செங்கடல் தீ

இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த மத்தியகிழக்கின் செங்கடல் பகுதியில் பற்றியிருக்கிற அரசியல் தீ அப் பிராந்தியத்தின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்தத் தீயை பற்றவைத்தவர்கள் யேமனின் Ansar Allah (supporters of God) என்ற ஹவுதி (Houthi) அமைப்பு ஆகும்.

இஸ்ரேல் காஸாவில் நடத்துகிற இனப்படுகொலையை இந்த உலகம் -அதுவும் குறிப்பாக ஐநா- தடுத்து நிறுத்த முடியாத அல்லது நிறுத்த விரும்பாத கொடுமையை எந்த மொழியில் விபரிக்க முடியும். அண்மையில் சர்வதேச நீதிமன்றம் எதிர்பாராதவிதமாக உண்மைக்கு அருகில் வந்து நின்று அளித்திருக்கிற தீர்மானகரமான அம்சங்கள்கூட இஸ்ரேலின் அடாவடித்தனத்தை நிறுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுவரை சுமார் 30’000 பலஸ்தீனர்களை குண்டுவீசி கொலைசெய்தும் சுமார் 70’000 பேரை அங்கவீனர்களாக மாற்றியும் இஸ்ரேல் ஆடும் வெறியாட்டத்துக்கு பலியானவர்களில் 60 வீதத்துக்கும் அதிகமானவர்கள் குழந்தைகளும் பெண்களுமாக இருக்கிறார்கள்.

அதையும் தாண்டி காஸாவுக்குள் உணவு, நீர், மருத்துவப் பொருட்கள் என அத்தியாவசிய தேவைகள் எல்லாமும் ஒக்ரோபர் தாக்குதலின் பின் தடுத்துநிறுத்தப்பட்டும், வைத்தியசாலைகள் குண்டுவீசித் தாக்கியழிக்கப்பட்டும் வருகிறது. இஸ்ரேல் சியோனிச அரசின் பயங்கரவாதம் கட்டுமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இதன்மூலம் பட்டினிச் சாவை நிகழ்த்தியும், காஸா மக்களை கூட்டாகக் கொன்றும் இனவழிப்புச் செய்வதை இந்த உலக அரசுகள் பலவும் எதைப் புடுங்கியும் நிறுத்த முன்வரவில்லை. இன்னொரு வகையில் சொன்னால் கண்முன்னே நடந்துகொண்டிருக்கும் ஓர் இனப்படுகொலையை நேரலையில் பார்த்துக்கொண்டிருக்கும் இழிநிலையில் இந்த உலகம் இருக்கிறது.

தென் ஆபிரிக்கா மட்டும் இஸ்ரேலை நேரடியாக முகங்கொடுத்து சர்வதேச நீதிமன்றுக்கு முன் நிறுத்திய துணிச்சல் உள்ள, வரலாற்று ரீதியில் போராட்டக்குணம் கொண்ட ஒரேயொரு நாடாக உள்ளது. சர்வதேச மக்களின் குரலாக அந்த மக்களின் மனச்சாட்சியை பிரதிபலிப்பதாகவும் ஒரு முன்னுதாரணமாகவும் தன்னை நிலைநிறுத்திக் காட்டியது.

இந்த நிலையில் யேமனின் ஹவுதி அமைப்பு இஸ்ரேலுக்கு கொம்புசீவி விடும் அமெரிக்கா, பிரித்தானியா நாடுகளுடன் நேரடியாக முரண்பட்டு இன்னொரு கோணத்தில் பலஸ்தீன இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுக்கும் நோக்கில் செங்கடலில் தனது பலத்தை பிரயோகித்து வருகிறது. மிகத் தெளிவாக அவர்கள் தமது நிலைப்பாட்டை திரும்பத் திரும்ப சொல்லுகிறார்கள். காஸா படுகொலையை எப்போ இஸ்ரேல் நிறுத்துகிறதோ அன்றே தமது கடற்போரையும் தாம் நிறுத்துவோம் என்கின்றனர்.

