின் தேர்வு அதுவாக தொடர்கிறது. மகிந்தவின் ஆட்சியை காணச் சகிக்காது -நல்லாட்சி என கோசத்தை முன்வைத்த- மைத்திரியை தேர்ந்தார்கள். தரப்பட்ட விடைகளில் ஒன்றுக்கு புள்ளடியிட்டுத்தானே ஆக வேண்டும். பிசாசுகளுக்குள் ஒரு ‘நல்ல’ பிசாசை தேர்ந்தெடுத்தல் என்பது தவிர்க்க முடியாததாகிறது. அதைச் செய்தார்கள். இனியும் செய்வார்கள். அவர்களுக்கு வேறு தேர்வில்லை.
முறைமை மாற்றம் என்பதை புரிந்து கொள்வதற்கு அரசு (state) என்பதற்கும் அரசாங்கம் (government) என்பதற்குமான வேறுபாட்டையும் ஊடாட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு அநுர பேசுவது அரசாங்கம் என்ற எல்லைக்குள் நின்றுதான். அரசு தனது கொள்ளை கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த ‘அரசாங்கம்’ என்ற ஒன்றை தனது அங்கமாக வைத்திருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கங்கள் தெரிவுசெய்யப்படும். அரசு அப்படியல்ல. அது நிரந்தரமானது. காட்சிப்புலத்தில் தெரிவதும் தெரியாததுமான கட்டமைப்புத்தான் அரசு வடிவம். அது வெளித் தெரியக்கூடிய அரச இயந்திரங்களான இராணுவம், பொலிஸ், உளவுப்படை, நீதிமன்றம், சிறைச்சாலை என்பவற்றோடு மக்கள் திரளையும் உள்ளடக்கியது. இவை வெளித் தெரிகிற அம்சங்கள். அதேநேரம் தனது அதிகாரத்தை பேணுகிற கருத்தியலை கொள்கை வகுப்பாளர்கள், வரலாற்றாசிரியர்கள் உட்பட்ட (நிர்வாகப்) புத்திசீவிகளின் துணையோடு உருவாக்குகிறது. அவற்றை இற்றைப்படுத்தியபடி நகர்கிறது. இந்த கருத்தியலை பயிற்றுவிக்கிற, விதைக்கிற களங்களாக பாடசாலை, குடும்பம், மத நிறுவனங்கள் போன்ற சிவில் நிறுவனங்களும் ஊடகங்களும் உள்ளன. அது பொதுப்புத்தியில் தாக்கம் செலுத்தியபடி இருக்கின்றன. விமர்சன பூர்வமான சிந்தனைமுறை இல்லாமல் இதன் நுண்களங்களை புரிந்துகொள்ள முடியாது.
இலங்கையைப் பொறுத்தவரை இந்த அரசு வடிவத்தின் கருத்தியல்தளம் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தையும், அதற்கான தர்க்கத்தையும், பெரும்பான்மைவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டது. சோசலிச சாயம் பூசினாலென்ன, சிவப்புச் சட்டை அணிந்தாலென்ன, புரட்சி என்பதை ‘மாற்றம்’ என ஒரு பொதுச்சொல்லால் உருமாற்றினாலென்ன ஆட்சியை கொண்டுநடத்த பௌத்த மத பீடங்களின் ஆசீர்வாதம் வேண்டும். எல்லா சனாதிபதிகளையும் போல் பௌத்த பீடத்தின் காலை தொட்டு வணங்கி ஆட்சியைத் தொடங்குவதில் அநுரவும் விதிவிலக்காகிவிட முடியாது.
