பாதங்களை வைக்குமா?

(புட்டின் மீதான) அன்றைய பிடிவிறாந்து நீதியானது. இன்றைய பிடிவிறாந்து அரைவாசி நீதியானது அரைவாசி அநீதியானது. அதாவது ஹமாஸ் விசயத்தில் நீதியானது. நெத்தன்யாகு விசயத்தில் அநீதியானது. இந்த விநோதமான தர்க்கத்தை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகள் வெளிப்படையாகவே முன்வைக்கின்றன.

“காஸாவுக்குள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் என்பவற்றை கொண்டுசெல்ல அனுமதிக்க வேண்டும்” என ஐநா வில் அழுத்தம் திருத்தமாக பலமுறை உரக்கச் சொல்லியும் இஸ்ரேல் தண்ணிகாட்டிக் கொண்டிருக்கிறது. குண்டுவீசிக் கொல்வது ஒருபுறமும் பட்டினியால் கொல்வது இன்னொரு புறமுமாக இனச் சுத்திகரிப்பை காஸாவுக்குள் மேயவிடுகிறது.

நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் (ICJ) “இஸ்ரேல் உடனடியாகப் போர்நிறுத்தம் செய்ய வேண்டும்” என இட்ட கட்டளையை இஸ்ரேல் குண்டிமண்ணைத் தட்டுவது போல் தட்டிவிட்டு றபா (Rafah) மீது குண்டு வீசி மக்களை கொல்கிறது. றபா மீது தாக்குதல் தொடுத்தால் உயிர்ப் பேரழிவு நடந்துவிடும், செய்யக்கூடாது என பைடன் முன்னர் ஒப்புக்கு எச்சரித்தபோதும், நெத்தன்யாகு கோஷ்டி பைடனுக்கு கண்ணடித்துவிட்டு படைநகர்த்தியது. பைடன் 2000 தொன் குண்டுகளை இஸ்ரேலுக்கு அனுப்பியும் வைத்தார். அதுமட்டுமல்ல, நெத்தன்யாகுவை அமெரிக்கப் பாராளுமன்றத்திற்கு அழைக்க இருப்பதாகவும் செய்தி வருகிறது. இதைக் குறிப்பிட்டு செனேற்றர் பேர்ணி சாண்டர்ஸ் அமெரிக்கக் காங்கிரசில் மிகக் கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கிறார்.

ஆக அமெரிக்கா அரசியல் ஒப்புக்கு சொல்வதுபோல் “இரு அரசுத் தீர்வு- Two States” (அதாவது பலஸ்தீனம்-இஸ்ரேல் இரு அரசுத் தீர்வு) அவர்களின் நோக்கம் இல்லை. ஒரு அகண்ட இஸ்ரேலை உருவாக்கி, பலஸ்தீனம் என்ற அடையாளத்தையே துடைத்தெறிவது, அந்த மக்களை இஸ்ரேலின் இரண்டாம்தர குடிமக்களாக உள்ளடக்கும் இனவாதக் கட்டமைப்பு (apartheid) அரசொன்றை நிறுவுது என்பவற்றையே நோக்கமாகக் கொண்டிருக்கிறதா என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இதுவே சியோனிஸ்டுகளின் இலக்கு. இந்த சியோனிஸ்டுகளின் லொபியை மீறி அமெரிக்க அரசு செயற்பட வாய்ப்பு இல்லை.

ஈரரசுத் தீர்வை ஆதரிப்பதாகச் சொல்லும் ஒரு நாடு அடிப்படையில் இஸ்ரேல் போலவே பலஸ்தீனத்தையும் ஒரு அரசாக முதலில் அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்கா அதைச் செய்யவில்லை. ஆதரிக்கவுமில்லை. ஐநாவில் பலஸ்தீனத்தை முழு இறைமையுள்ள ஒரு நாடாக ஏற்றுக்கொள்வதற்கான வாக்கெடுப்பில் 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தபோதுகூட, பாதுகாப்புச் சபையில் வைத்து அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தால் அதை தோற்கடித்தது.