இஸ்ரேலின் கப்பல்களை மட்டுமல்ல, இஸ்ரேலுக்கு போகும் கப்பல், இஸ்ரேலிலிருந்து புறப்படும் கப்பல், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன துறைமுகங்களுக்கு வரும் கப்பல் என இஸ்ரேலிய வாணிபத்தோடு சம்பந்தப்படும் எல்லாவற்றின் மீதும் தமது தாக்குதல் தொடரும் என அறிவித்திருக்கின்றனர். அதேநேரம் இதில் சம்பந்தப்படாத கப்பல் போக்குவரத்துகள் வழமைபோல் செங்கடலூடாக நடைபெறுகின்றன. ஹவுதிகளின் தாக்குதல் தொடங்கிய டிசம்பர் மாதத்திலிருந்து கடந்த 21.1.2024 வரை 64 கப்பல்கள் இதனூடாக பயணித்திருக்கின்றன. அதை அவர்கள் தடுத்து நிறுத்தவில்லை. அவர்கள் “எமக்கும் இஸ்ரேலுக்கும் தொடுசல் இல்லை” என்ற ஒருவரி உத்தரவாதத்தில் கையெழுத்துவிட்டு பயணித்திருக்கின்றன.

இந்த உண்மையை திருகி ஹவுதி பயங்கரவாதிகள் செங்கடலூடாக வாணிபத்தில் ஈடுபடும் கப்பல்களை தாக்குகின்றனர் என இஸ்ரேலின் கொலைநிர்வாணத்தை மறைத்து பெரியண்ணன் வரிந்து கட்டும் கச்சைக்கு விளக்குப் பிடிக்க பிரித்தானியா, ஜப்பான் அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட நாடுகள் வரை கூட்டுச் சேர்ந்துள்ளன. அவர்களில் பலர் தமது பெயர்களை வெளியிட வேண்டாமென கோடிப்புறத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இஸ்ரேலுடன் தொடர்ந்தும் உறவு வைத்திருக்கும் இந்தியாவோ “நாம பெரியண்ணன் அணியில் இல்லை. தனியாக எமது கப்பல் போக்குவரத்துப் பாதுகாப்புக்காக போர்க் கப்பலை நிறுத்துகிறோம்” என சொல்கிறது. அமெரிக்கா பிரித்தானியா தவிர, யார் யாரினது போர்க் கப்பல்கள் இந்த வேலையில் அரபுக் கடலில் தரித்து நிற்கின்றன, அமெரிக்காவின் கோடிப்புறத்தில் ஒளிந்திருக்கின்றன என்ற விபரம் தெரியவில்லை.

யேமன் நாடு உள்ளுர் போர்களினாலும், சவுதி தலைமையிலான பிராந்தியப் போரினாலும், பொருளாதாரத் தடையினாலும் மிகப் பெரும் படுகொலைகளையும் பட்டினி மரணங்களையும் கண்ட நாடு. 2015 இலிருந்து 2019 க்குள் 91’600 பேர் மரணித்திருக்கின்றனர் என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. இதில் 60 வீதமானோர் பொருளாதாரத் தடையால் பட்டினிச்சாவை எதிர்கொண்டார்கள் என்பது மனிதகுலம் வெட்கப்பட வேண்டிய ஒன்று. இந்த கொடிய அனுபவங்களிலிருந்தும் அவலங்களிலிருந்தும் பெற்றுக்கொண்ட “தார்மீகக் கோபம்” அல்லது “தார்மீக அதரவு” ஹவுதிகள் இந்த நிலைப்பாட்டுக்கு வர காரணம் என அந்த அமைப்பு சொல்கிறது. ஏனெனில் அதேவகைப்பட்ட அனுபவங்களையும் அவலங்களையும் காஸாவில் மக்கள் கணத்துக்குக் கணம் எதிர்நோக்கியபடி இருக்கின்றனர்.

இப்படியான ஓர் இனப்படுகொலை நிகழ்ந்துகொண்டிருக்க, இந்த இனப்படுகொலைக்கு கோடிப்புறமாகவும் நேரிலும் ஆதரவு கொடுக்கிற நாடுகளுக்கு இஸ்ரேலுடன் என்ன வாணிபம் வேண்டியிருக்கிறது என்ற கேள்விதான் ஹவுதிகளின் கடல் தாக்குதலில் தொக்கி நிற்கிறது. எளிமையான மொழியில் எழுப்பப்படும் இந்தக் கேள்வி நியாயமானது என்கிறார் அறியப்பட்ட யூத புத்திஜீவி Norman Finkelstein அவர்கள். எனவே இந்த விடயத்தில் ஹவுதிக்கு தான் ஆதரவு என்பதை துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் அறிவிக்கிறார்.