முறைமை மாற்றம் என்பது இந்த அரசு வடிவத்துள் கட்டமைக்கப்பட்ட பௌத்த மேலாதிக்க கருத்தியலை அசைத்துப் பார்ப்பதுதான். அது பெரும்பான்மைவாதத்தை கேள்விக்கு உள்ளாக்கி அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் பன்முகத்தன்மையை உருவாக்க முயற்சிப்பதுதான். அதன்மூலம்தான் சிறுபான்மையின மக்களின் உரிமை பேணப்படும். வாழ்வுக்கான உத்தரவாதம் கிடைக்கும். அத்தோடு பன்முகப் பண்பாடு உருவாகும். சகமனிதர்களை மொழி கடந்து நேசிக்க அது கற்றுக் கொடுக்கும். தப்பபிப்பிராயங்களை விலக்கும்.
ஊழலற்ற ஆட்சியை நடத்துவது, ஊழலை சகல மட்டங்களிலும் ஒழிப்பது என்பதை ஓர் மக்கள்நல அரசாங்கம் சட்ட ரீதியில் கறாராக நடைமுறைப்படுத்த முடியும். அதுதான் அதன் எல்லை. ஊழலும் அதிகாரமும் சமூகமயமாகவிட்ட நிலையில் அதை பண்பாட்டுத்தளத்தில் எதிர்கொள்ள சமூக நிறுவனங்கள் உதவ வேண்டும்.
அதேநேரம் பாராளுமன்ற வரலாறானது வாக்குறுதிகளை தேர்தலில் வெற்றிபெற உபயோகிப்பதும் பின் தூக்கியெறிவதும் என்பதற்கு அப்பால் நகர்ந்து காட்டியதில்லை. வாக்குறுதிகளை காப்பாற்ற அவர்கள் விரும்பினாலும்கூட அதன் எல்லை எந்தளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குறியே. காரணம் அரசு என்ற கட்டுமானத்துள் அவர்கள் எந்தளவுக்கு மாறுதல் ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி இருக்கிறது. ஓர் அரசாங்கமும் சனாதிபதியும் தமக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரத்தின் எல்லைக்குள் செயற்படுகிறபோது அது அரசு வடிவத்துள் இடைஞ்சலை ஏற்படுத்தாது.
அநுர குறிப்பிடுகிற இனவாதப் பிரச்சினையை அணுக அரசு வடிவத்துள் தலையீடு செய்தாக வேண்டும். அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை. மாறாக பாராளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும் அதிகார எல்லைக்குள் அவர்கள் இனவாதத்துக்கு எதிராக அதிகபட்சம் சட்ட ரீதியில் செயற்படலாம். அது இனவாதத்தை செயற்பாடற்றதாக ஆக்கப் போதுமானதல்ல. அரசாங்கத்தில் ஊழல்கள் செய்தவர்கள் குறித்தும் அதற்கான சட்ட நடவடிக்கை குறித்தும் பேச முடிகிற அநுரவால் இனப்படுகொலையின் போது போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கான சட்ட நடவடிக்கை குறித்து பேச முடிவதில்லை. காரணம் இராணுவம் அரசின் ஒரு வன்முறை இயந்திரம் என்பதால் அதன் எல்லைக்குள் தலையீடு செய்வதிலுள்ள தயக்கமாக இருக்கலாம்.
அநுர முன்வைக்கிற “புதிய பாதை”, “மாற்றம்” என்ற இரு வார்த்தைகளும் அவரது மொழியில் ஒன்றுதான். பழைய ஆட்சியாளரின் ஆட்சி முறைகேடுகளை பழைய பாதை எனவும் அதிலிருந்து விடுபடும் ஆட்சிமுறையை புதிய பாதை எனவும் வரைவுசெய்கிறார். வழமையான எல்லா கட்சிகளினதும் தேர்தல் பிரசார முறையிலிருந்து இது ஒன்றும் வேறுபட்டதல்ல, புதிய பாதை என்ற அழகான சொல்லைத் தவிர!.