இந்த இலட்சணத்தில் அமெரிக்கா ஈரரசுத் தீர்வை அரசியல் நேர்மையுடன் முன்மொழிகிறது என நாம் நம்ப வேண்டும். இவளவு பெருந்தொகை நாடுகள் ஆதரவு கொடுத்தும் அதை மறுக்கும் ஒரு அரசியல் ஜனநாயகமும், சர்வதேச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகள் இஸ்ரேலுக்கு எதிராக அமைகிறபோது அதை அநீதி என வரையறுக்கவும், புட்டினுக்கோ அல்லது மிலோசெவிச்சுக்கோ என்றாகிறபோது நீதி என வரையறுக்கவுமான ஒரு அரசியல் ‘அறமும்’ எவளவு பெரும் கேலிக்கூத்தானது. இந்த அரங்கில் ஆடுகிறது அமெரிக்காவும் பிரித்தானியா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகளும்.

அகண்ட இஸ்ரேல் ஒன்று உருவாக்கப்படுமானால் அதற்குள் 7.3 மில்லியன் (இஸ்ரேலிய) யூதர்களும், 7.3 மில்லியன் (பலஸ்தீன) அரேபியர்களும் சமமாக உள்ளடங்குவார்கள். இந்த நிலையில் அரேபிய இன மக்களை இரண்டாம் தரமாக, தீண்டத்தகாதவர்களாக ஆக்கும் இனவாதக் கட்டமைப்பு (apartheid) அரசு நிம்மதியாக இயங்க முடியாது என்பது யதார்த்தமானது. எனவே ஒரு இனச் சுத்திகரிப்பின் மூலம் அவர்கள் சிறுபான்மையினத்தவராக ஆக்கப்பட வேண்டி, இஸ்ரேல் காஸா மீது இப்போ இனப்படுகொலையை செய்கிறது.

இது வெற்றியளிக்குமானால் அடுத்தது மேற்குக் கரை மீது இனப் படுகொலை ஏவப்படும் நிலை உருவாகலாம். ஆனால் இதெல்லாம் இலகுவில் சாத்தியப்படப் போவதில்லை. இத்தகைய முயற்சியானது இஸ்ரேல் பாதுகாப்பற்ற நிலைமையையும் நிம்மதியற்ற வாழ்வையும் இன்னும் அதிகதிகமாக எதிர்நோக்கியபடி இருக்க வைத்துவிடும். போராட்டம் என்பதே இருத்தலுக்கானது என்ற நிலையிலிருந்து தோன்றி வளரும் அரசியல் இயங்கியல். இது இஸ்ரேல் மக்களுக்கும் நல்லதல்ல. பலஸ்தீன மக்களுக்கும் நல்லதல்ல.

சியோனிஸ்டுகளின் கனவை காவித் திரியும் இஸ்ரேலிய அரசால் தூரமாகிப் போய்க் கொண்டிருக்கும் ஈரரசுத் தீர்வை அரசியல் அரங்கின் மையத்தில் கொண்டுவருவதன் மூலம் இரு தரப்புக்குமான நிம்மதியான வாழ்வுக்கு ஒரு உத்தரவாதம் கிடைக்க வேண்டும். அதை வீட்டோ அதிகாரத்தால் கொலைசெய்யும் அமெரிக்காவின் செயலை, அந்த 143 நாடுகளும் வேறு வழியால் சுற்றிவந்து செயலிழக்கச் செய்ய வேண்டும். அதன் முதல் அடியை ஸ்பெயின், அயர்லாந்து, நோர்வே மூன்று நாடுகளும் எடுத்து வைத்துள்ளன. பலஸ்தீனத்தை முழு இறைமையுள்ள ஒரு நாடாக, ஒரு அரசாக (state) அங்கீகரித்திருக்கின்றன. இந்த வழியில் மற்றைய நாடுகளும் தமது பாதங்களை வைக்குமா?

  • 27052024
  • Thanks for image: nytimes.com

Leave a comment