அதேபோலவே பிரெஞ்சு எழுத்தாளரும், யேமன் அரசியல் நெருக்கடி குறித்து 4 நூல்களை எழுதியவரும், ஆய்வாளரும், 15 வருடங்கள் யேமனில் வாழ்ந்துபட்டவருமான ஹெலன் லக்னர் (Helen Lackner)அவர்களும் ஹவுதிகளின் கடற்போர் விடயத்தில் நியாயப்பாட்டைக் காண்கிறார். இந்த கடற் போர் காஸா யுத்தத்தோடு தொடர்புற்றது என்கிறார் அவர். கருத்தியல் ரீதியிலும் அடிப்படைக் கொள்கை ரீதியிலும் ஹவுதிகள் இதில் ஈடுபட்டிருப்பதாகவும், இது பலஸ்தீனர்களுக்கு ஆதரவான நடவடிக்கைதான் எனவும் கூறுகிறார்.

மேற்குலகம் கூறுவதுபோல் ஹவுதிகள் ஈரானின் நிழல் அமைப்பு அல்ல. அல்கைடா, ஐஎஸ் போன்ற அமைப்புகளை அமெரிக்கா மற்றும் பிாத்தானியா உருவாக்கிய வழியில் ஹவுதியானது ஈரானால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு அல்ல. உக்ரைனை கேடயமாக்கி ரசியாக்கு எதிராக மேற்குலகம் நிகழ்த்தும் நிழல்யுத்தம் போன்று ஈரான் நடத்தும் நிழல் யுத்தமும் அல்ல இது.

ஹெலன் லக்னர் அவர்கள் கூறுவதில் இன்னொரு மிக முக்கியமான விடயம் என்னவெனில் “ஹவுதிகள் ஒரு சுதந்திரமான அமைப்பினர். அந்த அமைப்பு ஈரானின் பினாமியல்ல, அதன் சேவகனுமல்ல. ஹவுதிகள் தாம் நினைப்பவற்றையே செய்கிறார்கள். ஈரான் சொல்லி அது நடப்பதில்லை. தமது சொந்த முடிவுகளை அவர்களேதான் எடுக்கிறார்கள் அதேநேரம் கொள்கை அடிப்படையிலும் தீர்மானங்களின் அடிப்படையிலும் ஹவுதியின் செயற்பாடுகள் ஈரானுடன் ஒத்துப் போகிறது. எனவே இது மத நம்பிக்கைகள் அடிப்படையிலல்ல, அரசியல் ரீதியில் அமைந்த ஆதரவுக் கூட்டணி” என்கிறார்.

80 களின் கடைசியில் தோன்றி 90 களில் அமைப்புருவாக்கம் கொண்ட ஹவுதிகள் அமைப்பானது மத நம்பிக்கை முறைகளின் வேறுபாட்டால் இரு பிரிவுகளாக பிளவுண்ட யேமனின் முக்கிய சக்தியாக மாறினார்கள். 65 வீதமானவர்கள் சுனி முஸ்லிம்கள் எனவும், 34 வீதமானவர்கள் ஸியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையளாளப்படுத்தப் படுகிறபோதும் ஸியாவின் ஒரு உட்பிரிவான Zaydis பிரிவினர் அதற்குள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களே ஹவுதிகள். ஈரானியர்களோ ஸியா முஸ்லிம் பிரிவின் (Shiism) முழுமையான நம்பிக்கைகளை கடைப்பிடிப்பதால் Zaydis பிரிவுடன் அதாவது ஹவுதிகளுடன் மத நம்பிக்கை அடிப்படையில் முழுமையாக ஒன்றுபட்டவர்களல்ல. அதாவது உடன்பாடும் வேறுபாடும் கொண்டவர்கள் எனலாம்.