இந்த எளிமையான விடயத்தை மாற்றம் என கொள்ள முடியுமா. இந்த அடிப்படையில் அமைந்த அவரது யாழ் பேச்சு நீங்கள் பழைய பாதையை தேரப்போகிறீர்களா புதிய பாதையைத் தேரப் போகிறீர்களா என கேள்வியை அடுக்கடுக்காக முன்வைத்து நகர்கிறது. ஒரு சிந்தனை அதிர்ச்சி தரும் விடயமொன்றையும் அவரது பேச்சில் கேட்க முடிகிறது. தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். யாழ்ப்பாண மக்கள் அதற்கு எதிராக நிற்கலாமா. அப்படி நின்றால் அது தெற்கில் என்னவிதமான விளைவை ஏற்படுத்தும் என வினவுகிறார். இது (சிங்கள இனப்) பெரும்பான்மைவாத மனநிலையின் வெளிப்பாடாகத் தெரிகிறது. எந்த ஜனநாயக முறைமையிலும் சிறுபான்மையினர்ின் (அது இன மத அடையாளத்துக்கு வெளியிலும்கூட இருக்கலாம்) கருத்துகளை, தேர்வுகளை மதிக்க வேண்டும் என்பது அடிப்படையானது. இந்த அடிப்படைப் புரிதலைத் தாண்டி அவரைப் பேசவைத்தது சிங்கள இனப் பெரும்பான்மைவாதம்தான் என்பதும் அது இனவாத மனநிலை சுவறியது என்பதையும் சொல்லித்தானாக வேண்டும்.
அவர் இன்னொரு தந்திரத்தையும் கையாள்கிறார். “உங்களிடம் வருபவர்கள் 13 ஐத் தருவம்; 13 பிளஸ் இனைத் தருவம் எண்டெல்லாம் பொய் வாக்குறுதிகளைத் தருவது போல நான் தர மாட்டேன்” என தன்னை நேர்மையாளனாக காட்டுகிற உத்தி அது. அரசியல்வாதிகள் வாக்குறுதி தருவதும் அதை நிறைவேற்றாமல் விடுவதும் என்ற விடயம் பொதுமக்களளுக்கு புதிதல்ல. ஆச்சரியம் தருவதுமல்ல. இந்த நிலையில் 13 குறித்து வாக்குறுதி தருபவரும் தராமல் இருப்பவரும் ஒன்றுதான்.
40 வருடங்களுக்கு முன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இந்தியா முன்தள்ளிய தீர்வுத் திட்டம் 13. இந்த 40 வருடத்தில் காலம் இயங்காமலா இருந்தது. எவளவு மாற்றங்களும் அதிர்ச்சிகளும் பிரளயமும் தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த இயங்கியலை மறுத்து இப்போதும்கூட காலாவதியாகாமல் 13 பேசப்படுகிறது என்றால் அது அரசினதும், அரசாங்கங்களினதும் அரசியல்வாதிகளினதும் அறிவினதும் வங்குரோத்துத் தன்மையின் அடையாளம். சோசலிசம் பேசிய ஜேவிபி வழிவந்த அநுரவுக்கு இந்த மார்ச்சிய இயங்கியல் புரியாமலா இருக்கிறது. அவர் 13 இனை தாண்டிய ஒரு முன்மொழிவை ஓர் அபிப்பிராயமாகத் தன்னும் முன்வைத்து, 13 குறித்து பேசுபவர்களை இடம்பெயர்க்க வேண்டும். பொய்சொல்ல மாட்டேன் என்ற அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒழுக்கவாதத்தால் அல்ல.
