ஜோன் மெயர்ஷைமர் அமெரிக்காவின் ஒரு அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும் சர்வதேச உறவுகளுக்கான நிபுணரும், சிக்காக்கோ பல்கலைக் கழக பேராசிரியரும் ஆவர். அரசியல் சிந்தனையில் தாக்கம் செலுத்துகிற சிந்தனையாளர்களில் இவர் முக்கியமானவர். இவர் 12.10.23 அன்று Judging Freedom க்கு வழங்கிய பேட்டியொன்றில் கூறியது இது. அதுவே இப்போ நிகழ்கிறது.
*
இஸ்ரேல் காஸாவுக்குள் தரைப்படையை நகர்த்துவார்களா இல்லையா என்பதை எதிர்வுகூறுவது கடினமான விடயமாக உள்ளது. இதுபற்றி நிகழ்காலத்தில் அதிகம் பேசிக் கௌ;ளப்படுகிறது. காஸா நிலத்தை ஊடறுத்துச் சென்று கமாஸ் இனை கண்டுபிடித்து அழித்தொழிப்பது பற்றி பேசப்படுகிறது. இந்தத் திட்டம் அவளவு ஆரோக்கியமான திட்டம் அல்ல என்பதை இஸ்ரேல் உணரத் தொடங்கியிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். காஸாவுக்குள் புகுந்து கமாஸை அழித்தொழிக்க முயற்சிப்பதால் பெறக்கூடிய நன்மைகளைவிடவும் பெரும் பிரச்சினைகளே வந்துசேரும். ஒருவேளை கமாஸை அப்படி அழித்தொழித்தால் அந்த இடைவெளியை இன்னும் அதிதீவிரமான போக்குடைய குழுக்களின் தோற்றமே நிரப்பும்.
இந்தப் பிரச்சினையை இராணுவ வழிமுறை மூலம் தீர்க்க முடியாது. இது ஒரு அரசியல் பிரச்சினை. கேள்வி என்னவெனில் இஸ்ரேல் காஸாவுக்குள் நுழைவார்களா இல்லையா என்பதே. அவர்கள் உள்நுழைந்து போரிடவில்லை எனில் கமாஸ் இன் இருப்பு பாதுகாக்கப்படும். அவர்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில் சண்டையிட வழிவகுக்கும். இன்னமும் ஆயுதமயப்பட்டு அவர்கள் பிரச்சினைகளை உருவாக்குவர்.
அப்படி இஸ்ரேல் உட்புக இல்லையெனின் அவர்கள் காஸாவை குண்டுவீசித் தாக்குவார்கள். அது மொத்தமும் ஒரு பேரழிவாக இருக்கும். மனித உரிமைகள் மதிப்பீட்டிலிருந்து மட்டுமன்றி பொதுமக்களின் அழிவின் அடிப்படையிலும் இது பாரதூரமானது. குரூரமானது. அத்தோடு இது மூலோபாய ரீதியில் நல்லதுமல்ல. இது ஒருபோதும் பிரச்சினையைத் தீர்க்காது. மாறாக இது பலஸ்தீனத்துக்குள் மட்டுமன்றி அரபு உலகத்திலும் இன்னும் கோபத்தை ஏற்படுத்தவே செய்யும். மேற்குலகின் இஸ்ரேல் மீதான ஆதரவையும் இழக்க நேரும். எனவே காஸா மீது குண்டு வீசுவது தீர்வைத் தராது. எனவே இஸ்ரேல் ஒரு இக்கட்டான நிலையில் மாட்டியிருக்கிறது. அவர்கள் எப்படி இந்தப் பிரச்சினையை தீர்க்கப் போகிறார்களோ தெரியாது.
“இரு நாடுகள்” தீர்வு (two state solution) முன்னர் முன்வைக்கப்பட்டிருந்தது. இதை நெத்தன்யாகு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர் தன்னிலும் பார்க்க அதிதீவிர வலதுசாரிகளை கொண்ட கூட்டமைப்பை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார். மேன்மேலுமான போர் சார்ந்த போக்கும் பலஸ்தீன எதிர்ப்பும் என இஸ்ரேல் போய்க்கொண்டிருந்ததை அதன் கடந்தகால வரலாற்றுத் தொடர்ச்சியைப் பார்த்தால் தெரியும். இன்றைய நிகழ்வுகளோடு அவையும் சேர்ந்து கொண்டன எனலாம்.
எவ்வாறு “இரு நாடுகள்” தீர்வை அடைய முடியும் என பார்ப்பது முடியாத காரியமாகியிருக்கிறது. இஸ்ரேலினது உள்ளக அரசியலின் போக்கானது “இரு நாடுகள்” திட்டத்துக்கு வளம் சேர்க்காததாகவே இருக்கிறது.
The train has left the station!