இந்த மத நம்பிக்கை வேறுபாடுகளை கடந்து அரசியல் ரீதியில் ஈரானையும் ஹவுதியையும் உடன்பட வைத்த அம்சங்களானது அவர்களின் பொது எதிரியான அமெரிக்காவும் இஸ்ரேலும் அவர்களின் நடவடிக்கைகளும்தான். 2015 இல் சவுதி அரேபியா யேமனுடன் போரைத் தொடங்கியபோது ஈரானின் ஹவுதிகளுடனான உறவு மிக ஆரம்ப நிலையிலேயே இருந்தது. மதவியல் ரீதியில் உடன்பாடும் வேறுபாடுகளும் இரு பகுதியினருக்கும் இருந்ததால் நெருக்கமான உறவு இருக்கவில்லை. ஈரானின் ஆதரவானது நிதி, எரிபொருள் வழங்கல் என்ற அடிப்படையில் மட்டும் இருந்தது. பின்னர் சவுதியும் ஐக்கிய அரபு இராச்சியமும் இணைந்து அமெரிக்காவின் நிழலில் தொடுத்த போரோடு ஈரானின் ஹவுதிகளுக்கான உதவி இராணு ரீதியில் அதிகரித்துச் செல்லத் தொடங்கியது.

யேமனின் வடக்குப் பகுதியில் இருந்த ஹவுதிகளின் ஆதிக்கம் இன்று மொத்த யேமனின் 70-80 வீதமான பகுதிகளுக்கு விரிவடைந்துவிட்டது. தலைநகர் ஸானாவும் அவர்களது கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இவர்கள் ஒரு இயங்குநிலை அரசாங்கம் ஒன்றை அமைத்து செயற்பட வைத்திருக்கின்றனர். இந்த அரசாங்கத்தில் அவர்கள் மட்டுமன்றி மற்றைய குழுக்களின் பிரதிநிதிகளையும் இணைத்துள்ளனர். அவர்களது பிரதம மந்திரி Abdel Aziz அவர்கள் யேமனின் தென் பகுதியைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, 2014-2015 இல் தென் பகுதியிலுள்ள ஏடென் நகரின் கவர்ணராக இருந்தவர். அவர் Hadi அவர்கள் தலைமை வகித்த முன்னைய அரசில் அங்கம் வகித்தவர். வெளிநாட்டமைச்சர் Hisham Sharaf அவர்கள் 2011 இலிருந்து மாறிமாறி உருவாகி மறைந்த அரசாங்கங்களில் அங்கம் வகித்தவர். இவர்கள் ஹவுதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல.

தற்போது யேமனின் பெரும்பகுதியை தன்வசமாக்கி ஆட்சியையும் அமைத்திருக்கும் ஹவுதிகள் அதிகாரத்துவம் வாய்ந்ததும் பெரும் விமர்சனத்துக்கு உரியதுமான ஆட்சியை நிகழ்த்துபவர்கள். மக்கள் இவர்களின் ஆட்சிமுறைக்குக் கீழ் ஒரு மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள். சுமார் 20 மில்லியன் மக்கள் இவர்களின் ஆட்சிக்குள் உள்ளடங்குகின்றனர். அங்கு எந்தவித ஊடக சுதந்திரமும் கிடையாது. வெளிப்படைத்தன்மையும் கிடையாது. பெண்கள் மீதான ஒடுக்குமுறை அழுத்தமாக உள்ளது.

இவ்வாறான எதிரம்சங்கள் இருந்தபோதும் இன்று அவர்களது ஆட்சிப் பிரதேசங்களையும் தாண்டிய மற்றைய பிரதேசங்களில் வாழும் யேமன் மக்களின் ஆதரவைக்கூட அவர்கள் பெற்றுள்ளனர். அதற்குக் காரணமாக அமைந்தது முழு யேமன் மக்களினது பலஸ்தீனம் மீதான தீவிர ஆதரவு நிலையும், இஸ்ரேலின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தும் அவசரமான பலஸ்தீனக் கோரிக்கையை -அதாவது போர்நிறுத்தத்தை- வலியுறுத்தி ஹவுதிகள் தொடுத்திருக்கும் கடற்போரும் சமாந்தரமாக அமைந்ததுதான் காரணம். அமெரிக்காவும் பிரித்தானியாவும் அண்மையில் யேமனுள் ஹவுதிகளின் இராணுவ நிலைகள் மீது நடத்திய தாக்குதலின் பின் அதற்கு எதிராகவும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பலஸ்தீனக் கொடிகளுடன் ஜனவரி 12 மற்றும் ஜனவரி 19 தினங்களில் யேமன் தலைநகர் ஸானா இல் மக்கள் நடத்திய பிரமாண்டமான ஊர்வலங்களில் பல இலட்சம் மக்கள் பல கிலோ மீற்றர் நீளமான வீதிகளை நிரப்பியிருந்த காட்சி மேற்குலக மையநிலை ஊடகங்களை திகைக்க வைத்திருந்தது. இது ஹவுதிகளுக்கு அரசியல் ரீதியில் கிடைத்த வெற்றியுமாகும்.