ஒடுக்குமுறையானது அதற்கெதிரான போராட்டத்தையும் விளைபொருளாக்கும் என்ற இயங்கியல்வாத அடிப்படையிலாவது, (நடந்து தொலைச்ச) தமிழ் மக்களின் போராட்டத்துக்கான விளைநிலத்தை காண முன்வர வேண்டும். தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கிறது என புரிய மறுக்கிறாரா அநுர. இலங்கை முழுவதுக்குமான பிரச்சினையை ஓர் வக்கப் பிரச்சினையாக மட்டும் குறுக்கி சிறுபான்மையினரின் பிரச்சினையை உள்ளமுக்குகிறாரா அநுர. மகிந்தவின் one nation, one country யிலிருந்து எங்கே அவர் வேறுபடுகிறார். இவற்றை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இதை வெளிப்படையாகச் சொன்னால், சிங்கள மக்களின் வாக்குகளை தான் இழக்க நேரும் என பயந்தாலே அங்கு இனவாத சிந்தனை குடிகொண்டுவிடும்.
உலகில் ஒருசில வல்லரசு நாடுகளைத் தவிர எவையும் முழுதான இறையாண்மையுடன் செயற்பட முடியாத நிலையை ஒற்றை உலக ஒழுங்கும் சுரண்டல் முறைமை கொண்ட உலகமயமாக்கலும் ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மக்களுக்கு மட்டுமல்ல, பூகோள அரசியலுக்கும் இடம் இருக்கிறது. அது தத்தமது நலனுக்கு ஏற்ப நாடுகளை இலகுவில் கையாள்வதற்கு ஊழல் நிறைந்த அரசாங்கம் தேவை. அது வாய்க்காவிடில் அந்த ஆட்சிகளை அவர்கள் கவிழ்த்த வரலாறுகள் பல உண்டு.
தமது இறையாண்மைக்கும் பொருளாதார நலனுக்கும் அரகல போராட்டத்தின்போது காலிமுகத்திடல் நோக்கி இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்திய ஜேவிபியின் ஊர்வலம் (மொரட்டுவ என நினைக்கிறேன்) இடையில் நிறுத்தப்பட்ட போது, அநுரவும் அமெரிக்கத் தூதரும் சேர்ந்து எடுத்திருந்த புகைப்படம் வெளிவந்தது. இதை அநுர அமெரிக்காவின் ஆள் என்று மொழிபெயர்க்காமல், அமெரிக்கா இந்த போராட்டங்களை தம் நலன் சார்ந்து தலையிடுகிறதின் சாட்சியாக கொள்ள வேண்டும். அதேவேளை பூகோள அரசியலைத் தாண்டி ஓர் அரசாங்கம் இலங்கையில் சுயமாக இயங்க முடியாது என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். அதை இராஜதந்திர அடிப்படையில் அணுகுவதுதான் ஒரு தேர்வு.
எனவே முறைமை மாற்றம் என்பதை ஓர் அரசாங்கம் தனியாக நிகழ்த்த முடியாது. ஆனால் தனது அதிகார எல்லைக்குள் ஒரு மாற்றத்தை நிகழ்த்த முடியும். அது அரசியல் தளத்திலும் பொருளாதாரத் தளத்திலும் சமூக, பண்பாட்டுத் தளத்திலும் நிர்வாகத் தளத்திலும் நிகழுகிற ஊழல் மற்றும் அதிகாரத்துவச் செயற்பாடுகளை அகற்றி, சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து பன்மைத்துவத்துடன் முன்னோக்கி பயணிக்க முடிகிற ஒரு சமூகநலன் அரசை நிர்மாணித்தாலே பெரிய விசயம். அதற்கு இலாயக்கு இல்லாதவர்கள் என மாறிமாறி ஆட்சி செய்த கட்சிகளும் தலைவர்களும் நிரூபித்துவிட்டதால், “அநுரவுக்கு ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்துப் பார்ப்பமே” என்ற தர்க்கம் நியாயமானதுதான்!. அவர் வெல்லும் பட்சத்தில், நல்ல பிசாசா அல்லது கெட்ட பிசாசா என்பதை அவரது ஆட்சிக்காலம் எழுதும்!
- ravindran pa
- 08092024
- Thanks for republishing: marumoli.com ( https://marumoli.com/அனுர-அலை/ )

One thought on “அநுர அலை”