ஹவுதிகளின் பிரபலமான இரண்டு கோஷங்கள் “அமெரிக்காவுக்கு மரணம்!”, “இஸ்ரேலுக்கு மரணம்!” என்பதாகும். ஆனால் அவர்கள் அமெரிக்க நலன்களுக்கு எதிரான எந்தத் தாக்குதலையும் யேமனுக்கு வெளியில் இந்த கடற் போருக்கு முன்னர் செய்ததில்லை. இந்த கோஷங்கள் பற்றி அந்த அமைப்பின் மூத்த அரசியலாளரும் ஹவுதி அமைப்பின் பேச்சாளருமான Mohammed Al Bukhaiti அவர்கள் கொடுக்கிற விளக்கம் இதுதான்,

இந்த சுலோகங்கள் 2002 ஜனவரியில் பிறந்தவை. அப்போ அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த காலகட்டம். “நீங்கள் எங்களுடன் நிற்கவில்லை எனில் நீங்கள் எங்களுக்கு எதிரானவர்கள்” என அமெரிக்க அதிபர் புஷ் முன்வைத்த கோசத்தின் ஓர் எதிர்மறுப்பு என்கிறார் அவர். ஆனால் தமது கோசம் அமெரிக்க மக்களை அல்லது யூதர்களை கொல்வது பற்றியதல்ல. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் யுத்தங்களால் அமெரிக்காவின் மீதும், அரபுநாடுகளை யுத்தத்தில் தோற்கடித்த இஸ்ரேலின் மீதும் ஏற்பட்ட பொதுமக்களின் மனப் பயத்தை கொல்வது என்ற அர்த்தம் கொண்ட கோஷங்கள் என ஒரு வியாக்கியானத்தைக் கொடுக்கிறார். இன்று அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளிலெல்லாம் அந்த மக்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக பெருமளவில் வீதியில் இறங்கி போராடிவருவதை சுட்டிக் காட்டும் அவர் தாம் அந்த நாடுகளின் மக்களை கொல்லச் சொல்கிறோம் என்று புரிந்துகொள்வது அர்த்தமற்ற விளக்கம் என்கிறார்.

அவரது moral சார்ந்த விளக்கத்தை விளங்கிக் கொள்வது எமக்கு இயலாததாக இருக்கிறதா, அல்லது அந்தக் கோசங்களை அவர் moral சார்ந்து வேண்டுமென்றே மறு வியாக்கியானப்படுத்துகிறாரா என்பது உங்களைப் போலவே எனக்கும் துலங்கவில்லை.

என்றபோதும் காஸா கூட்டுப் படுகொலைகளை நிறுத்த திராணியற்ற ஒரு உலகும் ஐநாவும் சர்வதேச நீதிமன்றும் எம் கண்முன்னே அம்மணமாக நிற்கையில், இஸ்ரேலை பொருளாதாரத்தில் வீழ்த்தக்கூடிய ஹவுதிகளின் இந்த கடற்தாக்குதல்கள் ஏதாச்சும் பலனைத் தருமா என்ற ஏக்கம் இருக்கும்வரை அதை ஆதரிப்பது அல்லது எதிர்க்காமல் இருப்பது அல்லது புரிந்து கொள்வது என்பதைத் தவிர வேறு வழியில்லை.

  • Ravindran Pa
  • 03022024
  • Thanks for images: sanaa centre.org, usip.org, France 24.com

2 thoughts on “செங்கடல் தீ”

Leave a reply to அகரன் Cancel reply